Thursday, 20 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள்15


  கடும் தாக்குதலை  எதிர் நோக்கிய பதட்டம் நிறைந்த நாட்கள் .


      எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைபட்டுவிட்டது .உணவு வழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவு வழங்கிவந்தோம், பசி என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை .ருசி மட்டும் தான் அனைவர் நாவிலும் இருந்திருக்கும்.


   பணியாளர்களுக்கு தடையின்றி உணவு கிடைத்தது.காலை உணவு இல்லாதபோது யாருக்கும் பெரிதாக தோன்றவில்லை.நிறைய பழங்களும், பாகெட்டுகளில் அடைத்த பழரசமும் ,பால் வகைகளும் நிறையவே எங்களிடம் இருந்தது .விரைவில் நிலைமை சீரடைந்துவிடும் என்றே எதிர் பார்த்தோம் . உணவு பொருட்கள் தொடர் பற்றாகுறையால் அடுத்த சில நாட்களில் நடுஇரவு உணவும் ,அதை தொடர்ந்து மதிய உணவும் ரத்தாகியது .எங்களுக்கும் மதிய உணவு கிடையாது .

   அமெரிக்க அரசால் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஒரு பொட்டலம் தருவார்கள் அதனுள்  காற்று புகாத வகையில் ,ஒரு வருடம் வரை கெட்டு போகாத பதப்படுத்திய உணவுகள் சிறிய பொட்டலங்களில் இருக்கும் .


     பீப் ,ரைஸ் ,நூடுல்ஸ்,கேக் ,பன் ,பிஸ்கட் என பலவகைகளில்.ஒரு பாலிதீன் பையில் கொஞ்சம் ரசாயன பொடியும் இருக்கும் .அதில் வேண்டிய உணவு பொட்டலத்தை எடுத்து ரசாயன பொடி இருக்கும் பையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உள்ளே வைத்தால் உணவு பொட்டலத்திலிருக்கும் ரைஸ் அல்லது நூடுல்ஸ் ஐ சூடாக சாப்பிடலாம் .

    அமெரிக்கர்களின் பெரும்பாலான உணவு வகைகளில் போர்க் பேக்கன் எனும் பன்றி இறைச்சி கலந்திருக்கும் .அதை அதில் எழுதபட்டிருக்கும் .நான் பெரும்பாலும் அதில் இருக்கும் பான் கேக் ஒன்றை எடுத்து கொள்வேன், நண்பர்களும் பான் கேக் அவர்களின் பாகெட்டுகளில் இருந்தால் எனக்கு தந்து விடுவர் .


    நாங்கள் இங்கு வந்து முகாம் தொடங்கும் வரையில்  ராணுவ வீரர்கள் நெடுநாட்கள் இதையே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.லோகேஷ் சொல்வான் பாய் இத சாப்புட்டு எப்படி இவனுக சண்ட போட்டானுவோ ?வயத்துல ஒரு மூலைக்கு தானே ஆச்சி இது .இப்பெல்லாம் இந்த கட்டு ,கட்டுறானுக என்பான். நாங்கள் வந்தபின்பு தான்  வித விதமாக நான்கு வேளை உணவு சாப்பிட ஆரம்பித்தனர் .(நடுஇரவு உணவு இரவு பணியில் இருப்பவர்களுக்குத்தான் .கூட்டம் குறைவாக தான் இருக்கும் அதிகபட்சம் 800 லிருந்து  900  பேர் வரை வந்து சாப்பிட்டு செல்வர்.)
  
     இரவு ஒருவேளை உணவு மட்டும் சமைப்பதால் பணியாளர்களுக்கு  வேலை  குறைந்து விட்டது.ஆனால் இரவு உணவின் எண்ணிக்கை முன்பைவிட ஆயிரம் அதிகரித்துவிட்டது .

   நான் பார்த்ததில் அமெரிக்கர்கள் நிறைய சாப்பிடுபவர்கள் .பீப் ஸ்டேக் ,டி போன் ஸ்டேக் என பெரியதும் , நீளமான  உணவு வகைகள் அவர்களுடையது . வீட்டில் கார்களும் பெரிதாக தான் வைத்திருக்கின்றனர் .

   அப்படி சாப்பிட்டு பழகிய அவர்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். எங்களின் குடியிருப்புக்கு அருகில் வேறு நிறுவனத்தை சார்ந்த பிலிப்பினோ பணியாளர்களின் குடியிருப்பு இருந்தது .நடுவில் ஒரு முள் வேலி மட்டும் தான் இருக்கும் .அவர்கள் முகாம்களில் வேறு பணிகள் செய்பவர்கள் .
   
     எங்களின் சாப்பாட்டுக்கான அரிசி தீர்ந்த போது அருகில் இருக்கும் பிலிப்பைன்ஸ் பணியாளர்களிடம் அரிசி தாராளமாக இருப்பதாகவும், அவர்களின் இறைச்சி வகைகள் தீர்ந்துவிட்டதாகவும் சொன்னார்கள் .
 
   தெனிந்தியர்களை போலவே பிலிப்பைன்ஸ் மக்கள் அதிகம் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள் .எங்களின் மானேஜர் ஆலன் குக் அவர்களிடம் பேசி பண்ட மாற்று முறையில் மாட்டிறைச்சியும் ,கோழி கறியும் கொடுத்து அரிசியை அவர்களிடமிருந்து பெற்றுகொண்டோம் .(சோறு தின்னாம காது அடைச்சி உறக்கம் வரல என சோறு தின்று பழகியவர்கள் இரவில் சோறு கிடைக்காத நாட்களில் சொல்லி கேட்டிருக்கிறேன் )


    ஒரு மாதத்திற்குள்ளாகவே நிலைமை சீராகிவிட்டது .கடும் பாதுகாப்புகளுடன் சாலை போக்குவரத்து தொடங்கியது .வழியில் எங்கும் நிற்காது தொடர் வரிசையில் செல்லும் காண்வாய்கள் .எதாவது ஒரு  வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் அந்த கண்டெய்னர் லாரிகளை அப்படியே விட்டு விட்டு ஓட்டுனரை  மட்டும் வேறு வண்டியில் ஏற்றிகொள்வார்கள்.         காண்வாய்யை தலைமையேற்று நடத்தும் ராணுவ தளபதி .


   உணவு கூடதிற்க்கான உணவு பொருட்கள் தடையின்றி வர ஆரம்பித்தது .பிறகு மீண்டும் உற்சாகத்துடன் நான்கு வேளை உணவும் தடையின்றி வழங்க ஆரம்பித்தோம் .ராணுவ வீரர்களும் மகிச்சியுடன் உணவுண்டு சென்றனர் .(பாய் இவனுக்க மூஞ்சிய பாரு இப்பதான் சிரிக்கான் இவ்ளோ நாளா செத்த வீட்டுக்கு போறவன் மாதிரி மூஞ்சி இருந்தது என சிலர் ராணுவ வீரர்களை பார்த்து சொல்லி சிரிப்பான் விஜயகுமார்)

   எனினும் கடும் தாக்குதல் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது .நாங்களும் தொலைக்காட்சியில் தினமும் ஈராக்கில் நடந்த உயிரிழப்புகளையும் ,படுகொலைகளையும் பார்த்துகொண்டிருந்தோம் .

  எங்கள் அனைவரையும் கூட்டி ஒரு கூட்டம் ஒன்று நடத்தினார்கள் .பாதுகாப்பு குறித்த சில விசயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது .பின்பு எங்கள் திக்ரித் முகாம் மீது அடுத்த சில நாட்களில் ஒரு கடும் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை செய்தி வந்துள்ளதாக ராணுவம் எங்கள் அதிகாரிகளிடம் சொன்னதை எங்களுக்கு தெரியபடுத்தினர்.

    அனைவரும் மூன்று நாட்களுக்கு முகாமிலிருந்து வேறு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் .உங்களது பொருட்களை இங்கே வைத்து விடுங்கள் .கடவுசீட்டு ,பணம் ,மூன்று நாட்களுக்கு தேவையான உடைகளை முடிந்தவரை ஒரு சிறிய பையில் எடுத்து கொள்ளுங்கள் .
 
     ஒவ்வொருவரும் உணவு ,மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் .தேவையற்ற எந்த பொருட்களையும் எடுக்கவேண்டாம்  என உறுதியாக சொன்னார்கள் .

   வரைபடம் ஒன்றை தந்தார்கள் அதில் வாகனங்கள் எந்த வரிசையில் நிறுத்தபட்டிருக்கும் என்ற விபரமும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வரிசை எண்ணும் இருந்தது .எங்களிடம் 2 சிறிய பேருந்துகளும் ,நான்கு கார்களும் இருந்தது மற்றவை எல்லாம் ராணுவ வாகனங்கள் .

  ஒருநாள் ஒத்திகை பார்க்கும் பொருட்டு வரைபடத்திலிருந்தபடி வாகனங்கள் நிறுத்தபட்டு ,கண்ணாடிகளில் வரிசை எண்கள் ஒட்டபட்டிருந்தது  ஒவ்வொருவரும்  அமர வேண்டிய வாகனங்களை பார்த்துகொண்டோம் . தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளும் ,உணவு பொட்டலங்களும் தாயராக வைத்திருந்தோம் .

  அவசர அழைப்பிற்கு பின் பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் புறப்பட்டாக வேண்டும் .அதற்குள்ளாக அனைவரும் வாகனங்களில் ,தங்களின் பைகளுடன் அமர்ந்திருக்க வேண்டியது கட்டாயம் .

  அந்த நாட்களில் பெரும்பாலானோர் இரவில் தூக்கமின்றி ,கவச உடையும்,தொப்பியும் அருகிலேயே வைத்துகொண்டிருந்தனர். (கக்கூசுக்கு போவும் போதும் அந்த ஹெல்மட்டையும் ,ஜாக்கெட்யும் போட்டுட்டு போனவன் எல்லாம் உண்டு ) ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்து விடும் என்ற பயம் அது .முகங்களில் ஒரு பதட்டம் தெரிந்தது .எப்போதும் எதுவும் நடந்து விடலாம் எனும் உச்ச கட்ட பயத்தில் நகர்ந்த நாட்கள் அவை .விழித்திருப்பவனுக்கு இரவு மிக நீண்டது .அதுபோல் மிக மெதுவாக அந்த நாட்கள் நகர்ந்தது .

   அந்த சூழ்நிலையிலும் மேலே வானம் ,கீழே பூமி ,சோளிக்கே பீச்சே கியா ஹை  என பாட்டு பாடி மகிழ்ந்து இருந்தவர்கள் பலர் .

    ஆனால் எல்லோரும் பயந்ததுபோல் அப்படி ஏதும் நடக்கவில்லை .யாரும் முகாமைவிட்டு வெளியே செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படவில்லை .
ஷாகுல் ஹமீது

20-10-2016

5 comments:

  1. எத்தனை பேருக்கு சமைத்திருக்கிரீர்கள் எத்தனை இன்னல்களுக்ககிடையே சமைத்திருக்கிரீகள்? எத்தனை நினைவில் வைத்து இப்பொது பதிவு செய்கிறீர்கள்? உயிருக்கு அச்சுறுத்தல் என்னும் நிலைமையிலும் உங்களின் கவலை பெரும்பாலும் அனைவருக்கும் உணவு அளிப்பதைக்குறித்தே இருக்கிறது. இது அன்னமை தம்பி. அன்னை மட்டுமே இப்படி உணர்வது வழக்கம். அடுமனை பிரம்மலீலை நிகழும் இடம். அது ஒரு தவச்சாலை என்கிறார் ஜெயமோகன். உண்மையல்லவா? அங்குதான் நீங்கள் பிரம்மத்தையும் மானுடத்தயும் முழுமையாக உண்ர்ந்திருக்கிறீர்கள் தம்பி
    இந்த தாக்குதல் நிகழ்ந்த காலகட்டத்தில் நான் அபுதாபியில் இருந்தேன் அந்த நாடும் இந்த போர் அனுபவங்களும் எனக்கு மிக புதியவை. ஒரு பறவையைப்போல மிக பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் நான். புது மணப்பெண்னாக திகிலுடன் அங்கிருந்தேன். அப்போது அபுதாபியின் மீதும் தாக்குதல் நிகழலாம் என்று பேச்சும் எதிர்பார்ப்பும் இருந்தது.
    ஒரு நாள் இரவில் கணவர் பணியிலும் நான் தன்னந்தனிமையில் வீட்டிலும் இருந்தேன் அப்பொது படபடவென்ற பெரும் சத்தமும் அடுத்த அடுத்த வீடுகளில் எல்லோரும் ஓடுவதுமாய் இருக்க நான் திகைத்து அலறி இவருக்கு தொலைபேசி கதறி அழத்துவங்கினேன் குண்டு போடுவதாக நினத்துக்கொண்டு. உண்மையில் வழக்கத்திற்கு மாறாக அன்று அந்த கடும் பாலையில் இடியுடன் கூடிய பெருமழை பெய்திருக்கிறது அந்த சப்தத்தையே நான் குண்டு வீழ்ந்தததாக நினைத்திருக்கிறேன். அவரின் அலுவலகமே திரண்டு வந்து ஒரு வாரம் என்னை கிண்டல் செய்து ஓய்ந்தார்கள். அதை இன்று உங்களின் பதிவைப்படித்ததும் நினைத்துக்கொண்டேன்

    ReplyDelete
  2. சாகுல் நானும் அங்கு இருப்பது போல் உணர்கிறேன்! அருமை தம்பி !👍

    ReplyDelete
  3. சாகுல் நானும் அங்கு இருப்பது போல் உணர்கிறேன்! அருமை தம்பி !👍

    ReplyDelete