Friday, 20 March 2026

ரமலான்- இந்திய பெருங்கடலில்



நோன்பு பெருநாள் 2021

நோன்பு பெருநாள் 2024

நோன்பு பெருநாள் 2025

ரமலான் நோன்பு 29 முடிந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் பெருநாள் வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்டது. கேரளாவிலும் இன்று ரமலான் (ஈதுல் பித்ர்) கொண்டாடபடுகிறது.இம்முறையும் அனைத்து நோன்புகளும் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. வரும் ஆண்டுகளிலும் இதே ஆரோக்கியத்தை இறைவன் தந்தருள் புரிவானாக.



   மூன்றாம் அதிகாரி தேஜஸ் தினந்தோறும் சூரிய உதய,அஸ்தமன நேரத்தை கணக்கிட்டு தந்தார். இப்தார் மற்றும் சகர் நேரங்களை கணக்கிட பேருதவியாக இருந்தது.


  மத்திய கிழக்கு நாடுகளில் குவைத்,கத்தார்,பஹ்ரைன்,சவூதி அரேபியாவில் நேற்று ரமலான் நோன்பு முப்பது நிறைவடைந்தது.போர் சூழல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் பெருநாள் சிறப்புதொழுகைக்கு மைதானங்களில் அனுமதி இல்லை ஜிம்மா தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களில் மட்டுமே பெருநாள் தொழுகை என அறிவிகபட்டது. அதிகாலை ஈதுல் பித்ர் தொழுகையும் அங்கே விரைவாக முடித்துள்ளனர்.தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும்,இந்தியா,மலேசியா,புருனே நாடுகளில் நாளை ஈதுல் பித்ர் கொண்டாடப்படும்.

 கப்பலில் நான்,இந்தோனிசிய மூன்றாம்இஞ்சினியர்,மலேசிய காஸ் இஞ்சினியர் நோன்பு வைத்திருந்தோம்.எனக்கும் இன்று ரமலான். காலை குளித்து புத்தாடை அணிந்து அறையிலேயே இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதேன்.

  இன்று முழுநாளும் ஓய்வு அறிவிக்கப்பட்டது. கல்கத்தாவின் சமையல்காரர் சந்தீப் மண்டேல்,பிரியாணியும்  சேமியா பாயாசம் வைத்திருந்தார்.

   கப்பல்துறையில் இருப்பவர்களுக்கு  எந்த பண்டிகையும் இல்லை என்றே சொல்லலாம். அதிசயமாக நிலத்திலும் சிலருக்கு பண்டிகைகள் கிடைக்காமல் ஆகிவிடுகிறது. அரபு தேசம் ஒன்றில் பணிபுரியும் என் உறவினர் ஒருவர் பணிசெய்யும் இடத்தில் பெருநாள் தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை வருத்ததுடன் சொன்னார்.

 எனது இளைய சகோதரன் கத்தார் ஆயில் ரிக்கில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் போர் காரணமாக திரும்பிசெல்ல முடியாமல் இருந்தார். இன்று காலை சரியாக பதினோரு மணிக்கு அவருக்கு கத்தார் செல்ல கொச்சியிலிருந்து பயண சீட்டு வந்ததால். நேற்றிரவே வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

  2022ஆம்  ஆண்டு சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் இருந்தபோது இந்தோனேசிய,மலேசிய அதிகாரிகள் நிறையபேர் இருந்தோம். காப்டன் இமாமாக நின்று கொத்பாவும்,தொழுகையும் நடத்தினார். கப்பலில் கிடைத்த ஒரே ஒருநாள் பெருநாள் தொழுகை அது. வழக்கமாக கப்பலில் நான் மட்டுமே இஸ்லாமியனாக இருப்பேன் பெருநாள் கடந்து போவதே தெரியாது. பணி நாளாக இருக்கும். இன்று ஓய்வு ஆதலால் பணிக்கு செல்ல வேண்டாம்.

 கடந்த ஆண்டு இருந்த கப்பலில் காப்டனின் மனைவி இருந்தார் பெருநாளன்று அவரே அதிக சிரத்தையுடன் சிறப்பு உணவுகள் தயாரித்து உணவுகூடத்தை பலநாள் உழைப்பில் அலங்கரித்து  பெருங்கொண்டட்டமாக மாற்றினார். அப்போதே அவரிடம் சொன்னேன். “இருபது வருட கப்பல் வாழ்வில் இந்த பெருநாள் என்றும் நினைவில் நிற்கும் நாளாக மாத்தீட்டீங்க”என. இன்று காப்டனின் மனைவி துருவி பெருநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். கடந்த ஆண்டின் பெருநாள் உங்களால்தான் மறக்கமுடியாத நாளாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார்.

  சுனிதாவும் மகன்களும்,உறவுகளும் இன்று காலை பள்ளிவாசலில் பெருநாள் தொழுதுவிட்டு புகைப்படங்களை அனுப்பிருந்தனர். டெக்னாலஜி உச்சத்தில் இருப்பதால் விடியோ காலில் பேசவும் உலகெங்கும் இருக்கும் உறவுகள், நண்பர்களின் வாழ்த்தும் எளிதாக கிடைக்கிறது.அதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது.

  சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா தன் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் இஸ்லாமியர்களுடன் பேச வைத்தார். ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

இனிமேல் இரு வேளை உணவை மட்டுமே எடுத்து கொள்வதாக இருக்கிறேன்.பழக்கத்தால் மட்டுமே மூவேளை உண்கிறோம்.அதனால் தான் கழிவுகள் அதிகமாக உடலில் சேர்கிறது.கழிவுகள் அகன்று விட்டால் நோயே இல்லை.

கப்பல் காரனின் ரம்ஜான் என முந்தைய பதிவுகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் பதினந்து வருட பெருநாள் அனுபவங்கள் உள்ளன. இந்த பதிவின் துவக்கத்தில் அந்த சுட்டி உள்ளது.

  நாஞ்சில் ஹமீது,

20 march 2026.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment