Friday, 4 April 2025

இந்த வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்

 



இன்று எங்களுக்கு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வியாழக்கிழமை, நாளை நான்காம் தேதி வெள்ளிக்கிழமை நாளை மறுநாளும் நான்காம் தேதியாகவே இருக்கும். இவ்வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்.

முன்பு காணாமல்போன செவ்வாய்க்கிழமை என சன்னிஜாய் நாட்குறிப்பில் எழுதியிருந்தேன். அப்போது அமெரிக்காவிலிருந்து பனாமா கால்வாய் தாண்டி ஆசியாவுக்கு போய்க்கொண்டிருந்தோம்.

மார்ச் மாதம் சைனாவின் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்கியபின் ஒரு நாள் பயணித்து கொரியாவின் இன்சொனுக்கு அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்று கப்பலுக்கு எண்ணெய் நிரப்பினோம். எண்ணெய் தரவேண்டிய கப்பல் எங்கள் கப்பலில் ஒரு செல்ல முத்தம் தந்ததால், முழுநாளும் அங்கு நின்று எங்கள் கப்பலை சோதனைசெய்து கப்பல் பயணிக்க தயாராக இருக்கிறது என உறுதியானபின் இருபத்தி ஐந்தாம் தேதி மதியம் கப்பல் புறப்பட்டது பனாமாவை நோக்கி.

இருபத்தி மூன்று நாட்கள் வட பசிபிக் கடலில் பயணித்தால்தான் பனாமாவை அடையமுடியும். கப்பல் ஜப்பானை தாண்டியபின் எங்கள் பயணப்பாதையில் புயல் ஒன்று மையம் கொள்வதால் ஏழு மீட்டர் அலையும் கடுமையான கடல் கொந்தளிப்பும் இருக்கும் என எச்சரிக்கை வந்தது.

காப்டனும் நேவிகேசன் அதிகாரிகளும் கப்பலின் பயணப்பாதையில் சிறு மாற்றம் செய்தபோது கப்பல் சென்று சேர்வதில் இன்னும் இரண்டு நாள் தாமதமானது. அதாவது இருபத்தி ஐந்து நாள் நடுக்கடலில் இடைநில்லா பயணம். பன்னிரெண்டு நாட்களுக்குப்பின் ஹவாய் தீவு கொஞ்சம் தூரத்தில் தெரியும். உத்தேசமாக எட்டாயிரம் மைல்களுக்கு மேல்.

சைனாவில் இருக்கையில் கப்பலின் கடிகாரம் GMT+8 ஆக இருந்தது. தைவானிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கும் அங்கிருந்து சைனாவுக்கும் என பயணித்த ஒரு மாதத்திற்கு மேல் கடிகார மாற்றமில்லாமல் இருந்தது. கொரியாவிற்கு வரும்போது ஒருமணிநேரம் முன்னகர்ந்து GMT+9 ஆக மாறியது.

பசிபிக் கடலில் பயணிக்க தொடங்கியபின் இரு தினங்களுக்கு ஒருமுறை கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் வீதம் முன்னகர்த்தி கொண்டே செல்ல வேண்டும். பனாமாவின் கடிகாரம் GMT-5 ஆகும்.

சைனாவுக்குப்பின் இதுவரை கடிகாரத்தை நான்கு மணிநேரம் முன்னகர்த்தி இப்போது GMT+12 ஆக இருக்கிறது. நாளை இரவு அதாவது ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு மணிநேரம் முன்னகர்த்தி ஒரு நாள் பின்னால் நகர்த்தபடும்போது கப்பலின் கடிகாரம் GMT-11 ஆகிவிடும்.

அதாவது இந்த பயணத்தில் நூற்றி எண்பது டிகிரியில் சர்வதேச தேதி கோடு இருக்கிறது. அதை தாண்டும்போது மீண்டும் ஒரு நாள் அதிகமாகி விடுகிறது. இந்த வாரத்தில் இரு வெள்ளிக்கிழமைகள். முப்பது நாட்கள் கொண்ட ஏப்ரல் மாதம் எங்களுக்கு மட்டும் முப்பத்தியொரு நாட்களாக இருக்கும்.

எல்லா மாதமும் முப்பது நாட்களுக்கு கணக்கிட்டுத்தான் சம்பளம் தருகிறார்கள். எனவே அதிலும் பலனில்லை. பழைய முறைப்படி வார சம்பளம் வழங்குவதாக இருந்தால் இந்த வாரத்தில் ஒருநாள் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

சரியாக கணக்கிட்டால் நாங்கள் சைனாவிலிருந்து பனாமா செல்வது வரை பதினோரு மணிநேரத்தை முன்னகர்த்தி ஒரு நாளை பின்னகர்த்துகிறோம். பதிமூன்று மணிநேரம் மட்டுமே இந்த பயணத்தில் கிடைக்கிறது. கடிகாரம் முன்னோக்கி நகர்த்தும் நாட்களில் ஒரு நாளில் எங்களுக்கு இருபத்தி மூன்று மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது.

அவ்வாறு இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளை பின்னோக்கி நகர்த்தி பதிமூன்று மணிநேரத்தை அதிகமாக பெற்றாலும் கணக்கில் ஒரு நாள் அதிகமாக வந்ததாக ஆகிவிடுகிறது. இப்படி கப்பல்காரனுக்கு மட்டுமே கிடைக்கும் அதிசய சுவாரசியங்கள் நிறைய. 

 






அதிலும் அதிசயம் ஏப்ரலில் நான்காம் தேதி கப்பலின் முதன்மை அதிகாரி ஆசிஸ் சௌத்ரிக்கு பிறந்த நாள். நான்காம் தேதியை பின்னோக்கி நகர்த்தி இன்னுமொரு நாள் நான்காம் தேதியாக ஆக்குவதால் இரு வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல இரு பிறந்தநாள் கூட. 



 

உமேஷின் பிறந்த நாள்


மூன்றாம் தேதியான இன்று மோட்டார் மேன் உமேசுக்கு பிறந்தநாள். கேக் வெட்டி கொண்டாடினோம். அவர் சிறு பார்ட்டி கொடுத்தார். முதன்மை அதிகாரி அதிக சம்பளம் வாங்குபவர். டெக் டிப்பாட்மெண்டின் ஹச் ஒ டி. இரு நாள் பார்ட்டியும் (இன்றுதான் நானூறு டாலர்கள் சம்பளம் அதிகரித்த செய்தி வந்தது) ஒரு நாள் விடுமுறையும் கோரினோம்.

அரை நாள் விடுமுறையும் பார்டியும் தருவதாக சொன்னார். இரண்டாவது பிறந்தநாளில் பீர் மட்டும் தருகிறேன் என போசனிடம் சொல்ல அவரும் குஷியாய் தேங்க்யூ ஸார் என்றார். 



 


அவ்வாறு எங்களுக்கு இவ்வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்.

நாஞ்சில் ஹமீது,

04-04-2025.

Thursday, 3 April 2025

கப்பல்காரனின் நோன்பு பெருநாள் (இதுல் – பித்ர்)






கப்பலில் இருக்கும்போது எனது முக்கிய பண்டிகைகளான ரம்ஜான், பக்ரீத் எப்படி கடந்து சென்றது என்பதே தெரியாது. அன்றும் வழக்கமான பணி நாளாகவே இருக்கும். நான் மட்டுமே இஸ்லாமியனாக இருந்த கப்பல்களில் பண்டிகை தினத்தில் உம்மாவுக்கும், சுனிதாவுக்கும், சகோதரர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்வதோடு முடிந்துவிடும்.   

2005 ஆம் ஆண்டு பணியில் இணைந்த முதல் கப்பலில் நோன்பு பெருநாள் அன்று கப்பல் ஈராக்கின் உம்காசர் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தது. முதன்மை இஞ்சினியர் பாகிஸ்தானை சார்ந்தவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த இரண்டாம் இஞ்சினியர், தான்சானியா பணியாளர்கள் என பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களாக இருந்தோம். முதன்மை இன்ஜினியர் ஆடு ஒன்றை கொண்டு வரச்சொல்லி  கப்பலுக்கு அருகிலேயே அறுத்து  சமைத்தனர்.   

அதே ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது அதே நிறுவனத்தின் வேறு கப்பலுக்கு பணி மாற்றம் செய்யபட்டிருந்தேன். பக்ரீத் அன்று கப்பல் துபாயின் போர்ட் ரசீதில் நின்றுகொண்டிருந்தது. காலையில் காப்டன் டாக்ஸி சொல்லியிருந்தார். அவர் பாகிஸ்தானை சார்ந்தவர். அவரும் நானும் தேரா துபாய் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றினோம். அங்கிருந்து அஜ்மான் சென்று நண்பர் ஹபீபுடன் நாள் முழுவதும் இருந்துவிட்டு இரவில் கப்பலுக்கு வந்தேன். 

2019ம் ஆண்டு ரமலானில் கப்பல் ஸ்பெயின் நாட்டின் தாராகுணாவில் சரக்கு இறக்கிக்கொண்டிருந்தது. பெருநாள் அன்று இஸ்லாமியர்களாகிய நாங்கள் மூவர் அதிகாலையில் புறப்பட்டு பள்ளிவாசல் சென்று தொழுகையை நிறைவேற்றிவிட்டு கடைக்கு சென்று புத்தம்புதிய தக்காளி, இஞ்சி, புதினா போன்ற காய்களை வாங்கி வந்தோம். ரத்னகிரியை சார்த்த பத்திசாப் பிரியாணி சமைத்தார்.  

2022ம் ஆண்டு சிங்கப்பூர் எனர்ஜி எனும் எல்என்ஜி கப்பலில் காப்டன் மற்றும் அதிகாரிகள் மலேசிய முஸ்லீம்கள், இயந்திர அறையில் முதன்மை இஞ்சினியர் மற்றும் துணை இன்ஜினியர்கள். மெக்கா சென்று வந்த ஹாஜிகளும் கூட. நானும், மலேசிய காஸ் பிட்டர் இந்தோனேசிய ஓ எஸ் உட்பட பதிமூன்று பேர் இருந்தோம். ஈத் பெருநாள் மற்றும் பக்ரீத் தினத்தில் மலேசிய காப்டன் சைனி இமாமாக நின்று பெருநாள் கொத்பாவும், தொழுகையும் நிறைவேற்றினார். கப்பலில் முதன்முறையாக தொழுகை கிடைத்தது.   

இந்த வருட ஈத் பண்டிகை நினைவில் நிற்கக்கூடிய ஒரு நாளாக இருந்தது. மார்ச் மாதம் ஆறாம் தேதி கப்பல் ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகத்துக்கு வந்தபோது பணியாளர் மாற்றம் இருந்தது. காப்டன் பிலிப் மெண்டோசா அருண் தனது துணைவி துருப்லனி ராஜேஷ்பாய் சாவித்யா(DHRUPALINI RAJESBHAI CHAVDIYA)வுடன் பணியில் இணைந்தார்.   


மார்ச் பதினான்காம் தேதி நடந்த ஹோலி பண்டிகைக்கு காப்டனின் மனைவி எங்கள் உணவுக் கூடத்தை மிக அழகாக அலங்கரித்திருந்தார். 


ஒரு பெண் இருக்கும் இடம் பிரகாசமாக இருப்பதையும் ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் முக்கியத்துவத்தையும் உணர செய்தது. “நீங்க வந்ததும் கப்பல் வெளிச்சமாகிவிட்டது” என்றேன்.   இந்த கப்பலில் நாங்கள் மூவர் இஸ்லாமியர்கள். நானும் இர்ஷாதும்  ஐவேளை தொழுகையை கடைபிடிப்பவர்கள். போசனுக்கு சில உடல்நல சிக்கல் இருந்ததால் நோன்பு வைக்க இயலவில்லை. நோன்பு இருபத்தியைந்தை நெருங்கும்போதே காப்டனின் மனைவி “ஷாகுல் ஜி எப்ப ஈத்” எனக்கேட்டார். “இருபத்தி ஒன்பதாவது நாள் மாலையில் தான் சொல்ல முடியும்”. பிரிட்ஜில் ஒரு நாள் சென்றபோது கையில் இருந்த காகிதத்தை காட்டி “இது என்னனு சொல்லுங்க” எனக்கேட்டதும் மூன்றாம் அதிகாரி ஸ்ரீ “ஜன்னல்” என்றதை கேட்டு நானும் “ஜன்னல்” என்றதும் “உங்களுக்கெல்லாம் சென்ஸ்சே இல்ல” என சொல்லிவிட்டு காப்டனை பார்த்து “பிலிப் இது என்ன சொல்லு” “காப்டன் சாப் சொல்லிராதீங்க, ராத்திரி தூங்க ரூமுக்கு தான் போணும் நீங்க” என சொன்னதை கேட்டு சிரித்துவிட்டு மௌனமாக இருந்தார். தினமும் காலை பணி விவாத கூட்டத்தில் காடட் ஸ்பந்தன் (SAHA PODDER SPANDAN) அட்டையில் வெட்டிய எதையாவது மேஜையில் வைத்திருப்பான். முதன்மை அதிகாரி இது என்ன என்று கேட்டால் “மேடம் தந்தாங்க வெள்ளை பெயின்ட் அடிக்கனுமாம்”. முதன்மை அதிகாரி போசனிடம் அதை கொடுப்பார். காப்டனின் மனைவி செய்தே ஆக வேண்டும்.   

மற்றொரு நாள் நான் பிரிட்ஜில் சென்றபோது “ஷாகுல் ஜி இங்க ஏன் வரீங்க” “தாயி இங்க வர தடை இருக்கா” “இல்ல இல்ல ஆனா நான் செய்றத எல்லாம் பாக்க கூடாது, உங்களுக்கு தான் சர்பிரைஸ் தர வெச்சிருக்கேன்” எனச்சொன்னார் துருவி. “பெருநாளுக்கு என்ன டிஸ் செய்வீங்க” என கேட்கவும், பெருமையாக எங்களூர் இஸ்லாமிய உணவுகளை எடுத்து விட்டேன் “கலத்தப்பம், ஓட்டப்பம், பாலாடை, சுருளப்பம், கிண்ணத்தப்பம், செம்பலுவா” என.   

ரமலானுக்கு மூன்று தினங்கள் முன்பு காலையில் கடும் மழை பெய்தது. டெக் பணியாளர் யாரும் பணிசெய்ய இயலாது. குடியிருப்புக்குள் வேலை செய்ய சொன்னார் முதன்மை அதிகாரி. உணவுக்கூடத்தை சோப்பு கலந்த சுடுநீரில் கழுவி மெழுகு பூசும் பணியில் காப்டனின் மனைவியும் இணைந்து கொண்டு சுத்தப்படுத்தினார். அடுமனைக்கு சென்ற என்னை பார்த்து “உங்களுக்கு வேண்டியதான் கிளீன் பண்ணேன்” என சொல்லி சிரித்தார். “தாயி ஒறும இருக்கும் எப்பவும்” என்றேன்.   சமையல்காரர் ராகுல் மிஸ்திரி “நீ ஏதாவது ஸ்பெஷல் புட் செய்ய போறியா” எனக்கேட்டார். “ஏன்” எனக்கேட்டபோது, “மேடம் சொன்னாங்க நீ உங்க ஊர் ஸ்பெசல் அயிட்டம் செய்ய போவதாக”. “எனக்கு தின்ன தான் தெரியும்” என்றேன். 

சுனிதாவிடம் பாலாடை, கிண்ணத்தப்பம் எப்படி செய்வது என கேட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்த அரிசியை, அதே அளவு தேங்காய் பால் சேர்த்து அரைத்து ஒரு முட்டையும் அதனுடன் கலக்கி நான்-ஸ்டிக் தவாவில் சுட்டேன். பத்து பாலாடை வந்தது. பண்டிகை தினத்தன்று பாலாடை, கிண்ணத்தப்பம் செய்ய நானும் தயாரானேன். 

ரமலானுக்கு மூன்று தினங்கள் இருக்கும்போது காப்டன் ஈத் பார்ட்டி ஞாயிற்றுகிழமை வைக்கலாமா எனக்கேட்டார். ஞாயிறு மாலையில் நோன்பு இருபத்திஒன்பது அன்று மாலை பிறை தென்பட்டால் தான் திங்கள்கிழமை பண்டிகையே முடிவாகும். ஞாயிறு சாத்தியமேயில்லை என்றேன். சமையல்காரர் மற்றும் மனைவியுடன் விவாதித்தபின் காப்டன் என்னிடம் “அப்ப திங்கள்கிழமை நீ நோன்பிருப்பியா, பார்ட்டி வைக்கும் நாள் பகலில் நீங்க சாப்பிடுவீங்க தானே” “காப்டன் சாப் பெருநாள் என்னைக்கின்னு  ஞாயிறு இரவு தான் முடிவாகும்” எனச்சொன்னேன். 



 சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கே உணவுக்கூடத்தில் அலங்காரத்தை தொடங்கினார் காப்டனின் மனைவி. மூன்றாம் அதிகாரி ராகுலை உதவிக்கு வைத்து கொண்டு சுவரில் ஒட்டும் அட்டைகளை வெட்டி முன்னரே செய்து வைத்திருத்த பேப்பர் பூக்களையும் ஓட்டினார். இரவு பதினொரு மணிக்கு காப்டன் “துரு மை பாய்ஸ் வான்ட்ஸ் டு ஸ்லீப், ஸ்டாப் டுடே அண்ட் கண்டினுவ் த்டுமாரோ” என விரட்டி விட்டார். காப்டனிடம் “பிலிப் இத கொஞ்சம் வெட்டி கொடு” என துருவி கொடுத்ததை காப்டன் வெட்டிய போது “இதைக்கூட ஒழுங்கா வெட்ட முடியல கெடுத்துட்டியே” என கடிந்தபின் அவரே மீண்டும் வெட்டினார். காப்டனிடம் சொன்னேன் “என் வீட்டிலும் சுனிதா இப்படித்தான் சொல்கிறாள் ஒண்ணும் ஒழுங்கா செய்ய தெரியாது கப்பல்ல எப்டிதான் வெச்சிருக்கானுவளோ”? 

ஞாயிறு மாலையிலும் அலங்காரம் நடந்தது. நான் முடிந்துவிட்டது என எண்ணியிருதேன. அன்று திங்கள்கிழமை பெருநாள் முடிவானதை சொன்னோம். 



இரவு பத்துமணிக்கு மேல் என் அறைக்கதவில் ஈத் முபாரக் வாழ்த்தை ஒட்டி ஒரு பரிசுப்பையும் இருந்தது பெரும் சர்பிரைஸ் தான். பெருநாளன்று அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் காலை ஏழரை மணிக்கு இரண்டு ரக்காத் நபில் தொழுதுவிட்டு பணிக்கு சென்றேன். மதியம் பன்னிரண்டு மணிவரை வேலை. காலையிலேயே சமையற்காரர் சேமியா பாயாசம் செய்திருந்தார். அதிகாலை ஆறுமணிக்கு கிண்ணத்தப்பம், பாலாடை செய்ய அரிசியை சுடுநீரில் ஊற வைத்தேன். மதிய உணவுக்குப்பின் அரிசியை மிக்சியில் ஆட்டி கிண்ணத்தப்பம் வேக வைத்தேன். கப்பல் ரோல்லிங்கில் ஆடிக்கொண்டே இருந்ததால் பாத்திரமும், உள்ளே இருந்த திரவமும் வலமிடமாக ஆடத்தொடங்கியது.   

ஒரு மணிக்கே காப்டனின் மனைவி உதவியாளர் ராகுலுடன் வந்துவிட்டார். கடைசி கட்ட அலங்காரம் துவங்கியது. அலங்கார பொருட்கள் பெரும்பாலும் பேப்பரில் வெட்டி ஒட்டியவை, கொஞ்சமாக மரத்திலும் பிஸ்தா செல்லிலும் செய்திருந்தார். பத்து நாட்களுக்கு மேலாக இந்த அலங்காரத்துக்காக அவரது உழைப்பு எங்களால் இயலாதது.



வீட்டிலும் அனைத்து பண்டிகை நாட்களிலும் அலங்காரம் செய்வதாகவும், மிக ஆர்வமும் விருப்பமும் இருப்பதாக சொன்னார். அவர் வாழும் புனேவில் துருவி டெக்கரேசன் பிரைவேட் லிமிடட் ஒன்று துவங்குமாறு சொன்னேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அதை தானும் யோசிப்பதாக சொன்னார். அவர் ஐந்தரை மணிக்கு மேல் அலங்காரம் முடித்து ஆடை மாற்றி மேக்கப் போட்டு பார்ட்டிக்கு வந்தார். 


நான் அடுமனையில் சமையல்காரருக்கு சிறப்பு உணவுகள் செய்ய உதவிகள் செய்தேன். சிக்கன் சீக் கபாப், துண்டே (மட்டன்) கபாப், காலி மீரி, மலாய் டிக்கா, சிக்கன் பஹடி டிக்கா, சிக்கன் சுக்கா, சிக்கன் தந்தூரி, சிக்கன் டிக்கா, பிரான் மசாலா, பிஷ் கட்லெட், பன்னீர் டிக்கா, கார்ன் சீஸ் பால், பஞ்சாபி  சமோசா, கார்ன் சாட், காரா பாரா கபாப், ரேஸ்மி கபாப், ஆலூ சாட், பிளாக் சன்னா இவற்றுடன் சர்பத் கலந்து வைத்திருந்தார். 

எனது கிண்ணத்தப்பம் அடிப்பாகம் சரியாக வேகவில்லை. பாலாடை தவாவிலிருந்து இளகவே இல்லை விடாப்பிடியாக ஒட்டி பிடித்தது. என்ன தவறு என புரியவேயில்லை. பாலாடையுடன் ஒரு மணிநேரத்துக்கு மேல் போராடியபின் ஏழு மட்டுமே வந்தது. ராகுல் மிஸ்திரி “லேட் ஆயிட்டு போய் டிரஸ் மாத்திட்டு பார்ட்டிக்கு வா, ஒரு ஸ்வீட் செய்திருக்கா போதும்” என்றார். மீதி மாவை மனதை கடினப்படுத்தி கொண்டு குப்பையில் கொட்டினேன்.
வழக்கமாக பண்டிகை நாட்களில் கப்பலில் இருக்கும்போது என்னிடம் இருக்கும் உடையில் நல்லதை உடுத்துவேன். இம்முறை சுனிதா "ரெண்டு பெருநா ரெண்டு டிரஸ் புதுசா வாங்கிட்டு போங்க" என்றாள். இன்று ஜட்டி, பனியன் முதல் அனைத்தும் புத்தாடை அணிந்திருந்தேன்.  


காப்டன் அனைவரிடமும் வெண்ணிற ஆடை அணிந்து வரச் சொன்னதோடு, மாதம் முழுவதும் நோன்பிருந்தவர்களை நாம் கண்ணியப்படுத்தவேண்டும் “சோ டுடே நோ பீர் அண்ட் வைன்” என்றார். கப்பலில் நடக்கும் பார்ட்டிகளில் பீரும் வைனும் உண்டு. இந்த ரமலான் பண்டிகை நாளில் துளி கூட மது பரிமாறப்படவில்லை. ராகுல் மிஸ்திரி “வித்அவுட் ஆல்ககால் கூட பார்ட்டி வைக்க முடியும்” என வியந்தார். வாழ்த்துகளை பரிமாறி குழு புகைப்படம் எடுத்துகொண்டோம். 



இன்று காப்டன் மனைவி செய்திருந்த அலங்காரமும் அதிலிருந்த விளக்குகளும், அந்த மேஜையில் உணவு பொருட்களை அடுக்கிய விதமும் கொண்டாட்டத்தின் உச்சம். 



காப்டன் எனது கிண்ணத்தப்பம் சுவையாக இருப்பதாக சொன்னார். முதன்மை அதிகாரி நீ செய்வதாக சொன்ன அப்பம் எங்கே எனக்கேட்டார். 




பார்ட்டி முடிந்து ஒரு ஹார்ஸ் ரேஸ் எனும் கேம் விளையாடி அனைவரும் பிரிந்தோம்.   “கப்பல் பணியில் இணைந்து இந்த மே மாதம் இருபது ஆண்டுகளை நிறைவு செய்ய போகிறேன், இந்த ரமலான் என்றும் நினைவில் இருக்கும்படி செய்து விட்டீர்கள்” என்றேன். “நீங்க ஹாப்பியா” எனக் கேட்டார். 

 நாஞ்சில் ஹமீது, 
02 April 2025.