Thursday, 9 November 2017

காலே-கொழும்பு


               அதிகாலை     (டிசம்பர் 15- 2016 )  இரண்டு மணிக்கே தொலைபேசி சிணுங்கியது .ஆம் ஆறரை மாதங்கள் கப்பலில் வேலை செய்துவிட்டு ஊருக்கு செல்கிறேன்.கப்பல் சவூதி அரேபியாவிலிருந்து ஜப்பானை நோக்கி செல்கிறது .எனது ஊரான கன்னியாகுமரியை கடந்து இலங்கையின் காலே அருகில் வரும்போது கப்பலின் வேகத்தை குறைத்து அருகணைந்த படகில்  என்னையும் ,சமையல்காரர் ஆன்றனியையும்,இறக்கிவிட்டார்கள் .
  இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும் கப்பலில் இருந்து இறங்குவது இதுவே எனக்கு முதல் முறை .கப்பலின் வேகத்தை குறைக்க 3 ம் நிலை பொறியாளர் தர்மா இயந்திர அறைக்கு செல்லும் போது  போனில் அழைத்து சொன்னார் .ஷாகுல் புறப்பட தயாராகு என.ஊருக்கு செல்வதற்கு முன்  கடைசி சில இரவுகள் தூக்கமின்றியும் பின் நள்ளிரவில் துயில் கலைவதும்  ,நீராடுவதும் கப்பல் பணியாளர்களுக்கு பழகியே ஆக வேண்டிய கட்டாயம்.
    மூன்றரை மணிக்கு நாங்கள் செல்ல வேண்டிய படகு எங்கள் கப்பலுடன் அருகணைந்தது அது  20மீ  நீளம் கொண்ட மிக சிறிய படகு  நான் பணிபுரிந்தது  240 மீ நீளமும் 36மீ அகலமும் 44576 மெட்ரிக் டன் எடையும் கொண்ட பிரமாண்டமான பெரிய கப்பல்  .  கப்பலும் படகும் மிக குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது.படகிலிருந்து எனக்கும்,ஆன்றனிக்கும் மாற்று பணியாளர்கள் மேலேறி வரவும் நாங்கள் கீழே இறங்கவும் தடிமனான கயிற்றில் மரகட்டையும் ,ரப்பராலான படிகளால் கட்டியிணைக்கப்பட்ட ஏணியை படகுவரை தொங்க விடப்பட்டுருந்தது ,போசனும் அவரது உதவியாளர்களும் படகிலிருந்து பயணபைகளை கிரேன் மூலமாக மேலேற்றி கொண்டிருந்தனர் .லேசான அலை இருந்ததால் கிரேனை இயக்குவது சற்று கடினம்தான் .
  அலையின் வேகத்துக்கு தகுந்தவாறு அருகணைந்த படகு ஆடி கொண்டும் ,மேலும்,கீழுமாக அலைகழித்துக்கொண்டிருந்தது.ஏணிக்கு இணையான உயரத்தில் படகு அலையில் மேலே வரும்போது தேர்ந்த சர்கஸ்காரனை போல ஏணியை பிடித்து மேலேறி வந்தார் பைக்கியார ராஜன் .
 என்னுடன் முன்பே வேலைசெய்தவர் கேரளாவின் பைக்கியாரா ராஜன்.     பிராமாதமாக சமைப்பார் .நண்பா ஷாகுல் நீ போகிறாயா? என கட்டியணைத்து விடைகொடுத்தார் .தொலைபேசி அட்டையும் ,இணைய அட்டையும் கொடுத்துள்ளேன் வாங்கிகொள் என்றேன் பைக்கியார ராஜனிடம். .
     சோமாலிய கடல் பகுதியில் நாங்கள் சென்றதால் கப்பலில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வீரர்கள் எங்களுடன் பயணித்தனர் .இலங்கையை சேர்ந்த இருவர் ,போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் .அவர்களும் ஆயுதங்களுடன் எங்களுடன் இறங்கினர்.ஜப்பானிலிருந்து சவூதி செல்லும் போது இதே காலேவில் கடந்த மாதம் 23 ம் தியதி அவர்கள் கப்பலில் ஏறிகொண்டார்கள்.
   நானும் ,ஆன்றனியும் ,பாதுகாப்பு வீரர்களும் ஏணியின் வழியாக படகில் பாதுகாப்பாக இறங்கினோம் .பயணப்பைகளும் பாதுகாப்பு வீரர்களின் ஆயுதங்களும் படகில் வந்ததை உறுதிசெய்துவிட்டு சைகை காட்டியதும் கப்பலும் ,படகும் பிரிந்து தாங்கள் செல்ல வேண்டிய பாதைகளில் பயணிக்க தொடங்கியது.கையசைத்து விடை பெற்றோம். சிறிதாகிக்கொண்டே சென்ற கப்பல் கண்களில் இருந்து மறைந்தது . இப்போது ஊருக்கு செல்வது உறுதியாயிற்று.

   முழுநிலவுக்கு  மறுநாள் என்பதால்  பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருந்தது நிலா. பயணிகள் படகு அது நாங்கள் யாரும் உள் சென்று இருக்கைகளில் அமராமல்  படகின் பின் பகுதியில் முழுநிலவை ரசித்தவாறு அமர்ந்திருந்தோம் .
 இலங்கை அன்பர்கள் அந்த அதிகாலை நேரத்திலும் தங்கள் கைபேசியில் மூழ்கியிருந்தனர் .கரையை நெருங்கும்போது நிறைய மீன்பிடி படகுகள் கடலுக்குள் சென்றுகொண்டிருந்தது .
 ஒரு மணி நேர பயணத்திற்கு பின் காலே துறைமுகத்தை  வைகரையில் அடைந்தோம் .பகலில் வந்திருந்தால் கரைபகுதியின் அழகை  ரசித்திருக்கலாம் என்றார் என்னுடன் வந்த இலங்கை நண்பர் .
 பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிகள் அடங்கிய பெட்டிகளுடன் வேறு வாகனத்திலும் ,நாங்கள் வேறு வாகனத்திலும் ஏறிகொண்டோம்.முதலில் நான் கண்ட பெயர்ப்பலகை துறைமுக வளகாத்திற்குள்ளிருந்த வைத்தியசாலை.அந்நிய தேசத்தில் தமிழ் பெயர்பலகைகளை காணும்போதும் மனம் உற்சாகமடைந்துவிடுகிறது .
பாதுகாப்பு  வீரர்கள் 

குடியுரிமை ,சுங்க சோதனைகளை முடித்து  வெளியே வரும்போது  எதிரில் இருந்த அரசமரமும் அங்கிருந்த புத்தர் சிலையும் அந்த அதிகாலை நிலவு வெளிச்சத்தில் ஜொலித்துகொண்டிருந்ததை கண்டு மெய் மறந்தேன்.அந்த அரச மரம் இந்தியாவிலிருந்து சென்றதாக இருக்கும் அசோக சக்ரவர்த்தியின்  மகள் சங்கமித்திரை பண்டைய காலத்தில் புத்தரின் செய்தியை கொண்டு அனுராதபுரம் சென்றபோது அரசமரக்கிளை ஒன்றையும் கொண்டு சென்றாளாம் அதன் வழிதோன்றல்கள் தான்  இன்று இலங்கையிலும்,ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறது . இலங்கையில் எல்லா அரசமரத்தடியிலும் புத்தர் சிலை வைக்கப்பட்டு மிக சுத்தமாக பராமரிக்கிறார்கள் .
   .

   அருகிலேயே எங்கள் நிறுவன அலுவலகம், அங்கே எங்கள் பயண பைகளை வேறு காரில் ஏற்றினர் .நன்றாக விடிந்துவிட்டிருந்தது.அங்கிருந்து கொழும்புவுக்கு 116.5 கிலோமீட்டர் தூரம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றார் ஓட்டுனர் .காரில் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்கள் ஒலித்தன .ஓட்டுனரிடம் தமிழ் தெரியுமா என்றேன் கொஞ்சமாக புரியும் என்றார் .தமிழ் படங்களை விரும்பி பார்பததாகவும் ,விஜய் ,தனுசை  பிடிக்கும் ,தனுசை ரொம்பவே பிடிக்கும் என்றார் .தனுசையா என மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதி செய்து கொண்டேன் . ..
  



காலே –கொழும்பு கார் பயணம் மேற்கு கன்னியாகுமரி மாவட்டம்,கேரளாவில் பயணிப்பது போலவே இருந்தது .சாலைகளில் தமிழ் பெயர்பலகைகள் அதை இன்னும் உறுதி செய்தது .

   கொழும்புவை நெருங்கும்போது காலை நேர பரபரப்பும் ,வாகன நெரிசலும் துவங்கியிருந்தது .இருசக்கர வாகன ஓட்டிகளும் ,பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பெண்களும் தலைகவசம் அணிந்தே செல்கின்றனர் .சாலையோரத்து வணிக வளாகங்களும் ,கடைகளும் இன்னும் திறக்கவே இல்லை .நிறைய கடைகளுக்கு கண்ணாடி கதவுகளே இருந்தது.          காரோட்டியிடம் கேட்டேன் திருட்டு போவது இல்லையா என .மிக குறைவுதான் அதையும் கண் காணிப்பு கேமரா காட்டி கொடுத்துவிடும் விரைவில் பிடித்துவிடுவர் .அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது .



  
எட்டரைக்கெல்லாம் எட்வர்ட் ஒழுங்கை(Edward lane ) யிலிருக்கும் விடுதியை அடைந்தோம் .உயர்தர நட்சத்திர விடுதி அது .கண்ணாடி அணிந்த இளம்பெண் ஆயுபவன்  என சிறிய பற்கள் தெரிய வரவேற்று கடவுசீட்டை வாங்கி எங்களது அறை சாவிகளை தந்துவிட்டு .பயண பைகள் அறைக்கு வந்துவிடும் நீங்கள் செல்லுங்கள் என்றாள். தமிழ் தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டேன் சுமாராக பேசுவேன் நன்றாக புரிந்துகொள்வேன் என்றாள் .
  அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் பலமுறை பணிபுரிந்த காப்டன் பெர்னாண்டோவை அழைத்தேன் .ஷாகுல்  நீ வருவதை முன்பே அறிவிப்பதில்லையா என கேட்டார் .மின்னஞ்சல் செய்திருந்தேன் என்றேன் .இதுபோன்ற விசயங்களை போனில் தெரிவிக்க வேண்டுமென்றார்.உன்னை நான் சந்திக்க இயலாது நான் இப்போது அனுராதபுரத்திலிருக்கிறேன்.நேற்று தான் வந்தேன் .உன்னை சந்திக்க முடியாததில் வருத்தம் என்றார் .தொலைபேசியில் தொடர்பில் இருக்குமாறு கேட்டுகொண்டார்.

  எங்களது பைகள் வந்ததும் ஆன்றனி அறைக்கு வந்தார் காலையுணவுக்கு செல்லலாம் என்றார் .உணவு கூடத்திற்கு சென்றோம் .அறை எண்ணை கேட்டுவிட்டு  எங்களை உள்ளே அனுமதித்தனர் .



  

பபே சிஸ்டம் வேண்டியதை சாப்பிடலாம் ஆப்ப சட்டியை பார்த்து கிடைக்குமா என்றேன் .பத்து நிமிடத்திற்குள் சூடாக தந்தனர் . கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு வெளியே செல்லலாம் என அறைக்கு வந்து படுத்தேன் .உடனேயே ஆன்றனி வந்து கதவை தட்டினார் .காலணியும் சில பொருட்களும் வாங்க வேண்டும் வெளியே செல்லலாம் நீயும் வா என்றார் .கடந்த ஆறரை மாதத்தில் எங்கும் வெளியில் செல்லவில்லை எந்த பொருளும் வாங்கியிருக்கவில்லை .
  காலணி கடை அருகிலேயே இருந்தது .ஆனால் அவர்கள் அமெரிக்க பணத்தை வாங்குவதில்லை எங்களிடம் இலங்கை பணம் இல்லை சாலையில் கொஞ்சம் நடந்தோம் .சம்பத் வங்கியை கண்டு நுழைந்தோம் பணம் மாற்ற வேண்டுமென சொன்னோம் .கடவு சீட்டை கேட்டார் வங்கியிலிருந்த பெண்மணி .
  மீண்டும் அறைக்கு வந்து கடவு சீட்டுடன் சென்றோம் நல்ல வெயில் கடல்  அருகில் இருப்பதால் காற்றில் ஈரப்பபதம் காரணமாக உடல் வியர்வையில் நனைந்தது .
  நாங்கள் சென்ற கடையில் உள்ள காலணிகள் ஆன்றனிக்கு பிடிக்கவில்லை நானே பார்த்து வாங்கி கொள்கிறேன் என்றார் .நான் அறைக்கு வந்து படுத்தேன் தூங்கி எழுந்து உணவருந்தி நீர்கொழும்பு போவதாக திட்டம் .

 படுத்த சிறிது நேரத்தில் மீண்டும் ஆன்றனி வா மதிய உணவுக்கு செல்வோம் என்றார்.நான் அப்போது பசியில்லாமலே சென்றேன் .அவருக்கு மாலை நான்கு மணிக்கு செல்ல வேண்டும் இரவு எட்டு மணிக்கு விமானம் .


        Fish combo  எனும் உணவுக்கு ஆர்டர் தந்துவிட்டு கொஞ்சம் பச்சை காய்கள் சாப்பிட்டேன் .கணவாய் ,நண்டு ,இறால் ,லாப்ஸ்டர் பொரித்த மீன் என ஒரு தட்டு நிறைய வந்தது .எனக்கு அது மிக அதிகம் .இவ்வளவு இருக்கும் என எதிர் பார்க்கவில்லை ,கொஞ்சம் வெள்ளை சாதம் வேண்டுமென கேட்டேன் .நல்ல சுத்தமாகவும், சுவையுடன் இருந்தது .
    

     இரண்டு மணிக்கு தூங்கி நான்குக்கு எழுந்து நீராடி அருகிலிருந்த பிம்பிலபட்டி  புகைரத நிலையம் (அங்கு அப்படிதான் எழுதியிருந்தது )சென்றேன்.கடற்கரையை ஒட்டியிருந்தது ரயில் பாதை.நல்ல கூட்டம் பணி முடிந்து ஆண்களும் அழகு பெண்களும் வீடு திரும்பும் நேரம் .

  முதலில் வந்த ரயில் கொழும்பு வரை மட்டுமே என்றனர் .இரண்டாவது வந்த ரயிலில் ஏறிக்கொண்டேன் .ஒன்றேகால் மணி நேரம் என்றனர் அப்போதே மணி ஐந்தேகால் ஆகியிருந்தது .
  ரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப் தயாரிக்கப்பட்டது .அங்குள்ள பெயர் பலகைகள் இதுவரை நான் பார்த்திராதது .மலசழ கூடம் என  கழிப்பறையில் எழுதியிருந்ததை கண்டேன் .

  கொள்ளிபட்டி ,கோமாட,மருதான,கந்தான,ஜா-எல எனும் நிலையங்களை கடந்தபின் நீர்கொழும்புவில் இறங்கும்போது இருட்டிவிட்டிருந்தது .
    வெளியில் வந்து ஆட்டோ பிடித்து கடற்கரைக்கு சென்றேன் .ஆட்டோ ஓட்டுனர் கணேசன் தமிழில் பேசினார் .

   கடற்கரை மிக குறைவான கூட்டமே இருந்தது.பெரும்பாலனவர்கள் இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர் .கடற்கரையில் ஒரு நீண்ட நடை சென்றேன் .

  வெளிச்சம் குறைவான இடத்தில் இருந்த மீன்பிடி படகில் காதல் ஜோடி ஒன்று ஓருடலாக இருந்தனர் .அவர்களை தொந்தரவு செய்யாமல் விலகியே நடந்தேன் .
  
அங்கிருந்த ஒரு கோயில் மிக அழகிய  வண்ணவிளக்குகளால் அலங்கரித்திருந்தது  என்னை கவர்ந்தது .பௌத்த ஆலயமாக இருக்கலாம் கடலை பார்த்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் .ஆட்டோ இறக்கி விட்ட இடத்திற்கே மீண்டும் வந்து பிரதான சாலையை அடைந்தபோது கேரளாவின் கோவளம் கடற்கரை சாலையில் இருப்பதுபோல உணர்வு .
  வரும்போது ஆட்டோவிற்கு நூற்றிஐம்பது கொடுத்தேன் .இப்போது முந்நூற்றி  ஐம்பது கேட்டான் .வரும்போது நூற்றிஐம்பது  தான் கொடுத்தேன் என கூறினேன் இருநூறு க்கு ஒத்து கொண்டு வந்தார் அவரும் தமிழர் .
  மணி ஒன்பதை தாண்டியிருந்ததால் கொழும்பு  கடைசி ரயிலும் சென்றிருந்தது .பேருந்து நிலையம் சென்றேன் .தனியார் வேன்கள்  இயக்க படுகிறது கொழும்புக்கு  இருபது இருக்கை கொண்ட டோயோட்டோ வேன்.
  நல்ல தரமான சாலை ஒன்றரை மணி நேரத்தில் கொழும்பு .கொழும்பு பேருந்து நிலையத்தை சுற்றி வந்தேன் .ஒரு கறுப்பு டீயும் குடித்தேன் .

  பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன் சற்று தூரத்தில் கொழும்பு புகைரத நிலையதிற்கு வெளியில் வீடில்லாத பெரும்பாலானோர் தங்கள் படுக்கையை (படுக்கை என்பது ஒரு துண்டு துணிதான் )விரித்து துயில தொடங்கியிருந்தனர் .மழை காலத்தில் இவர்கள் எங்கு படுப்பார்களோ ?

 
     

  

  அங்கிருத்த ஒரு சலூனில் முடி வெட்டி ,முக சவரம் செய்துகொண்டேன் .இலங்கை பணத்திற்கு முந்நூறு கொடுத்த நினைவு .
  அங்கிருந்து பேருந்தில் எனது விடுதியறையை அடைந்தேன் .மதியம் நல்ல மீன் உணவு சாப்பிட்டதில் இரவுணவு தேவைபடவில்லை .
  குளித்து முடித்தபோது வரவேற்பறையில் இருந்து போனில் அழைத்தார்கள் காலை உங்களை அழைத்துசெல்லும் கார் நான்கரை மணிக்கு வருமென .

    குளித்து கொண்டிருக்கும்போது எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் நினைவு வந்து .அவர் பெரும்பாலும் பயணங்களில் புதிய ஊரில் இரவில் நீண்ட நடை செல்வார் .
  மணியை பார்த்தேன் பனிரெண்டு ஐ நெருங்கியிருந்தது .கீழே வந்து பிராதன சாலையில் ஒரு கருப்பு டீ குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன் .கொஞ்ச தூரம் வந்தபின் பிராதன சாலையிலிருந்து விலகி கடற்கரையும் ,ரயில் பாதையும் அதை ஒட்டிய சாலையில் தந்தந்தனியே நடக்க ஆரம்பித்தேன் .அந்நிய தேசத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை .சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை  ஒரு இருசக்கர வாகனமும் ,ஒரு ஜீப்மும் மட்டுமே சென்றது .

   பயமின்றி நள்ளிரவில் உள்ளுரிலேயே தனியாக நடப்பது சாத்தியமில்லை .மிக பாதுகாப்பான ஊர் இது என நினைத்துகொண்டேன் .மெக்ஸிகோவின் வெராகூருஸ் லிம் நள்ளிரவில் தனியாக நடை சென்ருக்கிறேன் .
  மீண்டும் பிராதன சாலைக்கு வந்து விடுதிக்கு செல்லும் பாதையில் நடந்தேன் .பூட்டியிருந்த நிறைய வணிக வளாகங்கள் கண்ணாடி மட்டுமே இருந்தது .உள்ளே உள்ள பொருட்களை பார்க்கவும் முடிந்தது எனக்கு வியப்பாய் இருந்து .
  
இரவில் கண்ணாடி கதவால் மட்டுமே பூட்டிய கடை 
  முதலில் தேநீர் குடித்த அதே கடையில் மீண்டும் ஒரு கறுப்பு டீ குடித்துவிட்டு .அறைக்கு சென்று வரவேற்பறையில் காலை மூன்றரைக்கு என்னை எழுப்ப சொல்லிவிட்டு உடல் கழுவி படுக்கையில் ஒரு மணி .
 காலை எழுந்து நான் நீராடி முடித்தபின் தான் வரவேற்பறையிலிருந்து அழைத்தார்கள் .கார் வந்ததும் அழைக்க சொன்னேன் கார் முன்னரே வந்துவிட்டது என்றனர் .
   
       ஓட்டுனர் சபீக் இரவிலேயே வந்து விடுதிக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு  அதிலேயே தூங்கியுள்ளார் .காலையில் எக்காரணத்தை கொண்டும் தாமதமாக கூடாது என்பதற்காக .

     ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார் .சீனா இப்போது இங்கு தரமான சாலைகளை போட்டு தந்துள்ளனர் .முன் இருக்கையில் அமர்ந்ததும் சீட் பெல்டை அணிந்து கொள்ள சொன்னார் .வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை தவறாமல் கடைபிடிப்பதை கேட்டேன் சபீக்கிடம் .ஆம் இங்கு வாகன போக்குவரத்து சட்டங்கள் சற்று கடுமையாக இருக்கிறது என்றார் .குடித்துவிட்டு ஓட்டினால் என்ன தண்டனை என கேட்டேன் .கேள்வியே இல்லை உரிமம் ரத்து செய்யப்படும் .

   உரிமம் ரத்தா அப்படியெனில் யாரும் நினைத்துகூட  பார்க்கமாட்டார்கள் என நினைத்துகொண்டேன் .அதிகாலை சாலையில் வாகனங்கள் இல்லை .எங்கள் முன் ஒரு போலிஸ் ரோந்து வாகனம் மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தது .அதை நாங்கள் முந்தி சென்றோம் .நெடுஞ்சாலை முடிவில் உள்ள சுங்க சாவடியில் நாங்கள் நின்றபோது போலிஸ் ஒருவர் வந்து வண்டியை ஓரமாக நிறுத்தசொன்னார் .
 எதோ இரவு நேர சோதனை என நினைத்து கொண்டேன் .நான் இறங்கவேண்டுமா என சபீக்கிடம் கேட்டேன் வேண்டாம் என்றார்.
  ஐந்து நிமிடந்தில் வந்து விட்டார் .எங்கள் வண்டியில் பின்னால் இருந்த ஒரு சிகப்பு விளக்கு எரியவில்லை அதற்காக ஆயிரம் ரூபாய் அபதாரம் அன்று மாலைக்குள் அதை சரி செய்திருக்க வேண்டுமென கட்டளை .நாங்கள் முந்தி வந்த போலிஸ் வாகனம் தான் அது .சுங்க சாவடி வரை எங்களை பின் தொடர்ந்து வந்திருக்கிறார் குறைந்தது ஆறேழு கிலோமீட்டர்கள்.
  
    விமான நிலையத்தை சீக்கிரமாகவே வந்துவிட்டோம் .சபீக் பயண பைகளை இறக்கிவிட்டு சவாரி முடிந்ததற்கான படிவத்தில் கையொப்பம் பெற்று சென்றார் .


   ஸ்ரீ லங்கன் ஏர் லைன்ஸ் விமானம் ஏழே  முக்காலுக்கு .முன்பே இணையத்தில் இருக்கை பதிவு செய்திருந்தேன் .அதனால் அவசரமின்றி பொறுமையாக சென்றேன் .ஐம்பது நிமிட பயணம் மட்டுமே கொழும்புவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு .இதுதான் என் வாழ்வில் மிக குறைந்த நேர விமான பயணம் எந்த கடினமும் இல்லை .ஏறும் போதே அடுத்த ஒருமணி நேரத்தில் இறங்கிவிடுவோம் என்பதால் கூடுதல் உற்சாகம் .சௌதியிலிருந்து விடுமுறைக்காக ஊருக்கும் செல்லும் குமரி மண்ணின் மைந்தர்கள் விமான நிலையத்தில் நண்பர்கள் ஆகியிருப்பார்கள் போல கேலியும் கிண்டலுமாக பேசி கொண்டு அந்த காலை எட்டுமணிக்கே விமான பணிப்பெண்னிடம் ஆளுக்கு இரண்டு பீர் வாங்கி குடித்தனர் .

ஸ்ரீலங்கன் ஏர் லயன்சின் விமான பணிப்பெண்கள் மிக அழகாக சேலை கட்டியுருந்தனர் .ஆரல்வாய்மொழியில் காற்றாடிகள் சுழல்வதை விமானத்தில் இருந்து பார்க்கும்போது வீட்டிற்கு அருகில் பறந்துகொண்டிருக்கிறேன் எனும் உற்சாகம் . மகன்களுக்கு அரையாண்டு தேர்வு அதனால் சுனிதாவும் குழந்தைகளும் விமான நிலையம் வரவில்லை .

    நண்பர் நாகராஜனை அழைத்தேன்.பணிகளுக்கிடையில் விமான நிலையம் வந்திருந்தார் .என்னுடன் பயணித்த ஸ்ரீநிவாஸ் தந்தை மலையாளி ,தாய் இலங்கை .தந்தை பஹ்ரைன் நாட்டில் வேலைசெய்தபோது திருமணம் செய்து கொண்டாராம் .தந்தைக்கு உடல் நலமில்லாமல் இருப்பதால் பெற்றோருக்கு தெரியாமல் ஊர் வருகிறான்.அவர் கருநாகப்பள்ளி செல்ல வேண்டும் அவனை தம்பானூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு ஊர் போய் சேர்ந்தோம் .எப்போதும் என்னை அழைத்து செல்ல வரும் பாஸ்கரன் அண்ணனின் வாடகைக் காரில் .
  

Sunday, 5 November 2017

எனது தந்தை காலமானார்


  கடந்த(4-11-2017) சனிகிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு எனது தந்தை உடல் நல குறைவினால் காலமானார். அன்னாருக்கு என்பது வயதிருக்கும் .கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தார்.

 அவரது நல்லடக்கம் எங்கள் சொந்த ஊரான மாணவாளகுறிச்சியில் நாளை (06-11-2017)திங்கள் காலை பத்துமணியளவில் நடைபெறும் .

  தற்போதுநாகர்கோவில் அருகில் வெள்ளாடிச்சி விளையில் உள்ள  எனது தம்பி ஷேய்க் இன் வீட்டில் அன்னாரது  ஜனாஸா ( உடல்) வைக்க பட்டுள்ளது என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் .

ஷாகுல் ஹமீது
05-11-2017