Saturday, 17 January 2026

ஹூஸ்டனில்

     



     பதினாறு மணிநேர பயணத்திற்குப்பின் மிக பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார் பைலட்.ஹூஸ்டனில் அதிக குளிரில்லை. நான் குளிருக்கான ஆடைகளை பெட்டியில் போட்டு லக்கேஜில் போட்டிருந்தேன்.

   இமிகிரேஷனில் மிக நீண்ட வரிசை குறைவான கவுண்டர்களே இருந்ததன.மூன்றரை மணிக்கு விமானம் தரையிறங்கியும் ஐந்து மணிக்கு தான் வெளியே வந்தேன்.

   இமிகிரேஷன் அதிகாரி "எங்கே செல்கிறாய்" எனக்கேட்டார். "கப்பலில் இணைய" என்றேன். 

"முன்பு இங்கே வந்திருக்கிறாயா"?

"பலமுறை" என்றேன்.

  போட்டோ எடுத்துவிட்டு அனுப்பிவைத்தார்.பாஸ்போர்டில் முத்திரை பதிக்காமலே.



   விமான நிலையத்தின் அருகிலேயே ஹில்டனின் டபுள் ட்ரீ விடுதியில் ஐந்தாவது மாடியில் அறை.ஐந்தே முக்காலுக்கே கதிரணைந்து விட்டது.குளித்து மக்ரிப் தொழுதுவிட்டு காத்திருந்தேன்.உடனே தூங்கிவிட்டால் இரவில் தூக்கம் வராது ஜெட் லாக்கை விரட்ட இரவில் தூங்கினால் தான் பகலில் விழிக்க முடியும்.



   எட்டரை மணிக்கு மேல் உணவுண்டு வந்தேன்.நீயூ யார்க் ஸ்டேக் ட்ரை பண்ணினேன். ஒன்பதரைக்கு தூங்கினேன் அதிகாலை மூன்றரைக்கே விழித்துகொண்டேன்.   ஆறேகாலுக்கு மேல் தான் அதிகாலை பஜர் தொழுகை. ஏழே காலுக்கு சூரிய உதயம். தொழுகைக்குப்பின் காலை நடை சென்றேன்.




   சாலையில் மனிதர்களே இல்லை வாகனங்கள் விரைந்து கொண்டே இருந்தது. வானில் பறவை கூட்டங்கள் போல விமானங்கள் மேலெழுந்து பறந்துகொண்டே இருந்தது. 

  ஒரு மணிநேர நடைக்குப்பின் அறைக்கு திரும்பிவந்து குளித்து காலைவுணவக்கு சென்றேன். காலை பதினோரு மணிக்கு தூக்கம் அழுத்தியது. பகலில் தூங்க கூடாது என்றிருந்தேன். ஆனால் முடியவில்லை படுக்கையில் சரிந்து விழுந்தேன்.

   அறைக்கதவை தட்டும் சப்தம் கேட்டு விழித்தேன் அறையை சுத்தம் செய்யும் ஒரு குண்டான ஆங்கிலம் அறியாத பெண் நின்றுகொண்டிருந்தாள்.பின்னர் என சொல்லிவிட்டு மணியை பார்த்தேன் பகல் மூன்று மணி அவரசமாக லுகர் தொழுதுவிட்டு நடக்க சென்றேன். ஒருமணிநேரம் நடந்துவிட்டு வந்து அஸர் தொழுதபின் அமர்திருந்தேன்.

   மக்ரிப் தொழுகை முடிந்து மீண்டும் தூங்கினேன்.மதியம் சாப்பிடவில்லை இருந்தும் பசியில்லை .இரவுணவுக்கு சென்றேன். Avocado Salmon Salad  மற்றும் Awlins Salmon Croquettes with Creole Shrimp Sauce இரு பிளேட்டுகள் வாங்கி சாப்பிட்டேன் .கொஞ்சம் அதிகம்தான். பதினோரு மணிக்கு தூங்கி அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு தட்டியது.

   ஐந்தரை மணிக்கு சுக்கிரி மீட்டிங்கில் கலந்துகொண்டேன்.எட்டு மணிக்குமேல் குளித்து வெளியே சென்றபோது நல்ல குளிர் இன்று வெயில் வந்தபின் நடக்க செல்லலாம் என உள்ளே வந்து காலை உணவு சாப்பிட்டேன்.இன்றும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

  இரவு கப்பலில் இருக்கும் மோட்டேர்மேன்  சந்தோஷ் இன்னும் செய்தி ஏதும் வரவில்லை என்றார்.கப்பல் இன்னும் துறைமுகம் வரவில்லை. நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

  இனி திங்கள்கிழமை தான் தகவல் கிடைக்கும்.கப்பல் காரனுக்கு கப்பல் தான் வீடு. விடுதியறையில் இருந்தால் சம்பளமும் கிடையாது. ஒரு சிறு அலவன்ஸ் மட்டுமே.சீக்கிரம் கப்பலுக்கு போய்விட்டால் மீட்டர் ஓட துவங்கிவிடும்.நாளை ஞாயிறும் இங்கே விடுதியில் இருக்கவேண்டி வரலாம்.

நாஞ்சில் ஹமீது,

17 - 01- 2026


No comments:

Post a Comment