நேற்று நாகேர்கோவில் வடசேரியிலுள்ள குறுகிய சந்தில் இருக்கும் உணவக்கதில் வழக்கமாக சாப்பிடும் ரசவடை கேட்ட ஐயப்பன் தாத்தாவுக்கு “சண்ட நடக்குல்லா,இன்னேலேயிருந்து ரசவட கிடயாது ஒய், இன்னும் ரெண்டுநாள் களிச்சா ஓட்டலுக்கே வராதயும்,கிருஷ்ணன் கோவிலிலேயே படுத்துகிடும்” என பதில் கிடைத்தது.
“எங்கயோ தூரத்துல ரெண்டு நாடு அடி வெக்கதுக்கு நாப்பது வரியமா நான் தின்ன ரசவட கிடக்க மாட்டேங்கு” என தாத்தா சொன்னாதாக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உலகமயமாக்கலில் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம் என பலருக்கு புரியவில்லை. ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தையில் டன் கணக்கில் காய்கறிகள் குப்பையில் கொட்டபட்டதாக செய்தியில் கண்டேன்.
பதினான்கு நாட்களாக நடக்கும் அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருவது இப்போது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக அடைத்து விட்டதால் கச்சா எண்ணெய்,எரிவாயு சப்ளை உலகை பாதித்துள்ளது.
இதனால் எழுநூறுக்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் நகரமுடியாமல் சிக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான அமீரகத்தின் ஜபல்அலி துறைமுகம் மூடப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஏற்றுமதியான நான்கு லட்சம் கோடி முட்டைகள் நடுக்கடலில் குஞ்சுபொரிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசி டன்கணக்கில் தேங்கியுள்ளது.இன்னும் காய்கறி உணவு பொருட்கள் என மொத்த ஏற்றுமதியும் ஆட்டம் கண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான இரு கப்பல்கள் தாக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டது இந்தியர் ஒருவர் பலி எனும் செய்தியை எளிதாக கடந்து செல்கிறோம்.
நாளுக்குநாள் கழுத்தை நெரிக்கும் சட்டங்களினால் கப்பல் பணி மிக கடினமாதாக மாறிக்கொண்டிக்கும் வேளையில். கடலில் கப்பல்கள் தாக்கப்பட்டு மாலுமிகள் கொல்லப்படுவது கொடுமையின் உச்சம்.
அமெரிக்கா,இஸ்ரேல் முதலாளிகளின் கப்பல்களை ஈரான் தாக்குகிறது.ஈரானின் கப்பல்களை எதிரிகள் ஏவுகனை வீசுகிறார்கள்.கப்பல் முதலாளி எங்கோ குளிரூட்டப்பட்ட அறையில் செல்போனுடன் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த கப்பலில் பணிபுரிபவர்கள் பிலிப்பினோ,இந்திய மற்றும் வேறு நாட்டை சார்ந்த மாலுமிகள்.
கப்பல் முதலாளிக்கு இதில் எந்த நட்டமும் இல்லை. முழுகப்பலுக்கான காப்பீடும் கிடைக்கும். சரக்கு நிறுவனத்துக்கு மொத்த தொகையும் இன்சூரன்ஸ் கிடைத்துவிடும். வயிற்று பிழைப்புக்காக வேலை செய்ய சென்ற மாலுமியின் உயிரிழப்பு அந்த குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு.
எல்லா துறையைபோலவே கப்பல் துறையிலும் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் முதலாளிகள் பணம் பண்ணுகிறார்கள். செய்திகளில் பார்த்திருப்பீர்கள் பனமா நாட்டு கப்பல் கன்னியாகுமரி அருகே மூழ்கியது அல்லது தரை தட்டியது என.
உண்மையில் அது பனமா நாட்டு கப்பல் அல்ல. அதன் முதலாளி வேறு நாட்டை சார்ந்தவராக இருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த கப்பல்களில் பெரும்பாலானவை பனமா நாட்டு கப்பல்தான். ஆனால் பனாமாவுக்கு சொந்தமானது அல்ல.
மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதுபோல் கப்பல்களை பதிவு செய்வது கட்டாயம். அமெரிக்கா,சிங்கப்பூர்,ஜப்பானில் பதிவு செய்தால் கடுமையான சட்டதிட்டங்களை செயல்படுத்தவேண்டும் செலவு அதிகம்.அதனால் பெருமபாலான ஜப்பானிய மற்றும் வேறு நாட்டு முதலாளிகள் பனாமா,லைபீரியா,மார்ஷல் போன்ற நாடுகளில் கப்பல்களை பதிவு செய்து கொள்வார்கள். அந்த விலாசத்தில் பத்துக்கு பத்து ஒரு அறைமட்டுமே இருக்கும். கப்பலை ஜப்பான் அலுவலகத்திலிருந்து இயக்குவார்கள்.
நான் தற்போது இருக்கும் LNG (இயற்கை எரிவாயு) பசிபிக் சக்சசும் பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் தென்கொரியாவிலுள்ள சினோகொர் நிறுவனம். முந்நூறுக்கும் மேற்பட்ட கப்பல்கள் அந்த நிறுவனத்திடம் இருக்கிறது.
ஜப்பானின் NYK,MOL போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இருக்கிறது. குறைந்த செலவு,சிக்கலில்லாத நடைமுறைகள் போன்ற காரணங்களால் இவ்வாறு பதிவு செய்து கொள்கிறார்கள்.
கப்பல் மூழ்கினாலும்,கார்கோ மூழ்கினாலும் முதலாளிக்கு எந்த இழப்பும் இல்லை. இழப்பு அதில் வேலை செய்யும் பணியாளனின் குடும்பத்துக்கு மட்டுமே. அவனுக்கும் இனிசூரன்ஸ் இருக்குமே என நீங்கள் எண்ணுவது எனக்கு கேட்கிறது. ஆள் இல்லாமல் பணம் மட்டும் இருந்து என்ன செய்ய.
மனிதன் அறிவியல்,விஞ்ஞானத்தின் உச்சம் தொட்டது சக மனித உயிரை கொல்வதற்கு தானா.
நாஞ்சில் ஹமீது,
13 march 2026.
sunitashahul@gmail.com.



No comments:
Post a Comment