Tuesday, 20 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 29

                       விடை தந்த ஈராக் 
  
எட்டாம் தியதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன் .அதிகாலை நல்லகுளிர் .சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கெல்லாம் விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன்.பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது எனக்கு .மதியம் மூன்று மணிக்கு தான் விமானம் பாக்தாத் –அம்மான்-மும்பைக்கு .விமான சீட்டும் ,கடவுசீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்து சென்றனர் .
 

 என்னுடன் செல்வராஜ் உட்பட ஆறு பேர் ஊருக்கு செல்ல தயாரானோம். பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துசெல்ல வந்தனர் .ஒரு காரில் இருவர் மட்டுமே .ஒரு ஓட்டுனரும், ஒரு பாதுகாப்பு வீரர் ஒவ்வொரு காரிலும் பாதுகாப்புக்காக வந்தனர். பாதுகாப்பு வீரர்களும் ,வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து ,அரபிகளை போன்ற உடையணிந்திருந்தனர் .மாறுவேடம் தான் .பாதுகாப்புகாக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது .

  காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர் .முன்பு நான் திக்ரித் –பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே காரில் இருந்து கீழே இறங்க கூடாது  பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி,அவ்வாறு இறங்கவேண்டிய சூழ்நிலையில் கீழே இறங்கிவிட்டால் எக்காரணத்தைக்கொண்டும் ஓட கூடாது .இங்கிருந்து 20-30 நிமிட பயணதூரம் மட்டுமே என்றனர் .

  பயணப்பைகளை காரில் ஏற்றினோம் .நாங்கள் ஆறுபேரும் மூன்று கார்களில் ஏறிகொண்டோம் உடன் பாதுகாப்பு வீரர்களும் .முப்பது நிமிடத்திற்குள் பாக்தாத் விமான நிலையம் வந்தடைந்தோம்.பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் என்ற பதாகை எங்களை வரவேற்றது ஊர்செல்வது உறுதியாகிவிட்ட உற்சாகம் தொற்றிகொண்டது .

  பாக்தாத் விமான நிலையம் உலகின் நவீன வசதிகளுடன்,உயர்தரத்தில் இயங்கிய பன்னாட்டு விமான நிலையமாக  இருந்திருக்க வேண்டும் .விமான நிலைய உள் கட்டமைப்புகள் அதை உறுதி செய்தது.
 விமான நிலைய வாயிலில் இறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் எங்களை விரைவில் விமான நிலையத்திற்குள் கொண்டு விட்டனர் .பயணப்பைகளை அவர்களே கொண்டு வந்து தந்தனர் .எங்களிடம் கைகுலுக்கி ஹாவ் எ ஸேப் ஜெர்னி என விடைபெற்றனர் .

    ஈராக் போர் தொடங்கியதிலிருந்து பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் செயல்படாமல் முடங்கிப்போய் செயலற்று இருந்தது.இப்போது ஒரு தனியார் நிறுவனம் அதை இயக்கிகொண்டிருக்கிறது .தினமும் ஒரு விமானத்தை இயக்குகிறது ஜோர்டானின்  அம்மான் நகருக்கு .
 பயணப்பைகளை அளித்துவிட்டு ,குடியுரிமை பரிசோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தோம் .உண்மையாகவே இப்போதுதான் பயணம் உறுதியாயிற்று என்றே சொல்லலாம் .
  
  அனைத்து சோதனைகளும் முடிந்தபின் பயணம் செய்யவேண்டிய விமானம் வரை நடந்தே சென்றோம்.அருகில் சென்றதும் எங்கள் பயணபைகள் இருக்கிறதா என  பார்க்க சொன்னார்கள் விமான நிலைய ஊழியர்கள்  பைகளை பார்த்து உறுதிசெய்ததும் விமானத்தில் ஏறிக்கொண்டோம்.அது ஒரு சிறிய விமானம் முப்பதுபேர் மட்டுமே பயணம் செய்யக்கூடியது.ஒரே ஒரு விமான பணிப்பெண் ஒரு சாக்லேட் மட்டும் புன்னகையுடன் தந்தாள்.நாற்பது நிமிட பயணம்  ஜோர்டானின் அம்மான் நகருக்கு .அங்கிருந்து ராயல் ஜோர்டன் விமானத்தில் அபுதாபிக்கு பயணித்தோம் .

   கடந்தமுறை விடுமுறையில் சென்றபோதும் அபுதாபி வழியாக சென்றதால் அபுதாபி விமான நிலையம் இப்போது நல்ல பரிச்சயமாகியிருந்தது.ஆறு மணிநேரம் எளிதாக கடந்துசென்றது .
  அபுதாபியில் ஆறு மணிநேர காத்திருப்புக்கு பின் கல்ப் ஏர் விமானத்தில் மும்பைக்கு காலையில் வந்துசேர்ந்தோம் .இப்போதும் செல்வராஜின் பயணபைகள் வரவில்லை .இந்தியாவிலிருந்து சென்றபோதும் அவனது பைகள் கிடைக்காததாலேயே செல்வராஜ் ஈராக் சென்ற இருபது நாட்களுக்குள்ளாக திரும்பி வருகிறான் .பாக்தாத் விடுதியறையில் இருந்த அவனின் கதையைகேட்டு இந்தியர்கள் சிலர் கொடுத்த பொருட்களும்,பையும் இந்த முறையும் கிடைக்கவில்லை .

   9 ம் காலை பத்தரைமணிக்கு ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் மும்பை-திருவனந்தபுரம் பயணித்து மதிய வேளையில் சென்று இறங்கினேன் .விமான நிலையத்தில் எனது தந்தையும் ,இளைய சகோதரனும் ,மணப்பெண்ணின் சகோதரி ,தாய், தந்தை  வந்திருந்தனர் .என்னை பெண்வீட்டார் இப்போது தான் முதல்முறையாக  பார்க்கின்றனர் ,நானும் அவர்களை .

  9 ம் தியதி தான் முன்பு திருமணநாளாக குறித்து பெண்வீட்டார் மண்டபமும் முன்பதிவு செய்துவைத்திருந்தனர் .பின்பு அதே டிசம்பரில் 16 ம் தியதி என வேறு நாள் குறிக்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடந்தது .கடந்த நான்கு தினங்களுக்கு முன் பனிரெண்டாம் வருட திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் .
முற்றும் .

கடந்த  நான்கு மாதங்களாக நான் எழுதிவந்த ஈராக் போர்முனை அனுபவங்கள் இந்த பதிவுடன் முடிவடைந்தது .
  
எழுத்தாளர் ஜெயாமோகன் அவர்களின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் என்னை கடந்த மார்ச் மாதம் சந்தித்தபோது ஈராக் குறித்து எழுதுங்கள் என்றார் .கடந்த ஜூன் மாதம் முதல் கப்பலில் பணியில் இருந்த போது சில பயண அனுபவங்களை எழுதி எனது வலைப்பூவில் பதிவிட்டேன் .தொடர்ந்து சதாமின் அரண்மனையில் எனும் வந்த பதிவை படித்துவிட்டு மூத்தசகோதரியும் ,தாவரவியல் பேராசியையுமான லோகமாதேவி அவர்கள் ஈராக் போர் அனுபவங்களை அறிய ஆவலாய் இருக்கிறேன் ஒரு தொடராக எழுதுங்கள் என்றார் .எழுத ஆரம்பித்த போது பத்து அல்லது பதினைந்து பதிவுகள் வரும் என நினைத்தேன் .
  
  சதாமின் அரண்மனையில் என்ற பதிவையும் சேர்த்து மொத்தம் முப்பது பதிவுகள் வந்துவிட்டன .புதிதாக எழுத தொடங்கிய எனக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக இருந்தது .
  இதுவரை தொடர்ந்து வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .மேலும் என்னை ஊக்கபடுத்திய நண்பர்கள் முத்து,தர்மா சகோதரன் பிரபு ,சுஜாதா,சுமதி ,சிஸ்டர் கரோலின் ,சையதலி அண்ணன்,ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் பின்னூட்டம் எழுதிய சகோதரி லோகமாதேவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் .
   இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்களூரின் எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களை சந்தித்தபோது என்னிடம் ஷாகுல் உங்கள் பணியும் பயணமும் யாருக்கும் கிடைக்காதது உங்களின் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்யுங்கள் என்றார் .எனது தோழி தாமரை செல்வியும் என்னை எழுதுமாறு சொன்னார் .அப்போது நினைக்கவேயில்லை என்னால் எழுத முடியும் என .
  தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் தொடர்பும் ,நட்பும் கிடைத்தது .நண்பர் மூலமாக அறிந்த ஜெயமோகன் அவர்கள் எனது ஈராக் போர்முனை அனுபவங்கள் என எனது வலைப்பூவின் சுட்டியை அவரது தளத்தில் வெளிட்டார் .அவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .

  ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் விரைவில் பதிவிடுவேன் .தொடர்ந்து மேலும் ஒரு அனுபவப்பதிவை தொடராக விரைவில் எழுதுகிறேன் .
ஒவ்வொரு பதிவிற்கும் பிழைதிருத்தம் செய்த என் மனைவி சுனிதா மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள் .
  ஈராக்கில்  எடுத்த புகைப்படங்கள் ஸ்கேன் செய்து பின்னர் பதிவேற்றம் செய்கிறேன் .
ஷாகுல் ஹமீது .

20-12-2016

Sunday, 11 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 28


                பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் .
  எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்த தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன் .இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர் .புதிதாக பணிக்கு தேர்வாகி வந்தவர்கள், அனைவரும் என் நிறுவனத்தின் மூலம் வந்தவர்கள் .இந்தியாவில் ஈராக் செல்ல தடை இருந்தபோதும் துபாய் வழியாக அழைத்துவரப்பட்டுள்ளனர். துபாய் விமான நிலையத்தின் சரக்குகளை கையாளும்(cargo terminal) முனையத்திலிருந்து வேறு விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டுவந்ததாக  சொன்னார்கள் .



  போர்முனையில் பதினெட்டு மாதம் பணிபுரிந்து,பல இழப்புகள்,சாவின் விளிம்பை பலமுறை சந்தித்துவிட்டு பல இன்னல்களுக்கு பின் ஊர் செல்வதற்காக காத்திருக்கிறேன் .அவர்கள் இப்போது தான் இங்கு ஒரு அபாயகரமான வாழ்வை துவக்க போகிறார்கள் .ஒவொருவருக்கும் ஒரு சூழ்நிலை .


   ஒவ்வொரு ஆணுக்கும் படித்துமுடித்து வேலைகிடைப்பது வரை உள்ள காலம் மிக மிக கஷ்டமானது .சிலருக்கு படித்த வேலை கிடைப்பதில்லை,சிலருக்கு அவர் விரும்பிய வேலை கிடைக்காது .சிலர் தற்காலிகமாக மனமில்லாமல் ஒரு வேலையில் சேர்வார்கள் ,சேரும்போது தனுக்குரிய வேலைகிடைத்ததும் மாறிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஆனால் பலருக்கு அது சாத்தியமே இல்லாமலாகிவிடும் .சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு.அப்பவோ,சொந்தக்காரர்களோ வைத்திருக்கும் நிறுவனத்தில் வேலை அல்லது கல்லூரி இறுதியாண்டில் பணிதரும் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  இது போன்ற எந்த கஷ்டத்தையும் அறியாதவர்கள் .


  நான் இங்கே பார்த்த அநேகம் பேர் கொஞ்ச நாள் அனுபவத்துக்ககாவும்,தற்போதைய பணதேவைக்காகவும் வந்ததாக சொன்னார்கள் .


  தற்போது அமெரிக்க ராணுவம் புதிதாக ஈராக்கிய ராணுவத்தை உருவாக்கும் பொருட்டு இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறது.அந்த பயிற்சி முகாமிலுள்ள ஈராக்கிய வீரர்களுக்கான உணவு கூடத்தில் பணி செய்ய வந்துள்ளாக தெரிவித்தனர் .தமிழ் இளைஞர்கள் நிறையபேர் இருந்தனர் .


 என்னிடம் தொடர்ந்து அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தனர்.எனது அனுபவங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் தூங்கும் நேரம் தவிர என் அறையிலேயே இருந்தனர் . நான் அவர்களிடம் பக்குபா தீ விபத்தையும் ,அனைத்து சான்றிதழ்களை  இழந்ததையும் சொன்னேன்.யாரும் உங்களுடைய அசல் சான்றிதழ்களை கொண்டுசெல்லாதீர்கள் என்று உறுதியாக சொன்னேன் .அதில் மது என்னும் சமையல்கலைஞன் மட்டும் தன்னுடைய சான்றிதழ்களை என்னிடம் தந்து சென்னையிலுள்ள தந்து வீட்டு முகவரியில் அனுப்பிவைக்கும்படி தந்தான் .


  பெரும்பாலானவர்களிடம் கடவுசீட்டை தவிர பிற முக்கிய சான்றிதழ் எதுவும் இல்லை .எப்போதும் கடவுசீட்டை தங்களுடன் வைத்துகொள்ளுங்கள் என்றபோது .பாக்தாத்திலுள்ள இந்திய தூதகரத்தால் எனக்கு வழங்கப்பட்ட கடவுசீட்டை வாங்கிபார்த்தபின் ஏன் சொல்கிறேன் என்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர் .


  அவர்களை மும்பையில் தேர்ந்தெடுக்கும்போதே நேர்முகத்தேர்வில் இங்கு நிலவும் அசாதரண சூழ்நிலையை தெளிவாக சொல்லியுள்ளனர் .அதனால் பலரும் முக்கிய ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை எனவும் எதையும் சந்திக்கும் மனநிலையுடேனே வந்துள்ளனர் .



  முன்பு பக்குபா தொடர் குண்டுவெடிப்பில் என் கண்முன்னே சில நாட்களில் மனம் பிறழ்ந்த லக்ஷ்மணை பற்றி ஈராக் போர்முனை அனுபவம் 5 ம்  பதிவில் குறிப்பிட்டுருந்தேன் .மீண்டும் ஈராக்கிற்கு பணிக்கு வரும் பொருட்டு மும்பை அலுவலகத்தில் லஷ்மனை  பார்த்ததாக ஒருவர் சொன்னார் .அதை கேட்டபோது அதிர்ச்சியும் ,ஆச்சரியமுமாக இருந்தது .குணமடைந்தவர் மீண்டும் ஏன் இங்கே வரவேண்டும் ?முன்பு உண்மையாக அவர் மனபிறழ்வு அடைந்தாரா அல்லது அவர் அப்படி நடித்தாரா ?என விடைகிடைக்காத கேள்விகள் பல எழுந்தது .லஷ்மண் மட்டுமே அதற்க்கு விடை சொல்ல முடியும் .அப்போதே ஐம்பது வயதை கடந்திருந்தார் .இப்போது பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது .அவரை சந்தித்து மனதிலுள்ள கேள்விகளுக்கு விடைகாண விளைகிறேன் .
  


     அதுபோல் என்னுடன் இருந்த ஜோக்கிம் விடுமுறையில் சென்று திருமணம் செய்துவிட்டு இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு வந்தவன் திக்ரித் குண்டுவெடிப்பில் இனி இங்கு பணிசெய்ய இயலாது என இந்தியாவிற்கு சென்றான் .மீண்டும் இரண்டு மாதத்திற்கு பின் வேறு முகாமிற்கு வந்ததாக அறிந்தேன் .


   மனிதமனம் உறுதியில்லாதது என நினைத்துகொண்டேன்.பாக்தாத் விடுதியில் வந்த மூன்று தினங்களுக்கு பின் தான் எனது கடவுசீட்டை வாங்க என் நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்ததாக சொன்னார்கள் .
  கடவுசீட்டுடன்  விடுதியின் வரவேற்பறைக்கு சென்றபோது .பக்குபாவில் என்னுடன் பணிபுரிந்த முனாவர் நின்றுகொண்டிருந்தான் .என்னை அடையாளம் கண்டுகொண்டான் .பக்குபா குண்டுவெடிப்பில் ஒரு காலை இழந்தவன் .எங்கள் நிறுவனம் ஜெர்மனியில் உயர்தர மருத்துவ சிகிச்சையளித்து .மனிதவளத்துறையில்  உயர்பதவியும் கொடுத்து பணிக்கு வைத்து கொண்டது .


  செயற்கை கால்களுடன் அவனால் நடக்கவும் முடிந்தது .அவனால் பாக்தாத் நகர வீதிகளில் அச்சமின்றி நடமாடவும் முடிந்ததை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது .என்னுடன் நான்கைந்து பேரின் கடவுசீட்டுகளை பெற்றுகொண்டு .விமான சீட்டு உறுதியானதும் உங்கள் பயணதேதிகளை சொல்ல்கிறேன் என்றான் .


    எப்போது என கேட்டேன் .எனது திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது நான் விரைவாக செல்ல வேண்டுமென்றேன் .ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே பாக்தாத் –அம்மானுக்கு (ஜோர்டன் )விமானத்தை இயக்குகிறது .நமது நிறுவனத்திற்கு வாரத்தில் முப்பதுபேர் மட்டுமே அதில் பயணிக்க அனுமதி என்றான் முனாவர் .


   உன் விஷயம் எனக்கு முன்பே தெரியும் .நீ திக்ரிதிலிருந்து புறப்பட்டே அன்றே எங்களுக்கு செய்தி வந்தது உன்னை விரைவில் இந்தியா அனுப்பி வைக்குமாறு .ஆனால் பாக்தாத் –அம்மான் செல்லும் விமானத்தில் இன்னும் இடம் உறுதியாகவில்லை .முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்.

   விடுதியறையில் செல்வராஜ் என்றொருவனை சந்தித்தேன் .மும்பையிலிருந்து இங்கு வந்தவன் பதினைத்து நாட்களுக்குள்ளாக இந்தியா திரும்பி செல்வதாக சொன்னான் .


  விமானத்தில் ஈராக் வந்திறங்கியபோது அவனது பயண பைகள் வந்து சேரவில்லை .உடுத்திருந்த ஆடையை தவிர மாற்று ஆடை இல்லை அவனிடம் .ஒரு வாரம் அனகோண்டா என்னும் முகாமில் பணிசெய்திருக்கிறான் .இருந்தாலும் அவனுக்கு மனம் ஒன்றவில்லை பணியில் .

  தன்னுடைய பொருட்களை இழந்த கவலை வேறு திரும்பி செல்வதாக சொன்னான் .அவனது கதையை கேட்டபின் சிலர் தங்களிடம் இருந்த உடைகள் ,சோப்பு ,இன்னபிற பொருட்கள் என கொடுத்ததில் ஒரு பைக்கான பொருட்கள் சேர்ந்துவிட்டன .அதனால் ஒருவன் ஒரு பையையும் கொடுத்து அவற்றை எடுத்து செல்லுமாறு சொன்னான் .


  பாக்தாத் விடுதிக்கு வந்த ஏழாம் நாள் எனக்கு தகவல் வந்தது மறுநாள் எட்டாம்தியதி காலை பயணம் என .காலை ஏழு மணிக்கு விடுதியில் தயாராக இருக்கும்படி சொன்னார்கள் .


   அன்று மாலையில் திக்ரித் முகாமிலிருந்து என்னுடன் ஊர் செல்ல வேண்டிய உண்ணி,பிரான்சிஸ் ,கில்ராய் ,தென்னாப்ரிக்காவின் மேலாளர் ஜாக் உட்பட ஆறு பேர் பாக்தாத் விடுதிக்கு வந்துசேர்ந்தனர் .என்னை பார்த்ததும் நீ இன்னும் போகவில்லையா ?என்ன காரணம் என வினவினர் .

   அவர்கள் வந்த பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் கழற்றபட்டு குண்டு துளைக்காத இரும்பு பிளேட் வைத்து வெல்டிங் செய்யபட்டிருந்தது அனைவரும் இருக்கை இல்லாமல் பேருந்தின் தரையில் அமர்நதுதான் பயணித்ததாக சொன்னார்கள் .
 நான் ஊருக்கு செல்லாமல் இன்னும் இங்கிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .

  இங்கு வந்து ஒரு வாரத்திற்கு பின் தான் விமானசீட்டு ஏற்பாடு செய்ய முடிகிறது என்றேன் .நாங்களும் இங்கு ஒரு வாரம் இருக்க வேண்டுமா என கேட்டனர் .என்னுடன் பத்து நாட்களுக்கும் மேலாக சிலர் 
இங்கிருப்பதை சொன்னேன் .

ஷாகுல் ஹமீது

11-12-2016

Sunday, 4 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 27

  
        
              திக்ரித் – பாக்தாத் திகில் பயணம்
  
  முழு வேகத்துடன் வண்டி போய்கொண்டிருந்தது கண்ணிலிருந்து மறைவதுவரை சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன்.

  முன்பும் ,பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர அந்த திகில் பயணம் தொடங்கியது .முன்பும்,பின்பும் உள்ள வாகனங்கள் வளைவுகளில் இரு பக்கவாட்டுகளில் (வலது,இடது )வந்து எங்கள் வண்டியை தொடரும்  . பொதுவாக பயணங்களில் ஒரு இலக்கும்,உத்தேசமாக சென்றுசேரும் நேரமும் தெரியும் பயணிப்பவர்களுக்கு .எனது அன்றைய திக்ரித் –பாக்தாத் பயணத்தில் இலக்கை சென்று சேருவேனா என உறுதியற்ற பயணமாக துவங்கியிருந்தது.வண்டியுனுள் ஒரு பதட்டம் நிறைந்திருந்தது .மனதில் பயமும் .யாருடனும் பேசிக்கொள்ளவேயில்லை அதுவும் மனம் இறுக்கமாக இருக்க ஒரு காரணமாயிற்று .

  திக்ரித்திலும் தொடர்ந்துவந்த சாலையிலும் இடிபாடுகளுடன் கட்டிடங்களும், போரில் சிதைந்த நகரமும்,கந்தலாடை அணிந்த மக்களையும் காணமுடிந்தது .

 சாலையெங்கும் ராணுவவீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி வாகனங்களில் ரோந்து சுற்றிவருவதையும் பார்த்தேன்.நாங்கள்  வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தது ,அது ஒருவழிப்பாதை எங்கள் வாகனங்கள் நின்றதும் துப்பாக்கியுடன் எங்கள் பாதுகாப்பு வீரர்கள் கீழறங்கி நின்றுகொண்டனர் .

  எதிர் திசையில் வாகனங்கள் வரத்தொடங்கியதும் எங்கள் வண்டியை திருப்பி எதிர் திசையில் உள்ள சாலையில் போக சொன்னார் குழுவின் தலைவன் .எதிரில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருந்தது. வண்டியை நிறுத்தவேண்டாம் மெதுவாக போய்கொண்டே இருங்கள் என்றான் குழுத்தலைவன் .

  சில ராணுவ வாகனங்கள் எதிரில் வந்தபோது  மட்டும் லேசாக வேகத்தை குறைத்து அவர்களை பார்த்து கையசைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.அவர்களும் வெள்ளைகார்களை கண்டுவிட்டால் ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள் .ஒரு கிலோமீட்டருக்கு  பின்னரே  மீண்டும் சரியான சாலையில் எங்கள் வாகனங்கள் பயணிக்க ஆரம்பித்தது. அதுவரையில் பாதுகாப்பு வீரர்கள் எங்கள் வண்டியின் கதவுகளுக்கு வெளியேதான் நின்றுகொண்டிருந்தனர்.

   இரண்டரைமணிநேர பயணத்துக்குபின் ஒரு முகாமுக்கு சென்று சேர்ந்தோம். அங்கே ஒருவர் இறங்கிகொண்டார் .அங்கிருந்த உணவு கூடத்தில்  மதியஉணவு சாப்பிட்டுவிட்டு பின் பறப்படுவோம் என்றனர் .நான் இரண்டு சீஸ் சாண்ட்விட்ச்ம் ,ஒரு டி போர்ன் ஸ்டேக்ம் சாப்பிட்டேன் .

 முன்பே குறிப்பட்டதுபோல  இருவர் அங்கிருந்து பாக்தாத் செல்லும் பொருட்டு எங்களுடைய வண்டியில் ஏறிகொண்டனர்.என்னை வேறொரு வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னார்கள் .இப்போது நான் முன்னால் செல்லும் வண்டியில் இருந்தேன் .
  
   அந்த வண்டியின் ஓட்டுனர் ஈராக்கி அவன் ஈராக்கி உடையணிந்திருந்தான் அதுவும் பாதுகாப்பு யுக்திதான் .முன் இருக்கையில் இருக்கும் குழு தலைவனின் உத்தரவுப்படி வண்டியின் வேகத்தை ,குறைத்தும்,கூட்டியும் ஒட்டவேண்டும் .உள்ளூர் ஈராக்கிக்கு ஆங்கிலம் தெரியாது .குழுத்தலைவன் சொல்லும் உத்தரவுகளை நடு இருக்கையில் என் அருகில் இருந்த வீரன் ஒருவன் அரபியில் மொழிபெயர்த்துகொண்டிருந்தான் .

    பாக்தாத் நகரை நெருங்கும்போது எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு ஈராக்கியின் கார் நின்றுவிட்டது .மூவ் மூவ் என்றபடியே எங்கள் வீரர்கள் கீழே இறங்கிவிட்டனர்.எங்களுடைய வண்டிகள் செல்ல வழியில்லதவாறு சாலையின் நடுவே அந்த கார் பழுதாகி நின்றது. அந்த காரின் ஓட்டுனர்  எவ்வளோ முயன்றும் வண்டியை நகர்த்த இயலவில்லை .

  எங்கள் குழு தலைவன் எங்கள்  காரோட்டியிடம் புஷ் ஹிம் என்றான். அதை அரபியில் மொழி பெயார்த்ததும் கரோட்டி பழுதாகி நின்ற அந்த வண்டியின் பின்புறத்தில் மெதுவாக மோதி தள்ளிக்கொண்டு பக்க வாட்டில் நிறுத்தி சாலையில் வழியை உருவாக்கினான் .அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வண்டிகாரன் அரபியில் எதோ திட்டிகொண்டிருந்தான் .எதோ கெட்டவார்தைகள் என நினைத்துகொண்டேன் .

 இது என்ன அராஜகம் என தோன்றியது .சொந்த நாட்டிலேயே சுதந்திரம் பறிக்கப்பட்டு ,அந்நியர்களால் துன்புறுத்தப்படும் நிலையில் ஈராக்கிய மக்கள். மாலையில் பாக்தாத் வந்து சேர்ந்தோம் .மனதிலிருந்த பரபரப்பும் ,பதட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதை உணர்ந்தேன் .
 
 பாக்தாத் சாலைகள் முன்பு மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள உள்கட்டமைப்புகளை(பாலங்கள் ,சாலைகள் ...) உருவாக்கியதில் இந்தியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர் .இப்போது சரியான பராமரிப்பின்றியும், அழியாத போர்சுவடுகளுடனும் காணமுடிந்தது.உலகமே நாலுகால் பாய்ச்சலில் முன்நோக்கி செல்லும்போது ,ஈராக் பின்நோக்கி செல்லும் அவலம் .

 பாக்தாத்தின் சாலையில் ஒரு வண்டி என்னை அழைத்து செல்ல தயாராக நின்றுகொண்டிருந்தது .அதனருகில் நிறுத்தி எனது பயண பையை எடுத்துகொள்ளுமாறு சொன்னார்கள் .என்னை அழைத்துவந்த குழுவின் தலைவன் நாங்கள் வேறு முகாமிற்கு செல்கிறோம் இவர்கள் உன்னை விடுதியறைக்கு அழைத்து செல்வார்கள் என்றார் .நான் அணிந்திருந்த கவச உடையையும், தலை கவசத்தையும் திரும்ப வாங்கிகொண்டனர் .

   குழுதலைவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி கூறினேன் .அவர்கள் சிறிதும் தாமதிக்காது புறப்பட்டு சென்றனர் .என்னை அழைத்துசெல்ல வந்திருந்த விடுதியின் மேலாளர் தலை வெளியே தெரியாதவாறு குனிந்து அமர்ந்து கொள்ளுமாறு சொன்னார் .பத்து நிமிட பயணத்தில் விடுதியை அடைந்ததும்  என்னிடம் வண்டியிலிருந்து இறங்கி வேகமாக விடுதிக்குள் செல்லுமாறு சொன்னார் .
  
   அவர்களே எனது பயண பைகளை கொண்டு வந்து தந்தனர் .முன்பு விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது நான் தங்கியிருந்த அதே விடுதி அங்கிருந்த மேலாளரும் ,சில பணியாளரும் நான் ஏற்கனவே சந்தித்தவர்கள்.ஒரு அறைசாவியை தந்து போக சொன்னார்கள் .நிறைய இந்தியர்கள் அங்கே தங்கியிருந்தனர்.பெரும்பாலானோர் நான் பணி செய்த அதே நிறுவனத்தை சார்ந்தவர்கள் .

    முன்பு சிலர் விடுதியிலிருந்து  வெளியே செல்ல அனுமதித்தனர் .இப்போது விடுதியின் வரவேற்பறைக்கு அருகில் வரவேண்டாம் எனவும் அறையிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தினர் .இரவில் குப்புசும்,உப்பும், மிளகுதூள் இட்ட அவித்தகோழியும் தந்தனர் .

  இரவில் தூங்கிகொண்டிருக்கும் போது அருகில் எங்கோ குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன்.பின்பு தூக்கமே இல்லை.அது பழகிய சப்தம்தான் ஆனால் இப்போது அது ஒரு பய உணர்வை தருகிறது .

    காலையில் நிறைய இந்தியர்களை சந்தித்தேன் .கடந்த பலநாட்களாக இங்கு தங்கியிருப்பவர்கள் .சிலர் ஊருக்கு செல்வதற்கும்,சிலர் வேறு முகாமிற்கு செல்வதற்காகவும் விடுதியில் இருப்பதாக தெரிந்தது.இங்கே இந்திய உணவு கிடைப்பதில்லை எனவே விடுதியில் தங்கியிருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து சாதமும்,கறியும்,கூட்டும் சமைப்பதாகவும் விடுதி மேலாளர் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதாகவும் அறிந்தேன் . அன்று மதிய சமையலுக்கு என்னையும் உதவி செய்யும்படியும் வேண்டினர் .
 
 அன்று அரிசி சோறும் ,கோழி குழம்பும் ,வெள்ளரிக்காய் ,காரட் ,தக்காளி ,வெங்காயம் ,காப்சிகம் சேர்த்த சாலடும் செய்தார்கள் .நான் சாலடுக்கான காய்களை நறுக்கிகொடுதேன் .

  எப்போது நான் இந்தியா செல்வேன் என எந்த தகவலும் இன்றி இருதினங்கள் கழிந்தது .விடுதி மேலாளரிடம் கேட்டேன் .உன் நிறுவன ஆட்கள் வருவார்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.மீண்டும் ஊர் செல்லும் நாளை எதிர்பார்த்து பாக்தாத் விடுதியறையில் காத்திருந்தேன் .

ஷாகுல் ஹமீது ,

04-12-2016

Wednesday, 30 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 26


                              விடை கொடுத்த சதாமின் அரண்மனை

  திக்ரிதிலிருந்து பாக்தாத் செல்வது தான் கடினம் .சாலை போக்குவரத்து பெரும் சிரமமாக இருந்தது .எனது மானேஜர் ஆலன்குக் என்னை ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சிசெய்கிறேன் என்றார் .அதற்கான கட்டணம் அறுநூறு டாலரை தானே செலுத்துவதாக உறுதியளித்தார் .

  ராணுவத்திற்காக பணிபுரியும் சில கம்பனிகளின் ஹெலிகொப்டர்கள் பாக்தாத்திற்கும் மற்ற இடங்களுக்கும் செல்லும் .அதில் அவர் முயற்சித்தபோது முடியாது என்றே பதில் வந்தது.

   அமெரிக்கர்களுக்கும் ,மற்ற வெளிநாட்டவருக்கும் அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை வைத்திருந்தனர் .அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என ஆலன் குக் என்னிடம் சொன்னார். (third nation country ) நாங்கள் துணை ஒப்பந்த நிறுவனத்துக்கு கீழ் வேலை செய்வதால் எங்களுக்கு அது வழங்கப்படவில்லை .
 
  அமெரிக்க நிறுவனத்தின் கீழ் வேலை செய்த அனைவருக்கும் அமெரிக்க அரசால் அந்த அடையாள அட்டை வழங்கபட்டிருந்தது .இருந்தாலும் அமெரிக்க நிறுவன அதிகாரி வில்லியம் என்னிடம் நான் ராணுவ தலைமை அதிகாரியுடன்  பேசிப்பார்க்கிறேன் உனது திருமணம் விரைவில் இருப்பதால் நீ கண்டிப்பாக செல்லவேண்டுமென சொல்கிறேன் என சொல்லி சென்றார் .

   ராணுவ ஹெலிகொப்டரிலும் பயணம் செய்ய அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என  கமொண்டோவை சந்தித்துவிட்டு  வருத்ததுடன் என்னிடம் சொன்னார். என்னால் உனக்கு உதவ முடியவில்லை ஐயாம்  சாரி என்றார் .

  ஹெலிகொப்டரில் சென்றுவிட்டால் குறிப்பட்ட தியதியில் இந்தியா சென்றுவிடலாம் என்ற எனது  இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது .ரமலான் முடிந்து இரண்டாம் ஆண்டாக பெருநாளையும்  முகாமிலேயே கொண்டாடினோம் .

  அமெரிக்கர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  நன்றி செலுத்தும் நாளும் (thanksgiving day) அவர்கள் வெகு சிறப்பாக ,வித,விதமான சிறப்பு உணவுகளுடன் கொண்டாடினர்.ஆவியில் வேகவைத்த முழு வான்கோழி இறைச்சி இந்த பண்டிகையின் முக்கிய உணவாக இருந்தது .

  மூத்த நண்பர் கலீல் பாய் தினமும் என்னிடம் குறிப்பிட்ட தியதியில் உனது திருமணம் நடக்கும் என்பார் .நான் எனது பிரார்த்தனைகளில் உனக்காவும் வேண்டிகொள்கிறேன் என்பார் .இப்படி அவர் சொல்வது என்னை சமாதானபடுத்தவே என நினைத்து கொள்வேன் .

   டிசம்பர் 1 ம் தியதி அன்று காலை என்னை சந்தித்த கலீல் பாய் .நீ கண்டிப்பாக ஊர் செல்வாய் நான் இன்று உனக்காக அதிகமாக பிரார்த்தனை செய்தேன்.மீண்டும் உன் குடும்பத்தினர் நிச்சயித்த நாளன்று உன் திருமணம் நடக்கும் என்றார் .நான் சிரித்துவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன் .
 
   அன்று மூன்று கார்கள் முகாமுக்குள் வந்தன .கவச உடையும், துப்பாக்கியும் ஏந்திய காவலர்கள் படைசூழ இருந்தனர் .யாரோ முக்கிய அதிகாரி ஒருவர் வந்ததாக தெரிந்தது .

  அன்று காலை பத்துமணிக்கு  பணியில் இருக்கும் போது அலுவலகத்தில் பணிபுரியும் பிலால் என்னை நோக்கி வேகமாக  வந்துகொண்டிருந்தான். என்னுடன் பணியிலிருந்த முருகன் பாய் பிலால் உன்னை அழைக்கிறான் என்றான் .

  அவசரமாக வந்த பிலால் .திக்ரித் ஐ சுற்றியுள்ள முகாம்களில் ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அதிகாரி வந்துள்ளார் .அவர் அடுத்து செல்வது பாக்தாத் ஆகவே மானேஜர் ஆலன்குக் உனது விஷயத்தை சொல்லி உன்னை பாக்தாத்வரை அழைத்துசெல்ல வேண்டுகிறார்.பாதுகாப்பு கருதியும்,வண்டியில் இடம் இல்லை எனவும் அவர் மறுக்கிறார் .

 நீ உடனே வா நீ நேரில் அவரிடம் பேசினால் அவர்களுடன் நீ செல்ல வாய்ப்பு கிடைக்கலாம் என்றான் .பிலாலுடன் அவசரமாக அலுவலக அறைக்கு சென்றேன் .ஆலன்குக் என்னைபற்றியே அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் .

  நான் சென்று அலுவலக வாயிலில் நின்றேன் .பிலால் கொஞ்சம் தள்ளி நின்று உள்ளே போ என சைகை செய்தான் .அதே நேரம் என்னை கண்ட ஆலன்குக்  ஷாகுல் கம் இன் என என்னை அழைத்து  அந்த அதிகாரியிடம் என்னை அறிமுகபடுத்தினார் .

  அவர் என்னிடம் இந்தியாவில் எங்கே இருக்கிறாய் ,திருமண தியதி எப்போது என விசாரித்தார் .பின் சில நிமிடங்கள் நாங்கள் மூவரும் இருந்த அந்த அறை மௌனமாக இருந்தது .உனது பயண பைகள் எத்தனை, எவ்வளவு பெரியது என கேட்டார் .என்னிடம் ஒரு அட்டைபெட்டியும் ,ஒரு சிறிய பையும் இருப்பதாக சொன்னேன் .

  பதினைந்து நிமிடத்திற்கு மேல் நான் காத்திருக்க முடியாது .சீக்கிரமாக புறப்பட்டு வா என்றார் .அக்டோபர் 25  ம் தியதி புறப்பட தாயாரான என்னுடைய பயண பை எதையும் நான் திறக்கவே இல்லை .எல்லாம் தாயாரவே இருந்தது .

  அறையை விட்டு வெளியே வந்ததும் முருகன் என்ன என கேட்டான்.என்னை அழைத்துசெல்ல ஒப்புக்கொண்டதை சொன்னதும் என்னைவிட முருகன் தான் அதிக மகிழ்ச்சியடைந்தான் .புறப்படு பாய்,சீக்கிரம் ஆடை மாற்றிகொள் .தேவையானதை மறக்காமல் எடுத்துகொள் என என்னுடன் வந்தான் .முன்பு தீ விபத்தில் கூடாரம் எரிந்து பலரும் அனைத்தையும் இழந்திருந்ததால் .பெரும்பாலானோரின் கடவுசீட்டு உடலின் ஒரு உறுப்பு போல கழுத்தில் தொங்கிகொண்டிருக்கும் .நானும் அப்படிதான் .கடவுசீட்டு எப்போதும் கழுத்தில் தொங்கிகொண்டிருக்கும் .

  என்னுடைய பைகளை அவனே வண்டியின் அருகில் கொண்டு வைத்தான். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன் .நண்பர்கள் கலீல் பாய் ,விஜயகுமார் ,கிருஷ்ணமூர்த்தி அவசரமாக வந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர் .நான் கிருஷ்ணமூர்த்தியிடம்,திரும்பி வரமாட்டேன் உன் பணத்தை நான் எடுத்துகொண்டால் என்ன செய்வாய் என கேட்டேன் .உன் கல்யாணத்துக்கு செலவு செய்ததாக நினைத்துகொள்வேன் என்று சொல்லி சிரித்தான் .

   துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பையில் என்ன இருக்கிறது என வினவினர்.எனது துணிகள் மட்டுமே என்றேன் .துப்பாக்கி ,குண்டுகள் எதுவும் இல்லையா என்றனர் .சிரிப்பையே பதிலாக சொன்னேன் .

   என்னை வண்டியில் ஏற சொல்லிவிட்டு .சில நிமிடங்களில் துப்பாக்கியும் கவச உடையும் அணிந்த ஒருவர் என்னருகே வந்து என்னை வண்டியிலிருந்து கீழிறங்க சொன்னார் .எனக்கும் ஒரு குண்டு துளைக்காத தலை கவசமும் ,ஒரு கவச உடையும் தந்தார் .அவர் தன்னை அந்த பாதுகாப்பு குழுவின் தலைவர் என அறிமுகபடுத்திகொண்டு .நாங்கள் செல்லவிருக்கும் திக்ரித் –பாக்தாத் பயணம் பற்றி ஒரு விளக்கம் தந்தார் .

  நாம் செல்லவிருக்கும் மொத்த பயணதூரம் 228 கிலோமீட்டர் .இடையில் ஒரு முகாமுக்கு சென்று மேலும் ஒருவரை இறக்கிவிட்டு அங்கிருந்து இருவரை  அழைத்து கொண்டு பாக்தாத் சென்று சேருவோம் .அதிக பட்சம் நான்கு மணிநேரமாகலாம் .நாம் பாதுகாப்பாக பாக்தாத் போய் சேருவோம் .

  உனது வண்டியின் ஓட்டுனர் ராணுவத்துக்கு நிகரான  ஒரு அதிகாரி .நமது மூன்று வண்டிகளிலும் ,செயற்கைக்கோள் தொலைபேசியும் .ரேடியோவும் உள்ளது .நீ நடுவில் உள்ள வண்டியில் இருப்பாய் .முன்பும்,பின்பும் ஒரு வண்டி தொடர்ந்து வரும் .ஏதாவது காரணத்தால் வண்டி நின்றால் கண்டிப்பாக உனது வண்டியிலுள்ள அதிகாரியின் உத்தரவு இல்லாமல் நீ கீழே இறங்க கூடாது .

   அப்படியே இறங்கினாலும் கண்டிப்பாக ஓடக்கூடாது .நான் சொல்வதை புரிந்துகொண்டாயா என கேட்டார் .ஆம் என்றேன்.ஆலன் குக்ம் ,நண்பர்களும் ஹாவ் அ ஸேப் ஜார்னி என கையசைக்க வண்டி புறப்பட்டது.அது பஜெரோ கார் பின் இருக்கையில் இரு துப்பாக்கி ஏந்திய வீரர்கள்,நடு இருக்கையில் நானும் அந்த அதிகாரியும் ,என் அருகிலும் ஒரு காவலர் துப்பாகியுடன் .

 முகாமின் வாயிலில் மூன்றாம் முறையாக வருகிறேன் .வாயிலில் நின்ற அமெரிக்க ராணுவம் எங்களை கீழே இறங்கி சோதனைக்கு பின் ஏறும்படி சொன்னார்கள் . இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு பய உணர்வையே தந்தது எனக்கு .ஊருக்கு போனால் கல்யாணம் .போய் சேருவோமா என உறுதியில்லாத அந்த கடைசி திகில்பயணம் துவங்கியது .

  இனி ஒருமுறை சதாமின் அரண்மனைக்கு வரப்போவதில்லை என கண்ணில் இருந்து மறைவதுவரை அந்த அரண்மனை வாயிலை நோக்கியிருந்தேன் .முழு வேகத்துடன் வண்டி முன் நோக்கி செல்ல துவங்கியது .

ஷாகுல் ஹமீது

27-11-2016

Friday, 25 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 25

                                                      காத்திருந்த நாட்கள் 

     என்னுடன் ஊர் செல்லவேண்டிய  குழுவில் உண்ணி,பிரான்சிஸ்,கில்ராய் உட்பட மொத்தம் ஆறுபேர் .மற்றவர்கள் விடிந்தால் ஊருக்கு செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள் .

   காலை ஒன்பது மணிக்குத்தான் பணிக்கு செல்ல வேண்டும் .வழக்கமாக அதிகாலை தொழுகைக்கு பின் தூங்க செல்வேன் .அன்று தூக்கமே வரவில்லை .

    காலையில் மற்றவர்களுக்கு விபரம் சொன்னேன் .மானேஜர் ஆலன் குக்கிடம் கேட்டோம் .எனக்கு எதுவும் தெரியாது மின்னஞ்சல்களை இன்னும் பார்க்கவில்லை .பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றார் .

    பின்பு எங்களை சந்தித்து இன்று ஒரு போராட்ட அழைப்பு விடுத்துள்ளனர் ஈராக்கிய கிளர்ச்சியாளர்கள்.அதனால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தபட்டுள்ளது உங்களை அழைத்து செல்லும் காவலர்கள் அடுத்த சில நாட்களில் வருவார்கள் .தியதி இன்னும் உறுதிசெய்யவில்லை .விரைவில் தகவல் வரும் .நான் அவர்களுடன் தொடர்பில் உள்ளேன் உங்களை விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாட்டை நான் செய்வேன் என்றார் .

  அனைவருக்கும் பெரிய ஏமாற்றமாக இருந்தது. சில தினங்களுக்கு பிறகு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இயல்பாக எங்கள் பணிகளில் ஒன்றிவிட்டோம் .அடுத்த சில  நாட்களுக்கு பிறகு மானேஜர் ஆலன் குக் ஐ மட்டும் அழைத்துசெல்ல ஒரு காரும்,பாதுகாப்பு வீரர்களின் ஒரு காரும் வந்தது .ஈகிள் நெஸ்ட் எனும் வேறு முகாமிலிருந்து ஒரு அலுவலர் வந்த அதே காரில் ஆலன் குக் ம ஏறி சென்றார் .

   நான் ஆலன் குக் ஐ சந்தித்து கேட்டேன் .நாங்கள் செல்வது எப்போது என நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன் .விரைவில் நீங்கள் செல்வீர்கள் என சொல்லிவிட்டு காரிலிருந்து எங்களை பார்த்து கையசைத்துவிட்டு  சென்றார்  விடுமுறைக்கு .

   அவர் செல்வது அவரது தாய்நாடான இங்கிலாந்துக்கு .பிரான்சிஸ் திட்டிக்கொண்டே இருந்தான் .வெள்ளகாரனுக்கு மட்டும் வண்டி சரியான தேதில வருது .நமக்கு மட்டும் வண்டி ஏன் அனுப்பல என ஏமாற்றத்துடன் புலம்பினான்.

   பின்பு எந்த தகவல்களும் இல்லாமலாயிற்று .நானும் பிரான்சிசும் தினமும் சந்திக்கும்போது  செய்தி ஏதாவது இருக்கா என கேட்டுகொள்வோம் .அவனாக ஊகித்து ஒரு தியதியில் நாம் செல்வோம் என சொல்வான் .

  நான் என் குடும்பத்தாரிடம் சொல்லியிருந்தேன்.நான் ஊர் வந்த பின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும் என .இருந்தாலும் நான் அக்டோபரில் ஊர் செல்வது உறுதியாகியிருந்ததால் .டிசம்பர் ஒன்பதாம் தியதி திருமண நாள் குறிக்கப்பட்டு ,பெண்வீட்டார் மண்டபம் முன்பதிவு செய்திருந்தனர் .

    முகாமில் உள்ள மற்றவர்கள் ஊர் செல்லவேண்டிய எங்களை பார்த்து ஏளனத்துடன் சிரிப்பதும் ,நாளை நீங்கள் செல்லும் வண்டி வரும் என கிண்டலாக பேசுவதும் எங்களுக்கு பழகிபோயிருந்தது .விஜயகுமார் என்னை பார்க்கும்போது எனக்கு கல்யாணம் ,எனக்கு கல்யாணம் என சொல்லி கிண்டலடிப்பான் .

     அடுத்த இரண்டுநாட்களில் நீங்கள் செல்கிறீர்கள் என்பார்கள். செல்வதற்கு முந்தைய நாள் ரத்தாகிவிட்டது என செய்திவரும்.        முன்பெப்போதும் இப்படி ஆனதே இல்லை .குறிப்பிட்ட நாளில் சரியான நேரத்தில் வண்டியும் பாதுகாப்பு வீரர்களும் வருவர் .விடுமுறைக்கு செல்பவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வர் .

   ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை எங்கள் பயணம் உறுதிசெய்யப்பட்டு பின்பு ரத்தானது .விடுமுறைக்கு சென்ற ஆலன் குக் முகாமுக்கு திரும்பி வந்தார் அவரின் மூன்று வார விடுமுறை முடிந்து .

     எங்களிடம் இப்போது சாலை போக்குவரத்து மிக ஆபத்தாக உள்ளதாகவும் பயணம் செல்வது மிக கடினம் என  சொன்னார்கள் .ஆனால் உயர் அலுவலர்கள் மட்டும் அவர்கள் விடுமுறைக்கு  போவதும் வருவதுமாக இருந்தனர்.

  அப்போது குளிர்காலம் துவங்கியிருந்தது ,ஒரு குளிர்நாள் இரவில் மனமகிழ் மன்றம் சென்றிருந்தோம் .அங்கே ஆலன்குக்,அமெரிக்க அலுவலர் வில்லியம் உடன் வந்திருந்தார் .வில்லியம் என்னை பார்த்து ஷாகுல் ன் முகத்தை பார் மிக சோர்ந்து போய்விட்டான் என ஆலன்குக்யிடம் சொன்னார். நான் ஊருக்கு செல்லும்போது இவர்கள் செல்வதற்குரிய ஏற்பாடுகளை முழுமையாக செய்துவிட்டு சென்றிருந்தேன் .ஆனால் நான் திரும்பி வந்தபிறகும் இவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்றார் .
  
   எனக்கு தெரியும் ஷாகுலின் திருமனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது .அவனது பெற்றோர் அவனை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என .விரைவில் உன்னை மட்டுமாவது அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்றார் ஆலன் குக் .
 
   நாங்கள் ஊர் செல்லும் ஆறுபேரும்  கூடி பேசி வேலைக்கு செல்வதில்லை என முடிவு செய்தோம் .நான் ஆலன் குக் ஐ அவரது அலுவலத்தில் சந்தித்து நாங்கள் வேலைக்கு வரமாட்டோம் என்றேன் .உங்கள் விருப்பம் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் .

    நாங்கள் ஆறுபேரும் பணிக்கு செல்லவில்லை .சாப்பிட மட்டும் உணவு கூடம் செல்வேன் .இரவு ஒன்பது மணிக்குமேல்தான் நண்பர்கள் பணி முடிந்து வருவர் பத்து மணிவரையில் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.இரவு பணிக்குசெல்பவர்கள் மாலையில் சந்தித்து சிறிதுநேரம் உரையாடலாம்.பகலில் கொஞ்சம் தூங்கியும் ,தொலைக்காட்சி பார்ப்பதுமாக இரு நாட்கள் கடந்தன .

  இருந்தாலும் ஒரு முழு பகல் வேளையை என்னால் சும்மா இருந்து கழிக்க இயலவில்லை. எந்த வேலையும் இன்றி அடுத்து எத்தனை நாட்கள் இப்படியே  இருக்கவேண்டிவரும் என நினைக்கும்போது அது ஒரு பெரும் அவஸ்தையாக தோன்றியது. இரவில் படுத்திருப்பேன் உடல் களைப்பில்லாததால் தூக்கமின்றியும், அதை தொடர்ந்து வரும் எதிர்மறை எண்ணங்களும் என்னை நிம்மதியிழக்க செய்தன .என் இயல்புக்கு சமந்தமில்லாத எண்ணங்களால் மனம் அமைதியின்றி  ,கொந்தளிப்பாக  இருநாட்கள் கடந்தன.

   எண்ணங்கள் இப்படிதான் துவங்கும் .ஆலன் குக் ன் அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குவது அல்லது உணவு கூடத்தின் வாயில் கதவில் இருக்கும் கண்ணாடியை உடைப்பது இப்படி கட்டுபடுத்த முடியாத தொடரும் எண்ணங்கள் என்னை வதைத்தது .இவை செயலாகும் போது அதன் விளைவுகளை எதிர் கொள்ள என்னால் இயலாது என என் மனதுக்கு தெளிவாக தெரிந்தது .
  
   அதை கடந்து செல்ல என்ன வழி என மனம் போராடியது.இரண்டாம் நாள் இரவு தூக்கமேயின்றி படுத்திருந்தேன் ,நெடுநேரத்திரற்க்குபின் மனம் உறுதியாக ஆணையிட்டது ,வேலைக்கு செல்,வேலைக்கு செல் .அது ஒன்றே வழி இந்த சூழ்நிலையை கடந்து செல்ல முடியும் என .
  
  யாரிடமும் கலந்தாலோசிக்காமல் காலையில் குளித்துவிட்டு  எட்டுமணிக்கெல்லாம் ஆலன்குக் ஐ பார்த்து இன்று முதல் நான் பணிக்கு வருகிறேன் என்னால் அறையில் சும்மா இருக்க முடியவில்லை .எனக்கு வரும் கெட்ட எண்ணங்களை அவரிடம் சொன்னேன். ஆம் நானறிவேன் வேலையின்றி சும்மா இருப்பது பெரும் தண்டனையாக இருக்கும் என்றார். இப்போதும் அதே பதிலை சொன்னார் .உன் விருப்பம் நீ தாரளமாக பணிக்கு வரலாம் என்றார்  மிக்க நன்றி என சொல்லிவிட்டு உடனே பணிக்கு சென்றுவிட்டேன் .

   உண்ணி மறுநாள் பணிக்கு வந்தான் ,தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களும் பணிக்கு வந்துவிட்டனர் .பிரான்சிஸ் மட்டும் உறுதியாக பணிக்கு வர மறுத்துவிட்டான் .


   ஊர் செல்லும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தோம்.

  ஷாகுல் ஹமீது ,
   25-11-2016

Tuesday, 22 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 24

தடைபட்ட பயணம் 

நேபாளிகள் பனிரெண்டுபேரின் படுகொலை,இன்னும் சிலரை பிணைய கைதிகளாகவும் பிடித்துவைத்திருந்தனர் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதனால் இந்திய அரசாங்கம் இந்தியர்கள் ஈராக்கில் பணிக்கு செல்ல தடை விதித்தது. அதை எங்கள் முகாமின் அறிவிப்புபலகையில் ஓட்டியிருந்தனர். அதனால் விடுமுறையில் செல்லும் யாரும் திரும்பி வர இயலாது என சொன்னார்கள் .

   ஆனாலும் பல நிறுவனங்கள் துபாய் வழியாகவும் ,ஜோர்டான் வழியாகவும் பணியாளர்களை இராக்கிற்குள் கொண்டு வந்து கொண்டே இருந்தனர் .
   
நான் அங்கிருக்கும்போது  என் குடும்பத்தார் எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்தார்கள் .2004 ஆகஸ்ட்ல் , அக்டோபர் மாதம் ரமலான் அதன் பிறகு திருமணம் என முடிவு செய்தார்கள் .
  நான்  அக்டோபர் மாதம் இந்தியா செல்ல வேண்டுமென விண்ணப்பித்தேன்.அப்போது ரமலான் நோன்பு காலம் தொடங்கியிருந்தது. ரமலானில் அதிக தாக்குதல்கள் இருக்காது என்றனர் .ஆனால் வழக்கத்தைவிட அதிக தாக்குதல் நடந்துகொண்டிருந்தது .
   எங்களுடன் இருந்த அதிகாரிகளுக்கு ஏழு வாரம் வேலையும் மூன்று வார விடுமுறையும் .அவர்கள் அடிக்கடி ஊருக்கு போய் வருவதுபோலிருக்கும். எங்களுக்கு ஆறுமாதங்களுக்கு பின் மூன்று வாரம் என இருந்தது .பின்பு வருடத்திற்கு ஒருமுறை என்றாகியது .அப்போது தாக்குதல்கள் அதிகமாக இருந்தபடியால் சிலருக்கு சரியான நேரத்தில் விடுமுறைக்கு செல்ல இயலவில்லை .சிலரை சிறப்பு வாகனத்தில் அழைத்து சென்றார்கள் .
 
   அப்போது பாக்தாத் விமான நிலையம் ஒரு தனியார் நிறுவனத்தால் செயல்படதொடங்கியிருந்தது .பாக்தாத்வரை சாலை பயணம் மிக கடினமாகி விட்ட நாட்கள் அது .
  அக்டோபர் 25 ம் தியதி இந்தியா செல்லும் ஆறு பேர்கொண்ட குழுவில் என் பெயரும் வந்தது .அதன் பின் இருந்த பத்து நாட்கள் மகிழ்ச்சியாக சென்றது. அப்போது ரமலான் நோன்பு காலம் .தினமும் நோன்பு வைக்கும் நண்பர்களை அதிகாலையில் சாப்பிட நான் எழுப்பி விடுவேன் .மூன்று மணிக்கு எழுந்து இருட்டில் அந்த இளங்குளிரில் வேறு வேறு அறைகளில் இருக்கும் நண்பர்களின் படுக்கையை கண்டுபிடித்து எழுப்புவேன் .

 அறையில் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் மற்றவர்களின் துயில் கலையாமல்  அதை செய்யவேண்டும் .கலீல் பாயை லேசாக உடலில் கைபட்டதா  என உணர்வதற்குள் அவர் எழுந்து  சலாம் சொல்வார் .ரோஷன்,அயுப் மற்றும் சிலரை சில வினாடிகள் மெதுவாக தட்டினால் எழுந்துவிடுவர்.ஜின்னா  பாஷா அவனை எழுப்புவது மிக கடினம் உடலில் தட்டியும்,அடித்தும் படுக்கையிலிருந்து தூக்கி அவனை உட்கார வைத்தால் ஆம் இதோ வருகிறேன் என்பான் .
  
   கழிவறை சென்று ,கை கால் கழுவி,ஆடை மாற்றி  உணவு கூடத்திற்கு செல்லும் போது அவனது அறையை பார்த்தால் மீண்டும் தூங்கிகொண்டிருப்பான்.மீண்டும் எழுப்பி நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் வா என நாங்கள் சாப்பிட செல்வோம். இரவு பணியிலிருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை  அரிசி சாதமும் ,பருப்பும் செய்து எங்களுடன் இணைந்து கொள்வர் .

  மாலையில்  நோன்பு திறக்கும் நேரம் நோன்பிருக்கும் சில ராணுவ வீரர்களும் எங்களுடன் இணைந்து கொள்வர் .உள்ளூர் ஈராக்கி அவனுடைய வீட்டு பேரீச்சம் மரத்தில் காய்த்த பேரீச்சம்பழமும் ,துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள்,தர்பூசணிபழம் ,ஆப்பிள் அல்லது மாம்பழ பழசாறும் ஏதாவது ஒரு வகை கேக்கும் வைத்திருப்போம் .
   13,14 மணிநேரம் சொட்டு நீர் கூட அருந்தாமல் இருந்துவிட்டு நோன்பு திறந்ததும் எதுவும் சாப்பிடமுடியாது .ஒரு பேரீச்சை,சில பழதுண்டுகள் ,ஒரு டம்ளர் பழச்சாறு ,அல்லது நீர் அருந்தினால் வயிறு நிரம்பிவிடும் .உடல் மீண்டும் ,மீண்டும் தண்ணீரையே கேட்கும் .மாலை நேர தொழுகைக்குபின் இரவில் எட்டு மணிக்குதான் இரவுணவு சாப்பிடுவோம் .

 ரமலானில் ஒரு நாள் பகல் பொழுதில் அமெரிக்க ராணுவ வீராங்கனை லிலானி யை உணவு கூடத்திற்கு வெளியே சந்தித்தேன்.மதிய உணவு முடிந்து வெளியே உள்ள மரநிழலில் உள்ள சிமென்ட் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.கையில் சுவையான கோல்டு கோன் ஐஸ்கிரீம்  இருந்தது. என்னை கண்டதும் ஐஸ்க்ரீம் ஐ மறைத்துவிட்டு ஹாய் என்றாள்.ஹாய் லிலாணி நலமா என கேட்டேன்.மிக்க நலம் ஷாகுல் உங்கள் நோன்பு காலம் தொடங்கிவிட்டது நீ நோன்பிருக்கிறாயா என கேட்டாள்.
ஆம் நீ ஏன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாய் நீ சாப்பிடு என்றேன்.எங்கள் மூத்த அதிகாரிகள் ரமலான் துவங்கிய அன்றே எங்கள் அனைவரிடமும் சொல்லியிருக்கிறார்கள் .இந்த ஒரு மாதம் இசுலாமியர்கள் பகலில் நோன்பிருப்பார்கள் .அதனால் அவர்கள் முன்பு உண்பதையும், பருகுவதையும் நீங்கள் தவிர்க்கவேண்டுமென சொல்லிவிட்டு கையிலிருந்த ஐஸ்க்ரீம் ஐ குப்பைதொட்டியில் போட்டுவிட்டு நான் பின்னர் வேறு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொள்கிறேன் என்றாள்.
  எவ்வளவு உயர்ந்த பண்பு அவர்களுடையது என எண்ணி கொண்டேன். பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள் என ஆட்சியிலும் ,அதிகாரத்திலுமிருப்பவர்கள் கீழ் பதவியிலிருப்பவர்களுக்கு சொல்லி தருகிறார்கள் .நான் பார்த்த பெரும்பான்மையினர் இன,மத,மொழி வேறுபாடின்றி பழகுபவர்கள் .பிறரை தன்னைப்போலவே சமமாக கருதுபவர்கள் .
நீ எப்போது ஊருக்கு போகிறாய் என என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு  நீ திருமணம் செய்யும் பெண்ணுடன் பேசினாயா என கேட்டாள்.
 பின்பு  லிலானி தன் சட்டைப்பையிலிருந்து  பத்து நிமிட மதிப்பு கொண்ட இரு தொலைபேசி அட்டைகளை தந்து உன் பெண்ணிடம் பேசு என அழகிய பற்கள் தெரிய புன்னைகைத்தாள்.உங்கள் ஊர் பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .நீ திருமணதிற்கு முன் பெண்ணை சந்திக்க முடியுமா என கேட்டாள்.ஆம் நான் ஊர் சென்றதும் பார்ப்பேன் என்றேன் .
    லிலானி  நான் முகாமிலிருந்த கடைசி மூன்று மாதங்கள் என்னுடன் நல்ல நட்புடன் பழகியவள் .இந்திய கலாச்சாரத்தையும்,இந்தியா மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தாள் .நம்மை பற்றியும் நம் நாட்டை பற்றியும் நிறைய அவர்கள் படிக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன் .

   லிலானி பதவி உயர்வு கிடைத்து தோள்பட்டையில் நட்சத்திரம் பதிக்கும் (piping ceremony ) விழா மனமகிழ் மன்றத்தில் நடந்தது .என்னை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தாள்.அன்று பணி காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை .
    அக்டோபர் மாதம் 24 ம் தியதி காலையிலேயே முருகன் பாய் இன்னைக்கு கடைசிநாள் .கவனமா வேலைசெய்  என்றான் . மறுநாள்  ஊர் செல்கிறேன் என்ற உற்சாகம் காலையிலேயே தொற்றிகொண்டது .தெரிந்த அனைவரிடமும் விடை பெற்றுகொண்டேன் .
   கலீல் பாயும் ,கிருஷ்ணமூர்த்தியும் வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர் .துறையூர் விஜயகுமார் பணமும் ,மலிவு விலையில் வாங்கிய பனிரெண்டு பனியன்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்க தந்தான் .என்னிடம் நான் உபயோகித்த பொருட்கள் மட்டுமே இருந்தன .அதனால் ஒரு பயண பையும் நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்க தந்த பொருட்களை ஒரு அட்டை பெட்டியிலும் கட்டி கொண்டேன் .
    மாலை பணி முடிந்து என்னுடன் ஸ்டோர்ஸ் ல் வேலை செய்த அனைவரிடமும் நன்றி கூறி விடை பெற்றேன் .அடுமனையில் உள்ள ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சந்தித்து போய் வருகிறேன் என்றபோது,அனைவரும் என்னை வாழ்த்திவிட்டு காலையில் வண்டி புறப்படும் முன் சந்திக்கிறோம் என்றனர் .
   வீட்டிற்கும் தொலைபேசியில் அழைத்து சொன்னேன் .நாளை முகாமிலிருந்து புறப்பட்டு பாக்தாத் செல்வோம் .அங்கு சென்றபின்னர் தான் விமான சீட்டு கிடைக்கும் .இந்தியா வந்து சேரும் நேரம் ,நாள் பின்னர் தெரிவிப்பேன் என்றேன் .

  அன்று இரவு உணவுக்குப்பின் நண்பர்களுடன் வெகுநேரம் பேசிகொண்டிருந்துவிட்டு தாமதமாக தூங்க சென்றேன் .அதிகாலை மூன்று மணிக்கு கடிகாரம் அழைப்புமணியை ஒலிக்கும் முன்பே எழுந்து நண்பர்களையும் எழுப்பிவிட்டு நோன்பு வைப்பதற்காக சாப்பிட உணவு கூடத்திற்கு சென்றோம் .பணியிலிருந்த கதிர் பாய் ஆம்பிளேட் போட்டு தரவா என கேட்டான் .இனி நாம் சந்திப்பது முடியுமா என தெரியாது  அதனால் உன்னை சந்தோஷபடுத்த இது எனக்கு கடைசி வாய்ப்பு என்றான்.சிரித்துக்கொண்டே சரி என்றேன் .
 
      உணவை தட்டில் எடுத்து விட்டு உணவு கூடத்திற்கு உள்ளே சென்றமர்ந்தோம் .அப்போது அங்கு இரவு பணியில் இருந்த அமெரிக்க பெண்மணி .இன்று சாலை போக்குவரத்து ,வான்வழி அனைத்தும் நிறுத்த அழைப்பு விடுத்துள்ளனர் .அதனால் இன்று உங்கள் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றாள் .
 அதிகாலையே அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது அன்று .
 ஷாகுல் ஹமீது ,

21-11-2016.