வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் அலுவகத்துக்கு அடுத்து எப்போது தயார் என சொல்லவேண்டும்.என் கப்பல் நிறுவனத்துக்கு அழைத்து அடுத்தமுறை கார் கேரியர் கப்பலில் அனுப்புங்கள் எல்பிஜியில் செல்ல விருப்பம் இல்லை என்றேன். என்ன பிரச்சனை என கேட்ட மேனேஜர் அனிதா தாக்கூரிடம் சாப்பாடு சரியில்லை என சொன்னேன்.
டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்த மறுவாரமே கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் இரு தினங்கள் கலந்துகொண்டேன்.வண்ணதாசன் எனும் மூத்த எழுத்தாளருக்கு விருது வழங்கபட்டது.
விழா முடிந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் காரில் ஊட்டி குருகுலம் சென்றுவந்தோம்.சக்தி கிருஷ்ணன்,செல்வராணி என விஷ்ணுபுர வட்டத்தை சார்ந்தவர்கள் அறிமுகமானார்கள்.
கோவையில் இருந்து திரும்பியதும் தம்பி ஷேக்,மாமா மகன் ஹக்கீம் இணைந்து மூணார் மற்றும் கொச்சிக்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்திருந்தனர்.இரு கார்களில் மூன்று குடும்பங்களாக ஐந்துநாள் குடும்ப சுற்றுலா சென்று வந்தோம்.
எனது தாய் பீமா மெக்கா சென்று உம்ரா கடமையாற்ற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி உம்ரா செல்லும் குழுவுடன் இணைந்து செல்ல பயணத்தேதி உறுதியாகியிருந்தது.
நான் சுனிதா மற்றும் சுனிதாவின் சகோதரிகள் அழகியமண்டபம் ஊரில் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது சுனிதா “நாலு ஆம்ள புள்ளையள பெத்த தள்ளய தனியா உம்ராக்கு அனுப்புதியோ,நீங்கோ தள்ளக்க கூட போலாம் நல்ல சான்ஸ் வேற புள்ளைகள் ஊர்ல இல்ல” என சொல்ல. சுனிதாவின் அக்காவும் “உம்மாக்க கூட நீங்கா போங்கோ” என்றனர்.
எனது தாயின் பயணத்திற்கு பதினைந்து
தினங்களே இருந்தது. ட்ராவல் ஏஜெண்டை அழைத்து விசாரித்தேன் இன்றே பாஸ்போர்ட்
மற்றும் புகைப்படங்கள் தந்தால் உங்கள் பயணம் உறுதியாகும் தாமதிக்கவேண்டாம் என
கூறினார்.
with my masters
என் சகோதரி அஜிதாவை அழைத்து “வருகிறாயா”? எனேக்கேட்டேன். பிப்ரவரி ஆறாம் தேதி தாய்,சகோதரியுடன் புறப்பட்டு மெக்காபோய் சேர்ந்தோம்.முதல் இறையில்லமான காபாவின் முன் இறைவனிடம் என்னை ஒப்புக்கொடுத்து நிற்கையில் உறுதியானது அது எனக்கான அழைப்பு என. உம்ரா கடமையை நிறைவேற்றி ஏழு நாட்கள் மக்காவில் தங்கியிருந்துவிட்டு இறைதூதர் முகம்மது நபி அவர்கள் வாழ்ந்த வீடு,பள்ளிவாசல் (மஸ்ஜிதுல் நவமி) இருக்கும் மதீனாவில் ஏழு நாட்கள் இறைவணக்கங்கள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனது நல்லூழ்.அங்கிருந்த நாட்களில் இறை வணக்கத்தை தவிர வேறேதும் எண்ணமேயில்லை.
எப்போதும் நன்றியுடனும்,என் ஆழ் மனதில் நான் மெக்கா சென்று வந்தவன் எனும் உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. எனது யோகா குரு ராதாகிருஷ்ணன் ஐயாவும்,ஆசான் ஜெயமோகனும் என் இல்லம் வந்து என்னை வாழ்த்தி அனுப்பிவைத்திருந்தனர்.
![]() |
| பதினாறு கவனகர் |
மெக்கா சென்று திரும்பியபின் ஓய்வாக படுத்திருந்த வேளையில் மெக்கா செல்லும் முதல் எண்ணத்தை விதைத்தவர் யார் எனும் நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
2010 இயமலை பயணத்தில் நைனிடாலில் தங்கியிருந்தபோது எங்களை அழைத்துசென்று குரு பதினாறு கவனகர் நடத்திய சத்சங்கத்தில் காபாவை பற்றி கூறினார். அவருக்கு நான் மெக்காவில் காபா சென்றுவந்ததை சொல்ல வேண்டும் என உடனே போனில் அழைத்தேன். “ஷாகுல் நான் இப்ப தக்கல பீரப்பாவ பாத்துட்டு நாரோல் வந்துட்டுருக்கேன்” என்றார். அவரையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
எனது சகோதரியின் மகள் திருமணம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிச்சயிக்கபட்டிருந்ததால்,நான் சீக்கிரமே கப்பலுக்கு போய்விட்டு செப்டம்பரில் விடுறைக்கு வருவதற்காக பிப்ரவரிமாத இறுதியிலேயே கப்பலுக்கு போகும் விருப்பத்தை சொல்லியிருந்தேன். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலும் பணியில் இணைவதற்கான அழைப்பு வராததால் கொச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டேன். கணினியில் பார்த்துவிட்டு பல்க் காரியர் வகை கப்பலில் மே மாதம் உனக்கான தேதி என்சொன்ன்னார். கப்பல் காரனுக்கு விடுறையில் வீட்டில் இருக்கையில் சம்பளம் கிடையாது. வருமானமே இல்லாமல் ஆறுமாதங்கள் தாக்கு பிடிப்பது கடினம்.
மும்பையை தொடர்பு கொண்டு கேட்டேன் “எல்பிஜி யில் இனி போக மாட்டேன் எனச்சொல்லிவிட்டாய் கார் கேரியரில் இப்போது வாய்ப்பு இல்லை காத்திருக்க வேண்டும்” என்றார் அனிதா தாக்கூர்.
“ஐ ஆம் ரெடி டு ஜாயின் எனி வெசல்” எனசொன்னேன்.
![]() |
| தஞ்சை வாசகர் சந்திப்பு |
சில தினங்களுக்குப்பின் சென்னை அலுவலக மேலாளர் சுகுமாரன் அழைத்தார். “ஏப்ரல் மாசம் உங்களுக்கு கப்பல் போட்டுருக்கு” எனச்சொன்னார். விடுமறை நீண்டுகொண்டே சென்றதால் மார்ச் மாதம் எழுத்தாளர் ஜெயமோகன் தஞ்சையில் நடத்திய வாசகர் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டேன்.எனெர்ஜி ஒர்பசில் இருக்கும்போது எழுதிய ஈராக் போர்முனை அனுபவங்கள் தொடர் பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் எந்த குபிப்பும் இல்லாமல் நினைவிலிருந்து எழுந்துவந்ததை தொகுத்து எழுதியிருந்தேன். அப்போது என்னுடன் ராக்கில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் கமல்ஹாசன்,முருகனை தேடிச்சென்று சந்தித்தேன். குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஆன்மாக்கள்.
ஏப்ரல் பதினான்காம் தேதி யூஷோ எனும் கப்பலில் இணையசொல்லி விமான டிக்கெட் மின்னஞ்சலில் வந்திருந்தது. என் அலுவலகம் அதை உறுதிசெய்யவே இல்லை. மும்பை அலுவகம் என்னை அழைத்து சன்னி கிரின் எனும் கப்பலுக்கு நாளையே கிளம்பவேண்டும் தயாரா என்றார்.
“ரெடி” என்றேன்.
நாஞ்சில் ஹமீது,
18-july -2025,
sunitashahul@gmail.com




No comments:
Post a Comment