என் மகன் ஸாலிம் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான்.நன்றாக படிக்கும் மாணவன்தான் ஆனால் படிப்பதில்லை.நண்பர்கள் ஊர் சுற்றல் என ஜாலியாக இருந்தான். ஆகஸ்ட் மாதம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறு அறுவை சிகிட்சை நடந்தது. மூன்று வாரம் பள்ளி செல்லவில்லை.
அக்டோபர் மாதம் பள்ளியின் தீபாவளி கொண்டாட்டத்துக்கு அவனது நண்பர்களுடன் பள்ளிக்கு சொந்தமான கல்லூரி வளாகத்துக்கு பைக்கில் செல்லும்போது ஆலம்பாறை அருகே ஆற்றுக்குள் விழுந்து கால் பாதத்தில் பெரிய கீறல் மற்றும் உடல் முழுவதும் சிறு காயங்கள்.
காலில் பெரிய கட்டுபோட்டு,கீழே ஊன்ற கூடாது என மருத்துவர் அறிவுறுத்தியதால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை நான் இருக்கும் குடியிருப்பின் மூன்றாம் மாடியில் வசிக்கும் ஆனி நீட் வகுப்புக்கு பாடம் எடுத்தவர்.எனவே பள்ளி செல்ல முடியாத நாட்களில் சுனிதா அவனை ஆனியிடம் சொல்லி படிக்க சொன்னாள்.
நான் இருப்பது முதல் மாடியில் வாக்கர் வைத்து ஒற்றை காலை தெத்தி தெத்தி மின் தூக்கிவரை சென்று மூன்றாவது மாடியில் உள்ள ஆனியின் வீட்டுக்கு நாளில் ஒரு முறை செல்ல வைத்தாள் சுனிதா.அவனது புத்தக பையை சுனிதாவோ இளையவன் சல்மானோ கொண்டு கொடுப்பார்கள்.மேலும் வீட்டில் இருந்து படிக்க கொடுக்கும் பாடங்களை ஸாலிம் படிப்பதே இல்லை.மொபைல் போன் தான் பெரிய எதிரி.
என்னால் சமாளிக்க முடியவில்லை “நீங்கோ சீக்கிரம் வாங்கோ,வந்து உங்க புள்ளைய பாருங்கோ” என்றாள். எழுபது நாட்கள் வரை பள்ளிக்கு செல்ல வில்லை.டிசம்பர் மாதம் நான் விடுமுறைக்கு ஊர் வந்தபின் பள்ளி செல்ல ஆரம்பித்தான்.
டிசம்பர் மாதத்தில் அவன் முன்பே படித்த டியுசன் மற்றும் பள்ளியில் வகுப்புகள் அனைத்தும் முடிந்து ரிவிஷன் தொடங்கிவிட்டிருந்தது. ஆனி டீச்சர் “சும்மா படிக்க மட்டும் வைக்காங்க,எனக்கு தெரியாத்தத சொல்லி தரல”என்றான்.வீட்டில் இருக்கும்போது தூக்கம் அல்லது மொபைல் பார்த்தல்.படிக்க சொன்னபோது எனக்கு எப்படி படிப்பது எனத்தெரியவில்லை எனக்கு வழிகாட்டுங்கள் என்றான்.
மார்ச் மாதம் தேர்வு ஸாலிமுக்கு பெரும்பாலான பாடங்கள் தெரியவில்லை.ஜனவரி மாதம் கோட்டார் தாண்டி அப்துல்காதர் ஆஸ்பத்திரி அருகிலுள்ள செவன் ஸ்டார் எனும் டியுசன் சென்டர் நன்றாக பாடம் சொல்லி தருவதாக அறிந்து ஸாலிமுடன் அங்கே சென்றேன்.
அவனை சேர்த்து கொண்டார்கள்.பன்னிரெண்டாம் வுகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ்/கணக்கு படிக்கும் அவனுக்கு அனைத்து பாடங்களையும் சொல்லி தருவாதாக செவன் ஸ்டாரில் சொன்னார்கள்.மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டணம். டீச்சர் ஆனி ஸாலிம் “ஏன் வரவில்லை”என கேட்டதற்கு “வேற டியுஷன்ல சேத்தாச்சி”என்றோம்.அம்மாத கட்டணம் ரூ இரண்டாயிரத்தை கொடுத்து விட்டோம்
கொஞ்சம் படிக்க தொடங்கினான்.மீண்டும் அவ்வபோது உடல் நலமில்லாமலும் உடன் படிக்கும் நண்பர்களாலும்,மொபைல் போனாலும் படிப்பிலிருந்து விலகி செல்கிறான்.வீட்டில் நான் பார்க்கும்போது அவனது கையில் மொபைல் இருந்தால் சண்டைதான் அடிக்கடி முட்டி கொண்டதால்.எனது மூத்த அண்ணனும் அவரது மகனும் வந்து எனக்கும் ஸாலிமுக்கும் தனித்தனியாக அறிவுரைகள் சொல்லி ஒரு இணக்கத்தை ஏற்படுத்தினர்.
இருந்தும் படிப்பதிலிருந்து எப்படி எல்லாம் வெளியேறிவிட முடியுமோ அதை அவன் செய்ய முயற்சிக்கிறான்.அதை தடுத்து அவனை படிக்க வைக்கும் முயற்சியில் நான்.ஸாலிம் நன்றாக படிக்கும் மாணவன்.செவன் ஸ்டார் டியுசனில் “நல்லா படிக்கான்,குடுக்க எக்சசைஸ் எல்லாம் ஒழுங்கா செய்யான் ஐந்நூறுக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க வைக்க முடியும்”என்றார்.
பத்து நாட்களுக்கு முன் அவனது பள்ளி ஓபன் டேக்கு சென்றிருந்தேன். அவனது வகுப்பாசிரியை
‘ நல்லா படிக்க பையன் இவன்,கூட்டு கெட்டு செரியில்ல,பிரன்ஷிப்ப உட்டான்னா இவன் நல்ல மார்க் வாங்குவான்,ரெண்டு மாசம் ஸ்கூலுக்கே வரல்ல எல்லா பாடமும் பாசாயிருக்கான்,ஹார்ட் வொர்க் பண்ணினா நல்ல மார்க் வேங்க முடியும் இவனால”என்றார்.
1992 ஆம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினேன்.அந்த ஒரு ஆண்டு நான் எப்படி இருந்தேன் என இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
1991 ஆம் ஆண்டு நான் படித்துகொண்டிருந்த மணவாளக்குறிச்சி பாபூஜி மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது எனது அண்ணன் மாஹீன் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான்.தேர்வு முடிவுகள் வரும் முன்பே நாகர்கோவில் டைட்டஸ் டூட்டோரியலில் பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்காக படித்து கொண்டிருந்தான்.
ஐம்பதுக்கு பதினேழு மதிப்பெண்கள் பெற்று,குடுபத்தில் முதல் பட்டதாரியானதால் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. வாப்பா அப்போது கட்ட வேண்டிய கல்லூரி கட்டணம் இரண்டாயிரத்தை புரட்ட மிக சிரமபட்டார்.
வாப்பா பணிபுரிந்த மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையில் ஏற்பட்ட சிறு விபத்தில் ஆள்காட்டி விரல் பாதியை இழந்து புத்தேரி ஆஸ்பத்திரியில் அணைமதிக்கபட்டிருந்தார் உம்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில்.
அப்போது பத்தாம் வகுப்பு துவங்கியிருந்த எனக்கு அண்ணனை போல் இஞ்சினியர் படிக்க வேண்டும் என ஆசை வந்தது.எங்கும் வெளியில் செல்வதில்லை இரவானால் வீட்டிலிருந்து படிப்பு. காலை,மாலை வேளைகளில் ராஜேந்திரன் மற்றும் அய்யாதுரை ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் டியுஷன் மாதம் முப்பது ரூபாய் கட்டணம்.
வாப்பாவும் உம்மாவும் ஆஸ்பத்திரியிலும்,அண்ணன் கலூரியிலும் இருந்ததால் கிடைத்த சுதத்திரத்தை பயன்படுத்தி கொஞ்சம் படிப்பிலிருந்து விலகியிருந்தேன்.
அப்போதே புகைக்க பழகியிருந்தேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுக்கு முப்பது நிமிடங்கள் மட்டுமே. சின்னவிளை புனித அந்தோனியார் கோயில் முன் பாலை போல் விரிந்து கிடக்கும் மணலில் வேகமாக நடந்து வீடு வந்து சாப்பிட்டபின் வீட்டில் மாடியில் சென்று நாற்பத்திஐந்து காசுக்கு வாங்கிய கோல்ட் பிளாக்கில் பாதியை ஊதி விட்டு மீதியை இரவுக்கு ஒளித்து வைத்துவிட்டு செல்வேன்.
பள்ளியில் சீட்டு நடத்தினேன் ஐம்பது காசு,ஒரு ருபாய் வைத்து நூறு ருபாய் கட்டினால் முடிவில் எனது கமிஷன் ஐந்து ரூபாயை எடுத்து கொண்டு மீதியை கொடுப்பேன் அதனால் கையில் எப்போதும் நல்ல காசு புரளும்.மணவாளக்குறிச்சி விஜயா தியேட்டரில் பத்துமணி இரவு காட்சிக்கும் செல்வேன்.முப்பது காசுக்கு கடலை கடையில் நான்கு காஜா பீடி வாங்கி கொண்டு சென்றால் படம் துவங்கும்போது ஒரு பீடி,இடைவேளையில் ஒரு பீடி,இடை வேளைக்குப்பின் ஒன்று இறுதியாக படம் முடிந்து வீடு வரும் போது ஒன்று.
அப்போது தீபெட்டியே கையில் இருக்காது பீடி அல்லது சிகரெட் வாங்கும்போது இரண்டு தீக்குச்சி எடுத்துகொள்வோம்.கடற்கரை மணலில் கிடக்கும் உடைந்த மண் ஓட்டில் அடிக்கும் காற்றில் அல்லது பளபளப்பான சிமெண்ட் தரையில் தீக்குச்சியை உரசி பத்தவைப்பதில் நல்ல தேர்ச்சி இருந்தது.சில நேரம் கடற்கரை காற்றில் இரு குச்சிகளும் அணைந்துவிட்டால்.கடியப்பட்டணம் கிராமத்திற்கு கையில் சுருட்டுடன் செல்பவரிடம் தீ கேட்போம் “தாத்தாக்க வயசு ஆவுது எனக்கு,எனட்ட தீ கேக்குதோம்” என சொல்லி விட்டு சுருட்டை தருவார்கள்.
ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அபூர்வமாக தமிழில் முப்பத்தியைந்து மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆறாம் வகுப்பிற்கு பின் பள்ளி தேர்வுகளில் தமிழ் தவிர இன்னொரு பாடம் பாசானால் உண்டு.வாப்பா எப்போதும் சொல்வார் “படிச்சா உனக்கு கொள்ளாம்,இல்லேண்ணா மாடு மேய்க்க தான் போவா என.
ஐந்து பாடங்களும் தேர்ச்சிபெற்றதாக நினைவே இல்லை.
கடந்த பிப்ரவரி மாதம் எழுதியது இப்போது தான் வலையேற்றுகிறேன்.
ஷாகுல் ஹமீது
21-02-2023
மேலும்
No comments:
Post a Comment