Tuesday, 27 January 2026

நீண்ட காத்திருப்பு 1

  

காலை சூரியன் வெளிவந்தபோது

     கப்பலிலிருந்து சந்தோஷ் அவ்வப்போது அழைத்து செய்திகளை சொல்வார். கப்பல் மெக்ஸிகோ சென்ற மறுநாள்  ஊருக்கு செல்பவர்களுக்கான மெக்ஸிகோ விசா விண்ணப்பித்திருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கான டிக்கெட்டும் கிடைத்ததால் இருபத்தி எட்டாம் தேதி கப்பல் செல்வது உறுதியாகியிருந்தது.

  கடந்த சனிக்கிழமை சந்தோஷ் அழைத்தபோது கப்பல் மீண்டும் ஹூஸ்டனுக்கு ஒன்பதாம் தேதி வருவதாக சொன்னார். அன்று மாலையே என்னுடன் இருந்த கேடட் ருமேனியா அலுவலகம் அவனுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை காண்பித்தான்.

    விடுதியில் இருக்கும் மூவருக்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டாம் என எழுதியிருந்தது.கப்பல் வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஹூஸ்டனுக்கு வரும் என்றார் சந்தோஷ்.

    எனது மெக்ஸிகோவிற்கான டிக்கெட் எப்போது வேண்டுமானலும் ரத்து செய்வார்கள் என்பதை நான் எதிர்பார்த்துகொண்டிருந்தேன்.

   திங்கள்கிழமை அதிகாலை மும்பை அலுவலகம் எனது டிக்கெட்டை ரத்து செய்து ஹூஸ்டனுக்கு கப்பல் வரும் வரை  காத்திருக்குமாறு மின்னஞ்சல் அனுப்பியது. 

இலைகளை உதிர்த்த மரம் 

பச்சையாக செடிகள் 


      காப்டனின் சிறு தவறு ஜனவரி பதினைந்து முதல் பத்தொன்பதாம் தேதி வரை கப்பல் ஹூஸ்டனில் நின்றிருந்தபோது படகு ஒன்று ஏற்பாடு செய்து உணவுபொருட்கள் வாங்கி அதே படகில் பணியாளர் மாற்றம் செய்யதவறியது  நாங்கள் விடுதியறையில் காக்கும்படி ஆகிவிட்டது.

  இன்று  நல்ல வெயில் அடித்தது குளிரும் குறைந்தது.இதை எழுதிகொண்டிருக்கும் போது இரவு ஏழு மணிக்கு ஐந்து டிகிரியாக இருந்தது.



    இன்றும் காலை பத்து மணிக்கு விடுதியிலிருந்து சென்ற வண்டியில் பத்து மணிக்கு சென்று Tea House காபி ஒன்று குடித்துவிட்டு பன்னிரெண்டரை மணிக்கு திரும்பி வந்தோம்.

 கேடட் டடுர் எழுபது டாலரில் சூ (shoe) ஒன்று வாங்கினான்.வேறு நிறுவனத்தை சார்ந்த தமிழரான முதன்மை இஞ்சினியர் துவேஷ் இன்று காலை கப்பலுக்கு புறப்பட்டு சென்றார்.

   இவ்வாறாக ஹூஸ்டனின் காத்திருப்பு நாட்கள் நீண்டுகொண்டே செல்கிறது. ஒன்பதாம் தேதி கப்பல் வருமென எதிர்பார்க்கபடுகிறது. அதை உறுதியாக சொல்ல இயலாது.

   நாஞ்சில் ஹமீது.

மேலும்.


Monday, 26 January 2026

நீண்ட காத்திருப்பு


  

          கடந்த ஞாயிறு மாலை ஹில்டன் விடுதி வரவேற்பறை போனில் அழைத்து. இன்று இரவு நீங்கள் இங்கே தங்க முடியாது. மூட்டை,முடிச்சுகளுடன் கீழே வாருங்கள் என்றார்கள்.

   ஹில்டன் வசதியான பெரிய நட்சத்திர விடுதி. இரு தினங்களாக இங்குள்ள கான்பாரன்ஸ் கால்களில் கூட்டங்கள்,பயிற்சிகள் நடக்கிறது. 

   தினமும் மாலை நான்கு மணிக்கு உள்ளூர் முகவரின் மின்னஞ்சல் வந்தபின் எங்கள் தங்கும் அறையை நீட்டிப்பார்கள்.

  இப்போது மேலும் மூன்று குழுக்களின் பயிற்சி கூட்டங்கள் நடக்கவிருப்பதால் எங்கள் மூவரையும் காலி செய்ய சொன்னார்கள்.

   எனது பைகளுடன் கீழே வந்தேன். என்னுடன் கப்பலுக்கு வரவேண்டிய டடுர்  வரவேற்பறையில் காத்திருந்தான். அறை சாவியை கொடுத்ததும். "மன்னித்து கொள்ளுங்கள் உங்களது அறையை எங்களால் மேலும் நீட்டிக்க இயலவில்லை அதிகமான புக்கிங் உள்ளது. புரிந்துகொண்டதற்கு நன்றி" என கூறினார்.



       ஏராளமானோர் விடுதிக்கு வந்துகொண்டே இருந்தனர்.ஹில்டனின் மேலாளர் ஒருவர் வேறு விடுதியில் அறையை தேடிக்கொண்டிருக்கிறார். இங்கே அருகில் தான் இருக்கும் கொஞ்சம் காத்திருங்கள் என்றார்.



   நண்பர் சிவா வந்திருந்தார். அவரது மொபைல் எண்ணை கேடட் அமோவிடம் கொடுத்துவிட்டு காரில் இந்திய உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டோம். 

    சாப்பிட்டு முடியும்போது அமோ அழைத்து "நம்மை அழைத்து செல்ல இன்னும் சில நிமிடங்களில் வண்டி வருகிறது"என்றான்.



   நான் விடுதிக்கு வந்து சேரவும் வண்டி வந்தது. நண்பர் சிவா விடைபெற்று சென்றார். ஹில்டனிலிருந்து அரை மணிநேர பயணத்துக்குப்பின் பசடேனா என்னும் இடத்திலுள்ள குவாலிட்டி இன் எனும் விடுதியை அடைந்தோம்.



  இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் விடுதி இது. அறையும் இரவுணம் தந்தார்கள். காலையில் எட்டாவது மாடியிலுள்ள உணவகத்துக்கு சென்றபோது காலை உணவாக அமெரிக்க உணவுகளுடன் இட்லி சாம்பாரும் இருந்தது. சைவ உணவும்,சப்பாத்தி,பருப்பு குழம்பு வகைகளும் மதிய,இரவு உணவுகளில் இருந்தது.



   வேறு நிறுவன கப்பல்களில் இணைவதற்கு வந்தவர்களில் மதுரையை சார்ந்து பிரபு எனும் இரண்டாம் இன்ஜியர்,பாண்டிச்சேரி விக்னேஷ், சென்னையை சார்ந்த முதன்மை இஞ்சினியர் ஒருவரும் இங்கே இருந்தார்கள்.

  இங்கே அருகிலேயே வணிக வளாகங்கள் நிறைய இருந்தது.காலை பத்து மணிக்கு இங்கிருத்து வண்டி ஒன்று சற்று தூரத்தில் இருக்கும் வால்மார்ட்,கல்ப் கேட் வணிக வளாகத்திற்கு அழைத்து சென்று,இரண்டு மணிநேரத்திற்கு பிறகு அழைத்து வருகிறார்கள்.




   இரண்டாம் நாள் மதுரை,பாண்டி கப்பல்காரர்கள் சென்றுவிட்டனர்.எங்கள் நிறுவன கப்பல் ஒன்றில் இணைய வந்த நால்வரில் கேரளாவின் போசன் நாசர் மற்றும் ஆந்திராவின் ராம் பாபு முன்பே என்னுடன் பணி புரிந்தவர்கள்.

   இங்கேயே இன்னும் சில நாட்கள் இருந்தால் முன்பு என்னுடன் பணிபுரிந்த பலரையும் சந்தித்து விடலாம் என எண்ணினேன்.

    எனது மும்பை அலுவலகம் மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டது கப்பலுக்கு போய்விட்டதை உறுதி செய்யுமாறு. இன்னும் விடுதியறையில் தான் இருக்கிறேன். கப்பல் மெக்ஸிகோவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. நான் எப்போது கப்பல் ஏறுவேன் என எனக்கு யாரும் இதுவரை சொல்லவில்லை என்று பதிலளித்தேன்.

  அடுத்த சில நிமிடங்களில் விரைவில் தொடர்புகொள்கிறேன் அதுவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டினார் என் மேலாளர் தர்சனா.

  அடுத்த ஒரு மணிநேரத்தில் மும்பை அலுவலகம் இருபத்தி எட்டாம் தேதி மெக்ஸிகோ செல்வதற்கான விமான டிக்கெட்டை அனுப்பியது.

   வேறு வழியே இல்லை இங்கேயே இருக்கவேண்டியது தான். பக்கத்து ஊரில் வசிக்கும் நண்பர் செந்திலை அழைத்தபோது  "இங்கே பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,இப்போது பயணம் செய்வது சாத்தியம் இல்லை" என்றார். 

   


ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில்  பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கபட்டிருந்தது. பனிப்புயலில் வீட்டைவிட்டு வெளியே செல்வது பாதுகாப்பில்லை. நான் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்திலும் பனிப்புயல் எச்சரிக்கை இருந்தது.




 நான் தற்போது தங்கியிருக்கும் பசடேனாவில் வெப்பம் மைனஸ் மூன்று டிகிரிவரை சென்றது. ஆனால் பனி விழவில்லை. அமெரிக்காவின் நீயுயார்க்,நீயு ஜெர்ஸி மற்றும் பல பகுதிகளை பனிப்ப்புயல் கடுமையாக தாக்கியது.

  நாஞ்சில் ஹமீது.

மேலும் ...

Wednesday, 21 January 2026

ஹூஸ்டன் நாட்கள்

     


      கப்பல் பணியில் இணைவதற்காக விமானம் ஏறி வந்துவிட்டால் ஒரு இரவு ஓய்வுக்கு மனம் எங்கும்.கப்பலுக்குள் போய்விட்டால் உடனே செய்ய வேண்டிய வேலைகள் தயாராக இருக்கும்.  நீண்ட விமான பயணத்திற்குபின் உடலும் மனமும் களைத்து,இரவு,பகல் நேர வித்தியாசம் தரும் சோர்வு,தள்ளிப்போன,உணவு,குளியல்,உறக்கம் என குழப்பமாக இருக்கும்.

       இம்முறை பசுபிக் கப்பலில் இணைவதற்காக   கடந்த வியாழன் (15- jan- 2026) அதிகாலை விமானம் திருவனந்தபுரத்திலிருந்து.புதன்கிழமை இரவு பதினோரு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டேன்.



   இருபத்தியொரு மணிநேர விமான பயணம் காத்திருப்பு எல்லாம் சேர்த்து ஒரு நாளுக்கு மேலாக ஆன பயணம்.வியாழன் மாலை ஐந்து மணிக்கு ஓட்டுனர் ஹூஸ்டனிலுள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலில் கொண்டு விட்டார்.

  


ஐந்தாவது மாடியில் அறை. கப்பலுக்கு போகும்முன் கிடைக்கும் முழு இரவு தூக்கம் காலையில் புத்துணர்ச்சியை தரும்.குளித்து  ஆடை மாற்றி இரவுணவுக்குபின் ஒன்பது மணிக்கு தூங்க சென்றேன். கப்பல் துறைமுகத்தை விட்டு சற்று தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.



       காலையில் கப்பலுக்கு போகலாம் என எண்ணியிருந்தேன். கப்பல் துறைமுகம் வரவேயில்லை. காலையில் நடைபயிற்சி,நல்ல வெயில் அடிக்கும் உச்சி வேளையில் வெளியே  ஒரு நடை. 

  



ஞாயிறு மதியம் ஹூஸ்டனில் வசிக்கும் நண்பர் சிவா வந்திருந்தார். இந்திய உணவகம் சென்று அரிசி சோறு,பொழிச்சது எல்லாம் சாப்பிட்டோம். 

  



அருகிலேயே இருந்த மாலுக்கு சென்று மோட்டார் மேன் சந்தோஷ் கேட்ட வாட்ச் ஒன்று வாங்கினோம். இங்கே புத்தக கடை இருப்பதை கண்டு உள்ளே அழைத்து சென்றார். என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய புத்தகக்கடையை நான்  பார்த்ததே இல்லை. நிறையபேர் வாசிப்பு பழக்கமுள்ளவர்கள் என்பதை இந்த கடை காட்டுகிறது.



   ஏராளமான மாணவர்கள் அங்கே குவிந்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகரான சிவா அறம் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான stories of the true இருக்கிறதா என தேடினார். ஸ்டாக் இல்லை என சொன்னது. ரூமியின் கவிதை நூலான வாட்டர் நூலை எனக்கு வாங்கி தந்தார். நான் அவருக்கு கவிதை நூல் ஒன்று பரிசளித்தேன்.



   எனது விடுதியறைக்கு திரும்பி வந்து ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவரது இல்லம் திரும்பி சென்றார்.



   திங்கள்கிழமை நடந்தே வெளியே சென்று வந்தேன். உணவகத்தில் எனது கப்பலுக்கு வரும் பிலிப்பினோ கேடட் அமோவை பார்த்தேன். வியாழன் மாலை வந்ததாக சொன்னான்.



 திங்கள் மாலை கப்பல் மெக்ஸிகோ புறப்பட்டு விட்டதாக மோட்டர் மேன் சந்தோஷ் சொன்னார்.ஹூஸ்டன்,முகவர் மற்றும் மும்பை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். காத்திருக்க சொன்னார்கள்.இரவுணவின் போது இன்னுமொரு கேடட் ருமேனியாவின் ட்டுரை பார்த்தேன்.

   நேற்று காலை நண்பர் சிவா அழைத்து   விடுதியிலிருந்து செல்லும் வாகனத்தில் விமான நிலையம் போய் வாருங்கள் என்றார்.




  அரை மணி நேரத்திற்கு ஒருமுறை  விமான நிலையம் செல்லும் சட்டில் பஸ்கள் உள்ளது. நாங்கள் மூவரும் அதிலேறி ஜார்ஜ் புஷ் இன்டெர்நேஷனல் விமான நிலையம் சென்றோம். விடுதியிலிருந்து ஆறு நிமிட பயணம் மட்டுமே.அங்கே 'சி' டெர்மினலில்  இறங்கி சுற்றிவிட்டு எ,பி,சி,ட,ஈ டேர்மினல்களை இணைக்கும் ரயிலில் ஒரு பயணம் போனோம். பி டெர்மினலில் இறங்கி மீண்டும் ஒரு நடை சி வரை. வெளியே வந்தபோது ஹோட்டலுக்கு செல்லும் பஸ் தயாராக இருந்தது. ஏறிக்கொண்டோம்.



 இந்த விடுதி விமான பணியாளர்களான பைலட்,பணிப்பெண்களால் எப்போதும் நிரம்பியிருக்கிறது.விமானம் புறப்படும் பெரிய திரை ஒன்று இங்கே வைக்கப்பட்டுள்ளது. 



  உணவு கூடத்தில் பேச்சுக்கள் எப்போதும், முப்பது மணிநேரம் ஏர் டைம்,நான் விமானத்தில் ஏறியபோது இப்படி இருந்தது என மொபைலில் படத்தை காட்டிவிட்டு அதை சரி செய்ய இரண்டு மணிநேரமானது  பின்னர் விமானத்தை கிளப்பினேன்.



   விமானம் தரை இறங்கும்போது வானிலை மோசமாகி கஷ்டப்பட்டுதான் விமானத்தை தரையிரக்கினேன் என உரையாடால்கள் கேட்கும்.

     கப்பலுக்கு செல்பவர்களும் நிறையப்பேர் இங்கு வந்து செல்கின்றனர். இரு தினங்களுக்கு முன் கார்னிவல் ட்ரீம் எனும் கப்பலுக்கு செல்லும் அறுபது பணியாளர்களை பஸ் ஒன்றில் ஏற்றி சென்றார்கள்.

 நாகலாந்தை சார்ந்த பெண் ஒருத்தி உட்பட ஆறு இந்தியர்களும் அதில் அடக்கம்.மறுநாள் கேரளாவை சார்ந்த ஒருவரை சந்தித்தேன். கொச்சியில் விமானம் தாமதமானாதல் ஒரு நாள் பிந்தி விட்டது என்றார். கப்பல் ட்ரீம் புறப்பட்டுவிட்டு மயாமியில் சென்று கப்பல் ஏற மறுநாள் புறப்பட்டு சென்றார்.

   இன்று காலை உள்ளூர் முகவர்            பதிலனுப்பினார்.மெக்ஸிகோவின்அல்டா மிரா எனும் துறைமுகத்திற்கு கப்பல் வருகிறதுவிமான சீட்டு வந்ததும் அங்கே அனுப்புகிறோம் என.

  நாஞ்சில் ஹமீது ,

21 - jan - 2026

Tuesday, 20 January 2026

ரத்தாகும் கப்பல் பயணம்

    


     கடந்த வியாழன் இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு பணியில் இணைவதற்காக விமானம் ஏறி ஹூஸ்டன் வந்தடைந்தேன்.இன்னும் விடுதியறையிலேயே காத்திருக்கறேன்.


2007 ஆம்ஆண்டு நீயுயார்க்கில் கப்பலில் இணையச்சொல்லி அவசர அழைப்பு. சென்னைக்கு சென்று மருத்துவ பரிசோதனை முடித்து காத்திருந்தேன்.

   இரு தினங்கள் சென்னையில் இருந்தபின். பயணம் ரத்தான தகவல் வந்து வீட்டிற்கு திரும்பி வந்தேன்.மேலும் இருமுறை  வீட்டிலிருந்து விமான நிலையம் வரும்முன் தொலைப்பேசியில் அழைத்து பயணம் தாமதமானது,ரத்தாகி விட்டது எனவும் தகவல்கள் கிடைக்கும் அதில் பெரு நஷ்டம் ஏதும் இல்லை.



  ஒரு மாதம் வரை பயணம் தள்ளிபோயிருக்கிறது. 2023 இல் எல் என் ஜி அலையன்சுக்காக மும்பை லண்டன் வழியாக ஜிப்ரேல்டோர் வரை பயணித்து இரவு விடுதியில் தங்கினோம்.மறுநாள் மாலை ஆறு மணிக்கு தயாராக இருக்க சொன்னார்கள்.

   வேறு நிறுவனங்களை சார்ந்த கப்பல் பணியாளர்களும் இருந்தனர்.மாலையில் நான் விடுவிக்க வேண்டிய தினேஷ் அழைத்து ரத்தாகி போனாதாக சொன்னார். வீட்டிற்கு செல்ல காத்திருந்த அவர்கள் பயண பைகளை படகில் இறக்குவதற்காக காத்திருந்தபோது காப்டன் அழைத்து செய்தியை சொன்னபோது ஏமாற்றமாகி போனார்கள் கப்பலிலிருந்து இறங்க வேண்டியவர்கள்.

    கடும் காற்று கராணமாக ஜிப்ரேல்டோர் துறைமுகம் அன்று தற்காலிகமாக மூடப்பட்டது.அதனால் படகில் சென்று கப்பலில் ஏற வேண்டிய நாங்கள் செல்ல முடியவில்லை. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் போனி துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் ஜிப்ரேல்டார் அருகில் வரும்போது தேவையான உணவுபொருட்களை ஏற்றும் திட்டம் இருந்தது.



  உணவு பொருட்களை ஏற்றுவதற்காக கப்பலின் வேகத்தை குறைக்கும் போது பணியாளர் மாற்றமும் திட்டமிடப்பட்டிருந்தது.இயற்கை ஒத்துழைக்காததால் கப்பல் நேராக போனி நோக்கி நில்லாமல் சென்றுவிட்டது.

    நாங்கள் மூவர் மூன்று தினங்கள் ஜிப்ரேல்டரை முழுமையாக சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் லண்டன்,மும்பை வழியாக திருவனந்தபுரம் போய் வீட்டுக்கு சென்றேன்.

முழுமையாக கண்ட ஜிப்ரெல்டர்



  கப்பல் காரனுக்கு இந்த பயணங்கள் தடைபடுதல்,ரத்தாதல்  அவ்வப்போது நிகழ்கிறது. 

  கோவிட் காலத்தில் நடந்ததை கொஞ்சம் விரித்து நாவலாக விரிக்கலாம். சிங்கப்பூர் கெப்பல் ஷிப் யார்டில் ரிப்பேர் பணி முடியும் நாளில் பணியாளர் மாற்றம் இருந்தது. அதற்காக இந்தியாவிலிருந்து ஐந்துபேர் சிங்கை சென்றனர். ஷிப் யார்டில் இருந்து கப்பல் வெளியே வந்து நங்கூரம் பாய்ச்சும் போது பணியாளர் மாற்றதிற்கு தயாராக இருந்தனர்.



 கப்பலை தண்ணீரில் இறக்கியபோது ஒழுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கப்பல் யார்டில் கட்டப்பட்டது.சிங்கப்பூர் சட்டம் எழுநாட்களுக்குள் மாலுமிகள் கப்பலில் ஏறவேண்டுமென வகுத்துள்ளது. 

  விடுதியறையில் தங்கியிருந்த மாலுமிகளை இந்தியாவிற்கு  அனுப்பவேண்டும். அதற்கு கோவிட் சோதனை செய்ய  சிங்கப்பூரில் அந்த வசதி அப்போது இல்லை.எனவே கோவிட் சோதனைக்கு அவர்களை ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமுக்கு அனுப்பியது. 



  அங்கே ஒரு விமான நிலைய விடுதியில் மூன்று தினங்கள் தங்கிவிட்டு தில்லிக்கு அடுத்த விமானம். சிங்கையிலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கையில் காலே அருகில் வரும்போது வேகத்தை குறைத்து அவர்களை ஏற்றிவிட புதிய திட்டம் வகுக்கப்பட்டது.

   இதியாவில் இருந்து அப்போது இலங்கைக்கு விமானம் இல்லை தில்லியில் இருதினம் தங்கிய அவர்கள் மாலி தீவுக்கு பயணித்தனர். தில்லி குடியுரிமை அதிகாரிகள் அவர்களை மாலி செல்ல அனுமதிக்கவில்லை.



  அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மாலி சென்று விடுதியறையில் ஏழு நாட்கள்வரை தங்கியபின் அருகிலுள்ள இலங்கைக்கு விமானம் கிடைத்தது. அங்கும் சில தினங்கள் விடுதியில் தங்கியபின் காலேவில் ஓடும் கப்பலில் சாடி ஏறிக்கொண்டனர். இருபது நாட்களுக்கு மேல் அலைக்கழிக்கபட்டு கப்பலில் இணைந்தனர்.

 நான்   பதினைந்தாம் தேதி அதிகாலை திருவனந்தபுரத்திலிருந்து விமானம் ஏறி தோஹா வழியாக ஹூஸ்டனுக்கு இருபத்தி ஒரு மணிநேரம் பயணம் செய்து இறங்குகையில் இங்கு பதினைந்தாம் தேதி மாலையாக இருந்தது.



  கப்பலிலிருந்த மோட்டார் மேன் சந்தோஷ் வந்துவிட்டோம் காலையில் நங்கூரம் பாய்ச்சுவோம் சந்திப்போம் என போனில் அழைத்து சொன்னார்.

    கப்பல் ஹூஸ்டன் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்றது.வெள்ளியும்,சனியும் தகவல் ஏதும் இல்லை.உண்பதும்,உறங்குவதும் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை.

 ஞாயிறு காலை ஹூஸ்டன் முகவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கப்பல் துறைமுகம் வருவது ரத்தாகிவிட்டது,வேறு துறைமுகம் ஏதும் உறுதியாகவில்லை,தகவலுக்காக காத்திருக்கிறோம் என மரியானா என்பவர் பதிலனுப்பினார்.



   கப்பலிலிருந்து சந்தோஷ் திங்கள்கிழமை தகவல் வரும் வாய்ப்பு உள்ளதாக சொல்லியிருந்தார். மாலை ஐந்துமணிக்கு கப்பல் நங்கூரம் உருவப்பட்டு மெக்ஸிகோ நோக்கி நகர்வதாக சொன்னார்.

  மாலையில் மரியானாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கப்பல் புறப்பட்ட விசயத்தை சொல்லி, மேலதிக தகவலுக்காக காத்திருப்பதாக சொன்னார். 

 எனது மும்பை அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். கொஞ்சம் பொறு,மிக விரைவில் பதிலளிகிறேன் என்றார் எனது மேனேஜர் தர்சனா.

    ஒரு முழு நாள் தாண்டிய பின்பும் ஒரு தகவலும் வரவில்லை.மெக்சிகோ சென்று கப்பலில் ஏறுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் செய்ய முடியும் என்றால் அங்கு சென்று பணியில் இணைய வாய்ப்பு உள்ளது. 

    கப்பலுக்கு சரக்கு ஏற்றுவதற்கான எந்த ஆணையும் இதுவரை உறுதியாகவில்லை.அடுத்த என்ன நடக்கும் என்பது தெரியாமலே விடுதியறையில் நாட்கள் தொடர்கிறது.

 20-jan-2026,

நாஞ்சில் ஹமீது.

முழுமையாக கண்ட ஜிப்ரெல்டர்





Saturday, 17 January 2026

ஹூஸ்டனில்

     



     பதினாறு மணிநேர பயணத்திற்குப்பின் மிக பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார் பைலட்.ஹூஸ்டனில் அதிக குளிரில்லை. நான் குளிருக்கான ஆடைகளை பெட்டியில் போட்டு லக்கேஜில் போட்டிருந்தேன்.

   இமிகிரேஷனில் மிக நீண்ட வரிசை குறைவான கவுண்டர்களே இருந்ததன.மூன்றரை மணிக்கு விமானம் தரையிறங்கியும் ஐந்து மணிக்கு தான் வெளியே வந்தேன்.

   இமிகிரேஷன் அதிகாரி "எங்கே செல்கிறாய்" எனக்கேட்டார். "கப்பலில் இணைய" என்றேன். 

"முன்பு இங்கே வந்திருக்கிறாயா"?

"பலமுறை" என்றேன்.

  போட்டோ எடுத்துவிட்டு அனுப்பிவைத்தார்.பாஸ்போர்டில் முத்திரை பதிக்காமலே.



   விமான நிலையத்தின் அருகிலேயே ஹில்டனின் டபுள் ட்ரீ விடுதியில் ஐந்தாவது மாடியில் அறை.ஐந்தே முக்காலுக்கே கதிரணைந்து விட்டது.குளித்து மக்ரிப் தொழுதுவிட்டு காத்திருந்தேன்.உடனே தூங்கிவிட்டால் இரவில் தூக்கம் வராது ஜெட் லாக்கை விரட்ட இரவில் தூங்கினால் தான் பகலில் விழிக்க முடியும்.



   எட்டரை மணிக்கு மேல் உணவுண்டு வந்தேன்.நீயூ யார்க் ஸ்டேக் ட்ரை பண்ணினேன். ஒன்பதரைக்கு தூங்கினேன் அதிகாலை மூன்றரைக்கே விழித்துகொண்டேன்.   ஆறேகாலுக்கு மேல் தான் அதிகாலை பஜர் தொழுகை. ஏழே காலுக்கு சூரிய உதயம். தொழுகைக்குப்பின் காலை நடை சென்றேன்.




   சாலையில் மனிதர்களே இல்லை வாகனங்கள் விரைந்து கொண்டே இருந்தது. வானில் பறவை கூட்டங்கள் போல விமானங்கள் மேலெழுந்து பறந்துகொண்டே இருந்தது. 

  ஒரு மணிநேர நடைக்குப்பின் அறைக்கு திரும்பிவந்து குளித்து காலைவுணவக்கு சென்றேன். காலை பதினோரு மணிக்கு தூக்கம் அழுத்தியது. பகலில் தூங்க கூடாது என்றிருந்தேன். ஆனால் முடியவில்லை படுக்கையில் சரிந்து விழுந்தேன்.

   அறைக்கதவை தட்டும் சப்தம் கேட்டு விழித்தேன் அறையை சுத்தம் செய்யும் ஒரு குண்டான ஆங்கிலம் அறியாத பெண் நின்றுகொண்டிருந்தாள்.பின்னர் என சொல்லிவிட்டு மணியை பார்த்தேன் பகல் மூன்று மணி அவரசமாக லுகர் தொழுதுவிட்டு நடக்க சென்றேன். ஒருமணிநேரம் நடந்துவிட்டு வந்து அஸர் தொழுதபின் அமர்திருந்தேன்.

   மக்ரிப் தொழுகை முடிந்து மீண்டும் தூங்கினேன்.மதியம் சாப்பிடவில்லை இருந்தும் பசியில்லை .இரவுணவுக்கு சென்றேன். Avocado Salmon Salad  மற்றும் Awlins Salmon Croquettes with Creole Shrimp Sauce இரு பிளேட்டுகள் வாங்கி சாப்பிட்டேன் .கொஞ்சம் அதிகம்தான். பதினோரு மணிக்கு தூங்கி அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு தட்டியது.

   ஐந்தரை மணிக்கு சுக்கிரி மீட்டிங்கில் கலந்துகொண்டேன்.எட்டு மணிக்குமேல் குளித்து வெளியே சென்றபோது நல்ல குளிர் இன்று வெயில் வந்தபின் நடக்க செல்லலாம் என உள்ளே வந்து காலை உணவு சாப்பிட்டேன்.இன்றும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

  இரவு கப்பலில் இருக்கும் மோட்டேர்மேன்  சந்தோஷ் இன்னும் செய்தி ஏதும் வரவில்லை என்றார்.கப்பல் இன்னும் துறைமுகம் வரவில்லை. நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

  இனி திங்கள்கிழமை தான் தகவல் கிடைக்கும்.கப்பல் காரனுக்கு கப்பல் தான் வீடு. விடுதியறையில் இருந்தால் சம்பளமும் கிடையாது. ஒரு சிறு அலவன்ஸ் மட்டுமே.சீக்கிரம் கப்பலுக்கு போய்விட்டால் மீட்டர் ஓட துவங்கிவிடும்.நாளை ஞாயிறும் இங்கே விடுதியில் இருக்கவேண்டி வரலாம்.

நாஞ்சில் ஹமீது,

17 - 01- 2026


Thursday, 15 January 2026

பசிபிக் சக்சஸ்

    


  இம்முறை விடுமுறை நீண்டு விட்டது. ஐந்தரை மாதங்கள்.

சம்பளமில்லாமல் விடுமுறை நாட்களை கடத்துவது கொஞ்சம் கடினம் தான்.

அக்டோபர் மாதம் முதல்  பணியில் இணைய தயாராக இருக்கிறேன் என்று விருப்பத்தை சொல்லியிருந்தேன்.

பல முறை அழைத்தும் காத்திருக்க சொன்னார்கள்.

திங்கள் கிழமை மதியம் பால் காய்ச்சும் புதிய வீடு ஒன்றுக்கு சென்று மட்டன் பிரியாணி உண்டபின் வீட்டை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மொபைல் அடித்த ஒலி என் மேனேஜர் தர்சனாவின் அழைப்பு.

"ஷாகுல் நாளை மெடிக்கல் டெஸ்ட்க்கு போக முடியுமா"

"தேதி என்ன, எந்த கப்பல்"என கேட்டேன்.

"பசிபிக் சக்சஸ், இரண்டே நாட்களில் செல்ல வேண்டியிருக்கும்".

அன்று மாலை தர்சனா மீண்டும் அழைத்து "12 மணிநேரம் எதுவும் உண்ணாமல் பாஸ்டிங்கில் செல்ல வேண்டும், நேரம் குறைவாக இருக்கிறது " என்றார்.

மருத்துவ சோதனை பாசாகமல் போனால் வேறு ஒருவரை தயார் செய்ய முடியாமல் போகும்.

செவ்வாய் கிழமை தூத்துக்குடி சென்று மருத்துவ சோதனை முடியும் முன்பே எனது விமான சீட்டை அனுப்பி விட்டார்கள்.டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் செல்ல வேண்டும். 

(எனது நூல் வந்துள்ளது. கண்களால் பார்க்காமல் ,கைகளால் தொடாமலே சென்றே ஆக வேண்டிய கட்டாயம். இன்னும் ஒரு வாரம்....  இருந்து விட்டு போக மனம் ஏங்குகிறது.)


செவ்வாய் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து இறங்கி வடசேரி பள்ளியில் கடமையான அதிகாலை ஃபஜர் தொழுகையை நிறைவேற்றியபின் பேருந்து ஏறினேன்.9 மணிக்கு தூத்துக்குடி ரோச் காலனியில் உள்ள பாலாஜி மெடிக்கல் சென்றருக்கு போய்விட்டேன்.

மருத்துவ சோதனை முடிந்து நாகர்கோவில் வரும்போது மாலை 5 ஐந்தரை மணி.7 மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீடு சென்று சேர்த்தேன்.

புதன் கிழமை காலை விடுபட்ட சாதனங்களை வாங்கி வந்தேன். மாலை அசர் தொழுகைக்குப்பின் முடி வெட்டி தயார் ஆனேன். நண்பர் ஸாம் மனைவியுடன் வந்தார். உம்மா, சகோதரி அஜிதா,அஜிதாவின் பேத்தி பிதா பசீரா மைனியும் வந்திருந்தனர்.

 கப்பலிலிருந்து மோட்டார் மேன் சந்தோஷ் இரண்டு தொப்பி வாங்கி வர சொன்னார். மகன் ஸாலிமிடம் வாங்கி வர சொன்னேன்.

 சுனிதாவின் வாப்பா, உம்மா, அக்கா சமீலா, மச்சான் கபீர்,தங்கை சகிலா, மகள் பஸீகா, ஆதில் வீட்டிற்கு வந்திருந்தனர். இரவுணவாக கோழி குழம்பு வீட்டில் சமைத்து  இடியாப்பம், பரோட்டாவும் எதிர் வீட்டில் வாங்கி கொண்டோம்.

நான் குடியிருக்கும் பகுதியில் நடை பயிற்சி செய்யும் நண்பர்கள் ஜெய்லானி,முபாரக், ரோஷன் நியாஸ், ஷாகுல், செய்யது ஆகியோரும் இரவு 10 மணிக்கு இல்லம் வந்து சந்தித்து பயணத்திற்கு துவா செய்து சென்றனர்.

இரவு 11 மணிக்கு கார் வந்தது. பாஸ்கர் அண்ணா "எந்த ஏர்போர்ட் போன ட்ரிப் போல கொளப்பம் இல்லியே" என சிரித்தார்.சுனிதாவும், சல்மானும் என்னுடன் வந்து விமான நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

  திருவனந்தபுரம் அதிக கூட்டம் இல்லாத சிறிய விமான நிலையம் .குடியுரிமை,செக்யூரிட்டி செக் முடித்து மிக எளிதாக  வாயிலுக்கு வந்தேன்.





E immigration Link மேலே உள்ளது 

இந்தியாவில் இப்போது fast track e immigration  துவங்கபட்டுள்ளது. அதற்காக பதிவு செய்து ஒப்புதல் பெற்றேன். அடுத்த முறை முதல் இன்னும் எளிதாக விரைந்து செல்ல முடியும்.பாஸ்போர்ட் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் மற்றும் ஒரு போட்டோ தனித்தனியாக அப்லோட் செய்தால் போதும். உங்கள் படிவம் ஏற்கப்பட்டது என்ற ஒப்புதல் வந்தபின் கைரேகை பதிவு செய்யதால் போதுமானது.

 தோகா செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் சரியாக அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. தோகாவில் ஐந்தே முக்காலுக்கு இறக்கி விட்டார்கள். அடுத்த விமானம் 8 மணிக்கு. நண்பர் திரைப்பட இசையமைப்பாளர் ராலே ராஜன் சென்னைலிருந்து வரும் விமானம் ஆறே காலுக்கு இறங்க வேண்டும். கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.

ஆறரை மணி வரை அவரை காணாததால் நான் சென்று விட்டேன். தோகா Hamad international airport கொஞ்சம் பெரிய விமான நிலையம். எனக்காக வாயில் e கேட்டுக்கு ரயில் பிடித்து செல்ல வேண்டியிருந்தது.





இங்கே மரைனர் lounge இருக்கிறது.கப்பல் பணியாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். உணவு பானங்கள்,smoking room, குளியல் அறை என வசதிகள் உள்ளன.

 காலை உணவாக பால் ஊற்றி தேன் கலந்து சீரியல்ஸ் , மபின்,குரோசென்ட் மற்றும் குடிக்க ஆப்பிள் ஜுஸ் எடுத்துக்கொண்டேன்.



ஹூஸ்டன் செல்லும் அடுத்த விமானத்துக்க e gate சற்று தொலைவில் இருந்தது நேரம் குறைவாக இருந்ததால் வேகமாக சென்றேன்.

டூட்டி ப்ரீ கடையில் 25 டாலர் மதிப்பில் 1 kg பேரீச்சம் பழம் வாங்கி கொண்டு கத்தார் ஏர்வேஸ் வழங்கும் பிரிவில்லேஜ் அட்டையில் கழித்து கொண்டேன். கேசியர் மோனிஷா "ஸார் மலையாளி யா ணோ" என கேட்க தவறவில்லை.

  ஹூஸ்டன் செல்லும் விமானம் டோகாவிலிருந்து 8 மணிக்கு பறக்க தொடங்கியது. 16 மணி நேரம் பயணம் முப்பத்தி ஆறாயிரம் அடியில் பறந்துகொண்டிருக்கிறது. சாப்பிட ஏதாவது தந்து கொண்டே இருக்கிறார்கள்.




காலையில் இடியாப்பம் சட்னி, சாம்பார், சிக்கன் சாசேஜ், ரைஸ் வித் சிக்கன் கறி இருக்கிறது என்றாள் கல்கத்தாவின்  பணிப்பெண் பிரியங்கா. இடியாப்பம் பிடிக்கும் சட்னி சாம்பார் அதற்கு  உகந்தது இல்லை. சோறும் சிக்கன் கறியும் வாங்கி கொண்டேன். 

அன்னம்

வானத்தில் பறக்கும் போதும் விருப்ப உணவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றி. மும்பை நாட்கள் நினைவுக்கு வந்து மறைந்தது.



மூன்று மணி நேரம் அமர்ந்தே தூங்கினேன் .7 மணி நேரம் கழித்து சான்விட்ச் ஒன்று தந்தார்கள். இனியும்  ஏழரை மணி நேர பயணம் இருக்கிறது.

 விமானத்தில் இலவச இணையம் இருக்கிறது. முப்பத்தி ஆறாயிரம் அடி உயரத்தில் பறக்கும்போதும் சுனிதாவிற்கும்,நண்பர்களுக்கும்  வீடியோ காலில் அழைத்து பேச முடிந்தது. 

 சுனிதாவிடம் " technology எங்க போயிட்டு பாத்தியா"

"அப்டியே ஜன்னலை திறந்து காட்டுங்கோ" என்றாள்.

" ஜன்னல் தொறக்க முடியாதுல்லா  உங்க டெக்னாலஜி வேஸ்ட் ".

நடு வானில் இருந்து பேசுவது எனக்கு அதிசயம் தான்.

தூரன் விருது பெறுபவரை இனி ஆகாயத்தில் இருந்தும் வாழ்த்து கூற ஒரு வாய்ப்பு உள்ளது.

தோகா - ஹூஸ்டன் செல்லும் விமானத்தில் இருந்து மொபைலில் எழுதி வானில் பறந்தபடியே இதை வலையேற்றுகிறேன்.

நாஞ்சில் ஹமீது.

15 jan 2026