கடந்த ஞாயிறு மாலை ஹில்டன் விடுதி வரவேற்பறை போனில் அழைத்து. இன்று இரவு நீங்கள் இங்கே தங்க முடியாது. மூட்டை,முடிச்சுகளுடன் கீழே வாருங்கள் என்றார்கள்.
ஹில்டன் வசதியான பெரிய நட்சத்திர விடுதி. இரு தினங்களாக இங்குள்ள கான்பாரன்ஸ் கால்களில் கூட்டங்கள்,பயிற்சிகள் நடக்கிறது.
தினமும் மாலை நான்கு மணிக்கு உள்ளூர் முகவரின் மின்னஞ்சல் வந்தபின் எங்கள் தங்கும் அறையை நீட்டிப்பார்கள்.
இப்போது மேலும் மூன்று குழுக்களின் பயிற்சி கூட்டங்கள் நடக்கவிருப்பதால் எங்கள் மூவரையும் காலி செய்ய சொன்னார்கள்.
எனது பைகளுடன் கீழே வந்தேன். என்னுடன் கப்பலுக்கு வரவேண்டிய டடுர் வரவேற்பறையில் காத்திருந்தான். அறை சாவியை கொடுத்ததும். "மன்னித்து கொள்ளுங்கள் உங்களது அறையை எங்களால் மேலும் நீட்டிக்க இயலவில்லை அதிகமான புக்கிங் உள்ளது. புரிந்துகொண்டதற்கு நன்றி" என கூறினார்.
ஏராளமானோர் விடுதிக்கு வந்துகொண்டே இருந்தனர்.ஹில்டனின் மேலாளர் ஒருவர் வேறு விடுதியில் அறையை தேடிக்கொண்டிருக்கிறார். இங்கே அருகில் தான் இருக்கும் கொஞ்சம் காத்திருங்கள் என்றார்.
நண்பர் சிவா வந்திருந்தார். அவரது மொபைல் எண்ணை கேடட் அமோவிடம் கொடுத்துவிட்டு காரில் இந்திய உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடியும்போது அமோ அழைத்து "நம்மை அழைத்து செல்ல இன்னும் சில நிமிடங்களில் வண்டி வருகிறது"என்றான்.
நான் விடுதிக்கு வந்து சேரவும் வண்டி வந்தது. நண்பர் சிவா விடைபெற்று சென்றார். ஹில்டனிலிருந்து அரை மணிநேர பயணத்துக்குப்பின் பசடேனா என்னும் இடத்திலுள்ள குவாலிட்டி இன் எனும் விடுதியை அடைந்தோம்.
இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் விடுதி இது. அறையும் இரவுணம் தந்தார்கள். காலையில் எட்டாவது மாடியிலுள்ள உணவகத்துக்கு சென்றபோது காலை உணவாக அமெரிக்க உணவுகளுடன் இட்லி சாம்பாரும் இருந்தது. சைவ உணவும்,சப்பாத்தி,பருப்பு குழம்பு வகைகளும் மதிய,இரவு உணவுகளில் இருந்தது.
வேறு நிறுவன கப்பல்களில் இணைவதற்கு வந்தவர்களில் மதுரையை சார்ந்து பிரபு எனும் இரண்டாம் இன்ஜியர்,பாண்டிச்சேரி விக்னேஷ், சென்னையை சார்ந்த முதன்மை இஞ்சினியர் ஒருவரும் இங்கே இருந்தார்கள்.
இங்கே அருகிலேயே வணிக வளாகங்கள் நிறைய இருந்தது.காலை பத்து மணிக்கு இங்கிருத்து வண்டி ஒன்று சற்று தூரத்தில் இருக்கும் வால்மார்ட்,கல்ப் கேட் வணிக வளாகத்திற்கு அழைத்து சென்று,இரண்டு மணிநேரத்திற்கு பிறகு அழைத்து வருகிறார்கள்.
இரண்டாம் நாள் மதுரை,பாண்டி கப்பல்காரர்கள் சென்றுவிட்டனர்.எங்கள் நிறுவன கப்பல் ஒன்றில் இணைய வந்த நால்வரில் கேரளாவின் போசன் நாசர் மற்றும் ஆந்திராவின் ராம் பாபு முன்பே என்னுடன் பணி புரிந்தவர்கள்.
இங்கேயே இன்னும் சில நாட்கள் இருந்தால் முன்பு என்னுடன் பணிபுரிந்த பலரையும் சந்தித்து விடலாம் என எண்ணினேன்.
எனது மும்பை அலுவலகம் மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டது கப்பலுக்கு போய்விட்டதை உறுதி செய்யுமாறு. இன்னும் விடுதியறையில் தான் இருக்கிறேன். கப்பல் மெக்ஸிகோவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. நான் எப்போது கப்பல் ஏறுவேன் என எனக்கு யாரும் இதுவரை சொல்லவில்லை என்று பதிலளித்தேன்.
அடுத்த சில நிமிடங்களில் விரைவில் தொடர்புகொள்கிறேன் அதுவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டினார் என் மேலாளர் தர்சனா.
அடுத்த ஒரு மணிநேரத்தில் மும்பை அலுவலகம் இருபத்தி எட்டாம் தேதி மெக்ஸிகோ செல்வதற்கான விமான டிக்கெட்டை அனுப்பியது.
வேறு வழியே இல்லை இங்கேயே இருக்கவேண்டியது தான். பக்கத்து ஊரில் வசிக்கும் நண்பர் செந்திலை அழைத்தபோது "இங்கே பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,இப்போது பயணம் செய்வது சாத்தியம் இல்லை" என்றார்.
ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கபட்டிருந்தது. பனிப்புயலில் வீட்டைவிட்டு வெளியே செல்வது பாதுகாப்பில்லை. நான் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்திலும் பனிப்புயல் எச்சரிக்கை இருந்தது.
நான் தற்போது தங்கியிருக்கும் பசடேனாவில் வெப்பம் மைனஸ் மூன்று டிகிரிவரை சென்றது. ஆனால் பனி விழவில்லை. அமெரிக்காவின் நீயுயார்க்,நீயு ஜெர்ஸி மற்றும் பல பகுதிகளை பனிப்ப்புயல் கடுமையாக தாக்கியது.
நாஞ்சில் ஹமீது.
மேலும் ...











No comments:
Post a Comment