Wednesday, 14 February 2024


 

ஷோர் லீவ் 2

   தொடரும் கொரோனா.....

                    கப்பல் காரன் எப்போதும் எதையும் செய்து கொண்டே இருப்பவன். அனைத்து பணியாளர்களுக்கும் தினமும் எட்டு முதல் பதினோரு மணிவரை பணி செய்தாக வேண்டிய கட்டாயம்.

  துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் போது,கரையணையும் முன்,நீண்ட கால்வாய் அல்லது ஆற்றுப் பயணங்களில் (manovering ) காப்டன்,நேவிகேசன் அதிகாரிகள்,முதன்மை இஞ்சினியர்,இஞ்சினியர்கள்,போசன்,ஓ.எஸ்சுக்கு மிக நீண்ட பணி நாளாக இருப்பதை தவிர்க்கவே இயலாது.

   ஞாயிறுகளில் அரை நாள் ஓய்வை சனிக்கிழமையே மனம் எதிர்நோக்கியிருக்கும். ஞாயிறுகளில் முழு நாள் கிடைத்தால் அந்த ஓய்வை எப்படி கழிப்பது என தெரியாமல் மண்டைவெடிக்கும் கப்பல் காரர்கள் உண்டு.

   முன்பு ஒரு முறை ஐடியா மணி என்னிடம்  “லே ஷாகுல் சண்டே  ஹாப் டே ரெஸ்ட்ல பிரியாணிக்கு பொறவு உறங்கி எழும்பி ஒரு படம் பாத்தா நாள் முடியும்,புல் டே ரெஸ்ட் அதுனால கேபினுக்குள்ள இருந்து ஒரு மாதிரி ஆயிட்டு” என்றார்.

    ஞாயிறு பிரியாணிக்குப்பின் இரண்டு மணி நேரம் தூங்கி எழும் கப்பல்காரர்கள் இரவு நீண்டநேரம் தூக்கமில்லாமல் அதிகாலை தூங்கி திங்கள்கிழமை காலை விழிக்கையில் சோர்வுடன் எழுவதை தவிர்க்கும் பொருட்டு ஞாயிறு மதிய தூங்காமல் அறையில் ஏதாவது செய்துகொண்டே இருக்கும் கப்பல்காரர்கள் உண்டு.சிங்கப்பூரில் கப்பலை நிறுத்தி எரிஎண்ணெய்,உதிரிபாகம்,உணவு பொருட்களை நிறைத்தபின் கப்பல் புறப்பட்டால் போக்குவரத்து நிறைந்த மலாக்கா முனையை கடக்க பதினைந்து மணிநேரத்துக்கும் மேலாகும்.

   ஒருமுறை அப்படி மலாக்கா கடந்த மறுநாள் முதன்மை இஞ்சினியரிடம் கேட்டேன் “ஸார் தூங்குனீங்களா” என.

அவர் “தூக்கம் எல்லாம் வீட்டுக்கு போய் தான்”என்றார்.

   பொறுப்பை மண்டைக்குள் திணித்து வைத்திருப்பதால் இன்ஜினின் பிரஷர்,டெம்பறேச்சர் எல்லாம் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தான் அவரது தூக்கமின்மைக்கு காரணம்.

  கொரோனாவால் அறையை விட்டு வெளியே வராதவர்களின் பாடு சுகமின்மையை விட கொடுமை.வாசிப்பு பழக்கம் இருப்பவர்களுக்கு தனிமை சுகமளிக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

  ஏழாம் தேதி கப்பல் பனாமாவின் கிறிஸ்டோபல் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்றது.பனமா கால்வாயை கடக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. இன்றும் பிகிலுடன் இணைந்து மெஸ்மென் கலீல்,கோழி குழம்பும்,காலிபிளவர் கூட்டும்,வெள்ளை சாதமும் வடித்திருந்தான்.இரவுணவுக்கு சப்பாதிக்கான மாவை பிசைந்து வைத்துவிட்டு ஓய்வுக்கு போய்விட்டு மூன்று மணிக்குமேல் வந்து சப்பாத்தியும்,காராமணி கூட்டும் செய்திருந்தான்.

  கொரானா அறைக்கு கலீல் கையுறை,முககவசம் அணிந்து,பேப்பர் கப்,பேப்பர் தட்டில் உணவை வழங்கி கொண்டிருந்தான்.சாப்பிட்டபின்  தட்டை அவர்களின் அறையின் எதிரில் கட்டிவைத்திருந்த பிளாஸ்டிக் பையில் அவர்களே போட்டுவிட வேண்டும். உணவுக்காக தவிர வேறதெற்கும் அவர்கள் அறையை திறக்க கூடாது.



 இன்றும் மாலை இரவுணவு நேரத்தில் காப்டன் எங்கள் உணவு கூடத்துக்கு வந்து போசனிடம் விசாரித்தார். “எல்லாரும் இப்ப ஓகே தானே,ஒரு வாரம் இப்படியே மெயின்டேன் பண்ணிட்டா ஒரு பிரச்னையும் இல்ல,ஐ  டோண்ட் வான்ட் எனி ஒன் பி சிக் மோர், பிளீஸ் வியர் மாஸ்க்” என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.

   முதன்மை அதிகாரி கொரோனா நோயாளிகளை பார்ப்பதற்காக சென்றார். நானும் அவருடன் சென்றேன். சென்குப்தா,கோம்சுக்கு அடுத்தடுத்த அறைகள் அறைகதவை தட்டி விட்டு விலகி நின்றோம். சென்குப்தா கலைந்த தலைமுடி,வீங்கிய கண்களுடன் கதவை திறந்தான். “நல்லா இருக்கேன்,எனக்கொண்ணும் பிரச்னை இல்ல,சீக்கிரம் வெளிய உடுங்கோ”என்றான். முதன்மை அதிகாரி “வெயிட் மேன் வில் ஸீ”என்றார். அருகிலிருந்த கோம்ஸ் கதவை திறக்கும்போது ஒரு நோயாளியின் தோற்றத்தில் சோர்வாக  இருப்பதை அவனது முகம் உணர்த்தியது. தொண்டை,கை,கால்,உடல் வலியுடன்,இருமலும் இருப்பதாக சொன்னான்.



    மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆறு மணிக்கு அடுமனைக்கு சென்றேன். மதிய உணவுக்கு வேண்டிய  நாற்பத்தியிரண்டு அயில மீன்களை சுத்தபடுத்த என்னிடம் தந்துவிட்டு கலீல் தொடர்ந்தான்  “பாய் ஜான் நான் தூங்கவே இல்ல நேற்று சாயங்காலம் ப்ரீசர் ரூமுக்குள்ள தொப்பி போடாம போயிட்டேன்,லேசா தொண்ட புடிச்சி,காய்ச்சல் போல இருக்கு,வேற பிரச்னை ஒண்ணும் இல்ல” என்றான். மீனின் வயிற்றை கீறி,குடலை வெளியே எடுத்து தலையை வெட்டாமல் உள்ளே  இருந்த கழிவுகளை நீக்கி சுத்தபடுத்திய பொரிப்பதற்கு வசதியாக லேசாக வகுந்து கொடுத்துவிட்டு வந்தேன். “லஞ்ச் பே பாங்க்டா பிறை” என முந்தைய நாளே சொல்லியிருந்தான்.


  எட்டு மணிக்கு மேல் குளித்துவிட்டு முதன்மை அதிகாரியை சந்தித்தபோது  “மாலை நான்கு மணிக்கு பைலட் கப்பல் கால்வாய்க்குள் நுழையும்,இன்று ஆப்ட் ஸ்டேசனில் உன்னை அழைப்போம் சென்குப்தாவிற்கு பதிலாக,மதியத்திற்கு பின் ஓய்வு எடுத்துக்கொள், கேட்களை கடந்து உள்ளே சென்று மலையில் உள்ள ஆற்றில் நங்கூரம் பாய்ச்சுவோம், மறுநாள் மதியம் புறப்பட்டு இரவு பல்போவாவில் உள்ள கேட்களை தாண்டி பசுபிக்கடலில் இரவில் நுழைவோம் என்றார்.



பனாமா கால்வாய் 


     கம்ப்றசர் அறைக்கு சென்று காலை பணிகளை முடித்துவிட்டு பத்து மணிக்கு கட்டன் சாயாவை எடுத்துவிட்டு அறைக்கு வந்து சுனிதாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

சுனிதா “கொரோனா காரனுவ எப்டி இருக்கானுவோ?

“நல்லா இருக்கானுவோ,நேத்து நான் அவனுவள பாத்தேன்”

“எப்டி”

“சீப் ஆபிசர் போவும்போ,கூட போய் வெளிய நின்னு பாத்தேன்” என்றேன்.

“ரெம்ப கிட்ட போவாதியோ, உங்கள பாத்துகிடுங்கோ” என்றாள்.

“ம்,செரி”என்றேன்.

கட்டன் சாயா குடித்தபின் உணவு கூடத்துக்கு போனேன். ஓ எஸ் இர்பான் “ஷாகுல் பாய் மாஸ்க் போடு”என்றான்.

“ஏன்” எனக்கேட்டுவிட்டு அடுமனைக்குள் நுழைந்து குழாயை திறந்து தேநீர் குவளையை கழுகும் போது பார்த்தேன் போசன்,நிதின்,பிகில் ஆகியோர் சமையலில் மும்மூரமாக நின்றுகொண்டிருப்பதை.

இர்பான்  “நீ சாயாக்கு இங்க இல்லேல்லா, கலீல் ரூமுக்குள்ள போயாச்சி, டெஸ்ட் பாசிடிவ்” என்றான். அறிவிப்பு பலகையில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து,சமூக இடைவெளியை பேணி,கைகளை அடிக்கடி கழுவுமாறு எழுதியிருந்தது.

நாஞ்சில் ஹமீது.

08 September 2023.

sunitashahaul@gmail.com.

No comments:

Post a Comment