Monday, 29 May 2023

நடுக்கடலில்

                                நடுக்கடலில் 





   பனாமாவிலிருந்து ஆசியாவின் தீவு நாடு ஒன்றுக்கு புறப்பட்டு நான்காயிரத்தி எண்ணூறு மைல்களை தாண்டிவிட்டோம் மொத்த தூரம் எட்டாயிரம் நாட்டிகல் மைல் (1 nautical mile=1.85km).


 இம்மாத நடுவில்  பனாமா கால்வாயை கடப்பதற்காக வந்துகொண்டிருந்த கப்பலில் இரவு நேரத்தில் கிறிஸ்டோபலில் ஏறிக்கொண்டோம்.

   கப்பலின் வேகத்தை குறைத்தபோது நாங்கள் வந்த படகு கப்பலுடன் அருகணைந்து அதன் வேகத்துக்கு இணையாக சென்றுகொண்டிருக்கும்போது  ஸ்டார்ட்போர்ட் சைடில் தொங்கிகொண்டிருந்த ஏணியில் (Gangway) தேர்ந்த சர்க்கஸ்காரனைப்போல தாவி ஏறி கப்பலுக்குள் பத்திரமாக பாதம் பதித்தோம்.

  இரவே அட்லாண்டிக் கடலிலிருந்து பனாமா கால்வாய்க்குள் நுழைந்து காட்டில் ஓடும் ஆற்றிற்குள் சென்று பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தோம். மறுநாள் மதியம் நங்கூரம் உருவப்பட்டு மறு எல்லையை அடைந்து (பல்போவா)பசுபிக் கடலில் நுழையும்போது இரவாகியிருந்தது.

    இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டுமுதல் இஞ்சின் பிட்டராக இருந்தேன்.அதில் எனது பணி பெரும்பாலும் தெரிந்திருந்ததால் அதிலேயே எளிதாக ஒன்றிபோய்விட்டேன்.

   எல்.பி.ஜி கப்பல்களில் காஸ் பிட்டராக வாய்ப்பு உள்ளது என நண்பர்கள் சொன்னபோது எல்.பி.ஜி.கப்பலில் வாய்ப்பு கேட்டு என் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன் 2014ஆம் ஆண்டு. முன் அனுபவம் இல்லாமல் எல்.பி.ஜி கப்பலில் அனுப்ப முடியாது என கை விரித்தார் என அப்போதைய மேலாளர் அனிதா.

  2016 ஜூன் மாதம் அனிதா என்னை அழைத்து எல்.பி,ஜி கப்பலில் வாய்ப்பு தருகிறோம் அதற்கான (course) வகுப்பில் கலந்து சான்றிதழ் பெறச்சொன்னார்.பணியில் இணையும்போது டெக் வேலைகளை கற்றுக்கொள் என்றார்.

  ஆனால் இப்போதுதான் டெக்கில் காஸ் பிட்டராக இணையும் வாய்ப்பு கிடைத்தது.எல்.பி.ஜி கப்பல்களின் இயந்திர அறையில் கடுமையான வெப்பம் இருக்கும். அதிகம் உடல் உழைப்பு சார்ந்த பணி ஆதலால் இரவில் சீக்கிரமே நல்லுறக்கம் எப்போதும்.

    இப்பொது இங்கே காஸ் பிட்டராக பணிக்கு வந்தேன்.ஆறு வருடம் ஆன புதிய கப்பல்.காலையில் கணினி திரையை பார்த்து எல்.பி.ஜி திரவம் நிரப்பபட்டுள்ள நான்கு தொட்டிகளின் வெப்பம்,அழுத்தம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.பின்னர் காஸ் பிளாண்டில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தின் வெப்பம்,அழுத்தம் போன்றவற்றை குறித்துகொண்டு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

   மதியமும்,இரவும் அதுபோல் எழுதவேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் ஒருமுறை காஸ் பிளாண்டில் சென்று இயந்திரங்களை பார்த்து அளவுகளை குறித்து பதிவு செய்ய வேண்டும்.மீதமுள்ள பகல் பொழுதில் சில பராமரிப்பு பணிகள். புதிய கப்பலாக இருப்பதால் எளிய பணிகள் மட்டுமே எனக்கு.இத்தனை வருடங்கள் கடும் உடல்உழைப்பு சார்ந்த பணியில் இருந்ததால் இப்போது இது எனக்கு மிக எளிதாக இருக்கிறது.

   பனாமாவில் இருந்து புறப்பட்டது முதல் இதுவரை இருதினங்களுக்கு ஒரு மணிநேரம் என ஆறு மணிநேரம் கப்பலின் கடிகாரம் பின்னே சென்றுவிட்டது.இந்த வாரத்தில் ஒரு  நாளை முன்னே நகர்த்தி(https://kappalkaran.wordpress.com/2021/06/05/563/ காணாமல் போன செவ்வாய் கிழமைகப்பல்காரன் டைரியில்) மேலும் நான்கு மணிநேரம் பின்னே சென்று  ஆசியாவின் தீவு நாட்டை அடையும்போது  இரவு பகலாகியிருக்கும்.

  பனாமாவில் இருந்து புறப்பட்ட மறுநாளே அறையின் வெப்பம் அதிகரித்து 27 டிகிரியை எட்டியது கடல் நீர் முப்பத்தி நான்கு டிகிரியிலும்.கப்பலின் குளிரூட்டி மிக சிறியதாக இருந்ததால் குடியிருப்பின் அறைகளை குளிர்விக்க இயலவில்லை. எல்லா அறைகளிலும் மின்விசிறி இருந்தது.படுக்கைக்கு அருகில் நாற்காலியை போட்டு மின்விசிறியை அதில் கட்டிவைத்தபின் சுழல வைத்து சட்டையில்லாமல் படுத்துக்கொண்டேன்.

 


  வெப்ப பகுதிகளில் செல்லும்போது கொஞ்சம் கஷ்டம் தான் என்றார்கள். இங்கிருந்த இஞ்சினியர்கள். படிப்படியாக வெப்பம் குறைந்து ஐந்தாவது நாளே அறையின் வெப்பம் 21 டிகிரியில் சென்றதால் குளிரூட்டியை அணைத்து வைத்தேன்.பகலில் கொஞ்சமாக திறந்தாலும் பத்தொன்பது பாகைக்கு சென்றதால் நேற்று வரை அணைத்தே வைத்திருந்தேன்.

   பதினைந்து நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பல் உத்தேசமாக ஒரு நாளில் முன்னூற்றி முப்பது மைல்களுக்கு மேல் கடப்பதால் மொத்த தொலைவில்  இன்று வரை பாதிக்குமேல் கடந்துவிட்டோம். பசுபிக் கடலில் பயணிக்க தொடங்கியபின் அருகில் எங்கும் நிலமே இல்லை வட பசுபிக் கடலில்   ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடலின் நடுவில் இருக்கிறது ஹவாய் தீவு இதை எழுதிகொண்டிருக்கும் போது ஹாவாயின் கோணலுலு(honlulu)    தீவிலிருந்து 370 மைல் தொலைவில் கப்பல் சென்றுகொண்டிருக்கிறது.

   நண்பர்கள் சிலர் கேட்டார்கள் இப்போது எங்கே இருக்கிறாய் என நடுக்கடலில் என்றேன்.



  கப்பலுக்கு வந்தபின் தினமும் ஒருமணிநேரம் எழுதுவது ஒருமணி நேரம் வாசிப்பது என வகுத்துகொண்டேன்.ஆனால் எண்ணியது போல் நடக்கவில்லை.சிறுகதை ஒன்று எழுதினேன்.கட்டுரை எழுதவதை போல் அது எளிதல்ல என்பதை எழுதியபின் உணர்ந்தேன். கடந்த வாரத்தின் முழு ஞாயிறையும் மற்ற நாட்களின் ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியையும் அது எடுத்துகொண்டது பயிற்சியின்மையே காரணம் என உணர்ந்தேன்.இனி அடிக்கடி கதை எழுத வேண்டும்.

 கப்பலின் கடிகாரம் பின்னோக்கி செல்வதால் இரவில் சீக்கிரமே தூக்கம் அழுத்துகிறது .அதிகாலை நான்கு மணிக்கே விழித்தாலும் நான் நினைத்தது போல் எழுதவோ படிக்கவோ முடியவில்லை.

இனி வரும் நாட்களில் நாட்குறிப்புகள் எழுதியும்,வாசிக்கவும் செய்ய வேண்டும்.

புதிய பணியில் கற்றுகொண்டே இருக்கிறேன்.ஒருமுறை சரக்கை இறக்கி பின்னர் சரக்கை ஏற்றும்போது போது முழுமையாக எனது பணிகளை தெரிந்துகொள்வேன்.

                ட்்

  இனி மேல் எனது  கட்டுரைகள் நாஞ்சில் ஹமீது எனவும் புனைவுகள் கப்பல்காரன் எனவும் வரும்.

  நாஞ்சில் ஹமீது.

Thursday, 11 May 2023

பத்திரமாக தரையிறங்கிய 99 வது விமான பயணம் .

 

என் எஸ் பிரன்டியர் நாட்குறிப்புகள் 2

                 மும்பையிலிருந்து அதிகாலை 2.25 மணிக்கு விமானம் தரையை விட்டு மேலெழும்பியது. விமானத்திற்காக காத்திருக்கையில் நாட்குறிப்புகளை எழுத தொடங்கி கணினியில் பேட்டரி தீரும் வரை எழுதினேன்.

  

மும்பை விமான நிலையம் 

   மும்பை விமான நிலையம் உலக தரத்துக்கு இணையாக இருக்கிறது.நாங்கள் இமிகிரேஷன் முடித்து வரும்போது விமான ஊழியர் ஒருவர் தாய்லாந்து செல்லும் பயணியா எனக்கேட்டார்.

  நாங்கள் காத்திருக்கும்போதும் ஏர் இந்தியா விமான ஊழியர் தாய்லாந்து செல்லும் பயணிகள் இருவரை தேடி கூவி,கூவி அழைத்துகொண்டிருந்தார். நான் நினைத்தேன் இப்போது ஐடியா மணி இருந்தால் என்ன சொல்வார் என “தாய்லாந்துக்கு போறதுக்கு மின்னையே மட்டையாயாச்சி,இனி அங்க போய் சேருமோ,சேராதோ?”என.

   வானில் பறந்த விமானம் 4257மைல்களை ஒன்பதரை மணிநேரத்தில் கடந்ததும் மிக பத்திரமாக ஆம்ஸ்டர்டாமில் தரையிறக்கினார் பைலட்.கோயம்பேடு பேருந்து நிலையத்தை போல நெருக்கமாக நின்ற விமானங்களால் ஓடு தளத்தை தவிர நீலத்தில் மூடியிருந்தது ஆம்ஸ்டர்டாம்.பதினான்கு டிகிரி குளிரில்,மென்மழை தூறிக்கொண்டிருந்தது. இந்தியாவைவிட மூன்று மணிநேரம் பின்னே சென்று காலை எட்டரை மணியாக இருந்தது.

  

ஆம்ஸ்டர்டாம் தரையிரங்கல்

   இங்கே இருந்த தியான கூடத்தில் காலை தொழுகையை தொழுதுவிட்டு  அடுத்த விமானம் புறப்படும் வாயில் அருகே அமர்ந்துகொண்டோம். மிகப்பெரிய விமான நிலையம் உலகம் முழுவதையும் தனது சேவையால் இணைக்கிறது KLM விமான நிறுவனம்  எனினும் அதிக பரபரப்பில்லாத தோற்றத்தை அளித்தது.மும்பை விமான நிலையத்தில் எழுதத் தொடங்கிய கட்டுரையின் மிச்சத்தை எழுதி முடித்தேன்.

    

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் 

  பிரம்பலியுடன் மெக்டொனால்ட் சென்று பர்கர் சாப்பிட்டோம்.நான் ஒரு பிஷ் பில்லெட் உண்டேன்.

காபியை பார்க்கும்போதெல்லாம் குடிக்க வேண்டும் என ஆசை தூண்டும்.மூன்று யூரோ கொடுத்து வாங்கிய காபியை என்னால் குடிக்க முடியவில்லை.அந்த கசப்பை எப்படி ருசித்து அருந்துகிறார்களோ?காபி பிரியர்கள்.

நான்கரை மணிநேர காத்திருப்புக்குப்பின் நெதர்லாந்து நேரப்படி மதியம் 12.50 க்கு விமானம் நகர்ந்தாலும் ஓடு பாதையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பன்னிரண்டு நிமிடம் தமாதமாக மேலெழும்பும் என பைலட் அறிவித்தார்.மூன்று பயணிகளுக்காக முன்பு காத்திருக்கிறோம் என்ற பைலட் பின்னர் ஒருவர் வரவில்லை அவரது பயணபைகள் விமானத்தில் உள்ளது எனவும் சொன்னார்.

  


போயிங் 777-300Er விமானம் நீல கழுகைப்போல் பிரமாண்டமாக வானில்  சிறகை விரித்து  285 பயணிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சிப்பந்திகளுடன் பதினோரு மணிநேரத்தில் 5470 மைல்களை பறந்து கடந்து பனாமாவில் இறங்கும்போது மாலை மணி ஐந்தாகியிருந்தது.இந்த மிகப்பெரிய விமானம் தரையிரங்கியதே தெரியவில்லை விமானத்தின் வாயிலில் நின்று புன்னகையுடன் வழியனுப்பிக்கொண்டிருந்த துணை விமானியிடம் பத்திரமாக விமானத்தை தரையிரக்கியதற்காக நன்றி சொன்னேன்.2003 ஆண்டு தொடங்கிய என் முதல் விமான பயணம் 99வது பயணத்தை கடந்த இருபது ஆண்டுகளில் நிறைவுசெய்திருக்கிறேன்.KLM விமானத்தில் எனது முதல் பயணம் இது.

       


   கடிகாரம் பின்னோக்கி சென்றுகொண்டே இருந்ததால் இருள் வரவே இல்லை. இருக்கையில் அமர்ந்தே கடமையான லுகர்,அஸர் தொழுகைகளை நிறைவேற்றினேன். இங்கே இப்போது புதிய விமான நிலையம் கட்டியுள்ளனர்.நான் கடந்த ஆண்டு வரை வந்த விமான நிலையம் தூரத்தில் இருப்பதாக சொன்னார்கள்.இங்குள்ள கார் நிறுத்துமிடம் என்னை கவர்ந்தது.

               

கார் பார்கிங் 

  கப்பல் பணியாளர்களுக்கு இமிகிரேசனில் தனி வரிசை.அனைத்து சோதனைகளையும் முடித்து விடுதியறைக்கு வரும்போது மணி எட்டரையாகிவிட்டது. பனாமாவில் கப்பல் ஏற வரும் இந்தியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை குடியுரிமை பணியாளர் ஒருவர் கடவு சீட்டுகளுடன் உடன் வருவார்.விடுதியலிருந்து வெளியேறி கப்பல் ஏறும்வரை எங்களது பாஸ்போர்ட் அவரது கையிலிருக்கும்.விடுதி வரவேற்ப்பறையில் காவலிருப்பார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் இணைவதற்காக கடைசியாக இங்கே வந்திருந்தேன்.ஓர் இரவு விடுதியில் தங்கிவிட்டு பல்போவா சென்று கப்பல் ஏறினேன்.பசுபிக் கடலிலிருந்து  பனாமா கால்வாயை கடந்து அட்லாண்டிக் கடலில் கிறிஸ்டோபல் சென்று நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம் கரையிலிருந்து ஏழு மைல் தொலைவில் ஐந்து மாதங்கள் நின்றுகொண்டிருந்தோம்.

    இப்போது மூன்று தினங்கள் விடுதியில் தனிமைபடுத்தலுக்குப்பின் பன்னிரெண்டாம் தேதி கப்பலேற வேண்டுமென சொல்லியிருந்தார்கள்.கப்பல் இங்கு வருவது இரு தினங்கள் தாமதமாகிவிட்டதால் வரும் ஞாயிறுவரை விடுதியறையில் இருக்க வேண்டும்.

   பனாமாவின் விக்டோரியா ஹோட்டலின் சூட் அறையை எனக்கு தந்தார்கள்.நான் தற்போது வசிக்கும் இரண்டு படுக்கையறை கொண்ட வீடளவுக்கு மிகப்பெரிய அறை அனைத்தையும் மிக சிக்கனமாக செலவு செய்து பழகிய எனக்கு இந்த வசதிகள் அதிகம்தான்.

   அறைக்கு வந்தபின் உணவுண்டு ஒன்பதரைக்கு தூங்கிவிட்டேன்.ஒன்றரைக்கு விழிப்பு வந்தது.இந்தியாவிலிருந்து புறப்பட்டபின் கடிகாரம் பத்தரை மணிநேரம் பின்னோக்கி சென்று பகல் இங்கே இரவாகி போனதால் துயில் இல்லை. நான்காவது மாடியின் கண்ணாடி ஜன்னல் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்துகொண்டேன். இந்த நள்ளிரவிலும் இளம்பெண்கள் சாவகாசமாக நடமாட முடிகிறது இந்த ஊரில்.

   அதிகாலை ஆறு மணிவரை  பணிக்கு சென்று திரும்பும் சில பெண்களின் நடமாட்டம் இருந்தது.

 ஷாகுல் ஹமீது,

11-05-2023

பணிக்கு திரும்புதல்

    என் எஸ் பிரன்டியர் நாட்குறிப்புகள் .

    இம்முறையும் அன்றாடம் நாட்குறிப்புகளை எழுதுவதாக உள்ளேன். எனது இந்த வலைப்பூவில் இணையம் இருக்கும்போது  மட்டுமே வலையேற்ற முடியும்.தினமும் டைரி குறிப்புகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு வாட்சப்பில் அனுப்பி தருவேன்.

        

                            

     மும்பை சத்ரபதி விமான நிலையத்தின்  KLM 878 மும்பை டூ ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்திற்குள் செல்ல கேட் 72இன் முன் அமர்ந்திருக்கிறேன்.  கடந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி சிங்கப்பூர் எனெர்ஜி  கப்பலிலிருந்து ஊருக்கு வந்தேன்.

     மூத்த மகன் ஸாலிம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததால் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை விடுமுறை சொல்லியிருந்தேன்.மார்ச் மாதம் கம்பனியிலிருந்து அழைத்து மீண்டும் பணிக்கு வரச்சொன்னார்கள். ஏப்ரல் முதல் வாரத்துக்குப்பின் தான் வர முடியும்.எல் என் ஜி கப்பலுக்கு செல்ல விருப்பமில்லை கப்பலில் பதவிஉயர்வு எதிர்பார்க்கிறேன்.எனவே எல் பி ஜி கப்பலுக்கு அனுப்ப வேண்டினேன்.

     கப்பலுக்கு போய் ஏன் பதவிஉயர்வு? நானே பதவி உயர்வு தந்து அனுப்புகிறேன் என்றார் எனது அலுவலக மேலாளர் தர்சனா. “ஷாகுல் நீண்ட நாட்களாக எஞ்சின் பிட்டராக பணி செய்கிறாய் ஏன் பதவி உயர்வுக்கு பரிந்துரை கடிதம் எதுவும் வாங்கவில்லை” எனக்கேட்டார்.

      கடந்த கப்பலில் வாங்கியிருக்கிறேன் என்றேன். கணினி திரையில் எனது ரிப்போட்டை வாசித்து காட்டினார்.இதில் பரிந்துரை இல்லையே என்றார். முதல் மூன்று மாதம் என்னுடன் இருந்த முதன்மை இஞ்சினியர் ரோம்லியிடம் வாங்கிய ரிப்போர்ட் உள்ளது என்றேன்.அதை எனக்கு அனுப்பு என்றார். மின்னஞ்சல் செய்தேன்.

   ஏப்ரலுக்கு முன் பணிக்கு வரவேண்டும் என சொன்னபோது மகனின் பரீட்சை இருக்கிறது அதற்கு பின் தான் வருவேன் என்றேன். “மகன் என்ன படிக்கிறான்,அவனது பரீட்சை எப்போது முடியும்”

“ஏப்ரல் ஐந்தாம் தேதி என்றேன்.

“ஏப்ரல் ஏழாம் தேதி பணிக்கு வா”என அழைத்தார்.

“சரி”என்றேன்.

  மார்ச் இறுதியில் ரமலான் நோன்பு காலம் துவங்கியதால் சுனிதா ரமலான் முடிந்தபிறகு போனால் போதும் என கட்டளையிட்டாள்.மார்ச் இறுதியில் என் மேலாளர் தர்சனா என்னை அழைத்து பணியில் இணையும் தேதியை உறுதியாக சொல்ல சொன்னார்.ஏப்ரல் இருபத்தியைந்து என்றேன்.சில தினங்களுக்குப்பின் மீண்டும் என்னை அழைத்து “பதவி உயர்வுக்கு கோலாலம்பூர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.விரைவில் உறுதி செய்வார்கள்.உன்னால் காஸ் பிட்டராக பணி செய்ய முடியும் தானே” எனக்கேட்டார் .

“எஸ்” என்றேன்.

எல்லாம் உறுதியாகி மே மாதம் பன்னிரெண்டாம் தேதி பனாமா சென்று கப்பல் ஏற வேண்டும். மருத்துவ சோதனைக்கு செல்ல கடிதம் அனுப்பினார்.மே ஒன்றாம் தேதி சென்னையில் மருத்துவ சோதனைக்கு  சென்றேன். எக்ஸ் ரே,இரத்தம்,மூத்திரம்,கண்,பல்,இ ஸி ஜி சோதனை, கிட்னி,கல்லீரல் ஸ்கேன் முடித்து இறுதியாக மருத்துவரிடம் சென்றேன்.

    இளம் வயது பெண் மருத்துவர் ரத்த அழுத்தத்தை சோதித்தபின் “குடி,புகைக்கும் பழக்கம் உண்டா,சுகர்,பிரஷர் இருக்கிறதா,மருத்துகள் ஏதும் உட் கொள்கிறீர்களா” எனக்கேட்டார்.அனைத்துக்கும் இல்லை என்று சொன்னேன்.

         உங்களுடைய இ ஸி ஜி இதயத்தில் பிரச்சனை இருப்பதாக சொல்கிறது எனவே இதய நிபுணர் ஒருவரிடம் கருத்து கேட்டு கடிதம் வாங்கி வரவும்.அவர் ஏதாவது மருந்து எழுதி தந்தால் அந்த மருந்து சீட்டையும் கொண்டு வரவேண்டும் என்றார்.

   இன்று ஸ்கேன் செய்யும்போது எனது இடபக்க கிட்னியை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பத்து முறைக்குமேல் மூச்சை இழுத்து நிறுத்த சொன்னார்கள்.பின்னர் வேறு ஒரு பெண் வந்து மூச்சை இழுக்க சொல்லி நிறுத்தியபின் கிட்னி அவர்களுக்கு தென்பட்டது.

 நாற்பது வயதை தாண்டியபின் திரட் மில்லில் ஓட விட்டு இ ஸி ஜி எடுப்பார்கள்.நீண்ட நடை,மலையேற்றம் பயிற்சி செய்யும் எனக்கு அது மிக எளிதானது.

  

            இம்முறை  இதய நிபுணரிடம் திரட் மில் சோதனை செய்ய சொல்லி அனுப்பினார். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என தெரிந்ததால் பதட்டம் ஏதும் இல்லை. விஷ்ணுபுரம் நண்பர் மருத்துவர்,பேராசிரியர் மாரிராஜை அழைத்தேன்.

   “கப்பல் காரரே வணக்கம்” என்றார்.விசயத்தை சொன்னேன்.எனது இ ஸி ஜியை போனில் அனுப்பச்சொல்லிவிட்டு எங்கே இருக்கீங்க என கேட்டபின் ஐந்து நிமிடத்தில் அழைப்பதாக சொன்னார். வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் இதய நிபுணரை சந்திக்க  ஏற்பாடு செய்தார்.


             அவர் சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் அவரால் அது சாத்தியமாயிற்று.எனது இ ஸி ஜி யில் பிரச்னை ஏதும் இல்லை என்றார். வானம் கறுத்து லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. பெரு நகரின் நெருக்கமான சாலைகளில்  டி நகரிலிருந்து ஆட்டோவில் சென்று சிம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் மருத்துவர் பிராசாத்தை பார்த்தேன்.திரட் மில் டெஸ்டுக்கு அனுப்பினார்.

     

காலையில் ஏதும் சாப்பிடாததால் உணவுண்டு இரண்டு மணி நேரத்துக்குப்பின் டெஸ்ட் எடுப்பதாக சொன்னார்கள். எதிரிலிருந்த முனியாண்டி விலாஸில் பொரித்த அயில மீனுடன்,சாளை மீன் குழம்பு வைத்து சாப்பிட்டேன. எதிரில் அமர்ந்திருந்த குடும்பம் பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள். “படம் எப்படி இருக்கிறது” எனக்கேட்டேன்.“நல்லா இருக்கு சார்” என்றார்கள்.அருகிலிருந்த பள்ளிவாசலில் லுகர் (கடமையான மதிய வேளை தொழுகை) தொழுதுவிட்டு திரும்பி வந்ததும் என்னை அழைத்து பணம் கட்ட சொன்னார்கள்.

  திரட் மில் டெஸ்டுக்கு தயார்ஆகும் பொருட்டு மார்பிலிருந்த மயிர்களை மருத்துவமனை ஊழியர் சவரம் செய்து வழித்து சுத்தப்படுத்தியபின் இ ஸி ஜி கணினி திரையுடன் இணைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வயர்களின் முனையை மார்பில் ஒட்டவைத்தார் திரட் மில் சோதனை செய்யும் பெண்.அவளிடம் கேட்டேன் “இப்டி மாட்டுனதுமே பயந்துருவாங்களே”

“ஸார் டெஸ்டே வேண்டான்னு ஓடிரூவாங்க”என்றாள். கடந்த ஏழு வருசமா நான் கப்பலுக்கு போகும்போது இந்த டெஸ்ட் எனக்கு எடுக்கிறாங்க”என்றேன்.

 

               திரட் மில்லில் ஓடும்போதே மூன்று முறை ரத்த அழுத்தம் சோதித்தார்கள்.பத்து நிமிட டெஸ்டில் மூன்று முறை வேகத்தையும்,சாய்வையும் அதிகரித்தனர்.பின்னர் மருத்துவரை பார்த்தேன்.அருகிலிருந்த இளம் மருத்துவரிடம் எனது புதிய இ ஸி ஜி யை காண்பித்து பார்க்க சொன்னார்.


                   அவரும் புகை,குடி பழக்கம் உண்டா?தைராய்டு,சுகர்,பிரஷர் இருக்கிறதா என கேட்டார்.மூத்த மருத்துவரிடம் “எல்லாம் நார்மலா இருக்கா” எனக்கேட்டேன்.பிரச்சனை இருக்கு உங்க டாக்டர் அத சொல்வாங்க  என சொன்னார்.மீண்டும் டி நகர் பாலாஜி மருத்துவ மனைக்கு வரும்போது மணி ஐந்தாகியிருந்தது.


                  காலை ஒன்பது மணிக்கே வந்ததால் எதிர்பாராமல் வந்த டெஸ்ட்டுகளை முடித்துவிட்டு ஐந்து மணிக்கு  திரும்பி பாலாஜி மருத்துவமனைக்கு வர முடிந்தது.பாலாஜி மருத்துவமனை ஊழியர்கள் இருமுறை அழைத்து “ஸார் எப்ப வருவீங்க எனக்கேட்டனர்.

   

      மருத்துவர் எனக்காக காத்திருந்தார். சிம்ஸ் மருத்துவமனையின் ரிப்போட்டை வாங்கி பார்த்தபின் எனக்கான மருத்தவ சான்றிதழை தயார் செய்ய சொன்னார்.அவரிடம் கேட்டேன் “என்ன பிரச்னை” என.

   “ஒன்றும் இல்லையென” பதிலளித்தார். மருத்துவர் மாரிராஜை அழைத்து கூறினேன். பத்திரமாக போய் வாருங்கள் மனதில் குழப்பம் ஏதும் வேண்டாம்.அடுத்தமுறை இந்தியா வந்தபின் மீண்டும் பார்க்கலாம் என்றார்.


                      இரவில் சுனிதாவை அழைத்தேன். “அது ஏன் இப்ப அப்படி காட்டுது,மெடிக்கல் போறதுக்கு மின்ன நல்லா உறங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போணும்,இது எங்கயும் போய்ட்டு யாருக்க காறுலயாவது தொங்கிட்டு போய் மெடிக்கலுக்கு போனா” என சீறினாள்.மூன்று தினங்கள் கோவை அருகில் ஆனைகட்டியில்  நடந்த சிறுகதை பயிலரங்கத்தில் கலந்துவிட்டு சேலம் வரை வந்த நண்பர் பிரபாகரின் காரில் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் சென்னைக்கு காலை ஆறு மணிக்கு வந்து சேர்ந்தேன். தாம்பரத்தில் வசிக்கும் நண்பர் அசோக்கின் வீட்டிலிருந்து குளித்து தயாராகி எட்டுமணிக்கு புறப்பட்டு சென்றேன்.


                    சுனிதா மீண்டும் “நீங்கோ இப்பவும் சின்ன புள்ள கிடையாது ஓறும இருக்கட்டு,அதுக்கு தகுந்தமாரி உடம்ப பேணி கிடுங்கோ”என்றாள். “அப்போ எனக்கு வயசாயிட்டுன்னு சொல்லுதியா”எனக்கேட்டேன். “அது மனசிலானா கொள்ளாம்” என்றாள்.


    அன்று மதியமே (ஞாயிற்றுக்கிழமை)ஏழாம் தேதி மும்பை செல்வதற்கான விமான டிக்கெட் வந்தது, புரியாமல் பார்துகொண்டிருக்கும்போதே மும்பையில் இரு தினங்கள் தனிமைபடுத்தலுக்கான விடுதி பதிவையும் எனது மும்பை அலுவலகம் அனுப்பியது.


   இருதினங்கள் மும்பையிலும் பின்னர் பனாமா சென்று அங்கும் மூன்று தினங்கள் தனிமை படுத்தலுக்குப்பின் பன்னிரெண்டாம் தேதி கப்பல் ஏற வேண்டும் என என்னுடன் கப்பலுக்கு வரும் மூன்றாம் இஞ்சினியர்  பிரம்பலி கொன்சால்வேஸ் சொன்னார்.


              சென்னையிலிருந்து வியாழன் காலை தான் வீட்டுக்கு வந்தேன்.பயணத்துக்கான ஆவணங்கள் மின்னஞ்சலில் வந்துகொண்டே இருந்தது அனைத்தையும் அனுப்பினேன்.இரு தினங்களில் தேவையான அனைத்தையும் வாங்கி பயண பையை தயார் செய்து,பாக்கியிருந்த சிறு வேலைகளையும் முடித்தேன்.என்னால் முடியாமல் போன வேலைகளை சுனிதா தான் பார்த்து கொள்ள வேண்டும்.அடுத்த ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு அனைத்து பொறுப்புகளும் அவளுக்குத்தான்.

          


                              ஏழாம் தேதி காலை திருவனந்தபுரத்திலிருந்து ஒன்பது மணிக்கு விமானம் காலை மூன்று மணிக்கே விழித்து நான்கு மணிக்கு வீட்டிலிருந்து இறங்கினேன்.உம்மா என்னை முத்தி அல்லாஹ்வுடைய காவல் பத்திரமா போய் வா மோனே என வாழ்த்தி அனுப்பினாள். மகன் ஸாலிம் என்னை  வடசேரியிலிருந்து பஸ் ஏற்றி விட்டான்.


              என் தாய் பீமா வெள்ளிக்கிழமை மதியமே வீட்டிற்கு வந்துவிட்டாள்.சனிக்கிழமை மாலையில் சுனிதாவின் உடன் பிறப்புகள்,வாப்பா,உம்மா பிள்ளைகள் வந்து சென்றனர்.நண்பர் ஸாம் பிரின்ஸ் மனைவியுடன் இரவு வந்து எனது,பஸ்,விமான,கப்பல் பயணம் மற்றும் பணியில் இறைவன் துணையிருக்க வேண்டி மன்றாடினார்.

 

தம்பி ஜானகி 

                   காலை ஆறு மணிக்கு தம்பானூரில் இறங்கும்போது தம்பி ஜானகி அங்கே நின்றுகொண்டிருந்தார். அவரது இருசக்கர வாகனத்தில் விமான நிலையம் சென்றோம்.ஜானகி விமான நிலையத்தில் பணிபுரிவதால் அவருக்கு குறைந்த விலையில் கிடைக்கும் காபி அருந்திவிட்டு என்னை வழியனுப்பினார்.

   

ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம் சீக்கிரமே புறப்பட்டது பதினோரு மணிக்கு மும்பையில் இறங்கினேன். மும்பை சக்காலா (ஜே பி நகர்)கோகினூர் காண்டினெண்டல் விடுதியின் ஓட்டுனர் இம்ரான் என்னை அழைத்து சென்றார்.

     

நட்ச்சத்திர விடுதியின் வரவேற்ப்பறையில்  மூன்றாம் இஞ்சினியர் பிரம்பலி காத்திருந்தார்.எங்களுடன் வரும் காப்டன் அருண் பிலிப் பத்து நிமிடத்தில் வந்தார். இரு தினங்கள் அறையில் இருந்தோம். திங்கள்கிழமை காலையே எனது மேலாளர் தர்சனா அழைத்து விசாரித்தார்.

விமான சீட்டு,பனாமா விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் மின்னஞ்சலில் வந்தது. தேவையானதை காப்டன் பிலிப் அச்சு பிரதி எடுத்து தந்தார்.

   மும்பை-ஆம்ஸ்டர்டாம் வழியாக பனாமாவுக்கு பயணம்.இரவு பத்து மணிக்கு எங்களை அழைத்து செல்ல இம்ரான் காரில் வந்தார்.காப்டன் பிலிப் அரை மணிநேரம் முன்னதாக சென்றுவிட்டார்.


மும்பை விமான நிலையம்


மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் பெருங்கூட்டம் இருந்தது. நாங்கள் சீக்கிரமாகவே வந்துவிட்டதால் பயண பைகளை அளித்துவிட்டு பாதுகாப்பு,குடியிரிமை சோதனைகளை முடித்து விட்டு பதினொன்றரை மணிக்கு klm 878 விமானம் புறப்படும் வாயில் 72 இன் முன் அமர்ந்து கொண்டோம். அதிகாலை இரண்டு இருபதுக்கு விமானம் புறப்படும் நேரம் ஒன்பதரை மணி நேர பயணம் ஆம்டேர்டாமுக்கு.

 கடந்த இருமுறையும் கப்பலுக்கு புறப்படும்போது எனது விசா,இ மைகிரென்ட் கடவு சீட்டு எண் தவறாக அச்சிட்டபட்டிருந்தது.இம்முறை எந்த குழப்பமும் இல்லை.விமானத்தில் ஏறி விட்டால் ஒன்பதரை மணி நேர பயனத்திற்க்கு பின் ஆம்ஸ்டர்டாமில் இறங்கி விடலாம்.

 

ஷாகுல் ஹமீது,

09 may 2023.