Tuesday, 29 October 2024

கோலாலம்பூரில்

  

            விடுதி வரேவேற்பறையில் இருந்த தமிழர் ராஜுவிடம். கோலாலம்பூர் செல்லும் வழியை கேட்டேன். நாற்ப்பத்தியைந்து நிமிட பயண தூரம் என்றார். 

  விடுதியறைக்கு அருகிலுள்ள முக்கிய சாலையிலிருந்து செரம்பான் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து வேறு பேருந்து மாறி kl(கோலாலம்பூர்) செல்லலாம் என்றார்.

பயணிகள் இல்லாத பேருந்து.


    ஐந்து நிமிடத்தில் பேருந்து வந்தது. seremban எனச்சொல்லி டிக்கெட் கேட்டேன் வயதான ஓட்டுனர் உனக்கு எங்கே செல்ல வேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டார். kl என்றதும் செரம்பனிலிருந்து பஸ்ஸா,ரயிலா? எனக்கேட்டார்.

  எது பெஸ்ட்?எனக்கேட்டேன்.

 நான் உன்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிடுகிறேன் என்றார்.

 குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்தில் ஜீன்ஸ் அணிந்த மலேசிய முஸ்லிம் பாட்டி யூடுபில் ஹிந்தி பாடல்களை பார்த்துக்கொண்டிருந்தார். வேறு பயணிகளே இல்லை. மூன்றரை ரிங்கிட் கட்டணம்.ஒரு மணிநேரத்தில் செரம்பான் ரயில் நிலையம்.

ரயிலில் 


  மிகக்குறைந்த பயணிகளே இருந்த நடைமேடையிலிருந்து ரயிலேறினேன். ஒன்பதரை ரிங்ரிட் பயண சீட்டு கோலாலம்பூர் சென்ட்ரலுக்கு ஐந்து நிமிடத்தில் ரயில் வந்தது. tiroi,labu, batang benar என ஒன்பது நிலையங்களில் நின்று kl சென்ட்ரலை நான் அடையும்போது மணி இரவு பதினொன்றாகி இருந்தது. 

    2006,2013 ஆண்டுகளில் இந்த கோலாலம்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளேன். விமான நிலையத்துக்கு நிகரானது கோலாலம்பூர் சென்ட்ரல் ரயில்நிலையம். அங்கிருந்து டாக்சியில் இருபத்தியைந்து நிமிடத்தில் செய்யதலி அண்ணனின் வீட்டை சென்று சேர்ந்தேன். இரவு ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்த இரட்டை கோபுரத்தை மொபைலில் படம் பிடிக்க முயற்சித்தேன்.

Kl Sentral 



  Twin Palms குடியிருப்பு வாயிலில் இருந்த பாதுகாவலர் நான் செல்லும் வீட்டின் எண்ணை கேட்டு அவர்களிடம் தொலைபேசியில் உறுதிசெய்தபின் என் காரை உள்ளே செல்ல அனுமதித்தார்.விடுதியிலிருந்து புறப்பட்டது முதல் ஹமீமா மைனியிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். எங்கே வந்து கொண்டிருக்கிறேன் என.

  அவரது வீட்டு வாசலில் கார் நின்றபோது அந்த இரவிலும் மகன் சுபினுடன்,மைனி சாலையில் வந்து வரவேற்று அழைத்துச்சென்றார். “மைனி ரொம்ப லேட்டா வாறேனா? 

“நீங்க வீட்டுக்கு வாறது எவ்ளோ சந்தோசம் எங்களுக்கு” என்றார். மருமகள்,மகள்,மகளின் கணவர் சையதலி அண்ணன் தூங்க சென்றிருந்தனர். மகன் சுபின் என்னை அமர சொல்லிவிட்டு குடிக்க தண்ணீர் தந்தார்.

 சுபினின் மனைவி ஆயிஷா மாடியிலிருந்து இறங்கி வந்தார். ஐந்து நிமிடத்தில் அண்ணனும் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம். “தம்பீ அஸ்ஸலாமு அலைக்கும்” என இறுக கட்டியணைத்தார்.

 “முதல்ல சாப்பிடு” என்றார். எனக்கு நல்ல பசி கப்பலில் மதியம் பன்னிரெண்டு மணிக்கு சாப்பிட்டபின் மாலையில் படகு,கார்,பேருந்து,ரயில் மீண்டும் கார் என ஓடிகொண்டே இருந்தேன். விடுதியிலிருந்து அழைக்கும்போது வீட்டுக்கு வர தாமதமாகிவிடும் என்றபோது இரவு இங்கே தங்கி விட்டு காலையில் செல்லலாம் வாங்க என்றார் ஹமீமா மைனி.

    ஆயிஷா எனக்கு உணவு பரிமாறினாள். இடியப்பம் போன்ற மலேசிய உணவு, ஆப்பம்,கிழங்கு,மட்டன் கறி,பொரித்த கோழி,அவியல்,அப்பளம்,வெள்ளை சாதம் என ஒரு ஆளுக்காக நிறைய உணவுகள் தயாரித்து வைத்திருந்தனர். வீட்டில் இருக்கும் பிலிப்பினோ பணிப்பெண்ணுக்கும் கொஞ்சம் நீண்ட இரவாகிபோனது.

  உணவுக்குப்பின் அமர்ந்து பழைய காந்தாரிவிளை கதைகளை பேச ஆரம்பித்தோம். சையதலி அண்ணன் “பொறு சாய்மாவும் இந்த கதைகளை கேட்கட்டும்” எனச்சொல்லி மகளை போனில் அழைத்தார். நல்ல தூக்கத்திலிருந்த சாய்மா வந்தமர்ந்து எங்கள் பழைய கதைகளை கேட்டு சிரிக்கத்தொடங்கினாள்.

  முப்பதாண்டுக்கு முந்தைய நினைவுகள்.பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்து, மீண்டும் பரீட்சை எழுதி மீண்டும் தோற்று உள்ளூரில் வலை கம்பனியில் பணியில் சேர்ந்தபோது. சையதலி அண்ணன் வாப்பாவிடம் பேசி “தம்பி இனி ஒழுங்கா படிப்பான்”என்றபோது. “மக்ளே நீ உன் வேலைய பாரு இவன படிக்க வெக்க பைசாய சின்னவிள கடல்ல போடுவேன்” என வாப்பா சொன்னார்.

   வலை கம்பனியில் வாங்கிய முதல் மாத சம்பளம் இருநூற்றி அறுபத்தியைந்து ரூபாயுடன் நாகர்கோவில் சகாயமாதா டூட்டோரியலில் சையதலி அண்ணன் என்னை சேர்த்து விட்டார். பின்னர் பஸ்சுக்கு தினமும் ஐந்து ரூபாய் வாப்பா தர ஆரம்பித்தார்.

  பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த மூன்று பாடங்களும் பாஸாகி இப்போது உங்கள் முன்னால் இருப்பதற்கு இவர்தான் காரணம் என சையதலி அண்ணனின் மகள்,மகன்,மருமகளிடம் சொன்னேன்.

 நள்ளிரவு ஒன்றரை மணிக்கு பிள்ளைகள் தூங்க சென்றார்கள். நானும் அண்ணனும் ஒரு சுலைமானி குடித்துவிட்டு நடைக்கு சென்றோம்.குடியிருப்பின் காவலர்கள் அப்போதும் ரோந்து வந்துகொண்டிருந்தனர். சையதலி அண்ணன் வீட்டில் நின்றிருந்த டெஸ்லா காரை காண்பித்து “தம்பி ஒரு ரவுண்டு போயிட்டு வா”என்றார்.

 



   காலையில் ஓட்டலாம் என மறுத்தேன்.அவர் ஊரில் பூக்கடை கல்லூரியில் பணியில் இருக்கும்போது இரவு தாமதமானால் ஹாஸ்டலில் தங்கி பயிலும் மாணவர்களின் பைக்கில் வீட்டுக்கு வருவார். ஒருநாள் அதிகாலை என்னை எழுப்பி “தம்பி இதுல 110 கிமீ வேகத்தில் ஒரு ரவுண்டு போயிற்று வா” என்றார்.அது சுசூகி சோகன் பைக். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார் அண்ணன்.

  அதிகாலை இரண்டு மணிக்கு தூங்க சென்றேன். வீட்டின் நில அமைப்பு வியப்பானது. தரை தளத்தில் இருக்கும் வாயில் கதவு.அடுமனையும், உணவு கூடமும் இருக்கும் பின்புறம் முதல் மாடியாகயுள்ளது அதன் கீழ் பகுதியில் படியிறங்கி சென்றால் அங்கே உடற்பயிற்சி கூடத்தை ஒட்டிய அறையில் படுத்துக்கொண்டேன். அந்த அறை பின்புற தரைதளம்.அந்த குடியிருப்பில் மொத்தம் நான்கு வீடுகளுக்கு மட்டுமே இந்த நில அமைப்பு உள்ளது.

   காலை ஏழு மணிக்குத்தான் எழுந்தேன். தொழுகை முடித்து வந்தபோது பணிப்பெண் தென்னிந்திய சுவையில் சூடாக சாயா தந்தார். கண்ணாடி கதவை திறந்து அமர்ந்தேன்.அண்ணனும் நானும் காலை நடைக்கு சென்றோம். வீட்டின் பின்புறம் சென்றபோது நான் படுத்திருந்த அறை தரைப்பகுதியிலும்,அந்த வீட்டின் முன் பகுதியில் துவங்கும் தரைத்தளம் பின் பகுதியில் மாடியாகவும் இருக்கும் விந்தையான அமைப்பை கண்டேன்.



    சாய்மாவின் கணவருடன் டெஸ்லாவை ஓட்டிப்பார்த்தேன்.பிள்ளைகள் தயாராகி தங்களுக்குரிய கார்களில் பணிக்கு சென்றுவிட்டனர்.அண்ணன் இன்று கொஞ்சம் தாமதமாக செல்வதாக சொன்னார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் அவர்தான் தலைவர் (CEO) அவருக்கு ஒரு பாதுகாவலரும்,ஓட்டுனரும் காலையிலேயே வந்து விட்டனர்.



   மைனி காலை உணவாக,புட்டு,பயறு,பப்படம் மற்றும் தோசை,சட்னி,சாம்பார் செய்திருந்தார். சந்தோசத்தின் வெளிப்பாடு ஒரு மனிதனுக்காக இவ்வளவு உணவு வகைகள். மைனி என்னை ஷாப்பிங் மாலுக்கு அழைத்து சென்று என் மகன்களுக்கு சாக்லேட்கள் வாங்கி தந்தார்.



ஓட்டுநர் பாலா 


  அவரது காரிலேயே என்னை விடுதியறைக்கு அனுப்பிவைத்தார்.ஓட்டுனர் பாலா மலேசிய தமிழர்.ஒரு மணி நேர பயணத்தில் விடுதியை அடைந்தேன். மதிய உணவை ரைமுண்டோ,பாட்டீலுடன் சாப்பிட்டேன். 

  ஜெர்ரி இரண்டு மணிக்கு புறப்பட்டு சென்றார். எங்களை அழைத்து செல்ல நான்கு மணிக்கு ஓட்டுனர் வந்தார். பாட்டீல் கிளம்பிவர சற்று தாமதமாகவே நான்குகரைக்கு புறப்பட்டோம். ஏழரை மணிக்கு எங்கள் மூவருக்கும் மும்பைக்கு விமானம். ஐந்தரை மணிக்குவிமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

நாஞ்சில் ஹமீது.

29 –10-2024.

 இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது . இதன் தொடர்ச்சி நாளையே பதிவிடுவேன்.

இரட்டை கோபுரம்


விடுதியறையிலிருந்து 







Wednesday, 9 October 2024

விடை தந்த அலையன்ஸ்

  


இந்த கப்பலில் ஞாயிறுகளில் நான் காலை கூடத்துக்கு இயந்திர அறைக்கு செல்வதில்லை. இயந்திர அறையில் காலை பத்து மணிவரை பணி.டெக்கில் குடியிருப்பை சுத்தபடுத்தும் பணியை செய்வார்கள். 

     எனக்கு மோட்டார் அறை மற்றும் கம்ப்ரசர் அறை ரவுண்ட்ஸ் மட்டும் போய் வந்தால் போதும். இன்று காலை கூட்டத்துக்கு இயந்திர அறைக்கு போய் வந்தேன். 

 

காலை கூட்டத்தில் 

   முதன்மை இஞ்சினியர் ஞாயிறுகளில் பிரார்த்தனை நடத்துகிறார்.இங்கிருக்கும் அனைத்து பிலிப்பினோ பணியாளர்களும் கிறிஸ்தவர்கள்  எனவே அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இரண்டாம் சமையல்காரர் ஜானியைதவிர. 

    ஞாயிறில் வாசித்தும் எழுதியும் நாள் கடந்து போனது. எனது உடைமைகள் அனைத்தயும் அடுக்கி பயண பைகளை தயார் செய்தேன். இப்போது பாக்கிங் செய்வதும் சலிப்பாக இருக்கிறது. ஆவணங்கள் தவிர பத்து கிலோ எடையுள்ள சிறிய பையுடன் பயணிப்பது போல எதிர்காலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.

    திங்கள்கிழமை காலையில் எனக்கு பணியேதும் தரவில்லை. கப்பலில் இருந்து இறங்கும் நாள். காலை ரவுண்ட்ஸ்க்கு சென்றபோது காஸ் இஞ்சினியர் அருண், சோம்ராஜ்,கார்லோ கம்ப்ரசர் அறையில் வெளிக்காற்று வரும் ப்ளோவர் கதவுகள் தானியங்கி முறையில் இயங்காததை ஆடிட்டர் கண்டு சொன்னார். அதை சரி செய்யும் முயற்சியில் இருந்தனர்.

 காற்று அல்லது மின்சாரத்தால் அதை இயக்கம் கருவியில் கோளாறு இருக்கலாம் அதை மட்டும் கழட்டி பாருங்கள் என்றேன். கப்ப்ரசர்  அறையில் தீ விபத்து ஏற்பட்டால் வெளிக்காற்று உள்ளே வராதவாறு காற்று இயந்திரம் தானியங்கி முறையில் நின்றுவிட வேண்டும். அதன் கதவுகள் மூடிகொள்ளும்.

   நைட்ரோஜன் அளவுகளை பதிவு செய்துவிட்டு. காலை தேநீருக்கு சென்றேன். பதினோரு மணிக்கு எங்கள் மாற்று பணியாளர்கள் வருவது உறுதியானது. மும்பையிலிருந்து வரும் மோட்டார் மேன் சந்தோசை அழைத்தேன். ஜெட்டியை நெருங்கி விட்டதாக சொன்னான். சிறிது நேரத்தில் காப்டன் மாற்று பணியாளர்கள் மதியம் மூன்று மணிக்குதான் வருவார்கள் என்றார். இரண்டாம் இஞ்சினியர் வரும் விமானம் பதினோரு மணிக்குத்தான் தரையிறங்கும் என்ற செய்தி வந்தது. நாங்கள் இறங்குவது மாலை ஐந்து மணியாகியது. 

ரை முண்டோவின் கடைசி போகா 


   ரைமுண்டோ மதிய,இரவு உணவுவுகளையும் தயார் செய்திருந்தார்.மதிய உணவுக்குப்பின் தொழுகை முடிந்து படுத்தேன் யெல்லோ பீவர் அட்டை,சி டி சியை பெற்றுச்செல்ல  விகாஸ் அழைத்தான். மீண்டும் அறைக்கு வந்து குட்டி தூக்கம் போட்டு எழுந்தேன்.மணி மூன்றை தாண்டியிருந்தது. மாற்று பணியாளர்கள் வரவில்லை. நான்கு மணிக்குத்தான் அவர்களை அழைத்து வரும் படகு வருவதாக சொன்னார்கள். 

  நீர்மட்டம் (low tide) குறைவாக இருக்கும்போது படகு கரையிலிருந்து கடலுக்கு வர இயலாது அடி முட்டிவிடும். எனவே தாமதம் என்றார்கள். மாற்று பணியாளர்களின் படகு கரையணையும் போது மணி நான்கரை ஆகிவிட்டது. முஹமத் கவுஸ் ஆந்திராவை சார்ந்த காஸ் பிட்டர் என்னை விடுவிக்க வந்தார். 

Reliver onboard 


   இயந்திர அறையில் எனது பணிமனை மற்றும் டெக்கில் தினசரி செய்யும் பணிகளை காண்பித்து கொடுத்தேன். ஆடிட்டர் முன்பு காப்டனாக இருந்த கப்பலில் கவுஸ் பணிபுரிந்துள்ளான். காப்டன் ஆசுதோஷ் “அரே பாடி புல்டர் வந்துட்டான்,ஏதாவது இரும்ப வளைக்கனுமின்னா இவன்ட்ட குடுத்தா போதும்” என்றார்.

   ஆறு மணிக்கு முன்பாகவே எங்களை அழைத்து செல்லும் ஆறு மணிக்கு எல் என் ஜி அலையன்ஸ் எங்களுக்கு விடை தந்தது. தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் இருந்து பிப்ரவரி மாதம் இருபத்தியைந்தாம் தேதி பணியில் இணைந்தேன். இருநூற்றி இருபது நாட்கள். அதிர்டவசமாக கடந்த வாரம் தரையிங்க வாய்ப்பு கிடைத்தது.(மலாக்கா பதிவு பின்னர் வரும்). நீண்ட நாள்களுக்குப்பின் நீரிலிருந்து நிலத்தில் இறங்கும் உற்சாகம்.



 முப்பது நிமிட படகு பயணம். கரையில் முகவர் எங்கள் பாஸ்போர்ட்,லேண்டிங் பெர்மிட்,குடியுரிமை அதிகாரிக்கு கடிதம் ஆகியவற்றை வந்தார். இங்கு சோதனையோ,சரிபார்ப்போ ஏதுமில்லை. கார் நின்றுகொண்டிருந்தது. 



 போர்ட் டிக்ஸன் அரை மணிநேர பயணம்.அங்கே கெஸ்ட் விடுதியில் இரவு தங்கல் மறுநாள் மாலை ஏழரைக்கு எங்களுக்கு விமானம்.பிலிப்பினோ ஜெர்ரிக்கு ஐந்தரைக்கு விமானம்.அவரை அழைத்து செல்ல இரண்டு மணிக்கும்,எங்களுக்கு நான்கு மணிக்கும் வருவதாக  ஓட்டுனர் சொன்னார்.

நாஞ்சில் ஹமீது,

30 செப்டம்பர் 2024