கோம்ஸின் சிறப்பு உணவு.
பனாமாவை தாண்டி பசுபிக் கடலில் பயணம் தொடங்கியது.அடுத்த இருபத்தி மூன்று தினங்களுக்கு இடைநில்லா பயணம்தான்.பன்னிரெண்டு தினங்களுக்குப்பின் நடுக்கடலில் இருக்கும் ஹவாய் தீவு வரும். ஏதாவது எமெர்ஜென்சி மட்டும் வராமல் இருக்கவேண்டுமென காப்டன்கள் நினைத்து கொள்வார்கள்.
கலீல் கொஞ்சம் உடல்நலமில்லாமல் தான் இருந்தான். இரு தினங்களாக காப்டனும் பிஸி. முந்தைய நாள் மாலை கிரீன் சிக்கன் சமைக்கும்போது மூன்றாம் இஞ்சினியர் கேட்டார் “நாளை என்ன சமைப்பது” என.நெய்சோறும்,மட்டன் குழம்பும் வெச்சி தாரேன்” என்றேன்.
“பிரியாணி தெரியாதா”
“நாலஞ்சி வேருக்குன்னான் வெச்சிருலாம் ஆளு கூடுதால இருக்கு,அதுனால நமக்கு நல்லா தெரிஞ்சத வெப்போம்” என்றேன்.
“எனக்கு சிக்கன் பிரியாணி தெரியும்”
“அப்புறம் என்ன சிக்கனுக்கு பதிலா மட்டன போட்டா மட்டன் பிரியாணி” என்றபோது ஒத்துக்கொண்டார். மாலையிலேயே கோம்சிடம் கேட்டு ஒன்றரை ஆட்டுக்காலை எடுத்து,வெளியே வைத்தேன்.மட்டன் சாப்பிடாதவர்களுக்கு ஒரு முழு கோழியும்.
மூன்றாம் இஞ்சினியர் காலை எட்டுமணிக்கு அடுமனைக்கு வருவதாக சொல்லி சென்றார். கப்பல் பனாமா கால்வாயில் டீசலில் இயங்க வேண்டும்.எனவே கால்வாய் விட்டபின் டீசலிலிருந்து எரிஎண்ணெய்க்கு மாற்றும் வால்வுகளை திறந்தார்கள்.அது முழுமையாக மாற எட்டு மணி நேரத்திற்கு மேலாகும் அதுவரையில் இயந்திர அறையில் இஞ்சினியர்கள் இருந்தார்கள்.
இரவு பத்துக்கு மேல் தூங்கி காலை ஐந்துக்கு விழித்து அதிகாலை தொழுகைக்குப்பின் தயாராகி அடுமனை சென்றேன்.கத்தியை தீட்டி ஆட்டின் முழுகாலை வெட்ட தொடங்கினேன்.இதற்கு முன்பு எப்போதும் இப்படி வெட்டியதே இல்லை.
நேரம் போய்கொண்டே இருந்தது ஏழரை மணிக்கு மேல் இறைச்சியை வெட்டி முடித்தேன். காலை உணவுக்கு வந்த கோடா இன்று என்ன மெனு எனக்கேட்டான். “தீன் ஸாப் வந்து பிரியாணி செய்வார்” என்றேன்.காலை உணவை உண்டு சென்ற கோடா இயந்திர அறை இன்று விடுமுறை எனசொல்லி அடுமனைக்கு வந்தான்.கலீலுக்கும்,கோம்சுக்கும் சுக்குகாப்பியை காலையிலேயே அறையில் கொடுத்திருந்தேன்.
“சிக்கன் பிரியாணின்னா நான் செய்துருவேன்,மட்டன் செய்ய தெரியாது எனசொல்லிவிட்டு ‘லேட்டாகுது இன்னும் அரிசியே போடல்ல நீ” என கேட்டான் கோடா. கலீல் எட்டு மணிக்கு என்னை போனில் அழைத்து “கொஞ்சம் பால் சுட வெச்சி மஞ்சள்தூள் போட்டு தருவியா தொண்ட வலி,உடம்பு வலி இருக்கவோ,படுக்கவோ முடியல்ல,ராத்திரி பூரா உறக்கமும் இல்ல”என்றான்.
எட்டு மணிக்குமேல் மூன்றாம் இஞ்சினியர் பிரம்லியை அழைத்தேன். “பிட்டர் ஸாப் காலத்த அஞ்சி மணிக்கி தான் வந்தேன்,நீ க்ஹீ ரைஸ் போடுவேன்னு சொன்னால்லா அதையே செய்” என்றான். மண்டைக்குள் ஒரு பரப்பாகியது எல்லா ஞாயிறுகளிலும் கப்பலில் பிரியாணிதான்,என்ன மெனு என கேட்டவர்களிடம் எல்லாம் பிரியாணி என சொல்லியிருந்தேன்.பாத்திரங்களை பார்த்தேன். இறைச்சியை எண்பது சதம் வேக வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு,அதிலேயே அரிசி மசாலாவை மற்றும் பிரியாணிக்கான இடுபொருட்கள் கலந்து அரிசி முழுமையாக வேகும்முன் அடுப்பின் வெப்பத்தை குறைத்து,எண்ணையில் பொரித்த வெங்காயம்,முந்திரி,பதாம்,கிஸ்மிஸ்,மல்லிஇலையை பிரியாணிக்கு மேல் தூவி,கொஞ்சம் ரோஸ் வாட்டர் மற்றும் எஸ்சென்ஸ் தெளித்து ஆவி வெளியே செல்லாதவாறு மைதா மாவை உருட்டி மூடிக்கிடையில் வைத்து இறுக்கமாக மூடி சிறு வெப்பத்தில் முப்பது நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான பிரியாணி ரெடி.
அதற்கான பாத்திரங்களை தேடினேன் கிடைக்கவில்லை. கோடா தாமதமாகிறது என்றான்.கழுவி ஊற வைத்திருந்த அரிசியை வேகவைக்க சொல்லி விட்டு,ஆட்டிறச்சியை வேக வைத்தேன்.முழுகோழியை பதினான்கு துண்டுகளாக வெட்டி அதையும் தனியாக வேக வைத்தேன்.ஆயத்த மசாலாக்கள் ஏதும் சேர்க்கவில்லை.எல்லாம் நானே மிக்சியில் பொடித்தேன் மஞ்சள்தூள் தவிர.கோடா சோறு வெந்துவிட்டது என்றான்.
வெங்காயத்தை நறுக்கி,முந்திரியும்,பாதமும் எண்ணையில் போட்டு பொன்னிறமாக எடுத்து வைத்தான். ரிச்சர்ட் எனக்கும் ஏதாவது வேலை கொடு என்றான் கூடவே இலங்கை மோட்டார் மேனும் வந்தார்கள். ரிச்சரிடம் தயிர் பச்சடி மற்றும் அப்பளம் பொரிக்க சொன்னேன். ரஹீம் உல்லா காலையில் வெட்டிய வெங்காயம் பெரிதாக இருக்கிறது என அதை சிறிதாக நறுக்க தொடங்கினான்.
டெக் பணியாளர்கள் யாரும் இன்று அடுமனை பக்கம் எட்டிபார்க்கவேயில்லை.கடந்த இரு தினங்களாக கோம்சை கவனித்தபோது இன்று நன்றாக தேறியிருந்தான்.எனினும் பணிக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை.பனாமா கால்வாயை கடக்கும் முன் நடந்த கூட்டத்தில் காப்டன் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்குமாறு அச்சிடப்பட்ட காகிதம் ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார். அதற்கு முன் அடுமனை பணியாளர்கள் இருவரையும் சந்தேகம் வராத படி அடுமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதற்கு மறுநாள் தான் கோம்ஸ் உடல் நலமில்லால் ஆனான்.அன்று காலை காப்டன் சொன்னார். “நேத்துள்ள சைகாலஜிக்கல் எபக்ட்,அதான் காய்ச்சல் வந்துட்டு,நாளை செரியாவும்”எனச்சொல்லி சிரித்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவன் அறையை விட்டு வெளியே வரத்தயாராகவில்லை.
அஞ்சுமன் வந்து காப்டனுக்கு முட்டை புர்ஜி செய்து கேட்டான். அவருக்கு என்னாச்சி ஏன் கீழே வரவில்லை எனக்கேட்டபோது “தெரியாது எனக்கு போன் பண்ணி பிரேக் பாஸ்ட் அறைக்கி வெளிய வெச்சிட்டு போன்னு சொன்னார்,லேட்டா தூங்குனதால இப்பதான் முளிசிருப்பார்”என்றான்.
முதன்மை இஞ்சினியர் காலை பத்துமணிக்கு அடுமனைக்குள் வந்தார். சிக்கன்,மட்டன் பிரியாணி,இறைச்சி சாப்பிடாத போசன் மற்றும் கொரோனா நோயாளி க்கு பிளைன் ரைஸும் தயாராகி கொண்டிருப்பதை கவனித்தார். “இன்னைக்கு பதினோரு மணிக்கி மேல எனக்கு முடி வெட்டி தர முடியுமா” எனக்கேட்டவர் இயந்திர பணியாளர்களை பார்த்துவிட்டு “இன்னைக்கு லீவு குடுத்தேன் இங்க வந்து உங்களுக்கு உதவி செய்யாங்க,நாளக்கி லீவு உட முடியாது,வேல கெடக்கு”என்றார்.
“ஸார் அவன் நல்லாதான் இருக்கான்,அந்த சைகாலஜிக்கல் எபக்ட் தான்,வேலக்கி வராம கிடக்கான் கோம்ஸ்”என்றேன்.அஞ்சுமன் போட்டிருந்த மசாலா சாயாவை கப்பில் எடுத்து சென்றவர்.போனில் என்னை அழைத்தார் “மத்தியானம் சமையல் முடிச்சி,எல்லாத்தையும் கிளீயர் பண்ணீருங்க,சாயங்காலம் டின்னருக்கு அவன் வந்து சமைப்பான்,நான் காப்டன்ட்ட பேசியாச்சி” என்றார்.
காலை முதல் அமரவே முடியவில்லை கோடா “டீ ஆறுக்கு மின்ன குடிச்சிருவோம்” எனச்சொன்னபோது அமர்ந்து பொறுமையாக தேநீர் அருந்தினோம். பதினோரு மணிக்குள் தயாரான உணவுகளை அடுமனைக்குள்ளேயே வைத்து விட்டு அனைத்தையும் சுத்தபடுத்தினோம்.மூன்றாம் இஞ்சினியரும் வந்து தனித்தனியாக இறைச்சியுடன் பிரியாணி சாதத்தை கலந்து பிரியாணியாக மாற்றுவதில் உதவினார்.
முதன்மை இன்ஜினியர் மீண்டும் அடுமனைக்குள் வந்தார். “ப்ரிட்ஜில் இருக்கும் சமைத்த உணவுகள் அனைத்தையும் வெளியே எடு” என உத்தரவிட்டார்.
நான் இருக்கும் இடத்தில் எப்போதும் நன்மையே நடக்கும் ஆனால் அது சிலருக்கு பாதகமாகவும் முடியும். அடுமனைக்குள்ளிருந்த குளிர் பெட்டியில் டப்பாகளில் அடைத்து மூடி வைத்திருந்தவற்றை எடுத்தோம்.எப்போதோ சமைத்து உண்டு போக மீதி வந்த சட்னி,கடலை கறி,ஓட்ஸ் மீல்ஸ்,மூன்று பாலித்தீன் பைகளில் சிறிதளவே அடைத்த போகா,சாம்பார் என பாஞ்சாலியின் சேலையை போல உள்ளிருந்து வந்துகொண்டே இருந்தது. அனைத்தயும் உணவு கூடத்தின் மேஜையில் வைத்தபோது ஏழடி மேஜை நிரம்பி விட்டது.கடும் கோபத்தில் போனில் காப்டனை அழைத்து கீழே வரச்சொன்னார் முதன்மை இஞ்சினியர்.கடந்த சிலநாட்களாக அடுமனைகுள்ளேயே வேலை செய்தும் குளிர்பெட்டியில் என்ன இருக்கிறது என நான் பார்க்கவேயில்லை.
முன்பொரு முறை மீன் சாப்பிட்ட போசன் இது “பிரெஷ் இல்ல” என சொல்லி குப்பை தொட்டியில் வீசினார். எதிரில் நான் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் நன்றாக இருந்தது.மூன்றாம் இஞ்சினியர் சிக்கன் விங்க்ஸ் சாப்பிட்ட போது “இது முந்தா நேத்து பார்டியில் மீதி வந்ததை சூடாக்கி வெச்சிருக்கான்” என திட்டியது நினைவுக்கு வந்தது.ஞாயிறு காலை மட்டுமே சமைக்கப்டும் ஓட்ஸ் மீல்ஸ் குளிர் பெட்டியில் இருந்தது ஒரு முறை என் கண்ணிலும் பட்டது.
போகா எல்லா திங்கள் காலையிலும், எல்லா புதனிலும் வடை அல்லது இட்லி அல்லது ஊத்தப்பதுடன் சாம்பார் இருக்கும்.கோம்ஸின் மெனு மாறாதது காலை விடியலுக்குப்பின் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் என்ன மெனு என.
அடுமனைக்கு கீழே இருக்கும் குளிர் பெட்டியிலிருந்து ஒரு தட்டு நிறைய பொரித்த சால்மன் மீன் மட்டும் கிடைத்தது.மேஜையிலிருந்த அனைத்தையும் புகைப்படம் எடுத்தபின் காப்டனை கீழே வந்து பார்க்க சொன்னார் முதன்மை இஞ்சினியர். காப்டன் முகக்கவசம்,கையுறை அணிந்து நடக்கவே முடியாமல் வந்து அனைவரையும் விலகி நிற்க சொன்னார். மிகப்பழைய சமைத்த உணவுகளை மைனஸ் பதினெட்டு பாகையில் பாதுகாக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பணியாளர்களின் முகத்தில் ஒரு பேரமைதி நிலவியது.
காப்டனும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது.அவர் கவனமாக எதையும் தொடாமல் கோம்சை அழைக்க சொன்னார்.
கோம்ஸ்,கையுறையும் முகக்கவசமும் அணிந்து கண்கள் மிளிர புன்னைகையுடன் வந்தான். முதன்மை இஞ்சினியர் “இதெல்லாம் ஏன் வெச்சிருக்கா?”என கேட்டதும் நான் சாப்பிடுவதற்கு வைத்துளேன் என்றான் கோம்ஸ்.கோபத்தில் எகிறினார் முதன்மை இஞ்சினியர். மேலும் இருவரை உடனழைத்து கொண்டு அடுமனைக்கு கீழே இருக்கும் சமைக்காத உணவுவுகளை பாதுகாக்கும் குளிர் பெட்டிக்கு அழைத்து சென்று சோதனையிட சொன்னார். கீழே கோம்சும் வந்தார். “நீ போ ரெஸ்ட் எடு நாங்க பாத்துகிடோம்” என முதன்மை இஞ்சினியர் சொல்ல. “இங்க ஒண்ணும் கிடையாது”என வாதிட்டான் கோம்ஸ். வலுகட்டாயமாக அவனை அனுப்பிவிட்டு குளிர்பெட்டி அறைக்குள் சோதனையிட்டபோது அட்டை பெட்டிக்குள், பாலீத்தீன் பைகளில் அடைத்து வைத்து மறைந்திருந்த சப்பாத்தி பைகள் நான்கு, எறிந்தால் மண்டையுடையும் கெட்டியுடன் இருந்த மூன்று பை இட்லி,வடை மேலும் போகா,ஒரு மாதம் முன்பு பார்டியில் மிஞ்சிய மட்டன் ஸ்டேக்,தினசரி உண்டு மீதமாகும் சப்பாத்திகள் மேலும் சாம்பார் என வந்து கொண்டே இருந்தது.
இங்கே கப்பலில் நான் உட்பட இருபது பேருக்கு மேல் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வயிற்றுபோக்கும்,காய்ச்சலும் தொடர்ந்தது(கப்பலின் உணவும் என் வயிறும் என கட்டுரையே எழுதினேன்.). அமெரிக்காவை நெருங்கும்முன் நடந்த கூட்டத்தில் காப்டன் உன் உணவில் பிரச்சனை இருக்கிறது அதை உடனே சரி செய் இல்லையெனில் அமெரிக்காவில் சிலரை மருத்துவமனை அனுப்பும் சூழ்நிலை ஆகிவிடும் என எச்சரித்திருந்தார்.
இன்று தான் தெரிந்தது கோம்ஸ் எங்களுக்கு எப்படியான உணவை தந்திருக்கிறான் என்.வயிற்றுவலி,வயிற்று போக்கு,காய்ச்சலுக்கான காரணம் தெளிவானது.
நாஞ்சில் ஹமீது,
10 September 2023.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment