Saturday, 17 February 2024

ஷோர் லீவ் 5

 


   மீண்டு வந்த கலீல்



       முந்தைய பதிவில் கோம்ஸின் சிறப்பு உணவுகள் பற்றி எழுதியபின் நடந்தைவைகளை உடனே எழுதிவிட மனம் வரவில்லை.கோம்ஸ் இங்கே தானிருந்தான். அவன் சமைக்கும் உணவுகளையே நாங்கள் சாப்பிடும் கட்டாயம் இருந்தது. எனவே மிக தாமத்தித்தே இந்த பதிவை எழுதுகிறேன்.ஷோர் லீவ் நான்காம் பதிவில் கோம்ஸ் மீதமான உணவுகளை மாதக்கணக்கில் பிரிட்ஜில் வைத்து வழங்கியதை சொல்லியிருந்தேன் அதன் தொடர்ச்சி............

  கடும்கோபத்தில் இருந்த முதன்மை இஞ்சினியரை அறைக்கு போக சொல்லும்படி சொன்னார் மூன்றாம் இஞ்சினியர்.நான் அவரை அழைத்து “ரூமுக்கு போங்க இங்க நின்னா இன்னும் டென்சன் ஆவும்”என்றதும் விரைந்து சென்றுவிட்டார்.

  அவருக்கு முடி வெட்டி தருவதாக சொல்லியிருந்ததால் போனில் அழைத்து “சீக்கிரம் வந்தியள்ன்னா முடி வெட்டி தந்துட்டு குளிக்க போவேன்” என்றேன்.

  முடி வெட்டுகையில் கேட்டார் “பல வித்தைகள கையில வெச்சிருக்கியோ எப்டி” எனக்கேட்டார்.

“படிச்சி முடிச்சி பாம்பேக்கு வேல தேடி போனேன்,அங்க வாழ்ந்த நாட்கள் பல பாடங்கள சொல்லித்தந்தது,இப்பவும் எனக்கு புடிச்ச ஊரு மும்பைதான்”.

 

 ஒரு மணிக்கு நான் சாப்பிட வரும்போது நாங்கள் சமைத்த சிக்கன்,மட்டன் பிரியாணி அப்போதே தீர்ந்துவிட்டது. அடுமனையில் என் பணி முடிந்து விட்டது.அனைத்தையும் உரிய இடத்தில் வைத்துவிட்டு மனமகிழ் அறையில் அமர்ந்து விளக்குளை அணைத்துவிட்டு எழுபது அங்குல டிவியில் தியேட்டர் எபக்டில் மாமன்னன் எனும் படம் பார்த்துகொண்டிருந்தேன்.

  மூன்று மணிக்கு கோம்ஸ் அழைத்தான். “ஷாகுல் நாளைக்கி என்ன மெனுன்னு பாத்து அயிட்டங்கள வெளிய எடுத்து வை”என்றான் .

“எனட்ட ஏன் சொல்லா சீப் ஆபிசர்,காப்டன்ட்ட கேட்டு தேவையானத எடுத்து வெய்,நான் இனி காலில டூட்டி இல்ல” என்றேன்.

 இருபது நிமிடங்கள் கழிந்தபின் மீண்டும் கோம்ஸ் அழைத்தான்.

“போசன் ...எங்க”

“இங்க இல்ல”

“வேற  யாரு இருக்கா”

“யாரும் இல்ல”

“எனக்கு கோவிட் பாஸிடிவ்,கேப்டன் என்னைய மாஸ்க் போட்டுட்டு சமைக்க சொல்லாரு” என்றான்.

 “பாசிடிவ்ன்னா நீ சமக்கித நாங்க எப்டி சாப்டுக்கு”

“அதான் சொல்லேன்,கேப்டன் என்னைய போர்ஸ் பண்ணாரு”என்றான்.

 ஒ எஸ் இர்பான் மனமகிழ் அறையை சுத்தம் செய்ய துடைப்பத்துடன் வந்து விளக்குகளை எரிய விட்டான். விசயத்தை சொன்னேன்.

“என்னையத்தான் நாளக்கி கோம்ஸ்க்க கூட ஹெல்ப்க்கு போவே சொல்லிருக்காரு சீப்”என்றான்.

 போசன் வந்தார் அவரிடம் அதுபற்றி சொன்ன போது “கோம்ஸ் போன் பண்ணுனான்,நமக்கு அபிசியலா யாரும் சொல்லல அவனுக்கு கொரோனா இருக்கா இல்லியான்னு பாப்போம்” என்றார்.

 அடுத்த ஐந்து நிமிடத்தில் முதன்மை அதிகாரி மனமகிழ் அறைக்குள் வந்து  என்னிடம் கேட்டார் “கோம்ஸ்க்கு கோவிட்ன்னு யாரு சொன்னா,காலத்த நாங்க டெஸ்ட் பண்ணியாச்சி நெகடிவ் ரிசல்ட் எங்ககிட்ட இருக்கு”என்றார்.

 அடுத்த அழைப்பு அனைவரும் பிரிட்ஜில் வாருங்கள் என. கப்பலின் அனைத்து பணியாளர்களும் அங்கிருந்தனர். கோம்ஸின் கொரோனா டெஸ்ட் ரிப்போட்டை அவனுக்கு சோதனை செய்த இரண்டாம் அதிகாரி காண்பித்து ரிசல்ட் நெகடிவ் வந்திருப்பதை காண்பித்தார்.

  காப்டன் அமரவே முடியாமல் நாற்காலியை சுவரோரத்தில் ஒட்டி தலை சாய்ந்து, முககவசம் அணிந்து சோர்வுடன் நாக்கு குளற.

 “ஸீ திஸ் இஸ் ரிபோர்ட்... கோம்ஸ்க்கு ஒன்னும் இல்ல அவன் சமைக்கணுமா வேண்டாமா?சொல்லுங்கள்” என கேட்டார்.

 கோம்ஸ் பலருக்கும் போன் செய்து தனக்கு கோவிட் இருக்கும்,நிலையில் காப்டன் பணி செய்ய நிர்பந்திக்கிறார் என சொல்லியிருக்கிறான்.அதனால் தான் ஓய்வு நேரத்தில் இந்த அவரச கூட்டம்.

 முதன்மை அதிகாரி அவன் சமைக்கவேண்டும் என சொன்னபின்,பெரும்பாலான பணியாளர்கள் ஆமோத்தித்ததால் காப்டன் கோம்சை அழைக்கச்சொன்னார். கோம்சிடம் யாரும் பேசவே இல்லை. நானே தொடங்கினேன். “கோம்ஸ் நீ கோவிட் இருக்கு,காப்டன் கட்டாய படுத்தாரு வேல செய்ய சொல்லின்னு எனக்கு போன் பண்ணுனா,அது போல வேறயும் நாலஞ்சி வேருக்கு கூப்ட்டிருக்கா.காலைல எடுத்த டெஸ்ட் ரிசல்ட் உனக்கு நெகடிவ்ன்னு  இருக்கு. கப்பல்ல சாப்பாடு ரொம்ப முக்கியம் எல்லாரும் வேல செய்து டயர்டா வரும்போ தின்ன நல்ல சாப்பாடு வேணும்.இங்க இருக்க இருவத்தி ஏழுவேருக்க உடல் ஆரோக்கியம் இப்ப உனக்க கைல அத மனசில வெச்சிட்டு நீ சோறு போடு எங்களுக்கு”என கையெடுத்து கும்பிட்ட பின் “வேறு யாரவது ஏதாவது சொல்லனுமா?”எனக்கேட்டேன் .

மூன்றாம் இஞ்சினியர் “அவ்ளோதான்”என்றார். கூட்டம் கலைந்தது.

  அன்று இரவுணவு முதல் கோம்ஸ் சமைக்க தொடங்கினான்.உதவிக்கு ஒரு டெக் பணியாளர் உடனிருந்தார். மறுநாள் காலை ஆறரை மணிக்கே மெஸ் மேன் கலீல் அழைத்தான். “பாய் ஜான் ரொம்ப முடியல ரூமுக்க வெளிய எனக்க தண்ணி பாட்டில் வெச்சிருக்கேன்,அதுல எல்லார் கையும் பட்டது அத சுடு தண்ணில நல்லா கழுவி தண்ணி புடிச்சி ஓதி ஊதி தா” என்றான்.

  அதில் மந்திரம் ஏதும் இல்லை குர்ஆன் வசனம் ஓதி சக்தியை நீரில் பாய்ச்சி தருதல்.விஷயம் தெரிந்தவர்கள் செய்யலாம்.நானும் அதை செய்பவன் என அவன் எப்படி யூகித்தானோ? நீரில் சக்தி பாய்ச்சி கொடுத்தேன்.

   அன்று மாலை மூன்று மணிக்கு மூச்சுவிட முடியாமல் போன் பண்ணியிருக்கிறான் கலீல் பதறி ஓடிய உக்ரைனின் இரண்டாம் அதிகாரி அவன் சொல்வது புரியாமல் மராத்தி பேசும் நிதினை அழைக்க அதற்குள்,இலங்கையின் ஹிராத்தும்,அலெக்ஸ்ம் இணைந்து நிலை குலைந்த அவனை தாங்கி அறைக்கு வெளியே கொண்டு வந்து டெக்கில் சுத்த காற்றை சுவாசிக்க செய்த சில நிமிடங்களில் அவன் இயல்புக்கு வந்தான். முகக்கவசம் அணிந்து கண்களில் நீர் நிரம்ப சற்று தள்ளி சிலையாக நின்றுகொண்டிருந்தார் காப்டன்.

  இரவுணவின் போது விஷயம் அறிந்து கலீலை அழைத்தேன். “இப்ப பரவாயில்லை,பாணி கதம் ஓஹையா”என்றான்.அவனது தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிறைத்து அறைக்கதவின் வெளியே நின்று பார்த்தேன் அவனது  விழிகள் உச்சகட்ட பயத்தில் இருப்பதை காட்டியது.

 “பயப்டாதே இன்னும் ஒரு மூணு நாள்,வியாழக்கிழமை நீ வெளிய வந்துரலாம்”என்றான்.

   இரு தினங்களுக்குப்பின் வழக்கமான பணிக்கு காப்டன் திரும்பினார். மாலையில் ப்ரிட்ஜில் சென்றபோது “ஷாகுல் காலைலேலிருந்து உன்ன கேட்டுக்கிட்டே இருந்தேன்”.

 “பார்வேர்டில வேல ரெண்டு நாளா உங்க பிரண்ட்ஸ் ஒரு எழுபது பேரு பறந்துகிட்டே கூட வாராங்க”.

காப்டன் “என்ன நடந்துன்னே எனக்கு தெரியாது கேட்டரிங் டிப்பார்ட்மென்ட் சிக் ஆன பிறவு இருபத்தி ஏழு பேருக்கும் மூணு நாளு சாப்பாடு போட்டுருக்கா,நன்றி ஷாகுல்”என சொல்லும்போது அவரது வலக்கை இடது மார்பில் பதிந்து,தலை லேசாக சரிந்தது.

 “கலீல வியாழன் முடிஞ்சி வெள்ளிக்கிழமை வேலக்கி கூப்பிடுங்க அவன் நல்லாயிட்டான் இப்ப அவனை அறையில பாத்தேன்,ஹி இஸ் ஓகே நொவ்”

 “கலீல் ரொம்ப பயங்காட்டிட்டான் நானே பதறிட்டேன்”என்றார்.

நான் சிரிப்புடன் “கேப்டன் சாப் உங்களோட பாஸிட்டிவ் எண்ணம் உங்க பலம் ஒரு நாளும் உங்களுக்கு ஒண்ணும் ஆவாது”எனச்சொன்னேன்.

  “நான் பாஸிட்டிவா இருந்தா தானே,என் crewம் கப்பலும் நல்லா இருக்கும் அது எனக்கு தெரியும் ஷாகுல் தேங்க் யூ சோ மச்”.

  சில தினகளுக்குப்பின் மாலை அஸ்தமனம் பார்க்க பிரிட்ஜில் சென்றபோது காப்டன் சோர்வாக இருந்தார். “கேப்டன் சாப் என்னாச்சி”எனக்கேட்டேன் “பிரச்சனை ஒண்ணு ஓடிட்டு இருக்கு,எல்லாம் எனக்கெதிராக திரும்பிவிட்டது,உங்களுக்கு பொறவு தெரியும் எனக்கேட்டுவிட்டு ஏதாவது கேள்வி பட்டாயா?”என கேட்டதும் சுதாரித்துக்கொண்டு என் முக பாவனையை மாற்ற முயற்சித்தேன்.

நான் யோசிப்பதை பார்த்துவிட்டு “டோன்ட் திங் மச்”என்றார் .

அன்று காலையே எனக்கு தெரிந்திருந்தது கோம்ஸ் கப்பலில் காப்டனின் டார்ச்சர் தாங்க முடியவில்லை,என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.என்னை விரைவில் விடுவியுங்கள் என கோலாலம்பூர் அலுவலக முக்கிய மேலதிகாரிக்கு போனில் புகாரளித்துள்ளான்.துறைமுகம் செல்லும் போது விசாரணைக்காக கோலாலம்பூர் அலுவலகத்திலிருந்து வரும் மேலதிகாரியை காப்டன் நேரில் எதிர்கொள்ள வேண்டும்.

 காப்டனாக பொறுப்பேற்ற நாற்பது நாட்களுக்குள் சோதனைகளாக வந்து கொண்டே இருந்தது. முப்பத்தி ஏழு வயது பூர்த்தியானதும் எல்லா பிரச்சனையும் ஒண்ணா வந்து கண்டம் விலகுகிறது என எண்ணிக்கொண்டேன்.

 காலை கோம்ஸ் இட்லி சாம்பார் செய்திருந்தான் எல்லோர் கண்களிலும் மைனஸ் பதினெட்டு டிகிரியில்  குளிர் பெட்டியிலிருந்து வெளியே எடுத்த ஒரு கல் பந்து நினைவிலிருந்ததால் யாரும் அன்று இட்லியை தொடவே இல்லை.

    கடந்த ஆறாம் தேதி சைனாவின் நிங்போ துறைமுகப்பிலிருந்து எட்டு பணியாளர்கள் ஊருக்கு சென்றனர். அதில் சமையல் கோம்சும் அடக்கம்.

நிறைவு.

22-oct-2023,

நாஞ்சில் ஹமீது.

sunitashahul@gmail.com.

No comments:

Post a Comment