கப்பல் காரன் ைடைரி
கப்பலில் சுதந்திரதினம் காப்டன் மற்றும் உடன் பணிசெய்யும் பணியாளர்களை பொறுத்து. இந்திய பணியாளர்கள் அதிகமிருந்தாலும் காப்டன் முதன்மை இஞ்சினியர் வேறு நாட்டை சார்ந்தவராக இருந்ததால் சுதந்திரதினம் சப்தமின்றி கடந்துசென்றிருக்கிறது. இந்திய காப்டன்கள் இருந்தபோதும் சில நேரம் அப்படியே.
யார் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதில் இல்லை. மகிழ்வித்து மகிழ் என சொல்வதைபோல பிறர் மகிழ்ச்சியில் தனது மகிழ்வும் இருக்கிறது என்பதை உணர்ந்தவரால் தான் மகிழ்ச்சியை பகிர முடியும். 2011 இல் நான் பணிபுரிந்த காரேற்றும் கப்பலில் இலங்கை காப்டனும் இந்திய பணியாளர்களும் இருந்தோம். இந்திய தேசிய கொடியே இல்லாமல் இருந்தது அக்கப்பலில் .கப்பல் வட,தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.ஆகஸ்ட் பதினைந்தாம் நாளுக்கு முன்னே காப்டன் போசன் மற்றும் சிலரை அழைத்து தேசிய கொடியை வண்ணம் பூசி உருவாக்க சொன்னார்.
நடுவிலுள்ள அசோக சக்கரத்தில் எத்தனை கோடுகள் என என்னிடம் கேட்டு வந்தான் பஞ்சாபின் ஹர்சிம்ரத் சிங். அது மிக சிறப்பான சுதந்திரதினமாக மனதில் தங்கிவிட்டது.
1996 ஆம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சியில் இருந்தபோது என் சி சி யில் இருந்தேன். பெல் டவுன்ஷிப் குடியிருப்பிலுள்ள விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினம்,குடியரசுதினம் இரண்டிற்கும் நடந்த பதிமூன்று பிளட்டோன் கொண்ட பரேடில் நாங்கள் ஒரு பிளட்டோன் கலந்துகொண்டு சிறப்பித்தபின் மனித பிரமிட் ஒன்றும் கட்டி எழுப்பி எங்கள் திறமையை நிருபித்தபோது பெல் சார்பாக எங்களை பாராட்டினார்கள்.துப்பாக்கியுடன் அதற்காக பதினைந்து நாட்களுக்கு மேல் பயிற்சி செய்திருந்தோம்.
கடந்த ஆண்டு இருந்த கப்பலில் நால்வர் மட்டுமே இந்தியர்களாக இருந்தோம். முதன்மை இஞ்சினியர் கொரிய நாட்டை சார்ந்தவர். இந்திய காப்டன் எனவே மிக சிறப்பாக நடந்தது சுதந்திரதினம். தென்கொரியாவுக்கும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திரதினம்.
ஜப்பானியர்கள் |
தற்போதுள்ள கப்பலில் மூவர் வீதம் ஜப்பானியர்,இலங்கை நாட்டவர்,பிலிப்பைன்ஸ்,உக்ரைன் நாட்டவர் இருவர் வீதம், பங்களாதேசத்தை சார்ந்த ரஹீம் உல்லா போக மொத்தமுள்ள இருபத்தி ஏழு பேரில் மீதி அனைவரும் இந்தியாவை தாய் நாடாக கொண்டவர்கள்.
காப்டனும்,முதன்மை இஞ்சினியரும் இந்தியர்கள். கடந்த சனிக்கிழமை போசன் தலைமையில் டெக் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை சுதந்திரதின விடுமுறை குறித்த விவாதம் நடந்தது. முதன்மை அதிகாரி இலங்கையின் அலெக்ஸி.................... திரு, இந்தவாரம் நிறைய விடுமுறைகள்,பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை சுதந்திரத்தினன்று விடுமுறை வேண்டுமென்றால் ஞாயிறு வேலை செய்யுங்கள் என சொல்லியதே டெக் பணியாளர்களின் விவாதமாக இருந்தது.
கடும் கடல் சீற்றத்தில் சோமாலிய கொள்ளையர்கள் நடமாடும் கல்ப் ஆப் ஏடன் பகுதியையும் கடந்தோம் டெக்கில் வெளியே செல்ல முடியாத நாட்கள் அவை. பின்னர் சவுதியில் கப்பலை நிறுத்தி எரிஎண்ணெய் நிரப்பியபின், சூயஸ் கால்வாயை கடந்தோம்.இவையனைத்தும் பெரிய பணிகள்தான்.டெக்கில் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நாட்கள் அவை. “இது ஏன் அவருக்கு புரிய மாட்டேங்கு,செவ்வாகிழமை ஆகஸ்ட் 15 வந்ததுக்கு நம்ம என்னோ செய்ய முடியும்,எவ்வளவு வேல செய்யோம் அது கணக்குல வரல,லீவு வாறது மட்டும் கண்ணுக்கு தெரியுது சூத்தியா,சாலா” என்றான் சென் குப்தா .
சமையல்காரர் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை ஓய்வை எடுங்கள் பின்னர் பார்த்க்கொள்ளலாம் என ஞாயிறுகளில் டெக்கில் கிரிக்கெட் விளையாட பெரும் விருப்பம் காண்பிப்பார் அவர்.
நேற்று காலைமுதல் கடும் பணியாக இருந்தது. மாலையில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தபோது பணி முடிந்ததா? எனக்கேட்டார் முதன்மை அதிகாரி. கணினி திரையில் செய்ய வேண்டிய வேறொரு பணியை காண்பித்தார். நாளை ஒரு மணிநேரம் மட்டும் ஆகும்.இன்றைய பணியில் மீதமுள்ளதை முடிக்க அதன் பின்னர் துவங்கலாம் என்றேன்.
நாளை சுதந்திரதினம் நாளை மறுநாள் செய்யலாம் என்றார். இன்றைய விடுமுறை உறுதியானது.இயந்திர பணியாளர்கள் காலையில் இயந்திர அறைக்கு சென்றே ஆகவேண்டும். தினமும் செய்தாகவேண்டிய சில பணிகள் உண்டு.டெக்கில் கப்பலோட்டும் அதிகாரிகள் இருந்தாக வேண்டும். எனக்கு கம்ப்ரசர் ஓடாததால் ரவுண்ட்ஷ்க்கும் போக தேவையில்லலை அதிகாலை நான்கு மணிக்கே விழித்துவிட்டேன். ஐந்து மணிக்கு சென்று லாக் புக் எழுதினேன். இனி இரவு எட்டு மணிக்கு மீண்டும் எழுதினால் போதும்.டெக் பணியாளர்களுக்கும் முழு ஓய்வு.சமையல்காரர் முந்தைய நாளே ஜிலேபி மற்றும் இனிப்பு வகைகளை செய்ய துவங்கியிருந்தார்.
காடட் சொன்னான் காலை பத்து மணிக்கு கொடியேற்றம் என. கைநெசவு வேட்டியும் வெண்ணிற சட்டையும் அணிந்து சென்றேன். பிரிட்ஜில் கூடினோம் காப்டன் அனைவரையும் வரவேற்று சட்டையில் அணியும் இந்திய மூவர்ண கொடியை வழங்கியபின் பத்தி சாப் (எலெக்ட்ரிக்கல் அதிகாரி)கொடியேற்றுவார் என்றார். இங்கே பத்தி சாபாக இருப்பவர் இலங்கையின் ஹிராத் .
ஜப்பானியர்,உக்ரைனியன்,இலங்கை,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் நாட்டை சார்ந்த அனைவரும் இந்திய தேசிய கொடியை அணிந்து உற்சாகமாக இருந்தனர்.இலங்கையின் ஹிராத் மற்றும் மோட்டேர்மேன் ரிச்சர்ட் இனைந்து இந்திய தேசிய கொடியை மேலேற்றி பறக்கவிட்டனர். அனைவரும் தேசிய கீதத்தை பாடியபின் காப்டன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.
சிறிது நேரம் கூடியிருந்தபின் கலைந்தோம் மதியத்திற்கு முன்பாகவே உணவு கூடத்தில் கூடினோம். மீன் கட்லெட்,சிக்கன் தந்தூரி,சிக்கன் நெகட்ஸ்,அவித்து பாதியாக வெட்டிய கோழியின் முட்டை,பன்னீர் மசாலா,வட்டமாக வெட்டி கடலைமாவில் முக்கி எண்ணையில் பொரித்த பொட்டடோ வடா,சமோசா,புதினா சட்னி,ஜிலேபி,கேக் பாசுமதி அரிசியில் செய்த நெய் சோறு குடி பிரியர்களுக்கு பீர் புட்டிகள் எல்லாம் இருந்தது.
உலக குடிமகன்கள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த என்றும் நினைவில் நிற்கும் நாள் .
நாஞ்சில் ஹமீது,
15 august 2023.
இணையம் வேகம் இல்லாததால் படங்கள் பின்னர் வலையேற்றுவேன்.
ReplyDelete