Wednesday, 29 April 2026

வாங் தாவ்.

 


புத்தரிடம்

 வியட்நாமின் வாங் தாவ் துறைமுகப்பிற்கு நேற்று காலை வந்தோம். ஆஸ்திரேலியாவில் ஏற்றிய சரக்கை இங்கே கொடுக்கவேண்டும். மொத்தம் பத்து நாள் பயணதூரம். ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் முதலே நல்ல வெயில்.பயணத்தில் அதிகபட்சமாக முப்பது டிகிரிவரை போனது.

    கார்கோ டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் எனக்கு சரக்கு இறக்கும் குழாய்களை (மேனிபோல்ட்)தயார் செய்ய வேண்டியிருந்ததால் நான்கைந்து நாட்களாக தலைக்கு மேலே தகிக்கும் சூரியனின் கீழ் தான் வேலை.உதவிக்கு இருதினங்கள் மாலுமி அஜேந்தரும்,ஒரு நாள் காஸ் இஞ்சினியர் அருணும் வந்தார்கள். 

  செவ்வாய்கிழமை இங்கு வந்து சேர்வதாக இருந்தது. திங்கள்கிழமை காலையில் வரமுடியுமா என முகவர் மின்னஞ்சல் செய்திருந்தார்.கப்பலின் வேகத்தை கொஞ்சம் கூட்டி அவர்கள் சொன்ன நேரத்தில் சென்று சேரும் சாத்தியம் இருந்தது.வழியில் கடும் காற்றே,புயலோ அடித்தால் தாமதமாகிவிடும் வாய்ப்பும் உண்டு. அன்று நள்ளிரவே சமாதானமாக செவ்வாய் காலையில் வந்தால் போதும் என மீண்டும் செய்தி வந்ததால் இரவே கப்பலின் வேகம் குறைக்கபட்டது.

  துறைமுகம் எட்டும் முன் செய்ய வேண்டிய பாதுகாப்பு சோதனைகள் சில நாற்பத்தி எட்டு மணிநேரத்துக்கு முன் செய்து ஆவணபடுத்தவேண்டும். அது ஞாயிறு ஓய்வை எதிர்பார்த்திருந்ததை இல்லாமல் ஆக்கியது. காலை எட்டுமணிக்கே துவங்குவோம் என காஸ் இஞ்சினியரிடம் முன்பே சொல்லியிருந்தேன்.

  ஞாயிறு காலை கார்கோ காட்டுப்பாட்டு அறைக்கு சென்றபோது முதன்மை அதிகாரி(மலேசியாவை சார்ந்த முதன்மை அதிகாரி தினேஷ்வரன் முன்பு என்னுடன் காடேட் ஆக இருந்தவர்.பத்து ஆண்டுகளில் உயர்பதவிக்கு வந்துவிட்டார்) காஸ் இஞ்சினியர் யாரும் வரவில்லை. 

 இயந்திர கட்டுப்பாட்டு அறையிலும் அலாரம் வரும் எனவே இஞ்சினியர் ஒருவர் இயந்திர அறையில் இருக்கவேண்டும். இயந்திர அறையில் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு கூடிப்பிரிவார்கள். ஓய்வு எடுப்பதற்கு கூடி விவாதிக்கும் கப்பல் இதுவே. நானும்,காஸ் இஞ்சினியரும் ஞாயிறு கூட்டத்திற்கு செல்வதில்லை. இந்தவாரம் முதல் எங்களிருவரையும் வந்தே ஆகவேண்டுமென கொரிய முதன்மை இஞ்சினியர் உத்தரவிட்டார்.

ஞாயிறு மதியம் பன்னிரெண்டரை வரை கார்கோ டீம் பணி செய்தோம். டெக் மற்றும் இஞ்சின் ஓய்வில் இருந்தார்கள். திங்கள்கிழமை கப்பல் கரை சேர்வதற்கான அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால் எனக்கு பணியேதும் இல்லை. அன்றிரவே கப்பல் வாங் தாவ் அருகில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தவிருந்ததால் டெக் மற்றும் இஞ்சின் பணியாளர்களுக்கு இரவில் பணி இருந்தது.

 நங்கூரம் பாய்ச்சி நிறுத்தும் இடத்தில் மீன் பிடி படகுகள் நிறையவே இருக்கும். வாய்ப்பு பார்த்து கப்பலுக்குள் புகுந்துவிடும் கொள்ளையர்கள் உண்டு என முகவர் எச்சரித்திருந்தார்.

  எனவே இரவு பத்துமணிக்கு நங்கூரம் பாய்ச்சி (“இப்ப நடக்க போர் சூழல்ல எவ்ளோ கஷ்டப்பட்டு உங்களுக்கு காஸ் கொண்டு வாறோம்,ஏம்பிலே எங்க கப்பலுக்கு களவாண வாறியோ” என ஐடியா மணி இருந்திருந்தால் கேட்டிருப்பார்) நிறுத்தியபின் டெக்கில் இருவர் வீதம் முறைவைத்து காவல் காத்தனர். கதவுகள் அனைத்தும் உட்புறமாக அடைக்கப்பட்டு இயந்திர அறையும் தயாராக இருந்தது.

  செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிக்கு பைலட் வரும்நேரம். ஒன்பதுமணிக்கே நங்கூரம் உருவப்பட்டு கப்பல் துறைமுகம் நோக்கி நகர தொடங்கியது. கடைசி கட்ட தயாரிப்புகளை காலை எட்டு மணிக்கே துவங்கியிருந்தோம். முதன்மை அதிகாரி நங்கூரம் மேலெழுந்தபின் வந்து சரக்கு இறக்கும் குழாய்களை குளிர்விக்க தொடங்கினோம்.

 எல்என்ஜி(மீத்தேன்) சரக்கு தொட்டிகளில் (-160 ) டிகிரியில் இருக்கும்.சாதாரண வெப்ப நிலையில் இருக்கும் குழாய்களை ஸ்ப்ரே பம்ப்பை இயக்கி மெதுவாக குளிர்வித்து கார்கோவின் வெப்பநிலைக்கு கொண்டு வருவோம். பதினொன்றரை மணிக்கு கப்பல் கட்டும் பணிக்காக அழைத்தார்கள். அதற்குமுன் உணவுண்டு அனைவரும் தயாராய் இருந்தோம். மூன்று மணிக்கு கப்பல் கட்டப்பட்டது. மதியம் மூன்று மணிவரை இங்கே ஹை டைட் என சொல்லப்படும் நீர்மட்டம் உயர்ந்திருக்கும் அப்போது கப்பல் உள்ளே வந்துவிடவேண்டும். அதன் பின் நீர்மட்டம் குறைய தொடங்கிவிடுகிறது.

   டெர்மினலின் சரக்கு குழாய்களை பொருத்தியபின் அதையும் குளிர்விக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். நான்கு தொட்டிகளிலுள்ள திரவத்தை இரு குழாய்கள் மூலம் ஏழு பம்புகள் உபயோகித்து உந்தி தள்ள தொடங்கினோம். முழு விசையான 9800 டன்னை எட்ட இரவு எட்டரை மணியானது. டெர்மினல் குழாய்களை குளிர்விக்கும் இடைவெளியில் அறைக்கு வந்து தொழுதுவிட்டு சென்றேன்.

 இரவில் எனக்கு பணியில்லை கார்கோ தீரும் தருவாயில் அழைப்பார்கள். வழக்கமாக பன்னிரெண்டு முதல் பாதினாங்கு மணிநேரமாகும். இங்கே இரு குழாய்கள் மட்டுமே பொருத்தியதால் இருபதுமணி நேரம் ஆகுமென கணக்கிடபட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கே கரைக்கு சென்று ஊர் சுற்றிவர எட்டு பேர் குழு ஒன்று கப்பலிலிருந்து வெளியேறியது வாங் தாவ் நகருக்கு. இம்முறை ஷோர் பாஸ் வாங்கும்போதே கார்கோ டிப்பார்ட்மெண்ட்டின் கீ வொர்கேர்ஸ் ஆன முதன்மை அதிகாரி,காஸ் இஞ்சினியர் மற்றும் எனக்கு அனுமதிமறுக்கப்பட்டது. 

 கப்பலின் இரு இஞ்சின் காடேட்,ஒரு டெக் காடேட்க்கும் காப்டன் அனுமதி வழங்கவில்லை கூடவே இரண்டாம் இன்ஜினியருக்கும்.காலை எட்டுமுதல் இரவு எட்டுக்கு மேல் பணியில் இருந்ததால் நல்ல களைப்பு அறைக்கு வந்து நீராடி தொழுதபின் கொஞ்சம் வாசித்துவிட்டு பத்தரை மணிக்கு மேல் நல்ல துயில். காலை தாமதமாக விழித்து சமாதானமாக எட்டு மணிக்கு காலை உணவுக்கு சென்றபோது டெர்மினலின் கார்கோ சர்வேயர் உணவு மேஜையில் அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்தார். “கார்கோ எப்ப முடியும்” எனக்கேட்டேன். மதியம் இரண்டுமணி என்றார் இன்னும் சமாதானமாக காலை உணவுண்டு ஓய்வில் இருந்தேன். கரைக்கு செல்லும் இரண்டாம் குழு பன்னிரெண்டு மணிக்கு புறப்பட்டது. 

 காஸ் இஞ்சினியர் ஒன்றரை மணிக்கு அழைத்தார். சாகுல் ஸாப் பிளீஸ் கம் டூ மேனிபோல்ட்” என. சரக்கு பம்புகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு மூன்று மணிக்கு மேல் சரக்கு கொடுப்பது முடிவடைந்தது. குழாய்களில் மீதமிருக்கும் திரவத்தை பாதுகாப்பாக கப்பலின் சரக்கு தொட்டிக்கு அனுப்பியபின் (நைட்ரஜன் வாயுவை குழாயில் செலுத்தி திரவத்தை அழுத்தி தொட்டிக்குள் அனுப்புவோம். இருமுறை அதை செய்வார்கள்.) டெர்மினலின் குழாயில் திரவம் இல்லை என உறுதியானபின் குழாயை கழட்டி எடுத்தபோது மணி ஐந்தாகியிருந்தது.பணி முடிந்தது. நேற்றை விட இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாக இருந்தது முகில்கள் சூழ்ந்து இருந்ததால்.

   கரைக்கு செல்லும் மூன்றாவது குழு உற்சாகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கப்பல் துறைமுகம் விட்டு வெளியேறுவது நாளை காலை ஏழு மணிக்கு. இரவு முழுவதும் கப்பலை கட்டிவைத்திருப்பார்கள்.வழக்கமாக கார்கோ ஆப்ரேஷன் முடிந்தபின் வெகுவிரைவில் கப்பலை வெளியேற்றிவிடுவார்கள். கராணம் ஒவ்வொரு நொடிக்கும் கோடிகளில் பணம். நீர்மட்டம் உயர்வதுவரை காத்திருக்க வேண்டியிருப்பதால் கப்பல் கட்டி வைக்கப்பட்டுள்ளது.



  நாளை காலை வரை எனக்கு பணியேதும் இல்லை. ஆனாலும் வாங் தாவ் ஊரில் சுற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.இந்த துறைமுகத்தில் முன்னரே பெயர் கொடுத்து ஷோர்-பாஸ் வாங்கி கொள்ளவேண்டும். முகவருக்கு அனுப்பிய பெயர் பட்டியலில் என் பெயர் இல்லை. வழக்கமாக ஷோர்-பாஸ் அனைவருக்கும் இலவசமாக கொடுப்பார்கள். விரும்புபவர்கள் வெளியே செல்லலாம். இங்கே ஐந்து டாலர் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

 மாலையில் பணி முடிந்தபின் முதன்மை அதிகாரி வெளியே செல்லும் எண்ணத்துடன் முகவரிடம் ஷோர்-பாஸ் வாங்கிதருமாறு கேட்டார். இன்று இங்கே விடுமுறை நாளாம் அதனால் ஷோர்-பாஸ் க்கு ஐம்பது டாலர் அதிக கட்டணம் செலுத்தவேண்டியதை சொன்னார்.அவரும் வெளியே செல்லும் திட்டத்தை கைவிட்டார்.

 இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தபோது இதனருகில் உள்ள ஜெட்டியில் தான் கப்பலை கட்டியிருந்தோம் அப்போது ஒரு முழு பகலும் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.ஆயிரம் அடி உயரத்திலிருக்கும் புத்தர் கோவிலுக்கு சென்ற பேரனுபவத்தை கட்டுரையாக்கியிருந்தேன்.

புத்தரிடம்

 பணி முடிந்தபின் கப்பலிலிருந்து வெளியேறி கப்பலை முழுமையாக பார்த்தேன்.வாயிலை கடந்து காலனி மற்றும் காலுறையை உருவிவிட்டு நிலத்தில் பாதம் பதித்தேன். அங்கிருந்த காவலாளி விரைந்தோடி என்னருகில் “வந்து என்ன செய்கிறாய்” எனக்கேட்டார்.அப்போதே டெர்மினலின் குழாய் பொருத்தும் பணியாளர்கள் இருவர் வாயிலுக்கு வந்ததால் கப்பலிலிருந்து மூன்று மாதத்திற்குப்பின் நிலத்தில் கால் வைத்துள்ளேன் உடனே திரும்பி சென்றுவிடுவேன் என அவர்கள் மூலம் வாயில் காவலருக்கு புரியவைத்தேன்.

  குழாய் பணியாளர் வந்த சைக்கிளை வாங்கி கப்பல் வரை உற்சாகமாக மிதித்தேன்.ஜெட்டியில் உள்ள அவரது கட்டுபட்டுபாட்டு அறைக்கு அழைத்து சென்றார். ஐந்தரைக்கு அறைக்குள் வந்தபோது செந்திறத்தில் கதிரவன் முகில்களுக்குள் செல்ல தயாராகியிருந்தது.



நாஞ்சில் ஹமீது,

29 april 2026.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment