1990களுக்குமுன்னரே நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவிலும் மணவாளக்குறிச்சி கிராமத்திலிருந்தும் அனேகம்பேர் சவூதி அரேபியா,கத்தார்,பஹ்ரைன்,துபாய்,மஸ்கட்,குவைத் போன்ற அரபு வளைகுடா நாடுகளுக்கு சென்றிருந்தனர்.
பெரும்பாலும் பத்தாம் வகுப்பில் தோல்வி அல்லது அதற்கு முன்பே பள்ளிபடிப்பை பூர்த்தி செய்யாதவர்கள்.டெய்லர்,ட்ரைவர்,கொத்தனார்,பிளம்பர் கடைகளில் சேல்ஸ்மேன் (வாகனம் ஓட்டுனர் என்ற விசாவில் சென்று ஒட்டகம்,ஆடு மேய்த்தவர்களும் உண்டு) போன்ற எளிய பணிகள்.நான் சிறுவனாக இருக்கும்போது சறபுதீன் சொல்வார் “கோளிக்க பீய வாரி போடசொன்னாலும் நான் ரெடி,ஒரு விசா கிட்டுனா போரும்” என பாஸ்போர்ட் எடுத்து எப்படியாவது வெளிநாடு சென்றுவிட்டால் போதும் எனும் கனவில் இளைஞர்கள் இருந்த காலம். அப்படி சென்றவர்களின் வீடுகளில் செழிப்பை கண்டேன் நான்.
குவைத் சென்ற உறவினர் ஒருவர் சொல்வார் “அறபிக்கி நாலு பொண்டாட்டி,நாப்பத்தஞ்சி புள்ளையளு,நாலு பொண்டாட்டிக்கும் தனித்தனி பங்களா அது ஒண்ணுல காலத்த ஒருக்கா,அந்திக்கி ஒருக்கா மோட்டர் சுவிட்ச போட்டு ரெண்டு மட்டம் டேங்குல தண்ணி நிறக்கணும் அதுதான் வேல”என்றார்.
அப்போது ஜப்பானின் நேஷனல் அயன் பாக்ஸ்,மஞ்சள் நிற டார்ச் லைட் போன்றவை ஒரு அடையாளம்.அது போன்ற வெளிநாட்டு பொருட்கள் இருக்கும் வீடுகளில் மகன்,கணவன் அல்லது உறவில் ஒருவர் அரபு தேசத்தில் இருப்பார்.
எனது தாய்மாமா ஷாகுல் ஹமீது எங்கள் குடும்பத்திலிருந்து முதன் முதலில் வெளிநாடு சென்றவர்.பின்னர் எனது மூதாப்பவின் மகன் பாபுஜி (பாபு ஹுசைன்). அப்படி என் வீட்டிலும் ஜப்பானின் நேஷனல் அயன் பாக்ஸ் ஒன்று வந்து சேர்ந்தது. சரியான எடை,மின் இணைப்பை துண்டிக்காமலே தேவையான அளவு வெப்பத்தை கூட்டி,குறைக்கும் வசதி,வெண்ணிற கைப்பிடியுடன் அழகாகவும் இருந்தது. அதை கையாளவும் மிக எளிது.இப்படி நண்பர்கள் உறவினர்கள் வளைகுடா சென்ற அனேக வீடுகளில் நேஷனல் அயன் பாக்ஸ் தான் இருந்தது அல்லது அதுதான் என் கண்ணிற்குபட்டது.
2003 ஆம் ஆண்டு நான் ஈராக் போர்முனையிலிருந்து விடுமுறைக்கு வந்தபோது நீண்ட உழைப்பை தந்த அந்த நேஷனல் அயன் பாக்ஸ் தன் பணியை நிறுத்திக்கொண்டது.திங்கள்நகரில் உறவு பெண்ணொருத்தி பணிபுரிந்த ஷார்ஜா பேன்சி எனும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றிருந்த போது அங்கே நேஷனல் அயன் பாக்ஸ் விற்பனைக்கு இருப்பதை கண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன். “ஆயிரத்திஅம்பது ரூவா வில குட்டியாப்பக்கு அம்பது குறைச்சிதாரேன்” என்றாள்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப்பின் 2009ல் நான் தனிக்குடித்தனம் செல்லும்போது தம்பி ஷேய்க் “ஷாகுலண்ணே அயன் பாக்ஸ நீ கொண்டு போ” என்றான்.
நான் மட்டுமே அதை உபயோகித்து கொண்டிருந்தேன்.சுனிதா அரிதாக திருமண வீடுகளுக்கு செல்லும் போது பட்டு சேலை கட்டினால் பிளவுசை அயன்பாக்சில் தேய்த்து கொள்வாள். ஸாலிம் பள்ளி செல்ல துவங்கியவுடன் அவனது சீருடைகளை சுனிதா தேய்த்து கொடுத்துகொண்டிருந்தாள்.அதன் வயர் மட்டும் திருகி,திருகி அறுந்து வீணானபின் இருமுறை தெரிந்தவர்களிடம் கொடுத்து புதிய வயர் மாற்றிவைத்திருந்தாள்.
பின்பு சல்மான் பிறந்து பள்ளி செல்ல துவங்கும்போது ஸாலிமும் அயன்பாக்ஸை கையாளும் அளவிற்கு வளர்ந்த சிறுவனாக இருந்தான். அப்படி நேஷனல் அயன் பாக்ஸ் மேசையிலிருந்து கீழே விழுந்து,விழுந்து அதன் கைப்பிடிகள் உடைந்தது. சுனிதாவின் வாப்பா கடிகாரம் பழுதுபார்ப்பதில் நிபுணர் எண்பது வயதை தாண்டிய அவர் தனது பத்தொன்பதாவது வயதில் தொடங்கி இதுவரை ஒரே தொழிலை செய்பவர் அறுபது ஆண்டுகளாக. லட்சங்களில் விலையுள்ள ரோலெக்ஸ் மற்றும் ரேடோ கைக்கடிகாரங்களை சர்வீஸ் செய்ய அமெரிக்காவிலிருந்து விடுமுறையில் வரும்போது தரும் வாடிக்கையாளர்கள் அவருக்கு உண்டு.
“மணிமேடைல உள்ள ஸ்பெயின் நாட்டு கிளாக் ரிப்பேர் ஆனா முனிசிபாலிட்டி எனக்க வாப்பாயதான் கூட்டிட்டு போவானுவோ செரி செய்ய” என அவ்வப்போது நெஞ்சு நிமிர்த்தி சொல்வாள் சுனிதா. அது உண்மையும்கூட .
அவரின் நுணுக்கமான புத்தி சுனிதாவிடமும் இருக்கிறது . கைப்பிடி உடைந்த அயன் பாக்சை ஐந்து ரூபாய் பெவிகுவிக் வாங்கி ஒட்டி சரி செய்து உபயோகிக்க தொடங்கினாள். “கீழ உளுந்தா சோலி முடிஞ்சி அயன்பாக்ஸ் யூஸ் பண்ணுனா ஒழுங்கா வெக்கணும்”என உரத்த குரலில் ஸாலிமிடம் சொல்வாள். நான் வீட்டிலிருக்கையில் அதே குரலில் என்னிடமும். “புதுசு வாங்கணும்னா இப்ப மூவாயிரம் ரூவா இல்லாம முடியாது” என்பாள்.
பின்பு சல்மானும் அயன்பாக்சை கீழே போட்டதில் அதன் உடல் பாகங்கள் மேலும் சில துண்டுகளாக சிதறிவிட்டது. மீண்டும் பத்துரூபாய் செலவு செய்து இரு பெவிகுவிக் வாங்கி சுனிதா தன் நுண்ணறிவை காட்டி வைத்திருந்தாள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் ஊருக்கு வந்தபின் சட்டையை தேய்க்கும்போது அயன்பாக்சில் கைப்பிடி அதன் உடலுடன் சரியாக பொருந்தாமல் ஆடிக்கொண்டிருந்தது. சுனிதா “ஒரு கணக்கு வேணுமில்லா எத்ர மட்டம் அத கீழ போடுது,ரெண்டண்ணத்த பெத்து வெச்சிருக்கியோ இல்லா,புள்ளயாளாட்டா வளருதுவோ அதுவோ,ஒரு சொல்லுவளி கிடையாது”.என சீறினாள்.ஸாலிம்,சல்மான் பிறந்ததில் தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாதது போல்.
என்னிடம் அயன்பாக்ஸை சரி செய்ய சொன்னாள். நான் விடுமுறையில் ஊருக்கு வந்தால் செம பிஸி. ஆடிக்கொண்டிருக்கும் அதே அயன்பாக்ஸை தொடர்ந்து உபயோகித்துக்கொண்டிருந்தேன். “அத செரி பண்ணீர கூடாது,அது இனி கை வேற கால் வேறயா வாறது வர அத வெச்சி தேப்பாரு நானும் பாத்துட்டு தானே இருக்கேன்”
“நான் என்ன எலக்ட்ரீசியனா எனக்கு இதெல்லாம் தெரியாது எப்டி நான் செரிபண்ணுவேன்”
“அத களத்தி பாக்குலாம்லா அப்பல்லா தெரியும்,ஒன்னுக்கும் களியாது கப்பல்ல எப்டி தான் வேலக்கி வெசிருக்கானுவளோ,நான் மட்டும் செகண்ட் இன்ஜினியரா இருந்தேன்.முதல்ல உம்மள தான் டிஸ்மிஸ் பண்ணுவேன்” என ஒரு அதட்டலை தொடர்ந்து “உங்கள கொண்டு வீட்டுக்கு ஐஞ்சி பைசாக்கு பிரோயஜனம் கிடையாது,ஊருக்குதான் உபகாரம்,வக்கேசனுக்கு வந்தா சுக்கிரி,ஜெயமோகன்,விஷ்ணுபுரம் ன்னு சுத்துக்கு மட்டும் கொள்ளாம்”என்றாள்.
சுனிதா என்னை கொஞ்சம் சீண்டிவிட்டாள் பதிலுக்கு சப்தம் போட்டால் ரொம்ப கஷ்டமாயிரும் என தெரியும் என்பதால் அமைதியாக இருந்தேன்.உண்மையில் எனக்கு அயன்பாக்ஸ் போன்றவற்றை சரி பண்ணவும் தெரியாது.அதில் ஆர்வமும் இல்லை சுனிதாவின் தொடர் நச்சரிப்புக்குப்பின் இரண்டு பெவிகுவிக் வாங்கி பத்திரமாக வைத்திருந்தேன் ஒருநாள் ஓய்வாக வீட்டிலிருந்தபோது ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து அதை திறந்தேன் மின் வயரை தனியாக பிரித்தேன். “இன்னக்கிதான் மூர்த்தம் வந்துருக்கு சாருக்கு” என சொல்லிவிட்டு தன் செல்ல பூனை புஜ்ஜியுடன் கொஞ்சலுக்கு சென்றுவிட்டாள்.
கைப்பிடியும்,அதன் உடலும் பேக்கலைட்டால் ஆனது நான்கு துண்டுகளாக சிதறியது,எடையுடன் கூடிய இரும்பு பிளேட்டை சூடாக்கும் தெர்மோஸ்டேட் பொருத்தபட்டிருந்தது அதை தனியாக வைத்து விட்டு. உடைந்த பாகங்களை ஓட்டினேன்,கைப்பிடி எதிர்பார்த்ததைவிட பலமாக ஒட்டிகொண்டது.உள்ளுக்குள் சக்சஸ் என வந்த சிரிப்பை அடக்கிகொண்டேன்.சுனிதா எனக்கே தெரியாமல் என்ன செய்கிறேன் என பார்த்துக்கொண்டுதானிருப்பாள்.
கைப்பிடியை இரும்பு பாகத்துடன் இணைத்து வயரை இணைத்தால் வேலை முடிந்தது.ஆனால் கழற்றும்போதே உள்ளே ஒரு மெல்லிய நுனி சற்று வளைந்த ஒரு கம்பி இருந்தது அது எங்கே இணையும் என்று தெரியவில்லை தடுமாறி சுனிதா என்ன சொல்வாள் என கைகள் உதற நிற்கும்போது “யூ டியூப் ல அடிச்சி பாருங்கோ சாரே” எனும் குரல் கேட்டது சுனிதாதான்.
யூ டியூபில் தேடியதும் ஹிந்தியில் சில விடியோக்கள் இருந்ததில் ஐந்து நிமிடம் உள்ள ஒன்றை தேர்வுசெய்து பார்த்தேன். அந்த கம்பிதான் அயன்பாக்சின் சூட்டை கூட்டும்,குறைக்கும் நாபுடன் இணைவதை தெளிவாக சொன்னான் பையாகாரன்.
குஷியாகி அதை சரியான இணைக்கும்போது சுனிதாவும் உதவிக்கு வந்துவிட்டாள்.இறுதியில் கைப்பிடி உடலுடன் இணையும் இரும்பு தகடில் இருந்த இரு சிறு துவாரங்கள் சரியாக பொருந்தவில்லை பெவிகுவிக்கால் ஓட்டும்போது கொஞ்சம் விலகி விட்டிருந்தது தெரிந்தது. நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு விஞ்ஞானியை போல ஆராய்ச்சி செய்தபின் சுனிதா சொன்னாள் “அத ஒழுங்கா ஓட்ட தெரியல்ல வந்துட்டாரு”
“ஒட்டுனத உடச்சிட்டு திருப்பி ஒட்டுவோம் பத்து ரூவாக்கு பச செலவு மட்டும் கூடும்”என்றேன்.
“மனுசா அத உடைக்கலாமா இனி என” கேட்டவள் தனது பெரிய கையால் பலங்கொண்ட மட்டும் முயற்சித்தாள் பெவிகுவிக் ஸ்ட்ராங் என்பதை நிருபித்தது.
அந்த இரு துவாரங்கள் ஒரு மூன்று மில்லிமீட்டர் மட்டுமே விலகிஇருந்தது.ஸாலிமை டியுசனில் விட்டு விட்டு வரும்போது கோட்டார் வாவா ஹார்ட்வேரில் ஒரு நீடில் பைல் செட் ஒன்றை வாங்கினேன் நூற்றி முப்பது ரூபாய்க்கு,மீண்டும் அயன்பாக்ஸை பிரித்து அரத்தால் ராவி துளையை பெரிதாக்கி இணைத்தேன்.பைல் செட்டை சுனிதாவுக்கு தெரியாமல் என் அலமாரியில் மறைத்து வைத்தேன்.
இனி ஜப்பானின் நேஷனல் அயன்பாக்ஸ் ஸாலிமின் மனைவி சொல்லி அவன் சரி செய்யும் வரை தாங்கும் .
இரு தினங்களுக்குப்பின் சுனிதா கேட்டாள் “அந்த பைல் செட் எத்ர ரூவா சாரே” என.
29october 2023.
நாஞ்சில் ஹமீது.