போர் பதட்டம் அச்சுறுத்தல் இருப்பதால் நண்பர்கள் பலரும் தொடர்ந்து விசாரித்துகொண்டே இருக்கின்றனர். இத்தனை மனிதர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அவர்களின் அன்பு மகிழ்ச்சியையும் தந்தது.
ஹோர்முஸ் வளைகுடாவில் தொடர்ந்து கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் சில இந்திய மாலுமிகளும் இறந்தனர். பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் ஏற்றிய சரக்கை பிரான்ஸில் 22 ஆம் தேதி இறக்கியபின் அங்கிருந்து பன்னிரெண்டு நாள் பயணத்துக்குப்பின் நைஜீரியாவின் போனி துறைமுகத்தை அடைந்தோம்.
அங்கே சரக்கு நிறைக்கும்முன் சைனாவுக்கு செல்ல உத்தரவு வந்தது மறுநாளே இல்லை கொரியா செல்லுங்கள் என்றார்கள். போனியில் ஒருலட்சத்து நாற்பத்திஓராயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி நிறைத்து முடித்தபோது இந்தியாவின் குஜராத்துக்கு செல்ல பணித்தார்கள்.
கப்பல்களின் பயண பாதை போர் காரணமாக மூடப்பட்டுள்ளதால் குறிப்பாக எண்ணெய்,காஸ் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் உலக சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.
விலையேற்றம் நாளுக்கு நாள் மாறுகிறது. மீண்டும் எங்கள் கப்பலை கொரியாவின் இன்சொன் போக சொல்லியிருக்கிறார்கள். நைஜீரியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா,இலங்கை,சிங்கை வழியாக செல்வதால் கப்பலின் பயண பாதையில் எங்கும் போர் பதட்டம் இப்பொது இல்லை.
கப்பலில் பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு செல்பவர்கள் உண்டு.அதற்காக கப்பலை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் அருகில் ஒருமணிநேரம் நிறுத்தி பணியாளர் மாற்றம் செய்ய விடுத்த கோரிக்கையை சரக்கை கையாளும் நிறுவனம் மறுத்தது.எங்கும் நில்லாமல் முழுவேகத்தில் இந்தியாவிற்கு செல்லுமாறு. ஆனால் இப்போது பயண பாதை மாறிக்கொண்டே இருக்கிறது.
எனினும் சரக்கை இறக்குவது கொரியாவா?என்பதில் எந்த உறுதியும் இல்லை.யார் அதிக பணம் தருகிறார்களோ அவருக்கு இந்த எரிவாயு விற்கப்படும். எனவே பயண பாதை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் நிச்சயாமாக போர் நடக்கும் பகுதிக்கு கப்பல் இப்போது செல்லாது என்பதில் நிம்மதி.
ரமலான் நோன்பு இன்றோடு இருபத்தியைந்து நாட்கள் நிறைவடைகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது ரமலான் நம்மை விட்டு விலகி செல்ல.
நாஞ்சில் ஹமீது,
15 march 2026.
sunitashahul@gmail.com


No comments:
Post a Comment