கப்பல் காரன் டைரி
கப்பல் காரர் ஜோசப் சுரேஷ்க்கு அஞ்சலி
கடந்த செப்டெம்பர் மாதம் பதினொன்றாம் தேதி கப்பலில் பணியில் இருந்தபோது நடந்த விபத்தில் கேசவன்புத்தன்துறையை சார்ந்த கப்பல் மாலுமி ஜோசப் சுரேஷ் மரணமடைந்தார்.
கேசவன்புத்தன்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளம்,சங்குத்துறையை அடுத்துள்ள கடற்கரையை ஒட்டிய அழகிய கிராமம்.எனது உம்மாவின் ஊர் வடக்கு சூரங்குடி சிறு வயதில் நாகர்கோவிலிலிருந்து 38 கேசவன்புத்தன்துறை பேருந்தில் ஏறி நல்லம்மா வீட்டிற்கு செல்வோம் அப்போது முதல் அந்த ஊரை அறிவேன்.நாகர்கோவில் –வடக்கு சூரங்குடிக்கு முப்பது காசுகள் கட்டணம் அப்போது.
நான் கப்பல் பணியில் இணைந்தபின் பனமா நாட்டில் அருகில் நின்றிருந்த கப்பலுக்கு சென்றேன்.அப்போது அதன் காப்டனாக இருந்தவர் கேசவன்புத்தன்துறையை சார்ந்த பீட்டர் அவர்கள். என் அண்ணனுடன் பணிபுரிந்த ஆந்திரியாஸ் எனக்கு நண்பனானார். அதன் பின் கேசவன்புத்தன்துறை ஊரில் நடக்கும் பொங்கல் விழாவிற்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து சென்றிருக்கிறேன்.
அங்கு நடந்த ஐம்பதாவது வருட பொங்கல் விழாவில் எழுத்தாளர் மீரான் மைதீனும் அதற்கடுத்த ஆண்டு யோகா குரு ஞான ரிஷி ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொள்ளும்போது உடன் சென்றிருக்கிறேன்.கேசவன்புத்தன்துறை திருச்சபையின் பங்குதந்தை எங்களை வரவேற்று,விருந்தினர் அறையில் உணவுண்டு அங்குள்ள விழாவில் கலந்து கொண்ட இனிய நினைவுகள் மனதில் நீடிக்கிறது.
அதே ஊரை சார்ந்த அனுபவமுள்ள கப்பல் மாலுமி ஜோசப் சுரேஷ் பணியில் இருந்தபோது அசாதரணமான காலநிலை மற்றும் கடல் சீற்றமாக இருந்தபோது முதன்மை அதிகாரியுடன் டெக்கில் சென்றபோது திடீரென அடித்த ராட்சத அலையில் தூக்கி வீசி சுழற்றியடித்ததில் எலும்புகள் உடைந்து முதன்மை அதிகாரி அந்த இடத்திலேயேயும் ஜோசப் சுரேஷ் ஆறு மணிநேரத்திற்கு பின்பும் மரணமடைந்தார்கள். ஆந்திரியாஸ் அந்த விபத்துகுறித்து சொன்னபோது கப்பல் தென்அமெரிக்காவின் சிலி அருகில் பயணித்துகொண்டிருந்தது.
கப்பல் கரையணைந்து ஜோசப் சுரேசின் உடல் ஒரு மாதத்திற்கு பின் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் தகவல் கிடைத்தது.காலை ஒன்பதரை மணிக்கு கேசவன்புத்தன்துறைக்கு போய் சேர்ந்தேன்.பத்தரை மணிக்கு குளிரூட்டி பொருத்திய வண்டியில் அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்ப்பதற்காக பதினைந்து நிமிடம் அவரது குடும்ப வீட்டின் முன் வைக்கப்பட்டு அங்கிருந்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு ஜோசப் சுரேசின் விண்ணேகும் இறுதி பயண திருப்பலி நடந்தது.திருப்பலியை தலைமையேற்று நடத்திய பங்குதந்தை லாரான்ஸ் ஜோசப் சுரேசின் பள்ளிதோழர்,அவரது திருமணத்தையும் அவரே நடத்திவைத்துள்ளார்.
மரியாயின் மாசற்ற திரு இருதய அன்னை ஆலயம்
ஜோசப் சுரேசின் குடும்பத்தில் உள்ள மத போதகர் அவரது பொறுமை,எளியவர்களுக்கு உதவுதல் போன்ற அவரது நற்குணங்களையும்,அவரது குடும்பம் வறுமையில் இருந்தபோது கப்பலில் பணி கிடைத்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்தார். “அண்ணன் கப்பல் வேலை இவ்வளவு கடினமானது என எப்போதும் சொன்னது இல்லை” எனவும் குறிப்பிட்டார். ஆம் கப்பல் பணி மிக கடினமானது என எவரும் அறிவதே இல்லை .எந்த கப்பல் காரனும் தனது உறவுகளில் அதுபற்றி சொன்னதேயில்லை.
இந்த கிராமத்திலிருந்து பலர் கப்பல் மாலுமிகளாக உள்ளனர்.அவரது இறுதி சடங்கில் கப்பல் மாலுமிகள்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என ஊரே திரண்டு வந்து பிரார்த்தனை செய்தது..
திருப்பலி நடக்கும்போது சர்ச்சுக்குள் காப்டன் பீட்டரை சந்தித்தேன்.அவரது நல்லடக்கம் முடிந்து அங்கிருந்து புறப்படுகையில் காப்டன் பீட்டர் கேட்டார் “சுரேசை எப்படி தெரியும்” என.
நான் அவரை பார்த்ததே இல்லை சக கப்பல் மாலுமியின் இறுதி சடங்கு பிரார்த்தனையில் கலந்துகொண்டு அவருக்காகவும் அவரை இழந்த குடும்பத்திற்காகவும் பிரார்த்திப்பது எனது கடமை என நினைத்தேன்.
சுரேசின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
ஷாகுல் ஹமீது.
09-oct-2021