Monday, 17 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 13


   குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் .
   வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக  அடிக்க ஆரம்பித்தனர் .அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும் , ஆவேசமும் இருந்தது.சாந்தமாக நான் பார்த்திருந்த சில சமையல்காரர்கள் வெறிகொண்டு எழுந்தபோது ஆளே மாறியிருந்தனர் .என் கண்கள் அதை நம்ப மறுத்தது . இதை சற்றும் எதிர் பாராத வைன் ஓட ஆரம்பித்தான் .

    முதல் இரண்டு ,மூன்று அடிகளை அவன் தடுத்து பார்த்தான் .முதலில் ஐந்துபேர் ,பின்னர் ஒன்றிரண்டு என வந்து கொண்டே இருந்தார்கள் .சுமாராக நாற்பது பேர் கூடி விட்டனர் .

   மாறோ சாலேக்கோ ,மாறோ என கூச்சலுடன் அவனை அடித்தனர் .அவன் எதிரில் நின்று பேச திராணியற்ற ,சில சோப்ளாங்கிகள் கூட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்று போட்டனர்.அதில் அவர்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி வேறு அடுத்த சில நாட்கள் அதை சொல்லியே அலைந்தனர் .

   கூட்டத்திலிருந்து பலத்த அடி விழ ஆரம்பித்ததும் ஓடிய வைன் அதிகாரிகள் குடியிருப்புக்குள் நுழைந்தான் .தொடர்ந்து விரட்டிய கூட்டம் அந்த குடியிருப்புக்குள் நுழைந்ததும் .எங்கள் மேனேஜர் ஒருவர் வேகமாக ஓடி வந்து தடுத்து காப்பாற்ற முயற்சித்தார் .அவரது கனத்த உடலும் ,நல்ல உயரமும் காரணமாக குடியிருப்பின் நுழைவு வாயிலின் அருகில் இருபக்கமும் கைகளாலும் ,உடலாலும் யாரும் வர முடியாதபடி தடுத்து நின்றார் .இருந்தாலும் அவரது கைகளுக்கிடையில் உள்ள இடைவெளி வழியாக ஒருவன் ஓங்கி அறைந்தான் வைனின் முதுகில் .


    மேனேஜர் பார்வையால் அடிக்காதீர்கள் என கெஞ்சுவதை தவிர வேறு எதுவும் அவரால் செய்ய இயலவில்லை .ஜோக்கிம் வாயிலிருந்து இரத்தம் வருகிறது என கேட்ட நானும் ,முருகனும் விரைந்து செல்லும் போது கூட்டமாக வைனை அடிக்க தொடங்கினர் .முதலில் அடிக்கட்டும் என்றிருந்த நாங்கள் .பின்னர் போதும் நிறுத்துங்கள் ,நிறுத்துங்கள் என சப்தமிட்டோம் யாருக்கும் அது கேட்கவே இல்லை .அடிப்பதை பார்துகொண்டிருந்ததை தவிர எதுவும் செய்ய இயலவில்லை .


    வைன் பொதுவாக சட்டை அணிவது இல்லை அதனால் உடல் ஆங்காங்கே சிவந்து இருந்தது ,முகம் கொஞ்சம் வீங்கி போய்விட்டது .ராணுவ போலீஸ் வரும் வரை அவனை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்திருந்து விட்டு .அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர் .


    ராணுவ போலிஸ் வைனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றது .அடுத்த பதினைந்து நிமிடத்தில் ராணுவ அதிகாரிகள் ,எங்களது மற்றும் அமெரிக்க நிறுவன அதிகாரிகள் எங்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தி விசாரணை செய்தது .முடிவில் இங்கு யாரும் ,நிறத்தால் ,மொழியால் ,இனத்தால் வேறுபட்டவர்கள் கிடையாது .அப்படி யாராவது நடந்து கொண்டால் தண்டிக்கபடுவர் என்றனர் .


     வைன் இனி எங்கள் நிறுவனத்திலோ ,அமெரிக்க நிறுவனத்திலோ பணி செய்ய முடியாது .மருத்துவ முதலுதவி சிகிழ்ச்சைக்கு பின் அவனை நாட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றனர் .


   நான் எழுந்து பேசினேன் .நடந்த சம்பவத்திற்கு அனைவர் சார்பாகவும் மன்னிப்பு கேட்டேன். இனிமேல் இப்படி ஒருமுறை நடக்காது என நான் உறுதியளிக்கிறேன் என சொல்லி என்னுடன் பணிபுரியும் அனைவரையும் பார்த்தேன் .அனைவரும் தலைகுனிந்து அமைதியாக இருந்தனர் .


   மேலும் நடந்த நிகழ்வுக்கு காரணங்களை விளக்கினேன் .முதலில் விஜயனுடன் பிரச்சனை செய்தான் ,அதை புகார் செய்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ,இரண்டாவது ,மூன்றாவது என கடைசியில் இப்படியாகிவிட்டது என்றேன் .ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம்
   ஏன் என்னிடம் நீ சொல்லவில்லை ஷாகுல்  இனிமேல் எந்த சிறு பிரச்னை என்றாலும் உடனே என்னிடம் சொல் என ஜெசிக்கா சொன்னாள்.ஆனால் அந்த மோசமான நிகழ்வை அனைவரும் மிக சீக்கிரத்தில்  மறந்து,எளிதில் கடந்து சென்றனர் .

 
   வைனை பற்றிய பேச்சே இல்லாமல் பணியிலும் ,மேஜை பந்து விளையாட்டிலும் ஒன்றி விட்டனர் .

    தொடர்ந்து வந்த நாள்களில் குண்டுகள் வெடிக்க தொடங்கிவிட்டது திக்ரித்லும் .பங்கர் பாதுகாப்பு சுவருக்குள் பகலிலும் ,இரவிலும் அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்கும்போது பதுங்க வேண்டியிருந்தது .பங்கருக்குள் அனைவரும் பயத்துடன் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் போது ஒருநாள் நானும் ,கார்த்தியும் தமாஷாக பேசிகொண்டிருந்தோம் .


    அப்போது உள்ளே பயத்தில் இருந்த கல்கத்தாவின் சமையற்காரன் ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டது .எங்களை பார்த்து கத்தினான் .கார்த்திக் உனக்கு தெரியாதா இங்கு வரும்போது குண்டுவெடிக்கும் என ,போர்முனையில் பூக்களையா உன் தலையில் போடுவாங்க .மும்பையில உன்கிட்ட சொல்லி தானே அனுப்பிருப்பாங்க என ஆங்கிலத்தில் சொன்னான் .கேட்டவனுக்கு அதை ஹிந்தியில் திருப்பி சொன்னேன் .

    குண்டு வெடிப்பு அதிகமாகிவிட்டபின் .ராணுவம் எங்கள் உணவு கூடத்திற்கு அருகில் டைகிரிஸ் நதியை நோக்கிய ஒரு பீரங்கியை கொண்டு வந்து நிறுத்தியது .

   டைகிரிஸ் நதியின் அக்கரையில் இருந்துதான் தாக்குதல் நடத்துகிறார்கள் எனவே இங்கிருந்து அவர்களை நோக்கி தாக்குவோம் என .பீரங்கியை இயக்கும் கால அட்டவனையை உணவு கூடத்தின் அறிவிப்பு பலகையில் அனைவரும் பார்க்கும் படி தொங்கவிட்டிருந்தனர் .பீரங்கி வெடிக்கும்போது பெரும் சப்தம் வரும் எனவே அந்நேரத்தில் அனைவரும் தங்கள் காதுகளை பொத்தி பாதுகாத்துகொள்ளும் பொருட்டு .


   காலையில் சென்றவுடன் உரையாடல் இப்படி தான் இருக்கும் .
  இன்னக்கி எப்ப வெடிக்கும்,
  பத்தே முக்காலுக்கு ,
  இயற் பிளக் இருக்கா உனட்ட ,
  அது நேற்று நம்ம மிலிட்டரிகாரி பிரண்டு தந்தா.
   நீ அவ காப்டன் வெஸ்ட் ஐ  காக்கா புடிசிட்டியா ,உனக்க நேரம் .
  உனக்கு பொறுக்காதே ..................
  வெஸ்ட் ,மே போன்ற பெயர்களில் நிறைய பேர் இருந்தனர் .


  பீரங்கி வெடிக்கும்போது காதுகளை பொத்தி அதிலிருந்து குண்டு செல்வதை பார்ப்பதற்கு அருகிலேயே நிற்போம் .ஆனால் குண்டு வெளியேறுவதை பார்க்க இயலவில்லை .பின்னர் அதை வீடியோ படமெடுத்து காட்டி தந்தனர் .அட்டவணையிட்டு   ராணுவம் தாக்குதல் நடத்தியபோதும் .எங்கள் முகாமை நோக்கிய தாக்குதல் குறையவே இல்லை .
   ஒருநாள் மாலை நான் போர்க் லிப்ட் வாகனத்தில் பொருட்களை தூக்கி கொண்டு கண்டெய்னர்களில் வைத்துகொண்டிருந்தேன் .முருகன் கண்டெய்னரின் அருகில் நின்று கொண்டு சைகை காண்பித்து கொண்டிருந்தான்.எங்களின் மிக அருகில் ஒரு குண்டு விழுந்தது .நான் போர்க் லிப்ட் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி விட்டேன் .சில மீட்டர் தள்ளி நின்று கொண்டிருந்த முருகனின் தொடை பகுதியில் சில கற்கள் தெறித்தது .


   ஜெசிக்கா ஓடி வந்தாள் அவனுக்கு அடிபட்டுவிட்டது என பதறியவளாய் முர்கா ஷோ மீ என்றாள் .உன் கால் சட்டையை கழற்று உன் காயத்தை நான் பார்க்க வேண்டும் என்றபோது .முருகன் வெட்கபட்டு நோ ,நோ என்றான் .


    ஜெசிக்கா சிரித்துகொண்டே என்னிடம் ஷாகுல் டெல் ஹிம் ,நான் அவனுடையதை பார்க்க மாட்டேன் ,அவனுடைய காயத்தை பொறுத்து முதலுதவியும் ,அறிக்கையும் நான் அனுப்பவேண்டும் .அவனது பாண்டை கழட்ட சொல் ஐ வான்ட் டு சி என்றாள் .தம்பி முருகா ரெண்டு புள்ளக்க தாய் அவ ,நம்ம அக்கா சும்ம களத்தி காட்டுடே என்றேன் முருகனிடம் .

   முருகன் வெட்கத்துடன் கால் சட்டையை கழற்றியபோது லேசான காயம்.உடனே அவனை அழைத்து சென்று முதலுதவி செய்து கொடுத்தாள்.அடுத்து தொடர்ந்து வந்த நாட்களில் அனைவருக்கும் குண்டு துளைக்காத தலை கவசமும் ,இடுப்புவரை அணிய ஒரு கவச உடையும்  (ஜாக்கெட் ) கொடுத்தனர் .கொரிய தயாரிப்பான அதன் எடை கிட்டத்தட்ட பதினான்கு கிலோ ,விலை ஆயிரத்தி முன்னூறு அமெரிக்க டாலர்கள் .
  அவ்வளவு எடையுள்ள அந்த கவசத்தை அணிந்து வேலை செய்வது மிக கடினம் .நாங்கள் வெளியே வேலை செய்வது மிக சிரமம் .


   அந்த கவச உடையை பார்த்து ராணுவ வீரர் ஒருவர் கேட்டார் .இடுப்புக்கு கீழே யாரவது சுட்டால் அல்லது காயம் பட்டால் என்ன செய்வது என .அவரும் அதை அணிந்திருந்தார் .

ஷாகுல் ஹமீது ,

16-10-2016

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மீண்டும் தொடங்கிவ்ட்டதல்லவா குண்டுவெடிப்புகளும் காயங்களும்? இப்படி பரபரப்பான சாவின் வாசல்கள் அடிகடி திறந்து காட்டப்படும் சூழலை மனதிலும் நினவிலும் வைத்து அதை எழுத்வதற்கு மிக மிக துணிவும் திடமும் வேண்டும் அது உங்களுக்கிருக்கிறது ஷாகுல்.
    வைனின் மீது உங்களுகும் கோபமும் வருத்தமும் இருப்பினும் அடித்த அனைவரின் சார்பாக மன்னிப்பு கேட்டதும், வைனை அடிக்காமலிருந்ததும் அவன் அடிபடுகையில் அதை முடிந்தவரை தடுக்க முயன்றதும் உங்காளின் விசால மனதை காட்டுகிறது.
    எப்படி இத்தனை நுநன்தகவல்கலை மனதில் வைத்திருக்கிறீர்கள் ? இந்த கேள்வியை இத்தனைபதிவுகளின் பின்னும் கேட்காமலிருக்கமுஇட்யவில்லை.
    கூடரத்துணி ஒரு அமிலத்தில் நனைக்கப்படதும், பீரங்கி வெடிக்கும் நேரம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டதும் அந்த கவச உடையும் அதன் எடையும்ட் பல பெயர்களும், சம்பவஙகளையும், மிக துல்லியமாக எழுதுகிறீர்கள்.பீரங்கி வெடிக்கும் போது காதி செருகிகொள்ளும் ear plug வி வரங்களும் வெடிப்பதை புகைப்படத்தில் பார்த்துக்கொண்டதும் வனை அடித்டவ்ரகள் அந்த நினைவில்;இருந்து சுலபத்ஹ்டில் வெலியேறி இருக்கமாட்டார்கள். அடித குற்றௌணர்வை மறைக்கவே அபப்டி மறந்த்டதுபோல நடித்திருப்பர்ர்கள். அந்த உனர்வும் வெறுப்பும் அடித்ததுமே தீர்ந்திருக்கும் அதன் பின்னர் கடைசி வரை இருப்பது அதன் பெயரிலான குற்றௌணார்வே
    அடுத்த பதிவயும் எழுதுங்கள்
    உண்மையில் உங்களின் தற்போதைய அசாதாரணமான பணிச்சூழலில் கலத்த கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள் தினமும். time zone அன்பதை தினமும் கடக்கிறீர்கள், பகலிலிருந்து பகலுக்கும் இரவிலிருந்து இரவிற்கும் கூட செல்கிறீர்கள். ஆயினும் சோர்வடையாது எழுதுவது மிக பாரட்டப்படவேண்டியது.
    2நாட்கள் விமனபயணத்தில்ல் தாய்னாடு வரும் பலர் jetlock என்று சோர்வக்க இருப்பதை பலமுறைகண்டிருகிறேன்
    உங்களது பணியோ கடல்மார்க்க நகரங்களை இணப்பது. அதில் இத்தனை உற்சாகம் அடைவது எல்லாம் உங்களைப்பொன்ற வாழ்வின் மீதானஆன பெருவிருப்பம் கொண்டவர்களுக்கே சாத்தியம்
    தொடர்ண்டு எழுத வாழ்த்துக்களுடன்
    அக்கா

    ReplyDelete
  3. முர்கா,முர்கா.ஆபத்துக்கு எதுவுமே பாவமில்லை முர்கா.
    பதிவு அருமை.
    எதுவும் தவறாக யாரும் பதிவிட வேண்டாம்.

    ReplyDelete
  4. ,நம்ம அக்கா சும்ம களத்தி காட்டுடே என்றேன் முருகனிடம்

    ReplyDelete