Thursday, 15 January 2026

பசிபிக் சக்சஸ்

    


  இம்முறை விடுமுறை நீண்டு விட்டது. ஐந்தரை மாதங்கள்.

சம்பளமில்லாமல் விடுமுறை நாட்களை கடத்துவது கொஞ்சம் கடினம் தான்.

அக்டோபர் மாதம் முதல்  பணியில் இணைய தயாராக இருக்கிறேன் என்று விருப்பத்தை சொல்லியிருந்தேன்.

பல முறை அழைத்தும் காத்திருக்க சொன்னார்கள்.

திங்கள் கிழமை மதியம் பால் காய்ச்சும் புதிய வீடு ஒன்றுக்கு சென்று மட்டன் பிரியாணி உண்டபின் வீட்டை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மொபைல் அடித்த ஒலி என் மேனேஜர் தர்சனாவின் அழைப்பு.

"ஷாகுல் நாளை மெடிக்கல் டெஸ்ட்க்கு போக முடியுமா"

"தேதி என்ன, எந்த கப்பல்"என கேட்டேன்.

"பசிபிக் சக்சஸ், இரண்டே நாட்களில் செல்ல வேண்டியிருக்கும்".

அன்று மாலை தர்சனா மீண்டும் அழைத்து "12 மணிநேரம் எதுவும் உண்ணாமல் பாஸ்டிங்கில் செல்ல வேண்டும், நேரம் குறைவாக இருக்கிறது " என்றார்.

மருத்துவ சோதனை பாசாகமல் போனால் வேறு ஒருவரை தயார் செய்ய முடியாமல் போகும்.

செவ்வாய் கிழமை தூத்துக்குடி சென்று மருத்துவ சோதனை முடியும் முன்பே எனது விமான சீட்டை அனுப்பி விட்டார்கள்.டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் செல்ல வேண்டும். 

(எனது நூல் வந்துள்ளது. கண்களால் பார்க்காமல் ,கைகளால் தொடாமலே சென்றே ஆக வேண்டிய கட்டாயம். இன்னும் ஒரு வாரம்....  இருந்து விட்டு போக மனம் ஏங்குகிறது.)


செவ்வாய் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து இறங்கி வடசேரி பள்ளியில் கடமையான அதிகாலை ஃபஜர் தொழுகையை நிறைவேற்றியபின் பேருந்து ஏறினேன்.9 மணிக்கு தூத்துக்குடி ரோச் காலனியில் உள்ள பாலாஜி மெடிக்கல் சென்றருக்கு போய்விட்டேன்.

மருத்துவ சோதனை முடிந்து நாகர்கோவில் வரும்போது மாலை 5 ஐந்தரை மணி.7 மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீடு சென்று சேர்த்தேன்.

புதன் கிழமை காலை விடுபட்ட சாதனங்களை வாங்கி வந்தேன். மாலை அசர் தொழுகைக்குப்பின் முடி வெட்டி தயார் ஆனேன். நண்பர் ஸாம் மனைவியுடன் வந்தார். உம்மா, சகோதரி அஜிதா,அஜிதாவின் பேத்தி பிதா பசீரா மைனியும் வந்திருந்தனர்.

 கப்பலிலிருந்து மோட்டார் மேன் சந்தோஷ் இரண்டு தொப்பி வாங்கி வர சொன்னார். மகன் ஸாலிமிடம் வாங்கி வர சொன்னேன்.

 சுனிதாவின் வாப்பா, உம்மா, அக்கா சமீலா, மச்சான் கபீர்,தங்கை சகிலா, மகள் பஸீகா, ஆதில் வீட்டிற்கு வந்திருந்தனர். இரவுணவாக கோழி குழம்பு வீட்டில் சமைத்து  இடியாப்பம், பரோட்டாவும் எதிர் வீட்டில் வாங்கி கொண்டோம்.

நான் குடியிருக்கும் பகுதியில் நடை பயிற்சி செய்யும் நண்பர்கள் ஜெய்லானி,முபாரக், ரோஷன் நியாஸ், ஷாகுல், செய்யது ஆகியோரும் இரவு 10 மணிக்கு இல்லம் வந்து சந்தித்து பயணத்திற்கு துவா செய்து சென்றனர்.

இரவு 11 மணிக்கு கார் வந்தது. பாஸ்கர் அண்ணா "எந்த ஏர்போர்ட் போன ட்ரிப் போல கொளப்பம் இல்லியே" என சிரித்தார்.சுனிதாவும், சல்மானும் என்னுடன் வந்து விமான நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

  திருவனந்தபுரம் அதிக கூட்டம் இல்லாத சிறிய விமான நிலையம் .குடியுரிமை,செக்யூரிட்டி செக் முடித்து மிக எளிதாக  வாயிலுக்கு வந்தேன்.


E immigration Link மேலே உள்ளது 

இந்தியாவில் இப்போது fast track e immigration  துவங்கபட்டுள்ளது. அதற்காக பதிவு செய்து ஒப்புதல் பெற்றேன். அடுத்த முறை முதல் இன்னும் எளிதாக விரைந்து செல்ல முடியும்.பாஸ்போர்ட் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் மற்றும் ஒரு போட்டோ தனித்தனியாக அப்லோட் செய்தால் போதும். உங்கள் படிவம் ஏற்கப்பட்டது என்ற ஒப்புதல் வந்தபின் கைரேகை பதிவு செய்யதால் போதுமானது.

 தோகா செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் சரியாக அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. தோகாவில் ஐந்தே முக்காலுக்கு இறக்கி விட்டார்கள். அடுத்த விமானம் 8 மணிக்கு. நண்பர் திரைப்பட இசையமைப்பாளர் ராலே ராஜன் சென்னைலிருந்து வரும் விமானம் ஆறே காலுக்கு இறங்க வேண்டும். கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.

ஆறரை மணி வரை அவரை காணாததால் நான் சென்று விட்டேன். தோகா Hamad international airport கொஞ்சம் பெரிய விமான நிலையம். எனக்காக வாயில் e கேட்டுக்கு ரயில் பிடித்து செல்ல வேண்டியிருந்தது.





இங்கே மரைனர் lounge இருக்கிறது.கப்பல் பணியாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். உணவு பானங்கள்,smoking room, குளியல் அறை என வசதிகள் உள்ளன.

 காலை உணவாக பால் ஊற்றி தேன் கலந்து சீரியல்ஸ் , மபின்,குரோசென்ட் மற்றும் குடிக்க ஆப்பிள் ஜுஸ் எடுத்துக்கொண்டேன்.



ஹூஸ்டன் செல்லும் அடுத்த விமானத்துக்க e gate சற்று தொலைவில் இருந்தது நேரம் குறைவாக இருந்ததால் வேகமாக சென்றேன்.

டூட்டி ப்ரீ கடையில் 25 டாலர் மதிப்பில் 1 kg பேரீச்சம் பழம் வாங்கி கொண்டு கத்தார் ஏர்வேஸ் வழங்கும் பிரிவில்லேஜ் அட்டையில் கழித்து கொண்டேன். கேசியர் மோனிஷா "ஸார் மலையாளி யா ணோ" என கேட்க தவறவில்லை.

  ஹூஸ்டன் செல்லும் விமானம் டோகாவிலிருந்து 8 மணிக்கு பறக்க தொடங்கியது. 16 மணி நேரம் பயணம் முப்பத்தி ஆறாயிரம் அடியில் பறந்துகொண்டிருக்கிறது. சாப்பிட ஏதாவது தந்து கொண்டே இருக்கிறார்கள்.




காலையில் இடியாப்பம் சட்னி, சாம்பார், சிக்கன் சாசேஜ், ரைஸ் வித் சிக்கன் கறி இருக்கிறது என்றாள் கல்கத்தாவின்  பணிப்பெண் பிரியங்கா. இடியாப்பம் பிடிக்கும் சட்னி சாம்பார் அதற்கு  உகந்தது இல்லை. சோறும் சிக்கன் கறியும் வாங்கி கொண்டேன். 

அன்னம்

வானத்தில் பறக்கும் போதும் விருப்ப உணவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றி. மும்பை நாட்கள் நினைவுக்கு வந்து மறைந்தது.



மூன்று மணி நேரம் அமர்ந்தே தூங்கினேன் .7 மணி நேரம் கழித்து சான்விட்ச் ஒன்று தந்தார்கள். இனியும்  ஏழரை மணி நேர பயணம் இருக்கிறது.

 விமானத்தில் இலவச இணையம் இருக்கிறது. முப்பத்தி ஆறாயிரம் அடி உயரத்தில் பறக்கும்போதும் சுனிதாவிற்கும்,நண்பர்களுக்கும்  வீடியோ காலில் அழைத்து பேச முடிந்தது. 

 சுனிதாவிடம் " technology எங்க போயிட்டு பாத்தியா"

"அப்டியே ஜன்னலை திறந்து காட்டுங்கோ" என்றாள்.

" ஜன்னல் தொறக்க முடியாதுல்லா  உங்க டெக்னாலஜி வேஸ்ட் ".

நடு வானில் இருந்து பேசுவது எனக்கு அதிசயம் தான்.

தூரன் விருது பெறுபவரை இனி ஆகாயத்தில் இருந்தும் வாழ்த்து கூற ஒரு வாய்ப்பு உள்ளது.

தோகா - ஹூஸ்டன் செல்லும் விமானத்தில் இருந்து மொபைலில் எழுதி வானில் பறந்தபடியே இதை வலையேற்றுகிறேன்.

நாஞ்சில் ஹமீது.

15 jan 2026

No comments:

Post a Comment