Tuesday, 26 November 2019

முகங்கள்

                                                                       பஞ்சர் பீர் முகமது
                                       
இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டு சுசூகி மோட்டார் பைக் ஒன்று வாங்கினேன் .அது 1997 ஆம் ஆண்டு தாயரிக்கபட்டது .அப்போது அதற்கு ஒன்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன் .அதில் பாட்டரி கிடையாது .கப்பலுக்கு போகும் போது  மூடி வைத்துவிட்டு செல்வேன் . நான் கப்பலில் இருக்கும் ஆறு முதல் எட்டு மாத காலம் அப்படியே நின்றிருக்கும் கப்பலிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வருவதற்கு சில தினங்கள் முன்பு நண்பர் மணியிடம்(மெக்கானிக்) சொன்னால் வீட்டிற்கு வந்து பைக்கை கொண்டுபோய் தண்ணீர் அடித்து கழுவி ,புதிதாய் கொண்டுவந்து வீட்டில் நிறுத்தியிருப்பார்,.நான் விடுமுறையில் இருக்கும் மூன்று மாதமும் அதையே உபயோகிப்பேன் .
    
   என்னிடம் எனது மூத்த மகன் ஸாலிம் “வாப்பா மணி மாமா ஒரே அடியில் ஸ்டார்ட் ஆக்கிவிட்டது”என்பான். செலவு ரூ முந்நூறுக்கும் குறைவு. .எப்போதும் தலைகவசம் அணிந்தே வண்டி ஓட்டுவதால் என்னை எங்கும் எப்போதும் போலீசார் நிறுத்தியதே இல்லை .இரண்டாண்டுகளுக்கு முன் மணி என்னிடம் “வண்டியை எப் சி காட்டுவோம்” என சொன்னார். “இந்த வண்டியை வித்தா மூவாயிரம் ரூவா கூட கிடைக்காது ,எப் சி காட்ட ஆறாயிரம் செலவு ஆகும்” என்றார். “பரவாயில்லை” எப் சி காட்டி ,வண்டியயை என் பெயரில் மாற்றினேன் .

   சமீபத்தில் நான் மணியிடம் “மைலேஜ் மிக குறைவாக கிடைப்பதால் வண்டியை மாற்றலாம்” என சொன்னேன். “இந்த வண்டிக்கு நீங்கள் பராமரிப்பு செலவேதும் செய்வதில்லை.அதிக பட்சமாக ஒருமுறை அறுநூறு ரூபாய் மட்டும் ஆகியது .இது மிக நல்ல வண்டிஆனாலும் வாகன சட்டங்கள் மாறிவிட்டதால் இதுபோல் பழைய வணடிகளை சாலையில் ஓட்டமுடியாது” என்றார் .எனது இளைய சகோதரன் “வண்டியை மாற்றுவதாக இருந்தால் விற்கவேண்டாம் என்னிடம் தந்துவிடு,எனது பழைய பொருட்கள் சேகரிப்பில் இது இருக்கட்டும்” என்றான் .

    கடந்த பத்தாண்டுகளில் எனது வண்டி பஞ்சர் ஆனது இருமுறை மட்டுமே .இரண்டாண்டுகளுக்கு முன் பின்பக்க சக்கரம்  பஞ்சர் ஆனபோது பஞ்சர் கடை அருகில் இருந்தது .அவரால் டயரை கழட்டவே இயலவில்லை .வேறொரு கடைக்கு கொண்டு சென்று ஜாக்கி வைத்து கழட்டியதாக சொன்னார். “ஸார் டயர களத்தி நாளாச்சோ?”என கேட்டார் .ஆம் எட்டாண்டுகள் என்றேன் .அதன் பின் நேற்று காலை முன்பக்க சக்கரம் பஞ்சராகிவிட்டது  சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது.வண்டியை நிறுத்திவிட்டு எனது கைபேசியில் ‘நடமாடும் பிஸ்மில்லாஹ் பஞ்சர்’ ஓட்டும் பீர்முகமதுவின் எண் இருக்கிறதா என தேடினேன். அவரை அழைத்து ஸ்டேடியம் சுசுகி எனது பைக் பஞ்சராகி நிற்கிறது என்றேன் . “காக்கா  ஐந்து நிமிடத்தில் வருகிறேன் .குட்டியானை ஆட்டோவில் வருவேன்” என்றார் .பத்து நிமிடங்களுக்குள் ஸ்டேடியம் அருகில் வந்துவிட்டார் .பீர் முகம்மது கருப்பு கண்ணாடி அணிந்து,கையில் செல்போனுடன் இருந்தார் .ஆட்டோவை ஓட்டஒருவர் ,பஞ்சர் பார்க்க ஒருவர் என இரு உதவியாளர்கள் அவருடன் இருந்தனர் .

         எனது வண்டியின் முன் சக்கரத்தை கொஞ்சம் சிரமப்பட்டுதான் கழட்டினார்.டியூப் மாற்ற வேண்டும் என்றார் .அவரிடமே புதிய டியூப் இருந்தது .அதனால் எனக்கு ஒரு அலைச்சல் மிச்சமாகியது.டியூபுக்கு ரூ முன்னூறும் ,சக்கரத்தை கழட்டி மாட்ட ரூ நூறும் பெற்றுக்கொண்டு விடை பெற்றார் .அரை மணிநேரத்தில் நான் நின்ற இடத்திலேயே எனது வாகனம் எந்த சிரமும் இன்றி தயாராகிவிட்டது .அவரை ஒரு படம் எடுத்துகொண்டபின் சலாம் கூறி விடை பெற்றேன் .

      பதினைந்து ஆண்டுகளாக இதே தொழிலை செய்து வருகிறார் .ஆரம்பத்தில் ஒரு இருசக்கர வாகனத்தின் பின்புறம் ,ஒரு காற்றடிக்கும் கம்ப்ரசரும் ,பஞ்சர் ஓட்ட தேவையான தண்ணீர் ,தண்ணீர் தொட்டிகளுடன் நாகர்கோவில் நகர் முழுவதும் எங்கு யார் கூப்பிட்டாலும் சென்று பஞ்சர் ஒட்டி கொடுப்பார் .அவரது கடின உழைப்பும்,நடமாடும் பஞ்சர் என்ற புதிய யோசனையும் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது .ஒன்றரை ஆண்டுக்கு முன் பைக்கிலிருந்து ஆட்டோவாக மாற்றியிருக்கிறார் .அதனுள் பெரிய கம்ப்ரசர்  வைத்துள்ளார் .இப்போது கார்களுக்கும் பஞ்சர் ஒட்டி கொடுக்கிறார் .
   
       நகரில் பெரும்பாலானவர்களிடம் அவரது எண் இருக்கிறது .வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் பிஸ்மில்லாஹ் நடமாடும் பஞ்சர் பீர் முகமதுவின் எண்ணை (9843758861)வைத்திருப்பது தேவையான ஒன்று .வேறு நகரங்களில் இப்படி நடமாடும் பஞ்சர் இருக்கிறதா என தெரியவில்லை .இந்த தொழில் தெரிந்தவர்கள் அவரை போல வேறு ஊர்களிலும் முயற்சிக்கலாம்.தனது உழைப்பாலும்,காலத்திற்கேற்ப புதிய யோசனையை செயல் படுத்தியதாலும் வெற்றி பெற்ற பீர் முகம்மதுவுக்கு எனது வாழ்த்துக்கள் .
ஷாகுல் ஹமீது ,
26 nov 2019