கப்பல் காரன் டைரி
விடுமுறை உறுதியாதல்
கடந்த விடுமுறை பதிவை படித்த நண்பர் சிவமணின்,”உங்களுக்கு லீவ் கிடைப்பது கஷ்டமா?”என கேட்டார் .என்னுடன் முதல் கப்பலில் பணிபுரிந்த எலெக்ட்ரிகல் இஞ்சினியர் சேலம் பாலா. “ஹமீது கப்பலில் இருந்து ஊருக்கு செல்லும் முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சியாயின,இதன் தொடர்ச்சி எப்போது” என கேட்டார்.நானும் கடந்த பதிவை எழுதி முடித்தபின் நினைத்தேன் .இதன் தொடர்ச்சி எழுதவேண்டுமென.
என்னை விடுவிக்க பாட்டக் ரவீந்திரன் தில்லியிலிருந்து புறப்பட்டு இன்று மாலை கப்பலுக்கு வந்துசேர்ந்துவிட்டார்.எனது விடுமுறை உறுதியாகிவிட்டது,நான் நினைத்தது போலவே பத்தாம் தேதி இரவு கத்தார் எயர்வேஸ் விமானத்தில் புறப்பட்டு திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்துசேர்வேன் .காலை பெருநாள் தொழுகைக்கு செல்லமுடியும் நீண்ட நாட்களுக்கு பின் குடும்பத்துடன் பண்டிகை .என்னுடன் ஊருக்கு வரும் மூன்றாம் இஞ்சினியருக்கு பதிலாக வருபவர் மதுரை வீரன் ஜீத்து சூர்யா ,மதுரை தபால் தந்தி நகரை சார்ந்தவர் .கொச்சியிலிருந்து ஒன்பதாம் தேதி இரவு விமானம் அவருக்கு.மதுரையிலிருந்து புறப்பட்டு கொச்சி அலுவலகம் சென்று விமான சீட்டு ,சான்றிதழ்கள்,கப்பலில் இருப்பவர்களுக்கு சில பொருள்கள் ,மருத்துகள் அனைத்தையும் பெற்றுகொண்டு அதிகாலை மூன்றரைக்கு புறப்படும் விமானத்தில் ஏறுவதற்கு வானூர்தி நிலையம் சென்றபோது தொடர்மழை காரணமாக கொச்சி விமானநிலையம் மூடப்பட்டிருந்தது.அவசர எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டு விடுதியில் தங்கினார்.
அவரது விமானம் ரத்தானதில் கப்பலிலிருந்து ஊருக்கு செல்லும் அமித் கவலையுடன் இருந்தார்.வெள்ளிகிழமை காலை அலுவலகம் சென்று திருவனத்தபுரம் வழியாக பிலேடெல்பியா செல்லும் எதிகாட் விமான சீட்டை பெற்றுகொண்டு ,காரில் மீண்டும் திருவனத்தபுரம் சென்று விடுதியில் தங்கிவிட்டு அதிகாலை நான்கு மணி விமானத்தில் ஏறிவிட்டார் .கப்பல் ஞாயிறு காலை பதினோரு மணிக்கு புறப்படுவதால் அவர் வந்து கப்பலில் இணைந்து கொள்ள முடியும் .எந்த சிக்கலும் இல்லை .அவர் சனிகிழமை இரவு வந்து சேருவார் .நாங்கள் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு இரவு ஒன்பது மணி விமானத்தில் ஏறுவோம் .கப்பல் துறைமுகத்திலிருந்து முன்னரே புறப்படுவதாக இருந்தால் .மூன்றாம் இஞ்சினியர் அமித்தின் விடுமுறை ரத்தாகி அடுத்த நாற்பது நாட்கள் கப்பலில் தான் இருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக கடும் பணி கூடவே கடும் வெப்பமும் .கடல் நீரின் வெப்பம் இருபத்தி ஒன்பது பாகையும்,இயந்திர அறை நாற்பது பாகைக்குமேல்.இப்போது அமெரிக்காவில் கோடைகாலம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெப்பம் அதிகம் .புதன்கிழமை காலை கப்பலுக்கு வருடாந்திர தணிக்கை செய்ய தணிக்கையாளர் வருகிறார் என தகவல் வந்தது வெள்ளிக்கிழமை கப்பல் துறைமுகத்தில் கரையணையும் போது தணிக்கை செய்யும் அதிகாரி கப்பலில் இருப்பார் அதற்காக கப்பலை தயார் செய்யவேண்டும்.எதிர்பாராத சில பணிகள் காரணமாக கப்பலை சுத்தபடுத்தும் பணிகள் தாமதமாகிக்கொண்டே போனது.புதன்கிழமை காலை பத்துமணிக்கு தேநீர் இடைவேளைக்கு முன் ஜெனரேட்டர் ஒன்றின் டர்போ சார்ஜர் ஒன்றுஎண்ணை ஒழுகியதை கோபகுமார் பார்த்துவிட்டார் .சரியான நேரத்தில் கண்டதால் ஒரு தீ விபத்து தவிர்க்கப்பட்டது.உடனே அதை கழற்றி வேறு ஒன்றை மாற்றினோம் ..
அன்று மாலையே நீராவி குழாய்கள் இரண்டில் ஒழுகல் அதையும் சரி செய்து முடிக்கையில் இரவு ஒன்பது மணி நேற்று வியாழக்கிழமை துறைமுகம் அருகில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தி கப்பலுக்கு எண்ணை நிரப்பினோம்.மாலை மூன்று மணிவரை .பின்னர் மூன்று மணிநேரம் ஓய்வு ,இரவு ஏழுமணி முதல் பத்து மணிவரை மீண்டும் பணி . வெள்ளிக்கிழமை காலை எட்டுமணிக்கு தணிக்கை செய்யும் அதிகாரி வருவதால் அதிகாலை ஆறுமணிக்கே பணிக்கு சென்றோம்.
கடைசி சில தினங்கள் சரியான தூக்கமும்,ஓய்வும் இருக்காது.இரு தினங்களுக்கு முன் காலை மூன்று மணிக்கு கோபகுமார் கடும் வயிற்று வலியால் ஒருமணி நேரம் அவதிப்பட்டுள்ளார் .பின்னர் சிறுநீர் கழிக்கையில் வலியுடன் ரத்தமும் வந்தது .சிறுநீரகத்தில் கல் அது வெளியே வருகையில் ரத்தமும் வந்துள்ளது .மாலையில் மீண்டும் சிறுநீர் கழிக்கையில் சிறு கல் ஒன்று வெளிவந்ததை கழிப்பறையினுள் கையால் எடுத்துவிட்டார்.கடும் பயத்தில் இருக்கிறார் .கப்பல் இங்கிருந்து கொரியா செல்லவிருக்கிறது மொத்தம் ஐம்பது நாள் பயணம் .கப்பலுக்கு வருபவர்களிடம் மருந்து கொடுத்துவிட சொல்லி தனது மனைவியிடம் சொன்னார்.துறைமுகம் சென்றதும் மருத்துவமனை சென்று சோதிப்பதுநன்று என சொன்னேன் .
அவர் மருத்துவமனை சென்று கற்கள் இருப்பது தெரியவந்தால் அவரை வீட்டிற்கு அனுப்புவதை தவிர வேலு வழியில்லை.அதனால் என்னை அடுத்த துறைமுகம் வரை இருக்க சொல்வார்கள் என கவலை வந்தது .கோபகுமார் இன்று சனிக்கிழமை மருத்துவமனை போய் வந்தார்.மருந்துகள் சில கொடுத்துள்ளனர் .நான் இன்னும் பத்து நிமிடத்தில் கப்பலில் இருந்து இறங்கி பிலே டெல்பியா விமான நிலையம் செல்கிறேன் .இரவு ஒன்பதரைக்கு புறப்பட்டு பதிமூன்று மணிநேர பயணத்திற்கு பின் நாளை மாலை தோஹா .அங்கிருந்து இரவு அடுத்த விமானம் திருவனந்தபுரத்திற்கு .அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருப்பேன் . வழக்கமாக ஊருக்கு செல்லும் முன் இரவுகள் தூக்கமின்றி கழியும் . நீண்ட பயணத்திற்கு பின் ஊருக்கு சென்று சேர்க்கையில் நேர வித்தியாசம் காரணமாக முதுகு வலியும் உடல் சோர்வும் இருக்கும் நன்றாக துயில ஒரு வாரமாகும்.
என் எண்ணத்தை இறைநிலை நிறைவேற்றிியுள்ளது .விமான பயணத்திலும் ஏக இறைவன் துணை புரிவானாக .
ஷாகுல் ஹமீது ,
10 aug மற்றும்.
No comments:
Post a Comment