Wednesday, 9 July 2025

கப்பல்காரனின் ஞாயிறுகள்

   


 

 

உலகம் முழுவதும் ஞாயிறு என்பது ஓய்வு நாள். அதிகாலை சுனிதாவை அழைத்தபோது தொழுகை முடித்து குர்ஆன் ஓதி கொண்டிருப்பதாக சொன்னாள். பள்ளி, கல்லூரி விடுமுறை ஆதலால் மகன்கள் இன்னும் தூங்கி எழுந்திருக்கவில்லை.

இரவில் தவறவிட்ட அழைப்பை அழுத்தியபோது நண்பர் மதன் குழுவாக பறவைபார்த்தலுக்கு ஒரு ஏரியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சொன்னார். ஞாயிறான ஓய்வு நாளில் நண்பர்கள் ஓய்வாகவும், பயனுள்ள வகைகளில் கழிக்கவும் செய்துகொண்டிருந்தார்கள்.

கப்பல்காரனுக்கு ஓய்வென்பது வீட்டிற்கு வந்தபின்தான். ஞாயிறுகளில் அரிதாக அரை நாள் விடுமுறை கிடைக்கும் சாத்தியம் உண்டு. துறைமுகம் அல்லது ஏதாவது அவசர வேலையென்றால் ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் பணி நாளாக அமைந்துவிடும்.

கடந்த ஞாயிறில் அமெரிக்காவை  நெருங்கியிருந்தோம் (29 June 2025). முப்பதாம் தேதி காலை ஹூஸ்டன் அருகில் நங்கூரமிட்டு துறைமுக அழைப்பிற்காக காத்திருக்கும் உத்தரவு வந்தது. ஜப்பானிலிருந்து ஜூன் நான்காம் தேதி துவங்கிய பயணம் முடிவுக்கு வந்தது.

ஜூலை நான்காம் தேதி கரையணைந்து சரக்கு ஏற்றும் பணி துவங்கும். அதுவரை மூன்று தினங்கள் காத்திருத்தல் இருந்தது. இங்கே சரக்கு ஏற்றும் குழாய்களில் சிறு மாற்றம். நான்கு குழாய்களை டெர்மினலின் வசதிக்கேற்ப மாற்றியாக வேண்டும். சனிக்கிழமை அந்த பணியை துவங்க சொன்னார் முதன்மை அதிகாரி. அன்று முடியவில்லை என்றால் மறுநாள் ஞாயிறும் தொடர்ந்து செய்து முடிக்கவேண்டும் என்றார்.

நான்கு நாட்கள் நங்கூரமிட்டு காத்திருக்கும் வேளையில் குழாய்களை மாற்றும் பணிகளை செய்யலாமே எனக் கேட்டேன். நங்கூரமிட்டு காத்திருக்கும்போது நாம் தயாராக இருக்கிறோம் என டெர்மினலுக்கு சொல்லி விடுவோம்எனவே அவர்கள் அழைத்தால் உடனடியாக செல்ல வேண்டும். எனவே குழாய் மாற்றுதலை தள்ளி போடமுடியாது.

சனிக்கிழமை தொடங்கி மாலை மூன்றரை மணிவரை வேலை செய்தோம். கடும் வெயில் நாளாக இருந்தது. மாதந்திர பாதுகாப்பு கூட்டம் மாலையில் இருந்ததால் மூன்றரை மணிக்கு குழாய் மாற்றுதலை பாதியில் நிறுத்தினோம்.

மறுநாள் ஞாயிறு காலை துவங்கி மதியம் நிறைவு செய்தோம். அந்த குழாய்கள் வழியாக மைனஸ் 40 டிகிரியில் புரொப்பேன் திரவம் வரும். எனவே அதில் ஒழுகல் இருக்கிறதா என சோதனை செய்யும் பணியை மதிய உணவு இடைவேளைக்குப்பின் செய்து முடிக்கையில் மாலை நான்கு மணியாகி விட்டது. ஓய்வு நாள் இல்லாமல் போயிற்று.


ஹூஸ்டன் கோடையில் பூத்து குலுங்கும் மரங்கள் 


மூன்றாம் தேதி  நள்ளிரவில்  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ப்ரீ போர்ட் துறைமுகம் உள்ளே வாருங்கள் என அழைத்தது. நான்காம் தேதி முழுநாளும் ஐந்தாம் தேதி காலை எட்டுமணிவரை சரக்கு நிறைக்கும் பணி நடந்தது. மொத்தம் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூறு மெட்ரிக் டன் ப்ரோப்பேன் கப்பலின் நான்கு தொட்டிகளில் நிறைக்கும் பணி காலை எட்டரைக்கு முடிந்தது. துறைமுகத்தில் ஆறு மணி நேர பணி ஆறு மணி நேர ஓய்வு என கணக்கு இருந்தாலும், பதினான்கு முதல் பதினேழு மணிநேரம் வரை பணி செய்தாக வேண்டும். தூங்க வேண்டிய சிறு ஓய்வில் கரைக்கு சென்று ஊர் சுற்றி வரவேண்டும். ஆனாலும் (05-June-2025) சனிக்கிழமை மதியம் ஒன்றரைக்கு  பணிகள் முடிந்து கப்பல் துறைமுகத்திலிருந்து புறப்பட வேண்டி இரண்டரை மணிக்கு பைலட் வருவது உறுதியானது.

கப்பல் புறப்படும் தருவாயில் எனக்கு பணி இல்லை. காலையும், மதியமும் சாப்பிடவும் நேரமில்லாமல் சரக்குநிறைக்கும் பணியில் இருந்ததால் ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்து குளித்து கொஞ்சம் சாதமும் கூட்டும் சாப்பிட்டுவிட்டு டி வி அறையின் இணையத்தில் செய்திகளும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில் யூனிபைடு விஸ்டம் காணொளி ஒன்றை பதினைந்து நிமிடம் கேட்டபின் இரண்டரைக்கு அறைக்கு வந்து தூங்கினேன்.



கடந்த  நாற்பத்தி எட்டு மணிநேரத்தில் ஐந்தரை மணிநேரம் மட்டுமே உறக்கம் கிடைத்தது. இரவுணவுக்கு என்னை எழுப்ப வேண்டாம் என சமையற்காரர் பிராயனிடம் சொல்லியிருந்தேன். நான்கரைமணிக்கு கனவிலென போன் ஒலித்தது. முதன்மை அதிகாரி “கம்பிரசர் ஒண்ணு ஸ்டார்ட் பண்ணனும்” என்றார்.

ஆழ்ந்த உறக்கம் கலைந்தது. சனிஇரவு பதினோரு மணிக்குமேல் உறங்கி காலை தொழுகைக்கு தான் விழித்தேன். நன்றாக உறங்கி உற்சாகமாக விழித்தேன். ஞாயிறு ஓய்வு உறுதியாகியிருந்த உற்சாகம். காலையில் கம்பிரசர் அறைக்கு ரவுண்ட்ஸ் மட்டும் போய்விட்டு லாக் புக் எழுத வேண்டும். அதிகபட்சம் இரண்டு மணிநேரம்தான். இரு தினங்களாக கப்பல்காரன் டைரியின் தொடர் ஒரு வரி கூட எழுதவில்லை.

இன்று குறைந்தது மூன்று கட்டுரைகளாவது எழுதிவிடவேண்டும் என்ற உறுதியை காலையில் எனக்கு நானே சொல்லிகொண்டேன். எட்டுமணிக்கு மேல் கம்பிரசர் அறைக்கு சென்று வேலைகளை முடித்து லாக் புக் எழுதி பத்துக்குள் அறைக்கு வந்தேன். உடல் முழுவதும் நல்லெண்ணெய்  தடவி அமர்ந்ததும் இஞ்சின் பிட்டர் ராஜேஷ் வந்தார். “ஷாகுல் பாய் கொஞ்சம் சைடு மட்டும் முடி வெட்டித்தா” என.

கடந்த கப்பலிலும், இங்கும் முடி வெட்ட வேறு நபர்கள் இருந்ததால் எனக்கு வாய்ப்பே இல்லை. ராஜேசுக்கு முடி வெட்டியபின் மோட்டர்மேன் சேத்தன் வந்தார் அறைக்கு ஹிந்தி சினிமா வேண்டுமென. இம்முறை எனது ஹார்ட் டிரைவ்க்கூட கொண்டு வரவில்லை இருந்தாலும் கணினியில் தேடியபோது சில தமிழ் சினிமாக்கள் இருப்பது எனக்கே இப்போதுதான் தெரிந்தது.

சேத்தன் நீண்டநேரம் தனது மொபைல் போனில் இருந்த நிறைய போட்டோக்களை என்னிடம் காட்டி பேசிக்கொண்டே இருந்தார். மதிய உணவுக்கு மணியடித்தபின் தான் கிளம்பி சென்றார். குளித்து உணவுண்ண சென்றேன். கடந்த ஞாயிறில் இறால் பிரியாணியின் ருசியில் சாப்பிட்ட ரெண்டாவது பிளேட் பிரியாணியால் இரு தினங்கள் குடல் வலித்துக்கொண்டே இருந்தது. அந்த வலி நினைவில் இருந்ததால் கவனமாக குறைவாக சாப்பிட்டேன்.

அறைக்கு வந்து நிழல்களுடன் ஆடியதை ஆசிரியரின் தளத்தில் வாசித்துகொண்டிருந்த நேரம்  தூக்கம் அழுத்தியது. இன்று பகலில் கண்டிப்பாக தூங்க கூடாது எழுதாமல் விட்ட கட்டுரைகளை எழுதவேண்டுமென காலையில் கண் விழித்ததுமே உறுதி கொண்டிருந்தேன். நாற்காலியிலிருந்து எழுந்து ஒளு செய்துவிட்டு லுகர் தொழ ஆரம்பித்தேன்.

மூன்றாவது ரக்காத்தில் கதவு தட்டும் ஒலி. தொழுகை முடித்து கதவை திறந்தால் காடட்  நாசிம் நின்றுகொண்டிருந்தான். “போன் ரிசீவர் சரியாயிட்டு வெச்சிட்டு, சிசிஆர் ல விழிக்கனும்” என்றான்.

இப்ப என்ன அர்ஜெண்டு என கார்கோ கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தேன். “உடனே வாங்க,ஒரு வேல வந்துட்டு கம்பிரசர் ரூம்ல” என்றார் முதன்மை அதிகாரி.

கடந்த மே மாதம் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு செல்லும்போது கம்பிரசர் ஒன்று பழுதாகி அதை சரி செய்யும் முயற்சியில் முடியாமல் போகவே அடுத்த கட்ட செயல்களுக்கு முன் கப்பல் மேனேஜருக்கும், முதலாளிக்கும் விசயத்தை எடுத்து சொல்லி அனுமதி வாங்கும்போது கப்பல் ஜப்பானை அடைந்து சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு புறப்பட்டது.

அந்த பயணத்தில் பழுதான கம்பிரசரை சரி செய்தோம். அதில் பேரிங்கை குளிர்விக்கும் எண்ணை சூடாகும்போது  குளிர்விக்கவும், கடும்குளிரில் எண்ணெய் உறைந்துவிடாமல் இருக்க சூடாக்கவும் (glycol) கிளைக்கால் எனும் திரவம் பேரிங்கை சுற்றி ஓடும் எண்ணைக்கு மேல் பாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும். அந்த குழாய் உடைந்து கிளைக்கால் தொட்டி காலியாகிவிட்டது. கம்பிரசர் அறை கிளைக்கால் பிசிறிஅடித்து தரை முழுவதும் நிரம்பியது.

அமெரிக்காவில் மொத்தம் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூறு மெட்ரிக் டன் புரோப்பேன் திரவத்தை நிரபிவிட்டு புறப்பட்ட மறுநாள். (fully loaded vessel) சரக்கு தொட்டியின் அழுத்தத்தை குறைக்க கம்பிரசர்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியது அவசியம். கிளைக்கால் தொட்டி காலியானதால் தானாகவே கம்பிர்சர்கள் நின்றுபோயிருந்தது.

சரக்கு தொட்டிகளின் அழுத்தம் கூடிக்கொண்டே இருக்கும். அழுத்தம் அதிகரித்து சரக்கு தொட்டி வெடித்து சிதறிவிடாமல் இருக்க ரிலீப் வால்வுகள் உண்டு (சமைக்கும் போது பிரஷர் குக்கர் விசில் வருமே அது போல). கம்பிரசர்களை உடனடியாக இயக்கி சரக்கு தொட்டிகளின் அழுத்தத்தை குறைக்க வேண்டிய அழுத்தத்தில் முதன்மை அதிகாரியும் காப்டனும் இருந்தனர்.

நானும் காஸ் இஞ்சினியரும் இணைந்து கப்பலின் எண்ணைகள் கெமிக்கல்கள் வைக்கும் அறையிலிருந்து பிளாஸ்டிக் வாளிகளில் கிளைக்காலை கொண்டு சென்றோம். உதவிக்கு முதன்மை அதிகாரியும், காடட்  நாசிமும் வந்தனர்.

மோட்டார் அறையிலுள்ள கிளைக்கால் தொட்டியில் நூற்றியைம்பது லிட்டர் கிளைக்காலும், நூற்றி தொண்நூறு லிட்டர் தண்ணீரும் நிரப்பியபின் கிளைகால் பம்ப்பை இயக்கி கம்பிரசரை இயக்கினோம். உடைந்த குழாயை சரிசெய்வதை மறு நாளைக்கு தள்ளி வைத்தோம்.

பணி முடியும்போது மாலை ஐந்து மணியாகிவிட்டது. அட்லாண்டிக் கடலில் இப்போது நல்ல வெப்பம். உடல் களைத்து அறைக்கு வரும்போது ஞாயிறு முடிந்துவிட்டது.

நாஞ்சில் ஹமீது,

09-July-2025.

No comments:

Post a Comment