கப்பல் காரன் டைரி .
மசால் தோசை
தோசை தென்னிந்திய உணவா என தெரியவில்லை.மும்பை மற்றும் வட இந்தியாவில்
தோசையை தென்னிந்திய உணவு என்றுதான் சொல்கிறார்கள். சின்ன வயசுல வாரத்துல ஒரு நாள் தான் காப்பிக்கு
தோசையோ,இட்லியோ கிடைக்கும்.பெரும்பாலும் காலத்த பழங்கஞ்சிதான் வயித்துக்கும்
குளுமையா இருக்கும்.
குமரி மாவட்ட வீடுகளில்
சுடும் தோசைக்கு வெளியூரில்,ஊத்தப்பம் என்று ஒரு பெயர் இருப்பது நான் வளர்ந்து
வெளியூர்களுக்கு சென்றபின் தான் தெரிந்துகொண்டேன் .தோசை பற்றிய நினைவுகள் சில
எழுதவேண்டும் என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது .
எனக்க
நல்லம்மாக்க வீடு இருந்தது வடக்கு சூரன்குடியில்.அவரின் வயதான காலத்தில் (அப்போது
எனக்கு பத்து வயதிருக்கும்)விறகடுப்பில்,சூட்டை பற்றவைத்து ,ஊது குழலால் ஊதி
,நன்றாக எரிய துவங்கியதும் வீட்டின் பின்புறமுள்ள தென்னந்த்தோப்பிலிருந்து விழுந்து
எடுத்த காய்ந்த மட்டைகளை வைப்பார் அது
எரியும்போது தோசை கல் சூடாகியிருக்கும்.முதுமை காரணமாக அதிக நேரம் நிற்க இயலாததால்
மர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பத்து மில்லி மீட்டர் தடிமனான தோசையை சுட்டு தருவார்.தேங்காய்
எண்ணெய் கல்லில் தடவுவதாலும் ,அன்பு கலந்திருப்பதாலும் அதன் சுவை அதிகம் .
இரண்டாயிரத்தி ஐந்தாம்
ஆண்டு எனது முதல் கப்பல்..துபாய்-ஈராக் இடைய ஓடி
கொண்டிருந்தது.அப்போது என்னுடன்,சேலம்
பாலாவும்,தேனீ சுதாகரும் இருந்தனர்..துபாயில்
கப்பல் நிற்கும்போது வெளியே சென்றால் சுதாகர் தெனிந்திய உணவகம் தேடிசென்று தோசையை
வாங்கி சாப்பிடுவார்.அவர் வெளியே வராத நாட்களிலும் எங்களிடம் "தோசை வாங்கி வா"என்பார். அங்குள்ள சரவண பவனில் ஒரு நாள் உணவுண்ண சென்றபோது ஐரோப்பியர் ஒருவர் அழகாக வேட்டி கட்டி தோசை
சாப்பிட்டு கொண்டிருந்தார் .அன்று புத்தாண்டு தினம்,அவருக்கு புத்தாண்டு வாழ்த்து
சொல்லி “தோசை பிடிக்குமா” என கேட்டேன். “ஆம் முன்பு கொஞ்சநாள் தமிழகத்தில்
இருந்தேன்”என்றார் .
கப்பலில் பெரும்பாலும்
யாரும் தோசை செய்வதில்லை.சிலர் பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் உலர்ந்த மாவில்,தண்ணீர்
கலந்து ஊத்தப்பம் செய்து தருவார்கள். இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டு
நான் பணிபுரிந்த கப்பலில் செப் ஆக இருந்தவர் கோழிக்கோடு பிரபீஷ் கிருஷ்ணா .ஆறடிக்கு மேல் உயரமும்
தொன்னூற்றி ஐந்து கிலோ எடையுமுள்ளவர்.சென்னையின் முக்கிய கல்லூரி ஒன்றில் மூன்றாண்டு
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டம் பெற்றவர். மிக நன்றாக சமைப்பார் அவர் பேசும் தமிழ்
கேட்பது மாதிரி இருக்கும்..
ஒருநாள் இரவு தமாதமாக உணவுகூடதிற்கு சென்றேன் ,அடுமனையிலிருந்து சப்தம் வருவதை கேட்டு
பார்த்தபோது,பிரபீஷ் மிக்ஸியில் மாவு ஆட்டிகொண்டிருந்தார். “ஷாஹுலே நாள ராவிலே
தோசையானு” என்றார் .அவர் ஆயத்த மாவில் தண்ணீர் சேர்த்து தோசை செய்வதில்லை
பிரபீஸ் கிருஷ்ணா |
அவர் கப்பலில் ஒருநாள்
இரவுணவாக தோசா மேளா நடத்தினார் .சாதா தோசை,மசால் தோசை,நெய்
ரோஸ்ட்,பன்னீர்தோசை,சீஸ்தோசை,வெங்காய தோசை,ர வை தோசை,முட்டை தோசை,பாலக்
தோசை,ஊத்தப்பம்,மினி ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம்,ஸ்ரீலங்கன் பிஷ் தோசை,சிக்கன்
தோசை................... பதினாறு வகை தோசைகளின் பட்டிலையலை போட்டிருந்தார்.
“உங்களுக்கு வேண்டிய தோசையை சொல்லுங்கள், பத்து நிமிடத்தில் தருகிறேன்” என
சொன்னார்.தோசையில் இவ்வளவு வகைகளா என வாய்பிளந்தேன் நான்.அந்த கப்பலில் காப்டனாக
இருந்தவர் சுக்லாஜி ,அவர் சுத்த சைவம் ,அனுமான் பக்தர் .அவர் பிரபீஷிடம் “முட்டை
தோசை எல்லாமா இருக்கு” என கேட்டார் .
அதன் பின் பெரும்பாலும் தோசை
கப்பலில் கிடைப்பதில்லை.அபூர்வமாக காலை வேளைகளில் பொட்டலங்களில் வரும் உலர் மாவில்
செய்து ஆறிய ஊத்தப்பம் கிடைக்கும்.
இரண்டாயிரத்தி பதினோராம்
ஆண்டு திருவான்மியூரில்,தம்பி தீபனின் அறையில் சில நாட்கள்
தங்கியிருந்தபோது,அங்குள்ள சிறிய உணவு விடுதியில் அவர் பொடி தோசை வாங்கி தந்தார்.தோசையை
கல்லில் பரத்தியபின் ,இட்லிபொடியும்,துருவிய தேங்காயும் தூவியபின்,லேசாக
நெய்விட்டு சுடப்பட்டது .நல்ல சுவை,அப்போது அங்கே அது ஐம்பது ரூபாய்.பின்னர்
சுனிதாவிடம் அதை அவ்வபோது செய்து கேட்பேன்.என் மகன் ஷாலிமும் தோசை பிரியன்
அதற்காவே சுனிதா மீனாட்சிபுரம் கடைகளில் அலைந்து ஒரு பெரிய தோசை கல் வாங்கி
வைத்திருக்கிறாள் .
கடந்த ஆண்டு சீனாவில்
வெளியே சென்றபோது மைதா மாவில் தோசை போன்று செய்து விற்பதை கண்டு வாங்கி
தின்றோம்.கடந்த வருடம் பணிபுரிந்த கப்பலில் சென்னையை சார்ந்த பாபு ஹுசைன் என்பவர்
செப் ஆக இருந்தார் .நானும் ,நண்பர் பெசிலும் அவருடன் உரிமையுடன் தோசை செய்து
கேட்டோம் .அவர் தோசை கல் செய்து தாருங்கள் என கேட்டார் .கடும் பணி சூழல் காரணமாக
அவர் ஊர் செல்லுமுன் தோசை கல் செய்ய முடிந்தது.தோசை செய்யும் நாளில் அவருக்கு வலது
தோள் பட்டை கடுமையான வலி.எனக்கு சொல்லி
கொடுத்தார் தோசை எப்படி ஊற்ற வேண்டுமென,நண்பர் பெசில் தக்காளி சட்னி செய்தார் .பின்னர் அந்த கப்பலில் மாதமொரு முறை தோசை செய்து தந்தார் பாபு ஹுசைனுக்கு பதிலாக வந்த செப் கோவாவின் மெல்வின் .
இந்த கப்பலின் செப்
செங்கன்னூர் ஸ்ரீகுமார். பிரபீஷை போலவே குண்டான உடல்வாகு கொண்டவர்,தேர்ந்த சமையல்
கலைஞர்.மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் இரவுணவு தோசையும் மாதத்தில் ஒருநாள்
ஆப்பமும் செய்து தருகிறார் .
செஃப் ஸ்ரீ குமார் |
இன்று செப் ஸ்ரீகுமாருக்கு காலையில் முகமன் சொன்னபோது “ராவிலே நாலரைக்கே வந்து,இந்நு
வையீட்டு தோசையானு”என்றார் .இரவில் ஊற வைத்த அரிசி,உளுந்தை அரைப்பதற்காக அதிகாலை
அழைப்பான் வைத்து எழுந்து வருவார் .இன்று இரவுனவாக மசால் தோசை ,சாதா தோசை ,சாம்பார்,வெங்காய
சட்னி,புதினா சட்னி என வைத்திருந்தார் .நான் ஒரு மசால் தோசையும் ,பழைய
திருவான்மியூர் நினைவில்,தேங்காய் இல்லாமல் ஒரு பொடி தோசையும் (ஆச்சி இட்லி பொடி
வாங்கி வைத்திருக்கிறார்)சாப்பிட்டேன் .சாப்பாடு மேஜையில் என் எதிரிலிருந்த
பெரியவர் குஜராத்தின் சோலங்கி பாய்,பிகாரின் ஆலமுக்கு எப்படி தோசை செய்வது என
விளக்கினார். பின்னர் அவரே “இதெல்லாம் நீ ஊர்ல போய் செய்ய முடியாது ,இத மதராசி
செய்தாத்தான் நல்லா இருக்கும்” என்றார் . ஆலம் உளுந்து என்றால் என்ன என
கேட்டுகொண்டிருந்தான்.
திலீப்குமார் நாதோட் சோலங்கி |
சமையல் உதவியாளர் கிளிட்டஸின்
புதிய கண்டு பிடிப்பு சக்கரை தோசை ,அதிலும் ஒரு சிறு துண்டு சுவைக்க தந்தார் செப்
ஸ்ரீகுமார்.செப் ஸ்ரீ குமார் அன்பு கலந்து சமைக்கிறார் எங்களுக்காக .
ஷாகுல் ஹமீது
20 april 2019,