Friday, 9 October 2020

கப்பல் காரன் டைரி தடை படும் பயணங்கள்

 கப்பல் காரன் டைரி,

                    தடைபடும் பயணங்கள்

கப்பல் காரன் பணியில் சேரும் தேதி,துறைமுகம்,விமானத்தில் எங்கு பயணிக்கவேண்டுமென்பது முன்னரே தெரிந்தாலும் .பயண தேதி உறுதியாக யாராலும் சொல்லிவிட முடியாது.இறுதிநேர தடைகள் பலவற்றையும் தாண்டிதான் அவன் பணியில் சேரமுடியும் . 

சன்னி ஜாய் கப்பலுக்கு செல்ல வேண்டி ஏழாம் தேதி காலை சிங்கப்பூருக்கு  விமானம் இருக்கும் என சொல்லியிருந்தார்கள்.நான்காம் தேதி காது வலியால் மருத்துவர் ஹோட்டலுக்கு வந்து என்னை பரிசோதித்து மருந்துகள் தந்துவிட்டு போயிருந்தார்.

   மும்பை அலுவலக அதிகாரி அனிதா தாக்கூர் அன்று இரவு போனில் என்னை அழைத்து காது வலி எப்படி இருக்கிறது .உன்னால் பணியில் சேர இயலுமா என கேட்டார் .மூன்று தினங்கள் மருந்த்துக்கு பின் சரியாகிவிடும் என மருத்துவர் சொல்லியிருக்கிறார் .இப்போது வலி பரவாயில்லை என்றேன்.அலுவலகத்தில் இருக்கும் காப்டன் ஆஷ்லி உடல்நலம் குறித்து தினமும் தகவல் சொல்ல சொல்லியிருந்தார்.

மறுநாள் மாலை இன்னொரு அதிகாரி தர்சனா பகத் போனில் காது வலி குறித்து கேட்டறிந்தார்.உன்னால் கப்பலுக்கு போக முடியும் தானே என கேட்டறிந்தார் .

விடுதியையில் பத்து நாட்கள் சும்மாவே இருந்தோம்.கடைசி இருதினங்கள்,காலை ஒன்பதரை முதல் மாலை ஆறுவரை இணையவழி பயிற்சிகளும்,கலந்துரையாடலும் இருக்கிறது அனைவரும் கலந்துகொள்ள வேண்டியது காட்டாயம் என செய்தி வந்தது .காப்டன் சாம்சன் இருநாட்களும் எங்கள் அனைவரையும் மைக்ரோசாப்ட் இணையவழியாக  சந்தித்து,பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

 ஏழாம் தேதி காலை பத்து மணி விமானத்திற்கு மும்பை சத்ரபதி பன்னாட்டு வானூர்தி நிலையதில்  எட்டு மணிக்கு வந்திறங்கினேன்.பெருகூட்டம் நோய் தொற்று சோதனைக்காக நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.ரொம்ப தாமதாகிவிட்டது விமானம் தவிறிடுமோ என அஞ்சினேன். 

பயணத்திற்கு முந்தைய இருதினங்களும் தேவையே இல்லாமல் பரபப்பாகி போனது.காப்டன் சாம்சனின் பயிற்சிவகுப்புகளுக்கு இடையில் அலுவலக மின்னஞ்சல்களால் எனது மின்னஞ்சல் பெட்டி நிரம்பிக்கொண்டே இருந்தது,பணி ஒப்பந்தம்,விமான  சீட்டு,சிங்கப்பூர் செல்வதற்க்கான சில ஆவணங்கள் என.



செவ்வாய்க்கிழமை கோவிட் பரிசோதனைக்குப்பின் மதிய உணவு இடைவேளையில் .எனது  அலுவலகத்தில் இருந்து ஷிரிஷ் என்னை அழைத்தார். ஷாகுல் உனது பயணத்திற்காக  ஈ மைகிரென்ட் விண்ணப்பித்தபோது டி ஜி ஷிப்பிங் இணையதளத்தில் உனது கடவு சீட்டு எண் தவறாக உள்ளது. அதில் உனது ப்ரோபைலை திறந்துபார் என்றார் .திறந்தேன் கடவு சீட்டின் கடைசி எண் ஏழுக்கு பதில் ஒன்று என இருந்தது .திகைத்துவிட்டேன் ஈ மைகிரென்ட் இல்லாமல் எந்த ஒரு கப்பல்காரனையும் குடியுரிமை அதிகாரிகள் நாட்டைவிட்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

  கடந்த 2019ஆம்ஆண்டு  ஆகஸ்ட் மாதம் கப்பலிலிருந்து இறங்கியபின் பதினான்கு மாதங்களாக வருமானமே இல்லை .தொழில் தொடங்கி மூடியதில் சில லட்சங்கள் நஷ்டம்.மூத்த சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் செய்த பொருளுதவியால் நாட்கள் நகர்ந்தது .இப்போது நான் பணிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.ஜூன் மாதம் ஏழாம் தேதி  எனது கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனைப்பினேன் பணிக்கு வர தயாராக இருக்கிறேன் என. எனது அமெரிக்க விசா அதே மாதம் பதினான்காம் தேதி காலவதி ஆகியிருந்தது.

  எனது மானேஜர் உன்னிடம் அமெரிக்க விசா இல்லை,அமெரிக்க தூதரகம் ,துணை தூதரங்கள் எதுவும் செயல்படவில்லை.ஐரோப்பா அல்லது ஆசியா வரும் கப்பல்களில் உனக்கான வாய்ப்பு இருக்குமெனில் முயற்சிக்கிறேன்.எனக்கு கொஞ்சம் நேரம் தா என்றார் .

  இந்த கப்பலுக்கான அழைப்புவந்தபோது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கப்பல் வருகிறது .அந்த நாட்டு விசா பெறவேண்டும் கடவு சீட்டு மற்றும் ஆவணங்கள் தில்லிக்கு அனுப்ப சொன்னார் .

அனுப்பிய இரு தினங்களுக்கு பின் அனிதாதாக்கூர் என்னை அழைத்து உனது கடவுசீட்டு கிழிந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது .உனக்கு விசா கிடைப்பது சற்று சிரமம்தான் என்றார். நான் கடவு சீட்டை தில்லிக்கு அனுப்பும்போது நன்றாகத்தான் இருந்தது .

  இரு தினங்களுக்கு பின் நான் தில்லி முகவர் ஆனந்தை  தொடர்பு கொண்டு கேட்டேன் .உங்கள் கடவுசீட்டு பிலிப்பைன்ஸ் தூதரத்திற்கு போயிருக்கிறது பார்ப்போம் என்ன ஆகிறது என விசா கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்றார்.விசா கிடைகவில்லை எனில் இந்த வாய்ப்பு நழுவி போகும்.புதிய கடவுசீட்டு தட்கல் முறையில் இருதினங்களில் பெற்றுவிடலாம் என்ற தகவலை உறுதிசெய்து கொண்டேன்.

 காதுவலியை கடந்தபின் இப்போது இந்த ஈ மைக்ரென்ட் பிரச்னை.ஈ மைக்ரேன்ட் என்பது கப்பல் பணியாளர்கள் பணிக்கு செல்வதற்குமுன் இந்திய அரசின் கப்பல் துறையில் அனுமதி பெறுவது .கப்பல் காரன் பயணிக்கும் முன் குடியுரிமை அதிகாரி அதை உறுதி செய்த பின்னரே நாட்டை விட்டு செல்ல அனுமதிப்பார் .முன்பு திருட்டு தனமாக நிறைய போலிகள் கப்பல் காரர்கள் என சென்று கொண்டிருந்தனர் .இந்த ஈ மைக்ரென்ட் முறையால் போலிகள் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு விட்டனர் .இதனால் முறையாக பயிற்சி முடித்து பணியில்லாமல் இருந்த திறமையான பலர் இப்போது எளிதாக பணிக்கு செல்ல முடிகிறது .

 மீண்டும் ஷிரீஷ் என்னை அழைத்து உனது பாஸ்போர்ட் எண்ணை மாற்றுவதற்கு விண்ணப்பித்து விட்டு ,அந்த அலுவலக மின்னஞ்சல் முகவரியை தந்தார் .நாளை காலை எனக்கு விமானம் கடவு சீட்டின் எண்ணை திருத்தம் செய்து தாருங்கள் என மின்னஞ்சல் அனுப்பினேன்.

மாலை ஆறு மணிவரை தகவல் இல்லை .என்னுடன் பயணிக்கும் சக பணியாளர்கள் இருபது  எனக்கு மட்டும் வரவில்லை .பத்து மணிக்கு மேல் அலுவலக பெண் ஷில்பா என்னை அழைத்து ஈ மைகிரென்ட் அனுப்பியுள்ளேன் .இதை எடுத்துகொள் இணையத்தில் நீ கடவு சீட்டு எண் திருத்தம்  வேண்டி அனுப்பிய இணைய பக்கத்தை அச்சு பிரதி எடுத்துகொள் ஈ மைக்ரேண்டில் எண் தவறாக இருக்கிறது என கேட்டால் அதைக்காட்டு என்றார் .

நண்பர் அசோக் கை அழைத்தேன் . நான் பணிக்கு செல்வது குடியுரிமை அதிகாரியின் கையில் இருக்கிறது . அவர் நினைத்தால் என்னை அனுமதிக்கலாம் இல்லை தடுக்கலாம். அனுபவம் உள்ள மூத்த அதிகாரி என் பயணத்தை தடுக்கமாட்டார்.



நான் ஒன்றும் செய்வதற்கில்லை .

நண்பர் சாம் இரவில் எனது பிரார்த்தனையில் வைக்கிறேன் . பிரைஸ் த லார்ட் என்றார்.


இரவில் உடன் பணிக்கு வரும் லீவிஸ்லி,கின்லேக்கர்,ஹெல்டன் ஆகியோருக்கும் சேர்த்து ஆவணங்கள் பதிவிறக்கம் செய்து. விடுதி வரவேற்பறையில் அச்சு பிரதி எடுத்து பனிரெண்டு மணிக்குமேல் எனது பயண இருக்கையை (வெப் செக் இன் ) எமிரேட்ஸ் இணையதளத்தில் சென்று பதிவு செய்தேன்.விடுதி வரவேற்பறையில் காலை ஆறு மணிக்கு எனக்கு விமான  நிலையம் செல்ல வாகனம் வேண்டும்,நான் சற்று முன்னதாக செல்லவேண்டியுள்ளது கீழே வந்து விடுங்கள் என்றார்.

நள்ளிரவு முகசவரம் செய்து ஆவணங்களை 

சரிபார்த்து பயனபைகளை அடுக்கிவிட்டு துயில்கையில் அதிகாலை மணி இரண்டு.

4.40 தானாக விழித்தேன். 

 மீத ஒரு பயண ஆவணமும் மின்னஞ்சலில் வந்திருந்தது .அதை வரவேற்பறைக்கு அனுப்பி அச்சு பிரதி எடுத்து வைக்க சொல்லிவிட்டு நண்பர் பழனியுடன் 10 நிமிடம் உரையாடினேன் . 25 நிமிடம் குளியல்.எயர் பிளக் கொண்டு காதை அடைத்து வைத்திருந்தேன்.

அதிகாலை தொழுகை, பயண தொழுகையும் முடித்து விட்டு . சுனிதாவிடம் பேசிவிட்டு  அறையை விட்டு வெளிய றும் போது மணி 7. ஹெல்டனும் , சரத்தும் நாங்கள் கீழே இருக்கிறோம் பாதி பேர் சென்று விட்டனர் என அழைத்த்துக்கொண்டே இருந்தனர்.வரவேற்பறையில் எல்லோரும் ஒன்றாகக் வந்து விட்டதால் தாமதமாகிறது என்றார்கள்.




நான் கடைசியாக

அறை சாவியை கொடுத்துவிட்டு வெளியேறும் போது காலை உணவு வேண்டுமென்றால் உணவு கூடம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என்றார் ஓம் கார். அச்சுபிரதி மற்றும் துணி துவைத்ததற்கு இரண்டாயிரம் ருபாய் தம்பி ஹெல்டன் கட்டினார்.



உணவு விடுதியில் பதருதீன் 

“அஸ்ஸலாமு அலைக்கும் ஸார் என்ன வேண்டும்” 

“முசலி சீரியல்ஸ்,அவிச்ச முட்டை இருக்கா?

“அண்டா தயார் ஹே, வேறேதும் வேண்டுமா?

“சீக்கரம் தா,விமான நிலையம் போக வேண்டும்” என்றேன்

“இது தான் உணவுக்கூடம் தனிமைபடுத்தல் இல்லையெனில் இங்கு வந்துதான் நீங்கள் உணவருந்த வேண்டும்” என்றான்.

 சுற்றிலும் செயற்கையான பச்சை புற்கள் விரிக்கப்பட்டு நடுவில் கண்ணாடியானால் ஆனா உணவுக்கூடம் ஒரு கோல்ப் மைதானத்தில் அமர்ந்திருக்கும் உணர்வு ,இருக்கைகளும்,கூரையின் அடிப்பகுதியும் அலங்கரிக்கட்டு,வண்ண விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்த்து.

காகித பையில் உணவை தந்தான்.கடந்த பனிரெண்டு நாட்கள் தினமும் மூன்று வேளையும் ஆறாவது மாடியில் இருக்கும் அறைக்கு உணவு கொண்டு தந்தவர்கள் இந்த பதருதீன்,சாகர்,மங்கேஷ் மற்றும் சுசாந்த அவர்களுக்கு நன்றி கூறுமாறு சொன்னேன்.

பதருதீன் புன்னைகையுடன் ,பத்திரமாக போய் வாருங்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வலைக்கும் ஸலாம்”

“அலைக்கும் ஸலாம்” என பதில் கூறி விடைபெற்றேன்.

  ஐந்து நிமிட பயணதூரம்தான், விமான நிலையம்.அதற்குள் இருபது ஆண்டுகளுக்கு முன் இதே மும்பை நகரில் பசியோடு கைகளில் பைலுடன்,கப்பல் கம்பனிகளில் வேலை தேடி அலைந்த நினைவுகளில் மூழ்கி வெளியேறினேன் .

பயண பைகளை ஓட்டுனர் குந்தன் எடுத்து வெளியே வைத்தார்.பர்சிலிருந்த கடைசி இந்திய பணம் நூறு ரூபாயை குந்தனிடம் கொடுத்துவிட்டு,பார்த்தபோது தான் அங்கிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சியாக இருந்தது.மிக தாமதாகிவிட்டேன் என .பின்பு தான் கவனித்தேன் முன்பே வந்த பலரும் உள்ளே செல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை.

நீண்டவரிசையில்சென்றுநின்றோம் ஹெல்டன்,சரத்,சஞ்சீவ்,செல்வன்,தண்டேல் என தண்டேலிடம்,அடையாள அட்டை அணிந்த ஒரு “பெண் எந்த விமானம்” என கேட்டாள்.

“எமிரேட்ஸ்” 

“இங்கே யார் நிற்க சொன்னது  எட்டாம் நம்பர் கேட்டில் செல்” என்றாள்.

அது காலியாக இருந்தது.எங்களை உள்ளே விட மறுத்தார்  மத்திய பாதுக்காப்பு துறை காவலர்.ஏழாம் எண் வாயிலுக்கு போங்கள் என்றார்.அப்போது எங்கள் குழுவில் உள்ள த்ரிலோச்சன் சிங் எட்டாம் எண் வாயிலில் உள் நுழைவதை கண்டோம்

சரத் அங்கு தான் அரை மணிநேரம் நின்றுகொண்டு இருந்தோம் இங்கே வரசொன்னர்கள் என்றதும்.பணியாளர் ஒருவரை  அங்கு அனுப்பி விசாரித்துவிட்டு உள்ளே செல்ல அனுமதித்தார் .

உள்ளே சென்றுவிட்டேன் பயண இருக்கை அட்டையை வாங்கிவிட்டு சீக்கிரமாக குடியிரிமை சோதனைக்கு சென்றால் குடியுரிமை அதிகாரியிடம் விளக்கம் கொடுக்க முடியும்.

EK 505 இன்கவுண்டருக்கு முன் எங்கள் குழுவில் உள்ளவர்கள் மற்றும் வேறு பயணிகள் என அங்கும் ஒரு திரள் நின்றுகொண்டிருந்தது.வெப் செக் இன் செய்தவர்களுக்கான கவுண்டரில் எனது  பயண பைகளை கொடுத்துவிட்டு  எனக்கான இருக்கை அட்டையை பெற்றேன் .சிங்கப்பூரில் உங்கள் பைகள் கிடைக்கும் என்றார் .

விரைந்து சென்று குடியுரிமை அதிகாரியின் முன் நின்றேன் .கூட்டமில்லை 

“கப்பலுக்கு செல்கிறாயா”

“ஆமா” 

“எங்கே செல்கிறாய்”

“சிங்கப்பூர்”

“ஓகே டு போர்ட்”

கொடுத்தேன் .

“ஈ மைகிரென்ட்” கேட்டார் .

கொடுத்தேன்.

கணினியில் ஆவணங்கள் சரிபார்த்துவிட்டு கேமராவை பார் என்றார்.

பார்த்தேன்,கடவு சீட்டில் முத்திரை பதிக்கவில்லை,எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

வெளியே வந்து தன்னுடன் வருமாறு அழைத்தார்.குடியுரிமை அதிகாரிகள் நிறையபேர் இருந்த அறைக்கு வெளியே என்னை காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று வேறு ஒருவரிடம் எனது கடவுசீட்டை காண்பித்து இருவருமாக கணினியில் எதையோ தேடினார்கள் .

பின்னர் வேறோரு மூத்த அதிகாரியிடம் விவாதித்து ஆலோசித்தபின் மீண்டும் கணினியில் எதையோ தேடினார்கள் அந்த அறைக்குள் நடப்பது  அனைத்தையும் வெளியே  நின்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.



வெளியே வந்த அந்த அதிகாரி என்னிடம் ஈ மைகிரென்ட் அச்சு பிரதியை காட்டி “இதில் உள்ள கடவு சீட்டின் எண் வேறுஒருவருக்கு  வழங்கப்பட்டுள்ளது,இதுதான் உனது கடவு சீட்டு,உனக்கு ஈ மைகிரென்ட் விண்ணப்பித்தவர் தவறான எண்ணை பதிந்துவிட்டார்,நீ பயணம் செய்யும் முன் இவற்றை கவனமாக பார்க்கவேண்டும்”என்றார்.

என்ன நடந்தது எனும் விபரத்தை சொன்னேன்.மீண்டும் அழைத்துசென்று கடவுசீட்டில் முத்திரையை பதித்தார் .புறப்பாடு என.பின்னர் பாதுகாப்பு சோதனையை முடித்து விட்டு திரையை பார்த்தேன். 

EK 505 DUBAI GATE B 66,

BOARDING STARTED 0940 என இருந்தது.



மணி ஒன்பது ஆகியிருந்தது .அங்கிருந்த செடியின் அருகில் அமர்ந்து காலையுணவை சாப்பிட்டேன்.காப்டன்,சரத்,சஞ்சீவ்,செல்வன், ஹெல்டன் என்னருகில் வந்தனர்.விமானம் ஏறும் வாயில் அருகில் செல்லலாம் என்றனர்.



“ஒரு எண்ணெய் ஆர்டர் இருக்கு அனுப்பிட்டு வாறேன்,அங்க வந்தா பேசிட்டே இருப்பேன்,அனுப்பிட்டு வருகிறேன்”என்றேன்.

இதை எழுதி முடிக்கையில் .

துபாய் – சிங்கப்பூர் விமானத்தில் இருந்தேன். விமானி நாம் மலேசியாவின் மேலே பறந்து கொண்டிருக்கிறோம்.இன்னும் சிறிது நேரத்தில் சிங்கை சாங்கி சென்றுசேரும் என கேட்டதும் .மடிக்கணினியை .மூடினேன்.

ஷாகுல் ஹமீது ,

08-oct-2020.

sunitashahul@gmail.com









Wednesday, 7 October 2020

கப்பல் காரன் டைரி ஆன் லைன் வகுப்புகள்

                         ஆன் லைன் வகுப்புகள்

             கோவிட் -19 வந்ததுக்கு பிறகு நிறைய ஆன் லைன் வகுப்புகள் ,ஜூம் மீட்டிங் எல்லாம் .வீட்டில் பிள்ளைகளுக்கு பள்ளி பாடங்கள் ஜூம் ல,ஸாலிம் இப்போது பத்தாம் வகுப்பு .திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மூணு மணிக்கூர் வகுப்புகள்  நடக்கும் .டியூஷனும் உண்டு,அதுக்கு அவன் பரிட்சையும் எழுதுவான் .

   பிள்ளைகளுக்கு படிப்பு இப்படி ஆயிபோச்சேன்னு  இருந்தது .எனது கப்பல் நிறுவனம் என்னை பணிக்கு அழைப்பது தள்ளிபோய்க்கொண்டே இருந்தது .கடந்த ஜூன் மாதம் எனது அமெரிக்கா விசா காலாவதியாகிவிட்டது.தூதரகம் ,துணை தூதரங்கள் எல்லாம் செயல்பாடததால் .விசா வேண்டி விண்ணப்பிக்க இயலவில்லை .

 எனது நிறுவனம் தனி விமானங்களில் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில்தான் கப்பல் பணியாளர்களை பணி மாற்றம் செய்து வருகிறது .என்னிடம் விசா இல்லாததால் பணியில் சேருவது தாமதமாகிக்கொண்டே போனது .எனது மேலாளர்  அனிதா தாக்கூரை இருமுறை அழைத்தேன். “ஷாகுல் கொஞ்சம் பொறு என்னால் உனக்கான கப்பலை தேர்வு செய்யமுடியவில்லை ,உன்னிடம் அமரிக்க விசா இல்லாததே பிரச்னை ,கப்பல் ஐரோப்பா அல்லது ஆசியா வருகிறதா என பார்க்கிறேன்” என்றார்.

 கடந்த மாதம் ஆறாம் தேதி மாலை அனிதா தாக்கூர் என்னை அழைத்தார். மொபைலில் அனிதாதாக்கூர் என வந்தபோது எண்ணெய் ஆலையில் மாயப்பொன் தயாரிப்பில் இருந்தேன் .என்னுடன் பணிபுரியும் கலா அக்காவிடம் “கம்பேனில இருந்து போனு கப்பலுக்கு  கூப்பிடு ஆ போல”.  என சொல்லி கொண்டே ,

“மாலை வணக்கம்,நான் ஷாகுல்,நீங்கள் நலமா”

“ஆம் ஷாகுல், நீ  நலமா”

“ஷாகுல்,சன்னி ஜாய் எனும் கப்பல் நமது நிறுவனத்திற்கு வருகிறது ,உத்தேசமாக அக்டோபர் ஐந்தாம் தேதி பிலிப்பைன்ஸ்லிருந்து பணியில் சேர வேண்டியிருக்கும்,உன்னிடம் அமெரிக்க விசா இல்லை ,பிரச்சனை இல்லை ,உன்னால் அமெரிக்காவில் வெளியே செல்ல முடியாது .பிலிப்பைன்ஸ் விசா வேண்டிவரும்,உனது (DCE) DANGORES CARGO ENDOSMENT அடுத்த மே மாதம் காலாவதியாகிறது ,ஆன் லைன் இல் விண்ணபித்து பெற்றுக்கொள்” என்றார் .

  இனையம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த தம்பி ஹெல்டன் ஐ அழைத்தேன் . “எனக்கும் போன்,வந்தது அதே கப்பல் தான் ,எனக்கும் DCE அப்ளே பண்ணனும் ,நாளைக்கு வீட்டுக்கு வாறேன்” என்றான்.

  மதியம் பனிரெண்டு மணிக்கு இருவரும் கணினியின் முன் அமர்ந்தோம்,மத்திய அரசின் (DG SHIPPING )அந்த தளம் திறக்கவே இல்லை,வேகமும் மிக குறைவு ,எனது முந்தைய(DCE) சான்றிதழ் கொச்சி MMD (MARINE MERCANTILE DEPARTMENT) யில் பெற்றது,தம்பி ஹெல்டன் சென்னையில் வாங்கியிருந்தான் .நான் கொச்சி அலுவலகத்தை தேர்வு செய்தேன். அவன் சென்னையை.

ரூ மூவாயிரம் செலுத்தி,விண்ணபங்கள் பூர்த்தி செய்து,வேண்டிய ஆவணங்கள் புகைப்படங்கள் எல்லாம் வலையேற்றம் செய்தோம் . ஹெல்டனுக்கு பணம் செலுத்தியதற்கான தகவல் அதில் உறுதியாகவில்லை .மீண்டும் மூவாயிரம் செலுத்தினான் .

 எனக்கு செக்குல புண்ணாக்கு கிடந்ததால்  நான் ஆறு மணிக்கு மில்லுக்கு போய் விட்டேன் .இரவு ஏழரைக்கு மேல் தம்பி ஹெல்டன் வீட்டுக்கு போனான் .அரசாங்க இணையதளங்கள் மிக மோசமாக இருக்கிறது .

 நான் மறுநாள் எட்டாம் தேதி விண்ணப்பித்தேன் .ஒன்பதாம் தேதி ஒரு QUERI  வந்தது ,உங்கள் புகைப்படம் சரியில்லை மாற்றுங்கள் என .தளத்தில் போய் புகைப்படம் மாற்றினேன் .



 பதினொன்றாம் தேதி மீண்டும் ஒரு QUERI உனது FIRE FIGHTING CERTIFICATE எங்களது தளத்தில் பதிவு செய்யவில்லை என .நாங்கள் ஒரு COURSE படித்து சான்றிதழ் பெற்ற பின் அந்த கல்வி நிறுவனம் அரசின் தளத்தில் சென்று எனது பெயரில் பதிவு செய்ய வேண்டும்.அதை நான் செய்ய முடியாது .நான் படித்து சான்றிதழ் பெற்ற

 பாண்டிச்சேரி மாரிடைம் அகாடாமியை அழைத்தேன் .2018 ஜனவரியில் உங்கள் கல்வி நிலையத்தில் நான் பயின்று பெற்ற சான்றிதழை பதிவு செய்ய வேண்டினேன். “சார் சான்றிதழை அனுப்புங்கள் பார்த்து சொல்கிறோம்” இணையத்தில் அனுப்பினேன் என்றார்கள் .

 சில நாட்கள் பதிலேதும் இல்லை .மீண்டும் அழைத்தேன் “சார் பேசிக்கொண்டிருக்கிறோம் விரைவில் பதில் சொல்கிறேன்’ என்றார்கள்.பதினேழாம் தேதி என்னை அழைத்து “சார் உங்கள் சான்றிதழை இனி பதிவு செய்ய முடியாது,நீங்கள் மீண்டும் ஒரு முறை படித்து,சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள் ,இணையவழி வகுப்பு ,அதுலேயே பரீட்சை நீங்கள் பாஸ் ஆனால் சான்றிதழும் ,தானாகவே அரசின் தளத்தில் பதிவாகிவிடும் .நீங்கள் DCE பெற்றுகொள்ளலாம்” என்றார்கள் .

  


அப்போ நான் படித்த இரு சான்றிதழ்கள் மற்றும் நான் DCE வேண்டி விண்ணபித்த மூவாயிரம் உங்களால் எனக்கு வீணாகிவிட்டதே,இது உங்கள் தவறு” என சொன்னேன் . “சார் ஒன்றும் செய்ய இயலாது ,இரண்டு படிப்புகளுக்கு ஏழாயிரம் ரூபாய் ,நீங்கள் மூவாயிரம் கட்டினால் ,உங்களுக்கு இப்போதே நான் வகுப்புகளுக்கு பதிவு செய்கிறேன்,உங்கள் விபரங்களை தாருங்கள்”என்றான் .

   வேறு வழியே இல்லாமல் ஒத்துக்கொண்டேன் .இணைய வழி வகுப்புகளுக்கு அரசின் இணைய தளத்தில் நான் படிப்பதற்கான சுட்டிகள்,ரகசிய எண்கள் எனது மின்னஞ்சலில் வந்தது .ஒன்பது மணி நேரம் படிக்க வேண்டும் ,பின்னர் அதிலேயே பரீட்சை. அன்று இரவு அதை பார்க்கவில்லை.மறுநாள்  மருத்துவ பரிசோதனைக்கு தூத்துக்குடியில் இருக்கும் பாலாஜி மருத்துவ மையத்திற்கு செல்ல வேண்டி எனது நிறுவனம் பணித்தது .பதினெட்டாம் தேதி அதிகாலை தம்பி ஹெல்டன் வீட்டிற்கு வந்தார்.ஏழுமணிக்கு முன்பாகவே புறப்பட்டோம்.காரின் முன் இருக்கையில் அமர்ந்து “தம்பி எனக்கு இ லேனிங் இருக்கு ஒன்பது மணிக்கூர்,தூத்துக்குடி போறதுக்கு முன்ன நான் மூணு மணிக்கூர் படிக்கேன்” என சொல்லிவிட்டு மத்திய அரசின் அந்த இணைய தளத்தில் போய் எனது பாடத்தை திறந்தேன் .அது உன்னை புகைப்படம் எடுத்து சரி பார்த்தபின் தான் அனுமதிப்பேன் என்றது .

புகைப்படம் எடுக்க எனது மடிக்கணினியின் கேமரா உயிர் பெறவில்லை,மொபைலில் பார்த்தேன் .புகைப்படமெடுத்து என்னை உள் செல்ல அனுமதித்தது.என்னால் அந்த சிறிய திரையில் என்னால் படிக்க இயலவில்லை.

சனிக்கிழமை காலை மீண்டும் முயற்சித்தேன் முடியவில்லை .பாண்டிசேரி கல்வி நிலையத்தை அழைத்தேன் பதில் இல்லை .ஷாலிமின் கணினியில் முயன்றேன் முடியவில்லை .அந்த நாள் முழுவதும் வீணாகிவிட்டது.இரவு பத்து மணிக்கு சென்னையில் இருக்கும் தாம்சன் அண்ணனை அழைத்தேன் . “காடேட் ஒரு பையன் இருக்கான் ,அவன் இந்த ஆன் லைன் கோர்ஸ் பண்ணி முடிக்க முடியாம இருக்கான் ,லேசா அசைஞ்சிட்டான்,வெளிச்சம் இல்லைன்னு சிஸ்டம் பெயிலாக்கி விட்டது.உங்களுக்கு நாளைக்கி கேட்டு சொல்கிறேன்” என்றார்.

 மறுநாள் இரவு அழைத்து “கூகிளில் தேடுங்கள்” என்றார். DG SHIPPING  வலைத்தளம் குரோமில் வேலை செய்யாது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல் போங்கள் என சொல்லும். கூகிளில் தேடிய போது உங்கள் கேமரா எக்ஸ்ப்ளோரரில் உதவி செய்யாது குரோமில் போங்கள் என்றது .புகைப்படம் எடுத்து சரிபார்த்தபின் நீதான் என ஒத்துக்கொண்டு என்னை அனுமதித்தது .இரவு பதினோரு மணி வரை பதினைந்து சதவீதம் படித்தேன் .

மறுநாள் அதிகாலை தொழுகைக்கு பின் அமர்ந்தேன் .உணவுக்கு,தொழுகை,தொலைபேசி அழைப்புகள்,மாயப்பொன் (எண்ணை)ஆர்டர்கள் என இடையிடையே நிறுத்தி நாற்பது,ஐமபத்தி ஏழு ,எண்பத்திமூன்று சதவீதம் என இறுதியாக தொன்னூற்றி ஏழு சதம் வந்தபோது படிப்பு முடிந்தது .ஒவ்வொரு முறையும் வெளியில் சென்றுவிட்டு உள் நுழையும்போது புகைப்படம் எடுத்த பின் தான் அனுமதித்தது .

அதன்பிறகு (assement)பரீட்சை முப்பதுக்கு பதினைந்து மார்க் எடுத்து அதை அனுப்பி கொடுத்தால் பாண்டிசேரி கல்வி நிறுவனம் எனக்கான ஜூம் வகுப்புக்கு ,மத்திய அரசின் சீபெயரர் இணையதளத்தில் பதிவு செய்து பதிவு எண் தருவார்கள். பரிட்சை துவங்கியதும் கடிகாரம் ஓட ஆரம்பிக்கும் முப்பது நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும் . நான் நான்கு முறை எழுதியும் பதினான்கு ,பதிமூன்று மதிப்பெண்ணை தாண்ட வில்லை .பாடத்தில் இருப்பதற்கும் கேள்விகளுக்கும் சம்பந்தமேயில்லை .இரவுபதினொரு மணிக்கு தூங்க சென்றேன் .

 மறுநாள் அதிகாலை தொழுகைக்குப்பின் பரீட்சை எழுத அமர்ந்தேன் மூன்று முறை எழுதியும் மதிப்பெண் பதினான்கை தாண்டவில்லை .பத்து மணிக்கு இந்த ஆன் வகுப்பு பரீட்சைகளில் அனுபவம் உள்ள செல்வனை அழைத்தேன் . “அண்ணே ஒவ்வொரு சாப்ட்டர் முடிஞ்சதும் குவிஸ் இருக்கு ,அத க்ளிக் பண்ணுங்க அதுதான் வரும் அஸஸ்மென்டுக்கு” என்றான் .அதற்குள் கல்வி நிறுவனம்  குறுஞ்செய்தி அனுப்பி திங்கள்கிழமை ஜூம் வகுப்பு இருக்கிறது அஸஸ்மென்ட் முடித்து விட்டீர்களா?என.முடித்துவிட்டு சொல்கிறேன் என்றேன் .

 பின்பு அமர்ந்து குவிஸ் ஐ படிக்க தொடங்கினேன்.பணிக்கு செல்லும் முன் மும்பையில் பத்து நாட்கள் தனிமை படுத்தலுக்கானஎனது கப்பல் நிறுவன  அழைப்பு வந்தது  அதற்காக தயாராகி கொண்டிருந்ததால்.கணினியை திறந்து அமர நேரமில்லை .கொச்சி mmd மின்னஞ்சல் அனுப்பியது உங்களது விண்ணப்பம் உங்களிடமிருந்து உரிய பதில் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது என .

  மும்பைக்கு வந்த மறுநாள் 26 ஆம் தேதி குவிசில் உள்ள எல்லா கேள்வி பதிலையும் அமர்ந்து படித்துவிட்டு அஸஸ்மென்ட் எழுதி பாசாகிவிட்டு பாண்டிசேரி கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் .ரிப்போர்டை அனுப்புங்கள் செவ்வாய்கிழமை வகுப்பு இருக்கிறது .பணம் கட்டிவிட்டு ரசீது அனுப்புங்கள் என்றனர்.

நான் மூவாயிரம் கட்ட முடியாது என்றேன்.இது முழுக்க முழுக்க உங்கள் தவறு என்றேன் .மகேஷ் போனை துண்டித்து விட்டான்.வேறு எண்ணில் அழைத்தேன் அதில் எப்போதுமே அழைப்பை எடுக்கமாட்டார்கள் .ஒரு பெண் எடுத்தாள்.பறக்கை வில்லுப்பாட்டு போல முதலிலிருந்து எல்லாவற்றையும் சொன்னேன்.நான் முன்பு பேசிய மகேசும் அங்கே இருந்ததால் ஆயிரம் தருவதாக சொல்லி அந்த பெண் ஒத்துக்கொண்டாள்.

  மீண்டும் திங்கள்கிழமை கல்வி நிறுவனத்திலிருந்து வேறு ஒருவர் அழைத்தார் .செய்வாய்கிழமை  ஜூம் வகுப்பு ,உங்கள் பெயர் பதிவு செய்ய வேண்டுமென்றால் பணம் கட்டிய ரசீது ஸ்க்ரீன் ஷாட் அனுப்புகள் என்றான்.

இரவுக்குள் பணம் அனுப்பிவிட்டு செய்தி அனுப்பினேன்.வகுப்புகளுக்கான கால அட்டவணை ,புத்தகம் மின்னஞ்சலில் வந்தது.எனது மடி கணினி மும்பை வந்தது முதல் தானாகவே அணைந்து மீண்டும் உயிர்பெறும் ..

அன்று மாலை கொச்சி MMD மின்னஞ்சல் வந்தது QUERI.உங்கள் DCE விண்ணப்பம் சார்பாக எங்களை அழைத்து சொல்லுங்கள் என .யாருக்கு அழைப்பது என்றோ,தொலைபேசி,கைபேசி எண் எதுவும் இல்லை.அது பதிலளிக்க முடியாத வகை மின்னஞ்சல்.எனது போனில் கொச்சி MMD எண் இருந்தது அழைத்தேன்.வேறு எண் தந்தார்கள் அழைத்தபோது பதிலளிக்கவில்லை .

புதன்கிழமை குளித்து உடை மாற்றி போனை சார்ஜில் போட்டு,ஜூம் வகுப்புக்கு தயாராக இருந்தேன் ஒன்பதுமணிக்கு ஆசிரியர் மோகன் கந்தசாமி வந்துவிட்டார் .அவரது பின்பக்க சுவரில் நங்கூரம் வடிவில் கடிகாரம் இருந்தது .மூன்று பேர் இருந்தோம் .என்னை பெயர் சொல்லி அழைத்தார் ஐந்து நிமிடங்களில் வகுப்பு துவங்குவோம் இன்னும் சிலர் வரவேண்டியுள்ளது என்றார் .


  ஆ மோகன் கந்தசாமி

LPG வகை கப்பல்களில் சீப் இஞ்சினியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் என அறிமுகபடுத்திகொண்டு வகுப்பை துவங்கினார் .பேசிக்கொண்டே இருந்தார்.ஒன்பது நாற்பத்தைந்து க்கு டீ பிரேக் என போய்விட்டார் .மீண்டும் பத்து மணிக்கு தீயை அணைக்கும் முறைகள் பற்றிய வீடியோக்களை போட்டார் .பத்தே முக்கால் வரை மீண்டும் ப்ரேக்.

பதினொன்னு மணிமுதல் அடுத்த வகுப்பு தீயின் வகைகள் பற்றிய வகுப்பும் வீடியோவும்.ஒரு கொரியன் கப்பலில் தீயை அணைக்கும் வீடியோ  நிஜமாக எடுத்தது போலிருந்தது .கடைசி பிரேக் டைம் முடிந்து பனிரெண்டு மணி நாற்பதியைந்தாவது நிமிடத்தில் வகுப்பு முடிந்தது.

அடுத்து எக்சிட் எக்ஸ்சாம் நாற்பது மணிநேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.சான்றிதழ் தானாகவே இணையதளத்தில் பதிவாகிவிடும் ,சான்றிதழை தரவிறக்கம் செய்து அச்சு பிரதி எடுத்து கொள்ள வேண்டும்..

வகுப்பு முடிந்த பின் ஒருவர் பாசாகி விட்டேன் எப்போது சான்றிதழ் கிடைக்கும் என பாண்டிசேரி கல்வி நிறுவனத்தின் வாட்ஸப் குருப்பில் கேட்டார் .இருபத்தி நான்கு மணிநேரதிற்கு பின் கிடைக்கும் என .பதில் சொன்னார்கள். என்னிடம் மறுநாள் ஒன்றரைக்கு மேல் பரீட்சை எழுத சொன்னார்கள் .

 செல்வன் என்னிடம் பரீட்சை எழுதும் முறைகளை சொன்னார் .

“ஷாகுல் அண்ணே ,லேசா அசஞ்சா போச்சு ,வெளிச்சம் நல்லா இருக்கணும்,போனை சைலன்டுல போடுங்க சௌண்டு கேக்க பிடாது,லேசா திரும்பீட்டிய முடிஞ்சது,பெயில் ஆயிருவீய .பொறவு முன்னூறு ரூவா கெட்டிதான் பரீட்சை எக்சிட் எக்ஸ்சாம் எழுத முடியும்”

நான் “ஒருக்க குவிஸ் ல போய் பாத்துகிடலாம்,பரீட்சை துவங்கும் முன்”  என சொன்னேன் .

 செல்வன்  “ நீங்க பாசாவே மாட்டிய என்றான்”. ”பார்க்கிறேன்” என்று சொன்னதும் .அவரது மடி கணினியில் அந்த வலை தளத்ததில் சென்று எக்ஸ்சிட் எக்ஸ்சாம் பக்கத்தை திறந்து நிபந்தனைகளை மேலும் ஒருமுறை சொன்னார் .

எனது புகைப்படத்தை தானே எடுத்தது,சரிபார்த்தபின்.முப்பது நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும்,உங்களை ஐந்து முறை உங்களை படமெடுப்பேன் என்றது.செல்வன் “அசைய பிடாது கம்புட்டர மட்டும் பார்த்து அன்செர் கிளிக் பண்ணுங்க”என்றான் செல்வன்.

பதினேழாவது நிமிடத்தில் முடிந்தது .முடிவை பதிவு செய்து உடனே அறிவித்தது பதினேழு மதிப்பெண்  என பாசகிவிட்டேன் . .

மின்னஞ்சல் வந்தது வாழ்த்துக்கள் உங்கள் சான்றிதழ் திங்கள்கிழமை கிடைக்கும் என .

 

                                                          புதிய சான்றிதழ் 

அன் று மீண்டும் கொச்சி MMD அழைத்தேன் .நீங்கள் படித்த கல்வி நிறுவனத்திடம் சொல்லி எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொல்லுங்கள் உங்களுக்கு DCE ஆவணம் தந்து விடுகிறோம் என்றார்கள் .

அது அக்டோபர் ஒன்றாம் தேதி வியாழக்கிழமை பாண்டிசேரி கல்வி நிறுவனத்தை அழைத்து மின்னஞ்சல் அனுப்ப சொன்னேன். “ஸார் திங்கள்கிழமை தான் முடியும்” என்றார்கள் . மன்றாடினேன் நாலு வரியில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் எனக்கான ஆவணம் கிடைக்கும் என .மூன்று நாட்கள் விடுமுறை என்றார்கள்.

  DG SHIPPING இணையதளத்தில் நான் ஒன்றாம் தேதி  நான் இணையவழி பரீட்சையில் பாசாகிய சான்றிதழ் எண் பாண்டிச்சேரி கல்வி நிறுவனத்தால் பதிவேற்றம் செய்யபட்டிருந்தது .ஐந்தாம் தேதி காலை எனது சான்றிதழும் இணையத்திலேயே வந்திருந்தது .கொச்சி mmd க்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.எனது பழைய சான்றிதழை உறுதிபடுத்த கல்வி நிலையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன் மற்றும் நான் இணையவழியாக  படித்து,புதிய சான்றிதழும் கிடைத்துள்ளது எனக்கு .DCE தருமாறு வேண்டுகிறேன் என .

  காலைமுதல் dg shipping தளத்தில் எனது கணக்கை  திறந்து பார்த்தேன் .எனது dce பரிசீலனையில் (under process)இருக்கிறது என இருந்தது.

இன்று எப்படியும் DCE கிடைத்துவிடும் என மகிழ்ச்சியில் இருந்தேன்.மதியம் MMD queri வந்தது உங்கள்  புதிய சான்றிதழை  விண்ணப்பம் அனுப்பிய ஆவணத்துடன் பதிவேற்றம் செய்யுங்கள் என .

இன்று புதன் மாலை ஆகியும்  எனது .DCE வரவில்லை .

ஷாகுல் ஹமீது ,

07-oct -2020.


Sunday, 4 October 2020

காது வலி

 கப்பல் காரன் டைரி.

நேற்று மதியத்திற்கு பின் இடது காதில் லேசான வலி,

 ஒன்னும் கஷ்டம் இல்லை.



இரவில் பதினோரு மணிக்குமேல் துயிலசென்றேன்.அதிகாலை மூன்று மணிக்கு காதுவலியால் விழித்துவிட்டேன்.லேசாக வீக்கமும் இருந்தது கையால் தடவி பார்த்தேன் லேசாக கட்டியாக இருந்தது .

மருத்துவ  தோழி மகேஸ்வரியுடன் மானசீகமாக பேசினேன்.அரை மணிநேரத்திற்குப்பின் மீண்டும் தூங்கிவிட்டேன் .ஐந்தேகாலுக்கு விழித்து தொழுகை முடித்து மருத்துவ தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

ஏழுமணிக்கு மேல் மருத்துவர் என்னை அழைத்து காது வலி பற்றி கேட்டறிந்துவிட்டு .இன்றே ஒரு ஈ என் டி மருத்துவரை பார்த்துவிடுங்கள் என அறிவுரை கூறினார்.நீங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது கண்டிப்பாக இன்றே பாருங்கள் என்றார்.பொது மருத்துவர் வேண்டாம் காதுக்குள் என்ன ஆகியிருக்கிறது என பார்க்கவேண்டும் என்றார்.மருத்துவர் உங்களை பரிசோத்தபின் என்னை அழையுங்கள் என்றார் மருத்துவர் மகேஸ்வரி.

எனது மும்பை அலுவகத்தில் உள்ள காப்டன் ஆஷ்லி மற்றும் உதவி மேலாளர் அங்கிட் கிறிஸ்டியன் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒருமணி நேராமாகியும் பதிலேதும் வாராததால் காப்டன் ஆஷ்லியை போனில் அழைத்து விபரம் சொன்னேன்.அவர் நீ ஹோட்டலை விட்டு வெளியே செல்ல முடியாது நான் பேசிவிட்டு வருகிறேன் என்றார்.

பத்து நிமிடத்திற்கு பின் அழைத்து டாக்டர் வர்மா உனது ஹோட்டலுக்கு வந்து உன்னை பரிசோதிப்பார்.கையில் பணம் இருக்கிறதா மூவாயிரம் கட்டவேண்டும் என கேட்டு விட்டு மருத்துவர் வர்மாவின் தொடர்பு எண்ணை தந்தார் .ஹோட்டல் வரவேற்பறையில் பேசிவிட்டேன்.நீ மருத்துவரிடம் பேசி விடு என்றார்.

மருத்துவர் வர்மா விபரங்களை கேட்டுவிட்டு அரை மணிநேரத்தில் வருகிறேன் என்றார் . 

 

  இதே ஹோட்டலில் தங்கியிருக்கும் தம்பி ஹெல்டன் என்னை போனில் அழைத்தபோது விபரங்களை சொன்னேன்.என்னிடம் பணம் இருக்கிறது பெற்றுகொள்ளுங்கள் என்றான்.

   பனிரெண்டு மணிக்கு முன்பாக மருத்துவர் வர்மா வந்துவிட்டார் .வரவேற்பறையில் இருந்து என்னை அழைத்து “மீட்டிங் ரூம் எண் 2 முதல் தளத்தில் மருத்துவர் இருக்கிறார் நீங்கள் அங்கே செல்ல வேண்டும்” என்றனர். ஆடை மாற்றி முதல் தளத்தில் இருந்த மீட்டிங் அறைக்கு சென்றேன் .

உள்ளே டாக்டர் அரவிந்த் குமார் வர்மா அமர்ந்திருந்தார்.கண் கண்ணாடியும்,மூக்குக்கு கீழே முககவசமும் அணிந்து  காதுக்குள் செலுத்தி பார்க்கும் கருவிகளை ஒரு பையில் இருந்து வெளியில்வைத்துகொண்டிருந்தார்.அது எனக்கு குழைந்தைகளின் விளையாட்டு பொருள் போல இருந்தது .

“வணக்கம்” என்றேன் .

“கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,நான் அறை எண் 603 இல் ஒரு நோயாளியை பார்க்க வந்துள்ளேன்”.

“நான் தான் அது” என்றேன் .

சத்தமா ஒரு சிரிப்புக்குப்பின். “உட்காருங்கள்” என்றார் .

இருக்கையில் அமர்ந்தேன் .

“நான் நேரத்துக்கு வந்துட்டேனா,நான் மிந்தி மிலிட்டிரில வேல பார்த்தேன்”கண் சிமிட்டி விட்டு மீண்டும் சிரிப்பு .

“சொல்லு” என்றார் .

“நேத்தைக்கு மத்தியானத்துக்கு போறவுல இருந்து காதுல லேசா வலி,விடியகாலம் மூணு மணிக்கு எழும்பிட்டேன்,வலியால.கை வெச்சு பார்த்தேன் லேசா வீங்கி இருக்கு”.

“நல்லா வீங்கியிருக்கு,நீ குத்துனியா கன்னத்துல”

“இல்ல டாக்டர்”

“அடி ஏதும் பட்டுதா”

“இல்ல”.

“நீ வேற எதாவது செய்தியா”

“இல்ல”

“எங்கயாவது இடிசிகிட்டியா”

நான் இல்லை என சொல்லும் போதெல்லாம் “சுவர்,சுவர்” என கேட்டுகொண்டார் .

“இதுக்கு முன்ன எப்பவவாது இது போல ஆயிருக்கா”

“இல்ல”

“சைனஸ் பிரச்னை உண்டா”

“இல்ல நான் யோகா மாஸ்டர்,ப்ரீதிங்  எக்ஸசைஸ் செய்வேன்”.

“என்ன செய்வா,மூக்குக்குள்ள ஏதாவது போட்டு இழுப்பியா”

‘அதெல்லாம்,கடையாது,மூச்சு பயிற்சி மட்டும்”

“சொட்டு மருந்து ஊத்துனியா”

“இல்ல”

“திரும்பி உட்காரு காதை பார்க்கட்டு”

இரண்டு காதுகளையும் சிறிய கருவியை காதுக்குள் செலுத்து பார்த்தார் .

மூக்குகுள்ளும் சோதனை செய்தார் .

“காதுகுள்ளதண்ணி போச்சா”

 “ஆமா குளிக்கத்துல”

அதான் காரணம் என்றார்

“டயபடீஸ் இருக்கா”

“இல்ல”

 பெயர் மற்றும் வயதை கேட்டு குறித்து கொண்டு ,சீட்டில் ஒரு படம் வரைந்தார் .

காது ட்ரம்,டிராக் பிளேம்டு.டிம்பனிக் மெம்ரீன் என சொன்னார் .    


  

நான் சொன்னது புரிந்ததா என கேட்டார் .

இல்லை என்றேன் .மீண்டும் விளக்கினார்.



செவிவழி குழாய் (track)உட்புற சவ்வு(மெம்ரேன்) போன்றவை இன்பெக்ஷன் ஆகியுள்ளது என்றார் . காதுக்குள் தண்ணீர் போனதுதான் காரணம் .

காதுக்குள் சொட்டு மருந்து விடக்கூடாது,காது எப்போதும் உலர்ந்து இருக்க வேண்டும் ,குளிக்கும்போது தண்ணீர்  உள்ளே போக கூடாது,காதில் பஞ்சு வைத்துகொள்,நீச்சல் அடிக்க கூடாது .காரமான உணவுகள் கூடாது .

குளிக்கும்போது காதில் பஞ்சு வைத்துகொள் அல்லது வாசலீன் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை இயர் பட்ஸ் ஆல் காதில் தடவிக்கொள் குளிப்பதற்கு முன் என்றார் .

“இங்க என்ன செய்கிறாய்,இன்னைக்கா வந்தா நீ”.

“நான் வந்து பதினோரு நாள் ஆயிட்டு,கப்பலுக்கு போனும்,அங்க போனா மருந்து கிடைககாதுல்லா”.

“ஒன்னும் பிரச்னை இல்ல இன்னைக்கே பார்த்ததுனால,மருந்து தாரேன் போறதுக்கு முன்ன எனக்கு ஒருக்கா போன் பண்ணு ,கப்பலுக்கு போனபொறவும்,எனக்க நம்பருல கூப்பிடு என்றார்

 மூன்று வித மாத்திரைகள் மூன்று தினங்களுக்கு எழுதிவிட்டு,

“இன்று ஞாயிறு ஒரு மருத்துவமனையும் இல்லை .யாரும் வந்து பார்க்கமாட்டார்கள் ,மூவாயிரம்” என்றார் .

பேசாம டாக்குடருக்கு படிச்சிருக்கலாம் என தோன்றியது .

இப்போ வாறன் என சொல்லிவிட்டு வரவேற்பறையில் கேட்டேன் .ஹெல்டனின் அறைக்கு செல்ல வேண்டுமென. “அறை கதவை தட்டி வெளியே நின்று வாங்கிகொள்ளுங்கள்” என்றார்.

பணம் வாங்கி கொண்டு கீழிறங்கி வருகையில் டாக்டர் வர்மா உயர்த்தியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார் .

“நீ ஆறாவது மாடிக்கு போய்விட்டா வருகிறாய்”

“ஆமா”என்றேன் .

பணத்தை பெற்றுகொண்டு.கைகுலுக்க கையை நீட்டியவர் ,கைகளை மடக்கி நீட்டினார் ,இடித்து கண்டோம் .

மீண்டும் “கப்பல் செல்லும் முன் என்னிடம் பேசிவிட்டு போ” என்றார்.உயர்த்தியின் அருகில் சென்றவர். திரும்பி “நானும் படியிறங்கி சென்கிறேன் என” வளைந்து செல்லும் அழகான படிகளில் இறங்கினார் .

ஹோட்டல் மேலாளரை பார்த்து “மருந்து வாங்க வேண்டும்” என்றேன் “அறைக்கு செல்லுங்கள்,மருந்து கடையின் எண் அழைத்து சொல்வார்கள்,உங்களுக்கு வேண்டிய மருந்துகள் இங்கே வரும் ,நாங்கள் அறையில் தருகிறோம்” என்றார் .

“உங்க   பேரு என்னதுன்னு” கேட்டேன். “பால்ராஜ்”என்றார் .அவர் சீக்கியர்கள் அணியும் டர்பன் அணிந்திருந்தார். “பால்ராஜ் சிங்கா” என கேட்டுவிட்டு. “எங்க ஊர்ல நிறைய பால்ராஜ் உண்டு” என்றேன் .

“பல்ராஜ்” என்றார் .

“ஒ பல்ராஜ”

அறைக்கு வந்து மருந்து கடைக்கு அழைத்தேன்.ஒரு மணி நேரம் ஆகும்.என்றார்.ஹோட்டலின் ஹேமந்த் அறைக்கு வந்து மருதுக்கான பணத்தை வாங்கிகொண்டு,விடுதியின் வாசலுக்கு மருந்து வரும் வாங்கி தருகிறேன் என்றார்.

தோழி மகேஸ்வரிக்கு விபரங்களை சொன்னேன்.கொஞ்சம் சூடா எதாவது குடிச்சிட்டே இருங்க,தலை காது கொஞ்சம் சூடா இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள்.தண்ணீர் நிறைய குடியுங்கள் இந்த மருந்து சப்பிடுப்வதால் வயிற்று போக்கு வரும் என்றார் .

நல்ல பசி இன்று.போன் பண்ணினேன் 603 ஷாகுல் என்றதும் “ஸார் மே சாகர்” என்றான். “நல்லா இருக்கியா சாப்பாடு கொண்டு வா  என்றேன் . .  சாப்பிட்டுவிட்டு எழுத தொடங்கினேன்.காதுக்கு கீழிருந்து வலி லேசாக  மேலேறி நெற்றிபொட்டில் மையம் கொண்டது .

காத்திருந்தேன் .அறை கதவை தட்டும் சப்தம் ,ஹேமந்த் கையில் மருந்துடன் நின்றுகொண்டிருந்தார் .மருந்துக்கு எழுநூறும்,ஹெமந்துக்கு நூறும் குடுத்தேன் .



ஹோட்டல் அறையில்உள்ள குளியல் தொட்டியில் முங்கி குளிச்சதுக்கு,ரூ நாலாயிரமும்,வலியும் .


04 oct 2020,

ஷாகுல் ஹமீது.

sunitashahul@gmail.com


Friday, 2 October 2020

கப்பல் காரன் டைரி , தண்ணீர்

 

கப்பல் காரன் டைரி

தண்ணீர்

   சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும் தாகம் தீர்க்க உதவாது என்பது கப்பல் காரனுக்கு மிக சரியாக பொருந்தும் . முந்தைய காலங்களில் கப்பல் கரையணையும் போது பிராமாண்ட தொட்டிகளில் நன்னீரை தேக்கிவைத்து பயண தூரம் மற்றும் பயண நாட்களை கணக்கில் கொண்டு மிக சிக்கனமாக செலவு செய்வார்கள். எனது முதல் கப்பலான மெர்டிப்-4 ல் துபாய் துறைமுகப்பில் தண்ணீர் நிரப்புவார்கள் .அதன் பயண தூரம் இரண்டரை நாள் ஈராக் செல்ல,ஏழு நாட்களுக்குள் திரும்பி துபாய் வந்துவிடுவோம் அதனால் தண்ணீருக்கு எந்த பிரச்னையும் இல்லை.



   இப்போதுள்ள கப்பல்களில் கடல் நீரை நன்னீராக்கும் இயந்திரங்கள் உள்ளன.இருபத்தி நான்கு மணிநேரத்தில் இருபது முதல் இருபத்தியைந்து மெட்ரிக் டன்கள்(ஒரு மெட்ரிக் டன்= ஆயிரம் லிட்டர்) நன்னீரை தயாரிக்கும் சக்தி கொண்ட இயந்திரங்கள் அவை.ஆயிரம் முதல் நான்காயிரம் பயணிகள் வரை பயணிக்கும் நவீன உல்லாச கப்பல்களில் தேவையான எண்ணிக்கையில்  ஆர் ஒ பிளாண்ட்கள் உள்ளன.





 ஒருநாள் பயணித்தபின் கரையணையும் கப்பல்களில்  ஜெட் வகை நன்னீர் தயாரிக்கும் இயந்திரங்கள் இருபத்தி நான்கு மனைநேரத்திற்குள் நூற்றியைம்பது டன் நீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

    நான் பணிபுரிந்த பெரிய கார் ஏற்றும் கப்பல்கள் பதினான்கு அடுக்குகளை கொண்டது ,சுமோ காரின் அளவுள்ள 6500 கார்களை அதில் ஏற்றி கொண்டு செல்லமுடியும் .அதிக பட்சம் இருபத்தியைந்து பணியாளர்கள்தான் அதில்  இருப்போம்.



   கப்பலில் இரண்டு சலவை இயந்திர அறை(ஒவ்வொரு அறையிலும் மூன்று சலவை இயந்திரங்கள் இருக்கும்) அடுமனையில் உணவு தயாரிக்க,பாத்திரம் கழுவுதல்,மாலுமிகளின் சுய தேவையான குளிப்பது,கழிப்பறை உபயோகம்,கப்பலின் தினசரி சுத்தம் செய்யும் இடங்களான குடியிருப்புபகுதி,இயந்திர அறையின் கண்ட்ரோல் ரூம்,இரு உணவுக்கூடம்,மேல் தளத்தில் உள்ள கப்பலோட்டும் அறை(navigation bridge) ,இயந்திர அறையின் நீராவி (boiler)கொதிகலன்,எஞ்சின் இயங்கும்போது குளிர்விப்பானில் குளிர்விக்க தேவை என தினசரி தேவை பத்து முதல் பனிரெண்டு டன்கள் .

 கப்பலின் உள்ள நன்னீர் குழாய்கள் எதிலும்  ஒழுகல் இல்லாமல்,கப்பலின் கழிப்பறை வெற்றிட (vacum) வகையை சார்ந்ததாக இருப்பின் அதிக பட்சம் தினசரி தண்ணீர் தேவை ஆறு முதல் எட்டு டன்கள்.

 கப்பல் துறைமுகம் செல்லும் முந்தையநாள் முழுகப்பலும் உயரழுத்த தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரத்தின் உதவிகொண்டு சுத்தம் செய்வார்கள் அன்றையதினம்  இருபது டன் நன்னீர் செலவாகிவிடும். கப்பல் காரன் எப்போதும் நீர் சிக்கனத்தை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும்.அறையிலும் வெளியிலும் நன்னீர் குழாயை திறந்தால் கவனமாக மூட வேண்டும்.


                  கரையொட்டிய பயணம் அர்ஜென்டினா 

   கரையையொட்டிய பயணங்களான மலேசியா- சிங்கப்பூர் பனிரெண்டு மணிநேரம்,அர்ஜென்டினாவின் ஸராட்டே துறைமுகத்திற்கு ஆற்றில் பதினாறு மணிநேர பயணங்களில் நன்னீர் தயாரிப்பதில்லை.இது போல் பெரிய கப்பல்கள் பயணிக்கத்தக்க ஆறுகள் உலகெங்கும் நிறைய உள்ளது அது ஒரு வரம் என்பேன் .

  ஆறுகளிலும்,கரையொட்டிய கடல் பகுதிகளிலும் நீர் அசுத்தமாக இருப்பதும்,மிக மெதுவாக கப்பலை இயக்கவேண்டுமென்பதுமே  இங்கெல்லாம் நன்னீர் தாயாரிக்காமல் இருப்பதற்கான மற்றுமொரு காரணம். கடல் நீரை நன்னீராக்குவது மிக எளிது. தண்ணீர் நூறு பாகை வெப்பமடையும்போது ஆவியாகும்,கடல் நீரை வெப்பபடுத்தி அந்த நீராவியை குளிரவைத்து நன்நீராகவும் உப்பை தனியாகவும் பிரித்து எடுக்கும் இயந்திரம் தான் fresh water generator .



சாதாரண நிலையில் (1bar ) தண்ணீர் நூறு பாகையில் கொதிநிலையை அடையும் .நன்னீர் இயந்திரத்தில் செயற்கையாக ஏற்டுத்தபட்டுட்ட குறைந்த அழுத்தம் கராணமாக அறுபது முதல் எண்பது பாகைக்குள் தண்ணீர் கொதிநிலையை அடைந்துவிடும்

                                                           fresh water generator

 கப்பல் கரையிலிருந்து புறப்பட்டு மெதுவாக வேகம் அதிகரித்து முக்கிய இயந்திரம் அறுபது ஆர்பிஎம்க்கு மேல் வந்த பின்தான் நன்னீர் இயந்திரத்தை இயக்குவார்கள்.

நன்னீர் இயந்திரத்தில் கடல் நீர் உட்புகையில்  முக்கிய இயந்திரத்தில் இருந்து வரும் ஜாக்கட் வாட்டரின் வெப்பத்தை எடுத்துகொண்டு அறுபதிலிருந்து எண்பது  பாகையை அடையும் அந்த வெப்பநிலையில் தண்ணீர் கொதிநிலையை அடைந்து ஆவியாகிறது ,அந்த நீராவியை கடல் நீர்கொண்டு குளிர வைத்து நன்னீராக மாற்றுவது தான் நன்னீர் இயந்திரத்தின் வேலை .

   

நன்னீர் இயந்திரத்தில் இருந்து நீர் வெளியேறுகையில் தேவையான ரசாயனமும்,மினரல்களும் அதில் சேர்க்கப்படும் .குறிப்பட்ட இடைவெளிகளில் நாங்கள் பருகும் நீர் தரமானதாக இருக்கிறதா என கரையிலிருக்கும் ஆய்வுகூடங்களில் சோதனை செய்வார்கள் .

 நீண்ட நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கையில் நீராவியை செலுத்தி கடல்நீரை வெப்பபடுத்தி நன்னீர் தயாரிப்போம் .ஆனால் ஒரு நாளில் ஏழு முதல் ஒன்பது டன் நீர் கிடைப்பது அதிர்ஷ்டம்.நீராவிக்காக  கொள்கலனை இயக்குவதால் நாள் ஒன்றுக்கு ஒன்றரை டன் எரிபொருள் செலவாகும் அது கொஞ்சம் விலை அதிகம்தான் .

  இருநூறு டன் கொள்ளளவு உள்ள இரண்டு தண்ணீர் தொட்டிகளில் நன்னீரை தேக்கி வைப்போம் .அங்கிருந்து குழாய்கள் வழியாக ஹைட்ரோ போர் எனும் தொட்டியில் தண்ணீரை கொண்டுவந்து அதில் காற்றை உட்செலுத்தி நாற்பது மீட்டர் உயரமும் ,இருநூறு மீட்டர் நீளமும் உள்ள கப்பலின் முன் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் உள்ள அறைகளில் குழாயை திறந்தால் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும் .



நதிக்கரையில் இருந்தாலும் தண்ணீரை வீணாக்காதே . திரு குர்ஆன்.

இதை போல் கப்பல் காரன்  ஒரு துளி கூட வீணாக்கதவானாக இருக்க வேண்டும்.பத்து நாள் பயணத்திற்கு பின் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு கப்பல் துறைமுகங்களில் கரையணைகையில் நன்னீர் தயாரிக்க முடியாமல் நீர் பற்றாகுறை ஏற்படும்.2013 ஆம் நான் பணிபுரிந்த ஹார்மொனி ஏஸ் எனும் கப்பல் மெக்ஸிகோவின் வேராகுரூஸ் துறை முகத்தில் இருந்து புறப்பட்டால் நான்காவது நாள் உருகுவேயின் மாண்டி வீடியோ அடுத்தடுத்த நாட்களில் பிரேசிலின் சாவ் புவுலோ,சாண்டோஸ்,ரியோ டி ஜெனீரோ ரியோ கிரந்தோ என தினமும் கரையணைதலும்,காத்திருப்பும் என  தண்ணீர் கையிருப்பு வெறும் நாற்பது டன்னாக இருந்தது.நன்னீர் இயந்திரமும் பழுதானதால் கப்பல் தலைவனுக்கு தலைவலி ஏற்பட்டது .




                            ரியோ டி ஜெனிரோ 

  சில துறைமுகங்களில் நன்னீர் இலவசம்,சில ஊர்களில் ஆயிரம் லிட்டருக்கு 22 அமெரிக்க டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 2009 ஆம் ஆண்டு லியோ லீடர் எனும் கப்பலில் பணியில் இருக்கையில்,ஜப்பான் அருகில் மிதந்து கொண்டிருந்தோம்.அப்போது ஏற்பட்ட பொருளாதார முடக்கம் காரணமாக எங்கள் கப்பல் இரண்டு மாதங்களுக்கு சரக்கு ஏற்றுமதி இல்லை என தகவல் வந்தது .மொத்தம் முன்னூறு டன் தண்ணீர் மட்டுமே  கையிருப்பு இருந்தது.காப்டன் அனைவரையும் அழைத்து “நிறைய கப்பல்கள் சரக்கு இல்லாமல் நிறுத்திவைக்கபடுள்ளது, நிறையப்பேர் பணியை இழந்துவிட்டனர் . நமக்கு குறைந்தபட்சம் பணியாவது இருக்கிறது.இருக்கும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் ,நாளை முதல் சலவை இயந்திரங்கள் அடைக்கப்படு, மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை மட்டுமே தண்ணீர் விடப்படும்” என்றார் .

 அந்த கப்பலில் பொது கழிப்பறை முறை இருந்தது.மொத்தம் இருபத்தியொரு பணியாளர்கள் இருந்தோம் .பதினோரு பேருக்கு மூன்று மூன்று குளியல் அறை,மூன்று கழிப்பறை இருந்தது. அதிகாரிகளுக்கு தனியறைகள்.பொது கழிப்பறையின் முன் இருநூறு லிட்டர் கொள்ளளவுள்ள மூன்று பீப்பாய்களில் தண்ணீர் வைத்திருந்தனர் .இரண்டாவது நாளே கழிப்பறைக்கு மூக்கில் துணியை கட்டி கொண்டு செல்லும் நிலை .



  இது போன்ற ரேசன் நாட்களில்  சமையல் அறையில் உள்ள எல்லா பாத்திரங்களிலும் தண்ணீர் பிடித்து வைத்திருப்பனர்.தண்ணீர் வரும் நேரம் குளித்து, அறையில் குறைந்தது இரண்டு வாளிகளில் தண்ணீர் பிடித்து  வாளியை கட்டி வைக்க மறக்ககூடாது .

2017 நான் இருந்த கப்பல் சன்னி கிரீன் .சிங்கப்பூரில் புறப்பட்டு கானா அருகில் உள்ள டோகோ கடற்கரையிலிருந்துஏழு கடல் மைல் தொலைவில்ஆறு மாதங்கள்  நங்கூரம் பாய்ச்சி நின்றோம் .நீராவியால் கடல் நீரை வெப்படுத்தி நன்னீர் தயாரிப்போம்.தினமும் பத்து டன் வரை நன்னீர் கிடைக்கும் செலவு எட்டு முதல் ஒன்பது டன்கள்.சலவை இயந்திர அறை ஞாயிறு மட்டுமே கிடைக்கும்.அன்று இருபது டன் நீர் தீர்ந்துவிடும்.நான் ஞாயிறு சலவை இயந்திரத்தில் டவல்,தலையணை உறை,கம்பளி உறை மற்றும் மெத்தை விரிப்பு மற்றும் பணி செய்யும் போது அணியும் ஆடைகளை மட்டுமே துவைப்பேன் .

  குளியல் தினமும் மிக சிக்கனமாக கால்களுக்கு இடையில் வாளியை வைத்திருப்பேன்,உள்ளாடைகள் மற்றும் காலுறையை  வாளியில் நிறையும் நீரில் துவைத்து எடுப்பேன் .

 நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல  நீரில் மிதக்கும் கப்பலும் தான் .

ஷாகுல் ஹமீது ,

03 oct 2020.

sunitashahul@gmail.com