Sunday, 26 April 2026

கடும் வெப்பமும் – குளிரும்

    


இப்போதெல்லாம் போனில் பேசும்போது சுனிதா “இங்க பயங்கர சூடு” என்பாள். நான் ஜனவரி பதினைந்தாம் தேதி ஹூஸ்டனில் வந்திறங்கியபோது மிதமான காலநிலை இருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து விமானம் ஏறும்போது குளிருக்கான ஜாக்கெட்டை பயணப்பையில் வைத்து லக்கேஜில் போட்டுருந்தேன்.



  ஹூஸ்டனில் மூன்று வாரங்கள் இருந்தேன். அப்போது இங்கே பனிப்புயல் வீசி மைனஸ் இரண்டு டிகிரி வரை சென்றது. விடுதியறையில் வெப்பக்காற்றை இயக்கவேண்டியிருந்தது. டாலஸ் சென்றபோது இதமான குளிர். 

 பிப்ரவரி முதல் வாரம் கப்பலில் ஏறி சரக்கு இறக்க பிரான்ஸ் சென்றோம் அங்கும் நல்ல குளிராக இருந்தது. அங்கிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் நைஜீரியாவின் போனி துறைமுகம் வந்தபோது அங்கும் இதமான குளிர். அங்கிருந்து கீழே இறங்கி பூமத்தியரேகையை தாண்டும்போது நான்கைந்து நாட்கள் வெப்பம் உயர்ந்தது. அறையின் வெப்பம் இருபத்தியாறு டிகிரியும் வெளியில் முப்பத்தியைந்து வரை இருந்தது. ரமலான் மாதம் முழுவதும் அதிக சிரமமில்லை.

   கீழே இறங்கி தென்னாபிரிக்காவை சுற்றி கொரியாவை நோக்கிய பயணத்தில் வெப்பம் கொஞ்சம் உயர்ந்தது. இந்த மாத முதல் வாரத்தில் கொரியா சென்றபோது வெப்பம் பத்து டிகிரியாக இருந்தது. எனக்கு அது நல்ல குளிர். அறையின் வெப்பம் பதினைந்து டிகிரியாக சென்றுவிட்டது. வெப்ப ஆடைகளை அணிந்து இரு கம்பளி போர்வைகளால் போர்த்திக்கொண்டேன். காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் குளித்து குளிரை விரட்டினேன்.



  காலையில் ஆய்வுக்கு வந்த இரு இளம் கொரிய பெண்களிடம் நல்ல குளிர் என்றபோது “நல்ல கிளைமேட் இதமாக இருக்கிறது” என கண்கள் விரிய சொன்னார்கள். முகத்தில் மாஸ்க் போட்டிருந்ததால் சிரிக்கும்போது உதடு பிரிந்து தெரிந்த சிறிய வெண்பற்களை பார்க்க முடியவில்லை.

  கொரியாவில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் கிளாஸ்டோன் சென்றோம் பூமத்தியரேகையை ஒட்டிய பன்னிரண்டு நாள் பயணத்தில் பத்து நாட்களும் கடும் வெப்பம். நல்ல வேளையாக இந்த கப்பலின் நன்னீர் தேக்க தொட்டிகள் இயந்திர அறையின் அதிக சூடு இல்லாத இடத்தில் இருப்பதால் அறையின் குழாயை திறந்தால் நீர் அதிக சூடு இல்லை.வழக்கமாக நல்ல சூடான பிரதேசங்களில் பயணிக்கையில் காலையில் குளித்தபின் இரு வாளிகளில் நீரை பிடித்து வைத்து மாலையில் குழாயை திறந்தால் வரும் சூடான நீருடன் கலந்து வெப்பமில்லாத நீரில் தான் குளிப்பேன். 

 கப்பலில் பணியில் இணைந்தவுடன் அறையில் குறைந்தது இரு பக்கெட்டுகளை தேடி எடுத்து வைத்துக்கொள்வேன்.ஆளுக்கு ஒரு கம்பளி போர்வை தருவார்கள் நான் மெஸ் மேனிடம் கேட்டு மேலும் ஒரு கம்பளியை வாங்கி துவைத்து மடித்து வைத்துக்கொள்வேன். எல்லா கப்பல்களிலும் வெப்பக்காற்று இயங்கும் என உத்தரவாதம் சொல்ல முடியாது. வெளியில் வெப்பம் பத்து டிகிரியாகும் போது அறையின் வெப்பம் பதினாறு டிகிரியாகிவிடும். வெப்ப ஆடைகளை அணிந்து இரு போர்வைக்குள் நுழைந்து உடலின் வெப்பம் வெளியேறாமல் போர்த்திக்கொண்டால் மட்டுமே தூக்கம் சாத்தியமாகும்.

   பத்து நாள் பயணத்தில் ஒரு கடுங்குளிரான பகுதியிலிருந்து கடும் வெப்பமான பகுதிக்கு சென்று சேர்ந்துவிடுவோம். இப்போதும் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட மூன்று தினங்களுக்குபின் கடும் வெப்பம் தொடங்கியது. வியட்நாமை நோக்கி பயணிக்கிறோம் அங்கேயும் இதே வெப்பநிலை இருக்கும். துறைமுகம் நெருங்கிவிட்டதால் கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தான் வேலை. முகத்தை மறைக்கும் வெள்ளை துணி சுற்றி கறுப்பு கண்ணாடி அணிந்து பணிசெய்கிறேன்..

  கோடையில் அரபு வளைகுடாவை பொசுக்கும் வெப்பம் இல்லை தண்ணீர் குடித்து தாக்குபிடிக்கும் வெப்பம் தான். இங்கிருந்து மீண்டும் இதே பாதையில் ஆஸ்திரேலியா நோக்கிய பயணம் உறுதியாகிவிட்டது. அங்கு சரக்கு நிறைத்தபின் ஆசியாவின் சீனா அல்லது கொரியாவுக்குதான் பயணம் இருக்கும் மே மாதம் வரை போர் நடக்கும் பகுதிக்கு செல்ல போவதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

  கப்பல்கள் தாக்கப்படும் செய்திகளை கேட்கும் நண்பர்கள் கவலையுடன் விசாரித்து கொண்டே இருக்கிறார்கள்.

 நாஞ்சில் ஹமீது,

26 april 2026.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment