தெமிஸ் லீடர் விடுமுறை நாட்கள்
தெமிஸ் லீடரில் இருந்தபோது வாசிப்பினூடாக அவ்வப்போது எழுதவும் செய்தேன். பேனாவால் காகிதத்தில் நூறு பக்கங்கள் வரை எழுதியிருந்தேன். ஊருக்கு வந்தபின் எழுத்தாளர் ஜெயமோகனை இல்லம் சென்று சந்திக்க தவறுவதில்லை. அவரை சந்தித்த ஒரு மாலை வேளையில் “ஸார் உங்கள ரெண்டு வருசமா வாசிச்ச பொறவு எழுதணும்னு தோணுது” என்றேன்.
| கொல்லிமலை வாசகர் சந்திப்பு |
அவர் “ஷாகுல் நீங்க தான் எழுதணும், எழுதது ரெண்டு விசயத்துக்கு புகழ், பணம் அது ரெண்டாவது, எழுத எழுத நீங்க ரிலாக்ஸ் ஆவீங்க, குடும்பத்த விட்டு தனிமைல இருக்கீங்க, கடும் பணிசூழல், நீங்க எழுதுங்க” என்றார்.
“இப்ப கொல்லிமலையில புது வாசகர் சந்திப்பு வெச்சிருக்கேன் அதுக்கு வாங்க, வரும்போது நீங்க எழுதுனத கொண்டு வாங்க” என்றார். நான் அப்போது காகிதத்தில் எழுதி வைத்திருந்ததை இரு தினங்கள் சிரமப்பட்டு கணினியில் டைப்பிங் செய்து பிரின்ட் செய்து அவரிடம் காண்பித்தேன். கையில் வாங்கினார். அந்த பேப்பரை திருப்பினார். “நல்லா இருக்கு” என்றார். படிக்காமலே நல்லா இருக்குன்னு சொல்கிறார். என்னருகில் இருந்த சுனிதாவும் என்னை திரும்பி பார்த்தாள்.
கொல்லிமலை புது வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டேன். அதன் பிறகு எழுத துவங்கிய எழுத்தாளர் சுரேஷ் பிரதிப், ஈரோடு வக்கீல் கிருஷ்ணன், மீனாம்பிகை, திருமலை, மணிமாறன், மகேஷ், வரதராஜன் என இலக்கிய நண்பர்கள் பலரும் அங்கே அறிமுகமானார்கள். ஈரோடு கிருஷ்ணன் என்னிடம் எனது நான் பணிபுரிந்த ஈராக் போர்முனை அனுபவங்களை எழுத சொன்னார்.
மும்பை அலுவலகம் என்னை எல்பிஜி கப்பலில் தேர்வு செய்திருப்பதாக சொல்லி அதற்கான ஐந்து நாள் வகுப்பு ஒன்றை முடித்து சான்றிதழ் பெற்று ஆவணங்களை தயார்படுத்த சொன்னார் மேனேஜர் அனிதா தாக்கூர்.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் எல்பிஜி வகுப்புக்காக முன்பதிவு செய்திருந்தேன். தேவையான மாணவர்கள் சேராததால் அந்த வகுப்பு ரத்தானதாக வகுப்பு துவங்கும் இரு தினங்களுக்கு முன் அழைத்து சொன்னார்கள். அந்த எல்பிஜி வகுப்புக்கு தகுதியாக ஒரு பயர் பைட்டிங் வகுப்பும் இருந்ததது.
பயர் பைட்டிங் வகுப்பு மட்டும் நடத்துவதாக சொன்னார்கள். உடனடியாக அந்த வகுப்புகள் இருக்கும் கல்லூரிகளை தேடியபோது பாண்டிசேரி கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. வேறு சான்றிதழ்களும் காலாவதி ஆகுவதால் பத்துநாட்களுக்கு மேல் வகுப்புகள் இருந்தது. பாண்டியில் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். ஹீரோயிக் ஏஸில் உடன் பணிபுரிந்த நண்பர் பிரிதிவிராஜ் ஸ்கூட்டர் தந்திருந்தார். அதிகாலை தொழுகைக்குப்பின் ஆறுமணிக்கு அரபிந்தோ ஆசிரமம் சென்று சும்மா அமர்ந்திருப்பேன். ஏழரை மணிக்கி கடற்கரையில் அரை மணிநேரம் காற்று வாங்கி காலாற நடந்து கடல் மணலில் உடற்பயிற்சிக்குப்பின் சிரிப்பு தெரபி செய்யும் குழுவினருக்கு தெரியாமல் அவர்களை பார்த்து சிரித்துவிட்டு அறைக்கு வந்து குளித்து வகுப்புக்கு செல்வேன்.
நான் பைக்கில் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து வந்ததை கண்ட உந்துதலால் நண்பர் ஸாம் பிரின்ஸ் தானும் ஒரு பயணம் போக வேண்டுமென திட்டமிட்டு டொயட்டா அட்லஸ் எனும் செகண்ட் கார் ஒன்றை வாங்கி நான்கு பேர்களாக சீன எல்லையான திபெத் வரை பதினைந்து நாட்கள் சென்று வந்தார்.
நானும் குடும்பத்துடன் சில
பயணதிட்டங்கள் வைத்திருந்தேன். திற்பரப்பு அருவியும், கன்னியாகுமரியும் எப்போதும்
செல்வதுதான். இம்முறை நீண்ட பயணங்களை திட்டமிட்டேன். நண்பர் ஸாம் தனது காரை எடுத்து
செல்லுமாறு வேண்டினார்.
பாண்டியில் இருந்து வந்த மறுநாள் சுனிதா மகன்களுடன் நண்பர் ஸாமின் காரில் ஆழியாறு அறிவுத்திருக்கோயில், பரம்பிக்குளம் டாப் ஸ்லிப் அங்கிருந்து கோவை வழியாக ஊட்டிக்கு ஒரு குடும்ப பயணம். மரைன் கல்லூரி சான்றிதழ்கள் அனுப்பியபின் கொச்சி சென்று அரசின் கப்பல்துறை அலுவலகத்தில் விண்ணபித்து எல்பிஜி கப்பலுக்கு வேண்டிய ஆவணங்கள் பெற்றுவந்தேன்.
ஒரு மாதத்திற்குப்பின் ஏற்காடு மலைக்கு மீண்டும் ஒரு குடும்ப பயணம் முடித்து வந்தபோது எனெர்ஜி ஒர்பஸ் எனும் பழைய கப்பலுக்கு தேர்வு செய்திருப்பதாக சொன்னார்கள். கார் ஏற்றும் கப்பலில் பத்து ஆண்டுகள் பதிமூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். துபாய், மலேசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, தென்னமெரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என உலகின் பல நாடுகளுக்கும் வேலைகாரணமாக சுற்றி வர முடிந்தது.
எல்பிஜி கப்பல்களில் தரையில் பாதம் பதிப்பதே கடினம் என்று சொன்னார்கள். மெக்ஸிகோவின் வெராகுருசிற்கு இனிமேல் வரவே முடியாது எனும் சிறு வருத்தம் எல்பிஜி கப்பலில் இணையும் முன்னே தொற்றிகொண்டது.
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெமிஸ் லீடரிலிருந்து இறங்கிய நான் ஜூன் மாதம் எனெர்ஜி ஒர்பஸ் கப்பலுக்கு புறப்பட்டேன். மருத்துவ சோதனைகள் முடித்து கொச்சி அலுவலகம் சென்று ஆவணங்கள், விமானசீட்டு பெற்றுக்கொண்டேன். காலை ஏழு மணி கொழும்பு வழியாக சிங்கப்பூர் விமானம். இரவில் கொச்சியில் அறைபோட்டு தங்கியிருந்தேன்.
ஸ்ரீலங்கன் ஏர்வேஸில் பயணம். சிங்கப்பூர் சென்று சேரும்போது மாலையாகி இருந்தது. தெமிஸ் லீடரில் நான் விடுவித்த மஞ்சீத்சிங் மான் தான் இங்கும் இருந்தார். நான் கப்பலில் ஏறியதும் அதே படகில் செல்லவேண்டி தயாராக இருந்த மஞ்சீத் காங்வேயில் கைகுலுக்கி விடைபெற்று சென்றார். என்னுடன் சமையற்காரர் கோவாவின் ஆன்றனி பணியில் சேர வந்திருந்தார்.
எல்பிஜி கப்பல்கள் அதிகமாக வளைகுடா நாடுகளில் சரக்கை நிரப்பியபின் பெரும்பாலும், ஜப்பான், சீனாவுக்கு தான் செல்லும். முதல் முறையாக எல்பிஜி கப்பலில் பணியில் இணைந்தேன்.
நாஞ்சில் ஹமீது,
03 June 2025.
பின் குறிப்பு : கேரளாவை சார்ந்த கப்பல் பணியாளர் பிரசாந்த் என்பவர் கடந்த (2025) மே மாதம் கப்பலில் இருக்கும்போது இறந்துவிட்டார். அவரது உடல் ஜூன் மாதம் முப்பதாம் தேதி குடும்பத்திடம் ஒப்படைக்கபட்டது. நண்பர் கணேஷ் அது குறித்து ஒரு கட்டுரை எழுத சொன்னார்.
இருபது ஆண்டு நிறைவு கட்டுரைகள் முப்பத்தி நான்காம் அத்தியாயம் எழுதிய பின் பிராசாந்த் குறித்து எழுத துவங்கினேன். நான்கு வரிகளுக்குமேல் முடியவில்லை. ஒன்றாம் தேதி முழு நாளும் ஓய்வாக இருந்தும் என்னால் எழுத முடியவில்லை.
நேற்றிரவு முடிவு செய்தேன், இன்று அதிகாலை எழுந்து அதை எழுதவில்லை என்றால் இருபது ஆண்டு நிறைவின் அடுத்த
கட்டுரையை எழுதுவதென. இன்று அதிகாலை எழுந்தும் அதை எழுத முடியாததாதால் இந்த
கட்டுரையை எழுதிவிட்டேன்.







No comments:
Post a Comment