Thursday, 23 July 2026

கோஸ்டா அசுல் (மெக்ஸிகோ)



       இந்த மாதம் ஆறாம்தேதி மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் (COASTA AZUL) துறைமுகப்பிற்கு வந்தோம். 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக மெக்ஸிகோ வந்தேன். 

 அக்கபுல்கோ, மன்சிலனோ, வெராகுரூஸ், லார்சனோ கார்டனஸ் என அழகிய துறைமுகங்கள். தமிழகத்தை போன்ற தட்பவெப்பநிலை, அழகான பெண்கள் மற்றும் நம்மை போலவே கொஞ்சம் காரமான உணவை சாப்பிடுபவர்கள். 

 கப்பலை நிறுத்தியபின் வாயிலை தாண்டினால் சாலை. மிக அழகான கடற்கரைகளை கொண்ட ஊர் சனிக்கிழமை மாலையானால் சாலையை ஒட்டிய கடைகளில் அளவான மதுவருந்திய ஜோடிகள் (இருபது முதல் அறுபது வயது வரை) நிதானமாக ஆடி மகிழ்வதை காணலாம்.

கார் ஏற்றும் கப்பல் 


  காரேற்றும் கப்பலிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி கப்பலில் வந்தபின் இப்போதுதான் முதல் முறையாக மெக்ஸிகோ வருகிறேன். இருந்தும் இங்கே வெளியே செல்ல அனுமதியில்லை பழைய நினைவுகளில் மூழ்கி வெளியேறினேன்.

 துறைமுகத்தை ஒட்டிய பகுதி கரையாக இருக்கும் அதன்பின் நிலப்பரப்பு. கரையை ஒட்டி பச்சைபசெலென மரங்களோ புல்வெளியோ கட்டிடங்களுமாகவே இருக்கும். கோஸ்டா அசுல் பசுபிக் கடலில் இருக்கிறது. இந்த டெர்மினல் கடலுக்குள் இருப்பது போலவே இருக்கிறது. பசுபிக் கடலில் இருக்கும் மலையில் அலைகள் அடித்துக்கொண்டிருக்கிறது. கடலில் அறுநூறு மீட்டருக்கு மேல் கான்க்ரீட் தளம் அமைத்து பிரேக் வாட்டர் அமைத்து பாறையை வெட்டி சமதளபடுத்தி டெர்மினல் அமைத்துள்ளனர். 

 இது கொஞ்சம் உயரமான நீண்ட மலை, மலையின் மறுபுறம் நெடுஞ்சாலை செல்கிறது அங்கு சமதளபகுதியும் ஊரும் இருப்பதை கற்பனையில் விரித்துக்கொண்டேன். அதாவது மலை ஏறி, இறங்கினால் இருக்கிறது நெடுஞ்சாலை. மலையில் மேற்பரப்பில் ஒரு கிராமம் இருக்கிறது. நூறு வீடுகள் இருக்கலாம். பைனாகுலர் வழியாக அந்த வீடுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். 

 வீட்டின் வாசலில் அல்லது ஜன்னலை திறந்தால் கண்முன் வரிந்துகிடக்கும் பசுபிக் கடல் தான் காட்சி. இரவில் இருளில் வானில் ஜொலித்துக்கொண்டிருக்கும் கோடானுகோடி நட்சத்திரங்களை பார்த்தவாறு பிரபஞ்சத்தோடு இணைந்துவிடலாம். சுத்தமான காற்றும் உறுதி. அந்த வீடுகளில் வாழ்பவர்கள் ஆசீர்வதிகபட்டவர்கள். 

சுனாமி வருமோ எனும் எண்ணம் எனக்கு வராமலில்லை. சுனாமி மலை உச்சிவரை செல்லாது என்பதே என் கணிப்பு. கப்பலை கட்டியிருந்த டெர்மினலில் பணிசெய்பவர்களை அழைத்து செல்லும் வண்டிகள் மலையிறங்கி வருவதையும் பார்த்தேன். கப்பல் நகர்ந்தபின் மலை முடியும் இடத்தில் கொஞ்சமான சமவெளி பரப்பில் இன்னும் சில வீடுகள் இருக்கிறது. ஆனால் மலையுச்சியில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

  கப்பலுக்கு வந்திருந்த டெர்மினல் பணியாளர்களிடம் டெர்மினலிலிருந்து சற்று தள்ளியிருந்த பிரமாண்டமான பங்களாவை காட்டி கேட்டேன். அரசு மற்றும் ராணுவ உயரதிகாரிகள் ஓய்வுக்காக வந்து தங்குமிடம் என்றார்கள். நான் கேட்ட பணியாளரிடம் அந்த பங்களாவின் வீடியோக்கள் இருந்ததை மொபைலில் காட்டினார்.

 ரகசிய பாதாள அறை, உணவுக்கூடம், நீச்சல்குளம், அடர்த்தியான கார்பெட் விரித்த வரவேற்பு அறை, நட்சத்திர விடுதியின் தரத்தில் இருக்கும் படுக்கையறை ஆகியவை இருந்தன.

இந்த டெர்மினலில் எங்கள் கப்பல்தான் முதல்முறையாக சரக்கு நிரப்பி செல்ல வந்ததால் கப்பல் கட்டும்முன்பே ட்ரோன் வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். கப்பல் இங்கே நின்றிருந்த இருநாளும் கப்பலை பார்க்க டெர்மினல் அதிகாரிகள், ஊழியர்கள் என எண்பதுபேருக்குமேல் வந்து சென்றனர்.

திரும்ப திரும்ப முப்பது முகங்களையே தினமும் பார்க்கும் எங்களுக்கு இதுவும் நன்றாகத்தான் இருந்தது. 

  கோஸ்டா அசுல் துறைமுகமும், அந்த மலையுச்சியில் இருக்கும் வாழும் வீடுகளும் என்றும் நினைவில் நிற்கும்.

நாஞ்சில் ஹமீது,

19 july 2026.

sunitashahul@gmail.com

பிரேக் வாட்டர் கல்லில் வாழும் பறவைகள்


Sunday, 12 July 2026

விடுமுறை நாட்கள்



   கப்பல் காரனுக்கு விடுமுறை உண்டா? அப்படி விடுமுறை கிடைத்தால் அந்த நாளில் அவன் எங்கு செல்வான்? என்ன செய்வான்? இது பலரும் கேட்பது.

   இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு நான் முதல் கப்பலில் நான் இணைந்தபோது விடுமுறை என்பதே தெரியாது. அது துபாய் முதலாளிக்கு சொந்தமான கப்பல். துபாயில் ஏற்றிய சரக்குகளை, ஈராக்கில் இறக்குவோம். 

   துறைமுகம் இல்லாமல் இருந்தால் அரிதாக வெள்ளிக்கிழமையில் அரைநாள் ஓய்வு சாத்தியம். அது கப்பலில் பிட்டராக இருக்கும் எனக்கும் பகல் பணியில் இருக்கும் ஓ எஸ், போசன் பத்தி சாபுக்கும் மட்டுமே கிடைக்கும். அப்போது ஏதேனும் எமேர்ஜென்சி வந்தால் உடனே பணிக்கு சென்றாக வேண்டும். 

   வாட்ச் கீப்பர்கள் ஆகிய நேவிகேஷன் அதிகாரிகள், கப்பலோட்டும் மாலுமிகள், இயந்திர அறையிலுள்ள இஞ்சினியர்கள், அவர்களுக்கு உதவியாகவுள்ள மோட்டர்மேன்கள் குறைந்தது எட்டு மணிநேர பணி செய்தே ஆகவேண்டும். 

 விடுமுறை கிடைத்தால் என்ன செய்வது. ஒன்றும் செய்ய முடியாது. படம் பார்த்து, துணிகள் துவைத்து, தூங்கி எழ வேண்டியதுதான். கடும்பணிக்குப்பின் உடலுக்கு ஓய்வு மட்டும் உறுதி.

  கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது. ஓய்வாக இருக்கும்போது உணவுகூடத்துக்கும், அறைக்கும் தவிர நடமாட்டமே குறைந்துவிடும் நாட்கள்தான். 



   தற்போது பணியிலிருக்கும் நிறுவனத்தில் 2006 ஆம் ஆண்டு பயிற்சி பிட்டராக இணைந்தேன். ஞாயிறுகளில் துறைமுகம் இல்லாமலிருந்தால் அரைநாள் ஓய்வு பகல் பணியாளர்களுக்கு கிடைக்கும். பயிற்சி பிட்டரான என்னை மூன்று மணிவரை வேலை செய்ய சொல்வார்கள். இரண்டு மணிநேரம் ஓய்வு அரிதாக கிடைக்கும். மற்ற நாட்களில் காலை ஆறு முதல் இரவு ஏழுமணி வரை எனக்கு வேலை தருவார்கள்.

   பதவி உயர்வு பெற்றபின் பணி காலை எட்டுமுதல் ஐந்துவரை. ஞாயிறு அரைநாள் ஓய்வு உறுதியானது. புதிய கப்பல்கள் வந்தபோது இயந்திர அறை மாலை ஐந்துமணிக்கு மேல் ums (un manned ship) முறைகள் வந்தது. இயந்திரஅறை பணியாளர்களுக்கும் ஞாயிறு அரைநாள் ஓய்வு கிடைக்க துவங்கியது . 

 இந்தியரல்லாத உயரதிகாரிகள் கப்பலுக்கு வந்தபோது சனிக்கிழமை அரை நாள் ஓய்வும், ஞாயிறு பத்து மணிக்கு மேல் விடுமுறையும் சாத்தியமானது. அது துறைமுகங்கள் இல்லாமல் அவரச பணிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே. புதிய கப்பல்களாக இருந்து நீண்ட பயணமாக இருந்தால் ஓய்வு சாத்தியமே.

  2022 ஆண்டு முதல் முதலாக எல்என்ஜி கப்பலில் பணிக்கு வந்தேன். உயரதிகாரிகள் கொரிய,மலேசிய,இந்தோனேசியாவை சார்ந்தவர்கள். சனிக்கிழமை அரை நாளும், ஞாயிறுகளில் முழுநாளும் பெரும்பாலும் ஓய்வு உறுதி. பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிறுகள் பணி நாட்களாக அமைந்து விட்டால் அதற்கு பகரமாக மற்றொரு நாள் விடுமுறை எடுப்பதில் வல்லவர்கள் கணக்கு தவறாது.

  எனது முதல் எல்என்ஜி கப்பலில் பணியில் இணைந்த மறுநாள் பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. நீராவி இஞ்சினில் ஏற்பட்ட பெரிய பழுதை நீக்க டெக்னீசியன்கள் கப்பலுக்கு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு சனி,ஞாயிறு ஏதும் இல்லை எவரிடே மண்டே என்பாரகள். 

  முதல் குழு இரண்டு மாதம் பணிசெய்துவிட்டு சென்றபோது சில உதிரி பாகங்களுக்காக நாங்கள் காத்திருந்தோம். அவை கப்பலுக்கு வந்தபின்தான் இரண்டாவது குழு வந்து பணியை துவங்கவேண்டும். இரண்டாம் இஞ்சினியர், முதன்மை இஞ்சினியரிடம் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓய்வே இன்றி பணி செய்துள்ளோம் அதற்காக காம்பன்செட் செய்ய வேண்டுமென்றார். வெள்ளிக்கிழமை மதியத்திற்குபின் அரை நாள் ஓய்வு துவங்கி திங்கள்கிழமை காலை பணிக்கு வரவேண்டும். டூட்டி இஞ்சினியர், டூட்டி மோட்டேர்மேன் மட்டும் இயந்திர அறைக்கு சென்று தினமும் செய்தே ஆக வேண்டிய பணிகளை செய்து லாக் புக் எழுதிவிட்டு வருவார்கள்.

  இருவராங்களுக்கு பின் பக்ரீத் பண்டிகை வந்தது அது ஞாயிறாக இருந்தது. மறுநாள் திங்கள்கிழமை பணிக்கு சென்றேன். இயந்திர கட்டுப்பாட்டு அறையில் மோட்டர்மேன் மட்டும் இருந்தார். இன்று விடுமுறை என்றார். பக்ரீத் ஞாயிறில் வந்துவிட்டதால் இன்று விடுமுறை என விளக்கம்சொன்னார். தொடர் விடுமுறையில் அறையில் அடைந்து ஒரு டீப் சோர்வுகுள்ளானேன். அந்த கப்பலில் நாங்கள் ஆறுபேர் மட்டுமே இந்தியர்கள் அதில் இருவரை உணவுகூடத்தில் மட்டுமே பார்க்க முடியும். அதிகமாக பேசும் எனக்கு பேச ஆள்கிடைக்காததால் தான் பிரச்னை என புரிந்தது.

   கோவாவின் மோட்டேர்மேன் பெர்னாண்டோவிடம் சொன்னேன் என்னால் இனியும் அறையில் அடைந்துகிடக்க முடியாது என. விடுமுறை நாளில் பத்து மணிக்கு மேல் என் அறைக்கு வந்துவிடு என்றார்.

  தற்போது இருக்கும் கப்பலும் எல்என்ஜி (LNG) கொரிய காப்டன் மற்றும் முதன்மை இஞ்சினியர். இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர், மலேசிய முதன்மை அதிகாரி. சனிக்கிழமை அரைநாள் ஓய்வு,ஞாயிறில் முழு நாள் ஓய்வு கட்டாயம். ஞாயிறு துறைமுகமாக இருந்தால் திங்கள்கிழமை நிச்சயம் ஓய்வு.

இத்தனை வருடங்களில் பண்டிகை நாட்கள் அரிதாக தெரியவரும். பெரும்பாலும் கப்பல் காரனுக்கு பண்டிகை நாட்கள் கடந்து செல்வதே தெரியாது. இங்கே முகரம் நாளன்று முழுநாள் ஓய்வு கிடைத்தது.

  துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது காஸ் டிப்பார்ட்மெண்ட், டெக் பணியாளர்களுக்கு கொஞ்சம் அதிக பணி இருக்கும். முதன்மை அதிகாரி, காஸ் இஞ்சினியர் தொடர்ந்து முப்பது மணிநேரம் வரை பணி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. 

  ஒவ்வொரு முறை துறைமுகம் விட்ட மறுநாள் முழுநாள் ஓய்வு என்பது இங்கே எழுதப்படாத விதி. கடந்த வாரம் பசுபிக் கடலில் மெக்ஸ்சிகோ நோக்கி பயணித்தோம் ஒரு நாள் பின்னோக்கி நகர்த்தவேண்டும். அது ஞாயிறாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். எனவே சனிக்கிழமை அரை நாள், முதல் ஞாயிறு, இரண்டாம் ஞாயிறு என இரண்டரை நாள் முழு ஓய்வு. ஓய்வு நாட்களில் பத்து மணி மீட்டிங்கில் கண்டிப்பாக முகம் காட்டி வரவேண்டும்.

   இந்தவாரம் திங்கள் மற்றும் செய்வாய்க்கிழமை துறைமுகத்திலிருந்தோம். sire inspection எனும் ஆய்வும், மெக்ஸிகோ துறைமுக அதிகாரிகளின் ஆய்வும் நடந்தது. அதற்காக நாங்கள் கப்பலை தயார் செய்து வைத்திருந்தோம். இரு ஆய்வுகளிலும் தேறியதால். புதன், வியாழக்கிழமை என இரு தினங்கள் ஓய்வு.(2024 march built, இது இரண்டு ஆண்டுகளே ஆன புத்தம்புதிய கப்பல். பெரிதாக தயார் செய்ய ஒன்றுமேயில்லை. நன்றாக துடைத்து சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.) 

   வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்றேன். மீட் ரூம் கதவின் லாக் ரிப்பேர் கதவு திறக்கவில்லை. கழட்டி பார்த்தேன் அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஸ்ப்ரே அடித்து துடைத்து தற்காலிகமாக திறக்கும்படி பொருத்திவிட்டு புதியது ஆர்டர் செய்யும்படி முதன்மை அதிகாரியிடம் சொன்னேன்.காஸ் பிளாண்டில் நீராவி வால்வ் ஒன்றில் காஸ்கட் மாற்றும் பணியில் காஸ் இஞ்சினியருக்கு கொஞ்சம் உதவினேன். வாழ்வை கழட்டி சுத்தம் செய்து புதிய காஸ்கட்டும் அவரே வெட்டி வைத்திருந்தார். கொண்டு போய் பொருத்தினேன்.

   மூன்று மணிக்கு மேல் பணியாடை மாற்றும் இடத்தில் சலவை இயந்திரம் பொருத்த தண்ணீர் குழாயின் இணைப்புகளை தேடும்பணி அதோடு நாள் முடிந்தது.

 நேற்று சனிக்கிழமை வேலைகளை பதினோரு மணிக்கே முடித்து விட்டேன். இன்றும் ஓய்வு. இந்த வாரத்தில் மூன்றை நாள் பணியும் மீதி ஓய்வுமாக பணியை விட ஓய்வே அதிகமாக இருந்தது.

  பசுபிக் கடலில் கொரியாவை நோக்கிய பயணத்தில் இருக்கறோம். திங்கள் இரவு தூங்கி எழுகையில் புதன்கிழமையாக விடியும். அதிலும் இவ்வாரத்தில் ஒருநாள் காணமல் போகிறது. 

  இப்போதெலாம் ஓய்வு நாட்களில் அறைக்குள் அடைந்து கிடப்பதில் எந்த சிரமும் இல்லை குறைவாக உண்டு, மாலை நேர உடற்பயிற்சிக்குப்பின் எழுத்தும், வாசிப்பும் இனிமையாக கழிகிறது. ஊரிலிருந்து புறப்பட்டு ஆறு மாதங்களும் கப்பலுக்கு வந்து ஐந்து மாதங்கள் ஒருவாரமாகிறது.

நாஞ்சில் ஹமீது,

12july2026.

sunitashahul@gmail.com