Saturday, 2 August 2025

என் எஸ் ப்ரண்டியரின் கடைசி பிரியாணி.

 கடைசி பிரியாணி





 

     ஜனவரி மாதம் பதினான்காம் தேதி கப்பலுக்கு வந்த எனக்கு ஏழு மாத பணி ஒப்பந்ததம். ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி ஒப்பந்தம் முடிவடையும். ஒப்பந்த காலம் ஏழு மாதங்கள் பிளஸ்,மைனஸ் ஒரு மாதமென இருக்கும். எனவே ஆறு மாதங்கள் ஆகிவிட்டால் தயாராக இருக்கவேண்டும். அதன்பின் எப்போது வேண்டுமென்றாலும் வீட்டுக்கு அனுப்பலாம்.துறைமுகம் கிடைக்காமல் ஆனால் நீண்டு எட்டு மாதங்கள்வரை அல்லது அதற்குமேலும் ஆகும் வாய்ப்பும் உண்டு.


ரஜீதீப் சிங் 


     இம்முறை ஏழு மாதங்கள் முடிந்து ஆகஸ்டில் ஊருக்கு செல்ல நான் விரும்பவில்லை. நவம்பர் இறுதி மகன் ஸாலிமின் பிறந்தநாள்,டிசம்பரில் எனது பிறந்தநாள்,திருமண நாள்,விஷ்ணுபுரம் விருது விழா, ஜனவரி இரண்டாம் தேதி சுனிதாவின் பிறந்தநாள் என இருப்பதால் எல்லா வருடமும் நவம்பர் இறுதி முதல் ஜனவரி பதினைந்துவரை ஊரில் இருக்கவே விரும்புவேன்,

சாகர் பாட்டில்


   கப்பல் ஜூலை முதல் வாரம் அமெரிக்காவின் ஹூஸ்டனிலிருந்து புறப்பட்ட போது நாங்கள் செல்லும் துறைமுகம் உறுதியாகவில்லை.பனாமா கால்வாயை தாண்டி ஆசியாவை நோக்கி போக சொன்னார்கள். சீனா அல்லது ஜப்பான் துறைமுகத்தில் கப்பலில் நிறைத்த நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேனை இறக்க வேண்டும். அது ஆகஸ்ட் முதல் வாரத்தில். அப்போது ஜப்பான் அல்லது சீனாவிலிருந்து ஊருக்கு செல்லும் நால்வர்குழு  இருந்தார்கள்.

ஊருக்கு செல்லும் சோகத்தில் மூன்றாம் இன்ஜினியர் ரஜிதா 



   எனக்கு செப்டம்பர் மாதம் ஊருக்கு சென்றால் டிசம்பர் இறுதிவரை ஊரில் இருப்பது சாத்தியமாகும். எனவே ஜூன் மாதமே காப்டனை சந்தித்திருந்தேன் ஒரு மாத பணி நீட்டிப்பு கடிதத்துடன். கடிதம் குலாலம்பூர் அலுவலகத்திற்கு அனுப்பினால் மறந்திருக்கும் அவர்கள் விழித்துக்கொள்ள நேரிடும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வராததில் உன்னை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பும் உண்டு. எனவே காத்திரு என்றார் காப்டன்.

இயந்திர கட்டுப்பாட்டு அறையில் 


  ஜூலை இறுதியில் ஊருக்கு செல்பவர்களின் பெயர் பட்டியலில் இருந்த நால்வரும்  ஜப்பான் அல்லது சீனா சென்று சேரும்போது வீட்டுக்கு செல்வது உறுதியாகியிருந்தது. முன்பே முதன்மை இஞ்சினியரிடமும் சொல்லியிருந்தேன். ஜப்பானிலிருந்து அனுப்பும் குழுவில் என்னை அனுப்பாமல் இருக்க வேண்டி காப்டனிடம் சொல்லும்படி. முதன்மை இஞ்சினியர் “ஜூலை பாட்ச் தான் இப்ப போகுது உன் பெயர் இல்லை” என்றார்.

மெஸ் மேன் ஹர்திக் 


   இருபது நாட்களுக்கு முன் நான் ஜனவரி மாதம் இந்த கப்பலில் விடுவித்த காஸ்பிட்டர் சாஜித் கான் இங்கு வரவிருப்பதாக வேறு கப்பலில் இருக்கும் நண்பர் ரவீந்திர பாட்டக் சொன்னார். சாஜித் கானை தொடர்புகொண்டேன் என் எஸ் ப்ரண்டியர் கப்பலுக்கு செல்ல தயாராக இருக்கும்படி மும்பை அலுவலகம் சொன்னதாக சொன்னார். ஆனால் அவரது பாஸ்போர்ட் அமெரிக்க துணை தூதரகத்தில் விசாவுக்கு அனுப்பி இன்னும் கிடைக்கவில்லை காத்திருக்கிறேன் எனக்கூறினார்.


ஞாயிறு காலை பிரியாணிக்கு மட்டன் வெட்டும் சீப் குக் 



அன்றே காப்டனை சந்தித்து  கேட்டேன். “கேப்டன் சாப் எனக்கும் ஜப்பான்ல இருந்து சைன் ஆப் இருக்கா”? என.

“ஆபிஸ்ல என்ன செய்றாங்கன்னு தெரியல” என்றார் கேப்டன்.

இரண்டாம் அதிகாரி ரஜ்தீப் சிங்கிற்கு ஆறு மாத பணி ஒப்பந்தம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவருக்கு ஐந்து மாதங்களே நிறைவடையும். அவரது மாற்று பணியாள் உக்ரைனின் ஒலாக்ஸ் அவரை தொடர்புகொண்டு கப்பலுக்கு வரவிருக்கும் தகவலை சொன்னார். எனக்கும்,ரஜ்தீப்க்கும் நாங்கள் ஊருக்கு செல்லலாம் என தெரிந்தது.

  எங்களது விடுமுறை குறித்து கப்பலில் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என எண்ணியிருந்தோம்.ஜூலை முப்பதாம் தேதி நடந்த மாதாந்திர பாதுகாப்பு கூட்டத்தின் இறுதியில் காப்டன் “குட் நியுஸ் ஆல் தி ரிலிவர் நேம்ஸ் ஆர் கம்,சிக்ஸ் பீப்பிள் சைனிங் ஆப்,போர் ஆன் சைனர்ஸ்”என்றார். கப்பலின் ஓணர் தரப்பிலிருந்து பயிற்சிக்காக வந்திருந்த  இரு பிலிப்ப்னோ இஞ்சிநியர்களான இவான் மற்றும் ரோடலுக்கு பதிலாக மாற்று பணியாளர் இல்லை.இலங்கையின் மூன்றாம் இஞ்சினியர் ரஜிதா,மகாராஷ்டிராவின் சாகர் பாட்டில்,இரண்டாம் அதிகாரி ரஜ்தீப் உட்பட ஆறு பேர் ஆகஸ்ட் ஆறாம் தேதி ஜப்பானிலிருந்து ஊருக்கு செல்வது உறுதியானது.

 “ஷாகுல் சாஜித் வரவில்லை,சஞ்சய் என வேறு ரிலிவர் வருகிறார்” என காப்டன் சொன்னார்.நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் இருப்பதாலும்,கப்பல் பணியாளர்களின் வாட்ஸ்அப் குழுக்கள் இருப்பதாலும் இப்போதெல்லாம் யார் எந்த கப்பலுக்கு போக இருக்கிறார் என உடனுக்குடன் எங்களுக்கு தெரிந்துவிடும். மாற்று பணியாளர் தேர்வான உடனே கப்பலுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். ஆனால் காப்டன் எதனால் எங்களது விடுமுறையை மிக ரகசியமாக வைத்திருந்தார் என தெரியவில்லை.

 மறுநாள் வியாழக்கிழமையே எனது டிக்கெட்டை காப்டன் எனது அறையில் போட்டிருந்தார். வரும் ஏழாம் தேதி ஜப்பானின் நகோயாவிலிருந்து வியட்நாம் ஏர்லைன்சில் ஹோ சி  மின் சிட்டிக்கு  ஆறு மணிநேர பயணம்,அங்கே ஆறு மணிநேர காத்திருப்புக்குப்பின் தில்லிக்கு ஐந்து மணிநேர பயணம். அன்றிரவு பத்து மணிக்கு தலைநகர் தில்லி சென்று தில்லியில் மீண்டும் ஐந்துமணிநேரம் காத்திருப்பு அதிகாலை மூன்றரைக்கு அடுத்த விமானம் மூன்றரை மணிநேர பயணத்திற்குப்பின் காலை ஏழு மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்குகிறேன்.எட்டாம் தேதி மதியம் ஜும்மா தொழுகை வீட்டருகில் உள்ள பள்ளி வாசலில்.

 பதிமூன்று மணிநேர பயண நேரம் அதற்கு இணையான காத்திருப்பும்.சிங்கப்பூர் அல்லது மலேசியா வழியாக சென்றால் இரண்டே விமானத்தில் காத்திருப்பு நேரம் உட்பட பதினைந்து மணிநேரத்தில் செல்லும் விமானங்கள் இருக்கிறது.

 காப்டனை சந்தித்தேன் “இரண்டே ஆப்சன் தான் வந்துருக்கு, ஹாங்காங் வழியா போறது ஆறாம் தேதி சாயங்காலம்,அந்த பிளைட்ட புடிக்க முடியாது. சோ இதுதான் என்றார்.

சண்டிகர் வரை செல்லும் இரண்டாம் அதிகாரி என்னுடன் தில்லி வரை வருவார். மும்பை செல்லும் சாகர் பாட்டிலுக்கு ஏழாம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு வியட்நாமின் தலைநகர் ஹனோய் வழியாக விமானம் அன்றிரவே போய்சேர்ந்துவிடுவார். கொழும்பு செல்லும் மூன்றாம் இன்ஜினியரு சிங்கப்பூர் வழியாக விமானம் அவரும் அன்றிரவு வீட்டில் இருப்பார். பிலிப்பினோ இனிஞ்சியர்களுக்கு ஆறாம் தேதி மாலையே விமானம் அவர்கள் ஏழாம் தேதி அதிகாலை மணிலாவில் இருப்பார்கள்.

  நமது உறுதியான ஆழ்மன கணக்குகள் பல இருக்கும் ஆனால் நாம் அறியவே முடியாத இப்பிரபஞ்ச கணக்கு உண்டு.பிரபஞ்சத்தில் எது எனக்கு எழுதி இருக்கிறதோ அது எனக்கு கிடைத்தே ஆகும் என உறுதியாக நம்புபவன் நான்.

 

 கடந்த ஞாயிறன்றே சமையல்காரர் பிரையன் மஸ்கரனஸிடம் சொல்லியிருந்தேன் “அடுத்த ஞாயிறு இந்த கப்பலில் எனக்கு கடைசி பிரியாணியாக இருக்கலாம்,மட்டன் பிரியாணி போடுங்க” என.

தொடர்புடைய பதிவுகள் 

விடுமுறை உறுதியாதல்

விடுமுறை   

கப்பல் காரனின் விடுமுறை

தள்ளிப்போன விடுமுறை

வீடு திரும்புதல்

விடுமுறையும் பயண சீட்டும்

கடைசி பணிநாள்

கடைசி பிரியாணி



நாஞ்சில் ஹமீது,

03-august -2025.

sunitashahul@gmail.com


No comments:

Post a Comment