Tuesday, 10 February 2026

எழுத்து - தியானம் கணேஷ் கடிதம்

 வணக்கம் அண்ணா.

     ‘தினமும் எழுதுங்கள். எழுதுவதும் ஒருவகை தியானம் போல’ என்று நீங்கள் நேற்று சொன்னது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கவே, எழுதலாம் என்று இரவு உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போது தான் நீங்கள் சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்தது. 

    எழுத எழுத உள் மனதில் இருந்து எண்ணங்கள் எழும்பி வருகிறது. அந்த எண்ணங்களை கவனித்து அதை ஒருமுகப்படுத்தி எழுத்தில் கொண்டு வருவது கிட்டத்தட்ட தியானமே தான்! 

     ஆசிரியர் ஜெயமோகன் இம்முறை டாலஸ் வந்திருந்தபோது, கேள்வி பதில் நேரத்தின் போது ஒரு அன்பர் கேட்டார் - வெண்முரசு போன்ற பெரிய படைப்புகளாகட்டும், கோவிட் நேரத்து நான் ஸ்டாப் சிறுகதைகளாகட்டும், எது உங்களை எழுத வைக்கிறது என்று. அதற்கு அவர் பதிலளிக்கும் போது,  எழுத என்று உட்காரும் போது, கதாபாத்திரங்களாகட்டும், கதைக்களனாகட்டும், ஒரு கட்டத்திற்கு பிறகு அதுவே உங்களை ஆட்கொண்டு உங்களை எழுத வைக்கும் என்று. அது எவ்வளவு உண்மை!

      என் மும்பை நாட்களைப் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன். எழுத எழுத அடிமனதிலிருந்து ஏதேதோ எண்ணங்கள் - நான் மறக்க நினைத்த, மறந்து விட்டேன் என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்ட, கசப்பான என ஏதேதோ எண்ணங்கள் மேலெழுந்து வருகிறது. ஒருவேளை அதை எல்லாம் எழுத்தாக, சிறு கதையாகவோ, நாவலாக மாற்றினால் அந்த கசப்பை மாற்ற முடியும் என நினைக்கிறேன். 

சற்று முன்னர் தான் உங்களின் ‘அன்னம்’ சிறுகதை படித்தேன். அதில் வரும் அஹமது கதாபாத்திரம் கிட்டதட்ட மும்பையில் என் நாட்களைப் போலிருந்தது. 

அடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் விரிவாகப் பேச வேண்டும். 

அன்புடன்,

கணேஷ்,

டாலஸ்.

  


     கணேஷ் நலம் தானே டாலஸில் எதிர்பாராவிதமாக உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. மனம் மனதிலிருப்பது மூளைக்கு எட்டி எழுத்தாக மாறுவது தியானம் தான். ஆரம்பத்தில் மனதில் நிறைய இருக்கும் எழுத்தாக வராது. சிறிது நாட்கள் எழுதினாலே உங்கள் மொழி அமைந்து எழுத்து வந்துவிடும்.

     2003 – 2004 ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் இருந்தேன். 2016 இல் எனது பிளாக்கில் ஈராக் போர்முனை அனுபவங்கள் எழுதும்போது என்னிடம் எந்த குறிப்பும் கிடையாது. எல்லாம் மனதிலிருந்து கோர்வையாக எழுந்து வந்தது. அப்போது ஆசிரியர் ஜெயமோகனிடம் கேட்டேன். “சும்மா இருந்தால் நினைவு வராது எழுத என அமர்ந்துவிட்டால் தானே வரும்” என்றார்.

   எழுதுவதில் ஒரு நன்மை நீங்கள் சொன்ன கசப்புகளை கொட்டியவர்களை மன்னித்து நீங்கள் விடுதலை அடைய முடியும். எழுத எழுத ஒரு ‘ரிலாக்ஸ்’ ஐ உணர்வீர்கள்.நீண்ட காலம் சுமந்து அலைந்ததை இறக்கிவைத்துவிட்டு நீங்கள் இலகுவாக முடியும்.

    எனது பத்தாம் வகுப்பு பதிவை எழுதியபின்னர்தான் உணர்ந்தேன் எனது பத்தாம் வகுப்பு தோல்விக்கு காரணம் காதர் மற்றும் நாசர் என எண்ணிகொண்டிருந்தேன். அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டேன். முப்பத்திரண்டு ஆண்டுகளுகளாக அவர்களை சுமந்து அலைந்திருக்கிறேன்.

  அன்னம் கதையை வாசித்தபின் உங்கள் மும்பை வாழ்க்கையும் அப்படி இருந்ததாக சொன்னீர்கள்.இன்றும் மும்பையில் வேலைதேடும் இளைஞர்களில் நிச்சயமாக பல அஹமதுகள் இருப்பார்கள்.

 எழுதுங்கள் உங்கள் கதையை. வாழ்த்துக்கள்.

 கப்பலில் வேலை கிடைக்காமல் போனது பற்றி சொன்னீர்கள். அது நல்லது தானே.பொழுதணையும்போது வீட்டுக்கு வந்து மனைவி,மகனுடன் தினமும்  சேர்ந்து வாழும் கொடுப்பினை உங்களுக்கு கிடைத்துள்ளது.

நாஞ்சில் ஹமீது.


எனது பத்தாம் வகுப்பு 1

எனது பத்தாம் வகுப்பு 2

எனது பத்தாம் வகுப்பு 3

எனது பத்தாம் வகுப்பு 4 



Monday, 9 February 2026

பசுபிக் சக்சஸ் (பணியில் இணைந்தேன்)

 


ஹூஸ்டனுக்கு வந்து 21 நாட்கள் விடுதியில் தங்கியிருந்தது முடிவுக்கு வந்தது. ஆறாம் தேதி காலை டெக்சாசிலிலுள்ள கார்பஸ் கிறிஸ்டி எனும் துறைமுகத்துக்கு கப்பல் வருவது உறுதியானது.

  ஆறாம் தேதி காலை எங்களை தயாராக இருக்க சொன்னார்கள்.ஹூஸ்டனிலிருந்து இருநூற்றி இருபது மைல் தொலைவு, நான்கு மணிநேர பயணம்.

  அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து ஐந்துமணி தாண்டி ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது கீழே வந்தபோது இஞ்சின் கேடட் அமோ மற்றும் டுடர் வண்டியில் பைகளை ஏற்றி வைத்திருந்தனர்.


  அறைசாவியை கொடுத்துவிட்டு வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.காலையிலேயே சாலையில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டே இருந்தது. போக்குவரத்து நெரிசல் சற்றும் இல்லை இங்குள்ள சாலையமைப்பு அப்படி.

 ஓட்டுனரிடம் கேட்டேன் எப்போது போய் சேர்வோம் என.இன்னுமொருவரை வேறொரு விடுதியிலிருந்து அழைக்கவேண்டும் என்றார். எங்கே என சொல்லவேயில்லை. ஒருமணி நேர பயணத்திற்குப்பின் ஆறு வழி சாலை மற்றும் பாலங்கள் அனைத்தும் விலகி நான்கு வழி சாலைக்கு வந்தோம் வாகனங்களும் வெகுவாக குறைந்தது. கட்டிடங்களே இல்லாமல் இருபுறம் வெறும் தரையும் குறைவான மரங்களும் தென்பட்டன.




  கிராம பகுதியை அடைந்ததாக உணர்ந்தேன்.ஒதுவுடன் இருந்ததால்.அதிகாலை பஜ்ர் தொழுகையை காரில் இருந்தபடியே தொழுதேன்.ஏழுமணிக்கு ஒரு பெட்ரோல் பம்ம்பில் காரை நிறுத்தினார்.வேறொரு வண்டி தயாராக இருந்தது அதில் பைகளை மாற்றிகொண்டோம்.




இரண்டாவது வண்டி ஓட்டுனரிடம் எப்போது போய் சேர்வோம் எனக்கேட்டேன். நாற்பது நிமிடங்கள் என்றார். சாலை இன்னும் சுருங்கி நம்மூர் போல ஒற்றை சாலையாக இரண்டு வாகனங்கள் செல்லும் அளவில் ஆகியது. ஆனாலும் விசாலமான சாலை. எட்டரைக்கு அழகிய கடற்கரை முன்பு இருந்த ஹாலிடே இன் விடுதியில் முன் நிறுத்தினார் காரை.





  மூன்றரை மணிநேர பயணம் தெரியவேயில்லை விடுதிக்குள் சென்று நாங்கள் மூவரும் சிறுநீர் கழித்து வந்தோம். காலை உணவு குறித்து காரோட்டியிடம் கேட்டேன். எங்கள் முகவருடன் போனில் பேசிவிட்டு எதுவுமே சொல்லவில்லை. காலை ஐந்துமணிக்கே வண்டியில் ஏறிவிட்டோம் என நான் சொன்னதையும் சொன்னார்.



  ஹாலிடே இன் விடுதியின் முன் அழகிய கடற்கரை,மென் குளிரில் சாலையை தாண்டி போனேன். மெக்ஸிகோ இங்கிருந்து மூன்று மணிநேர பயணம்தான். சில தினங்களுக்கு முன்பே கார்பஸ் கிறிஸ்டியில் நம்மை தங்கவைத்திருக்கலாம் என பேசிக்கொண்டோம்.



500ஆண்டுகளுக்கு முன் இங்கே அடித்த புயலில் சிக்கி 400 பேருக்கு மேல் இறந்ததையு பற்றி ஒரு நினைவு குறிப்பு உள்ளது.

   இந்தோனேசியாவை சார்ந்த இரண்டாம் இஞ்சினியர் பைகளுடன் வந்து காரில் எறிகொண்டார்.அடுத்த இருபது நிமிடத்தில் கார்பஸ் கிரிஸ்டி துறைமுக வாயிலை அடைந்தோம்.

   வாயில் காவலரிடம் நால்வர் கப்பலுக்கு போக வந்திருக்கிறார்கள் எனச்சொன்னார். காரோட்டியிடம் அடையாள அட்டையை வாங்கி பார்த்தபின் எங்களது பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயருடன் கையில் இருந்த பெயர் பட்டியலுடன் ஒத்துபார்த்தார்.

   பணியில் இணைய வருபவர்களின் பெயர் பட்டியலை முகவர் முன்பே துறைமுக அதிகாரிகளுக்கு அனுப்பஈடுவார்கள்.காரோட்டி வீட்டுக்கு செல்பவர்களை அழைத்துசெல்ல மூன்று மணிக்கு வருவதாக சொன்னார். அவருக்கு ஒரு அடையாள அட்டையையும்,வாகனத்துக்கு ஒன்றும் அளித்தார் அங்கிருந்த வேறொரு பெண்மணி.

  கார் முன்னால் சென்றதும் அங்கே நின்றுகொண்டிருந்த இருவரில் ஒருவர் நாய் ஒன்றை கையில் பிடித்திருந்தார்.எங்களை கீழே இறங்க சொல்லி பைகளை வரிசையாக அடுக்க சொன்னார். நாயை அருகில் கொண்டுவந்தார். முகர்ந்துபார்துவிட்டு முன்னால் சென்றது. கைப்பைகளை மட்டும் திறந்துகாட்ட சொல்லி பார்த்தார்கள்.



  அதற்கடுத்திருந்த வாயிலில் மீண்டும் ஆவணங்கள் சோதித்தபின் உள்ளே போக சொன்னார். வழக்கமாக இங்கே இறங்கி நடந்து செல்ல சொல்வார்கள். இன்று தான் அனுமதிக்கிறார்கள் பிரசிடென்டுக்கு தரப்படும் முன்னுரிமை இது என சொன்னார் காரோட்டி.

  கப்பலுக்கு  மிக அருகில் சென்றோம்.உயரமான படிகளில் ஒவ்வொரு பையாக சுமந்து கப்பலில் வைத்தோம். காலை ஒன்பதுமணிக்கு கப்பல் கட்டப்பட்டதாக சொன்னார்கள்.காங்க்வேயில் இருந்த பவனும்,கமலும் “வெல்கம் பிட்டர் சாப்” என வரவேற்றார்கள்.



 பத்து மணிக்கு பிஸ்மில்லாஹ் என சொல்லி கப்பலில் பாதம் பதித்தேன்.இந்தியாவிலிருந்து புறப்பட்டு 22 நாள் காத்திருப்புக்குப்பின்(இதுதான் எனக்கு நீண்ட காத்திருப்பு)குடியிருப்பில் நுழைந்ததும் இரண்டாம் இஞ்சினியர் மன்ஜீத் கட்டியணைத்து வரவேற்றார். ஊருக்கு செல்லும் உற்சாகத்திலிருந்தார்.

எனக்கு தந்த அறையில் பைகளை வைத்துவிட்டு அடுமனை சென்று சமையல்காரர் பெங்காளியான சந்தீப் மண்டல்,பிலிப்பைன்சைசார்ந்த இரண்டாம் குக் ஜான் மற்றும் மெஸ் மென் கமல் தண்டேலை பார்த்தேன். இரண்டு முட்டையும் ஒரு சுலைமானியும் குடித்துவிட்டு அறைக்கு வந்தபோது எனக்கான பணியாடை,காலனி,பாதுகாப்பு தொப்பி தயாராக இருந்தது.

  ஆடை மாற்றி காஸ் பிட்டர் அப்சலை பார்த்தேன்.. பன்னிரெண்டரை மணிவரை காஸ் பிளானட்,கார்கோ ஸ்டோர்,டெக் வோர்க்ஷாப்,இயந்திர அறையை காட்டித்தந்தார்.இயந்திர அறையில் கொரியாவின் முதன்மை இஞ்சினியர் கிம் “ஷாகுல் நீயா வருக”என கைகுலுக்கினார்.



  உணவுண்ண சென்றபோது அவர் விடைபெற்றார்.மூன்று மணிக்கு செல்ல வேண்டும். இரவு ஏழு மணி விமானம்.ஒரு மணிக்கு சரக்கு நிறைக்கும் குழாய்களை பொருத்தும் டீம் வந்தது. காஸ் இஞ்சிநியர் மலேசியாவின் அஸிமுடன்  நானும் இருந்தேன்.

 

 நள்ளிரவில் தான் சரக்கு நிறைக்கும் பணி துவங்கும் ஓய்வு எடுத்துகொள்ளுமாறு முதன்மை அதிகாரி மலேசிய தமிழரான திவ்யன் மகாலிங்கம் சொன்னார். மூன்று ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் எனேர்ஜியில் அவருடன் பணிபுரிந்துள்ளேன்.

  நான்கு முதல் ஐந்தரை வரை நல்ல தூக்கம். லேசான குளிர் இருந்தது. இரவுணவாக சப்பாத்தியும் மட்டன் கறியும் உண்டேன். பத்து மணிக்குமேல் படுத்துவிட்டேன். அதிகாலை இரண்டே காலுக்கு போனில் அழைத்தார் அஸீம் “கம் டூ சி சி ஆர்”(கார்கோ கண்ட்ரோல் ரூம்)

 இப்படியாக நெடும் பயணத்துக்குப்பின் பசுபிக் சக்கஸ் கப்பலில் பணியில் இணைந்தேன். ஏழு மாத பணி ஒப்பந்தம் ஒரு மாதம் ஹோட்டலிலேயே முடிந்துவிட்டது என சத்தீஸ்கர் மூன்றாம் அதிகாரி தேஜஸ் கூறினான்.

நாஞ்சில் ஹமீது,

09 feb 2026.

sunitashahul@gmail.com

Thursday, 5 February 2026

டாலஸ்புரம் 3

 






     இங்கே கார் இல்லாமல் எதுவுமே நடக்காது. பொது போக்குவரத்து மிகக்குறைவு. கிடைத்த பொது போக்குவரத்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கினாலும் போக வேண்டிய வீடு,அலுவலலகம் வெகுதூரத்தில் இருக்கும். அதனால் வணிக வளாகம் மற்றும்,கோயில்,பூங்கா எதுவாக இருந்தாலும் கார் நிறுத்துமிடம் அதைவிட மூன்றிலிருந்து நான்கு பங்கு பெரிதாக இருப்பது அவசியம். அமெரிக்கா மிகப்பெரிய பரந்த,விரிந்த நிலப்பரப்பை ஒரு கண்டமே நாடாக இருப்பதால் முக்கிய நகரங்களை தவிர இடத்திற்கு பஞ்சமேயில்லை.

   ஞாயிறு மற்றும் தைப்பூசம் ஆதலால் அனுமார் கோயிலில் கார்நிறுத்தம் நிரம்பி வழிந்தது. சுற்றி,சுற்றி தூரத்தில் ஒரு இடத்தை கண்டு காரை நிறுத்தினோம். கோயிலில் சிறப்பு பூஜை நடந்துகொண்டிருந்தது ஆங்கிலத்தில். பெரும் திரள் அதில் அமர்திருந்தது. சாமி கும்பிட வருபவர்கள் அவர்களை இடையூறு செய்யாதவாறு வந்து,செல்லும்படி ஏற்பாடும்இருந்தது.



  இந்தியாவை போலவே மிக அழகும்,நேர்த்தியுடனும் கட்டபட்டிருந்தது. ஹிந்தி,தெலுங்கு பேச்சொலிகள் அதிகமாக கேட்டது எனக்கு.அங்கிருந்த தூண் ஒன்றில் வேலை,விசாவுக்கு இங்கே,மற்றொரு தூணில், பைனான்ஸ்,பணம் இங்கே என எழுதபட்டிருந்ததை கண்டு செந்திலிடம் கேட்டேன். அந்த தூண் முழுவதும் பச்சை கயிற்றால் சுற்றிபச்சையாக மாறியிருந்தது. அதில் எழுதியிருப்பவை நிறைவேற பதினைந்து டாலரில் பச்சை கயிறு வாங்கி சுற்றினால் போதுமாம். கயிறு சுற்றுபவரின் பணத்தேவை நிறைவேறுமோ இல்லையோ, பொருளாதரத்தில் அனுமன் சாமி விரைவில் பணக்காரர் ஆகிவிடுவது உண்மை. உண்மையான பக்தியுடன் கோயிலை சுற்றிவிட்டு பக்தர்களின் பிராசதர்த்திற்கு அரிசி பை,வேறு பொருட்கள் என கோயிலுக்கு கொடுத்து செல்பவர்களும் இருந்தனர்.

அமெரிக்க பள்ளிவாசல் ஒன்றில் தொழுதுவிட வேண்டும் என எண்ணியிருந்தேன். செந்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை கண்டுபிடித்து சொல்லும்போது இஷா தொழுகை நெருங்கிவிட்டது.ஜமாஅத் கிடைக்காது எனபதால் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன். வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.



   சுலைமானி குடித்து கொண்டு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இரவுணவாக இட்லி வீட்டிலேயே செய்து தந்தார் செந்திலின் மனைவி சியாமளா.காலை ஏழரை  மணிக்கே மகள் சாதனா பள்ளி செல்ல தயாராகிவிட்டாள். நான் குளித்து வெளியே வரும்போது மகன் சித்தார்த் பள்ளிக்கு சென்றுவிட்டான். காலை உணவுக்குப்பின் எட்டரை மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். செந்தில் ஆசிரியர் ஜெயமோகனின் ஸ்டோரீஸ் ஆப் த ட்ரூ நூலை பரிசளித்தார்.




 ஒன்பதரை மணிக்கு பிளானோவிலிருந்து எனக்கு பஸ்.திங்கள்கிழமை காலை போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் சீக்கிரமே செல்வோம் என செந்தில் சொன்னார்.



   பேருந்து புறப்படும் இடத்திற்கு பத்துநிமிடங்கள் முன்பே வந்துவிட்டோம்.அது ஒரு பெட்ரோல் பம்ப். அங்கிருந்து ஆஸ்டின் மற்றும் ஹூஸ்டனுக்கு பேருந்துகள் செல்கிறது. வழியில் எங்கும் நிற்காமல் வண்டி விரைவாக சென்றது. முதல் நிறுத்தம் வூட்லண்ட்ஸ். ஹூஸ்டன் டவுண்டவுன் வரும்முன்பே பேருந்து இணையத்தில் எனக்கான ஊபர் டாக்ஸி பதிவுசெய்து விட்டேன். பத்தே நிமிடத்தில் டாக்ஸி வந்தது.அடுத்த பதினைந்து நிமிடத்தில் விடுதியறைக்கு வந்துவிட்டேன். லுகர் தொழுது முடித்தபோது நல்ல பசி. செந்தில் காலையில் எனக்கு இட்லி சட்னி,பொடி ஒரு டப்பாவில் அடைத்து தரும்போது வேண்டாம் என்றேன். நல்ல பசியில் மீதமில்லாமல் அனைத்தையும் உண்டு முடித்தேன். என் பெயர் எழுதியது எனக்கு கிடைத்தே ஆகும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன் நான்.

   நீண்ட நாட்களாக ஹூஸ்டன் விடுதியிலேயே  இருந்த எனக்கு இந்த  நான்கு நாட்கள் டாலஸ் போய்வந்த பயணம் பெரும் அகமகிழ்வையும் உற்சாகத்தையும் தந்தது.

   தெலுங்கு பேசும் விடுதிமேலாளர் டாலஸ் எப்படி இருந்தது எனக்கேட்டார். அதிகமான இந்தியர்கள் (33%)அங்கே வாழ்கிறார்கள் என்றபோது. அதனால்தான் அவ்வூர் ‘டாலஸ்புரம்’ என்றார்.

நாஞ்சில் ஹமீது,

05feb2026.

sunitashahul@gmail.com

டாலஸ் கணேஷ் கடிதம்

 


கடந்த வார இறுதியில் டாலஸில் சந்தித்த நண்பர் அவரது வலை தளத்தில் எழுதியிருக்கிறார்.

தற்கால தமிழில் ஷாகுல் அளவிற்கு கப்பல் வாழ்க்கையை வேறு யாரும் பதிவு செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவரின் கப்பல்காரனின் டைரிக் குறிப்புகள், தமிழில் ஒரு தொழில் சார்ந்த அனுபவ தொகுப்புகளில் முக்கியமான ஒன்று. விரைவில் அவர் அதை புத்தக வடிவில் வெளியிட வாழ்த்துக்கள். 

https://suvadugal.com/2026/01/31/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/

Wednesday, 4 February 2026

டாலஸ்புரம் 2

 



    செந்திலின் வீட்டை சுற்றிலும் கடந்த வாரம் அடித்த பனிப்புயலின் ஐஸ் இன்னும் உருகாமலே இருந்தது.காலையில் உணவுண்டபின் செந்திலின் மகனை ஒரு வகுப்புக்கு கொண்டு விட்டபின். இந்திய (ஹரேலி)கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை வாங்கினோம். சின்ன வெங்காயம் முதல் அதிரசம் வரை இங்கே கிடைகிறது.




Frisco வில் இருக்கும் நூலகத்திற்கு சென்றோம். இரண்டு வயது பூர்த்தியாகத குழந்தைக்கு பெற்றோர் புத்தகத்தை கையில் கொடுத்து படங்களை காட்டி கொடுக்கின்றனர்.மிகப்பெரிய நூலகம்.ஒருவர் ஐம்பது புத்தகங்கள் வரை ஒரே நேரத்தில் எடுத்து செல்ல முடியும். சைலண்ட் ரூம் தனியாக இருக்கிறது.மாணவர்கள் அதை பயன்படுத்துகின்றனர். நூல்களை புனைவு, அ புனைவு, வரலாறு,புவியியல் தன் வரலாறு என பிரித்தே வைத்துள்ளனர்.




நமக்கு தேவையான நூலை கணினியில் தேடலாம். ஆசிரியர் ஜெயமோகனின் Stories of true இருக்கிறதா என தேடினோம். அங்கே இல்லை. அந்த சிறுகதை தொகுப்பை அங்கே வைக்க ஆலோசனை சொல்லலாம் என கூறினார் செந்தில்.



 அருகிலிருந்த உணவகத்தில் ஒரு மசாலா சாயா குடித்துவிட்டு,சப்பாத்தியும்,கறியும் வாங்கிகொண்டோம்.இங்கே உள்ள அனைத்து சிறிய,பெரிய வணிக வளாகங்களிலும் ஒன்றிரண்டு இந்திய கடைகள் இருக்கிறது(சாய் பிளவர் ஷாப்,சிந்து சினாக்ஸ்). வகுப்பு முடிந்து காத்திருந்த மகன் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.காலையில் செந்திலின் மனைவி சமைத்திருந்த பொங்கல் சாப்பிட்டபின் எனக்கு பசிக்கவேயில்லை.

  அவரது மகள் சாதனாவுக்கு பாலிவுட் நாட்டிய வகுப்பு அதற்கு அழைத்து சென்றுவிட்டு வால்மார்ட் சென்றுவிட்டு திரும்பும்போது சாதனாவின் வகுப்பு முடிந்திருந்தது. மூன்று மணி ஸ்லாட்டுக்கான மாணவர்கள் குவிந்துவிட்டனர். இந்திய பெண் மாஸ்டர் டான்ஸ் கற்றுகொடுக்கிறார்.

 மதியம் மூன்று மணிக்குமேல் பசியில்லாமலே சாப்பிட்டேன்.சித்தார்த் பள்ளி மாணவர்களுடன் நாடக குழுவில் ஸ்டேஜ் மேனேஜராக இருக்கிறார். நாடகத்தின் முக்கிய திரையிடலுக்காக கிளம்பி சென்றார். இங்குள்ள கல்வி முறையில் பாடத்திற்கு வெளியே கலை,இலக்கியம்,விளையாட்டு என அதிகம் கற்றுகொள்ள பிள்ளைகளை பள்ளிகளும்,பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

    பள்ளி கல்வி முடிந்து கல்லூரி செல்லும்போதே திறைமையானவர்களாகவே நுழைகிறார்கள்.இங்குள்ள கல்விமுறை அப்படி.




மாலையில் நண்பர்கள் நாகர்கோவில் கணேஷ்,பிரதீப் மற்றும் பாலாஜி சந்திக்க வந்திருந்தனர். கப்பல் காரன் டைரியை வாசித்தவர்கள். எனது முதல் வாசகர் சந்திப்பு என்றே சொல்லலாம்.




 ஜெயமோகன்,கப்பல் பணி,தமிழக அரசியல் என இரண்டு மணிநேரம் உரையாடியபின் நண்பர்கள் விடைபெற்று சென்றனர். நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு தூங்க சென்றோம்.

காலையில் தொழுகைக்குப்பின் செந்திலின் தயாராக வைத்திருந்த டீ குடித்தேன். காலை உணவுக்குமுன் அவரது வீட்டில் பூஜையறையில் அதுவே அவரது அலுவலகம் அனைவரும் அமர்ந்து தியானம் செய்தோம். அவர்களுக்கு ஒரு தியான அறிமுகம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அடிப்படை தியான பயிற்சிகளை டாலஸ் நண்பர்களுக்கு இலவசமாக சொல்லி தருவதாக உறுதியளித்தேன்.



    நானும் செந்திலும் அவர்களின் குடியிருப்பு பகுதியான windsong raanch community பகுதியில் சுற்றி வந்தோம் இரண்டாயிரம் ஏக்கர் கோழி பண்ணையாக இருந்த இடம் தான் இப்போது குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே பரந்து விரிந்த நிலம் அதிகமாக இருப்பதால் இருவழி சாலை போல அகலமான தெருக்கள். குடியிருப்பில் எங்கும் கடைகளே இருக்காது. ஆசிரியர் ஜெயமோகன் நண்பர்களுடன் வந்து நடந்து போய் டீ குடிக்க விரும்பினால் முடியாது. சில மைல்கள் காரில் பயணித்து வணிகவளாகம் சென்றால்தான் ஒரு காப்பி கிட்டும்.



  இந்த குடியிருப்பு வாசிகள் பயன்படுத்த நீச்சல்குளம,சமைத்து உண்ண பார்பிகியூ அடுப்புகள் அனைத்தும் கம்முனிடி செய்து கொடுத்துள்ளது. குளிர் காலமாதலால் யாரும் இப்போது அங்கே வரவில்லை.

   நண்பர் கணேஷ் மதிய உணவிற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். தை பூசம் ஆதலால் சைவம் மட்டுமே என சொல்லியிருந்தார். செந்திலின் வீட்டிலிருந்து மிக அருகிலேயே கணேசின் வீடு. சப்பாத்தி,நெய் சோறு,பன்னீர் டிக்கா,வெஜிடபிள் குறுமா,தயிர் உள்ளி என சுவையாக உண்டபின் அரிசி கீர் ஒன்றும் தந்தார்.

கணேஷின் குடும்பம்


   வீட்டிலிருக்கும் ஒரு வயது குட்டியான ஸ்கை எனும் பெண் நாயை அறையில் பூட்டியிருந்தனர். கணேசின் மகன் ஆதித்யா ஸ்கையை பார்க்க அழைத்தான். கணேஷ் அறைக்கு வெளியே கொண்டுவந்தார்.

   நாங்கள் விடைபெற்றோம்.2012 இல் என்னுடன் தோஹா – ஹூஸ்டன் விமானத்தில் பயணித்த பாலக்காட்டு மாமி உஷா இங்கே ப்ரிஸ்கோவில் வசிக்கிறார். “சாயா குடிச்சிட்டு போலாம் ஆத்துக்கு வாங்கோ”என அழைத்திருந்தார். அவரது மகன்கள் சிறுவர்களாக இருக்கும்போது சேட்டை பசங்களாக விமானத்தில் பார்த்ததுபதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. மிக ஆவலோடு சந்திக்க காத்திருந்ததால் உஷாவின் இல்லத்திற்கு சென்றோம்.

பிங்க் ஆடை உஷா கண்ணாடி அணிந்தவர் ராமசந்திரன்


  உஷாவின் வீட்டிற்கு முன் ஐஸ் இன்னும் உருகாமல் இருந்ததால் மிக கவனமாக வரச்சொன்னார். உஷாவின் கணவர் ராமச்சந்திரனை இப்போது தான் பார்க்கறேன். மகன் தேஜஸ் கல்லூரியில் படிக்கிறான்.இளையவன் பள்ளியிலிருந்து பேண்ட் வாசிப்பதற்காக வேறு ஊருக்கு சென்றிருந்தான். நல்ல பில்டர் வேண்டும் என கேட்டிருந்தேன். சுவையான காபியை தந்தார் உஷா.

   ஏழு மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டோம்.பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பதால் போனில் இன்னும் ஒரு மணிநேரம் கழித்து வருகிறோம். பொறுத்துக்கொள்ள முடியுமா என சியாமளா கேட்டார். அவர்கள் ஒத்துகொண்டதால் இங்கிருக்கும் ஹனுமான் கோயில் செல்வது என முடிவு செய்தோம்.

மேலும் .....

நாஞ்சில் ஹமீது,

04- feb - 2026

sunitashahul@gmail.com

Tuesday, 3 February 2026

டாலஸ்புரம்

 



   பசுபிக் சக்சஸ் கப்பலில் பணியில் இணைவதற்காக ஹூஸ்டன் வந்து இன்றோடு பதினெட்டு நாட்கள் ஆகிவிட்டது.

இங்கே கடுமையான பனிப்புயல் வீசியதால் சற்று தூரத்திலிருக்கும் நண்பர்களை சென்று சந்திக்க இயலவில்லை. பனிப்புயல் வீசியபோது ஹூஸ்டனில் ஐஸ் விழவேயில்லை மழை பெய்து வெப்பம் மைனஸ் மூன்று டிகிரிவரை சென்றது.

 ஹூஸ்டனில் இருக்கும் நண்பர் சிவா “இந்த வார இறுதியில் டாலஸ் போய்வாருங்கள் வெதர் நன்றாகிவிட்டது” என ஊக்கினார்.   டாலஸில் வாழும் நெருங்கிய செந்தில் நண்பர் தாராளமாக வாருங்கள் என்று பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பினார். எழுத்தாளர் ஜெயமொகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள்,அவரது வாசகர்களுக்கு உலகம் முழுக்க நண்பர்கள்.

    2020 கோவிட் காலத்தில் சுக்கரி வாசிப்பு குழுவில் அறிமுகமாகி 2023 இல் செந்தில் சென்னை வந்திருந்தபோது நான் மும்பை செல்லும் வழியில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து ரயில் புறப்படும் முன் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்தோம். கடந்த அக்டோபரில் செந்தில் இந்தியா வந்திருந்தபோது திருநெல்வேலி மாவட்டம் கடையம் சென்று அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

   பாரதி செல்லாம்மாளின் வீட்டை அவரது தந்தை விலைக்கு வாங்கி குடியிருக்கிறார்.அவ்வகையில் அவரது குடும்பமும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதை இனி யாராலும் மாற்ற முடியாது.




  வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு பஸ் ஹூஸ்டனின் டவுன்டவுனிலிருந்து கிளம்பும். என் விடுதியிலிருந்து இருபது நிமிட பயண தூரம்தான். போக்குவரத்து நெரிசல் இருந்ததை விடுதியின் எட்டாவது மாடியில் இருக்கும் உணவுகூடத்தில் இருக்கும்போது கண்டதால் மதிய உணவுக்குப்பின் கீழே வந்து ஊபர் டாக்ஸியில் புறப்பட்டேன். மூன்று மணிக்கே பஸ் புறப்படும் மரியாட் ஹோட்டல் அருகில் வந்துவிட்டேன். டவுண்டவுன் சாலையில் நாற்பது நிமிடங்கள் நடந்தே சுற்றிவந்தேன்.

இங்கு கேட், கேட் கீப்பர் இல்லாமல் சாலையிலேயே ரயில் ஓடுகிறது.




   நான் செல்லவேண்டிய ரெட்கோச் பேருந்து ஐந்துநிமிடம் தாமதமாக வந்தது.சுத்தமான கழிப்பறை,இணைய வசதியுடன் முப்பத்தி நான்கு இருக்கைகள் கொண்ட பேருந்தில் பதினைந்துபேர் மட்டுமே இருந்தோம். இரு இருக்கைகளுக்கிடையில் தாராளமாக இடைவெளிவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து கால்களை தொங்கவிடாதவாறு நீட்டிகொள்ளும் வசதியான இருக்கை.ஹூஸ்டன் நகர் பகுதியை கடக்கவே ஒரு மணிநேரம் ஆனது. ஆறுவழிச்சாலையில் பெரும்பாலும் கார்களும்,டிரக்களும் தான் ஏராளமாக செல்கிறது.



 நகரை கடந்த பின் நான்கு வழி சாலையாக குறுகி இருபுறமும் விரிந்த புல்வெளிகள் அல்லது மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தது.சில மாட்டுபண்ணைகளும் இருந்தது.  இரு நூறுஏக்கர்,நூறு ஏக்கர் விற்பனைக்கு என போர்டுகள் நிறைய இருக்கிறது.ஹூஸ்டன் எல்லையில் ஸாம் ஹூஸ்டனின் வெண்ணிற உயர்ந்த சிலையும் இருந்தது.

இடைநில்லா பேருந்து என்றால் இதுதான் சீரான வேகத்தில் எங்கும் நிற்கவேயில்லை. டாலஸ் நெருங்கியபின்தான் சிக்னலில் வண்டி நின்றது.குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வண்டி டாலசை அடைந்தது.நான் இரண்டாவது நிறுந்தமான ப்ளானோவில் இறங்கினேன்.நான்கு மணிநேர பயணம். அடுத்த நிறுத்தமான ப்ரிஸ்கோ நண்பர் செந்திலின் வீட்டிலிருந்து மிக அருகில்தான். டிக்கெட் முன்பதிவு செய்யும் அதை கவனிக்க தவறிவிட்டோம்.

   


செந்தில் அங்கே காரில் காத்திருந்தார்.இருபது நிமிடத்தில் எட்டரைக்குள் வீடு சென்று சேர்ந்தோம்.வீட்டு வாசலில் ஐஸ் இன்னும் உருகாமல் இருந்தது.




அவரது மகன் சித்தார்த், மகள் சாதனா என்னை காண்பதற்கு மிக ஆவலாய் காத்திருந்தனர். சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையிலிருந்து மட்டன் பிரியாணி தயாராக இருந்தது. அவரது மனைவி சியாமளா நான் தூங்க வேண்டிய அறையை காண்பித்தார். கடந்த ஓராண்டுக்கு முன் அவர்கள் வாங்கிய கனவு வீடு.நான்கு படுக்கையறை,மீடியா அறை,சலவை இயந்தர அறை,கூடம்,அடுமனை,உணவுக்கூடம் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய மாடி வீடு.நல்ல குளிராக இருந்தால் எரிவாயு கணப்புடன் இணைக்கபட்டிருந்தது கூடம். இரு கார்களை நிறுத்த வசதியான கார் நிறுத்தம்.இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்க சென்றோம்.


 சனிக்கிழமை மாலை நண்பர்கள் சந்திக்க வருவதாக சொல்லியிருந்தார்.

மேலும்.....

நாஞ்சில் ஹமீது,

03 feb2026.

sunitashahul@gmail.com

Tuesday, 27 January 2026

நீண்ட காத்திருப்பு 1

  

காலை சூரியன் வெளிவந்தபோது

     கப்பலிலிருந்து சந்தோஷ் அவ்வப்போது அழைத்து செய்திகளை சொல்வார். கப்பல் மெக்ஸிகோ சென்ற மறுநாள்  ஊருக்கு செல்பவர்களுக்கான மெக்ஸிகோ விசா விண்ணப்பித்திருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கான டிக்கெட்டும் கிடைத்ததால் இருபத்தி எட்டாம் தேதி கப்பல் செல்வது உறுதியாகியிருந்தது.

  கடந்த சனிக்கிழமை சந்தோஷ் அழைத்தபோது கப்பல் மீண்டும் ஹூஸ்டனுக்கு ஒன்பதாம் தேதி வருவதாக சொன்னார். அன்று மாலையே என்னுடன் இருந்த கேடட் ருமேனியா அலுவலகம் அவனுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை காண்பித்தான்.

    விடுதியில் இருக்கும் மூவருக்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டாம் என எழுதியிருந்தது.கப்பல் வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஹூஸ்டனுக்கு வரும் என்றார் சந்தோஷ்.

    எனது மெக்ஸிகோவிற்கான டிக்கெட் எப்போது வேண்டுமானலும் ரத்து செய்வார்கள் என்பதை நான் எதிர்பார்த்துகொண்டிருந்தேன்.

   திங்கள்கிழமை அதிகாலை மும்பை அலுவலகம் எனது டிக்கெட்டை ரத்து செய்து ஹூஸ்டனுக்கு கப்பல் வரும் வரை  காத்திருக்குமாறு மின்னஞ்சல் அனுப்பியது. 

இலைகளை உதிர்த்த மரம் 

பச்சையாக செடிகள் 


      காப்டனின் சிறு தவறு ஜனவரி பதினைந்து முதல் பத்தொன்பதாம் தேதி வரை கப்பல் ஹூஸ்டனில் நின்றிருந்தபோது படகு ஒன்று ஏற்பாடு செய்து உணவுபொருட்கள் வாங்கி அதே படகில் பணியாளர் மாற்றம் செய்யதவறியது  நாங்கள் விடுதியறையில் காக்கும்படி ஆகிவிட்டது.

  இன்று  நல்ல வெயில் அடித்தது குளிரும் குறைந்தது.இதை எழுதிகொண்டிருக்கும் போது இரவு ஏழு மணிக்கு ஐந்து டிகிரியாக இருந்தது.



    இன்றும் காலை பத்து மணிக்கு விடுதியிலிருந்து சென்ற வண்டியில் பத்து மணிக்கு சென்று Tea House காபி ஒன்று குடித்துவிட்டு பன்னிரெண்டரை மணிக்கு திரும்பி வந்தோம்.

 கேடட் டடுர் எழுபது டாலரில் சூ (shoe) ஒன்று வாங்கினான்.வேறு நிறுவனத்தை சார்ந்த தமிழரான முதன்மை இஞ்சினியர் துவேஷ் இன்று காலை கப்பலுக்கு புறப்பட்டு சென்றார்.

   இவ்வாறாக ஹூஸ்டனின் காத்திருப்பு நாட்கள் நீண்டுகொண்டே செல்கிறது. ஒன்பதாம் தேதி கப்பல் வருமென எதிர்பார்க்கபடுகிறது. அதை உறுதியாக சொல்ல இயலாது.

   நாஞ்சில் ஹமீது.

மேலும்.