ஆடு
மூர்த்தி
சீக்கிரமே வந்து நிலைகொள்ளாமல் அங்கும்,இங்கும் ஓடி குரைத்துக் கொண்டிருந்தாள்.மூர்த்திக்ககூட
போனேன் சின்னவிளைக்ககிட்ட ஆடு மேய போன இடத்துல ரெண்டு குட்டி போட்டு கிடந்தது. அந்த
இடத்துக்கு கூட்டிட்டு போன பொறவுதான் மூர்த்தி அமைதியானது.
நான் பிறந்துவளர்ந்த
காந்தாரிவிளை தெருவில் என் வீட்டை சுற்றியிருந்த பல வீடுகளில் பசு மாடு இருந்தது .
சரஸ்வதி மைனி வீடு,செல்லப்பன் தாத்தாவீடு ,ரொட்டி காரர் வீடு,வாட்சர் மாமா
வீடு,செய்யதலி அண்ணன் வீடு என.நான் பால் வாங்க வாட்சர் மாமா வீட்டுக்கு போவேன்
.மாமா இல்லேன்னா மாமி தான் அந்த மாட்டுல பால் கறக்க முடியும் .
மாட்டின் அருகில் செல்ல
எத்தனிக்கும்போது “லே மோனே கிட்ட வராதே
மாடு சவுட்டிரும்” என்பார் மாமா .அவர் மாட்டின் மடியை தண்ணீரால் கழுவிவிட்டு
எண்ணெய் போல எனத்தையோ தடவுவாரு ,அதுக்கு பொறவு கட்டை விரலை மடித்து மற்ற நான்கு
விரல்களுக்கும் இடையில காம்பை வைத்து லேசாக இழுப்பார் சுர்ர்ர் ,சுர்ர்ர் என
இடக்கையில் உள்ள பளபளக்கும் பித்தளை சொம்பில் நுரையுடன் பால் நிறையும்.காலை ,மாலை
என இருவேளையும் ஆறு அல்லது எட்டு லிட்டர் பால் கறக்கும் .பின்னர் என்னிடம் உள்ள
சொம்பு,அல்லது வாளியில் பால் மாமி எனக்கான பாலை தருவார்.
எனக்க வாப்பா
கம்பெனிவேலை முடிந்து நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்தபின் பிளசர்ல
திங்கள்சந்தைக்கு போய் ஒரு ஆடு வாங்கிட்டு வந்தோம் .மணவாளகுறிச்சி-திங்கள்சந்தை
ஆறு கிலோமீட்டர் தான்.ஆடு வாங்கி வந்தது ஒரு பெரு நிகழ்வு அன்று.செவல நிறத்துல
நீள் காதுகளுடன் ,வயிறு வீங்கி பெருசா இருந்தது .அது ஒரு சென ஆடு.
அந்த ஆடு வீட்டுக்கு வந்ததும் ,வீட்டுக்க சைடுல
ஒரு ஓல பெர கட்டப்பட்டது . “ஆட்டுக்கு வீடு வேணும்லா,மள வந்தா நனைய பிடாதுல்லா மாமா”
என வாப்பா எதிர் வீட்டு மீரான்பிள்ளை
அப்பாவிடம் சொன்னார்.ஆட்டுப் பெரையின் ஒரு முக்குல ஒரு தறி அடிச்சி ஆடு
கட்டப்பட்டது .ஆடு வந்த பொறவு உம்மாக்குதான் வேல கூடுதல்.அருகிலுள்ள வீடுகளில்
முன்பே சொல்லி வைத்து கஞ்சிதண்ணி வாங்கி
புண்ணாக்கும்,கொஞ்சம் உப்பும் கலந்த தண்ணி கொடுக்க ,குளிப்பாட்ட என .அந்த ஆடு மூணு குட்டிய போட்டுட்டு செத்துபோச்சி,ஒரு கிடாய்குட்டியும் ,ரெண்டு பெட்ட குட்டியும். பெட்டகுட்டிகள்
இரண்டும் வெள்ளையாகவும்,கிடாய்குட்டி தள்ளய போல செவல நிறத்திலும் இருந்தது .
செக்கினா வாப்புமாதான்
அதுக்கு புட்டியில் பாலூட்டி ,குளிப்பாட்டி வளத்துனாவோ.ஆடுகள் வளர்ந்தபோது
மீண்டும்,மீண்டும் குட்டிகளை ஈன்றது .எப்போதும் தள்ளையும் குட்டியுமா வீட்டில் எட்டு முதல் பத்து ஆடுகள் நிக்கும்.ஆடுகள்
பெருகியபோது காலையில் மேய்ச்சலுக்கு
அவிழ்த்துவிடுவோம் அல்லது குண்டு விளை,ஆறான் விளையில் நீள கயிற்றில்
தென்னமரத்துல கெட்டிபோடுவோம் மூர்த்தி ஆடுகளுடன்
பாதுகாவலனாக செல்லும் .மூர்த்தி குட்டியாக
இருந்தபோது அடிபட்டு ரோட்டில் கிடந்ததை எனது அக்கா கருணையோடு வீட்டிற்கு
கொண்டுவந்தாள் வளர்ந்தபின் அதுவும் வீட்டில் ஒருத்தியாகி விட்டது .
வாப்பா எப்போதும் மூர்த்தியை
நினைவு கூர்வார் “நாய் நன்றி உள்ளதாக்கும்” என .மூர்த்தி பெட்ட
பட்டிதான். பேப்பட்டி ஊரில் ஆறேழு பேரை கடித்தபின் மூர்த்தியையும் கடித்து விட்டது
.மனிதர்கள் வைத்தியம் பார்த்தார்கள். நல்ல
மீன்கறி வெச்சு சோறு தின்ன மூர்த்தி எழும்பவே இல்ல .மூர்த்தி போட்ட குட்டில ஒன்னு
மீண்டும் மூர்த்தி ஆகவிட்டது.வீட்டில் மீன் சமைக்காத நாட்களில்உம்மா ஒரு
கிண்ணத்தையும் எடுத்துட்டு “பாத்தும்மா மீனு வாங்குனியா,ராஜம் கறிக்கு என்னது
பட்டி ரெண்டுநாள மீன்கறி இல்லாம சாப்பிடல்லன்னு சொல்லி யாருட்டயாவது இருந்து
மீன்கறி வாங்கி வந்து மூர்த்திக்கு சோறு குடுப்பா .
மூர்த்தி சில நாட்களில் தனியாக சீக்கிரமாகவே வந்து நிலைகொள்ளாமல் அங்கும் ,இங்கும் ஓடி
குரைக்கும்.ஏதோ விபரீதம் என புரிந்துகொண்டு அவள் அழைத்துச்செல்லும் இடத்திற்கு
போனால் ஆடு புதைகுழியில் சிக்கி வெளிவர இயலாமல் தவித்துகொண்டிருக்கும்,சில நாட்கள்
வேறு நாய்கள் ஆட்டை கடித்து .நடக்கமுடியாமல் கிடக்கும் ஆட்டை தூக்கி கொண்டு
வருவோம் .
கிடாய் குட்டிகள் நிறையவே காணமல் போயிருக்கின்றன.செம்மரி ஆடு மேய்க்க
வரும் கோனான் அந்த ஆட்டு கூட்டத்துடன் இதையும் ஓட்டி சென்றிருப்பான் . இரண்டு
மூன்று நாட்கள் தேடுவோம்.பின்னர் உறுதியாகும் அது திருடப்பட்டுள்ளது என .
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே வாப்பா எழுப்பும் ஆட்டை கழுவ வேண்டும் என
.வள்ளியாத்துக்கு எல்லா ஆட்டையும் கொண்டுபோய் குளிப்பாட்டி கொண்டு வருவோம் .சில
சமயம் மூர்த்தியையும் வசமா புடிச்சி வாப்பா ஆத்துல எறியும் அது ஒரு நீச்சல்
அடிச்சி,கரையேறி உடலை சிலுப்பிட்டு நிக்கும் .வீடு வந்து சேரதுக்கு முன்ன எல்லா
ஆடும் நல்லா ஈரம் ஒணங்கிவிடும் .ஆட்டை வாரம் ஒரு முறையாவது குளிப்பாட்டல்லன்னா
கருப்பட்டி காப்பி குடிக்கத்துல லேசா நாறும். வீட்டுல பால் வாங்குவதே இல்லை
ஆட்டுப்பாலை காய்ச்சி கருப்பட்டி சேர்த்த காப்பிதான் காலையும்,மாலையும்.
மருருந்துக்காக சிலர் ஆட்டுப்பால் கேட்டுவருவார்கள்.ஆடு வளத்துனா பெரிய வருமானம்
இல்லன்னாலும் ஆத்திர,அவசரத்துக்கு உதவும்.அண்ணன் இஞ்சினியரிங் காலேஜில்
படிக்கும்போது பீசு கெட்ட பைசா இல்லன்னா அதுதான் உதவுச்சி .வாப்பா காலையில் கிடாய்
குட்டியை கொஞ்ச நேரம் பார்த்துட்டு,அத்துலுட்ட சொல்லிட்டு போறேன் என கண்களை
துடைத்துவிட்டு கம்பெனிக்கு போவும் .ஆடு வியாபாரி அத்துல் வந்து
தொள்ளாயிரமோ,ஆயிரமோ குடுத்துட்டு கிடாயை அவுத்துட்டு போவாரு .
வீட்டின் பின்புறமுள்ள
உரக்குண்டு எப்போதும் ஆட்டாம் புளுக்கையால் நிறைந்திருக்கும் .எல்லா வீட்டிலும்
அப்போது உரக்குண்டு இருக்கும் வீட்டில் உள்ள
சமையல் கழிவுகளும் பழத்தோல்,காய்கறி கழிவுகள்,மீன்,இறைச்சிகழிவுகள் என
எல்லாம் அதில்தான் கொட்டப்படும்.அப்போ பிளாஸ்டிக்பைகள் கிடையாது.வயல் நடவுக்கு
முன் வந்து பணம் கொடுத்து காளை வண்டியில் அல்லது டெம்போவில் ஏற்றி செல்வார்கள்
.ஏதாவது தறுதலாக உரக்குண்டில் போட்டிருந்தால் உரம் எடுப்பவர்கள் அதை
வீட்டுக்காரரிடம் கொடுத்துவிடுவார்கள்.
எனது மூத்த தந்தை ஷேக்மீரான் தான் உரமெடுக்க ஆளை அழைத்து வருவார் .
“ஓய் நாடாரே எல்லாம் ஆட்டாம் புளுக்கையாக்கும்,நல்ல வெல போட்டு குடும்”என்பார்
.நாற்பது ரூபாய் அதிகம் அப்போது .எல்லா மரக்கிளையில் உள்ள இலைகளையும் உரத்திற்காக வெட்டி
கொண்டு செல்வார்கள் .அப்போது இயற்கை உரம்
தான் பயன்பாட்டில் இருந்தது .
“ஆடு பெறும் போல இருக்கு,ரெண்டு மூணு நாளு செனை ஆட்டை மேயா உடாண்டாம்”என
சில நேரங்களில் வாப்பா சொல்வார். ஆடு மேய போன இடத்தில் குட்டி போட்டால் வேறு
நாய்கள் குட்டிகளை கடிக்கும் வாய்ப்பு அதிகம் . இருந்தாலும் கணிப்பு தவறிவிடும் சமயங்களில்
பிறந்த ஆட்டுகுட்டிகளை மூர்த்தி காப்பாத்தி இருக்காள் .
இருவது வருசத்துக்கு முன்ன
நாகர்கோவிலுக்கு வீடு மாறும்போது,ஆடுகளும் ,மூர்த்தியும் மட்டும் வரவில்லை .ஆடுகள்
ஒவ்வொன்றாக குறைந்து இல்லாமல் ஆனது .மூர்த்தி வயதாகி இறந்தாள்.இங்க டவுனுல ஆடு
வளத்த இட வசதி இல்ல.இருந்தாலும் பாத்திமா நகர்ல இருந்தபோது வாப்பா இரண்டு கிடாய்
குட்டிய வாங்கி வளத்துச்சி .ஒரு பெருநாள் சமயத்துல வளர்ந்த கிடாயை களவாண கள்ளன்
ஒருத்தன் ராத்திரி ஒருமணிக்கு வந்தத சின்ன புள்ள செல்லா பாத்துட்டு சத்தம்
போட்டதுல கள்ளன் ஓடி போய்ட்டான்.
ஷாகுல் ஹமீது .
30-03-2020