Sunday, 13 July 2025

பனாமாவில்

 


பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கிறோம். அட்லாண்டிக் கடலில் கிறிஸ்டோபலுக்கு ஒன்பதாம் தேதி இரவு அதாவது பத்தாம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு வந்து நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தினோம்.

அமெரிக்காவின் ஹூஸ்டனில் சரக்கு தொட்டிகளில் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூறு மெட்ரிக்டன் ப்ரோப்பேன் திரவத்தை நிரப்பியபின் ஐந்தாம் தேதி மாலையில் புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்தோம்.

அட்லாண்டிக் கடலிலிருந்து பனாமா கால்வாயை கடந்து பசிபிக் கடலில் நுழைந்து ஆசியாவின் ஜப்பான் அல்லது சைனாவிற்கு செல்ல வேண்டிய பயணம் இன்னும் உறுதியாகவில்லை.

பதிமூன்றாம் தேதிதான் கால்வாயை கடக்க எங்களது முறை. அதுவரை காத்திருப்பு இங்கே. தக்கால் முறையில் அதிக பணம் கட்டி முன்னரே செல்ல முடியும். கப்பலில் இருக்கும் கார்கோவிற்கு இன்னும் விலை படியாததால், மெதுவாக கப்பலை கொண்டு செல்லும்பொருட்டு அவசரப்படாமல் கால்வாயை கடக்க கிடைத்த தேதியில் கப்பலை கொண்டு செல்ல முடிவு செய்தது சரக்கு நிறுவனம்.

இந்த கப்பலில் வந்தபின் ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி முதல் முறையாக பசுபிக் கடலிலிருந்து பனாமா கால்வைவாயை கடந்து அமெரிக்காவிற்கு  சென்றோம். மே மாதம் இரண்டாவது முறையாக அட்லான்டிக் கடலில் இருந்து பசுபிக் கடலில் நுழைந்து ஜப்பானை அடைந்தோம்.


அமெரிக்காவில் 


மீண்டும் அமெரிக்கவின் ஹூஸ்டனில் சரக்கு நிறைக்கவேண்டிய இருந்ததால் ஜூன் இருபத்தியைந்தாம் தேதி மூன்றாவது முறையாக பனாமா கால்வாயை கடக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மூன்று மாதத்திற்குள் நான்காம் முறையாக பனாமா கால்வாயை கடக்க போகிறோம். இன்னும் ஒரு மணிநேரத்தில் கப்பலில் நங்கூரம் உருவி கப்பல் நகர்த்தப்பட்டு கால்வாய்க்கு அருகில் செல்லும் நள்ளிரவு ஒரு மணிக்கு பைலட் வருவார். நான்கு மணிக்கு முதல் கேட்டில் நுழைந்து காலை எட்டுமணிக்கு கட்டுன் (Gatun Lake) ஏரியில் நுழைந்தபின் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்படும். நார்த் பவுண்ட் என சொல்லப்படும் பசுபிக் கடலில் புறப்பட்ட கப்ல்களை வெளியே செல்ல அனுமதித்தபின் சவுத் பவுண்ட் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

Gatun Lake 

பனாமா கால்வாயில் கப்பல் எப்படி கடக்கிறது என்பதை முழுமையாக விரிவான ஒரு பதவில் எழுதிவிட வேண்டும் என நினைத்துள்ளேன். இந்த கட்டுரை இன்றைய நிகழ்வை பதிவு செய்வதற்காக எழுதவில்லை. கடந்த ஜூன் மாதம் இருபத்தியைந்தாம் தேதி அமெரிக்கா செல்வதற்காக பனாமாவை கடப்பதற்காக காத்திருந்த நாட்குறிப்பை சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

ஜூன் மாதம் நான்காம் தேதி ஜப்பானிலிருந்து காலியான கப்பலை சரக்கு நிறைப்பதற்காக  அமெரிக்காவை நோக்கி புறப்பட்டு இருபத்தி மூன்றாம் தேதி நள்ளிரவு அதாவது இருபத்தி நான்காம் தேதி இரண்டுமணிக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். ஒரு முழுநாள் மட்டும் காத்திருப்பு.

காலை எட்டுமணிக்கு முதன்மை அதிகாரியை சந்தித்தேன். “பத்து மணிக்கு மேல் ஆக்சன் தொடங்கும்” என்றார்.

“அதுவரை பார்வேடில் நான்கு யூ கிளாம்ப் போடணும் அதை செய்கிறேன்” என்றேன்.

“டோன்ட் என்கேஜ் யுவர் செல்ப், பி இன் வாக்கி டாக்கி” என்றார்.

காஸ் டிப்பார்ட்மென்ட்க்கு டெக்கில் முதன்மை அதிகாரியுடன் மீட்டிங் முடிந்து இஞ்சினில் மீட்டிங் செல்லவேண்டும். இஞ்சினுக்கு சென்றபோது கட்டுபாட்டு அறையில் யாரும் இல்லை. மெயின் இன்ஜினின் பீயுல் வால்வை மாற்றும் பணியில் இரண்டாம் இஞ்சினியர், இஞ்சின் பிட்டர் ராஜேஷ் சவுகான், மோட்டாமேன் மற்றும் காஸ் இஞ்சினியர் இருந்தனர்.

காஸ் இஞ்சினியர் சதா சிவ்விடம் “பீயுல் வால்வ் மாத்த தெரியுமா, இத படிச்சிக்கோ” என்றபோது

 “மூணு மணில இருந்து வேல செய்யாங்க இந்த பைப்ப மாட்ட முடியல” என்றான். ஐந்து மணிநேரத்திற்கு மேலாக அதனுடன் போராடி களைத்திருந்தனர். காலை பத்து மணிக்கு பனாமா ஆய்வாளர் ஒருவர் கப்பலுக்கு வருவார். அதற்கு முன் பராமரிப்பு பணிகளை முடித்து அந்த இடங்களை சுத்தப்படுத்திவைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாலை மூன்று மணிக்கே வேலையை தொடங்கியிருந்தனர்.

பதினான்கு ஆண்டுகள் இஞ்சின் பிட்டராக பணிபுரிந்ததால் அந்த அனுபவத்தில் நான் களத்தில் இறங்கினேன். என்னாலும் முடியவில்லை.

இரண்டாம் இஞ்சினியர் அனீசிடம் "பீயுல் வால்வ வெளிய எடுத்து திரட்ட (மரை) செக் பண்ணுவோம்” என்றேன்.

“அதையும் செய்து விட்டேன்” என்றார்.

“பீயுல் வால்வை கழட்டி வொர்க்சாப்பில் வைத்து பாப்போம்,பைப் ஏன் போவல்லன்னு   செக் பண்ணுவோம்". இஞ்சின் ரூம் நாற்பது டிகிரிக்கு மேல் இருந்தது. வெப்பமும், வியர்வையும், சோர்வும் சேர்ந்து ஒரு எரிச்சலை உருவாக்கியிருந்த தருணம் அது.

“சரி கழட்டு” என்றார் இரண்டாம் இஞ்சினியர். பீயுல் வால்வை வெளியே எடுத்தேன். மோட்டார்மேன் ஹை பிரஷர் குழாயை கொண்டு வந்தான். வொர்க்க்ஷாப்பின் மேஜையில் வைத்து பீயுல் வால்வில் குழாயை பொருத்தினேன். எளிதாக பொருந்தியது. சவுகான் சொன்னார். “இப்டியே கொண்டு இஞ்சின்ல மாட்டுவோம்” என. அப்படியே செய்தோம். ஐந்து மணிநேரத்திற்கு மேல் போராடிய வேலை முடிந்தது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் முடியவேண்டிய பணி அது.

அறைக்கு வந்து வாக்கி டாக்கியை ஆன் செய்து காத்திருந்தேன். முதன்மை இஞ்சினியரும், ஜூனியர் இஞ்சினியர் துர்வேசும் ஊருக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கான மாற்று பணியாளர்கள் இங்கே வருவார்கள். பத்து மணிக்கு படகு ஒன்று அணைவது கேட்டு டெக்கில் சென்றேன். படகிலிருந்து முதன்மை இஞ்சினியர் கையசைத்தார். சன்னிஜாய் நாட்குறிப்புகளில் வில்பர்ட் எனும் பெயரில் வரும் இரண்டாம் இஞ்சினியர் அங்கேயே பதவி உயர்வு பெற்று முதன்மை இஞ்சினியர் ஆனார். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அவரை சந்திக்கிறேன்.



கப்பலுடன் அருகணைந்த அந்த படகில் உணவு பொருட்களும், கொஞ்சம் உதிரி பாகங்களும் இருந்தன. அமெரிக்கா செல்லும் முன் கப்பலை ஆய்வு செய்ய பனாமா கப்பல்துறை அதிகாரி ஒருவர் முதலில் ஏணியில் ஏறிவந்தார். அப்போதே முதன்மை அதிகாரி என்னை அலெர்ட் செய்தார் “ஷாகுல் பி ரெடி” என.

 கப்பலின் அனைத்து தீயணைப்பான்களும் வருடாந்திர சோதனைக்கு தேதி நெருங்கியிருந்ததால் அதை சோதனை செய்யவும், எங்களது கம்பிரசர் ஒன்றின் பேரிங் உடைந்ததை சரி செய்து பொருத்தியிருந்தோம், அதன் அதிர்வு மற்றும் அலைன்மென்ட் சோதனை செய்ய டெக்னீசியன்கள், கப்பலில் சேரும் கழிவுகளை கொண்டு செல்ல வேண்டிய கார்பேஜ் குழு என மொத்தம் பதிமூன்று பேர் கப்பலுக்குள் வந்தனர்.

முதன்மை இஞ்சினியர் ஏணி வழியாக ஏறிவந்து கைகுலுக்கி நலம் விசாரித்தபின் “ஷாகுல் இன்னும் எவ்ளோ நாள் இருக்கு, இங்க பங்கர் இருக்கா, போசன் எங்க? ஒரு கயறு கீழ போட்டு எங்க லக்கேஜ தூக்கு” என்றார்.

“வெல்கம் ஆன் போர்ட், வீட்ல எல்லாரும் நலம் தானே, நான் செப்டம்பர்ல போலாம்னு இருக்கேன், லூப் ஆயில் பங்கர் இருபதாயிரம் லிட்டர் மட்டும் இங்க, அமெரிக்கா போன பொறவு தான் பங்கர்” என சொல்லிவிட்டு “ஸார் பனாமா இன்ஸ்பெக்டர் ஆன் போர்ட் நவ். நான் போறேன்” என விடைபெற்றேன்.

பனாமா ஆய்வாளர் கப்பலை சுற்றிவரும்முன் நான் காஸ் டிப்பார்ட்மென்ட் பொறுப்பில் இருக்கும் மோட்டார் அறையில் எல்லாம் சரியாக இருப்பதை பார்த்துவிட்டு, கம்பிரசர் அறைக்குள் சென்றேன். கம்பிரசருக்குள் சுற்றிவரும் கிளைக்காலை (glycol) குளிர்விக்கும் குளிர்விப்பானில் உள்ள கடல் நீரின் அழுத்தத்தை காட்டும் ஒரு குழாயின் இணைப்பு என் கண் முன்னே உடைந்து கடல் நீர் அதிக விசையுடன் பீய்ச்சி அடிக்க தொடங்கியது.

கம்பிரசரில் உள்ள மின்சார ஸ்விட்ச்கள் இருக்கும் (electric panel board) பெட்டியில் தண்ணீர் படாமல் இருக்க வலதுகையால் அமுக்கினேன். அதன் வால்வை இடது கையால் மூடினேன். ஸீ வாட்டர் பம்ப் ஓடிக்கொண்டிருந்ததால் தண்ணீர் வருவது நிற்கவில்லை.கம்பிரசர் அறை தண்ணீரால் நிறைந்து கொண்டிருந்தது. காஸ் இன்ஜினியர் சதாசிவ்வை ரேடியோவில் உடனே கம்பிரசர் அறைக்கு வருமாறு அழைத்தேன்.

சதாசிவ் பார்த்துவிட்டு என்ன செய்ய எனக்கேட்டார். “ஸ்டாப் தி பம்ப்” என்றேன். “ஹொவ் யு ரெக்டிபை திஸ்” என கேட்டான். எனக்கு பதட்டமே இல்லை என்ன செய்ய வேண்டும் என மிக தெளிவாக தெரிந்திருந்தது.

கப்பலில் ஆய்வாளர், டெக்னீசியன்கள், உணவு பொருட்கள், உதிரி பாகங்கள், பயர் பைட்டிங் எக்கூப்மென்ட் சர்விஸ் இஞ்சினியர்கள் என காப்டன் முதல் மெஸ்மேன் வரை முழு கப்பலும் உச்சகட்ட வேலையில் இருந்தனர். லூப் ஆயில் பங்கர் வருவது தாமதமானதால் அந்த டென்ஷன் தற்போதைக்கு இல்லை.

முதன்மை அதிகாரி கம்பிரசர் அறைக்கு வந்தார். “ஷாகுல் டெக்நீசியன்கள் சீப் இஞ்சிநியருடன் மீட்டிங் முடிந்து இன்னும் ஐந்து நிமிடத்தில் இங்கே வறாரங்க, நீ தனியா இத சரி பண்ணீருவியா, காஸ் இஞ்சினியர் டெக்னீசியன் கூட இருக்கணும்” என்றார்.

கடந்த இருமாதங்களுக்கு முன் அந்த கூலரின் கனெக்க்ஷன் ஒன்றை மாற்றியிருந்தேன். கடல்நீர் ஓடும்  குழாய் ஆதலால் அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருத்தியிருந்தார்கள். எனக்கு அதற்கான உதிரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிடைக்காததால் இரும்பு கனெக்க்ஷனை மாட்டியிருந்தேன். இரண்டு மாதங்கள் தாக்கு பிடிக்கவில்லை. அதன் பிளாஞ்சை கழட்டி இயந்திர அறைக்கு போய் நெடு நேரம் தேடியபின் பித்தளை கனெக்க்ஷன் ஒன்று கிடைத்தது. அதை பொருத்தினேன். பிளாஞ்சை சரிசெய்தேன். ஊருக்கு செல்லவிருக்கும் முதன்மை இஞ்சினியருடன், காலையில் அவரை விடுவிக்க வந்த வில்பெர்ட் மீட்டிங்கில் இருந்தனர். “ஷாகுல் கனெக்க்ஷன் கிடைச்சதா” எனக் கேட்டார்.

கம்பிரசர் அறையில் டெக்னீசியன்கள்  பணியை துவக்கியிருந்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்ட பின் உடைந்த பேரிங்கை நாங்கள் சரி செய்து பொருத்திய கம்பிரசரின் அலைன்மெண்டை  லேசர் செலுத்தி சோதனை செய்ய மூன்று பேர் குழு வந்திருந்தது. லேசர் செலுத்தி மிக துல்லியமாக அளவிடும் முறையை நான் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.

 வயதான சீனியர் ஒருவர், அவருக்கு உதவியாக ஒருவர், எங்களிடம் ஆங்கிலம் பேச ஒருவர். பன்னிரண்டு மணிக்கு கம்பிரசரை லேசாக தூக்கி அதன் அடியில் சிம்ஸ் (மெல்லிய தகடுகள்) வைக்க வேண்டும் என்றனர் டெக்னீசியன் குழு. அது சாத்தியமேயில்லை. காப்டன் இரு முதன்மை இன்ஜினியர்கள், முதன்மை அதிகாரிகள் வந்து கலந்தாலோசித்து கம்பிரசரை தூக்குவது என முடிவு செய்தனர்.

அதன் மொத்த எடை ஆறு டன்கள். மூன்று டன் எடையுள்ள மூன்று செயின் பிளாக் அதற்கான சிலிங்கள் அனைத்தும் தயார்செய்ய வேண்டியிருந்தது. வில்பர்ட் “நீங்க முதல்ல சாப்பிடுங்க,பெரிய வேல எனர்ஜி வேண்டும்” என்றார்.

இரண்டு மணிக்கு மேல் கம்பிரசரை தூக்கும் முயற்சி கைவிடப்பட்டது. முதன்மை இஞ்சினியர் “நாங்கள் மோட்டார் சைடில் தான் பேரிங் மாற்றினோம், கம்பிரசரை தொடவேயில்லை எனவே மோட்டார் சைடில் இருக்கும் சிம்சை எடுத்துவிட்டால் அலைன்மென்ட் சரியாகிவிடும்”  என ஆலோசனை சொன்னார்.

டெக்னீசியன் குழு அவர்களது நிறுவனத்துடன் போனில் பேசியபின் முடிவெடுப்பதாக கூறினர். வில்பர்ட் முதன்மை இஞ்சினியரிடம் வெசல் மேனேஜரிடம் பேச சொன்னார். “குலாலம்பூர்ல இப்ப நாலரை மணி,ஒரு ஆறு மணிக்கு போல கூப்பிடுவோம்” என்றார்.

பனாமாவில் நான்கரை மணியாக இருந்தது. லேசர் அலைன் மென்ட் நிறுவனம் மோட்டார் சைடில் கழட்ட சொல்லவே டெக்னீஷியன்குழு அதை செய்ய தொடங்கினர். அவர்களால் கழட்ட முடியாத போல்ட்டுகளை கழட்ட என் உதவியை கோரினர்.

லேசரின் அலைமென்ட் செய்ய நீண்ட நேரம் ஆனது. ஏழுமணிக்கு இரவுணவுக்கு சென்று வந்தோம். கப்பல் நள்ளிரவு  இரண்டு மணிக்கு மேல் கால்வாயை கடக்க புறப்பட வேண்டும். ஆங்கர் பார்ட்டி குழுவில் இருந்த முதன்மைஅதிகாரி, காடட் எங்களுடன் கம்பிரசர் அறையிலிருந்தவர்கள் ஐந்து மணிக்கே சென்றுவிட்டனர். இரவு எட்டுமணிக்கு லூப் ஆயில் தரும் பங்கர் பார்ஜ் கப்பலுடன் அணைந்தது. போசனும், ஓ,எஸ் மிதுனும் பங்கர் பார்ஜை கட்டிவிட்டு ஓய்வுக்கு சென்றனர். அலைன்மென்ட் மிக நுணுக்கமாக செய்ய வேண்டியிருந்ததால் இரவு நீண்டுகொண்டே சென்றது. முதன்மை இஞ்சினியர் கப்பலை விட்டு இறங்கும்வரை இயந்திரங்கள் அனைத்திற்கும் அவர்தான் பொறுப்பு. புதிதாய் வந்திருத்த முதன்மை இஞ்சினியர் வில்பர்ட் ஓய்வுக்கு சென்றிருந்தார்.



லூப் ஆயில் டாக்குமென்ட் பணிகளுக்கிடைய வந்த முதன்மை இஞ்சினியர் அலைன்மென்ட் பணி முடிந்ததும் அழைக்கசொன்னார். இரவு பதினோரு மணிக்குமேல் ப்ரிட்ஜிலிருந்து மூன்றாம் அதிகாரி ஏஞ்சல் அழைத்து பணி எப்போது முடியும் டெக்னீசியன்கள் செல்ல படகை யார் அழைப்பது என கேட்டார்.

  

3rd officer Angel 

வேலை முடியும் நேரத்தை இப்போதைக்கு சொல்ல முடியாது. டெக்னீஷியன்கள்  செல்லும் படகை அவர்களது நிறுவன முகவர் மூலம் வரவழைக்கவிருப்பதை சொன்னேன். படகு கரையிலிருந்து புறப்படும்முன் கண்டிப்பாக சொல்ல சொன்னார்.

காலையில் தீயணைப்பான்களை சோதனை செய்தவர், டெக்கிலுள்ள தீயணைப்பானை இயக்கும் கார்பன்டை ஆக்சைடு திரவ பாட்டில் ஒன்று காலியாக இருப்பதை கண்டுபிடித்தார். சரியாக இருந்த அனைத்து தீயணைப்பான்களுக்கும் அன்றைய தேதியிட்டு சான்றிதழ் வழங்கியபின் காலியான பாட்டிலை கரைக்கு எடுத்துசென்றார். டெக்னீஷியன்கள் வீட்டிற்கு செல்லும் படகு கரையிலிருந்து புறப்படும்போது அதில் கப்பலுக்கு வரவேண்டிய கார்பன்டை ஆக்சைடு நிறைத்த பாட்டில் வந்துசேர வேண்டும். இல்லையெனில் கப்பல் அதிகாலை புறப்படுவதில் சிக்கலாகும்.

காலதாமதம் ஏற்பட்டால் கால்வாயை கடக்கும் எங்கள் கப்பலின் வரிசை பின்தள்ளப்பட்டு அதற்காக காப்டன் சரக்கு நிறுவனத்துக்கும், கப்பல் முதலாளிக்கும், எங்கள் நிறுவன மேலதிகாரிகளுக்கும் விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

அலைன்மென்ட் பணி பன்னிரெண்டரை மணிக்கு முடிந்தது. முதன்மை இஞ்சினியரை அழைத்தோம். மோட்டார் அறையிலும் சோதனை செய்து பார்த்தோம். கம்பிரசரை இயக்கி ஓட விட்டு அதிர்வை அளக்கும் கருவியால் உறுதிசெய்தார்கள். வயதான சீனியர் டெக்னீசியன் என்னை கப்பல் வேலையை விட்டுவிட்டு அவருடன் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

நள்ளிரவு ஒரு மணிக்கு கம்பிரசரை அரை மணிநேரம் ஓட விட்டு வெப்பம், அதிர்வு, சப்தம் ஆகியவை கண்காணிக்கபட்டது. அதில் திருப்தியடைந்த முதன்மை இஞ்சினியர் அலைமென்ட் நிறுவனத்துக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டு கொடுத்தார். காஸ் இஞ்சினியர் கம்பிரசர் அறையில் இருப்பதாக சொல்லி என்னை ஓய்வுக்கு செல்ல சொன்னார். காலை பஜர் மட்டும் தொழுதிருந்தேன். பத்து மணிக்குப்பின் அறைக்கே செல்லவில்லை. தொடர்ச்சியாக பதினேழு மணிநேரம் வேலை. முதன்மை இன்ஜினியருக்கும், காஸ் இன்ஜினியருக்கும் பதினெட்டு மணிநேரத்துக்கும் அதிகமாயிருக்கும்.

அறைக்கு வந்து குளித்து தொழுதுவிட்டு பிரிட்ஜில் அழைத்தேன். இரண்டாம் அதிகாரி ராஜ்தீப்பிடம் தூங்க இரண்டரை மணிக்கு மேலாகிவிடும் காலை பனாமா கால்வாயை கடக்கும்போது ஸ்டேஷனுக்கு என்னை அழைக்கவேண்டாம் என முதன்மை அதிகாரியிடம் சொல்ல சொன்னேன்.

படுத்ததும் நல்லுறக்கம். காலை எட்டரைக்கு கண்விழித்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் சிறிதுநேரம் படுத்திருந்தேன். கப்பல் கால்வாய் கேட்டுககளை தாண்டி கடுன் ஏரியில் சென்றுகொண்டிருந்தது. பத்து மணிக்கு மூன்றாம் அதிகாரி அழைத்து பார்வேர்டில் பணியில் இருக்கும் ஓஎஸ் மிதுனை விடுவிக்க சொன்னார்.

மிதுன் அதிகாலை நான்கு மணிக்கு வந்திருந்ததை சொன்னார். மூன்றரை மணிக்கு கப்பல் கால்வாயை கடந்து அட்லாண்டிக் கடலை தொட்டது. ஊருக்கு செல்ல வேண்டிய முதன்மை இஞ்சினியரும், ஜூனியரும் படகில் இறங்க தயாராகியிருந்தனர்.

சீப் இஞ்சினியர் எட்டுமாதங்களும், ஜூனியர் ஏழு மாதங்களும் நிறைவு செய்திருந்தனர். வில்பர்ட் கப்பலின் புதிய சீப் இஞ்சினியர் பொறுப்புக்கு வந்திருந்தார். வில்பர்ட்டுடன் ஐந்தாவது முறையாக பணி செய்கிறேன்.

இரவில் வழக்கம்போல் பத்து மணிக்கு தான் தூங்க சென்றேன். ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு எழவில்லை. ஐந்தரை மணிக்குமேல் தானாக விழிப்புவரும் வரை தூங்கியிருந்தேன்.

காலை கூட்டத்தில் முதன்மை அதிகாரி முழுநாள் ஓய்வு என்றார். இயந்திர அறை மீட்டிங் சென்றேன். இஞ்சின் ரூமில் ஓய்வு இல்லை. டெக்கில் விடுமுறை என சொல்லிவிட்டு நான் அறைக்கு வந்துவிட்டேன்.

முழுநாள் ஓய்வுக்குப்பின் உடல் அடுத்த நாள் பணிக்காக உற்சாகமடைந்திருந்தது.

மேற்கண்ட நிகழ்வு பனாமாவில் ஜூன் இருபத்தி நான்காம் தேதி நடந்தது.

நாஞ்சில் ஹமீது,

13 – ஜூலை-2025.

Saturday, 12 July 2025

இருபது ஆண்டு நிறைவு 37- கத்தாரின் கடும் வெப்பம்

 


எனர்ஜி ஓர்பஸ் (ENERGY ORPHEUS) 2016.

எல்பிஜி கப்பலில் முன்பு வாய்ப்பு கேட்டபோது முன் அனுபவம் தேவை என சொல்லி மறுத்தார்கள். இப்போது என் நிறுவனத்தில் எல்பிஜி கப்பல்கள் நிறைய வரத்தொடங்கின. கார் ஏற்றும் கப்பல்களின் என்ஒய்கே NYK  நிறுவன கப்பல்களை திரும்ப பெற்றுகொண்டார்கள்.

ஜப்பானிய கப்பல்களில் இருக்கும் கெய்ஷா 

எனவே கார் ஏற்றும் கப்பல்களில் வேலைபார்த்த பணியாளர்களை எல்பிஜி கப்பல்களில் அனுப்பதொடங்கினார்கள். அதனாலேயே எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கொச்சியிலிருந்து விமானம் ஏறும் முன் மும்பை அலுவலக மேலாளர் அனிதா தாக்கூர் அழைத்திருந்தார். “ஷாகுல் ஸ்லோலி லேர்ன் தி டெக் ஜாப் டூ” என்றார்.

கார்காரியர் வகை கப்பல்களில் இஞ்சின் பிட்டாரக அறுபது வயதில் பணி ஓய்வு பெறும்வரை பணி செய்யலாம். காஸ் கேரியர் வகை கப்பல்களில் டெக்கில் கார்கோ ஆப்ரேசன் மற்றும் காஸ் பிளான்ட் வேலையை கற்று காஸ் பிட்டராகும் வாய்ப்பும் அதன் காஸ் டெக்நீசியனாக அதிக சம்பளத்தில் பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே எல்பிஜி கப்பலில் வர விரும்பினேன்.

ஊர் சுற்றுவதற்கு மட்டும் வாய்ப்புகள் மிக குறைவு அதை தெரிந்தே இங்கே வந்தேன். கப்பல் சிங்கையில் பங்கர் முடிந்து கிளம்ப தயாரானபோது நான் கப்பலுக்கு வந்தேன். தெமிஸ் லீடரில் நான் விடுவித்த அதே பிட்டர் மஞ்சீத் சிங்கை இங்கேயும் விடுவித்தேன். ஹான்டிங் ஓவர் எனச்சொல்லபடும் எனது வேலைகளை காட்டி தராமலே மஞ்சீத் இறங்கி சென்றார். குடியிருப்பின் முகப்பில் இடிமிட்சு என எழுதப்பட்டு கூந்தல் பறக்கும் பெண்ணின் தலை வரையப்பட்டிருந்தது.

1995 இல் ஐடிஐ முடித்து மணவாளகுறிச்சி கிராமத்தில் சோமன் அண்ணாவின் மீன்பிடி இஞ்சின் பழுது பார்க்கும் வொர்க்ஷாப்பில்  வேலை பார்க்கும்போது இந்தியாவில் அப்போது அறிமுகமான ஜப்பானின் இஞ்சின் ஆயில் இடிமிட்சுவை கொஞ்சமாக வாங்கி வியாபாரம் செய்திருக்கிறேன்.



 கப்பல் இரவே புறப்பட்டிருந்தது. இரவில் தூங்கி எழுந்து காலை எட்டுமணிக்கு இயந்திர அறைக்கு சென்றேன். உக்ரைன் காப்டன்,முதன்மை  அதிகாரி, இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி ஆகியோர் இந்தியர்கள். இந்த எல்பிஜி கப்பலில் இரு மூன்றாம் அதிகாரிகள் ஒருவர் பிலிப்பினோ. கார்கோ பணிகள் அதிகமாக இருப்பதால் நேவிகேஷனுக்கு அதிகப்படியாக இன்னொரு மூன்றாம் அதிகாரி எல்பிஜி கப்பல்களில் இருகின்றனர். முதன்மை அதிகாரிக்கு எப்போதும் கார்கோ சார்ந்த பணிகள் இருந்துகொண்டே இருக்கிறது.

 இஞ்சினில் கேரளாவை சார்ந்த ஜார்ஜ் முதன்மை இன்ஜினியர், ஒரிசாவின் பரிதா பஞ்சனன் இரண்டாம் இஞ்சினியர், கோவாவை சார்ந்த மூன்றாம் இஞ்ஜினியர், இலியா எனும் உக்ரைனை சார்ந்த நான்காம் இஞ்சினியர் காஸ் இஞ்சினியராகவும், ஜவர்லா குப்தா காஸ் டெக்னீஷியன் ஆகவும் இருந்தனர். டெக் மற்றும் இன்ஜினின் பணியாளார்கள் அனைவரும் பிலிப்பினோக்கள். சமையல்காரர் என்னுடன் இணைந்த கோவாவின் ஆன்றனி. ஒரு பயிற்சி ஓஎஸ்கள் அதிகமாக இருந்தனர்.

பிலிப்பினோ பணியாளர்களுக்கான உணவை பிலிப்பினோ மெஸ்மேன் சமைப்பார். எனவே முதன்மை சமையற்காரருக்கு எட்டு இந்தியர்களுக்கு மட்டும் சமைத்தால் போதும்.

பத்து ஆண்டுகளில் பதிமூன்று கார்கேரியர் கப்பல்களில் பணிசெய்த எனக்கு. இஞ்சின் பிட்டராக பணி அதேதான். பாதுகாப்பு முறைமைகள் மிக அதிகம். இதில் ஏற்றப்படும் சரக்கு எல்பிஜி திரவம் என்பதால் ஒவ்வொரு வேலையை செய்யும் முன்பும் முறையாக பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தல் மிக கட்டாயம். எந்த குறுக்கு வழிக்கும் இடம் கிடையாது. ஒரு சிறு தவறில் பெரும் விபத்துக்கு காரணமாகிவிடும். காலை மீட்டிங்கில் துவங்கும் சேப்டி, நாள் முழுவதும் பலமுறை நினைவுபடுத்துவதோடு, எல்லா பயிற்சி கூட்டம், வார மற்றும் மாதந்திர கூட்டத்திலும் பாதுகாப்பு என்ற வார்த்தையே மிக அதிகமாக உச்சரிக்கப்படும். எனது நிறுவனம் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக விபத்தின்றி எல்பிஜி கப்பல்களை நிர்வகித்து வருகிறது.

எனெர்ஜி ஒர்பஸ் இருபத்தி மூன்று ஆண்டு பழைய கப்பல். கடந்த மூன்று ஆண்டுகளில் பணி செய்த கப்பல்கள் பத்து ஆண்டுக்கும் குறைவானவை. இந்த கப்பலை ஏழு மாதங்களுக்கு முன் ஜப்பானியர்களிடமிருந்து எங்கள் நிறுவனத்துக்கு அளித்திருந்தது. என் நிறுவனத்துக்கு வந்தபின் இரண்டாவது பணியாளர் நான்.

அறையில் தண்ணீர் குழாயை திறந்தால் நல்ல சூடாக வரும் தண்ணீர். கடும் சுடுநீரில் என்னால் குளிக்கவே முடியாது. இந்த கப்பலின் எரி எண்ணெய் தொட்டிகள் இயந்திர அறையை சுற்றியே இருக்கிறது. எரி எண்ணெய் தொட்டியின் வெப்பம் எப்போதும் ஐம்பது டிகிரிக்கு மேல் வைத்திருக்கவேண்டும். அதற்காக அந்த தொட்டிகளுக்குள் நீராவி குழாய்கள் பொருத்தபட்டிருக்கும்.

கப்பலின் தண்ணீர் தொட்டிகளும் இயந்திர அறைக்குள் இருக்கும். நம் வீடுகளில் தண்ணீர் தொட்டி உயராமான இடத்தில் வைத்திருப்போம் கப்பலில் கீழ் பாகமான இயந்திர அறையில் இருக்கும் தண்ணீர் ஹைட்ரோபோர் எனும் முறைமூலம் கப்பலின் மிக உயரமான பிரிட்ஜின் மேலுள்ள மங்கி ஐலண்ட் வரை அதிக விசையில் செலுத்தப்படும்.

 கப்பலின் நன்னீர் தொட்டி தேக்கி வைத்திருக்கும் தொட்டியிலிருந்து  ஹைட்ரோபோர் தொட்டிக்குள் வரும் தண்ணீர் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள பம்ப் மூலம் அதிக விசையில் உந்தி தள்ளப்பட்டு முழு கப்பலுக்கும் தரப்படும். ஹைட்ரோபோர் தொட்டி காற்று செலுத்தப்பட்டு அதன் அழுத்தம்  குறிப்பிட்ட அளவில் எப்போதும் பாதுகாக்கப்படும். ஹைட்ரோபோர் தொட்டியும் இயந்திர அறைக்குள் இருக்கும். இயந்திர அறையின் வெப்பம் எப்போதும் நாற்பத்தி ஐந்து டிகிருக்கு மேல் இருந்தது.

எனது மிக சிறிய குளியலறையில் நூறு லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் வாளி ஒன்றை வைத்து எப்போதும் நீர் நிறைத்து வைத்திருதேன். குளிரூட்டபட்ட அறை ஆதலால் வாளியில் நிறைத்து வைத்திருக்கும் நீருடன் குழாயை திறந்தால் வரும் சுடுநீரை கலந்து தண்ணீரின் வெப்பத்தை குறைத்து நீராடுவேன்.

கப்பலின் குளிரூட்டி வியக்கும்வகையில் கப்பலின் வயதை மீறி  மிக சிறப்பாக இருந்தது. கத்தாரின் ரஸ்லபான் எல்பிஜி டெர்மினலில் இருக்கும்போது வெப்பம் நாற்பத்தி ஒன்பது டிகிரி சென்டிகிரேடாக இருந்தது. குடியிருப்புக்குள் இருபத்தி ஒரு டிகியாக இரவில் நிம்மதியாக தூங்க முடிந்தது.

VLGC  (VERY LARGE GAS CARRIER) வகையை சார்ந்த இந்த கப்பல் இருநூற்றி முப்பத்தி ஒன்பது மீட்டர் நீளமும், முப்பத்தி ஒன்பது மீட்டர் அகலமும், 44,578 மெட்ரிக் டன் மொத்த எடையையும் கொண்டது. இதில் நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் எல்பிஜியை திரவ நிலையில் எடுத்து செல்ல முடியும். மைனஸ் நாற்பத்தி மூன்று டிகிரியில் ப்ரோப்பேன் அல்லது மூன்று டிகிரியில் பீயுட்டேன் திரவத்தை மட்டுமே நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட கப்பல் இது.

LPG terminal 

இதன் கார்கோ எனக்கு புதியது அதைபற்றி எதுவும் தெரியாது. கற்றுகொள்ளும் ஆவலில் இருந்தேன். கப்பலில் இருந்த காஸ் டெக்னீசியன் ஜவர்லா குப்தா ஐம்பத்தியைந்து வயதை தாண்டிய நீண்ட அனுபவம் உள்ளவர். அவரிடம்தான் கற்றுகொள்ள வேண்டும் என எண்ணியிருந்தேன்.

ஜவர்லா குப்தாவை இங்கே அனைவரும் குப்தாஜி என்றே அழைப்பார்கள். திறமையான வேலைக்காரர். அதே அளவு அரசியல் விளையாட்டும் அவரிடம் உண்டு. கப்பலின் டாப் போர் எனப்படும் காப்டன், முதன்மை இஞ்சினியர், முதன்மை அதிகாரி, இரண்டாம் அதிகாரி ஆகியோருடன் மட்டுமே பேசுவார்.

என்னை போன்று கார் கேரியர் கப்பல்களில் இருந்து வந்தவர்கள் கப்பல் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என ஆழமான நம்பிக்கை கொண்டவர். பிகாரை சார்ந்த அவர் பஞ்சாபி வேசத்தில் அலைவார்.

 எங்கள் நிறுவனத்தில் ஒன்பது எல்பிஜி கப்பல்கள் மட்டுமே இருந்தன. அதன் பணியாளர்கள் அந்த ஒன்பது கப்பல்களுக்குள் மட்டுமே சுழற்சியில் இருந்தனர். மரைன் கல்லூரிகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற இஞ்சினியர், காடட் மட்டுமே அப்போது எல்பிஜி கப்பல்களில் வாய்ப்பளிக்கபட்டது. மற்றவர்கள் கார் கேரியர் மற்றும் பல்க் கேரியர் வகை கப்பல்களில் அனுப்பப்பட்டார்கள். எனவே எல்பிஜி கப்பல்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த கர்வமும், தலைக்கனமும் உண்டு.

யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடும் நான் கப்பலின் அரசியல் விளையாட்டுகளில் சிக்கிகொள்வேன். கப்பலில் இணைந்த முதல் வாரத்தில் எமர்ஜென்சி பயர் பம்பின் கடல்நீர் குழாயில் ஏற்பட்ட ஒழுகலை தற்காலிகமாக சரிசெய்தபின், புதியதை செய்ய சொல்லி உத்தரவிட்டார் முதன்மை இஞ்சினியர்.

பணி தொடங்குவதற்காக மாலையில் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தேன். மாலை ஐந்து மணி நாள் முடியும் தருவாயில் “இரண்டாம் இஞ்சினியர் காஸ் டெக்னிசியன் எதாவது சொன்னாரா”? எனக்கேட்டுவிட்டு “நாளை அந்த குழாயை குப்தாஜி செய்வதாக சொன்னார்”.

அது எனது வேலை அதில் டெக்கிலுள்ள காஸ் பிட்டர் எதற்கு இதில் தலையிடவேண்டும் என நான் அமைதியிழந்தேன். குழப்பத்தில் இருந்த நாள் கப்பலில் ஆந்திராவை சார்ந்த பத்திசாப் மென்டோசாவிடம் கேட்டேன்.

“பாயி உனக்கு வெல்டிங் தெரியுமா”

“ஆமா”

“மனச போட்டு குழப்பாம நிம்மதியா படுத்து உறங்கு, அவனுக்கு அரிப்பு கூடுதல் பல வருசமா நான் பாக்கேன், அவன் செய்துட்டு போட்டு, உட்டுதள்ளு” என்றார். அதை கேட்டபின் இரவில் நன்றாக தூங்கி விழித்தேன். மறுநாள் காலை இரண்டாம் இஞ்சினியர் குழாய் பணிக்கு குப்தாவுக்கு உதவும்படி சொன்னார். குப்தா வெல்டிங் அடிக்கும்போது பார்த்து கேட்ட முதன்மை இஞ்சினியரிடம் இஞ்சின் பிட்டர் ஷாகுலுக்கு வேறு வேலை இருப்பதாக என் காதுபடவே சொல்லி சமாளித்தார்.

கப்பலின் கடுமையான வெப்பத்தை என்னால் தாங்கவே இயலவில்லை. கோடையில் அரபு வளைகுடாவில் ஐம்பது டிகிரி வரை செல்லும் வெப்பத்தால் இயந்திர அறை அறுபது முதல் அறுபத்தியைந்தி டிகிரியாக உயர்ந்துவிடும்.

அந்த கப்பலில் இருந்தபோது அவ்வப்போது நாட்குறிப்புகள் எழுதினேன். கடும் வெப்பத்தில் மோட்டர்மேனின் பணி குறித்து அப்போது எழுதிய பதிவை இங்கே இணைத்துள்ளேன்.

மேலும்....

நாஞ்சில் ஹமீது,

12-july-2025.

sunitashahul@gmail.com

பின் குறிப்பு :  கடந்த ஜூலை மூன்றாம் தேதி எனது கப்பல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் கரையணைந்தது. அதற்கு முன்பே கடுமையான பணிகள், துறைமுகத்தில் ஓய்வே இல்லாமல் பணியும், கரைக்கு சென்று வந்ததும் எல்லாம் சேர்ந்து தூக்கம் நிலையில்லாமல் போய் மீண்டு வர சில தினங்கள் ஆகிவிட்டது. அதுவே அடுத்த பதிவு எழுத தாமதமாகிவிட்டது. ஆனாலும் இருபது ஆண்டு நிறைவு கட்டுரைகளை வாசிப்பவர்கள் எவரும் அடுத்த கட்டுரை ஏன் வரவில்லை என கேட்காதது  எனக்கு வியப்பாக இருந்தது.

எனெர்ஜி ஒர்பசில் 2016  எழுதிய இரு டைரி குறிப்புகளை  இங்கே இணைக்கிறேன்.

                                                      ரஸ் ல பான் (கத்தார் )

                                                                               31 -07-2016

இன்று காலையில் கத்தார் நாட்டின் ரஸ் ல பான் வந்து சேர்ந்தோம். கடந்த 12 ம் தியதி ஜப்பானிலிருந்து புறப்பட்டிருந்தோம் .

நல்ல வெயில். பன்னிரண்டு மணி வரையில் வேலை செய்துவிட்டு வந்தோம். இயந்திர  அறை பயங்கர சூடு. மீண்டும் மாலை ஆறு மணிக்கு வேலை தொடங்கலாம் என்றார் 2ம் இஞ்சினியர். எப்படியும் எட்டு மணி நேரமகலாம்  வேலை முடிய.

சாப்பிட்டுவிட்டு 2 மணிக்கு அறையை முழுமையாக இருட்டாக்கிவிட்டு தூங்கியிருப்பேன். அவசரகால மணி அடித்தது. 3 மணிக்கு வேகமாக உடைமாற்றி ஓடினோம். அனைவரும் உரிய இடத்தில் கூடிவிட்டோம்.தவறான அழைப்பு (false alarm) என்றார்கள்.

மீண்டும் அறைக்கு வந்து படுத்துவிட்டேன். நான்கு மணிக்கு எழுந்து கறுப்பு டீ எடுத்து வந்து கணினியை திறந்ததும், 2ம் இஞ்சினியர் போனில் அழைத்தார். இப்போதே பணியை துவங்கலாமா என கேட்டார். சரி என ஒப்புக்கொண்டு 4.45 க்கு வேலையை தொடங்கினோம். அதிக சூடு காரணமாக ஒவ்வொரு 20 நிமிடதிற்குப்பின்  வொர்க்ஷாப்பினுள் வந்து 5 முதல் 10 நிமிடம் உட்கார்ந்து விட்டோம்.

 வொர்க்ஸ்ஷாப்பில் குளிரூட்டி இயங்குகிறது.

காலையிலேயே நான் எலுமிச்சை, சக்கரை, உப்பு கலந்த பானத்தை தயாரித்து வைத்திருந்தேன்.  இயந்திர அறையின் வெப்பம் 60 டிகிரி இருக்கும். கத்தாரின் இன்றைய வெப்பநிலை 48 டிகிரி என்றார்கள்.

முக்கிய இயந்திரத்தின்  நான்கு யூனிட்களில் பராமரிப்பு பணி. முதல் யூனிட் முடியும் போது மணி 6 .45 ஆகிவிட்டது. அதிக வெப்பம் காரணமாக சீக்கரமே சோர்ந்து விட்டோம். இரவு உணவுக்கு பின் மீண்டும் பணி தொடங்கலாம் என மேல் தளத்தில் இருக்கும் அறைக்கு வந்து  உடல் கழுவி, உடைமாற்றி உணவருந்த சென்றேன். அப்போது வேறு பணிக்காக மோட்டார் மேன்கள் இயந்திர அறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இரவு உணவுக்கான நேரம் 6 முதல் 6 .45 வரையில் நான் உணவு கூடத்திற்கு செல்லும்போது போது மணி 7 ஐ தாண்டி இருந்ததால் எனக்கான உணவு இல்லாதை கண்டு, சமையல்காரரை போனில் அழைத்தேன். சமையல் கூடத்தில் இருக்கிறது நான் வருகிறேன் என்றார்.

ஆனால் அங்கு உணவு இல்லை. மெஸ் மேன் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த பெர்னான்  குப்பை தொட்டியில் வீசி இருக்கலாம் என சொன்னார். கொஞ்சம் மதியமுள்ள சைவ பிரியாணி கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு சுனிதாவிற்கும், நண்பர் சாம் க்கும் தொலைபேசியில் பேசிவிட்டு, எட்டு மணிக்கு முன்பாக 2 ம் யூனிட்டின் வேலையை தொடங்கினோம் .

4 ம் இஞ்சினியர் உக்ரைன் நாட்டின் இலியா மோட்டர் மேன்கள் செய்யும் பணிக்கு உதவியாக இருந்தார். இரவு 11 மணிக்கு 3  யூனிட் முடிந்த வேளையில் தான் கவனித்தேன் ஒரு வால்வ் ஒழுகிகொண்டிருப்பதை. என்ன  செய்யலாம் என கேட்டார் 2 ம் இஞ்சினியர். அதை மாற்றதான் வேண்டுமென்று சொன்னேன். அதை மாற்றுவதில் அரை மணிநேரம் போய்விட்டது. அப்போது இலியாவும் எங்களுடன் இணைந்து கொண்டு உதவி செய்தான். நள்ளிரவு 12 மணிக்கு அவரது பணிநேரம் முடிந்ததும் சென்றுவிட்டார் . 

கடைசி யூனிட் தொடங்கும்போது இருவரும் முழுமையாக சோர்ந்து விட்டோம். இறுதியில் என்னால் நிற்கவோ, கருவிகளை கையில் எடுக்கவோ வலுவில்லாமல் போய்விட்டது. 2 ம் இஞ்சினியரை பார்த்தேன். என்னைபோலவே அவரும் சோர்ந்திருந்தார்.

கடந்த 11 ஆண்டு கப்பல் பணியில் இதுபோல் எப்போதும் சோர்வடைந்தது இல்லை. காரணம் கடும் வெப்பம். காலுறை, உள்ளாடை என அனைத்தும் விரைவில் வியர்வையால் நனைந்துவிடும்.

நள்ளிரவு 1 மணி ஆகிவிட்டது பணி முடியும் போது. பின்பு நீராடி, கறுப்பு டீ குடித்து, காலையின் வெளிச்சம் அறைக்குள் வராதபடி (இங்கு கோடையில் அதிகாலையிலேயே வெளிச்சம் வந்து விடுகிறது) கண்ணாடி ஜன்னலை தலையணை, போர்வையால் மூடி 2 மணிக்கு மேல் துயில சென்றேன். எட்டு மணிக்கு விழித்து சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் கனவுகளுடன் பத்து மணிவரையில் தூக்கம். அப்போதே கப்பல் கத்தாரின் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுவிட்டது.

மீண்டும் மதியம் 1 மணிக்கு வேலைக்கு சென்றோம். 3 மணிவரையில் வேலை செய்துவிட்டு ஓய்வு எடுத்துகொள்ள சொன்னார்கள். இப்போது கப்பல் ஓடிகொண்டிருந்ததால் இயந்திர அறையின் வெப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது.

இலியா என்னிடம் வந்து இப்போது இயந்திர அறையின் வெப்பம் 65 டிகிரி என்றான்.

அவ்வப்போது நிகழ்வுகளை பதிவு செய்கிறேன். இப்போது தான் எழுதி முடித்தேன் இதை.

ஷாகுல் ஹமீது.

1 ஆகஸ்ட் 2016

 

 

26-08-2016

Ras tanuurah (Saudi Arabia) 

கடந்த பதினான்காம் தியதி கப்பல் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு சவுதியின் ரஸ்த நூறா விற்கு 24 ம் தியதி  மாலையில்  வந்து சேர்ந்தோம். நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு மறுநாள் (25 ம் தியதி) மதியம் 2 மணிக்கு  புறப்பட்டு மாலையில் ஜெட்டியில் கப்பல் கட்டபட்டது. கரையே தெரியவில்லை. தூரத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. அங்கிருந்தே குழாய் மூலம் இணைத்துள்ளனர் .அருகில் இரண்டு ஆயில் ரிக் பார்க்கமுடிந்தது. இன்னும் நிறைய இருக்கிறதாம்.

கப்பல் நின்றபின் scavenge space cleaning job இருந்தது. மதியம் 2 ம் இன்ஜினியரிடம் கேட்டேன். ஆம் இருக்கும் என்றார். நான் ஓய்வுக்கு செல்கிறேன் என்றேன்.

ஒருமணிநேரம் தூங்கிவிட்டு 3 மணிக்கு பணிக்கு சென்று ஐந்தரை மணிக்கு வந்துவிட்டேன். நீராடி, இரவு உணவுக்கு பின் ஏழரை மணிக்கு அழைத்தார்கள்.

(Scavenge space , enclosed  space) முழுவதுமாக மூடிவைக்கப்பட்டுள்ள இன்ஜினின் உள்பகுதி ஆகும். முன்னரே அதை திறந்து (ஒருவர் மட்டுமே உள்ளே செல்லும் அளவில் உள்ள கதவு) காற்றை நீண்ட நேரம் உள் செலுத்தவேண்டும்.

பின்பு அதில் பிராண வாயு சோதிக்கும் கருவியால் சோதனை செய்து விட்டு தான் பணி தொடங்கவேண்டும். அதற்கான அனுமதி படிவங்களையும் பணி தொடங்குமுன்னே நிரப்பி காப்டனின் கையெழுத்தும் பெற்றிருக்கவேண்டும்.

உள்ளே கறுத்த எண்ணையுடன் பசைபோல் அப்பியிருக்கும், அதை முழுமையாக அகற்றவேண்டும். இந்த சுத்தம் செய்யும் பணி ஒவ்வொரு மாதமும் செய்தே ஆக வேண்டும். இல்லையெனில் இஞ்சின் இயங்கும்போது உள்ளே தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

மோட்டர்மேன்கள் இந்த வேலையை செய்வதில் தேர்ச்சிபெற்றவர்கள். ஆனால் இங்குள்ள கடும் வெப்பம் விரைவில் சோர்வடைய செய்துவிடும்.

2ம் இஞ்சினீயர் பிராண வாயு சோதனைக்காக கருவிகளுடன் முதலில் உள்ளே சென்றார். நான் வெளியில் இருந்தேன். அவர் வந்தபின் மற்றவர்கள் சுத்தம் செய்யும் தளவாடங்களுடன் உள்ளே செல்வார்கள். இந்த கப்பலில் 3 மோட்டர்மேன்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

நான் வெளியே இருந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான குடிநீர், மற்ற பொருட்களை கொடுக்க வேண்டும்.

நேற்று  இயந்திர அறையின் வெப்பம் 48 டிகிரி. உள்ளே 5௦ டிகிரிக்கு மேல் இருக்கலாம். மொத்தம் 7 யூனிட்கள், 3 பேர். 2 மணி நேரத்திற்கு மேல் அவர்கள் உள்ளே இருக்கவேண்டும். மிகக் கடினம். உள்ளே ராட்சத காற்று குழாய் செலுத்தியிருப்போம்.

பொதுவாக 20 நிமிடங்களுக்கு பின் வெளியே வந்து தண்ணீர் குடித்து வெளிக்காற்றை சுவாசித்துவிட்டு செல்வது நல்லது. குளிர் காலத்தில் இந்த பணி மிக எளிதானது.

பர் ஒரு மணிநேரத்தில் இருமுறை வெளியே வந்துவிட்டான். சாயும் சிறிது தாமதாமாக வந்தான். சாங் வெளியே வரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வந்தவன் மிக சோர்ந்திருந்தான். வெளியே வரும்போது பிடித்துகொள் என கையை நீட்டினான். பின்பு காற்று வரும் குழாயின் முன் நின்றிருந்தான். இது சாதாரணம்தான்.

நான் தண்ணீர் குடிப்பதற்காக வொர்க்ஷப்னுள் சென்றேன். சில வினாடிகளில் உள்ள வந்த சாங் மின்விசிறியின் கீழே அமர்ந்திருந்தவன் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.வ்கடும் வெப்பம் காரணமாக நிறைய தண்ணீர் குடித்திருந்ததால் தண்ணீர் மட்டுமே வெளியே வந்தது. நீண்ட நேரம் முதுகை தடவி கொடுத்தேன். என் கண்கள் நிரம்புவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. மற்றவர்களும் வெளியே வந்திருந்தனர் .

முதன்மை இஞ்சினீயர் வந்து பார்த்துவிட்டு இதோடு முடித்துவிடலாம் என்றார். 2ம் இஞ்சினியரிடம் உள்ளே சென்று புகைப்படம் எடுத்துவிட்டு பணியை விரைந்து முடிக்க சொன்னார்.

2ம் இஞ்சினியரும் இலியாவும் உள்ளே சென்றனர். 2 யூனிட்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை கண்டு அவர்கள் இருவரும் சுத்தம் செய்ய துவங்கினர். மணி 11ஐ தாண்டியிருந்தது. சிறிது ஓய்வுக்கு பின் வந்த  மோட்டர் மேன்கள் மீண்டும் உள்ளே சென்று முழுமைகயாக சுத்தம் செய்து விட்டு வந்தனர். பின்பு புகைப்படம் எடுத்து பணி முடியும்போது மணி நள்ளிரவு 1ஐ தாண்டியிருந்தது.

இரவு 3 மணிக்கு மேல் தூங்கி காலையில் எட்டரைக்கு தான் எழுந்தேன். பத்து மணிக்கு பணிக்கு சென்ற போது சாங்க் நன்றியுடன் என் கையை பிடித்தான். நேற்று எனக்கு கண் தெரியாமலகிவிட்டது. முழுவதும் கறுப்பாக இருந்தது என்றான். நான் செத்துபோய்விடுவேன் என எண்ணியதாக சொன்னான். அது அவனது தேவையற்ற பயம்தான்.

அவனுக்கு சொன்னேன் “எல்லா மாதமும் நீங்கள் செய்யும் வேலை இது. பாதுகாப்பு முறைகளை முழுமையாக பின்பற்று” என்று சொன்னேன். சிரித்தான். கடுமையான வெப்பம்தான் காரணம் என்றான். இரு தினங்களுக்கு பின் ஊருக்கு செல்ல இருக்கிறான்.

மதியம் பனிரெண்டு மணிக்குமேல் ஓய்வு. மாலையில் கப்பல் புறப்படும்போது மீண்டும் 3 முதல் 5 மணி நேரம் வேலை இருக்கும்.

வளைகுடா நாடுகளில் கோடையின் வெப்பம் மிக கொடுமையானது. கப்பல்  இயங்கும்போது இயந்திர அறையின் வெப்பம் 6௦ டிகிரிக்கு மேலே சென்றுவிடும். காலையிலேயே எலுமிச்சை, உப்பு, சீனி கலந்த பானத்தை தயாரித்து நான் அடிக்கடி குடிக்கிறேன். இவ்வளவு வெப்பம் நான் பார்த்ததே இல்லை. 30 தியதிவரை அடுத்த 5 நாட்கள் கப்பல் இந்த வளைகுடா நாடுகளிலேயே இருக்கும். வெப்பத்தை தாங்கும் உடல், மன வல்லமையை அனைவரும் பெற வேண்டுவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை எனக்கு .

26-08-2016

ஷாகுல் ஹமீது.

Wednesday, 9 July 2025

கப்பல்காரனின் ஞாயிறுகள்

   


 

 

உலகம் முழுவதும் ஞாயிறு என்பது ஓய்வு நாள். அதிகாலை சுனிதாவை அழைத்தபோது தொழுகை முடித்து குர்ஆன் ஓதி கொண்டிருப்பதாக சொன்னாள். பள்ளி, கல்லூரி விடுமுறை ஆதலால் மகன்கள் இன்னும் தூங்கி எழுந்திருக்கவில்லை.

இரவில் தவறவிட்ட அழைப்பை அழுத்தியபோது நண்பர் மதன் குழுவாக பறவைபார்த்தலுக்கு ஒரு ஏரியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சொன்னார். ஞாயிறான ஓய்வு நாளில் நண்பர்கள் ஓய்வாகவும், பயனுள்ள வகைகளில் கழிக்கவும் செய்துகொண்டிருந்தார்கள்.

கப்பல்காரனுக்கு ஓய்வென்பது வீட்டிற்கு வந்தபின்தான். ஞாயிறுகளில் அரிதாக அரை நாள் விடுமுறை கிடைக்கும் சாத்தியம் உண்டு. துறைமுகம் அல்லது ஏதாவது அவசர வேலையென்றால் ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் பணி நாளாக அமைந்துவிடும்.

கடந்த ஞாயிறில் அமெரிக்காவை  நெருங்கியிருந்தோம் (29 June 2025). முப்பதாம் தேதி காலை ஹூஸ்டன் அருகில் நங்கூரமிட்டு துறைமுக அழைப்பிற்காக காத்திருக்கும் உத்தரவு வந்தது. ஜப்பானிலிருந்து ஜூன் நான்காம் தேதி துவங்கிய பயணம் முடிவுக்கு வந்தது.

ஜூலை நான்காம் தேதி கரையணைந்து சரக்கு ஏற்றும் பணி துவங்கும். அதுவரை மூன்று தினங்கள் காத்திருத்தல் இருந்தது. இங்கே சரக்கு ஏற்றும் குழாய்களில் சிறு மாற்றம். நான்கு குழாய்களை டெர்மினலின் வசதிக்கேற்ப மாற்றியாக வேண்டும். சனிக்கிழமை அந்த பணியை துவங்க சொன்னார் முதன்மை அதிகாரி. அன்று முடியவில்லை என்றால் மறுநாள் ஞாயிறும் தொடர்ந்து செய்து முடிக்கவேண்டும் என்றார்.

நான்கு நாட்கள் நங்கூரமிட்டு காத்திருக்கும் வேளையில் குழாய்களை மாற்றும் பணிகளை செய்யலாமே எனக் கேட்டேன். நங்கூரமிட்டு காத்திருக்கும்போது நாம் தயாராக இருக்கிறோம் என டெர்மினலுக்கு சொல்லி விடுவோம். எனவே அவர்கள் அழைத்தால் உடனடியாக செல்ல வேண்டும். எனவே குழாய் மாற்றுதலை தள்ளி போடமுடியாது.

சனிக்கிழமை தொடங்கி மாலை மூன்றரை மணிவரை வேலை செய்தோம். கடும் வெயில் நாளாக இருந்தது. மாதந்திர பாதுகாப்பு கூட்டம் மாலையில் இருந்ததால் மூன்றரை மணிக்கு குழாய் மாற்றுதலை பாதியில் நிறுத்தினோம்.

மறுநாள் ஞாயிறு காலை துவங்கி மதியம் நிறைவு செய்தோம். அந்த குழாய்கள் வழியாக மைனஸ் 40 டிகிரியில் புரொப்பேன் திரவம் வரும். எனவே அதில் ஒழுகல் இருக்கிறதா என சோதனை செய்யும் பணியை மதிய உணவு இடைவேளைக்குப்பின் செய்து முடிக்கையில் மாலை நான்கு மணியாகி விட்டது. ஓய்வு நாள் இல்லாமல் போயிற்று.


ஹூஸ்டன் கோடையில் பூத்து குலுங்கும் மரங்கள் 


மூன்றாம் தேதி  நள்ளிரவில்  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ப்ரீ போர்ட் துறைமுகம் உள்ளே வாருங்கள் என அழைத்தது. நான்காம் தேதி முழுநாளும் ஐந்தாம் தேதி காலை எட்டுமணிவரை சரக்கு நிறைக்கும் பணி நடந்தது. மொத்தம் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூறு மெட்ரிக் டன் ப்ரோப்பேன் கப்பலின் நான்கு தொட்டிகளில் நிறைக்கும் பணி காலை எட்டரைக்கு முடிந்தது. துறைமுகத்தில் ஆறு மணி நேர பணி ஆறு மணி நேர ஓய்வு என கணக்கு இருந்தாலும், பதினான்கு முதல் பதினேழு மணிநேரம் வரை பணி செய்தாக வேண்டும். தூங்க வேண்டிய சிறு ஓய்வில் கரைக்கு சென்று ஊர் சுற்றி வரவேண்டும். ஆனாலும் (05-June-2025) சனிக்கிழமை மதியம் ஒன்றரைக்கு  பணிகள் முடிந்து கப்பல் துறைமுகத்திலிருந்து புறப்பட வேண்டி இரண்டரை மணிக்கு பைலட் வருவது உறுதியானது.

கப்பல் புறப்படும் தருவாயில் எனக்கு பணி இல்லை. காலையும், மதியமும் சாப்பிடவும் நேரமில்லாமல் சரக்குநிறைக்கும் பணியில் இருந்ததால் ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்து குளித்து கொஞ்சம் சாதமும் கூட்டும் சாப்பிட்டுவிட்டு டி வி அறையின் இணையத்தில் செய்திகளும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில் யூனிபைடு விஸ்டம் காணொளி ஒன்றை பதினைந்து நிமிடம் கேட்டபின் இரண்டரைக்கு அறைக்கு வந்து தூங்கினேன்.



கடந்த  நாற்பத்தி எட்டு மணிநேரத்தில் ஐந்தரை மணிநேரம் மட்டுமே உறக்கம் கிடைத்தது. இரவுணவுக்கு என்னை எழுப்ப வேண்டாம் என சமையற்காரர் பிராயனிடம் சொல்லியிருந்தேன். நான்கரைமணிக்கு கனவிலென போன் ஒலித்தது. முதன்மை அதிகாரி “கம்பிரசர் ஒண்ணு ஸ்டார்ட் பண்ணனும்” என்றார்.

ஆழ்ந்த உறக்கம் கலைந்தது. சனிஇரவு பதினோரு மணிக்குமேல் உறங்கி காலை தொழுகைக்கு தான் விழித்தேன். நன்றாக உறங்கி உற்சாகமாக விழித்தேன். ஞாயிறு ஓய்வு உறுதியாகியிருந்த உற்சாகம். காலையில் கம்பிரசர் அறைக்கு ரவுண்ட்ஸ் மட்டும் போய்விட்டு லாக் புக் எழுத வேண்டும். அதிகபட்சம் இரண்டு மணிநேரம்தான். இரு தினங்களாக கப்பல்காரன் டைரியின் தொடர் ஒரு வரி கூட எழுதவில்லை.

இன்று குறைந்தது மூன்று கட்டுரைகளாவது எழுதிவிடவேண்டும் என்ற உறுதியை காலையில் எனக்கு நானே சொல்லிகொண்டேன். எட்டுமணிக்கு மேல் கம்பிரசர் அறைக்கு சென்று வேலைகளை முடித்து லாக் புக் எழுதி பத்துக்குள் அறைக்கு வந்தேன். உடல் முழுவதும் நல்லெண்ணெய்  தடவி அமர்ந்ததும் இஞ்சின் பிட்டர் ராஜேஷ் வந்தார். “ஷாகுல் பாய் கொஞ்சம் சைடு மட்டும் முடி வெட்டித்தா” என.

கடந்த கப்பலிலும், இங்கும் முடி வெட்ட வேறு நபர்கள் இருந்ததால் எனக்கு வாய்ப்பே இல்லை. ராஜேசுக்கு முடி வெட்டியபின் மோட்டர்மேன் சேத்தன் வந்தார் அறைக்கு ஹிந்தி சினிமா வேண்டுமென. இம்முறை எனது ஹார்ட் டிரைவ்க்கூட கொண்டு வரவில்லை இருந்தாலும் கணினியில் தேடியபோது சில தமிழ் சினிமாக்கள் இருப்பது எனக்கே இப்போதுதான் தெரிந்தது.

சேத்தன் நீண்டநேரம் தனது மொபைல் போனில் இருந்த நிறைய போட்டோக்களை என்னிடம் காட்டி பேசிக்கொண்டே இருந்தார். மதிய உணவுக்கு மணியடித்தபின் தான் கிளம்பி சென்றார். குளித்து உணவுண்ண சென்றேன். கடந்த ஞாயிறில் இறால் பிரியாணியின் ருசியில் சாப்பிட்ட ரெண்டாவது பிளேட் பிரியாணியால் இரு தினங்கள் குடல் வலித்துக்கொண்டே இருந்தது. அந்த வலி நினைவில் இருந்ததால் கவனமாக குறைவாக சாப்பிட்டேன்.

அறைக்கு வந்து நிழல்களுடன் ஆடியதை ஆசிரியரின் தளத்தில் வாசித்துகொண்டிருந்த நேரம்  தூக்கம் அழுத்தியது. இன்று பகலில் கண்டிப்பாக தூங்க கூடாது எழுதாமல் விட்ட கட்டுரைகளை எழுதவேண்டுமென காலையில் கண் விழித்ததுமே உறுதி கொண்டிருந்தேன். நாற்காலியிலிருந்து எழுந்து ஒளு செய்துவிட்டு லுகர் தொழ ஆரம்பித்தேன்.

மூன்றாவது ரக்காத்தில் கதவு தட்டும் ஒலி. தொழுகை முடித்து கதவை திறந்தால் காடட்  நாசிம் நின்றுகொண்டிருந்தான். “போன் ரிசீவர் சரியாயிட்டு வெச்சிட்டு, சிசிஆர் ல விழிக்கனும்” என்றான்.

இப்ப என்ன அர்ஜெண்டு என கார்கோ கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தேன். “உடனே வாங்க,ஒரு வேல வந்துட்டு கம்பிரசர் ரூம்ல” என்றார் முதன்மை அதிகாரி.

கடந்த மே மாதம் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு செல்லும்போது கம்பிரசர் ஒன்று பழுதாகி அதை சரி செய்யும் முயற்சியில் முடியாமல் போகவே அடுத்த கட்ட செயல்களுக்கு முன் கப்பல் மேனேஜருக்கும், முதலாளிக்கும் விசயத்தை எடுத்து சொல்லி அனுமதி வாங்கும்போது கப்பல் ஜப்பானை அடைந்து சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு புறப்பட்டது.

அந்த பயணத்தில் பழுதான கம்பிரசரை சரி செய்தோம். அதில் பேரிங்கை குளிர்விக்கும் எண்ணை சூடாகும்போது  குளிர்விக்கவும், கடும்குளிரில் எண்ணெய் உறைந்துவிடாமல் இருக்க சூடாக்கவும் (glycol) கிளைக்கால் எனும் திரவம் பேரிங்கை சுற்றி ஓடும் எண்ணைக்கு மேல் பாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும். அந்த குழாய் உடைந்து கிளைக்கால் தொட்டி காலியாகிவிட்டது. கம்பிரசர் அறை கிளைக்கால் பிசிறிஅடித்து தரை முழுவதும் நிரம்பியது.

அமெரிக்காவில் மொத்தம் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூறு மெட்ரிக் டன் புரோப்பேன் திரவத்தை நிரபிவிட்டு புறப்பட்ட மறுநாள். (fully loaded vessel) சரக்கு தொட்டியின் அழுத்தத்தை குறைக்க கம்பிரசர்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியது அவசியம். கிளைக்கால் தொட்டி காலியானதால் தானாகவே கம்பிர்சர்கள் நின்றுபோயிருந்தது.

சரக்கு தொட்டிகளின் அழுத்தம் கூடிக்கொண்டே இருக்கும். அழுத்தம் அதிகரித்து சரக்கு தொட்டி வெடித்து சிதறிவிடாமல் இருக்க ரிலீப் வால்வுகள் உண்டு (சமைக்கும் போது பிரஷர் குக்கர் விசில் வருமே அது போல). கம்பிரசர்களை உடனடியாக இயக்கி சரக்கு தொட்டிகளின் அழுத்தத்தை குறைக்க வேண்டிய அழுத்தத்தில் முதன்மை அதிகாரியும் காப்டனும் இருந்தனர்.

நானும் காஸ் இஞ்சினியரும் இணைந்து கப்பலின் எண்ணைகள் கெமிக்கல்கள் வைக்கும் அறையிலிருந்து பிளாஸ்டிக் வாளிகளில் கிளைக்காலை கொண்டு சென்றோம். உதவிக்கு முதன்மை அதிகாரியும், காடட்  நாசிமும் வந்தனர்.

மோட்டார் அறையிலுள்ள கிளைக்கால் தொட்டியில் நூற்றியைம்பது லிட்டர் கிளைக்காலும், நூற்றி தொண்நூறு லிட்டர் தண்ணீரும் நிரப்பியபின் கிளைகால் பம்ப்பை இயக்கி கம்பிரசரை இயக்கினோம். உடைந்த குழாயை சரிசெய்வதை மறு நாளைக்கு தள்ளி வைத்தோம்.

பணி முடியும்போது மாலை ஐந்து மணியாகிவிட்டது. அட்லாண்டிக் கடலில் இப்போது நல்ல வெப்பம். உடல் களைத்து அறைக்கு வரும்போது ஞாயிறு முடிந்துவிட்டது.

நாஞ்சில் ஹமீது,

09-July-2025.