Saturday, 29 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 18


          முந்தைய  பதிவான 16,17 பெயர் மாற்றியிருக்கிறேன் .தோழி ஒருவரின் வேண்டுதலுக்கிணங்க .
      ஆனால்   அதற்க்கு முந்தைய பதிவுகளிலும் எழுதும் போதே சில பெயர்களை மாற்றித்தான் எழுதியிருந்தேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துகொள்கிறேன் .யாரையும் புண்படுத்துவது நோக்காமல்ல என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் .

  முகாமில் நடந்த விருந்து        
 கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும் .அதிகபட்சம் 46 டிகிரி வரைக்கும் செல்லும் .கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது.மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை .சூரியன் அஸ்தமம் 9 மணிக்குமேல் .மாலை நேர மகஃரிப் தொழுகை அதன் பிறகுதான் .இரவு நேர இஷா தொழுகை இரவு பத்து மணிக்கு மேல் .


       அக்டோபர் மாதம் தட்பவெப்ப நிலை நன்றாக இருக்கும் .டிசம்பரில் -2 டிகிரி வரை செல்லும் நல்ல குளிர்  .ஊரில் அதிக வெயிலை பார்த்ததே இல்லை அதிகபட்சம் 34-37 தான் எங்களூரில் .குளிர் தெரியவே தெரியாது .


   நல்ல குளிரில் ஒருநாள் ராணுவ வீரன் ஒருவர் என்னிடம் கேட்டார் உங்களூரில் இவ்வளவு குளிர் இருக்கிறதா என.குளிரே தெரியாது எங்களுக்கு என்றேன் .நான் இந்தியாவின் தென்கோடியில் வசிப்பவன் அங்கு நிலவுவது ஒரு மித சீதோஷ்ணநிலை .குறைந்தபட்சம் 22 டிகிரியும்  (டிசம்பரில்) அதிகமாக  35 டிகிரியும்  (மே யில் ) இருக்கும் .வட இந்தியாவில் கோடையில் அதிக வெப்பமும் 46 டிகிரியும் குளிர் காலத்தில் 0 டிகிரி வரையும் இருக்கும் என்றபோது .ஆச்சரியத்துடன் நீ வாழும் தென்கோடி முனை ...... கொடுத்து வைத்தவர்கள் என்றான் .


    திக்ரித் ல் குளிர் துவங்கும் முன் நாம் ஒரு பார் பி கியூ(BBQ) பார்ட்டி நடத்தலாம் என்றார் மானேஜர்  ஆலன் குக். எங்களிடம் இருப்பது அனைத்தும் பதபடுத்தபட்ட உணவுவகைகள்  பார்ட்டிக்காக புதிய இறைச்சிகள் சமைக்கலாம் என்ற  யோசனை ஏற்றுகொள்ளபட்டு.எங்கள் முகாமில்  தின கூலிகளாக வேலை செய்கின்ற உள்ளூர்காரன்  ஒருவனிடம் இரண்டு ஆடுகளின் இறைச்சி வேண்டும் உன்னால் கொண்டு தர முடியுமா என கேட்டார் .ஆலன் குக் சொன்னதை எங்களில் ஒருவன் அரபியில் அந்த ஈராக்கிக்கு மொழி பெயர்த்து சொன்னான் .


     மறுநாள் காலையில் அந்த இராக்கி  வரும் போது ம்மே, ம்மே என சப்தத்துடன் கையில் கயிறுகளை பிடித்திருந்தான்  இரண்டு ஆடுகள் அவனுடன் வந்து கொண்டிருந்தது .


   ஆடுகளை முகாமில் உள்ள ஒரு ஆலிவ் மரத்தில் கட்டினான் .ஆடுகளின் சப்தம் கேட்டு ஆலன் குக் வந்துதும் என்ன என கேட்டுவிட்டு வாய்விட்டு சிரித்தார் .

   இரண்டு ஆட்டின் இறைச்சியை கேட்டால் ஆட்டையே கொண்டுவந்திருக்கிறாய் என கேட்டார் .அந்த ஈராக்கி என்னிடம் ஆடு தானே கேட்டீர் அதன் கொண்டுவந்தேன் என்றான் .

    சரி இன்று இதை கொண்டுபோய்விட்டு நாளை அறுத்து கறியை மட்டும் கொண்டுவா என்றார் .இம்முறை மொழி பெயர்க்க ஆலன் குக் வேறு ஆளை தேடினான் .முந்தையநாள் மொழி பெயர்த்தவனை எங்கும் தென்படவில்லை .

    மறுநாள் பாதியாக வெட்டப்பட்ட பீப்பாயில் (ட்ரம்)  கரியை போட்டு தணலாக்கி,இஞ்சியும் ,பச்சை மிளகாய்,பூண்டும் சேர்த்து அரைத்த கலவையுடன் ,கரம் மசாலா,மிளகு பொடி,    மஞ்சள்,வத்தல்,கொத்தமல்லி,ஜீரகபொடிகளை,ஆலிவ் எண்ணையுடன் உப்புசேர்த்து காலையிலேயே ஊறவைத்திருந்த  புத்தம் புதிய இறைச்சியில் மட்டன் கபாப் ,மட்டன் சுக்கா என ஏதோதோ செய்து ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பியதை சுடச்சுட வேகவைத்தும்  சாப்பிட்டனர் .


  அனலென ஆரஞ்சு சிவப்பில் உள்ள தணலில் கைகளில் உள்ள மயிர்கள் கருகாமல் இறைச்சியை பதமாக வேகவைப்பது சிலருக்கு மட்டுமே இயலும்.நல்ல பொறுமை வேண்டும் அதற்க்கு .தணலின் மேலே இருக்கும் மெல்லிய இரும்பு ஜாலியின் மேல் இறைச்சியை வைத்துவிட்டு விலகிசென்றால் மேற்பகுதி கரிந்துவிடும் .உள்ளே வேகாமல் பச்சையாக இருக்கும் .

    அருகிலேயே  நின்று நீளமான கம்பியால் அல்லது இடுக்கியால் கைகளில் சூடு கொள்ளாதமுறையில் ,புரட்டி ,திருப்பி ,மறித்து வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் .அப்போதுதான் கருகாமலும் ,முறுகாமலும் சாப்பிட பதமான வகையில் வெந்து கிடைக்கும் சுவை நாவை அதற்க்கு அடிமையாக்கிவிடும் .

  இறால் ,மீன் போன்றவற்றை அப்படியே வைத்து வேக வைக்க முடியாது ,சில்வர் பாயிலில் பொதிந்து நீண்ட நேரம் குறைவான வெப்பமுள்ள ஒரு மூலையில் வைத்து எடுத்தால் அதன் சுவையே தனி .தனக்காகவும் ,பிறருக்காகவும் ருசியாக, அன்பு கலந்து சமைப்பது ஒரு தனி திறமை . எனது வாப்பும்மா*,அரிசியை உலை வைக்கும் போதும் ,முறுக்கு சுடும்போதும் ,வாய் பேசாமலும் ,சின்ன குழைந்தைகள் அருகில் இல்லாமலும் பார்த்துகொள்வார்கள்.சமைப்பதை ஒரு தியானம் போல செய்வார்கள் .

   ஒவ்வொரு சமையல் கலைஞனும் தன் திறமையை காட்ட விதவிதமான  உணவுவகைகள் செய்திருந்தனர் , ஆவியில் வேக வைத்து உப்பும் ,மிளகு தூளும் தூவப்பட்ட மீன்,கேரள பாணியில் தேங்காய் வறுத்து அரைத்து செய்த மீன் குழம்பு ,சோழ மாவு தடவிய இறால் பொரித்தது ,இளம் கோழியின் ஒரே அளவிலான தரம்பிரிக்கபட்ட கால் துண்டுகளை மிதமான காரத்துடன் பொரித்தது,கணவாய் மீன்களை துண்டுகளாக வெட்டி அதை சில்வர் பாயிலில் பொதிந்து தணலில் இட்டு வேகவைத்தது என  .

    வடஇந்திய நண்பன் செய்த புலாவும் ,சப்பாத்தியும்,ஆலு பரோட்டாவும், பருப்புகறியும் ,சிறு துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் பழத்துடன்,மெல்லிசாக சீவிய காரட்,உலர் திராட்சை ,மையோனஸ் சேர்த்து செய்த கோல் சிலா எனும் சாலடுடன் அனைவரும் இன்முகத்துடன் சாப்பிட்டனர் .உடன் பணிசெய்த அனைத்து அதிகாரிகளும் ,உணவு கூடத்தில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ,வீராங்கனைகளும் ஒன்றாய் அமர்ந்து கதைகள் பேசி இரவு பதினோரு மணிவரை நீண்டது  அந்த விருந்து .

  அனைவருக்கும் அது ஒரு நிறைவான ஒரு அனுபவத்தை அளித்தது .அந்த அனுவபவம் மனதிலிருந்து விலகும்முன் அடுத்த மாதம் எங்களுடன் இருந்த கலீல் பாய் ,அவரது மகள் சம்ரீனின் பிறந்தநாளை கொண்டாடினார் .முந்தையதைபோலவே அனைவரும் கலந்துகொண்ட விருந்து அது. இம்முறை உணவு வகைகள் உணவு கூடத்தில் செய்திருந்தோம் .
* வாப்பும்மா =தந்தையின் தாய் (பாட்டி ) 

  ஷாகுல் ஹமீது .

30-10-2016

Sunday, 23 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 17


நட்பை விலக்கி சென்ற பாயல்


       எங்கள்  முகாமில் ஆன்றனி என ஒரு கோவாவை சேர்ந்த சைக்கோ ஒருவன் இருந்தான் .கார்த்திக்கிற்கு ஒருநாள் அவனுடன் கொஞ்சம் வாய்த்தகராறு .ஆன்றனி கொஞ்சம் குடித்திருந்தான் .போர்முனையில் மது அனுமதிஇல்லை தான்.இருந்தாலும் கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கி டாங்கர் லாரி ஓட்டுனர் வாயிலில் உள்ள கடும் சோதனையை தாண்டி தினமும் சில மது பாட்டில்களை உள்ளே கொண்டு வந்துவிடுவான் .

  தகராறு நீண்டபோது  ஆன்றனி போதையில் நீங்கள் தினமும் மிலிட்டரி பொம்பளைய உள்ள வெச்சி மணிக்கணக்காக பேசிகொண்டிருக்கிறீர்கள் என்றான் .கார்த்திக் அவனை கெட்ட வார்த்தையால் திட்டினான் .ஆம் நாங்கள் பேசுகிறோம் சில நேரங்களில் நீங்களும் பலர் வந்து பேசுகீறீர்கள்.அது பொது இடம் அதில் என்ன தப்பு என தகராறு நீண்டு விட்டது .
       அவன் வெறுப்பில் ஏதோதோ திட்டினான் மற்ற கோவா அன்பர்கள் எங்களிடம் அவனுடன் பேசாதீர்கள் என சொல்லிவிட்டு அவனை அழைத்து சென்றனர் .அதன் பிறகு மீண்டும் போதை ஏற்றியவன் தன் கைகளில் கத்தியால் கிழித்து கொண்டான் .
   ஆன்றனி  இரவில் ஒரு மணிக்கு மானேஜர் டெர்ரி ஆண்டேர்சனின் அறை கதவை தட்டினான் .நள்ளிரவில் பதட்டத்துடன்  டெர்ரி ஆண்டர்சன் கதவை திறந்தவுடன் ஐ வான்ட் டு டாக் டு யு என்றான் ஆன்றனி . என்ன சொன்னான் என்றே தெரியவில்லை .கைகளில் காயத்தை பார்த்தவர் அவனை அடுமனைக்கு கொண்டு சென்று விசாரித்துவிட்டு அவனை கூடாரத்திற்கு செல்லும்படி எச்சரித்து அனுப்பினார் .
     மறுநாள் டெர்ரி ஆண்டெர்சன் என்னிடம் .நீங்கள் இனி அந்த ராணுவ வீராங்கனையை கூடாரத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றார் .உள்ளே அனைவரும் ஆண்கள்  அதனால் வெளிய சந்திக்கும் போது  பேசிக்கொள்ளுங்கள் என்றார் .

    அப்போதுதான் தெரிந்தது ஆன்றனி மட்டுமல்ல மற்ற சிலரும் பாயல் எங்களுடன் பழகியதில் ,பொறாமையும் ,எரிச்சலும் கொண்டிருந்தனர் என.மனித மனம் அப்படித்தான் இருக்கிறது .எப்படி இனிமேல் பாயலிடம் எங்கள் கூடாரத்திற்கு வராதே என சொல்வது என இருந்தபோது,  கார்த்தி என்னிடம் கேட்டான் ஷாகுல் பிரதர் எப்படி அக்காட்ட சொல்ல போறீங்க என கேட்டான்.நீயே சொல் என அவன்  என்னிடம் சொல்லாமல் சொன்னான். கார்த்தி விடுமுறையில் ஊர் செல்லும் நாளாக இருந்தது மறுநாள் .

      அடுத்த சில தினங்கள் பாயல் வராததால் மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது .பலமுறை சொல்ல வேண்டிய வார்த்தைகளை மனதுக்குள்ளேயே சொல்லி பார்த்துக்கொண்டேன் .இது போன்ற சூழ்நிலைகளில் கால அவகாசம் கிடைப்பதும் நன்றே .பின்பு சந்தித்த போது நடந்த ஆன்றனி,கார்த்திக் சண்டையையும் ,கூடாரத்திற்குள் நீங்கள் வரக்கூடாதென மானேஜர் சொல்லியதையும் சொன்னேன் .என் தலை கவிழ்ந்தே இருந்தது சொல்லும்போது  அவள் விழியை என்னால் சந்திக்க இயலவில்லை .
   
  பின்பு அக்கா என்றழைத்து அவள் முகத்தை பார்த்தேன் .அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை .சாதரணமாகத்தான் இருந்தாள்.அன்று அது பகல் பொழுது போய் வருகிறேன் பின்னர் சிந்திப்போம் என சொல்லிவிட்டு சென்றாள்.
   அடுத்த சில தினங்களுக்கு பிறகு வந்து மீண்டும் கூடாரத்திற்குள் வந்து அமர்ந்து பேசிகொண்டிருந்தாள் .எப்போதுமே வராத டெர்ரி ஆண்டர்சன் உள்ளே வந்தார் .எதுவும் சொல்லாமலே சென்றுவிட்டார் .அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உணவுகூடத்தில் பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீராங்கனையுடன் வந்தார் .அவள் பாயலிடம் நீங்கள் கூடாரத்திற்குள் வருவதை தவிருங்கள் என நாகரீகமாக சொன்னாள்.இங்கே அனைவரும் ஆண்கள் என.

   அதை சற்றும் எதிர்பாராத பாயல் உடனே எழுந்து சென்றுவிட்டாள் .மனம் வலித்திருக்கும் ,கவலைபட்டிருப்பாள்.எங்களுக்கும் அது சற்று கடினமாகி விட்டது .மறுநாள் இரவுஉணவின் போது சந்தித்த போது பாயலின் முகத்தில் அந்த வலியும் ,கவலையும் தெரிந்தது .இருந்தாலும் பொய்யாக சிரித்துகொண்டே பேசினாள் .ஐ யாம் ஓகே என்றாள் .

     உங்கள் மானேஜர் பெண் மட்டும் உள்ளே வரக்கூடாது என்கிறார்.ஆனால் பலர் கூடாரத்திற்குள் நீல படம் பார்க்கிறார்கள்.முகாமில் பலர் திருட்டுதனாமாக மது அருந்துவதும் ,எல்லைமீறி நடப்பதையும் ஏன் உங்கள் மானேஜர் ஒன்றும் கேட்பதில்லை என கேட்டாள்.

      தீடிரென வரக்கூடாது என்றதில் மிகுந்த வருத்தமும் ,கவலையும் இருந்தது .அதன் பின் எப்போது உணவு கூடத்திற்கு வந்தாலும் ஒரு சில நிமடங்களாவது சந்தித்து பேசிவிட்டு செல்வது வழக்கம் .
    ஒருநாள் தன்னுடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ,உடன் பணிபுரிந்த பெண்ணுடன் வந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை நான் அவர்களிருந்த மேஜையில் சென்று சந்தித்தேன் .அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள் .திஸ் இஸ் ஷாகுல் மை க்ளோஸ் பிரன்ட் என அவர்களிடம் சொன்னாள் .

   அதன் பின் சில தினங்களுக்கு பின் இரவு உணவுக்கு வந்த பாயல் ஷாகுல் சாப்பிட்டபின் உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும் .உணவு கூடத்திற்கு வெளியே என்னை கண்டிப்பாக சந்திக்கவும் என்றாள் .

   உணவு கூடத்திற்கு வெளியே மேசையுடன் கூடிய மர நாற்காலிகள் இருக்கும் அதில் அமர்ந்திருந்தேன்.இரவுணவு சாப்பிட்டு வந்த பாயல் என்னருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.ஷாகுல் நாளை முதல் என்னை சந்திப்பதையும்,பேசுவதையும் நிறுத்திவிடு என்றாள் .எனக்கு அதிர்சியாக இருந்தது .

       எதுவும் கேட்க தோன்றவில்லை தலையசைத்து விட்டு நேராக குடியிருப்பு கூடாரத்திற்கு சென்று விட்டேன் . அங்கிருந்த ஒருவன் என்னிடம் கேட்டான் ஷாகுல் என்னாச்சி என .ஏன் என கேட்டேன் உன் முகம் மாறி இருக்கிறதே எப்போதும் நீ சிரித்த முகத்துடன் இருப்பதை தான் நான் பார்த்திருக்கிறேன் என்றான் .ஒன்றும் இல்லை என்றேன் .
   எப்படி கண்டிபிடித்து விட்டான் என தோன்றியது .முகம் மாறியிருந்தால் தாய் விரைவில் கண்டுபிடித்து விடுவாள். இப்போது சுனிதாவும் என்ன சாரே மூஞ்சி சரியில்லையே என்னாச்சி என .
  ஏன் அப்படி சொன்னாள் என யோசித்தேன் ஒரு காரணமும் புரியவில்லை.லோகேஷிடம் சொன்னேன் பாயல்  நாளைமுதல் ,பேசேவோ ,பார்க்கவோ வேண்டாம் என சொல்லி விட்டாள் என .ஏன் என கேட்டான் .தெரியாது என்றேன் .
    
  அடுத்தமுறை பாயல் வரும்போது அவளிடம் கேட்டு விடவேண்டும் என நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன் .மறுநாள் இரவில் பாயலை பார்த்தேன் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் நான் உங்களுடன் பேச வேண்டும் என்றேன் .

   முந்தைய நாள் இருந்த அதே மர நாற்காலியில் அமர்ந்திருந்தேன் .ஷாகுல் சொல் என்ன விஷயம் என கேட்டாள் .ஏன் இப்படி தீடிரென பார்காதே ,பேசாதே என்கிறீர்கள் என்றேன் .
  
    மழுப்பலான காரணங்களை அடுக்கினாள் எதற்காகவோ தவிர்க்கிறாள் என புரிந்து கொண்டேன்.இன்று தான் கடைசி இனிமேல்  எப்போதும் உங்கள் முன்னால் வரமாட்டேன் என சொல்லி விடைபெற்றேன் .
   கார்த்தி விடுமுறை சென்று வந்ததும் கேட்டான் அக்கா எப்படி இருக்கிறாள் என .விபரங்களை கூறினேன் .அன்று உணவு கூடத்தில் உணவு வழங்கிகொண்டிருந்த கார்த்திக்கிடம் .எப்போது வந்தாய் ,நலமா என பாயல் விசாரித்தபோது .கார்த்தி பதிலேதும் சொல்லவில்லை .
    நான் கார்த்திக்கிடம் சொன்னேன் .நீ அவளிடம் பேசு என்னிடம் தானே பேசக்கூடாது என்றாள் என்றேன் .ஷாகுல் உன்னால தான் அந்த நட்பு கிடைத்தது  உனக்கே இல்ல இப்ப .நான் மட்டும் ஏன் பேச வேண்டும் என்றான் .
 
   பாயலின் நல்ல நட்பு இப்போது ஒரு நினைவாக மட்டுமே எஞ்சி விட்டது .அதன் பின் ஈராக்கின் பணி முடிந்து அமரிக்கா செல்லும் போது கார்த்தியை சந்தித்து விடை பெற்று சென்றாள்.

  அதன் பின் நான் ஊர் வந்து என் திருமணதிற்கு முன் என் திருமண அழைப்பிதழையும்,திருமணதிற்க்குபின் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் பாயலுக்கு மின்னஞ்சல் செய்ததேன் .ஒரு வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பினாள் .

  

  பாயல்  அவளாகவே வலிய வந்து பழகியவள் ,நட்பை அவளாகவே வளர்த்துகொண்டாள் .அதுபோலவே விலகியும் சென்று விட்டாள்.



ஷாகுல் ஹமீது ,
23-10-2016

Saturday, 22 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 16


பாயல்


      ஒருநாள் நாங்கள் இரவு உணவின் போது    சாப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருந்தோம் .அப்போது அமெரிக்க ராணுவ உடையில் வந்த ஒரு இந்திய பெண்  சப்பாத்தியா நான் கொஞ்சம் சாப்பிடலாமா? என கேட்டு விட்டு பதில் கிடைக்கும் முன் உரிமையுடன் தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து சாப்பிட்டுவிட்டு நன்றி என்றாள்  .

    அமெரிக்கபடையில் நிறைய இந்திய வம்சாவளியினர் இருந்தனர் .சிலருக்கு இந்திய மொழிகளும் தெரிந்திருந்தது .  எங்களது முகாமில் நாங்கள் சென்று இரு மாதங்களுக்கு பின் சந்தித்து தோழியான பெண் பாயல் ..

   பாயல் தான் எங்களில் ஒருவனிடமிருந்து சப்பாத்தியை பிய்த்து சாப்பிட்டது .அன்று தான் முதல் சந்திப்பு .எதுவும் பேசிக்கொள்ளவில்லை நன்றி என சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.

    மெக்ஸிகோவில் பிறந்த வீரர்கள் சிலர் நம்மை போல கொஞ்சம் காரம் சாப்பிடுபவர்கள்.மெக்ஸிகோவின் தட்பவெப்ப நிலை தமிழ்நாட்டை போலவே இருக்கும் .அதனால் அதில் சிலர் எங்களிடம் நட்பாகி எங்களுக்கு என சமைக்கப்படும் கறியை வாங்கி செல்வார்கள் .எங்கள் சமையல்காரர்களும் இன்முகத்துடன்  அவர்களுக்காக தனியாக எடுத்து வைத்து அவர்கள் வரும் வேளையில் கொடுப்பார்கள் .

    சிலர் தமிழில் கோளி கொலம்பு நல்லா இர்க்கு நன்டி என சொல்லி செல்வர் .சில தினங்களுக்கு பிறகு மீண்டும் உணவு கூடத்தில் பாயலை சந்தித்தேன் .
   ஹாய் என்றாள்.
  இன்று சப்பாத்தி இல்லையா ,
 இல்லை  என்றேன் .
  சிரித்துகொண்டே தன்னை அறிமுகம் செய்துகொண்டு .இங்கு இவ்வளவு இந்தியர்கள் பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி என்றாள் .இந்திய கலாச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன் .எனவே பழக ஆர்வமாயிருக்கிறேன் என்றாள்.இந்திய மொழி எதுவும் பேச தெரியாது என்றாள் ஆங்கிலத்தில் .வெல்கம் என வரவேற்றோம் .

    அடுத்த சில தினங்களில் நாங்கள் இரவுணவு சாப்பிடும்போது எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதும் .ஒவ்வொருவருடைய ஊர் அது எங்கிருக்கிறது என்பன போன்ற நிறைய கேள்விகாளாக கேட்டுகொண்டே இருப்பாள் .எல்லாம் நிறைய விசயங்களை அறியும் ஆர்வ கோளாறுதான். இந்தியர்களையும் இந்திய கலாசாரத்தையும் பெருமையுடன் பேசிக்கொண்டிருப்பாள் .

     ஒருநாள் உணவை எடுத்து கொண்டு சாப்பிடும் மேஜையில் அமர்ந்துகொண்டு லோகேஷ் வருவதற்காக சாப்பிடாமல் காத்திருந்தோம் அப்போதும் பெருமையாக சொன்னாள். நண்பனுக்காக காத்திருக்கும் பண்பாட்டை .

    பாயல் பணியில் இருந்தது முக்கிய அரண்மனையில் .ராணுவ கமாண்டோ அங்கு தான் இருந்தார் .பாதுகாப்பு மிகுந்த இடம் நாங்கள் அங்கு செல்ல அம்னுமதியில்லை .

      பாயலிற்கு 24 மணிநேரம் தொடர்ந்து வேலையும்  பின் இரு நாள் முழு ஓய்வும் .பணியில் இருக்கும் நாளில் சாப்பிட வருவதில்லை .அவள் தங்கியிருக்கும் அறையில் மேலும் 5 ஆண்கள் தங்கி இருப்பதாகவும் .குளியலறையும் ,கழிப்பறையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருப்பதாகவும் சொல்வாள் .

    பின்பு என்னுடனும் ,கார்த்திக்குடனும் மிக நெருங்கிய நட்பாகி விட்டாள் .தினமும் சந்தித்து உரையாட தவறுவதில்லை .இரவில் எட்டுமணிக்கு முன்பே வந்து விட்டால் .கார்த்திக் இரவு பணியிலிருப்பதால் 9 மணிக்கு தான் செல்லவேண்டும் .அதனால் நாங்கள் தங்கும் கூடாரத்தில்  அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருப்பாள் .சீக்கிரம் பணி முடியும் நாட்களில் நானும் இணைந்து கொள்வேன் .
 
    மற்றவர்கள் பாயலின்  ரைபிளுடனும் ,அவளுடனும் புகைப்படம் எடுத்து கொள்வர் .அவளது தாய் மொழி குஜராத்தி .அவளுக்கு தெரிந்த  ஒரு சில குஜராத்தி   வார்த்தைகளில் குஜராத்தியர்களுடன் பேசி சிரிப்பாள்.பெங்காளி ஒருவனிடம் எனக்கு பெங்காலியில் ஒரே ஒரு வார்த்தை தெரியும் என்றாள்.  அமி துமிசே பாலே பாஷி  (ஐ லவ் யூ ).தன்னுடைய தோழியின் காதலன் பெங்காலி   என்பதால்.அந்த ஒரு வார்த்தை மட்டும் தெரியும் என இப்படி வயிறு வலிக்க   சிரித்த நாட்கள் பல .

   கூடாரத்தில் அமர்ந்து பேசிகொண்டிருக்கும் போது 9 மணிக்கு பகல் பணி முடிந்து நண்பர்கள் வந்து ஆடை மாற்றி ஜட்டியுடன் கூடாரத்தினுள் உலாவி கொண்டுதான் குளியலறைக்கு செல்வார்கள் பலர் .அதனால் 9 மணி நெருங்குவதற்கு முன்பே .அக்கா பசங்க வர நேரமாகிவிட்டது கிளம்பு என்போம் .பொறு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது .இரவு பணியாளர் செல்லும் போது செல்கிறேன் என்பாள் .வலு கட்டயமாக கூடாரத்திலிருந்து வெளியேற்றுவோம் .
 
  சில நாட்களில் 9 மணிக்கு பிறகு கூடாரத்திற்கு வெளியே உள்ளே விளக்கு தூணின் கீழே நின்று பத்துமணி வரை பேசிக்கொண்டுதான் செல்வாள் .
   தன்னுடைய பணியிடத்தில் எந்த பிரச்னையும் இல்லை .என்னுடைய பாஸ் மிக நல்லவர் (மூத்த அதிகாரி ) .தங்குமிடத்தில் சில டார்ச்சர்கள் இருக்கிறது.என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் என்னைவிட கொஞ்சம் உயர் பதவியில் இருப்பவர்கள் எனவே நான் உங்களுடன் இருக்கும் நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அதிகமாக உங்களுடன் தான் பேசுகிறேன் .ஷாகுல் என்பாள் .  

      அவளுக்கு திருமணம் ஆகியிருந்தது .கணவனை பற்றியும் ,ஈராக்கில் இந்தியர்களுடன் கிடைத்த நட்பை பற்றியும் அவரிடம் சொல்லி இருக்கிறேன் என்பாள் .தீபாவளியன்று எங்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, கார்த்திக் தீபாவளி சுவீட் எங்கே என கேட்டாள்.அவன் பதிலுக்கு சிரித்தான்.சிரித்தால் போதாது காரட் அல்வா எனக்கு வேண்டும் செய்து தா என்றாள் .கார்த்திக்கிற்கு அதை செய்ய தெரியாது .இருந்தாலும் சமாளித்தான்.

   விடவில்லை பாயல் காரட்டை சிறியதாக சீவ வேண்டும் ,நெய்யும் ,பாலும் வேண்டும் அவ்ளோ தான் .இதெல்லாம் இங்கே எளிதாக கிடைக்கிறதே .நான் நாளை சாப்பிட வருவேன் என்று சொல்லி சென்றாள்.
   அன்றிரவே கார்த்திக் ஏலக்காய்,நெய் மணம் வீசிய  நல்ல சுவையான காரட் அல்வா செய்து யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தான் .மறுநாள் பாயல் வந்த போது தான் அதை கொண்டு வந்து தந்தான். தனக்கு பிடித்த இனிப்பு காரட் அல்வா ,தீபாவளி தினத்தன்று அது கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைந்திருந்தாள்.கார்த்திக்குடன் இருகைகளையும் குலுக்கி நன்றி கூறினாள் .
  ஒருநாள் வந்து கவலையுடன் அமர்ந்திருந்தாள்.இரண்டு நாட்கள் முகாமைவிட்டு வெளியே பயிற்சிக்காக செல்ல வேண்டியுள்ளது .முகாமில் இருப்பது தான் பாதுகாப்பு வெளியே செல்லும்போது தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டும் .குறிப்பாக  ராணுவ வாகனங்களை குறி வைத்து தாக்குவார்கள் என சொன்னாள்.அடுத்த சில தினகளுக்கு நாம் சந்திக்க இயலாது போய் வருகிறேன்.மகிழ்ச்சியுடன் இருங்கள்  பை என சொல்லி விட்டு சென்றாள்.

    பாயலுடன் எங்கள் நட்பு மிக நெருக்கமாகி விட்டது .அவள் வரமுடியாத நாட்களில் பகல் பொழுதில் வந்து நாங்கள் பணியில் இருப்பதால் ஒரு ஹாய் மட்டும் சொல்லி சிரித்துவிட்டு செல்வாள் .
    அது குளிர் காலம் தொடங்கியிருந்த சமயம் .அப்போது ஒருநாள் காலை உணவுக்கு வந்தவள் என்னை சந்தித்து .ஷாகுல் குளிருக்கான வெப்ப ஆடைகளை அணிந்து வந்துவிட்டேன் .இப்போது ரொம்ப சூடாக இருக்கிறது எனக்கு ஆடை மாற்ற வேண்டும் என்னை உங்கள் தங்கும் கூடாரத்தினுள் அழைத்துசெல் என்றாள் .


    நீங்களே போகலாமே என் படுக்கை அருகில் மறைவான இடம் இருக்கிறது போய் வாருங்கள் என்றேன் .வேண்டாம் நான் தனியாக போவது சரியில்லை நீ என்னுடன் வா .இரவு பணி முடிந்த உன் அனைத்து நண்பர்களும் உள்ளேதான் இருப்பார்கள் .நான் மட்டும் தனியாக செல்வது ...........வேண்டாம் என்றாள் .நான் உள்ளே அழைத்து சென்று தள்ளி நின்று கொண்டேன்.ஆடை மாற்றியபின் ராணுவ சீருடையின் உள்ளே அணியும் வெப்ப ஆடையை என்னிடம் தந்து இங்கே வைத்துகொள் இரவில் சந்திக்கும்போது வாங்கிகொள்கிறேன் .மிக்க நன்றி என கூறி சென்றாள்.
ஷாகுல் ஹமீது ,

21-10-2016

Thursday, 20 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள்15


  கடும் தாக்குதலை  எதிர் நோக்கிய பதட்டம் நிறைந்த நாட்கள் .


      எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைபட்டுவிட்டது .உணவு வழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவு வழங்கிவந்தோம், பசி என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை .ருசி மட்டும் தான் அனைவர் நாவிலும் இருந்திருக்கும்.


   பணியாளர்களுக்கு தடையின்றி உணவு கிடைத்தது.காலை உணவு இல்லாதபோது யாருக்கும் பெரிதாக தோன்றவில்லை.நிறைய பழங்களும், பாகெட்டுகளில் அடைத்த பழரசமும் ,பால் வகைகளும் நிறையவே எங்களிடம் இருந்தது .விரைவில் நிலைமை சீரடைந்துவிடும் என்றே எதிர் பார்த்தோம் . உணவு பொருட்கள் தொடர் பற்றாகுறையால் அடுத்த சில நாட்களில் நடுஇரவு உணவும் ,அதை தொடர்ந்து மதிய உணவும் ரத்தாகியது .எங்களுக்கும் மதிய உணவு கிடையாது .

   அமெரிக்க அரசால் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஒரு பொட்டலம் தருவார்கள் அதனுள்  காற்று புகாத வகையில் ,ஒரு வருடம் வரை கெட்டு போகாத பதப்படுத்திய உணவுகள் சிறிய பொட்டலங்களில் இருக்கும் .


     பீப் ,ரைஸ் ,நூடுல்ஸ்,கேக் ,பன் ,பிஸ்கட் என பலவகைகளில்.ஒரு பாலிதீன் பையில் கொஞ்சம் ரசாயன பொடியும் இருக்கும் .அதில் வேண்டிய உணவு பொட்டலத்தை எடுத்து ரசாயன பொடி இருக்கும் பையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உள்ளே வைத்தால் உணவு பொட்டலத்திலிருக்கும் ரைஸ் அல்லது நூடுல்ஸ் ஐ சூடாக சாப்பிடலாம் .

    அமெரிக்கர்களின் பெரும்பாலான உணவு வகைகளில் போர்க் பேக்கன் எனும் பன்றி இறைச்சி கலந்திருக்கும் .அதை அதில் எழுதபட்டிருக்கும் .நான் பெரும்பாலும் அதில் இருக்கும் பான் கேக் ஒன்றை எடுத்து கொள்வேன், நண்பர்களும் பான் கேக் அவர்களின் பாகெட்டுகளில் இருந்தால் எனக்கு தந்து விடுவர் .


    நாங்கள் இங்கு வந்து முகாம் தொடங்கும் வரையில்  ராணுவ வீரர்கள் நெடுநாட்கள் இதையே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.லோகேஷ் சொல்வான் பாய் இத சாப்புட்டு எப்படி இவனுக சண்ட போட்டானுவோ ?வயத்துல ஒரு மூலைக்கு தானே ஆச்சி இது .இப்பெல்லாம் இந்த கட்டு ,கட்டுறானுக என்பான். நாங்கள் வந்தபின்பு தான்  வித விதமாக நான்கு வேளை உணவு சாப்பிட ஆரம்பித்தனர் .(நடுஇரவு உணவு இரவு பணியில் இருப்பவர்களுக்குத்தான் .கூட்டம் குறைவாக தான் இருக்கும் அதிகபட்சம் 800 லிருந்து  900  பேர் வரை வந்து சாப்பிட்டு செல்வர்.)
  
     இரவு ஒருவேளை உணவு மட்டும் சமைப்பதால் பணியாளர்களுக்கு  வேலை  குறைந்து விட்டது.ஆனால் இரவு உணவின் எண்ணிக்கை முன்பைவிட ஆயிரம் அதிகரித்துவிட்டது .

   நான் பார்த்ததில் அமெரிக்கர்கள் நிறைய சாப்பிடுபவர்கள் .பீப் ஸ்டேக் ,டி போன் ஸ்டேக் என பெரியதும் , நீளமான  உணவு வகைகள் அவர்களுடையது . வீட்டில் கார்களும் பெரிதாக தான் வைத்திருக்கின்றனர் .

   அப்படி சாப்பிட்டு பழகிய அவர்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். எங்களின் குடியிருப்புக்கு அருகில் வேறு நிறுவனத்தை சார்ந்த பிலிப்பினோ பணியாளர்களின் குடியிருப்பு இருந்தது .நடுவில் ஒரு முள் வேலி மட்டும் தான் இருக்கும் .அவர்கள் முகாம்களில் வேறு பணிகள் செய்பவர்கள் .
   
     எங்களின் சாப்பாட்டுக்கான அரிசி தீர்ந்த போது அருகில் இருக்கும் பிலிப்பைன்ஸ் பணியாளர்களிடம் அரிசி தாராளமாக இருப்பதாகவும், அவர்களின் இறைச்சி வகைகள் தீர்ந்துவிட்டதாகவும் சொன்னார்கள் .
 
   தெனிந்தியர்களை போலவே பிலிப்பைன்ஸ் மக்கள் அதிகம் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள் .எங்களின் மானேஜர் ஆலன் குக் அவர்களிடம் பேசி பண்ட மாற்று முறையில் மாட்டிறைச்சியும் ,கோழி கறியும் கொடுத்து அரிசியை அவர்களிடமிருந்து பெற்றுகொண்டோம் .(சோறு தின்னாம காது அடைச்சி உறக்கம் வரல என சோறு தின்று பழகியவர்கள் இரவில் சோறு கிடைக்காத நாட்களில் சொல்லி கேட்டிருக்கிறேன் )


    ஒரு மாதத்திற்குள்ளாகவே நிலைமை சீராகிவிட்டது .கடும் பாதுகாப்புகளுடன் சாலை போக்குவரத்து தொடங்கியது .வழியில் எங்கும் நிற்காது தொடர் வரிசையில் செல்லும் காண்வாய்கள் .எதாவது ஒரு  வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் அந்த கண்டெய்னர் லாரிகளை அப்படியே விட்டு விட்டு ஓட்டுனரை  மட்டும் வேறு வண்டியில் ஏற்றிகொள்வார்கள்.         காண்வாய்யை தலைமையேற்று நடத்தும் ராணுவ தளபதி .


   உணவு கூடதிற்க்கான உணவு பொருட்கள் தடையின்றி வர ஆரம்பித்தது .பிறகு மீண்டும் உற்சாகத்துடன் நான்கு வேளை உணவும் தடையின்றி வழங்க ஆரம்பித்தோம் .ராணுவ வீரர்களும் மகிச்சியுடன் உணவுண்டு சென்றனர் .(பாய் இவனுக்க மூஞ்சிய பாரு இப்பதான் சிரிக்கான் இவ்ளோ நாளா செத்த வீட்டுக்கு போறவன் மாதிரி மூஞ்சி இருந்தது என சிலர் ராணுவ வீரர்களை பார்த்து சொல்லி சிரிப்பான் விஜயகுமார்)

   எனினும் கடும் தாக்குதல் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது .நாங்களும் தொலைக்காட்சியில் தினமும் ஈராக்கில் நடந்த உயிரிழப்புகளையும் ,படுகொலைகளையும் பார்த்துகொண்டிருந்தோம் .

  எங்கள் அனைவரையும் கூட்டி ஒரு கூட்டம் ஒன்று நடத்தினார்கள் .பாதுகாப்பு குறித்த சில விசயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது .பின்பு எங்கள் திக்ரித் முகாம் மீது அடுத்த சில நாட்களில் ஒரு கடும் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை செய்தி வந்துள்ளதாக ராணுவம் எங்கள் அதிகாரிகளிடம் சொன்னதை எங்களுக்கு தெரியபடுத்தினர்.

    அனைவரும் மூன்று நாட்களுக்கு முகாமிலிருந்து வேறு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் .உங்களது பொருட்களை இங்கே வைத்து விடுங்கள் .கடவுசீட்டு ,பணம் ,மூன்று நாட்களுக்கு தேவையான உடைகளை முடிந்தவரை ஒரு சிறிய பையில் எடுத்து கொள்ளுங்கள் .
 
     ஒவ்வொருவரும் உணவு ,மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் .தேவையற்ற எந்த பொருட்களையும் எடுக்கவேண்டாம்  என உறுதியாக சொன்னார்கள் .

   வரைபடம் ஒன்றை தந்தார்கள் அதில் வாகனங்கள் எந்த வரிசையில் நிறுத்தபட்டிருக்கும் என்ற விபரமும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வரிசை எண்ணும் இருந்தது .எங்களிடம் 2 சிறிய பேருந்துகளும் ,நான்கு கார்களும் இருந்தது மற்றவை எல்லாம் ராணுவ வாகனங்கள் .

  ஒருநாள் ஒத்திகை பார்க்கும் பொருட்டு வரைபடத்திலிருந்தபடி வாகனங்கள் நிறுத்தபட்டு ,கண்ணாடிகளில் வரிசை எண்கள் ஒட்டபட்டிருந்தது  ஒவ்வொருவரும்  அமர வேண்டிய வாகனங்களை பார்த்துகொண்டோம் . தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளும் ,உணவு பொட்டலங்களும் தாயராக வைத்திருந்தோம் .

  அவசர அழைப்பிற்கு பின் பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் புறப்பட்டாக வேண்டும் .அதற்குள்ளாக அனைவரும் வாகனங்களில் ,தங்களின் பைகளுடன் அமர்ந்திருக்க வேண்டியது கட்டாயம் .

  அந்த நாட்களில் பெரும்பாலானோர் இரவில் தூக்கமின்றி ,கவச உடையும்,தொப்பியும் அருகிலேயே வைத்துகொண்டிருந்தனர். (கக்கூசுக்கு போவும் போதும் அந்த ஹெல்மட்டையும் ,ஜாக்கெட்யும் போட்டுட்டு போனவன் எல்லாம் உண்டு ) ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்து விடும் என்ற பயம் அது .முகங்களில் ஒரு பதட்டம் தெரிந்தது .எப்போதும் எதுவும் நடந்து விடலாம் எனும் உச்ச கட்ட பயத்தில் நகர்ந்த நாட்கள் அவை .விழித்திருப்பவனுக்கு இரவு மிக நீண்டது .அதுபோல் மிக மெதுவாக அந்த நாட்கள் நகர்ந்தது .

   அந்த சூழ்நிலையிலும் மேலே வானம் ,கீழே பூமி ,சோளிக்கே பீச்சே கியா ஹை  என பாட்டு பாடி மகிழ்ந்து இருந்தவர்கள் பலர் .

    ஆனால் எல்லோரும் பயந்ததுபோல் அப்படி ஏதும் நடக்கவில்லை .யாரும் முகாமைவிட்டு வெளியே செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படவில்லை .
ஷாகுல் ஹமீது

20-10-2016

Tuesday, 18 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள்14


   தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து .


       ஸ்டோர்ஸ் ல் வேலை பார்த்த அனைவரும் வெளியில் வேலை செய்யும்போதும்,வாகனம் ஓட்டும்போதும் கண்டிப்பாக குண்டு துளைக்காத தலை கவசமும் ,கவச உடையும் அணிந்திருப்பது கட்டயாமாக்கபட்டது.

       வாரத்தில் இருமுறை உணவு கூடத்திற்கு தேவையான தண்ணீர் பாட்டில்களை தூரத்தில் இருக்கும் இராணுவ கான்டீன் சென்றுதான் எடுத்து வரவேண்டும் .நான் பலமுறை போர்க் லிப்ட் ல் போய் கொண்டுவருவேன் .

     கண்டெய்னர் லாரிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும் வரை முகாமிலேயே தான் நிற்கும் .அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸ்லிருந்து ஒருவர் சென்றால் தான் டிசல் நிரப்ப முடியும் .அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் மற்ற சிலரும் பதினாறு மீட்டர் நீளமுள்ள  கண்டெய்னர் லாரிகளை ஓட்ட பழகிகொண்டோம்.

   கண்டெய்னர் லாரியின் ஓட்டுனருக்கு ஏதாவது உணவு பொருட்கள் கொடுத்து நான் பலமுறை அந்த லாரிகளை ஓட்டுவேன்.முன்னால் ஓட்டும்போது அதிக நீளம் காரணமாக திருப்பங்களில் முடிந்தவரை முன்னால் சென்று திருப்பவேண்டும் பெரிய கடினம் இல்லை .

   பின்னால் (ரிவேர்ஸ் )ஓட்டுவது மட்டும் சின்ன நுட்பம் தேவை.சில இந்திய ஓட்டுனர்கள் தைரியம் தந்து எனக்கு பயிற்சி தந்தனர் .இரண்டு பக்கமும் உள்ள  கண்ணாடிகளை பார்த்து கொண்டு வண்டியை வலப்பக்கம் திருப்பவேண்டும் எனில் ஸ்டீரிங்கை இடமாகவும் .இடப்பக்கம் திருப்பவேண்டுமெனில் வலமாகவும் திருப்பும் முறையை கற்று விட்டால் மிக எளிது .அந்த பதினாறு மீட்டர் நீளமுள்ள லாரியை ஆயிரகணக்கான மைல்கள் தாண்டி ,நாடு விட்டு நாடு என ஒரே ஓட்டுனர் தான் ஓட்டி வருவார் .

       எங்களுரில் ஆட்டோக்கே கிளி வைத்து ஓட்டுவதை      பார்த்திருக்கிறேன்.அதே இந்திய ஓட்டுனர்கள் தான் இங்கே திறமையாக தனியாக அந்த வானகங்களை ஓட்டுகிறார்கள் .

     குவைத்திலிருந்து உணவு பொருட்கள் ஏற்றிவரும் கண்டெய்னர் ஓட்டுனர்களுக்கு மிக அதிக சம்பளம் எனவே கார் ஓட்டிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கண்டெய்னர் ஓட்டுனர்களாக இங்குவரை  வந்து விடுவர் .இதில் அரைகுறை ஓட்டுனர்களுக்கு ரிவேர்ஸ் ல் ஓட்ட தெரியவே இல்லை .

        சில கண்டெய்னர் ஓட்டுனர்கள் அவர்களின் வண்டியிலிருந்து சரக்குகளை சில நாட்களுக்கு இறக்க வேண்டாம் என்பார்கள் .குவைத்துக்கு சென்றால் மீண்டும் சரக்கு ஏற்றி ஈராக்குக்கு அனுப்பிவிடுவார் லாரியின் உரிமையாளர் .வண்டி அதிகம் ஓடினால் அதிக பணம்தானே .ஓட்டுனரின் உயிருக்கு  தானே ஆபத்து .


     எங்களால் இயன்ற உதவி நாங்கள் சரக்கு வைக்கும் எங்கள் கண்டெய்னர்களில் இடமில்லை எனில் முடித்தவரை சில லாரிகளை நிறுத்திவைப்போம் .


    குறிப்பாக சில இந்திய ஓட்டுனர்கள் வரும் லாரிகள் சில நாட்கள் நிற்கும். கண்டெய்னர் லாரிகளில்  அனைத்து வசதிகளும்  இருக்கும் .உள்ளே சுகமாக படுத்து கொள்ளலாம் .வெயிலையும் ,குளிரையும் சமாளிக்க ஏர் கண்டீஷ்னர் ,தட்பவெப்ப நிலைகேற்ற உடைகள் (கையுறை,காலுறை ,தொப்பி போன்றவை)


    கண்டெய்னர் லாரிகள் வெகு தூரம் நாடு விட்டு நாடு செல்வதால் ஒரு சிறிய அடுமனையும் குறைந்தது 7 நாட்களுக்கான உணவு பொருட்களும் வைத்திருப்பார்கள் .மலையாளி ஓட்டுனர்கள் சிலர் சுவையாக சமைப்பதில் கில்லாடிகள் .இங்கு வந்தபின் நன்றாக சமைப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டால் அந்த ஓட்டுனரை சில நாட்கள் நிறுத்திவைக்கும் பொருட்டு அவரது வண்டியில் இருந்து பொருட்களை கடைசியாக இறக்குவோம் அதில் அவருக்கும் மகிழ்ச்சி .


    அப்பளம் ,புளி ,சாம்பார் பொடி,தேங்காய்,தேங்காய் பால் ,சமயத்தில் கறி வேப்பிலை ,மிளகாய் வத்தல்  போன்றவை அவர்களிடம் இருக்கும்.எங்களிடம் உள்ள மீன் ,அரிசி மற்றும் தேவையான பொருட்களை அவர்களுக்கு கொடுத்தால் அன்போடு சமைப்பார்கள் , குறைந்தது பதினைந்து பேருக்காவது சமைத்து விடுவார் .  தென்னிந்திய உணவான,ரசம், மோர்,அவியல் அப்பளம் என சில நாட்கள் ருசியாக சாப்பிடுவோம் .


      எங்கள் அடுமனையில் அமெரிக்க உணவுதான் சமைப்பார்கள் .நேரமின்மை காரணமாக  எங்களுக்கு என அரிசி சாதமும் ,கோழி கறி அல்லது ஆட்டிறைச்சி கறி தான் செய்வார்கள்.சில நாட்களில் அதுவும் இருக்காது அமெரிக்கர்களின் உணவைதான் நாங்களும் சாப்பிடுவோம்.அடுமனையில்  உணவு சமைக்க பயன்படுத்தபடும் அனைத்தும் உயர்தர பொருட்கள்தான் இருந்தாலும்  சாம்பார்,ரசம்,அவியல் ,அப்பளம் எல்லாம் நாங்கள் நினைத்தே பார்க்க முடியாதது.அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சுவையாக சாப்பிட்ட நாட்கள் பல .
  
     இஸ்லாமிய அன்பர் ஒருவர்  ரமலானில் தேங்காய் பால் சேர்த்து சமைத்த நோன்பு கஞ்சியின் சுவை இன்னமும் நாவில் ஒட்டியிருக்கிறது .

    தினமும் காலை ,மாலை ,மதியம் ,நடுஇரவு என பத்தாயிரம் உணவுகள் நாங்கள் வழங்கிகொண்டிருந்தோம். ஞாயிறுகளில் காலை உணவு கிடையாது .7 மணிக்கு பதிலாக 9 மணிக்கு உணவுகூடம் துவங்கும் .லஞ்ச் க்கு பதிலாக ப்ரெஞ்ச் என  கொடுப்போம் .9 மணிமுதல் 1 மணிவரை காலை உணவுவகைகளும் ,மதிய உணவு வகைகளும்  சேர்த்து கொடுப்போம்.அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு செல்வர் .

     ஈராக்கின் சாலைகளில் எப்போதுமே தாக்குதல் நடந்து கொண்டுதான் இருந்தது .சில நேரங்களில் காண்வாயில் பாதுகாப்பு படையுடன் செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் .

     2004 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சாலைகளில் தாக்குதல் மிக அதிகமாகி விட்டது. எங்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றி வரும் வண்டிகள் குறிப்பட்ட நேரத்தில் வந்து சேர முடியவில்லை .சில நாட்கள் பொருட்கள் இல்லாமல் சரியாக உணவுகள் கொடுக்க இயலவில்லை.கோழிகறி,ஆட்டிறைச்சி போன்ற பதபடுத்தபட்ட இறைச்சி வகைகள்  -18 டிகிரியில் இருக்க வேண்டும்.
  
  அவைகளை ஏற்றி வரும் கண்டெய்னர் லாரிகள்  சில நேரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் குளிர்பெட்டி வேலைசெய்யாமல் இங்கு வந்து சேரும் .அப்படி வரும் வண்டிகளை உடனே திறந்து அதிலுள்ள மாமிச வகைகளின் வெப்பநிலையை சோதிப்பார்கள் .குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பம்  அதிகமாக இருக்கும் போது அதிலுள்ள லட்சம் டாலர் மதிப்புள்ள உணவு வகைகள் அனைத்தும் குப்பையில் கொட்டப்படும்.

    உணவு பொருட்கள் குறைவாக இருப்பதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் எங்களுக்கு அது பெரும் ஏமாற்றம்.பாய் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல பாய் என்பான் முருகன் . மிகுந்த சிரமத்தில் பல தாக்குதல்களில் தப்பி இவ்வாறு வந்தாலும் .அந்த பொருட்களை உபயோகமற்று போவது அதிக சோர்வை தரும் எங்களுக்கு .

   தொடர்ந்து வரும் நாட்களில் நாங்கள் உணவில்லாமல் சிரமபடபோகிறோம்  என யாருக்கும் தெரியவில்லை .சாலைகளில் தொடர்ந்து பல பாதுகாப்பு மிகுந்த காண்வாய்கள் தாக்கப்பட்டதால்.சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது .

     உணவு கூடத்திற்கான  உணவு பொருட்கள் ஒரு வாரத்திற்க்கு மேல் வரவில்லை என்றாலே சமாளிப்பது கடினமாகிவிடும் .இப்போது ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது .போக்குவரத்து எப்போது சீராகும் என யாராலும் கணிக்க இயலவில்லை .


   காலை ,மாலை ,இரவில் வழங்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை முதலில் குறைக்கப்பட்டது .பணியாளர்களுக்கு இப்போது தான் மூச்சு விடவும் ,நண்பனிடம் நலம் விசாரிக்கவும் ,கல்லூரி நாட்களின் காதல் கதைகளை பேசவும் முடிந்தது .


      தினமும் பனிரெண்டு மணிநேரம் ஒரே அடுமனையில் வேலை செய்தாலும் யாருக்கும் ஒருவர் முகம் பார்த்து பேச இயலாது வேலை விசயங்களை தவிர .

   சில நாட்களுக்கு பின் காலை உணவு முற்றிலும் நிறுத்தப்பட்டது .காலை உணவாக நாங்கள் வழங்கும் உணவுவகைகள் மிக நீண்டது .எங்களுடன் பணிபுரிந்த ஒருவன் ஒரு ராணுவ வீரனுக்கு காலையில் அவனது தட்டில் பனிரெண்டு அவித்த முட்டைகளை வழங்கியதை நினைவு கூர்ந்தான் .

      நித்தம் ப்ரேக் பாஸ்ட் கூட ஒரு டசன் அவிச்ச முட்டைய தின்னவ பாடு பெருங் கஷ்டமில்லா இப்போ என சொல்லி சிரித்தான் .
ஷாகுல் ஹமீது ,

18-10-2016

Monday, 17 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 13


   குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் .
   வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக  அடிக்க ஆரம்பித்தனர் .அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும் , ஆவேசமும் இருந்தது.சாந்தமாக நான் பார்த்திருந்த சில சமையல்காரர்கள் வெறிகொண்டு எழுந்தபோது ஆளே மாறியிருந்தனர் .என் கண்கள் அதை நம்ப மறுத்தது . இதை சற்றும் எதிர் பாராத வைன் ஓட ஆரம்பித்தான் .

    முதல் இரண்டு ,மூன்று அடிகளை அவன் தடுத்து பார்த்தான் .முதலில் ஐந்துபேர் ,பின்னர் ஒன்றிரண்டு என வந்து கொண்டே இருந்தார்கள் .சுமாராக நாற்பது பேர் கூடி விட்டனர் .

   மாறோ சாலேக்கோ ,மாறோ என கூச்சலுடன் அவனை அடித்தனர் .அவன் எதிரில் நின்று பேச திராணியற்ற ,சில சோப்ளாங்கிகள் கூட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்று போட்டனர்.அதில் அவர்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி வேறு அடுத்த சில நாட்கள் அதை சொல்லியே அலைந்தனர் .

   கூட்டத்திலிருந்து பலத்த அடி விழ ஆரம்பித்ததும் ஓடிய வைன் அதிகாரிகள் குடியிருப்புக்குள் நுழைந்தான் .தொடர்ந்து விரட்டிய கூட்டம் அந்த குடியிருப்புக்குள் நுழைந்ததும் .எங்கள் மேனேஜர் ஒருவர் வேகமாக ஓடி வந்து தடுத்து காப்பாற்ற முயற்சித்தார் .அவரது கனத்த உடலும் ,நல்ல உயரமும் காரணமாக குடியிருப்பின் நுழைவு வாயிலின் அருகில் இருபக்கமும் கைகளாலும் ,உடலாலும் யாரும் வர முடியாதபடி தடுத்து நின்றார் .இருந்தாலும் அவரது கைகளுக்கிடையில் உள்ள இடைவெளி வழியாக ஒருவன் ஓங்கி அறைந்தான் வைனின் முதுகில் .


    மேனேஜர் பார்வையால் அடிக்காதீர்கள் என கெஞ்சுவதை தவிர வேறு எதுவும் அவரால் செய்ய இயலவில்லை .ஜோக்கிம் வாயிலிருந்து இரத்தம் வருகிறது என கேட்ட நானும் ,முருகனும் விரைந்து செல்லும் போது கூட்டமாக வைனை அடிக்க தொடங்கினர் .முதலில் அடிக்கட்டும் என்றிருந்த நாங்கள் .பின்னர் போதும் நிறுத்துங்கள் ,நிறுத்துங்கள் என சப்தமிட்டோம் யாருக்கும் அது கேட்கவே இல்லை .அடிப்பதை பார்துகொண்டிருந்ததை தவிர எதுவும் செய்ய இயலவில்லை .


    வைன் பொதுவாக சட்டை அணிவது இல்லை அதனால் உடல் ஆங்காங்கே சிவந்து இருந்தது ,முகம் கொஞ்சம் வீங்கி போய்விட்டது .ராணுவ போலீஸ் வரும் வரை அவனை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்திருந்து விட்டு .அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர் .


    ராணுவ போலிஸ் வைனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றது .அடுத்த பதினைந்து நிமிடத்தில் ராணுவ அதிகாரிகள் ,எங்களது மற்றும் அமெரிக்க நிறுவன அதிகாரிகள் எங்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தி விசாரணை செய்தது .முடிவில் இங்கு யாரும் ,நிறத்தால் ,மொழியால் ,இனத்தால் வேறுபட்டவர்கள் கிடையாது .அப்படி யாராவது நடந்து கொண்டால் தண்டிக்கபடுவர் என்றனர் .


     வைன் இனி எங்கள் நிறுவனத்திலோ ,அமெரிக்க நிறுவனத்திலோ பணி செய்ய முடியாது .மருத்துவ முதலுதவி சிகிழ்ச்சைக்கு பின் அவனை நாட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றனர் .


   நான் எழுந்து பேசினேன் .நடந்த சம்பவத்திற்கு அனைவர் சார்பாகவும் மன்னிப்பு கேட்டேன். இனிமேல் இப்படி ஒருமுறை நடக்காது என நான் உறுதியளிக்கிறேன் என சொல்லி என்னுடன் பணிபுரியும் அனைவரையும் பார்த்தேன் .அனைவரும் தலைகுனிந்து அமைதியாக இருந்தனர் .


   மேலும் நடந்த நிகழ்வுக்கு காரணங்களை விளக்கினேன் .முதலில் விஜயனுடன் பிரச்சனை செய்தான் ,அதை புகார் செய்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ,இரண்டாவது ,மூன்றாவது என கடைசியில் இப்படியாகிவிட்டது என்றேன் .ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம்
   ஏன் என்னிடம் நீ சொல்லவில்லை ஷாகுல்  இனிமேல் எந்த சிறு பிரச்னை என்றாலும் உடனே என்னிடம் சொல் என ஜெசிக்கா சொன்னாள்.ஆனால் அந்த மோசமான நிகழ்வை அனைவரும் மிக சீக்கிரத்தில்  மறந்து,எளிதில் கடந்து சென்றனர் .

 
   வைனை பற்றிய பேச்சே இல்லாமல் பணியிலும் ,மேஜை பந்து விளையாட்டிலும் ஒன்றி விட்டனர் .

    தொடர்ந்து வந்த நாள்களில் குண்டுகள் வெடிக்க தொடங்கிவிட்டது திக்ரித்லும் .பங்கர் பாதுகாப்பு சுவருக்குள் பகலிலும் ,இரவிலும் அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்கும்போது பதுங்க வேண்டியிருந்தது .பங்கருக்குள் அனைவரும் பயத்துடன் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் போது ஒருநாள் நானும் ,கார்த்தியும் தமாஷாக பேசிகொண்டிருந்தோம் .


    அப்போது உள்ளே பயத்தில் இருந்த கல்கத்தாவின் சமையற்காரன் ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டது .எங்களை பார்த்து கத்தினான் .கார்த்திக் உனக்கு தெரியாதா இங்கு வரும்போது குண்டுவெடிக்கும் என ,போர்முனையில் பூக்களையா உன் தலையில் போடுவாங்க .மும்பையில உன்கிட்ட சொல்லி தானே அனுப்பிருப்பாங்க என ஆங்கிலத்தில் சொன்னான் .கேட்டவனுக்கு அதை ஹிந்தியில் திருப்பி சொன்னேன் .

    குண்டு வெடிப்பு அதிகமாகிவிட்டபின் .ராணுவம் எங்கள் உணவு கூடத்திற்கு அருகில் டைகிரிஸ் நதியை நோக்கிய ஒரு பீரங்கியை கொண்டு வந்து நிறுத்தியது .

   டைகிரிஸ் நதியின் அக்கரையில் இருந்துதான் தாக்குதல் நடத்துகிறார்கள் எனவே இங்கிருந்து அவர்களை நோக்கி தாக்குவோம் என .பீரங்கியை இயக்கும் கால அட்டவனையை உணவு கூடத்தின் அறிவிப்பு பலகையில் அனைவரும் பார்க்கும் படி தொங்கவிட்டிருந்தனர் .பீரங்கி வெடிக்கும்போது பெரும் சப்தம் வரும் எனவே அந்நேரத்தில் அனைவரும் தங்கள் காதுகளை பொத்தி பாதுகாத்துகொள்ளும் பொருட்டு .


   காலையில் சென்றவுடன் உரையாடல் இப்படி தான் இருக்கும் .
  இன்னக்கி எப்ப வெடிக்கும்,
  பத்தே முக்காலுக்கு ,
  இயற் பிளக் இருக்கா உனட்ட ,
  அது நேற்று நம்ம மிலிட்டரிகாரி பிரண்டு தந்தா.
   நீ அவ காப்டன் வெஸ்ட் ஐ  காக்கா புடிசிட்டியா ,உனக்க நேரம் .
  உனக்கு பொறுக்காதே ..................
  வெஸ்ட் ,மே போன்ற பெயர்களில் நிறைய பேர் இருந்தனர் .


  பீரங்கி வெடிக்கும்போது காதுகளை பொத்தி அதிலிருந்து குண்டு செல்வதை பார்ப்பதற்கு அருகிலேயே நிற்போம் .ஆனால் குண்டு வெளியேறுவதை பார்க்க இயலவில்லை .பின்னர் அதை வீடியோ படமெடுத்து காட்டி தந்தனர் .அட்டவணையிட்டு   ராணுவம் தாக்குதல் நடத்தியபோதும் .எங்கள் முகாமை நோக்கிய தாக்குதல் குறையவே இல்லை .
   ஒருநாள் மாலை நான் போர்க் லிப்ட் வாகனத்தில் பொருட்களை தூக்கி கொண்டு கண்டெய்னர்களில் வைத்துகொண்டிருந்தேன் .முருகன் கண்டெய்னரின் அருகில் நின்று கொண்டு சைகை காண்பித்து கொண்டிருந்தான்.எங்களின் மிக அருகில் ஒரு குண்டு விழுந்தது .நான் போர்க் லிப்ட் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி விட்டேன் .சில மீட்டர் தள்ளி நின்று கொண்டிருந்த முருகனின் தொடை பகுதியில் சில கற்கள் தெறித்தது .


   ஜெசிக்கா ஓடி வந்தாள் அவனுக்கு அடிபட்டுவிட்டது என பதறியவளாய் முர்கா ஷோ மீ என்றாள் .உன் கால் சட்டையை கழற்று உன் காயத்தை நான் பார்க்க வேண்டும் என்றபோது .முருகன் வெட்கபட்டு நோ ,நோ என்றான் .


    ஜெசிக்கா சிரித்துகொண்டே என்னிடம் ஷாகுல் டெல் ஹிம் ,நான் அவனுடையதை பார்க்க மாட்டேன் ,அவனுடைய காயத்தை பொறுத்து முதலுதவியும் ,அறிக்கையும் நான் அனுப்பவேண்டும் .அவனது பாண்டை கழட்ட சொல் ஐ வான்ட் டு சி என்றாள் .தம்பி முருகா ரெண்டு புள்ளக்க தாய் அவ ,நம்ம அக்கா சும்ம களத்தி காட்டுடே என்றேன் முருகனிடம் .

   முருகன் வெட்கத்துடன் கால் சட்டையை கழற்றியபோது லேசான காயம்.உடனே அவனை அழைத்து சென்று முதலுதவி செய்து கொடுத்தாள்.அடுத்து தொடர்ந்து வந்த நாட்களில் அனைவருக்கும் குண்டு துளைக்காத தலை கவசமும் ,இடுப்புவரை அணிய ஒரு கவச உடையும்  (ஜாக்கெட் ) கொடுத்தனர் .கொரிய தயாரிப்பான அதன் எடை கிட்டத்தட்ட பதினான்கு கிலோ ,விலை ஆயிரத்தி முன்னூறு அமெரிக்க டாலர்கள் .
  அவ்வளவு எடையுள்ள அந்த கவசத்தை அணிந்து வேலை செய்வது மிக கடினம் .நாங்கள் வெளியே வேலை செய்வது மிக சிரமம் .


   அந்த கவச உடையை பார்த்து ராணுவ வீரர் ஒருவர் கேட்டார் .இடுப்புக்கு கீழே யாரவது சுட்டால் அல்லது காயம் பட்டால் என்ன செய்வது என .அவரும் அதை அணிந்திருந்தார் .

ஷாகுல் ஹமீது ,

16-10-2016