Tuesday, 21 November 2023

வீடு திரும்புதல்

 



       ஓமான் தலைநகர்,மஸ்கட் வானூர்தி நிலையத்தின் வாயில் B5 ன் முன் அமர்ந்திருக்கிறேன் இன்னும் ஒரு மணி நேரமிருக்கிறது திருவனந்தபுரம் செல்லும்  விமானம் ஏற.

 கடந்த மே மாதம் ஆறாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மும்பையில் இரு தினங்கள் விடுதியறை.அங்கிருந்து மே ஒன்பாதம் தேதி பனாமா நாட்டிற்கு பறந்து சென்று மூன்று தினங்கள் விடுதியில் தனிமை கப்பல் பனாமா கால்வாய்க்கு வருவது தாமதமானதால்  ஐந்து நாட்களுக்குப்பின் பனாமாவின் கிறிஸ்டோபல் சென்று கப்பல் ஏறி ஆறு மாதங்கள் பூர்த்தியாக போகிறது.

   நான் பனாமாவில் ஏறும்போது அமெரிக்காவின் ஹூஸ்டனில் ப்ரோப்பேன் எல் பி ஜி திரவத்தை நிறைத்துக்கொண்டு வந்தது.அதை ஜப்பானின் இரு துறைமுகங்களில்  கொடுத்தபின் சோமாலிய கொள்ளையர்கள் நடமாட்டமுள்ள ஆபத்தான கல்ப் ஆப் ஏடன் பகுதியை கடந்து சவுதியின் யான்பூவில் ப்ரோப்பேன்,பீயுட்டேன் நிரப்பினோம்.அதை வியட்நாமின் வாங்க்தாவில் கொடுத்துவிட்டு மீண்டும் கல்ப் ஆப் ஏடன் சூயஸ் கால்வாயை கடந்து மத்தியதரை கடலுக்குள் நுழைந்து ஜிப்ரேல்டர் முனையை தாண்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் மீண்டும் ப்ரோப்பேனை நிரப்பினோம்.

    அங்கிருந்து பனமா வழியாக ஒரு நீண்ட பயணம் செய்து முப்பத்தியைந்து நாட்களுக்குப்பின் பீதர் நாடான சைனாவின் நிங்போவின் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்கியபின் மீண்டும் சிங்கப்பூர்,கன்னியாகுமரி,சூயஸ் வழியாக அமெரிக்காவை நோக்கி பயணம் துவங்கியது.

     எதிர்பாராமல் சூயசுக்கு ஏழு நாள்களுக்கு முன் என் விடுமுறை உறுதியானது அதிசயமாக இருந்தது.ஊருக்கு செல்கிறேன் எனும் மகிழ்ச்சி தொத்திகொண்டது. வழக்கமாக வரும் கனவுகள்,விடுமுறைக்கு முந்தைய சில தினங்கள் தொடரும் தூக்கமிழப்பும் அதை தொடர்ந்து வரும் முதுகுவலியும் இம்முறை இல்லவே இல்லை.

 முதல் முறையாக காஸ் பிட்டராக பணியில் இணைந்து முதல் இரு மாதங்களுக்குள் பணியை கற்றுக்கொண்டு சிறப்பாகவே செய்தேன்.இம்முறை காப்டன்,முதன்மை இன்ஜினியர் உட்பட நல்ல பணியாளர்கள் அமைந்ததால் நாட்கள் சிறப்பாக சென்றது.இஞ்சின் பிட்டர் அளவுக்கு பணி இல்லை.

உடலுழைப்பு சார்ந்த் பணி மிக குறைவு.இஞ்சினில் இருக்கையில் உள்ளங்கைகளில் எதை போட்டு தேய்த்து கழுவினாலும் போகாத  எரிஎண்ணையின் கரிய நிற அழுக்கும்,கூட்டல்,பெருக்கல் அடையாளங்களும் இருக்கும்.வீட்டிற்கு வந்து ஏழு முதல் எட்டு நாட்களுக்குப்பின் உள்ளங்கை தோலின் செல்கள் தன்னை புதுப்பித்துகொண்டு இயல்புக்கு வரும்.முழங்கையிலும்,கை மணிக்கட்டிலும் ஒரு மெல்லிய வலி இருந்துகொண்டே இருக்கும்.

   இப்போது கைகள் சுத்தமாக இருக்கிறது.டெக்கில் காஸ் பிட்டாரகவே இனி நீடிப்பேன்.இத்தனை நாள் ஏன் காஸ் பிட்டருக்கு முயற்சிக்கவில்லை என என்னையே நானே கடிந்து கொண்டேன்.2006 ஆம் ஆண்டு முதல் இதே நிறுவனத்தில் இருக்கிறேன்.காஸ் பிட்டருக்கு வேறு நிறுவனங்களில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள்.எனவே விடுமுறைக்குப்பின் நான் முயற்சி செய்து வேறு நிறுவனத்துக்கு மாறிகொள்ளலாம் என இருக்கிறேன்.ஸாலிமின் கல்வி,வீடு கட்டுதல் போன்ற பெரிய செலவுகள் இருக்கிறது.




    கடந்த இரண்டாம் தேதி சூயஸ் கால்வாயிலிருந்து கப்பலிலிருந்து இறங்கி நள்ளிரவு எகிப்து தலைநகர் கெய்ரோ விடுதியறையில்  தங்கி மூன்றாம் தேதி பிரமிட் பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்குப்பின் பள்ளிவாசல் சென்று ஜும்மா தொழுகையும் நிறைவேற்றியபின். அன்றிரவு விமானம் ஏறினேன். கெய்ரோ-மஸ்கட் ஒமான்  விமானத்தில் ஏறியபோது வாயிலில் நின்று வரவேற்ற விமான ஊழியரிடம் "இது எனது நூறாவது டேக் ஆப்" என்றேன்.



 பத்திரமாக விமானம் தரையிறங்கியது எட்டு மணி நேர காத்திருப்பு இங்கே என்னுடன் வந்த ரஹீம் உள்ளாவவிற்கும்  என்னைப்போல எட்டு மணிநேரம் காத்திருப்பு.  மூன்றாம் முறையாக ஒமான் விமான நிலையத்துக்கு வருகிறேன். மிக அழகாக புதுப்பிதிருக்கிரார்கள் விமான நிலையத்தை.மும்பை,துபாய்,கத்தார் போல அதிக கூட்டமில்லை.

   அதிகாலை இங்குள்ள பள்ளிவாசல் சென்று பஜர் தொழுகையை நிறைவேற்றி அங்கேயே சிறு தூக்கம் போட்டு எழுந்தேன்.

   அடுத்த விமானத்துக்கு தயாராகிவிட்டேன். நான்கு மணி நேர பயணத்தில் திருவனந்தபுரம் சென்று சேர்வேன். விமானத்தில்  ஏற சொல்லி ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள்.

   

   நாஞ்சில் ஹமீது,

    04 –nov -2023.





Wednesday, 8 November 2023

தள்ளி போன விடுமுறை.

 

மங்கி ஐலண்டிலிருந்து

    கடந்த சனிக்கிழமை இலங்கையின் பத்தி சாபுடன் (எலக்ட்ரிகல் இஞ்சினியர்) ப்ரிட்ஜில் பணி.காலை கூட்டத்தில் சொன்னார்கள் சனிக்கிழமை வேலையை தள்ளிப்போடுங்கள் என.

பனாமா கால்வாய் புதிய ரெகுலேசன் ஒன்றை கொண்டுவந்துள்ளது அதாவது neo panamax* கப்பல்களில் safe pilot P3 சிஸ்டத்தை பொருத்தவேண்டும் என. அதாவது கப்பல் பனாமா கால்வாயை கடக்கும்போது கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டும்  ஜிபிஎஸ் கருவி ஒன்றை பொருத்தவேண்டியது கட்டாயம்.



  அதற்கான உபகரணங்களை அடங்கிய பையை அவர்களே தந்து பணம் பெற்றுக்கொண்டார்கள்.பனாமா கால்வாயை கடக்கும்போது இணைய உதவியுடன் பைலட் அதை உபயோகித்து கப்பலை நகர்த்துவார். இது பொருத்தப்படாத கப்பல்கள் பனாமா கால்வாயை கடக்க வரும்போது அந்த கருவிகளை  அவர்களே தற்காலிகமாக பொருத்தி அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்வார்கள் அந்த கட்டணம் ஏறக்குறைய புதியதின் விலையை ஒட்டியே இருக்கிறது

  கப்பல் நிறுவனங்கள் புதியதை அவர்களிடமே வாங்கி பொருத்துவதே லாபம் என கருதுவதால்.எங்கள் கப்பலிலும் கடந்த மாதம் பனாமாவுக்கு வந்தபோது அந்த உபகரணங்கள் அடங்கிய பை வந்து சேர்ந்தது.

 அதற்காக பத்திசாப் என் உதவியை கோரியிருந்தார்.காலை ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு நானும் பத்திசாபும் தேவையான கருவிகள்,ஏணி,பேட்டரியில் இயங்கும் ஸ்க்ருட்ரைவர்  ஆகியவற்றுடன் ப்ரிட்ஜில் செல்லும்போது காப்டன் கணினியில் அமர்ந்து பணி செய்து கொண்டிருந்தார்.மூன்றாம் அதிகாரி ஒலாக்சி பணியில் இருந்தார்.

 ப்ரிட்ஜின் மேலேயுள்ள மங்கி ஐலன்ட்டில் போய் ஆன்றனாக்கள் பொருத்தும் இடங்களை தேர்வு செய்தபின் காப்டனை அழைத்தோம் வந்து பார்த்துவிட்டு அங்கு முன்பே இருக்கும் வேறு ஆன்றனாக்களுக்கு இடையூறு இல்லாதவாறு இருப்பது உறுதியானபின்.புதியதை இணைத்து சோதனை செய்தபின் இறுதி செய்வோம் என சொல்லி சென்றார்.



 ப்ரிட்ஜின் சீலிங்கில் உள்ள தட்டுகளை கழற்றிய பின் தான் மங்கி ஐலண்டிலிருந்து வரும் வயர்களை ப்ரிட்ஜிக்குள் கொண்டு வந்து பொருத்த முடியும். சீலிங்கை கழற்ற துவங்கும்போது காப்டன் ஒலிக்க விட்டிருந்த இசை காதுகளை நிறைத்து 98ஆம் ஆண்டு மும்பை எஸ்எல்(essel world) வேல்ட்/வாட்டர் கிங்டம் தீம் பார்க்கில் நான் பணிபுரிந்த நினைவுகளை உயிர்பித்தது. குளிரூட்டப்பட்ட அறையில் சப்தமும்,வியர்வையுமின்றி இசை கேட்டுகொண்டே பணி என்பது கப்பல் காரனுக்கு ஒரு ஆனந்த அனுபவம்தான்.

  பத்துமணிக்கு முன்பே தேநீருக்கு போக சொன்னார் பத்திசாப் அவர் அங்கேயே தேநீர் இடைவேளையை கழித்தார். பத்தரைக்கு மீண்டும் இசையுடன் பணி இயந்திர அறையில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் ஓய்வு பத்தி சாபிடம் கேட்டேன். “வீ டேக் ஹால்ப் டே”என்றார்.பீப்,சாலட்,கத்திரிக்காய் உருளைக்கிழங்கு சேர்த்த கூட்டுடன் சாப்பிட்ட பின் அறைக்கு வந்து முழு ஓய்வு.

    மூன்றரை மணிக்கு enclosed space enrty ட்ரில் இருந்தது. நான்கரைக்கு நாள் முடிந்தது.காஸ் பிளாண்டில் கம்ப்ரசர் ஓடாததால் இரவில் காஸ் பிளாண்டுக்கு செல்லும் பணியும் இல்லை. லாக் புக்கில் சரக்கு தொட்டிகளின் வெப்பம்,அழுத்தத்தை பதிவு செய்தபின். அறைக்கு வந்து இஷா தொழுது எழுதியும் வாசித்தும் தூங்க சென்றேன்.

 மறுநாள் ஞாயிறும் முழு ஓய்வு.காலை ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மீல் சாப்பிட்டபின் லாக் புக் எழுதினேன்.மதிய உணவுக்கும்,இரவுணவுக்கும் மட்டுமே அறையை விட்டு வெளியே சென்றேன்.நாள்முழுவதும் அமர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன்.

  இரவில் தூங்கி காலை விழித்து ப்ரிட்ஜில் பணியை துவங்கினோம்.மாலை ஐந்து மணிக்கு முடித்துக்கொண்டோம்.செவ்வாய்கிழமை காலை பத்திசாப் ஹிராத் “வேற ஏதாவது வேலை இருந்தால் பாருங்க,ரேடியோவில் இருங்க நான் கூப்புடுதேன் என்றார்.

  பத்தரை மணிக்கு முதன்மை அதிகாரி “கோ டு ப்ரிட்ஜ்”என்றார். பத்தி சாப் இன்றுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்றார்.வயர்கள் இழுத்து மூன்று ஆன்றனாக்களை பொருத்தி இணைய கருவியை இணைத்து பரிசோதித்தோம்,இரண்டாம் அதிகாரியும்,காப்டனும் சரியாக இருப்பதை உறுதி செய்தார்கள்.

 


      மங்கி ஐலண்டில் இருந்து தடித்த இரும்பு பிளேட்டில் துளை போட்டுதான் வயர்களை கீழே ப்ரிட்ஜிக்குள் கொண்டு வர வேண்டும்.அது மிக கடினம் மேலேயிருந்த வேறொரு ஆன்றனாவிலிருந்து வரும் வயரின் குழாய்க்குள் செலுத்தி  கீழ கொண்டுவர போதுமான இடைவெளி இருந்தது. தண்ணீர் உட்புகாதவாறு குழாயின் மேல்பகுதியை ரப்பர்கள் வைத்து இறுக அழுத்தி அடைக்கபட்டு அதன் மேல் பித்தளை திருகு கொண்ட மூடியால் அடைக்கபட்டிருக்கும். அதை திருகி கழற்ற முயற்சித்தோம் முடியவில்லை ஸ்பானர்,பைப்ரிஞ்ச்,வெட்டிரும்பு,சுத்தியல் இவற்றுக்காக மங்கி ஐலண்டுக்கும் டெக் பணிமனைக்கும் நான்கு முறை படிகளில் ஏறி,ஏறி இறங்கினேன் கால்வலியே இல்லை இப்போது.

காப்டன் திருகி திறந்த கடின குழாய் 


    அதை கழட்டும் முயற்சியில் நானும் பத்தி சாபும் தோல்வியடைந்து என்ன செய்யலாம் என திணறி யோசித்துகொண்டிருந்ததை பார்த்த காப்டன் பைப்ரிஞ்சால் முயற்சி செய்ய தொடங்கினார்,விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார்.அசையவே இல்லை தரையில் அமர்ந்துகொண்டு முழுவிசையையும் செலுத்தி திருகினார் மிக மெதுவாக,லேசாக அசைந்ததுபோல் இருந்தது. “கேப்டன் களருது,களருது” என்றார் ஹிராத். காப்டன் முழுமையாக கழற்றிவிட்டார். வேலை முடிந்தது.

 புதிய பனாமா கருவிக்கான மூன்று வயர்களை உள் செலுத்திவிட்டு தண்ணீர் புகாதவாறு  அடைத்தபின்  மதிய உணவுக்கு சென்றோம்.உணவு இடைவேளைக்குப்பின்  இறுதிகட்ட பணிக்காக சீலிங்கை அடைத்து ஸ்க்ரூவை திருகி கொண்டிருந்தோம்.

பிரிட்ஜின் உள்ளே பொருத்திய புதிய கருவி


 பதினெட்டு வருட கப்பல்வாழ்வில் மூன்று தினங்கள் இவ்வளவு எளிதாக அமைந்ததே இல்லை. இரண்டு மணிக்கு காப்டன் மலேசிய அலுவலகத்தை தொடர்புகொண்டு சூயஸ் கால்வாயிலிருந்து ஊருக்கு செல்லவிருக்கும் பெயர் பட்டியலை கேட்டார்.

   பத்திசாபுக்கும்,முதன்மை அதிகாரிக்கும் பதிலாக ஆள் கிடக்கவில்லை என பதில் கிடைத்தது. ஹிராத்துக்கு அமெரிக்க விசா இல்லை அவர் அங்கிருந்து ஊருக்கு செல்லவியலாது அமெரிக்காவிலிருந்து என்னையும்,முதன்மை அதிகாரியையும் ஒன்றாக இறக்க வேண்டியிருக்கும் இல்லையெனில் எங்களுக்கு மிக நீண்டுவிடும். அமெரிக்காவில் சரக்கு நிறைத்தபின் கேப்டவுன் வழியாக இந்தோனேசியா செல்லும் சாத்தியம் உள்ளதை சொன்னார் காப்டன் மலேசிய அலுவலகத்திற்கு.

 கப்பல் இப்போது சூயஸ் கால்வாயை நோக்கி செல்கிறது சூயஸ் கால்வாயை கடந்து மத்தியதரை கடலுக்குள் நுழைந்து ஜிப்ரேல்டர் முனையை தாண்டி அட்லாண்டிக் கடலில் பயணித்து அமெரிக்காவை நவம்பர் மாத இறுதியில் சென்றடையும்.

    அங்கிருந்து விடுமுறைக்கு செல்ல பதினான்குபேர் காத்திருக்கிறார்கள்.அங்கிருந்து அத்தனை பேரையும் ஒன்றாக அனுப்புவது சாத்தியமாகாமல் போனால் பின்னர் முப்பத்தி ஏழு தினங்கள் பயணத்திற்குப்பின் இந்தோனேசியாவில் கப்பல் சரக்கு இறக்கும்துறைமுகத்தில் கப்பல் பணியாளர்கள் இறங்க சாத்தியமான சூழல்கள் இல்லை.பின்னர் அங்கிருந்து கப்பல் எங்கு செல்லும் என இப்போது கணிக்கவே முடியாது.

 அதாவது பத்திசாப் ஹிராத்தும் இன்னும் சிலரும் ஜனவரி மாதம்வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது சூயசில் யாரும் இறங்காமல் போனால். சூயஸ் கால்வாயிலிருந்து ஊருக்கு செல்ல  தயாராகயிருந்த ஹிராத் ஒரு நிமிடத்தில் வேறொருவராக மாறியிருந்தார்

காப்டன் போனில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த ஹிராத்தின் முகம் மாறி கண்கள் சோர்வாகி நின்றார். காப்டன் போனில் பேசும்போது எனக்கான மாற்று ஆள் குறித்தும் கேட்டார். ஷாகுல் அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து தான் விடுமுறைக்கு செல்ல கேட்டுள்ளார். அப்போது அனுப்பிவிடுவோம் என பதில் கிடைத்தது.அதை கேட்டு எனக்கு மகிழ்ச்சிதான் ஆனாலும் வெளிக்காட்டிகொள்ளவில்லை. ஹிராத்தின் பணி ஒப்பந்தம் நான்கு மாதங்கள் அவர் ஒரு மாதம் பணிநீட்டிப்பு கேட்டார்.அது அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி முடிந்தது.

 மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லா இந்த கப்பலில் இணைவதற்கு நான்கு தினங்கள் முன்பு நிச்சயதார்த்தம் முடித்து வந்தார்.அவருக்கும் ஊருக்கு செல்ல வேண்டும்.திருமண கனவில் தினமும் மிதந்துகொண்டே இருக்கிறார். திருமணம் ஆன பொறவு தான் தெரியும் மவனே என மனதில் நினைத்துக்கொண்டேன்.

   ரஹீம் உல்லா அக்டோபர் மாத துவக்கத்தில் சீனாவிலிருந்து ஊருக்கு செல்வதாக இருந்தது. அவருக்கான மாற்று பணியாள் விமானம் ஏறும் சிலதினங்களுக்கு முன் காய்ச்சல் கண்டு இப்போது வர இயலாது என மறுத்ததனால் அவரது விடுமுறை தள்ளிப்போனது இப்போது  டாக்கா சென்று நிக்காஹ் செய்ய காத்திருக்கிறார்.

   இரு தினங்களுக்குப்பின் ஹிராத் நவம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து ஊருக்கு செல்லவிருக்கும் சிலரை ஜனவரி மாதம் வரை தன்னுடன் இருக்க சொல்லி ஆள் சேர்த்துக்கொண்டிருந்தார்.

neo panamax* = 2016 ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட பனாமா கால்வாயின் கேட்டுகளுக்குள் செல்லும் அளவுள்ள கப்பல்கள்.

panamax கப்பல் என்பது 200 மீட்டர் நீளமும் 33அகலமும் 52,500 DWT எடையும் கொண்ட கப்பல்கள் மட்டுமே பழைய பனாமா கால்வாயின் gatun கேட்டுக்குள் நுழைந்து கால்வாயை கடக்கமுடியும்.

நாஞ்சில் ஹமீது,

22-oct -2023.

sunitashahul@gmail.com