எனர்ஜி ஓர்பஸ் (ENERGY ORPHEUS) 2016.
எல்பிஜி கப்பலில் முன்பு வாய்ப்பு கேட்டபோது முன் அனுபவம் தேவை என சொல்லி மறுத்தார்கள். இப்போது என் நிறுவனத்தில் எல்பிஜி கப்பல்கள் நிறைய வரத்தொடங்கின,கார் ஏற்றும் கப்பல்களின் என்ஒய்கே NYK நிறுவன கப்பல்களை திரும்ப பெற்றுகொண்டார்கள்.
![]() |
ஜப்பானிய கப்பல்களில் இருக்கும் கெய்ஷா |
எனவே கார் ஏற்றும் கப்பல்களில் வேலைபார்த்த பணியாளர்களை எல்பிஜி கப்பல்களில் அனுப்பதொடங்கினார்கள்.அதனாலேயே எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கொச்சியிலிருந்து விமானம் ஏறும் முன் மும்பை அலுவலக மேலாளர் அனிதா தாக்கூர் அழைத்திருந்தார். “ஷாகுல் ஸ்லோலி லேர்ன் தி டெக் ஜாப் டூ” என்றார்.
கார்காரியர் வகை கப்பல்களில் இஞ்சின் பிட்டாரக அறுபது வயதில் பணி ஓய்வு பெறும்வரை பணி செய்யலாம். காஸ் கேரியர் வகை கப்பல்களில் டெக்கில் கார்கோ ஆப்ரேசன் மற்றும் காஸ் பிளான்ட் வேலையை கற்று காஸ் பிட்டராகும் வாய்ப்பும் அதன் காஸ் டெக்நீசியனாக அதிக சம்பளத்தில் பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே எல்பிஜி கப்பலில் வர விரும்பினேன்.
ஊர் சுற்றுவதற்கு மட்டும் வாய்ப்புகள் மிக குறைவு அதை தெரிந்தே இங்கே வந்தேன். கப்பல் சிங்கையில் பங்கர் முடிந்து கிளம்ப தயாரானபோது நான் கப்பலுக்கு வந்தேன். தெமிஸ் லீடரில் நான் விடுவித்த அதே பிட்டர் மஞ்சீத் சிங்கை இங்கேயும் விடுவித்தேன். ஹான்டிங் ஓவர் எனச்சொல்லபடும் எனது வேலைகளை காட்டிதராமலே மஞ்சீத் இறங்கி சென்றார். குடியிருப்பின் முகப்பில் இடிமிட்சு என எழுதப்பட்டு கூந்தல் பறக்கும் பெண்ணின் தலை வரையப்பட்டிருந்தது.
1995 இல் ஐடிஐ முடித்து மணவாளகுறிச்சி கிராமத்தில் சோமன் அண்ணாவின் மீன்பிடி இஞ்சின் பழுது பார்க்கும் வொர்க்ஷாப்பில் வேலை பார்க்கும்போது இந்தியாவில் அப்போது அறிமுகமான ஜப்பானின் இஞ்சின் ஆயில் இடிமிட்சு வை கொஞ்சமாக வாங்கி வியாபாரம் செய்திருக்கிறேன்.
கப்பல் இரவே புறப்பட்டிருந்தது. இரவில் தூங்கி எழுந்து காலை எட்டுமணிக்கு இயந்திர அறைக்கு சென்றேன். உக்ரைன் காப்டன்,முதன்மை அதிகாரி,இரண்டாம் அதிகாரி மூன்றாம் அதிகாரி இந்தியர்கள். இந்த எல்பிஜி கப்பலில் இரு மூன்றாம் அதிகாரிகள் ஒருவர் பிலிப்பினோ. கார்கோ பணிகள் அதிகமாக இருப்பதால் நேவிகேஷனுக்கு அதிகப்படியாக இன்னொரு மூன்றாம் அதிகாரி எல்பிஜி கப்பல்களில் இருகின்றனர்.முதன்மை அதிகாரிக்கு எப்போதும் கார்கோ சார்ந்த பணிகள் இருந்துகொண்டே இருக்கிறது.
இஞ்சினில் கேரளாவை சார்ந்த ஜார்ஜ் முதன்மை இன்ஜினியர்,ஒரிசாவின் பரிதா பஞ்சனன் இரண்டாம் இஞ்சினியர்,கோவாவை சார்ந்த மூன்றாம் இஞ்ஜினியர்,இலியா எனும் உக்ரைனை சார்ந்த நான்காம் இஞ்சினியர் காஸ் இஞ்சினியராகவும், ஜவர்லா குப்தா காஸ் டெக்னீஷியன் ஆகவும் இருந்தனர்.டெக் மற்றும் இன்ஜினின் பணியாளார்கள் அனைவரும் பிலிப்பினோக்கள். சமையல்காரர் என்னுடன் இணைந்த கோவாவின் ஆன்றனி.ஒரு பயிற்சி ஓஎஸ்கள் அதிகமாக இருந்தனர்.
பிலிப்பினோ பணியாளர்களுக்கான உணவை பிலிப்பினோ
மெஸ்மேன் சமைப்பார்.எனவே முதன்மை சமையற்காரருக்கு எட்டு இந்தியர்களுக்கு மட்டும்
சமைத்தால் போதும்.
பத்து ஆண்டுகளில் பதிமூன்று கார்கேரியர் கப்பல்களில் பணிசெய்த எனக்கு, இஞ்சின் பிட்டராக பணி அதேதான். பாதுகாப்பு முறைமைகள் மிக அதிகம். இதில் ஏற்றப்படும் சரக்கு எல்பிஜி திரவம் என்பதால் ஒவ்வொரு வேலையை செய்யும் முன்பும் முறையாக பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தல் மிக கட்டாயம். எந்த குறுக்கு வழிக்கும் இடம் கிடையாது.ஒரு சிறு தவறில் பெரும் விபத்துக்கு காரணமாகிவிடும். காலை மீட்டிங்கில் துவங்கும் சேப்டி,நாள் முழுவதும் பலமுறை நினைவுபடுத்துவதோடு,எல்லா பயிற்சி கூட்டம்,வார மற்றும் மாதந்திர கூட்டத்திலும் பாதுகாப்பு என்ற வார்த்தையே மிக அதிகமாக உச்சரிக்கப்படும்.எனது நிறுவனம் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக விபத்தின்றி எல்பிஜி கப்பல்களை நிர்வகித்து வருகிறது.
எனெர்ஜி ஒர்பஸ் இருபத்தி மூன்று ஆண்டு பழைய கப்பல் கடந்த மூன்று ஆண்டுகளில் பணி செய்த கப்பல்கள் பத்து ஆண்டுக்கும் குறைவானவை. இந்த கப்பலை ஏழு மாதங்களுக்கு முன் ஜப்பானியர்களிடமிருந்து எங்கள் நிறுவனத்துக்கு அளித்திருந்தது.என் நிறுவனத்துக்கு வந்தபின் இரண்டாவது பணியாளர் நான்.
அறையில் தண்ணீர் குழாயை திறந்தால் நல்ல சூடாக வரும் தண்ணீர். கடும் சுடுநீரில் என்னால் குளிக்கவே முடியாது. இந்த கப்பலின் எரி எண்ணெய் தொட்டிகள் இயந்திர அறையை சுற்றியே இருக்கிறது. எரி எண்ணெய் தொட்டியின் வெப்பம் எப்போதும் ஐம்பது டிகிரிக்கு மேல் வைத்திருக்கவேண்டும். அதற்காக அந்த தொட்டிகளுக்குள் நீராவி குழாய்கள் பொருத்தபட்டிருக்கும்.
கப்பலின் தண்ணீர் தொட்டிகளும் இயந்திர அறைக்குள் இருக்கும்.நம் வீடுகளில் தண்ணீர் தொட்டி உயராமான இடத்தில் வைத்திருப்போம் கப்பலில் கீழ் பாகமான இயந்திர அறையில் இருக்கும் தண்ணீர் ஹைட்ரோபோர் எனும் முறைமூலம் கப்பலின் மிக உயரமான பிரிட்ஜின் மேலுள்ள மங்கி ஐலண்ட் வரை அதிக விசையில் செலுத்தபடும்.
கப்பலின் நன்னீர் தொட்டி தேக்கி வைத்திருக்கும் தொட்டியிலிருந்து ஹைட்ரோபோர் தொட்டிக்குள் வரும் தண்ணீர் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள பம்ப் மூலம் அதிக விசையில் உந்தி தள்ளப்பட்டு முழு கப்பலுக்கும் தரப்படும். ஹைட்ரோபோர் தொட்டி காற்று செலுத்தப்பட்டு அதன் அழுத்தம் குறிப்பிட்ட அளவில் எப்போதும் பாதுகப்பகப்டும்.ஹைட்ரோபோர் தொட்டியும் இயந்திர அறைக்குள் இருக்கும். இயந்திர அறையின் வெப்பம் எப்போதும் நாற்பத்தி ஐந்து டிகிருக்கு மேல் இருந்தது.
எனது மிக சிறிய குளியலறையில் நூறு லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் வாளி ஒன்றை வைத்து எப்போதும் நீர் நிறைத்து வைத்திருதேன். குளிரூட்டபட்ட அறை ஆதலால் வாளியில் நிறைத்து வைத்திருக்கும் நீருடன் குழாயை திறந்தால் வரும் சுடுநீரை கலந்து தண்ணீரின் வெப்பத்தை குறைத்து நீராடுவேன்.
கப்பலின் குளிரூட்டி வியக்கும்வகையில் கப்பலின் வயதை மீறி மிக சிறப்பாக இருந்தது. கத்தாரின் ரஸ்லபான் எல்பிஜி டெர்மினலில் இருக்கும்போது வெப்பம் நாற்பத்தி ஒன்பது டிகிரி சென்டிகிரேடாக இருந்தது. குடியிருப்புக்குள் இருபத்தி ஒரு டிகியாக இரவில் நிம்மதியாக தூங்க முடிந்தது.
VLGC (VERY LARGE GAS CARRIER) வகையை சார்ந்த இந்த கப்பல் இருநூற்றி முப்பத்தி ஒன்பது மீட்டர் நீளமும்,முப்பத்தி ஒன்பது மீட்டர் அகலமும் 44,578 மெட்ரிக் டன் மொத்த எடையை கொண்டது. இதில் நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் எல்பிஜியை திரவ நிலையில் எடுத்து செல்ல முடியும். மைனஸ் நாற்பத்தி மூன்று டிகிரியில் ப்ரோப்பேன் அல்லது மூன்று டிகிரியில் பீயுட்டேன் திரவத்தை மட்டுமே நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட கப்பல் இது.
![]() |
LPG terminal |
இதன் கார்கோ எனக்கு புதியது அதைபற்றி எதுவும் தெரியாது. கற்றுகொள்ளும் ஆவலில் இருந்தேன். கப்பலில் இருந்த காஸ் டெக்னீசியன் ஜவர்லா குப்தா ஐம்பத்தியைந்து வயதை தாண்டிய நீண்ட அனுபவம் உள்ளவர். அவரிடம்தான் கற்றுகொள்ள வேண்டும் என எண்ணியிருந்தேன்.
ஜவர்லா குப்தாவை இங்கே அனைவரும் குப்தாஜி என்றே அழைப்பார்கள்.திறமையான வேலைகாரர். அதே அளவு அரசியல் விளையாட்டும் அவரிடம் உண்டு.கப்பலின் டாப் போர் எனப்படும் காப்டன்,முதன்மை இஞ்சினியர்,முதன்மை அதிகாரி,இரண்டாம் அதிகாரி ஆகியோருடன் மட்டுமே பேசுவார்.
என்னை போன்று கார் கேரியர் கப்பல்களில் இருந்து வந்தவர்கள் கப்பல் வேலைக்கு லாயகற்றவர்கள் என ஆழமான நம்பிக்கை கொண்டவர்.பிகாரை சார்ந்த அவர் பஞ்சாபி வேசத்தில் அலைவார்.
எங்கள் நிறுவனத்தில் ஒன்பது எல்பிஜி கப்பல்கள் மட்டுமே இருந்தது அதன் பணியாளர்கள் அந்த ஒன்பது கப்பல்களுக்குள் மட்டுமே சுழற்சியில் இருந்தனர். மரைன் கல்லூரிகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற இஞ்சினியர்,காடட் மட்டுமே அப்போது எல்பிஜி கப்பல்களில் வாய்ப்பளிக்கபட்டது. மற்றவர்கள் கார் கேரியர் மற்றும் பல்க் கேரியர் வகை கப்பல்களில் அனுப்பபட்டார்கள். எனவே எல்பிஜி கப்பல்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த கர்வமும்,தலைக்கனமும் உண்டு.
யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடும் நான் கப்பலின் அரசியல் விளையாட்டுகளில் சிக்கிகொள்வேன். கப்பலில் இணைந்த முதல் வாரத்தில் எமர்ஜென்சி பயர் பம்பின் கடல்நீர் குழாயில் ஏற்பட்ட ஒழுகலை தற்காலிகமாக சரிசெய்தபின்,புதியதை செய்ய சொல்லி உத்தரவிட்டார் முதன்மை இஞ்சினியர்.
பணி தொடங்குவதற்காக மாலையில் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தேன். மாலை ஐந்து மணி நாள் முடியும் தருவாயில் “இரண்டாம் இஞ்சினியர் காஸ் டெக்னிசியன் எதாவது சொன்னாரா”? எனக்கேட்டுவிட்டு “நாளை அந்த குழாயை குப்தாஜி செய்வதாக சொன்னார்”.
அது எனது வேலை அதில் டெக்கிலுள்ள காஸ் பிட்டர் எதற்கு இதில் தலையிடவேண்டும் என நான் அமைதியிழந்தேன். குழப்பத்தில் இருந்த நாள் கப்பலில் ஆந்திராவை சார்ந்த பத்திசாப் மென்டோசாவிடம் கேட்டேன்.
“பாயி உனக்கு வெல்டிங் தெரியுமா”
“ஆமா”
“மனச போட்டு குழப்பாம நிம்மதியா படுத்து உறங்கு, அவனுக்கு அரிப்பு கூடுதல் பல வருசமா நான் பாக்கேன்,அவன் செய்துட்டு போட்டு,உட்டுதள்ளு” என்றார். அதை கேட்டபின் இரவில் நன்றாக தூங்கி விழித்தேன்.மறுநாள் காலை இரண்டாம் இஞ்சினியர் குழாய் பணிக்கு குப்தாவுக்கு உதவும்படி சொன்னார். குப்தா வெல்டிங் அடிக்கும்போது பார்த்து கேட்ட முதன்மை இஞ்சினியரிடம் இஞ்சின் பிட்டர் ஷாகுலுக்கு வேறு வேலை இருப்பதாக என் காதுபடவே சொல்லி சமாளித்தார்.
கப்பலின் கடுமையான வெப்பத்தை என்னால் தாங்கவே இயலவில்லை. கோடையில் அரபு வளைகுடாவில் ஐம்பது டிகிரி வரை செல்லும் வெப்பத்தால் இயந்திர அறை அறுபது முதல் அறுபத்தியைந்தி டிகிரியாக உயர்ந்துவிடும்.
அந்த கப்பலில் இருந்தபோது அவ்வப்போது நாட்குறிப்புகள் எழுதினேன். கடும் வெப்பத்தில் மோட்டர்மேனின் பணி குறித்து அப்போது எழுதிய பதிவை இங்கே இணைத்துள்ளேன்.
மேலும்....
நாஞ்சில் ஹமீது,
12-july-2025.
பின் குறிப்பு : கடந்த ஜூலை மூன்றாம் தேதி எனது கப்பல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் கரையணைந்தது அதற்கு முன்பே கடுமையான பணிகள்,துறைமுகத்தில் ஓய்வே இல்லாமல் பணியும்,கரைக்கு சென்று வந்ததும் எல்லாம் சேர்ந்து தூக்கம் நிலையில்லாமல் போய் மீண்டு வர சில தினங்கள் ஆகிவிட்டது. அதுவே அடுத்த பதிவு எழுத தாமதமாகிவிட்டது. ஆனாலும் இருபது ஆண்டு நிறைவு கட்டுரைகளை வாசிப்பவர்கள் எவரும் அடுத்த கட்டுரை ஏன் வரவில்லை என கேட்காதது எனக்கு வியப்பாக இருந்தது.
எனெர்ஜி ஒர்பசில் 2016 எழுதிய இரு டைரி குறிப்புகளை இங்கே இணைக்கிறேன்.
ரஸ்
ல பான் (கத்தார் )
31 -07-2016
இன்று காலையில் கத்தார் நாட்டின் ரஸ் ல பான் வந்து சேர்ந்தோம் ,கடந்த
12 ம் தியதி ஜப்பானிலிருந்து புறப்பட்டிருந்தோம் .
நல்ல வெயில் .பனிரண்டு மணி வரையில் வேலை
செய்துவிட்டு வந்தோம் ,இயந்திர அறை பயங்கர
சூடு .மீண்டும் மாலை ஆறு மணிக்கு வேலை தொடங்கலாம் என்றார் .2 ம் இஞ்சினியர்
.எப்படியும் எட்டு மணி நேரமகாலாம் வேலை முடிய .
சாப்பிட்டுவிட்டு 2 மணிக்கு அறையை முழுமையாக
இருட்டாக்கிவிட்டு தூங்கியிருப்பேன் .அவசரகால மணி அடித்தது 3 மணிக்கு வேகமாக
உடைமாற்றி ஓடினோம் அனைவரும் உரிய இடத்தில் கூடிவிட்டோம் .(false alarm )தவறான அழைப்பு என்றார்கள் .
மீண்டும் அறைக்கு வந்து படுத்துவிட்டேன்
.நான்கு மணிக்கு எழுந்து கறுப்பு டீ எடுத்து வந்து கணினியை திறந்ததும், 2 ம்
இஞ்சினியர் போனில் அழைத்தார் இப்போதே பணியை துவங்கலாமா என கேட்டார் சரி என
ஒப்புக்கொண்டு 4.45 க்கு வேலையை தொடங்கினோம்.அதிக சூடு காரணமாக ஒவ்வொரு 20 நிமிடதிற்குப்பின்
வொர்க்ஷாப்பினுள் வந்து 5 முதல் 10 நிமிடம் உட்கார்ந்து
விட்டோம் .
வொர்க்ஸ்ஷாப்பில் குளிரூட்டி இயங்குகிறது .
காலையிலேயே நான் எலுமிச்சை ,சக்கரை,உப்பு கலந்த
பானத்தை தயாரித்து வைத்திருந்தேன் .
இயந்திர அறையின் வெப்பம் 60 டிகிரி இருக்கும்
,கத்தாரின் இன்றைய வெப்பநிலை 48 டிகிரி என்றார்கள் .
முக்கிய இயந்திரத்தின் நான்கு யூனிட்களில் பராமரிப்பு பணி ,முதல்
யூனிட் முடியும் போது மணி 6 .45 ஆகிவிட்டது. அதிக
வெப்பம் காரணமாக சீக்கரமே சோர்ந்து விட்டோம் .இரவு உணவுக்கு பின் மீண்டும் பணி
தொடங்கலாம் என மேல் தளத்தில் இருக்கும் அறைக்கு வந்து உடல் கழுவி ,உடைமாற்றி உணவருந்த சென்றேன்
.அப்போது வேறு பணிக்காக மோட்டார் மேன்கள் இயந்திர அறைக்கு சென்று கொண்டிருந்தனர் .
இரவு உணவுக்கான நேரம் 6 முதல் 6 .45 வரையில் நான் உணவு கூடத்திற்கு செல்லும்போது போது மணி 7 ஐ தாண்டி
இருந்ததால் எனக்கான உணவு இல்லாதை கண்டு ,சமையல்காரரை போனில் அழைத்தேன் .சமையல்
கூடத்தில் இருக்கிறது நான் வருகிறேன் என்றார் .
ஆனால் அங்கு உணவு இல்லை மெஸ் மேன்
பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த பெர்னான்
குப்பை தொட்டியில் வீசி இருக்கலாம் என சொன்னார் .கொஞ்சம் மதியமுள்ள சைவ
பிரியாணி கிடைத்தது .சாப்பிட்டுவிட்டு சுனிதாவிற்கும் ,நண்பர் சாம் க்கும்
தொலைபேசியில் பேசிவிட்டு ,எட்டு மணிக்கு முன்பாக 2 ம் யூனிட் ன் வேலை தொடங்கினோம்
.
4 ம் இஞ்சினியர்
உக்ரைன் நாட்டின் இலியா மோட்டர் மேன்கள் செய்யும் பணிக்கு உதவியாக இருந்தார் .இரவு
11 மணிக்கு 3 யூனிட் முடிந்த வேளையில்
தான் கவனித்தேன் ஒரு வால்வ் ஒழுகிகொண்டிருப்பதை ,என்ன செய்யலாம் என கேட்டார் 2 ம் இஞ்சினியர் அதை
மாற்றதான் வேண்டுமென்று சொன்னேன் . அதை மாற்றுவதில் அரை மணிநேரம் போய்விட்டது
அப்போது இலியாவும் எங்களுடன் இணைந்து கொண்டு உதவி செய்தான் .நள்ளிரவு 12 மணிக்கு
அவரது பணிநேரம் முடிந்ததும் சென்றுவிட்டார் .
கடைசி யூனிட் தொடங்கும்போது இருவரும்
முழுமையாக சோர்ந்து விட்டோம் இறுதியில் என்னால் நிற்கவோ, கருவிகளை கையில் எடுக்கவோ
வலுவில்லாமல் போய்விட்டது ,2 ம் இஞ்சினியரை பார்த்தேன் என்னைபோலவே அவரும்
சோர்ந்திருந்தார் .
கடந்த 11 ஆண்டு கப்பல் பணியில் இதுபோல்
எப்போதும் சோர்வடைந்தது இல்லை .காரணம் கடும் வெப்பம் .காலுறை ,உள்ளாடை என
அனைத்தும் விரைவில் வியர்வையால் நனைந்துவிடும் .
நள்ளிரவு 1 மணி ஆகிவிட்டது பணி முடியும் போது
.பின்பு நீராடி ,கறுப்பு டீ குடித்து ,காலையின் வெளிச்சம் அறைக்குள் வராதபடி
(இங்கு கோடையில் அதிகாலையிலேயே வெளிச்சம் வந்து விடுகிறது )கண்ணாடி ஜன்னலை தலையணை
,போர்வையால் மூடி 2 மணிக்கு மேல் துயில சென்றேன் .எட்டு மணிக்கு விழித்து சிறுநீர்
கழித்து விட்டு மீண்டும் கனவுகளுடன் பத்து மணிவரையில் தூக்கம் .அப்போதே கப்பல்
கத்தாரின் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுவிட்டது .
மீண்டும் மதியம் 1 மணிக்கு வேலைக்கு சென்றோம் 3
மணிவரையில் வேலை செய்துவிட்டு ஓய்வு எடுத்துகொள்ள சொன்னார்கள் .இப்போது கப்பல்
ஓடிகொண்டிருந்ததால் இயந்திர அறையின் வெப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது .
இலியா
என்னிடம் வந்து இப்போது இயந்திர அறையின் வெப்பம் 65 டிகிரி என்றான் .
அவ்வப்போது நிகழ்வுகளை பதிவு செய்கிறேன்
.இப்போது தான் எழுதி முடித்தேன் இதை.
ஷாகுல் ஹமீது ,
1 ஆகஸ்ட் 2016
26-08-2016
Ras tanuurah (Saudi Arabia)
கடந்த பதினான்காம் தியதி கப்பல் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு சவுதியின் ரஸ்த நூறா விற்கு 24 ம் தியதி மாலையில் வந்து சேர்ந்தோம் .நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு மறுநாள் (25 ம் தியதி)மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலையில் ஜெட்டியில் கப்பல் கட்டபட்டது .கரையே தெரியவில்லை .தூரத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது அங்கிருந்தே குழாய் மூலம் இணைத்துள்ளனர் .அருகில் இரண்டு ஆயில் ரிக் பார்க்கமுடிந்தது .இன்னும் நிறைய இருக்கிறதாம் .
கப்பல் நின்றபின் scavenge space cleaning job இருந்தது .மதியம் 2 ம் இன்ஜினியரிடம் கேட்டேன் .ஆம் இருக்கும் என்றார் .நான் ஓய்வுக்கு செல்கிறேன் என்றேன் .
ஒருமணிநேரம் தூங்கிவிட்டு 3 மணிக்கு பணிக்கு சென்று ஐந்தரை மணிக்கு வந்துவிட்டேன் .நீராடி ,இரவு உணவுக்கு பின் ஏழரை மணிக்கு அழைத்தார்கள்.
(Scavenge space ,enclosed space) முழுவதுமாக மூடிவைக்கபட்டுள்ள இன்ஜினின் உள் பகுதி ஆகும் முன்னரே அதை திறந்து (ஒருவர் மட்டுமே உள்ளே செல்லும் அளவில் உள்ள கதவு )காற்றை நீண்ட நேரம் உள் செலுத்தவேண்டும் .
பின்பு அதில் பிராண வாயு சோதிக்கும் கருவியால் சோதனை செய்து விட்டு தான் பணி தொடங்கவேண்டும் .அதற்கான அனுமதி படிவங்களையும் பணி தொடங்குமுன்னே நிரப்பி காப்டனின் கையெழுத்தும் பெற்றிருக்கவேண்டும் .
உள்ளே கறுத்த எண்ணையுடன் பசைபோல் அப்பியிருக்கும், அதை முழுமையாக அகற்றவேண்டும் . இந்த சுத்தம் செய்யும் பணி ஒவ்வொரு மாதமும் செய்தே ஆக வேண்டும்.இல்லையெனில் இஞ்சின் இயங்கும்போது உள்ளே தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் .
மோட்டர்மேன்கள் இந்த வேலையை செய்வதில் தேர்ச்சிபெற்றவர்கள் .ஆனால் இங்குள்ள கடும் வெப்பம் விரைவில் சோர்வடைய செய்துவிடும் .
2ம் இஞ்சினீயர் பிராண வாயு சோதனைக்காக கருவிகளுடன் முதலில் உள்ளே சென்றார் .நான் வெளியில் இருப்பேன் .அவர் வந்தபின் மற்றவர்கள் சுத்தம் செய்யும் தளவாடங்களுடன் உள்ளே செல்வார்கள் .இந்த கப்பலில் 3 மோட்டர்மேன்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் .
நான் வெளியே இருந்து கண்காணிக்க வேண்டும் .அவர்களுக்கு தேவையான குடிநீர் ,மற்ற பொருட்களை கொடுக்க வேண்டும் .
நேற்று இயந்திர அறையின் வெப்பம் 48 டிகிரி .உள்ளே 5௦ டிகிரிக்கு மேல் இருக்கலாம் .மொத்தம் 7 யூனிட்கள் ,3 பேர் 2 மணி நேரத்திற்கு மேல் அவர் கள் உள்ளே இருக்கவேண்டும் மிக கடினம் .உள்ளே ராட்சத காற்று குழாய் செலுத்தியிருப்போம்..
பொதுவாக 20 நிமிடங்களுக்கு பின் வெளியே வந்து தண்ணீர் குடித்து வெளிகாற்றை சுவாசித்துவிட்டு செல்வவது நல்லது . குளிர் காலத்தில் இந்த பணி மிக எளிதானது .
பர் ஒரு மணிநேரத்தில் இருமுறை வெளியே வந்துவிட்டான் ,சாயும் சிறிது தாமதாமாக வந்தான் .சாங் வெளியே வரவில்லை நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வந்தவன் மிக சோர்ந்திருந்தான் .வெளியே வரும்போது பிடித்துகொள் என கையை நீட்டினான் பின்பு காற்று வரும் குழாயின் முன் நின்றிருந்தான் இது சாதாரணம்தான் .
நான் தண்ணீர் குடிப்பதற்காக வொர்க்ஷப்னுள் சென்றேன் .சில வினாடிகளில் உள்ள வந்த சாங் மின்விசிறியின் கீழே அமர்ந்திருந்தவன் தீடிரென வாந்தி எடுக்க ஆரம்பித்தான் .கடும் வெப்பம் காரணமாக நிறைய தண்ணீர் குடித்திருந்ததால் தண்ணீர் மட்டுமே வெளியே வந்தது நீண்ட நேரம் முதுகை தடவி கொடுத்தேன்.என் கண்கள் நிரம்புவதை என்னால் கட்டுபடுத்த இயலவில்லை. மற்றவர்களும் வெளியே வந்திருந்தனர் .
முதன்மை இஞ்சினீயர் வந்து பார்த்து விட்டு இதோடு முடித்துவிடலாம் என்றார் 2ம் இஞ்சினியரிடம் உள்ளே சென்று புகைப்படம் எடுத்துவிட்டு பணியை விரைந்து முடிக்க சொன்னார் .
2ம் இஞ்சினியர் ,இலியாவும் உள்ளே சென்றனர் 2யூனிட்கள் சுத்தம் செய்யபடாமல் இருந்ததை கண்டு அவர்கள் இருவரும் சுத்தம் செய்ய துவங்கினர் .மணி 11 ஐ தாண்டியிருந்தது .சிறிது ஓய்வுக்கு பின் வந்த மோட்டர் மேன்கள் மீண்டும் உள்ளே சென்று முழுமைகயாக சுத்தம் செய்து விட்டு வந்தனர் .பின்பு புகைப்படம் எடுத்து பணி முடியும்போது மணி நள்ளிரவு 1ஐ தாண்டியிருந்தது .
.
இரவு 3 மணிக்கு மேல் தூங்கி காலையில் எட்டரைக்கு தான் எழுந்தேன் .பத்து மணிக்கு பணிக்கு சென்ற போது .சாங்க் நன்றியுடன் என் கையை பிடித்தான் .நேற்று எனக்கு கண் தெரியாமலகிவிட்டது முழுவதும் கறுப்பாக இருந்தது என்றான் .நான் செத்துபோய்விடுவேன் என எண்ணியதாக சொன்னான் .அது அவனது தேவையற்ற பயம்தான் .
அவனுக்கு சொன்னேன் எல்லா மாதமும் நீங்கள் செய்யும் வேலை இது பாதுகாப்பு முறைகளை முழுமையாக பின்பற்றுமாறு சொன்னேன் சிரித்தான் .கடுமையான வெப்பம் தான் காரணம் என்றான் .இரு தினங்களுக்கு பின் ஊருக்கு செல்ல இருக்கிறான்.
மதியம் பனிரெண்டு மணிக்குமேல் ஓய்வு .மாலையில் கப்பல் புறப்படும் போது மீண்டும் 3 முதல் 5 மணி நேரம் வேலை இருக்கும் .
வளைகுடா நாடுகளில் கோடையின் வெப்பம் மிக கொடுமையானது.கப்பல் இயங்கும்போது இயந்திர அறையின் வெப்பம் 6௦ டிகிரிக்கு மேலே சென்றுவிடும் .காலையிலேயே எலுமிச்சை ,உப்பு ,சீனி கலந்த பானத்தை தயாரித்து நான் அடிக்கடி குடிக்கிறேன்.இவ்வளவு வெப்பம் நான் பார்த்ததே இல்லை. 3௦ தியதிவரை அடுத்த 5 நாட்கள் கப்பல் இந்த வளைகுடா நாடுகளிலேயே இருக்கும் .வெப்பத்தை தாங்கும் உடல் ,மன வல்லமையை அனைவரும் பெற வேண்டுவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை எனக்கு .
26-08-016
ஷாகுல் ஹமீது .
No comments:
Post a Comment