கடந்த வியாழன் இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு பணியில் இணைவதற்காக விமானம் ஏறி ஹூஸ்டன் வந்தடைந்தேன்.இன்னும் விடுதியறையிலேயே காத்திருக்கறேன்.
2007 ஆம்ஆண்டு நீயுயார்க்கில் கப்பலில் இணையச்சொல்லி அவசர அழைப்பு. சென்னைக்கு சென்று மருத்துவ பரிசோதனை முடித்து காத்திருந்தேன்.
இரு தினங்கள் சென்னையில் இருந்தபின். பயணம் ரத்தான தகவல் வந்து வீட்டிற்கு திரும்பி வந்தேன்.மேலும் இருமுறை வீட்டிலிருந்து விமான நிலையம் வரும்முன் தொலைப்பேசியில் அழைத்து பயணம் தாமதமானது,ரத்தாகி விட்டது எனவும் தகவல்கள் கிடைக்கும் அதில் பெரு நஷ்டம் ஏதும் இல்லை.
ஒரு மாதம் வரை பயணம் தள்ளிபோயிருக்கிறது. 2023 இல் எல் என் ஜி அலையன்சுக்காக மும்பை லண்டன் வழியாக ஜிப்ரேல்டோர் வரை பயணித்து இரவு விடுதியில் தங்கினோம்.மறுநாள் மாலை ஆறு மணிக்கு தயாராக இருக்க சொன்னார்கள்.
வேறு நிறுவனங்களை சார்ந்த கப்பல் பணியாளர்களும் இருந்தனர்.மாலையில் நான் விடுவிக்க வேண்டிய தினேஷ் அழைத்து ரத்தாகி போனாதாக சொன்னார். வீட்டிற்கு செல்ல காத்திருந்த அவர்கள் பயண பைகளை படகில் இறக்குவதற்காக காத்திருந்தபோது காப்டன் அழைத்து செய்தியை சொன்னபோது ஏமாற்றமாகி போனார்கள் கப்பலிலிருந்து இறங்க வேண்டியவர்கள்.
கடும் காற்று கராணமாக ஜிப்ரேல்டோர் துறைமுகம் அன்று தற்காலிகமாக மூடப்பட்டது.அதனால் படகில் சென்று கப்பலில் ஏற வேண்டிய நாங்கள் செல்ல முடியவில்லை. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் போனி துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் ஜிப்ரேல்டார் அருகில் வரும்போது தேவையான உணவுபொருட்களை ஏற்றும் திட்டம் இருந்தது.
உணவு பொருட்களை ஏற்றுவதற்காக கப்பலின் வேகத்தை குறைக்கும் போது பணியாளர் மாற்றமும் திட்டமிடப்பட்டிருந்தது.இயற்கை ஒத்துழைக்காததால் கப்பல் நேராக போனி நோக்கி நில்லாமல் சென்றுவிட்டது.
நாங்கள் மூவர் மூன்று தினங்கள் ஜிப்ரேல்டரை முழுமையாக சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் லண்டன்,மும்பை வழியாக திருவனந்தபுரம் போய் வீட்டுக்கு சென்றேன்.
கப்பல் காரனுக்கு இந்த பயணங்கள் தடைபடுதல்,ரத்தாதல் அவ்வப்போது நிகழ்கிறது.
கோவிட் காலத்தில் நடந்ததை கொஞ்சம் விரித்து நாவலாக விரிக்கலாம். சிங்கப்பூர் கெப்பல் ஷிப் யார்டில் ரிப்பேர் பணி முடியும் நாளில் பணியாளர் மாற்றம் இருந்தது. அதற்காக இந்தியாவிலிருந்து ஐந்துபேர் சிங்கை சென்றனர். ஷிப் யார்டில் இருந்து கப்பல் வெளியே வந்து நங்கூரம் பாய்ச்சும் போது பணியாளர் மாற்றதிற்கு தயாராக இருந்தனர்.
கப்பலை தண்ணீரில் இறக்கியபோது ஒழுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கப்பல் யார்டில் கட்டப்பட்டது.சிங்கப்பூர் சட்டம் எழுநாட்களுக்குள் மாலுமிகள் கப்பலில் ஏறவேண்டுமென வகுத்துள்ளது.
விடுதியறையில் தங்கியிருந்த மாலுமிகளை இந்தியாவிற்கு அனுப்பவேண்டும். அதற்கு கோவிட் சோதனை செய்ய சிங்கப்பூரில் அந்த வசதி அப்போது இல்லை.எனவே கோவிட் சோதனைக்கு அவர்களை ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமுக்கு அனுப்பியது.
அங்கே ஒரு விமான நிலைய விடுதியில் மூன்று தினங்கள் தங்கிவிட்டு தில்லிக்கு அடுத்த விமானம். சிங்கையிலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கையில் காலே அருகில் வரும்போது வேகத்தை குறைத்து அவர்களை ஏற்றிவிட புதிய திட்டம் வகுக்கப்பட்டது.
இதியாவில் இருந்து அப்போது இலங்கைக்கு விமானம் இல்லை தில்லியில் இருதினம் தங்கிய அவர்கள் மாலி தீவுக்கு பயணித்தனர். தில்லி குடியுரிமை அதிகாரிகள் அவர்களை மாலி செல்ல அனுமதிக்கவில்லை.
அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மாலி சென்று விடுதியறையில் ஏழு நாட்கள்வரை தங்கியபின் அருகிலுள்ள இலங்கைக்கு விமானம் கிடைத்தது. அங்கும் சில தினங்கள் விடுதியில் தங்கியபின் காலேவில் ஓடும் கப்பலில் சாடி ஏறிக்கொண்டனர். இருபது நாட்களுக்கு மேல் அலைக்கழிக்கபட்டு கப்பலில் இணைந்தனர்.
நான் பதினைந்தாம் தேதி அதிகாலை திருவனந்தபுரத்திலிருந்து விமானம் ஏறி தோஹா வழியாக ஹூஸ்டனுக்கு இருபத்தி ஒரு மணிநேரம் பயணம் செய்து இறங்குகையில் இங்கு பதினைந்தாம் தேதி மாலையாக இருந்தது.
கப்பலிலிருந்த மோட்டார் மேன் சந்தோஷ் வந்துவிட்டோம் காலையில் நங்கூரம் பாய்ச்சுவோம் சந்திப்போம் என போனில் அழைத்து சொன்னார்.
கப்பல் ஹூஸ்டன் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்றது.வெள்ளியும்,சனியும் தகவல் ஏதும் இல்லை.உண்பதும்,உறங்குவதும் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை.
ஞாயிறு காலை ஹூஸ்டன் முகவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கப்பல் துறைமுகம் வருவது ரத்தாகிவிட்டது,வேறு துறைமுகம் ஏதும் உறுதியாகவில்லை,தகவலுக்காக காத்திருக்கிறோம் என மரியானா என்பவர் பதிலனுப்பினார்.
கப்பலிலிருந்து சந்தோஷ் திங்கள்கிழமை தகவல் வரும் வாய்ப்பு உள்ளதாக சொல்லியிருந்தார். மாலை ஐந்துமணிக்கு கப்பல் நங்கூரம் உருவப்பட்டு மெக்ஸிகோ நோக்கி நகர்வதாக சொன்னார்.
மாலையில் மரியானாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கப்பல் புறப்பட்ட விசயத்தை சொல்லி, மேலதிக தகவலுக்காக காத்திருப்பதாக சொன்னார்.
எனது மும்பை அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். கொஞ்சம் பொறு,மிக விரைவில் பதிலளிகிறேன் என்றார் எனது மேனேஜர் தர்சனா.
ஒரு முழு நாள் தாண்டிய பின்பும் ஒரு தகவலும் வரவில்லை.மெக்சிகோ சென்று கப்பலில் ஏறுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் செய்ய முடியும் என்றால் அங்கு சென்று பணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
கப்பலுக்கு சரக்கு ஏற்றுவதற்கான எந்த ஆணையும் இதுவரை உறுதியாகவில்லை.அடுத்த என்ன நடக்கும் என்பது தெரியாமலே விடுதியறையில் நாட்கள் தொடர்கிறது.
20-jan-2026,
நாஞ்சில் ஹமீது.










No comments:
Post a Comment