Monday, 23 February 2026

ரமலான் நோன்பும் - ஆல்ஹகால் டெஸ்ட்டும்

 



   அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டி துறைமுகத்தில் 1,63,000(ஒரு லட்சத்து அறுபத்தி மூன்றாயிரம் மெட்ரிக் டன்) எல் என் ஜி திரவத்தை ஏற்றிக்கொண்டு பிரான்சின் Marseille யில் உள்ள போஸ் கோவ் துறைமுகத்தை வந்தடைந்தோம்.பதிமூன்று நாட்கள் பயணம். கடிகாரம் ஏழு மணிநேரம் முன்னே சென்றுவிட்டது.

வழியிலும் இங்கே பிரான்சிலும் நல்ல குளிர். துறைமுகத்தில் இருந்த இரு தினங்களும் குறைந்தபட்சம் பத்து பாகையும் அதிகபட்சம் பதினேழு பாகையுமாக இருந்தது. வெப்ப ஆடைகளை அணிந்து சமாளிக்கும் குளிர்தான் அது.

   சரக்கு குழாய்களைபொருத்துவதற்கு சரியாக ஐந்தரை மணிக்கு டெர்மினல் டீம் வந்தார்கள். ஆறு இருபதுக்கு சூரிய அஸ்தமம். மேனிபோல்டில் இருந்தே நோன்பு திறந்தேன்.காஸ் இஞ்சினியர் அசீமுக்கும் கொடுத்தேன்.

  வரும்போதே நான்கு பேரித்தம்பழமும் சிறிய குப்பியில் தண்ணீரும் கொண்டு வந்திருந்தேன். சரக்கு இறக்குதல் தொடங்கி நடந்து கொண்டிருக்கும்போது முதன்மை அதிகாரி மலேசியாவின் திவியன் அழைத்து. சாப்பிட்டு வாருங்கள் என்றார். ஏழே முக்காலுக்கு உணவுண்ண சென்று வந்தேன்.

   நான்கு தொட்டிகளில் இரு பம்புகள் வீதம் எட்டு பம்புகள் இயக்கப்பட்டு மணிக்கு பன்னிரெண்டாயிரம் மெட்ரிக் டன் முழு வேகத்தை எட்ட பத்தே முக்கால் ஆகிவிட்டது. அறைக்கு வந்து தொழுதுவிட்டு பன்னிரண்டு மணிக்கு உறங்கசென்றேன்.

   அதிகாலை அத்தாளம் உண்டு தொழுகைக்குப்பின் மீண்டும் உறங்கினேன். காலை எட்டு ஐம்பதுக்கு போனில் அழைத்தார்கள். இன்னும் பத்து நிமிடத்தில் ஸ்லோடவுன் என. கார்கோ பத்தொன்பதாயிரம் மெட்ரிக் டன் கப்பலில் மீதமிருந்தது. அதன் பின் சரக்கு இறக்கும் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பார்கள்.அனைத்து தொட்டிகளிலிருந்தும் சீரான அளவில் போர்ட்,ஸ்டார்போர்ட் எனப்படும் வலது,இடது பக்கங்களிலிருந்தும் சரியான அளவில் சரக்கை இறக்குவது முக்கியம். அதே வேளையில் சரக்கு இறங்கும் விகிதத்தில் பலாஸ்ட் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பவும் வேண்டும் இதை சரியாக செய்யாவிட்டால் கப்பல் கவிழ்ந்துவிடும்.

முதன்மை அதிகாரி  ஒன்பதே காலுக்கு சரக்கு தொட்டி ஒன்றின் அருகில் வால்வுகளை பார்க்கசொன்னார். உறுதிபடுத்தியதும் ஒரு பம்பை அணைத்தார். ஒன்பதரைக்கு ஆல்கஹால் டெஸ்ட்க்கு சிறுநீர் எடுத்த செல்ல ஒருவர் வந்தார்.எல் பிஜி,எல்என்ஜி கப்பல்கள் துறைகளில் கரையணையும்போது இது போன்று ஆல்கஹால் டெஸ்ட் நடக்கும்.அது யாருக்கும் தெரியாது.திடீரென அவர் கப்பலுக்குள் வந்தபின் தான் காப்டனே அறிவார். கப்பலின் மருத்துவமனையில் தண்ணீர் குழாயை மூடி கட்டி வைத்திருப்பார். ஒவ்வொருவராக சென்று சிறுநீர் கொடுக்கவேண்டும்.

  இரண்டாவது பம்ப்பை நிறுத்தியபின் முதன்மை அதிகாரி என்னிடம் “ஷாகுல் கோ டூ ஹாஸ்பிடல் டூ கிவ் யூரின்”என்றார். கப்பல் ஆஸ்பத்திரியின் முன் நின்று கொண்டிருந்தவர்களின் கைகளில் தண்ணீர் பாட்டிகள் இருந்தது.

ரமலான் நோன்பு வைத்திருக்கிறேன் காலை தூங்கி எழுந்ததும் சிறுநீர் கழித்தேன். உடனே எனக்கு சிறுநீர் வராது. இனி மாலையில்தான். தண்ணீர் குடிக்க வாய்ப்பே இல்லை.

ஆஸ்பத்திரி வாயிலில் நின்றவர்கள் டூட்டியில் இருப்பதால் என்னை உள்ளே போக சொன்னார்கள். முதன்மை அதிகாரியிடம் ஒரு கப்பை கொடுத்து “மினிமம் அறுபது மில்லி சிறுநீர்,நோ பிளஸ் நொவ்  என  வேண்டினார் டெஸ்டுக்கு சிறுநீர் எடுத்து செல்ல வந்தவர்.

 அடுத்து என் முறை உறுதியாக தெரிந்தது என்னால் முடியாது என திரும்பி வந்துவிட்டேன். கமல் என்னிடம் சொன்னான் “டெக்ல குளிர்ல நின்னா தானே வரும்”என.

  நான் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டேன். அரைமணி நேரம் கழித்து உறுதியாக நம்பினேன் சிறுநீர் கொடுத்து விடலாம் என. மீண்டும் மருத்துவமனை சென்றதும் இப்போதும் என்னை உள்ளே போக சொன்னார்கள் வரிசையில் நின்றவர்கள். முதன்முறை நான் வந்தபோது நின்றிருந்த ஆர் டி,பிரையன்,லாஸ்,மந்தீப்,ஜான் ஆகியோர் இப்போதும் நின்றுகொண்டிருந்தனர்.

   எனது பாஸ்போர்ட்டில் இருந்தபடி பெயரெழுதி கப்பை கையில் தந்தார். நான் நோன்பிருக்கிறேன் என்னால் முடியுமா என தெரியவில்லை என்றேன். “ட்ரை மாக்ஸிமம்” என்றார்.

 கப்பில் கொடுத்ததை முப்பது மில்லி வீதம் இரு பாட்டில்களில் ஊற்றியபின் மீதியை என்னிடம் தந்து “நொவ் பிளஸ் திஸ்”என்றார். தேவைக்கு அதிகமாக சிறுநீர் வந்தது எனக்கும் ஆச்சிரியம்தான்.

  காலை பதினோரு மணிக்கு அனைத்து பம்புகளும் நிறுத்தப்பட்டு வால்வுகளை அடைத்தோம் சரக்கு இறக்குதல் முடிந்தது. ஒரு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம் மெட்ரிக்டன் பதினான்கரை மணிநேரத்தில் முடிந்தது. சரியான வேகம்.

சரக்கு, சரக்கு எனப்படும் அந்த சார்கோவை நாங்கள் கண்களால் காண்பதே இல்லை. ஏனென்றால் அது -160 டிகிரியில் தொட்டியிலிருந்து, குழாய்கள் வழியாக செல்கிறது. அளவுகள் அனைத்தும் கருவிகளை நம்பித்தான். அவை 99.99% ஏமாற்றியதே இல்லை.

 பன்னிரெண்டு மணிக்கு வந்து குழாயில் இருக்கும் திரவத்தை நைட்ரஜன் அடைத்து கப்பலுக்குள் தள்ளினார்கள். குழாயை சிறிதும் வாயு இல்லாமல் பர்ஜிங் செய்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வருவதாக சொன்னார்கள்.

  மீண்டும் மூன்றரைக்கு வந்து நான்கு குழாய்களையும் பத்திரமாக அவிழ்த்து கரையில் கட்டிவிட்டு நன்றி சொல்லி விடைபெற்றார்கள்.முதன்மை அதிகாரி கார்கோ மாஸ்டருடன் கணக்குகள் பார்த்து ஆவணங்கள் பரிமாறப்பட்டு காப்டனின் முத்திரையும் கையொப்பமும் பதித்த அசல் காகிதத்தை கொண்டு சென்றார்கள்.

   பைலட் வரும் நேரம் ஐந்தரை மணி என ரேடியோவில் சொன்னதை கேட்டேன். அறைக்கு வந்து குளித்து அஸர் தொழுதுவிட்டு  சுனிதாவை போனில் அழைத்தேன். ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தார்கள் ‘ஸ்டான்ட் பை பார் ஸ்டேஷன்’ என. “இன்றும் டெக்கில் தான் நோன்பு திறக்கவேண்டும்” என சொல்லிவிட்டு சுனிதாவிடம் விடை பெற்றேன்.  நான்கு பேரீத்தம் பழங்களும்,சிறு பாட்டிலில் தண்ணீரும் எடுத்து ஆடை மாற்றி பார்வர்ட் ஸ்டேஷன் சென்றேன். பைலட் கப்பலுக்குள் வந்துவிட்டார் மிக சரியாக ஐந்தரை மணிக்கு. எனக்கு அனைத்து விஞ்ச்களிலும் சாம்பிளுக்காக எண்ணை எடுக்க வேண்டியிருந்தது. போசன் விஞ்சை இயக்க நான் எண்ணையை எடுத்து முடித்தேன்.

 ஆறு இருபதுக்கு சூரிய அஸ்தமம் இன்றும். இரு நிமிடங்கள் முன்பாகவே கப்பல் ஜெட்டியை விட்டு வெளியே வந்துவிட்டது. டக் போட் மட்டும் அவிழ்த்து விடவேண்டியது பாக்கி.மூன்றாம் அதிகாரியான மகின் மலேசிய தமிழர். “நான் கிளம்பலாமா நோன்பு திறக்க நேரம் ஆகிவிட்டது” என்றேன். “போங்கண்ணே” என்றார்.

  சரியாக அறைக்கு வந்துவிட்டேன்.தொழுகைக்குப்பின் ஞாயிராதலால் மதியமுள்ள பிரியாணியை உண்டேன்.

  கப்பல் நைஜீரியாவை நோக்கி பயணிக்கிறது. அடுத்த பத்து தினங்களுக்கு கப்பலின் கடிகார மாற்றமில்லை.



 திங்கள்கிழமையான இன்று முழு ஓய்வு கிடைத்தது. இன்று சூரிய அஸ்தமன நேரம் ஆறு மணி ஐம்பது நிமிடம்,நாளை செவ்வாய்கிழமை உதயம் ஏழு மணி ஐம்பது நிமிடம் என மூன்றாம் அதிகாரி தேஜஸ் எழுதி தந்தார். மாலை நான்கரை மணிக்கு அடுமனை சென்று கொஞ்சம் நோன்பு கஞ்சி வைத்தேன் இன்று.ஐந்தாம் நாள் நோன்பு நிறைவடைந்தது அல்லாஹ் உதவியால்.

நாஞ்சில் ஹமீது,

23-feb-2026.

sunitashahul@gmail.com



No comments:

Post a Comment