Wednesday, 21 January 2026

ஹூஸ்டன் நாட்கள்

     


      கப்பல் பணியில் இணைவதற்காக விமானம் ஏறி வந்துவிட்டால் ஒரு இரவு ஓய்வுக்கு மனம் எங்கும்.கப்பலுக்குள் போய்விட்டால் உடனே செய்ய வேண்டிய வேலைகள் தயாராக இருக்கும்.  நீண்ட விமான பயணத்திற்குபின் உடலும் மனமும் களைத்து,இரவு,பகல் நேர வித்தியாசம் தரும் சோர்வு,தள்ளிப்போன,உணவு,குளியல்,உறக்கம் என குழப்பமாக இருக்கும்.

       இம்முறை பசுபிக் கப்பலில் இணைவதற்காக   கடந்த வியாழன் (15- jan- 2026) அதிகாலை விமானம் திருவனந்தபுரத்திலிருந்து.புதன்கிழமை இரவு பதினோரு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டேன்.



   இருபத்தியொரு மணிநேர விமான பயணம் காத்திருப்பு எல்லாம் சேர்த்து ஒரு நாளுக்கு மேலாக ஆன பயணம்.வியாழன் மாலை ஐந்து மணிக்கு ஓட்டுனர் ஹூஸ்டனிலுள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலில் கொண்டு விட்டார்.

  


ஐந்தாவது மாடியில் அறை. கப்பலுக்கு போகும்முன் கிடைக்கும் முழு இரவு தூக்கம் காலையில் புத்துணர்ச்சியை தரும்.குளித்து  ஆடை மாற்றி இரவுணவுக்குபின் ஒன்பது மணிக்கு தூங்க சென்றேன். கப்பல் துறைமுகத்தை விட்டு சற்று தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.



       காலையில் கப்பலுக்கு போகலாம் என எண்ணியிருந்தேன். கப்பல் துறைமுகம் வரவேயில்லை. காலையில் நடைபயிற்சி,நல்ல வெயில் அடிக்கும் உச்சி வேளையில் வெளியே  ஒரு நடை. 

  



ஞாயிறு மதியம் ஹூஸ்டனில் வசிக்கும் நண்பர் சிவா வந்திருந்தார். இந்திய உணவகம் சென்று அரிசி சோறு,பொழிச்சது எல்லாம் சாப்பிட்டோம். 

  



அருகிலேயே இருந்த மாலுக்கு சென்று மோட்டார் மேன் சந்தோஷ் கேட்ட வாட்ச் ஒன்று வாங்கினோம். இங்கே புத்தக கடை இருப்பதை கண்டு உள்ளே அழைத்து சென்றார். என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய புத்தகக்கடையை நான்  பார்த்ததே இல்லை. நிறையபேர் வாசிப்பு பழக்கமுள்ளவர்கள் என்பதை இந்த கடை காட்டுகிறது.



   ஏராளமான மாணவர்கள் அங்கே குவிந்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகரான சிவா அறம் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான stories of the true இருக்கிறதா என தேடினார். ஸ்டாக் இல்லை என சொன்னது. ரூமியின் கவிதை நூலான வாட்டர் நூலை எனக்கு வாங்கி தந்தார். நான் அவருக்கு கவிதை நூல் ஒன்று பரிசளித்தேன்.



   எனது விடுதியறைக்கு திரும்பி வந்து ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவரது இல்லம் திரும்பி சென்றார்.



   திங்கள்கிழமை நடந்தே வெளியே சென்று வந்தேன். உணவகத்தில் எனது கப்பலுக்கு வரும் பிலிப்பினோ கேடட் அமோவை பார்த்தேன். வியாழன் மாலை வந்ததாக சொன்னான்.



 திங்கள் மாலை கப்பல் மெக்ஸிகோ புறப்பட்டு விட்டதாக மோட்டர் மேன் சந்தோஷ் சொன்னார்.ஹூஸ்டன்,முகவர் மற்றும் மும்பை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். காத்திருக்க சொன்னார்கள்.இரவுணவின் போது இன்னுமொரு கேடட் ருமேனியாவின் ட்டுரை பார்த்தேன்.

   நேற்று காலை நண்பர் சிவா அழைத்து   விடுதியிலிருந்து செல்லும் வாகனத்தில் விமான நிலையம் போய் வாருங்கள் என்றார்.




  அரை மணி நேரத்திற்கு ஒருமுறை  விமான நிலையம் செல்லும் சட்டில் பஸ்கள் உள்ளது. நாங்கள் மூவரும் அதிலேறி ஜார்ஜ் புஷ் இன்டெர்நேஷனல் விமான நிலையம் சென்றோம். விடுதியிலிருந்து ஆறு நிமிட பயணம் மட்டுமே.அங்கே 'சி' டெர்மினலில்  இறங்கி சுற்றிவிட்டு எ,பி,சி,ட,ஈ டேர்மினல்களை இணைக்கும் ரயிலில் ஒரு பயணம் போனோம். பி டெர்மினலில் இறங்கி மீண்டும் ஒரு நடை சி வரை. வெளியே வந்தபோது ஹோட்டலுக்கு செல்லும் பஸ் தயாராக இருந்தது. ஏறிக்கொண்டோம்.



 இந்த விடுதி விமான பணியாளர்களான பைலட்,பணிப்பெண்களால் எப்போதும் நிரம்பியிருக்கிறது.விமானம் புறப்படும் பெரிய திரை ஒன்று இங்கே வைக்கப்பட்டுள்ளது. 



  உணவு கூடத்தில் பேச்சுக்கள் எப்போதும், முப்பது மணிநேரம் ஏர் டைம்,நான் விமானத்தில் ஏறியபோது இப்படி இருந்தது என மொபைலில் படத்தை காட்டிவிட்டு அதை சரி செய்ய இரண்டு மணிநேரமானது  பின்னர் விமானத்தை கிளப்பினேன்.



   விமானம் தரை இறங்கும்போது வானிலை மோசமாகி கஷ்டப்பட்டுதான் விமானத்தை தரையிரக்கினேன் என உரையாடால்கள் கேட்கும்.

     கப்பலுக்கு செல்பவர்களும் நிறையப்பேர் இங்கு வந்து செல்கின்றனர். இரு தினங்களுக்கு முன் கார்னிவல் ட்ரீம் எனும் கப்பலுக்கு செல்லும் அறுபது பணியாளர்களை பஸ் ஒன்றில் ஏற்றி சென்றார்கள்.

 நாகலாந்தை சார்ந்த பெண் ஒருத்தி உட்பட ஆறு இந்தியர்களும் அதில் அடக்கம்.மறுநாள் கேரளாவை சார்ந்த ஒருவரை சந்தித்தேன். கொச்சியில் விமானம் தாமதமானாதல் ஒரு நாள் பிந்தி விட்டது என்றார். கப்பல் ட்ரீம் புறப்பட்டுவிட்டு மயாமியில் சென்று கப்பல் ஏற மறுநாள் புறப்பட்டு சென்றார்.

   இன்று காலை உள்ளூர் முகவர்            பதிலனுப்பினார்.மெக்ஸிகோவின்அல்டா மிரா எனும் துறைமுகத்திற்கு கப்பல் வருகிறதுவிமான சீட்டு வந்ததும் அங்கே அனுப்புகிறோம் என.

  நாஞ்சில் ஹமீது ,

21 - jan - 2026

No comments:

Post a Comment