Saturday 22 June 2019

தாயை இழந்த சோலங்கி

கப்பல் காரன் டைரி
                        தாயை இழந்த சோலங்கி                 
    கடந்த பத்தாம் தியதி இரவு ஒன்பது மணிக்கு மேல் ஸ்பெயினின் தாராகுணாவிலிருந்து புறப்பட்டோம்.கப்பல் கரையிலிருந்து விலகுகையில்  கதிரணைந்து கொண்டிருந்தது வெண்மேகங்களில்
செங்கதிர்கள் பட்டு செந்நிறத்தில்  இருந்தது .பனிரெண்டு நாள்  பயணத்திற்கு பின் இப்போது அமெரிக்காவின் பிலேதெல்பியா அருகிலுள்ள மார்க்ஸ் ஹூக் துறைமுகத்தை நெருங்கிவிட்டோம் .

இம்முறை பயணம்அதிக கடினமில்லை கடைசி இருதினங்கள் மட்டும் கடும் காற்று வீசியது .நேற்று நாற்பது மைல்வேகத்தில் காற்று வீசியதால் டெக் பணியாளர் யாரும் வெளியில் செல்லவில்லை குடியிருப்பு பகுதியில் பணி வழங்கப்பட்டது அவர்களுக்கு .அதிகாலை நான்கு  மணிக்கு உள்ளூர் பைலட் வந்தபின் காலை பத்துமணிக்கு கப்பல் துறைமுகத்தில் கட்டப்படும் என அறிவிப்பு பலகை சொல்லியது. கப்பல் புறப்பட்டபின் முதல் நான்கு நாள் இணையம் இல்லை .பின்னர் இருதினங்கள் இணையம் வந்தது மீண்டும் இருதினங்கள் இல்லாமலாகியது .

    நேற்று முன்தினம் மாலைமுதல் கப்பலில் இணையம் இல்லை .சில நேரம் நெட்வொர்க் இருக்காது.
(பெரும்பாலான காப்டன்கள் கப்பலுக்கான செய்திகளை இணையம் வழியாக அனுப்பும்போது கப்பல் பணியாளர்களுக்கான இணைப்பை துண்டித்துவிடுவர்.அவரது பணி முடிந்தபின் இணைப்பை கொடுக்காமலே சென்றுவிடுவார் .இரவு தூங்க சென்றால் யாரும் அவரை தொந்தரவு செய்யமுடியாது .காலை அவர் எழுந்து கப்பலின் வீல் ஹவுசிலிருக்கும் இளம் அதிகாரியை அழைத்து கப்பலின் வேகம் ,அலையின் உயரம் ,காற்றின் வேகம் ,கப்பல் போகும் திசை , புயல் அறிவிப்பு பற்றிய செய்திகள் அனைத்தையும் கேட்டறிந்துவிட்டு .பல் தேய்த்து ,மெஸ் மேனை அழைத்து ஒரு சாயா குடித்துவிட்டு,கக்கூஸ் போய் ,குண்டி கழுவிவிட்டு பத்துமணிக்கு மேல் அடுமனைக்குள் வந்து சமையல்காரருக்கு சில உத்தரவுகளை கொடுத்துவிட்டு ,தனக்கு வேண்டியதை செய்யசொல்லி வயிறு நிமிர தின்னுவிட்டு .பைய மேல போய் ரேடியோ அறையில் தனக்குள்ள கணினியில் அன்று வந்திருக்கும் செய்திகளை பார்ப்பார் .பின்னரும் மறந்து பணியாளர்களுக்கான இணைய இணைப்பை இணைக்காமலே மதிய உணவுக்கு செல்லும் கப்பல் தலைவன்களும் உண்டு )

  நேற்று  மதிய உணவின் போது  என்னெதிரில் அமர்ந்திருந்த குஜராத் டீயு நகரில் வசிக்கும் ஐமபத்தி எழு வயதான திலிப்குமார் நதொட் சோலங்கியிடம் .”எல்லாம் மிக சரியாக போகிறதா” என கேட்டேன் . “ஆம் எவரிதிங் ஓகே சாகுல்” என்றார் .மதிய உணவு இடைவேளை முடிந்து பணிக்கு செல்லும்போது உடை மாற்றும் அறையில் காலனி அணிந்து கொண்டிருக்கும்போது  டிமெல்லோ என்னிடம்  “ஷாகுல் சோலங்கியின் தாய் இறந்துவிட்டார்” என்றார் . உடனே சோலங்கியை பார்க்க அவரது அறைக்கு சென்றேன் .அப்போதுதான் லூயி அவரிடம் துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்தார் .
சோலங்கி 
 
தொண்ணூற்றியைந்து  வயதான தனது தாய் இந்திய நேரப்படி காலை ஒன்பது மணிக்கே இறந்துவிட்டார் என்றார் .எங்கள் கப்பலின் கடிகாரம் இந்தியாவைவிட எட்டரை மணிநேரம் பின்னால் இருக்கிறது .கப்பலில் இணையம் இல்லாததால் அவருக்கு தாயின் மரண செய்தி வரவில்லை . இதுபோல் அவசர காலங்களில் எங்கள் நிறுவன அலுவலகத்தில் தகவல் தெரிவித்தால் உடனே கப்பலுக்கு தெரியபடுத்துவார்கள்.

 சோலங்கயிடம் கேட்டேன் “உங்கள் மகனிடம் சொல்லி உடனே மும்பை அலுவலகத்துக்கு தெரிவித்திருந்தால் உடனே கப்பலுக்கு மின்னஞ்சல் வந்திருக்குமே” என கேட்டேன் .மகன் பணிபுரியும் அஹமதாபாத் அலுவலகத்தில் உள் நுழையும்போது செல்போன் உட்பட அனைத்து உடமைகளையும் வைத்து பூட்டிவிட்டு பணி சீருடையில் உள் செல்லவேண்டும் ,எனவே எனது தாய் இறந்த செய்தி மாலை ஐந்து மணிக்குத்தான் மகனுக்கும் தெரியவந்தது என்றார்.
சோலங்கி என்னிடம்  தனது தாய் கடைசிவரை கண் கண்ணாடி அணியவில்லை .ஐந்தாண்டுகளுக்கு முன் கண் கொஞ்சம் மங்கலாக இருக்கிறது என்றபோது .கண் பரிசோதனைக்கு அழைத்தேன் ,இன்னும் கொஞ்ச காலம் சமாளித்து கொள்கிறேன் என்றார் .காது நன்றாக கேட்கும் ஒருகுறையும் இல்லை .இரண்டாண்டுகளுக்கு முன் வரை தானே அருகிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்று வருவார் .கடந்த நான்கு நாட்களாக உணவதும் உட்கொள்ளாமல் படுக்கையிலேயே இருந்துள்ளார் .நேற்று காலை அழைப்பு வந்துவிட்டது அவருக்கு .

  நான் வரும்போது சொல்லிவிட்டு வந்தேன் நான் ஊரில் இருக்கும்போதுதான் உனக்கு மரணம் வரும் என,.நான் நினைத்தது போல நடக்கவில்லையென கண் கலங்கினார் .கருவில் சுமந்து ,முலையூட்டிய அன்னையை கடைசியாக ஒருமுறை காணகிடைக்கவில்லை எனும் பெருந்துயர் அது .

 இரவுணவுக்குப்பின்  எட்டு மணிக்கு முன்பாக சோலங்கியின் அறைக்கு நானும் நீலேஷ் தண்டேலும்  சென்றோம் .நீலேஷ் பணியிலிருந்ததால் அவரை சந்திக்கவில்லை.சோலங்கியின் அறை கதவை தட்டும்போது அவர் துயில தொடங்கியிருந்தார் . .”அதிகாலை மூன்று மணிக்கு பைலட் வருவதற்கான ஏணியை தயார் செய்ய செல்லவேண்டும்,நான்கு மணிக்கு பைலட்” என்றார். .சோலங்கி நீலேசுடன்  குஜராத்தியில்
பேசிக்கொண்டிருந்தார்.என்னிடமும் குஜ்ராத்தியிலேயே பேச ஆரம்பித்தார் அந்த சூழ்நிலையை நன்கறிவதால் அவர்கள் பேசியது எனக்கு புரிந்தது .நீலேசும் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பணிக்கு செல்லவேண்டுமென்பதால் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு வநதுவிட்டோம் .

 பத்து மணிக்கு மேல் துயில சென்றேன் .அதிகாலை மூன்றரைக்கே விழித்து விட்டேன் .பல் தேய்த்துவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றேன்..தேய் நிலவு  கீழ் வானில் இருக்க ,நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தது ,காலை பஜர் தொழுகைக்கு இன்னும் அரைமணிநேரம் இருப்பது உறுதியானது .லேசான அலை இருந்ததால் பைலட் வரும் படகு கப்பலுடன் அருகணைய முடியாமல் தத்தளித்துகொண்டிருந்தது .நெடுநேரம் கப்பலுக்கு இணையான வேகத்தில் வந்துகொண்டே இருந்தது .அலையின் வேகம் குறைந்த தருணத்தில் மிக சரியாக படகு அருகணைந்ததும் அமெரிக்க பைலட் கப்பலின் ஏணி வழியாக மேலேறி வந்தார் .
மென் குரிளிரில் வெப்ப ஆடை அணிந்திருந்த சோலங்கியும் ,லூயியும் ஒரு கயிற்றை படகில் வீசி பைலட்டின் உடைமைகளை மேலேற்றினார்.உக்ரைன் நாட்டின் காடேட் விக்டர் பைலட்டை அழைத்து செல்ல ,லூயி அவரது பையுடன் வந்தார் .இருளில் நின்றிருந்த என்னைக்கண்டதும் “நேரத்தே எழிச்சா”என கேட்டார் .

 இன்றும் கப்பலில் இணையம் இல்லை .பத்து மணிக்கு மேல் மார்க்ஸ் ஹூக் துறைமுகத்தை நெருங்கினோம் பனிரெண்டு மணிக்கு முன்பாக கப்பலின் கயிறுகளை கரையில் கொடுத்து அதற்கான  தூண்களில் கரை பணியாளர்கள் இணைத்ததும் கப்பல் அசையாமல் நின்றது .அதிகாலை நான்கு மணிக்கு வந்த பைலட்டை அழைத்து செல்ல படகு அருகணைந்து கொண்டிருந்தது , ஷ்யாம் தண்டேல் அவரது பைகளுடன் சென்று கொண்டிருந்தான் .குஜராத் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள வல்சாட் கடற்கரை நகரில் வசிப்பவர்கள் தண்டேல்கள் .எல்லா கப்பல்களிலும் ஒரு தண்டேலாவது இருப்பான் .டீயு நகரில் இருப்பவர்கள் சோலங்கிகள் ரமேஷ் சோலங்கி ,மோகன் சோலங்கி என .

 22-june -2019,
ஷாகுல் ஹமீது .
sunitashahul@gmail.com

Saturday 8 June 2019

கப்பல் காரன் டைரி . பல்வலி


                                                                                                                      
                                                                                                                                            
                                          பல்வலி 
 நண்பர்கள்  பலரும் ஷாகுல் கடல் பயண அனுபவங்களை எழுது படிக்க ஆர்வமாய் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் .நெருக்கிய இரண்டு அல்லது மூவரை தவிர வேறு யாருக்கும் சில தினசரி குறிப்புகளை அனுப்பியதில்லை .
  
     கடந்த மார்ச் ஐந்தாம் தியதி எழுதிய புயல்களின் நடுவே பதிவை படித்த அனைத்து நண்பர்களும் அலறிவிட்டனர் என்னாட வாழ்க்கை இது என .அதன் பின்பு நான் எழுதி வைத்திருக்கும் சில பெரும் விபத்துகள் குறித்த பதிவு,சில நாட்குறிப்புகளையும்  பின் சென்று பார்த்தேன் .திகில் நிறைந்ததும்,மனதுக்கு சங்கடம் தருபவையாகவும்  இருக்கிறது .பின்னர் ஒவ்வொன்றாக பதிவேற்றம் செய்யலாம் என எண்ணினேன் .அதனாலேயே  இன்றைய நாட்குறிப்பு நண்பர்களின் பார்வைக்கு .
  
          பிலேடெல்பியாவிலிருந்து கடந்த எட்டாம் தியதி புறப்பட்டோம் நெதர்லாந்து நோக்கி .பதினோரு நாள் பயணம்.கடல் சாந்தமாக இருந்தது.புறப்பட்ட அன்றே கப்பலின் கடிகாரம் ஒரு மணி நேரம் முன்னே சென்றுவிட்டது.இன்று வரை ஐந்து நாட்களில் கடிகாரம் ஐந்து மணிநேரம் முன்னே சென்றுவிட்டது .இரவை பகலாகவும், பகலை இரவாகவும் மாற்றி வைத்துவிட்டனர் .எதற்குதான் இந்த அவசரமோ.இன்று காலை எட்டுமணிக்கு மேல்தான் உதயம் ஆயிற்று .கதிரவன் அணைவதும் எட்டே முக்காலுக்கு மேல் .
  
     நேற்று மாலை லேசாக பல் வலி தொடங்கியது .பல் வலி என சொல்ல முடியாது .கீழ் தாடையின் கடைசி கடவாய்பல்லுக்கு(ஞானப்பல் என பல் மருத்துவர் சொன்னார்) மேலே ஈறு வளர்ந்து மூடியுள்ளது. அதன் இடையில் சென்ற உணவால் இன்பெக்ஷன் ஆகிவிட்டது .மாலையில் சுடு நீரில் உப்பு போட்டு சில முறை வாய் கொப்பளித்தேன்.கப்பலில் இருக்கும் நண்பர் தாம்சன் பல்லில் தடவ ஜெல் ஒன்றை தந்தார்.தமிழகத்தை சார்ந்த தோழி ஒருவர் பல் மருத்துவர் .விசயத்தை சொன்னேன்.அந்த ஜெல் ஈறு பிரச்னைக்கானது .ஷாகுல் சுடுநீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள் .நெறி கெட்டினால் முறிவு மருந்து எடுத்துகொள்ளுங்கள் என்றார் .
   
இரவில் தூங்க தொடங்கிய இரண்டு மணிநேரத்துக்கு பின் வலி தொடங்கியது .வலியுடன் போராடிக்கொண்டே துயில முயற்சித்தேன் ஒரு பலனும் இல்லை .காலையில் வாயை திறக்கவே இயலவில்லை கடும் வலி மருத்துவர் சொன்னது போலவே நெறிகெட்டிவிட்டது.காலை உணவேதும் சாப்பிடாமலேயே பணிக்கு சென்றேன் .சில முக்கிய பணிகள் இன்று என்னால் நிற்கவே இயலவில்லை.தாடையுடன் ,தலையும் சேர்ந்து வலித்தது.காய்ச்சலுக்கு முந்தைய நிலை ,உடலில் சிறு நடுக்கம் வேறு .
           .என்னருகில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிகல் ஆபிசரை பார்த்தேன்.அவரின் மனதின் வலி முகத்தில் தெரிந்ததால் பார்வையை விலக்கிகொண்டேன் .நேற்று முன்தினம் இரவு அவரின் தந்தை இறந்த செய்தி வந்திருந்தது.பிறந்தால் இறந்தே ஆக வேண்டும் தான் ஆனாலும் தனது தந்தையின் இறந்த செய்தி கேட்டபின்பும் அந்த  சோகத்துடன் நாட்களை கடத்துவது பெருங்கொடுமை.தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள இயலாது .கப்பல் இதே வேகத்தில் எந்த தடையும் இன்றி சென்றால் பதினேழாம் தியதி நெதர்லாந்தின் தனுசன் துறைமுகத்தை சென்று சேரும் .பதினெட்டாம் தியதி புறப்பட்டு அவர் பத்தொன்பதாம் தியதி வீடு சென்று சேர்ந்தாலும் இறுதியாக தந்தையின் முகத்தை காணவும் இயலாது .

     காலை பத்து மணி தேநீர் இடைவேளையில் நிலேஷ் சைகையால் கேட்டான் என்ன ஆச்சு பேச்சை காணோம் என.பத்து மணி வரை பேசவே இல்லை சைகையால் தான் உரையாடிக்கொண்டிருந்தேன்.அதிகமாக பேசுவதால் இயற்கையே இப்படி ஒரு வலியை தந்து பேச்சை குறை என உணர்த்துகிறதோ .ஆனால் வலியை விட பேசாமல் இருப்பது எனக்கு மிக கஷ்டமாக இருந்தது.மதிய உணவையும் விட்டு விடலாம் என நினைத்தேன் நல்ல பசி,தினமும் சாப்பிட்டே பழகிவிட்டோம் .வெள்ளை சாதத்தை கரண்டியால் பிசைந்து கொஞ்சம் மீன் குழம்பு ஊற்றி சாப்பிட முயற்சித்தேன் முடியவில்லை .
  
     இன்று மாலையும், கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னே நகர்த்திவிட்டார்கள் ஐந்து நாளில் ஐந்து மணிநேரம் முன்னே சென்றுவிட்டது .உடல் கடிகாரம் மாற இன்னும் நாட்களாகும் .இரவுணவுக்கு சென்றபோது செப் ஸ்ரீகுமார் “சூடா பூரி எடுக்கட்டே’ என்றார்.மற்றவர்களுக்கும் சுட சுட எண்ணையில் பொரித்து கொண்டிருந்தார் .சிரித்துவிட்டு “பல்லு வேதனை இந்நு எனிக்கி வேண்டா  சேட்டா” என்றேன் . வெள்ளை சாதம் ஒரு குவளையில் எடுத்தேன் பார்த்துகொண்டிருந்த நண்பர் தாம்சன் “மிக்சியில போட்டு அடிங்க இதெல்லாம் கரண்டியில கடைய முடியுமா? என்றார்.மிக்சியில் மசிய அடித்த சாதத்துடன் மீன் குழம்பு ஊற்றி கஞ்சியாக குடித்தேன் .பல்லிலும்,தாடையிலும் படாமல் எளிதாக வழுவி குடலுக்குள் சென்றது.
  
       காய்ச்சலுக்கு சுனிதா தந்துவிட்ட சுக்குகாப்பி பொடியில் ,கருப்பட்டி சேர்த்து இரவு இருமுறை குடிக்க பிளாஸ்கில் எடுத்துக்கொண்டேன்.உள் தாடையில் விளக்கு அடித்து கண்ணாடியில் பார்த்தேன் ஞானப்பல்லின் ஈறுகள் வீங்கி,புண்ணாக இருக்கிறது .இன்னும் சில நாட்கள் ஆகலாம் சரியாக .வேறு வழியில்லை தாங்கிகொள்ள வேண்டியதுதான் .இப்போதும் எலக்ட்ரிக்கல் ஆபிசரை நினைத்தேன் .அவரது அக வலிக்கு முன் என் உடல் வலி ஒன்றுமேயில்லை.

12 –march -2019 ,
Shhaul hameed

கப்பல் காரன் டைரி. கண்

                                             கண்

   கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி எனது வலது கண் கொஞ்சம் மங்கலாக தெரிந்தது.மேகமூட்டம் போல,எதோ மறைப்பது போலவும்.கப்பலின் கடிகாரம் தொடர்ந்து நான்கு மணிநேரம் பின்நோக்கி சென்றுவிட்டதால் அன்று அதிகாலை மூன்று மணிக்கே விழித்திருந்தேன்.நீராடி,தொழுகையும் ,பயிற்சிகளும் முடிந்தபின் ஐந்தரை மணிக்குமேல் கைபேசியை பார்த்தேன் அப்போதுதான் என்னால் படிக்க முடியவில்லை .வலது கண்களை கைகளால் மறைத்துவிட்டு இடதுகண்களால் பார்த்தேன் ,இடது கண்களால் படிக்க முடிந்த சிறிய எழுத்துக்களை ,வலது கண்ணால் படிக்க முடியவில்லை .
    
   கண்களை நன்னீரில் நன்றாக கழுவினேன் பார்வை அப்படியேதான் இருந்தது. அது அன்று மாலை வரை தொடர்ந்தது ,லேசாக கண் உறுத்தலும்  .அன்றிரவு எனது இரண்டாம் இஞ்சினியரிடம் சொன்னேன்.அவர் கப்பலின் மருத்துவ அதிகாரியான,இரண்டாம் அதிகாரியை சந்தித்து  கண்களை கழுவும் ‘ஐ வாஷ்’ வாங்கி தந்தார்.மறுநாளும் அப்படியே இருந்ததால் மீண்டும் கப்பலின் மருத்துவ அதிகாரியிடம் சென்றேன்.அப்போது காப்டனும் அவருடன் இருந்தார்.காப்டன் என்னிடம் “உனக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா?சர்க்கரை  வியாதி உள்ளதா” என கேட்டார். “இல்லை”  என்றேன் “மாலையில் பணி முடிந்தபின் குளித்துவிட்டு வா” என்றார்.(தினமும் இரு வேளை நீராடுபவன் நான்) இரண்டாம் அதிகாரியிடம் “ ஷாகுலின் கண்களை பூத கண்ணாடியால் சோதனை செய்,ரத்த அழுத்தத்தையும் பார் நாளை மறுநாள் துறைமுகம் செல்கிறோம் தேவை பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பலாம்”என சொன்னார் .

    மாலையில் அவரை மீண்டும் சந்தித்தேன். இரண்டாம் அதிகாரி கார்த்திக் பூத கண்ணாடியால் பார்த்துவிட்டு “கண்ணில் பூ வளர்ந்துள்ளது  உனக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்” என்றார். “இப்போதெல்லாம் நாற்பது வயதானவர்களுக்கும் இப்படி ஆகிவிடுகிறது .எனது அக்காள் இப்போது தான் அந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாள்.ஒன்றும் பிரச்னை இல்லை” என்றார் .
மறுநாள் மாலை பார்வை தெளிவடைந்தது.எரிச்சலோ உறுத்தலோ,எதுவும் இல்லை.மருத்துவமனை சென்று கண் மருத்துவர் ஒருவரை பார்த்து பரிசோதனை செய்தால் நன்று என ஒரு எண்ணம் இருந்தது.
  
       அதன் பின் அவ்வப்போது இடது கண்ணை மறைத்துவிட்டு வலது கணணால் பார்ப்பேன் .வலது கண் கொஞ்சம் பார்வை குறைவாக இருப்பது உறுதியானது .மீண்டும் இரண்டாம் அதிகாரியை சந்தித்தேன். “இரு கண்களாலும் பார்க்கும்போது பிரச்சனை  ஏதும் இல்லையே,நான் புத்தகத்திலும் தேடினேன்,அதிலும் ஒன்றும் இல்லை” என சொன்னார் .

     பின்னர் இரு வாரங்களுக்கு பின் முன்பு போல் வலது கண்ணில் எதோ மறைப்பது போலிருந்தது .பின்னர் சரியாகியது.மீண்டும் இரண்டாம் அதிகாரி,காப்டனை சந்தித்தேன் .கப்பலில் கண்களுக்கான மருந்துகள் ஏதும் இல்லை .இருதிருந்தாலும் கண் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ணில் எந்த மருந்தும் நான் போடுவதில்லை.

    இறுதியாக காப்டன் என்னை கப்பல் துறைமுகதிற்கு  செல்லும்போது மருத்துவமனைக்கு அனுப்புவதாக சொன்னார்.கடந்த ஏழாம் தேதி கப்பல் அமெரிக்கா வந்தடைந்தது .எட்டாம் தியதி காலை பத்தரை மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வண்டி வரும் அதற்கு முன் தயாராக இருங்கள் என்றார் .  டிமெல்லோ கப்பலில் டெக் பிட்டராக  இருக்கிறார் .சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்திருக்கிறார் வலது கால் மூட்டு பகுதியில் நல்ல அடி .அவரும் என்னுடன் வருவார் என்றனர் .
  
        காலை பத்து மணிக்கு புதிதாக பணிக்கு வரும் மூவரும் மூன்றாம் அதிகாரி ஆப்தே ஸ்ராயாசின் மனைவியும் கப்பலுக்குள் வந்தனர்.அதே வண்டியில் நாங்கள் செல்ல வேண்டும் .பத்தரைக்கு கப்பலில் இருந்து இறங்கி வண்டியில் அமர்ந்து கொண்டோம். வெள்ளைக்கார அமெரிக்கர் லூ எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார் .வண்டியில் ஏறியதும் “மருத்துவருக்கான படிவம்,வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டு இருக்கிறதா” என எங்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டபின் வண்டியை இயக்கினார்.
   
       துறைமுக வாயிலில் அனுமதி பெறவேண்டி வண்டியிலிருந்து ஒருமுறை இறங்கி ஏறிகொண்டோம் .லூ எங்களிடம் பதினொன்றே காலுக்கு நாம் மருத்துமனையை சென்றடைவோம் என்றார். வண்டி பிலடெல்பியாவை நோக்கியே சென்றது .பிலடெல்பியா  வானூர்தி நிலையம் தாண்டி வலப்பக்க சாலையில் பிரிந்து சென்றது .பிப்ரவரி மாதம் நான் இங்கு வரும்போது மரங்கள்,செடிகள் இலைகளை உதிர்த்து குளிரில் நடுங்கி  கொண்டு நின்றிருந்தது.புற்கள் பனிக்கட்டிகளாக இருந்தது .இப்போது மரங்களும்,செடிகளும் இலைகளை துளிர்த்து இளம் பச்சை நிறத்தில் என்னை பார்த்து சிரித்தது .லூ எங்களிடம் இன்று நல்ல தட்பவெப்ப நிலை எண்பது பாரன்கீட்(சுமார் இருபத்தியாறு பாகை) என்றார் .
  
         

  லூ சொன்னது போலவே பதினொன்றேகாலுக்கு  ஒரு அழகிய கிராமத்திற்குள் வண்டி நுழைவது போலிருந்தது.ஆம் அது fair view village எனும் குடியிருப்பு பகுதி,அந்த கிராமத்தில் கட்டிடங்கள் சுட்ட சிறு செங்கல்களால் கட்டப்பட்டு,வெளி பூச்சும்,வண்ண சாயமும் செய்திருக்கவில்லை .முழு கிராமமும் செந்நிறத்தில் இருந்தது. அதில் ஒரு கட்டிடம்தான் சிறிய கிளினிக்.பெரும்பாலும் வீடுகள் தான்.அனேகமாக பத்தில் நான்கு  வீடுகளின்  முன் அமெரிக்க தேசிய கொடி பறந்துகொண்டிருந்தது.இதை அமெரிக்காவில் நான் சென்ற பகுதிகளில் எல்லாம் காண்கிறேன் .
  
லூ காரை நிறுத்திவிட்டு ,பின்னால் வரும் வண்டியை கவனித்து இறங்கசொன்னார் .கிளினிக்கின் உள் சென்று அமர்ந்தோம் நானும் ,டிமெல்லோவும்.என் எதிர் இருக்கையிலிருந்த கறுப்பின பெண் படித்துகொண்டிருந்த புத்தகத்திருந்து விழிகளை விலக்கி ஒரு புன்னகையால் குட் மார்னிங் என்றாள்.எங்களுக்காக முன்னரே பதிவு செய்யபட்டிருந்தது .ஒரு வயதான தம்பதி உட்பட நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்து என்னை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு ,ஒரு நோயாளியின் பெயரை அழைத்து ,அவரை அறைக்குள் கூட்டிசென்றார் .வேறொரு அறையிலிருந்து வந்த பெண் மருத்துவர் என்னருகிருந்த வயதான பெண்மணியை பெயர் சொல்லி அழைத்து இன்னும் எவ்வளவு நேரம் உங்களுக்கு காத்திருக்க விருப்பம் என கேட்டார்.கைகளில் இருந்த சக்கர உதவியுடன் கூடிய நடை துணைவனை ஊன்றி எழுந்தவர் .இதோ வருகிறேன் என மருத்துவருடன் சென்றார் .
   
    முதல் அறைக்கு சென்ற நோயாளி வெளியே வந்ததும் .வரவேற்பறையின் மேஜையில் இருந்த .காகிதத்தை எடுத்த மருத்துவர் என்னை பார்த்து “உன் முதல் பெயர் ஷாகுலா?”என கேட்டார். “ஆமா என்றேன்” உள்ளே வா என்றார் . அறைக்குள் சென்றதும் குட்மார்னிங் டாக்டர் என்றேன். அவர் “எனது பெயர் கீல்மன்,உட்காருங்கள்” என எதிரிலிருந்த இருக்கையை காண்பித்தார் .கப்பலிலிருந்து கொண்டு சென்றிருந்த படிவத்தை பார்த்துவிட்டு.என்னிடம் விபரங்களை கேட்டறிந்தார் .உயரமான சாய்வு நாற்காலியில் என்னை அமர சொன்னார் .நான் அமரும் முன் அதிருந்த மென்தாளை மாற்றி ,புதியதை போட்டார்.எதிரிலிருந்த நாட்காட்டியை பார்க்க சொல்லிவிட்டு எனது வலகண்ணை ,கண் பரிசோதிக்கும் சிறிய விளக்கால் பார்த்தார் ,பின்பு இடது கண்ணையும் பரிசோதித்தார் .எழுந்து மீண்டும் அவரது மேஜை முன்னிருந்த இருக்கையில் அமர சொன்னார்.
    
     “உனது கண்களில் நான் எதையும் காணவில்லை .உன்னை கண் மருத்துவரிடம் அனுப்புகிறேன் போய்வா” என்றார்.நன்றி கூறி வெளியே வந்தேன் .பின்னர் டி மெல்லோ உள்ளே சென்றான் .டி மெல்லோ வெளியே வந்தபின் மருத்துவர் லூவிடம், “இவருக்கு கண் ஆஸ்பத்தரி,இவருக்கு எக்ஸ் ரே,அழைத்து செல்லுங்கள்”என்றார் .அங்கிருந்து பதினைந்து நிமிட தொலைவில் எக்ஸ் ரே நிலையம் ,டிமெல்லோவை அங்கு இறக்கிவிட்டு,அங்கிருந்து ஐந்து நிமிட தொலைவிலிருந்த கண் மருத்துவமனையை நோக்கி சென்றோம் .லூ என்னிடம் இவர் மிகச்சிறந்த கண் மருத்துவர் என்றார் .
  
    வண்டியை நிறுத்திய பின் தான் கவனித்தேன்,அங்கு நிறுத்தியிருந்த வாகன பதிவெண்கள் நியூஜெர்சி  என எழுதியிருந்தை.டாக்டர் கோசிஸ் என பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகையின் எதிரில் அமர்ந்தேன் .லூ வரவேற்பறையிலிருந்து ஒரு படிவத்தை வாங்கி தந்து என்னிடம் பூர்த்தி செய்ய சொன்னார் .பெயரும் ,பிறந்ததேதியும் தான் என்னால் அதில் எழுத முடிந்தது .கையொப்பமிட்டு கொடுத்தேன் .என்னருகிருலிந்த வியட்நாம் முகச்சயால் கொண்ட  நடுவயதுக்கு மேலிருந்த பெண்ணை பெயர் சொல்லி அழைத்து சென்றார் மருத்துவர் கோசிஸ்.
  அந்த பெண் வெளியே வந்ததும்  மருத்துவர்  என்னிடம் “கொஞ்சம் பொறுங்கள் அடுத்து நீங்கள் தான்” என்றார் .அதிக காத்திருப்பு இல்லை அங்கே. “சுல்தான் நீயா” என கேட்டார். “இல்லை” என்றேன் .உனது முதல் பெயர் ஷாகுலா என கேட்டுவிட்டு .பரிசோதனை அறைக்குள் கூட்டிசென்றார் என்னை .டாக்டர் கோசிஸ் என்னை விட ஐந்து அங்குல உயரம்,நல்ல குண்டான உடல்வாகு,தாடையில் மட்டும் நீண்ட தாடி வளர்த்து வழுக்கை தலையுடன் இருந்தார் .கண் மருத்துவர் கோசிஸின் படத்தை சுனிதாவிற்கு அனுப்பிவைத்தேன் .அவள் டாக்டருக்கு எப்போது பிரசவ தேதி என கேட்டாள்.
  
     
dr kosiss
அவர்  என்னிடம்  பிரச்னை என்ன என கேட்டறிந்தார்.மேற்பகுதி வட்டமான ,நெகிழியால் ஆன கண்களை மறைக்கும்  ஒரு வெண்ணிற குச்சியை என்னிடம் தந்து இட கண்ணை மறைத்து விட்டு வலகண்ணால் எதிரிலிருந்த திரையில் தெரியும் எழுத்துகளை படிக்க சொன்னார் .பெரிதிலிருந்து ,சிறிதாகி கொண்டே வந்தது .பின்னர் இடது கண்ணால் படைக்க சொன்னார் .பின்னர் லென்ஸ் பொருத்திய கருவியை கண்களில் மாட்டி எழுத்துகளை படிக்கச் சொன்னார் .மூன்றாவதாக இன்னும் ஒரு கருவி .அனைத்தும் நான் அமர்ந்திருந்த இருக்கையில் எதிரிலேயே இருந்தது .அவரும் நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமலே ,கைகாளால் கருவிகளை நகர்த்தி எளிதாக சோதனைகளை செய்தார்.
   
     பின்னர் எதிரிலிருந்த வேறொரு அறைக்கு அழைத்து சென்று .கண் பார்வையின் அளவை சோதனை செய்யும் தானியங்கி கருவியில் பார்க்க சொல்லி அச்சு பிரதி எடுத்துகொண்டார் .மீண்டும் முதல் அறைக்கு அழைத்து வந்து கையில் துடைக்கும் மென்தாளை தந்துவிட்டு கண்களில் இரு விதமான சொட்டு மருந்துகளை விட்டபின் .எதிர் சுவரின் மூலையை பார்க்க சொல்லிவிட்டு சிறியதொரு விளக்கொளியில் இரு கண்களையும் சோதனை செய்தார் .பின்னர்  பலகைகளில் எழுதும்(whiteboard marker) பெரிய பேனாவை  கைகளில் வைத்து வட்டமாக சுற்றினார்.எனது கண்களும் அதற்கேற்ப சுழலவே அவர் “வெரி குட்” என்றார். “நான் இதுபோல் தினமும் கண்பயிற்சி செய்கிறேன்” என்றேன். “தலை கீழே,கால் மேலே வைத்து நிற்கும் பயிற்சி செய்வாயா?”என கேட்டார். “எனது குரு அந்த பயிற்சி செய்வதை தவிர்க்கும்படி சொல்லியுள்ளார் .அதனால் மண்டையில் உள்ள மெல்லிய நுண் நரம்புகள் அதிக அழுத்தத்திற்கு உட்படும் .அது நல்லதல்ல” என்றேன் .”நீ யார்” என கேட்டார் .
  “
          நான் ஒரு யோகா ஆசிரியர் ,உடற்பயிற்சிகள் ,எளிய தியானம் ,மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி, மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி என வகுப்பெடுப்பேன்,பயிற்சிகள் சொல்லித்தருபவன்” என்றேன். “ஓ கிரேட்,நீ எந்த நாட்டை சார்ந்தவன்”என கேட்டார். “நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தவன்” என்றேன். “என்னுடன் படித்த ஒருவன் பஞ்சாபி, தீடிரென உருது பேசுவான்,திடீரென ஹிந்தி பேசுவான்” என்றார். “நான் சிரித்துக்கொண்டே நானும் ,தமிழ் ,மலையாளம் ,ஹிந்தி போன்ற இந்திய மொழிகளை” பேசுவேன். நாங்கள் தென்னிதியர்கள் வட இந்தியா சென்றால் உலகின் வேறொரு கண்டத்திற்கு போனதுபோல் இருக்கும் ,உணவு ,உடை ,மொழி ..............கலாசாரம் எல்லாம் வேறு” என்றேன்  .
  
     மருத்துவர் கோசிஸ் ஒரு நிமிடம் காத்திரு வருகிறேன் என்றுவிட்டு சென்றவர் .பத்து நிமிடத்திற்கு பின் வந்தார்.சுவரில் ஒட்டபட்டிருந்த கண்ணின் படத்தை காண்பித்து “இந்த லென்சில் நீ பார்ப்பது பின்னால் வரும்போது எண்பது சதவீதம் தான் உனக்கு தெரிகிறது .அதன் காரணம் உன் வலக்கண்ணின் பின் பகுதியில் வீக்கம் இருக்கிறது .உன் கண்ணில் எந்த பிரச்னையும் இல்லை .இப்போது உனக்கு கண்ணாடியும் தேவையில்லை .உன் கண்ணில் பின் பகுதி நீர்கோர்த்திருபதற்கு உனது கோபம்,கவலை மன அழுத்தம் போன்றவையே” காரணம் என்றார்.நான் உரக்க சிரித்தேன். அவர்என்னிடம்  “கீப் யுவர் மைன்ட் ரிலாக்ஸ் ,எந்த மருந்தும் உனக்கு தேவையில்லை.அடுத்த மூன்று மாதத்திற்கு பின் அல்லது உனது பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு சென்றபின் .ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்” என்றார் .சிறு கட்டங்களும்,அதன் நடுவில் ஒரு கரும்புள்ளியும் உள்ள ஒரு காகிதத்தை தந்து நடுவிலுள்ள புள்ளியை பார்க்க சொன்னார்.கட்டங்கள் பாம்பு போல வளைந்து ,நெளிந்து தெரிந்தது .ஏதாவது “கட்டங்கள் காணவில்லையா” என கேட்டார்.”இல்லை”என்றேன்.”பெர்பெக்ட் யூ டூயிங் வெல்” என்றார் .இந்த சார்ட் ஐ வாரம் ஒருமுறை பார் ,ஏதாவது வித்தியாசம் இருந்தால் ,மீண்டும் கண்பரிசோதனை அவசியம் என்றார் .

     எனக்கு நானே கேட்டேன் எனக்கு மன அழுத்தமும்,கவலைகளும் இருக்கிறதா என.நான் செய்யும் ஐவேளை தொழுகை ,தியானம்,பயிற்சிகள் எதுவும் எனக்கு உதவவில்லையா ?நண்பர்கள் பலரும் என்னை எப்போதும் சிரித்த முகம் என்பனர்.இந்த கப்பலுக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது ,இந்த கப்பலின் மேலதிகாரிகள் ,கீழ் நிலையிலிருப்பவர்களை தேவையில்லாமல் எப்போதும் ஒரு அழுத்தமான மன நிலையிலேயே வைத்திருக்கின்றனர் .நான் வந்த அன்றே என்னிடம் எனது இரண்டாம் இஞ்சினியர், “முதன்மை இஞ்சினியருக்கு முஸ்லீம்களை பிடிக்காது ,கவனமாக இரு” என்றார் .நான் வந்த மறுநாள் ஊருக்கு சென்ற ஒருவர் “,நீ இங்கே தொப்பி அணியாதே” என்றார். “ஏன்” என கேட்டேன். “முதன்மை இஞ்சினியர் தேவையே இன்றி உன்னை கஷ்டபடுத்துவான்” என்றார். “நான் பார்த்துகொள்கிறேன்,இது எனது மத அடையாத்துக்காக அணையவில்லை” என பதிலுரைத்தேன் .
   
         கப்பல் பணியே பல நேரங்களில் கடினம் தான் .இந்த கப்பலில் அதிக பணி சுமையோ,அதனால் அழுத்தமோ இல்லை .தென்னிந்தியன்,வடஇந்தியன் ,இங்கே போகாதே,அதை செய்யாதே என்பன போன்ற பணிக்கு பின்பான அழுத்தங்கள்.நிம்மதியாக இருக்கும் பணியாளன் என எவரும் இந்த கப்பலில் இல்லை .அது என்னையும் பாதித்திருக்கிறது.சுனிதாவிடம் கேட்டேன் அவள் “நீ கோவ காரன் ஷார்ட் டெம்பர்” என ஒற்றை வரியில் சொன்னாள்.பதினைந்து ஆண்டுகள் ஆகிறது அவளுடன் வாழ தொடங்கி.தாய்க்குபின் இல்லாளுக்கு தானே சரியாக தெரியும் கணவனை பற்றி .எனது சகோதரி அஜிதாவும் சொல்வாள் அவன் ஒரு இஞ்சி என .
  
          மூத்த சகோதரை அழைத்து பேசினேன். “நீ எல்லாருக்கும் டிப்ஸ் கொடுக்கா உனக்கு என்ன ஆச்சு” என கேட்டார்.எனக்கு தெளிவாக தெரிந்தது இந்த கப்பல் சூழ்நிலை தான் பிரச்னை என. எனது மருத்துவ நண்பர்கள் நீ எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென நினைக்கிறாய் அதுவே ஒரு அழுத்தம் தான் .இயல்பாய் ,நிகழ்காலத்தில் இரு .
 வேறொருவர் நீ உனது கோபத்தை வெளியில் காட்டுவதில்லை சிரித்துக்கொண்டே உன்னுள் அடக்கி கொள்கிறாய்.அதுதான்  இது போல் உடல் பிரச்சனைகளாக வெளிப்படும் என்றார்.

          கண் மருத்துவர் கோசிசுடன் ஒரு படம் எடுத்துக்கொண்டு,அவர் தந்த அறிக்கையுடன் வெளியில் வந்தேன்.சொட்டு மருந்துகள் ஊற்றியதால் வெயிலில் கண்கூசியது ,எதையும் தெளிவாக பார்க்கஇயலவில்லை,காரின் முன் இருக்கையில் அமர்ந்து,சீட் பெல்டை அணிந்துகொண்டேன். “உனது நண்பரும் தயாராக இருக்கிறார்.எக்ஸ் ரே நிலையத்திலிருந்து அழைத்து சொனார்கள்” என்றார் லூ. இது நியூ ஜெர்சியா என கேட்டேன். “ஆம் நாம் இப்போது இருப்பது நியூ ஜெர்ஸி அந்த பக்கம் பிலடெல்பியா” என்றார் டி மெல்லோவுக்கு முறிவுகள் ஏதும் இல்லை,எக்ஸ் ரே யை குறுந்தகடில் கொடுந்திருந்தனர் அது அவருக்கானது .மருத்துவர் கீல்மனுக்கு இணையத்தில் அனுப்பி வைத்திருந்தனர் .
  
         

மீண்டும் அந்த அழகிய fair view village க்குள் நுழைந்தோம்.மருத்துவர் கீல்மன் மதிய உணவுக்கு சென்றிருந்தார்.நான் வேடிக்கை பார்க்கும் பொருட்டு வெளியில் வந்தேன்.எதுவும் தெளிவாக தெரியவில்லை மீண்டும் உள்சென்று அமர்ந்துகொண்டேன் .மருத்துவர் வந்து டிமேல்லோவுக்கு ,மருந்துகளும் ,கால் மூட்டில் அணிய பட்டையும் வாங்க எழுதி கொடுத்தார்.என்னிடம் ஊருக்கு போனபின் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள் என்றார் .
  
      கார் கப்பலை நோக்கி புறப்பட்டதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நான் கண்களை மூடி கொஞ்சம் தூங்கி விட்டேன் .முந்தைய நாள் காலை எட்டுமணி முதல் அதிகாலை நான்கு மணி வரை வேலை செய்துவிட்டு,அதிகாலை ஐந்து மணிக்கு தூங்கி எட்டு மணிக்கு விழித்ததால் நல்ல களைப்பு .வண்டி கப்பலை நெருங்கிய போது லூ “தினமும் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச்செல்ல வேண்டியிருக்கிறது.மணிக்கணக்கில் அங்கே காத்திருப்பது வேலையாகி விட்டது” என்றார். “உன் கப்பலிலிருந்து ஊருக்கு செல்லும் மூவரை விமான நிலையம் அழைத்துச்செல்லவேண்டும்.அவர்களுக்காக காத்திருக்கிறேன் என சொல்லி சீக்கிரம் வரச்சொல்” என்றார்.என்னுடன் கப்பலுக்கு வாருங்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்றேன் .இல்லை பணிகள் எல்லாம் முடிந்தபின் வீட்டிற்கு போய் சாப்பிடுவேன் எனக்கான உணவு வீட்டில் காத்திருக்கிறது என்றார்.

    “காலையில் வந்த பெண் காப்டனின் மனைவியா”என கேட்டார். “இல்லை அவள் மூன்றாம் அதிகாரியின் மனைவி” .என்றேன். “ரொம்ப சின்ன பொண்ணாக இருக்கிறாள்” . “இருபத்தி மூன்று வயது தான் ஆகிறது அவளுக்கு” என்றேன் . “அவளை பார்த்தால் பதினெட்டு தான் மதிக்க முடியும் என்றார் லூ. நான் காலையில் பார்த்தபோது பள்ளி மாணவி என  தோன்றியது”என்றேன் .சரி உனது நண்பர்களை சீக்கிரம் வரச்சொல் என்றார் .லூவுக்கு நன்றி சொல்லி கப்பலை நோக்கி நடந்தோம்
ஷாகுல் ஹமீது ,
10 may 2019