கப்பலில் போன் அட்டை தீர்ந்துவிட்டால் காப்டனிடம் தான் வாங்க வேண்டும். சில காப்டன்களை தூங்கும் நேரம் தவிர எப்போது வேண்டுமானாலும் கண்டு “ஸார் எனக்கு ஒரு போன் கார்டு” என சிரித்தால் போதும். அப்போதே கையில் தருவார்.
சிலர் வாரத்தில் ஒருமுறை தான் கொடுப்பார்கள்.அறிவிப்பு பலகையில் எழுதியிருக்கும் பொது. கவனமாக அதை பார்த்து எழுதி கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.
போன் பேசி முடிந்த பிறகு தொலைப்பேசி அட்டையை மறந்துவிட்டு வந்தால் சில வேளைகளில் கிடைக்காமல் போய்விடும்.சில கப்பல்களில் காப்டன் தொலைப்பேசி அட்டை மற்றும் பொருட்கள் வினியோகிக்க வேறு நபரை நியமித்திருப்பார். தொலைப்பேசி அட்டைகளின் எண்கள் அனைத்தும் அவர்களின் கையில் இருக்கும்.
வினியோகித்த அட்டைகளின் எண்ணை பயன்படுத்தி சைலண்டாக மற்றவர்களின் கணக்கில் சில நிமிடங்கள் பேசிவிடும் சாமர்த்திய சாலிகள் உண்டு.இதில் மிக அதிக சம்பளம் வாங்கி உயர் பதவியிலிருக்கும் காப்டன்களும் உண்டு என்பதுதான் வேடிக்கை. எல்லாருமே திருடர்கள்தான் எனும் பாடல் மிக பொருத்தம்தான்.
2011 ஆண்டு பணியிலிருந்த கப்பலில் காப்டனாக இருந்தவர் இலங்கையின் பெர்னாண்டோ. காப்டன் ஆரம்பகட்ட மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டு தன்னிலை இழந்திருந்தார்.எல்லோரிடமும் கள்ளமின்றி பேசும் என் பண்பு என்னை அவருக்கு நண்பனாக்கியிருந்தது.
நான் யோகம் பயின்றவன் என்பதை அறிந்தபின் தனிமையில் என்னிடம் மனம் திறந்து தனது மனப்பிரச்சனைகளை சொன்னார். மிக எளிய பயிற்சிகள் சிலதை சொல்லிகொடுத்தேன். தூக்கம் வராமல் படுக்கைக்கு செல்ல வேண்டாம்.தூங்கும் நேரம் தவிர ஏதாவது செய்துகொண்டே இருப்பது போன்ற பயிற்சிகள்.
ஒரு மாதத்தில் மீண்டு விட்டார்.ஊருக்கு செல்லும்முன் புத்தம்புதிய முப்பத்தியாறு டாலர் மதிப்பில்,எட்டு டாலர் மதிப்பில் ஒரு போன் கார்டு வீதமும் தான் உபயோகித்து தீராத ஒரு தொலைப்பேசி அட்டையும் தந்துவிட்டு போனார்.எட்டு டாலர் புதிய அட்டையை பயிற்சி இன்ஜினியருக்கும்,பாதி உபயோகித்த அட்டையை போசன் சரத்துக்கும் இனாம் கொடுத்தேன்.
புதிதாய் வந்த காப்டன் பங்களாதேசின் இஸ்லாம் அகமத் நான் முந்தைய ஆண்டு அவருடன் பணி செய்திருந்தேன். முப்பத்தியாறு டாலர் அட்டையை முதலில் உபயோகிக்கும்போது ஐம்பத்தியிரண்டு நிமிடங்கள் இருப்பதை உறுதிசெய்தது.ஐந்து நிமிடம் பேசிவிட்டு வந்தேன்.
இரு தினங்களுக்கு பின் அதே தொலைப்பேசி அட்டையை உபயோகித்தபோது முப்பத்திஐந்து நிமிடங்கள் மீதி இருப்பதாக சொன்னது.சக பணியாளர் இரானியிடம் சொன்னேன். பின்பு காப்டனை பார்த்து எனது தொலைப்பேசி அட்டையை வேறே யாரோ உபயோகிப்பதாக சொன்னேன்.பார்த்துக்கொள்ளலாம் எந்த எண்ணிற்கு கால் போகிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்றார்.
மறுநாள் மீண்டும் சோதித்து பார்த்தேன் பத்தொன்பது நிமிடம் என்றது.இரானி சொன்னான் “ஷாகுல் பாய் உன் கார்ட வேற எவனோ யூஸ் பண்ணான்,போனது திரும்பி கிடைக்காது நீயே பேசி தீத்துரு”என. “ஒரு மாசம் வெச்சி பேசுவேனே இந்த ஒரு கார்ட” என சொல்லிவிட்டு. மீண்டும் பத்து நிமிடங்கள் உபயோகித்தேன்.
காலை பத்து மணிக்குமேல் காப்டன் இயந்திர அறையில் போனில் அழைத்தார். “உனக்கு அந்த போன் கார்ட் யாரு தந்தது என கேட்டுவிட்டு,அதை நீ உபயோகிக்க வேண்டாம்”என்றார்.
மதிய உணவு வேளையில் காப்டனை பார்த்தபோது கேட்டேன். “சார்ட்டர் அக்கவுண்டில் எழுதியிருக்கு” என்றார். முந்தைய காப்டன் கணக்கில் எழுதிவிட்டு எனக்கு அன்பளிப்பாய் தந்தது முடிந்த விஷயம். அதே எண்ணை இவர் தட்டி பார்த்தபோது நாற்பது நிமிடங்கள் இருந்ததால் அவர் அதை உபயோகிக்க தொடங்கினார்.
2013 ஆம் ஆண்டு கப்பலுக்கு போகும்முன்னே நண்பர் முகி அழைத்திருந்தார். “நல்ல போன் கொண்டு வா கப்பல்ல இன்டர்நெட் இருக்குன்னு”. வாட்ஸ் அப்பில் குடும்பத்துடன் தொடர்ந்து ஒரு தொடர்பில் இருக்க முடிந்தது நண்பர்களுடனும்.
காலையில் விள மீன் வாங்கி கழுவும் முன் போட்டோ வரும். இங்கிருந்து என்ன மதிய உணவு என நான் படம் அனுப்புவேன்.ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் முகநூலில் மேய்ந்து அங்குள்ள எல்லோரும் அறிஞர்,மருத்துவ நிபுணர்,ஆராய்ச்சியாளர்,பொருளாதார மேதை ... என கண்டுபித்தேன். ஒரே நன்மை ஜெயமோகன்,அ.முத்துலிங்கம்,சுகா,எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரது தளங்கள் எனக்கு என் தம்பி பிரபு மூலம் அறிமுகமானது.பின்னர் ஆசிரியர் ஜெயமோகனின் அறம் கதைகள் வாசித்து வெண்முரசுக்குள் நுழைந்து இலக்கிய வாசகன் ஆனேன்.
அதன் பின்னர் பணி செய்த கப்பல்களில் எல்லாம் இணையம் கட்டாயம் இருக்கவேண்டும் என்றானது. வாட்ஸ் அப்பில் அழைத்து பேசும் வசதி 2015 இல் அறிமுகமானது என நினைக்கிறேன். பின்னர் தொலைப்பேசி அட்டைகளுக்கு பணம் செலவு செய்வது இல்லாமல் ஆனது. கார்களை ஏற்றி இறக்கும் கப்பலில் துறைமுகம் செல்லும் வாய்ப்பும் அதிகம் அதனால் எப்போதும் வெளியில் சென்று அதிக தொகை செலவு பண்ணி வீட்டிற்கும் நண்பர்களுக்கும் அழைத்து பேசிக்கொண்டிருந்தோம்.
நிலைமை மாறியது ஆனால் கப்பலின் இணைய வேகம் மிக குறைவு.வாட்சப்பில் பேசும் அளவு இணைய வேகம் இல்லாத மிக குறைந்த செலவில் இணைய இணைப்பை பொருத்தியிருந்தார்கள் கஞ்சத்தனம் மிகுந்த பெரும் கப்பல் முதலாளிகள். அதிலும் காப்டன்கள் பணி சார்ந்து மின்னஞ்சல் அனுப்பும்போது, எங்களின் இணையத்தை துண்டித்து விட்டு பணிசெய்வார். பணி முடிந்ததும் அதை பொருத்த மறந்துவிட்டு தூங்க சென்று அது இரவாக இருந்தால் மறுநாள் வரை இணையம் இருக்காது .
இணையம் வாங்கும்போது தேர்ந்தெடுக்கும் பிளானை பொறுத்து அது வேலை செய்யும். விலை மலிவான மூன்றாம் தர இணைய சேவை தென்ஆப்ரிக்கா,பனாமா,இலங்கை நாடுகளின் அருகில் வேலை செய்யாது.அதிக பட்சமாக ஏழு நாட்கள் வரை உலகிலிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருப்போம்.
2018இல் நான் இருந்த கப்பலில் மாதம் 270 mb மட்டுமே ஒரு மாதத்துக்கு ஒருவருக்கு.அதாவது ஒரு நாளில் 9mb மட்டும்.இதில் ஒவொருவருக்கும் தனி கணக்கு வேறு.பின்னர் காப்டனின் பெருமுயற்சிக்குப்பின் இரு மாதத்துக்குப்பின் மாதம் 680mb ஆக உயர்த்தப்பட்டது.
தொண்ணூறுகளில் பணியில் இணைந்த கேரளாவின் போசன் பவுல் சொல்வார் கப்பல் கரையணைந்ததும் கப்பல் காரர்கள் அனைவரும் கப்பலின் முகவர் வருவதை எதிர்பார்த்து காத்திருப்பர் அவர் கொண்டுவரும் கடிதத்திற்காக. கடிதம் வராதவர்களின் ஏமாற்றம் அடுத்த துறைமுகம் வரை நீளும். இளம்நீல இன்லேன்ட் லெட்டரை காப்டனிடம் கொடுத்து முகவரிடம் கொடுக்க சொல்வார்கள். வீட்டிலிருந்து எழுதும் கடிதங்கள் சில நேரம் கைக்கு கிடைக்கும் முன் பணி முடிந்து மாலுமி ஊருக்கு சென்றுவிடுவதும் உண்டு.எனது அண்ணன் 1997 இல் பணியில் இணைந்தபோது அமெரிக்க அலுவலக முகவரியில் நானும் அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
அறுபத்தியைந்து வயதான முதன்மை இஞ்சினியர் ஒருவர் 2015 இல் என்னுடன் பணிபுரிந்தார்.முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் பயிற்சி இஞ்சினியராக இருந்தபோது மும்பையில் கரையணைந்ததும் சில கிலோமீட்டர் நடந்து மும்பை விக்டோரியா டெர்மினஸ் (தற்போது சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ்)அருகிலுள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸில் ட்ரங்க் கால் புக் பண்ணிவிட்டு இரண்டு மணிநேரம் வரிசையில் காத்திருந்து தன் முறை வருவதற்குமுன் கப்பல் கரைவிட்டு செல்லும் நேரம் நெருங்கியதால் போன் பேசாமலே திரும்பி சென்றார்.
சொல்ல வந்த விஷயம் இதுதான் தற்போது இருக்கும் கப்பலில் இணையவேகம் சுமாராக இருக்கும்.வாட்சப்பில் எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு வாரத்திற்கு ஒருவருக்கு 500mb மட்டுமே டேட்டா கிடைக்கும்அதாவது ஒரு நாளுக்கு 70 mb .கடந்த கப்பலில் ஒரு வாரத்திற்கு 1 gb வரை கிடைத்தது.
ஒவொருவருக்கும் தனி கணக்கு. ஞாயிறு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குமேல் 500mb தானாக கணக்கில் வந்துவிடும். மாறிக்கொண்டேயிருக்கும் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்ய தேவையான டேட்டாவும்,இணைய வேகமும் இருக்காது.கரைதொடா நீண்ட பயணத்தில் வீட்டிற்கு பேச முடியாது, மொபைல் போனை மிக கவனமாக கையாள வேண்டும். சிலர் பாதுகாப்பு கருதி இரண்டு போன்கள் வைத்திருப்பார்கள்(back up) உடைந்தால்,சாப்ட்வேர் கோளாறு ஏற்பட்டால் தீர்ந்தது தகவல் தொடர்பு.
முகநூல்,டுவிட்டர்,இன்ஸ்ட்ராகிராம் வகையறாக்களில் நான் இல்லை என்பதால் வாரம்தோறும் கிடைக்கும் 500mb டேட்டாவில் மீதி வரும் ஐம்பது அல்லது அறுபது டேட்டாவில் சனிக்கிழமை இரவு அமர்ந்து எனது கட்டுரைகளில் ஒன்றை வலையேற்றவும் செய்துவிடுவேன்.
கடந்த வெள்ளிக்கிழமை (28july2023)இரவு அமெரிக்காவில் வசிக்கும் சின்ன வள்ளுவர் என அன்பாய் அழைக்கும் நண்பர் செந்திலிடம் ஒரு நீண்ட உரைடால் வாட்ஸ் அப் காலில். அவர் திருக்குறளை சமகாலத்துக்கு தகுந்த முறையில் தனது அனுபவம் சார்ந்து ஒளி பதிவு செய்து யூயூ டீபில் வலையேற்றுகிறார். முப்பத்தியாறு நிமிடங்கள் ஆழ் மனதின் அற்புத சக்திகள் குறித்து விரிவாக பேசினோம்.அது தான் எனது கடைசி போன் கால்.
சனிக்கிழமை காலை சுனிதாவை அழைத்தபோது இணைப்பு கிடைக்கவில்லை.உம்மா சுனிதா,மேலும் இரு நண்பர்களுக்கு தினமும் அழைப்பேன். யாருக்கும் பேச முடியவில்லை.எனக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்த்தேன். சுவிட் ஆப்,ஆன்.டெலிட் மெசேஜ்,பிளைட் மோட்.எதற்கும் சரி ஆக மாட்டேன் என்றது எனது vivo போன்.
கப்பலின் அதி புத்திசாலி இளம் ரத்தம் காடேட்டை அழைத்தேன் “ஷாகுல் பாய் வாட்ஸ் அப் அப்டேட் கரோ” என சொல்லி அவனே அதை செய்தான். என்னிடம் அன்று நூறு mb டேட்டா மீதி இருந்ததால் அதை செய்ய முடிந்தது.அதன் பின்பும் வாட்ஸ் அப் கால் மட்டும் போகவில்லை.வாட்ஸ் அப் வேலை செய்கிறது.
முன்பு imo வும் வைத்திருந்தேன் வெள்ளைதோலில் அழிகிய இளம்பெண்கள் மார்பகங்களை காட்டியபடி சாட் மீ என தொடர்ந்து வந்துகொண்டே விளம்பரத்தால் அதை இரு ஆண்டுகளுக்கு போனில் இருந்து அழித்தேன்.
சுனிதாவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. என் இருப்பு மட்டும் தெரிந்தால் போதும். உம்மா தான் சுனிதாவை அழைத்து “மொவனுக்க போன் வரல நித்தம் பேசுவான் என்ன ஆச்சு” என கேட்டுவிட்டு. எனக்கொரு வாயிஸ் நோட் அனுப்பியிருந்தாள் “மோனே உனக்க போனு வராத்ததுனால நீ எங்கயோ வெளிநாட்டுல இருக்கது போல இருக்கு செல்ல மக்களே,டெய்லி பேசத்துல நீ கிட்ட இருக்கது போல இருக்கும். சீக்கிரம் போன செரி பண்ணு மக்களே” என .
2017 ஜனவரியில் வாங்கியது இந்த போன். இரண்டாவது ஆன்ட்ராய்ட் போன் இது எனக்கு.முதல் போன் சாம்சங்க், 2012 இல் ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்.இன்று காலை வரை எனது வாட்ஸ் அப் கால் வேலை செய்யவில்லை.மகன் ஸாலிமை காலையில் அழைத்து பார்த்தேன்.அவன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் போனுதான் கோளறு போல என. சுனிதா சொன்னாள் போனுக்கு வயசாயிட்டு என.
மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லாவிற்கும் என்னை போலவே பிரச்சினை.அவர் ஐ எம் ஓ வுக்கு மாறி விட்டதாக சொன்னார்.நல்ல நெட்வொர்க் ஏரியாவில் போனால் சரியாகும் என இன்னும் நம்பிகொண்டிருக்கிறேன்.புதிய போன் வாங்குவதாக இருந்தால் இம்மாத கடைசியில் கப்பல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் கரை தொட்டபின்பு தான் முடியும்.இருக்கிற செலவு போதாது என இப்போது ஒரு பதினைந்தாயிரம் அதிக செலவு வந்துள்ளது.
நாஞ்சில் ஹமீது.
06 August 2023,
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment