ஹூஸ்டனுக்கு வந்து 21 நாட்கள் விடுதியில் தங்கியிருந்தது முடிவுக்கு வந்தது. ஆறாம் தேதி காலை டெக்சாசிலிலுள்ள கார்பஸ் கிறிஸ்டி எனும் துறைமுகத்துக்கு கப்பல் வருவது உறுதியானது.
ஆறாம் தேதி காலை எங்களை தயாராக இருக்க சொன்னார்கள்.ஹூஸ்டனிலிருந்து இருநூற்றி இருபது மைல் தொலைவு, நான்கு மணிநேர பயணம்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து ஐந்துமணி தாண்டி ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது கீழே வந்தபோது இஞ்சின் கேடட் அமோ மற்றும் டுடர் வண்டியில் பைகளை ஏற்றி வைத்திருந்தனர்.
அறைசாவியை கொடுத்துவிட்டு வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.காலையிலேயே சாலையில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டே இருந்தது. போக்குவரத்து நெரிசல் சற்றும் இல்லை இங்குள்ள சாலையமைப்பு அப்படி.
ஓட்டுனரிடம் கேட்டேன் எப்போது போய் சேர்வோம் என.இன்னுமொருவரை வேறொரு விடுதியிலிருந்து அழைக்கவேண்டும் என்றார். எங்கே என சொல்லவேயில்லை. ஒருமணி நேர பயணத்திற்குப்பின் ஆறு வழி சாலை மற்றும் பாலங்கள் அனைத்தும் விலகி நான்கு வழி சாலைக்கு வந்தோம் வாகனங்களும் வெகுவாக குறைந்தது. கட்டிடங்களே இல்லாமல் இருபுறம் வெறும் தரையும் குறைவான மரங்களும் தென்பட்டன.
கிராம பகுதியை அடைந்ததாக உணர்ந்தேன்.ஒதுவுடன் இருந்ததால்.அதிகாலை பஜ்ர் தொழுகையை காரில் இருந்தபடியே தொழுதேன்.ஏழுமணிக்கு ஒரு பெட்ரோல் பம்ம்பில் காரை நிறுத்தினார்.வேறொரு வண்டி தயாராக இருந்தது அதில் பைகளை மாற்றிகொண்டோம்.
இரண்டாவது வண்டி ஓட்டுனரிடம் எப்போது போய் சேர்வோம் எனக்கேட்டேன். நாற்பது நிமிடங்கள் என்றார். சாலை இன்னும் சுருங்கி நம்மூர் போல ஒற்றை சாலையாக இரண்டு வாகனங்கள் செல்லும் அளவில் ஆகியது. ஆனாலும் விசாலமான சாலை. எட்டரைக்கு அழகிய கடற்கரை முன்பு இருந்த ஹாலிடே இன் விடுதியில் முன் நிறுத்தினார் காரை.
மூன்றரை மணிநேர பயணம் தெரியவேயில்லை விடுதிக்குள் சென்று நாங்கள் மூவரும் சிறுநீர் கழித்து வந்தோம். காலை உணவு குறித்து காரோட்டியிடம் கேட்டேன். எங்கள் முகவருடன் போனில் பேசிவிட்டு எதுவுமே சொல்லவில்லை. காலை ஐந்துமணிக்கே வண்டியில் ஏறிவிட்டோம் என நான் சொன்னதையும் சொன்னார்.
ஹாலிடே இன் விடுதியின் முன் அழகிய கடற்கரை,மென் குளிரில் சாலையை தாண்டி போனேன். மெக்ஸிகோ இங்கிருந்து மூன்று மணிநேர பயணம்தான். சில தினங்களுக்கு முன்பே கார்பஸ் கிறிஸ்டியில் நம்மை தங்கவைத்திருக்கலாம் என பேசிக்கொண்டோம்.
500ஆண்டுகளுக்கு முன் இங்கே அடித்த புயலில் சிக்கி 400 பேருக்கு மேல் இறந்ததையு பற்றி ஒரு நினைவு குறிப்பு உள்ளது.
இந்தோனேசியாவை சார்ந்த இரண்டாம் இஞ்சினியர் பைகளுடன் வந்து காரில் எறிகொண்டார்.அடுத்த இருபது நிமிடத்தில் கார்பஸ் கிரிஸ்டி துறைமுக வாயிலை அடைந்தோம்.
வாயில் காவலரிடம் நால்வர் கப்பலுக்கு போக வந்திருக்கிறார்கள் எனச்சொன்னார். காரோட்டியிடம் அடையாள அட்டையை வாங்கி பார்த்தபின் எங்களது பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயருடன் கையில் இருந்த பெயர் பட்டியலுடன் ஒத்துபார்த்தார்.
பணியில் இணைய வருபவர்களின் பெயர் பட்டியலை முகவர் முன்பே துறைமுக அதிகாரிகளுக்கு அனுப்பஈடுவார்கள்.காரோட்டி வீட்டுக்கு செல்பவர்களை அழைத்துசெல்ல மூன்று மணிக்கு வருவதாக சொன்னார். அவருக்கு ஒரு அடையாள அட்டையையும்,வாகனத்துக்கு ஒன்றும் அளித்தார் அங்கிருந்த வேறொரு பெண்மணி.
கார் முன்னால் சென்றதும் அங்கே நின்றுகொண்டிருந்த இருவரில் ஒருவர் நாய் ஒன்றை கையில் பிடித்திருந்தார்.எங்களை கீழே இறங்க சொல்லி பைகளை வரிசையாக அடுக்க சொன்னார். நாயை அருகில் கொண்டுவந்தார். முகர்ந்துபார்துவிட்டு முன்னால் சென்றது. கைப்பைகளை மட்டும் திறந்துகாட்ட சொல்லி பார்த்தார்கள்.
அதற்கடுத்திருந்த வாயிலில் மீண்டும் ஆவணங்கள் சோதித்தபின் உள்ளே போக சொன்னார். வழக்கமாக இங்கே இறங்கி நடந்து செல்ல சொல்வார்கள். இன்று தான் அனுமதிக்கிறார்கள் பிரசிடென்டுக்கு தரப்படும் முன்னுரிமை இது என சொன்னார் காரோட்டி.
கப்பலுக்கு மிக அருகில் சென்றோம்.உயரமான படிகளில் ஒவ்வொரு பையாக சுமந்து கப்பலில் வைத்தோம். காலை ஒன்பதுமணிக்கு கப்பல் கட்டப்பட்டதாக சொன்னார்கள்.காங்க்வேயில் இருந்த பவனும்,கமலும் “வெல்கம் பிட்டர் சாப்” என வரவேற்றார்கள்.
பத்து மணிக்கு பிஸ்மில்லாஹ் என சொல்லி கப்பலில் பாதம் பதித்தேன்.இந்தியாவிலிருந்து புறப்பட்டு 22 நாள் காத்திருப்புக்குப்பின்(இதுதான் எனக்கு நீண்ட காத்திருப்பு)குடியிருப்பில் நுழைந்ததும் இரண்டாம் இஞ்சினியர் மன்ஜீத் கட்டியணைத்து வரவேற்றார். ஊருக்கு செல்லும் உற்சாகத்திலிருந்தார்.
எனக்கு தந்த அறையில் பைகளை வைத்துவிட்டு அடுமனை சென்று சமையல்காரர் பெங்காளியான சந்தீப் மண்டல்,பிலிப்பைன்சைசார்ந்த இரண்டாம் குக் ஜான் மற்றும் மெஸ் மென் கமல் தண்டேலை பார்த்தேன். இரண்டு முட்டையும் ஒரு சுலைமானியும் குடித்துவிட்டு அறைக்கு வந்தபோது எனக்கான பணியாடை,காலனி,பாதுகாப்பு தொப்பி தயாராக இருந்தது.
ஆடை மாற்றி காஸ் பிட்டர் அப்சலை பார்த்தேன்.. பன்னிரெண்டரை மணிவரை காஸ் பிளானட்,கார்கோ ஸ்டோர்,டெக் வோர்க்ஷாப்,இயந்திர அறையை காட்டித்தந்தார்.இயந்திர அறையில் கொரியாவின் முதன்மை இஞ்சினியர் கிம் “ஷாகுல் நீயா வருக”என கைகுலுக்கினார்.
உணவுண்ண சென்றபோது அவர் விடைபெற்றார்.மூன்று மணிக்கு செல்ல வேண்டும். இரவு ஏழு மணி விமானம்.ஒரு மணிக்கு சரக்கு நிறைக்கும் குழாய்களை பொருத்தும் டீம் வந்தது. காஸ் இஞ்சிநியர் மலேசியாவின் அஸிமுடன் நானும் இருந்தேன்.
நள்ளிரவில் தான் சரக்கு நிறைக்கும் பணி துவங்கும் ஓய்வு எடுத்துகொள்ளுமாறு முதன்மை அதிகாரி மலேசிய தமிழரான திவ்யன் மகாலிங்கம் சொன்னார். மூன்று ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் எனேர்ஜியில் அவருடன் பணிபுரிந்துள்ளேன்.
நான்கு முதல் ஐந்தரை வரை நல்ல தூக்கம். லேசான குளிர் இருந்தது. இரவுணவாக சப்பாத்தியும் மட்டன் கறியும் உண்டேன். பத்து மணிக்குமேல் படுத்துவிட்டேன். அதிகாலை இரண்டே காலுக்கு போனில் அழைத்தார் அஸீம் “கம் டூ சி சி ஆர்”(கார்கோ கண்ட்ரோல் ரூம்)
இப்படியாக நெடும் பயணத்துக்குப்பின் பசுபிக் சக்கஸ் கப்பலில் பணியில் இணைந்தேன். ஏழு மாத பணி ஒப்பந்தம் ஒரு மாதம் ஹோட்டலிலேயே முடிந்துவிட்டது என சத்தீஸ்கர் மூன்றாம் அதிகாரி தேஜஸ் கூறினான்.
நாஞ்சில் ஹமீது,
09 feb 2026.
sunitashahul@gmail.com














No comments:
Post a Comment