சுனாமி என்ற வார்த்தையை 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி வாக்கில் தினமணி கட்டுரை ஒன்றில் வாசித்து அறிந்தேன்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் திருமணம் நடந்த எனக்கு பத்து நாட்களுக்குபின் மறுவீடு நிகழ்ச்சி. அதாவது டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சுனிதாவின் இல்லத்திலிருந்தும் எனது உறவினர்களும் என மொத்தம் நூறுபேர் வரை வருவார்கள். மதிய உணவாக அனைவருக்கும் ஆட்டிறைச்சி பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது.
அன்று காலை ஒன்பது மணியளவில் மும்பையிலிருந்து நண்பர் மைக்கேல் அழைத்து “கன்னியாகுமரி கடல் கொந்தளிப்பாமே, எங்க இருக்கீங்க” எனக் கேட்டார். மறுவீடு நிகழ்வுக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருந்ததால் எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நண்பர் டீவியில் செய்தியை பார்க்க சொன்னார். அன்று டீவி எங்கோ மூலையில் இருந்தது. யாருக்கும் நேரமில்லை.
அப்போது நாங்கள் இருந்த வீட்டிலிருந்து கடற்கரைக்கு ஐந்து கிலோமீட்டர்கள் தான். கடற்கரை மக்கள் நகருக்குள் வருவதற்கான முக்கிய சாலை என் வீட்டின் அருகில் இருந்தது. சிறிது நேரத்தில் வாகனங்கள் அதிக ஒலிஎழுப்பி நெரிசலாக செல்ல தொடங்கியது. கால்நடையாக குழைந்தைகள், சிறுவர்கள் என மக்கள் போய்கொண்டிருந்தனர்.
எனது சொந்த கிராமமான மணவாளகுறிச்சியும் கடற்கரை கிராமம். உறவினர்கள் வாழ்வதும் கடற்கரை கிராமங்களில். சில தொலைப்பேசி அழைப்புகள் வந்தன. அழுகையும், கண்ணீருடனும், கடல் ஊருக்குள் வந்துவிட்டது நாங்கள் பங்சனுக்கு வரவில்லை என. சுனிதாவின் உறவுகளும் தேங்காய்பட்டணம். ஆதலால் முப்பதுபேர் மட்டுமே அன்றைய மறுவீடு நிகழ்ச்சிக்கு வந்தனர்.
கடற்கரை மக்கள் பெரும்பாலும் சர்ச்சுகளில் தங்கவைக்கப்பட்டனர். கோட்டார் சவேரியார் கோவிலில் இருந்த மக்களுக்கு எங்கள் வீட்டு நிகழ்வுக்கு செய்த பிரியாணியை என் தம்பி ஷேக் கொண்டுபோய் விளம்பினான். மணக்குடி, கொட்டில்பாடு போன்ற ஊர்களில் அதிகமான பேரை கடல் தனக்குள் எடுத்துகொண்டது. குமரியில் ஆயிரம்பேருக்கு உயிர்நீத்த துயர சம்பவம் அது.
அப்போதெல்லாம் தினமணி பத்திரிகை தினமும் வாசிப்பேன். குறிப்பாக அதிலுள்ள கட்டுரைகள். குமரியை கடல் சூறையாடிய இரு தினங்களுக்குப்பின் வந்த ஒரு கட்டுரை அது. கடல் கொந்தளிப்பல்ல, ‘சுனாமி’. சுமத்ரா தீவுகளுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உண்டான அலை கரையை கடக்கும்போது மிக உயர்ந்து பேரலையாக சீறி ஊருக்குள் புகுந்து கிடைத்ததை வாரிசுருட்டி தன்னுள் கொண்டு சென்றுவிடும். சுனாமி பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் சுனாமி அலைகளை ஆழ்கடலில் மூன்று மீட்டர் உயரம் மட்டுமே இருக்கும். அது கரையை தொடும்போது நூற்றியைம்பது மீட்டர் வரை உயரும் வாய்ப்பு உண்டு. ஜப்பான் மற்றும் பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் சுனாமி ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
(என் இளைய தம்பி பாபு ஹூசைன் “கமலஹாசன் பெரிய அறிவாளி” என்று சொல்லி, அன்பே சிவம் படத்தில் கமல், மாதவனிடம் சுனாமி பத்தி சொல்லும் காட்சிகளை கூறினான்.)
சுனாமி கரையை தொடும்முன் கடல் நீர் உள்வாங்கும். அங்கெல்லாம் கடலின் உயரத்தை அளவிடும் கருவிகள் பொருத்தபட்டிருக்கும். கடல் நீர் மிக அதிகமாக உள்வாங்க துவங்கினால் உடனே கரையோர மக்களை எச்சரித்து அப்புறப்படுத்தும் ஏற்பாடுகளும் அங்கே உண்டு.
இந்தியாவில் குமரி கடற்கரையை தாக்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பே சுமத்ராவில் துவங்கியயிருந்தது சுனாமி. அதுபற்றிய அறிவு இங்குள்ள அதிகாரிகள் யாருக்கும் இல்லாததால் பேரிழப்பை சந்திக்கவேண்டி வந்தது என கட்டுரையாளர் எழுதியிருந்தார்.
சுனாமி தாக்கிய அன்று குளச்சலில் பள்ளி மாணவர்களுடன் சிறு படகில் கடலுக்குள் சென்ற ஒருவர் கடல் உள்வாங்கியதை கண்டு மேலும் கடலுக்குள் சென்றதால் தப்பித்தார். சொத்தவிளை, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியதும் கரையில் மிதந்த மீன்களை அள்ளவும், காலை நடை பயிற்சியில் இருந்தவர்களும், சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகளும் கடலுக்குள் சென்றுவிட்டனர். கப்பலில் பத்தி சாபாக (எலெக்ட்ரிக்கல் இஞ்சினியர்) இருந்த என் நண்பர் சேலம் பாலா அப்போது பணிபுரிந்த கப்பல் இந்திய அரசுக்கு சொந்தமான ஆய்வு கப்பல். குளச்சல் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த அவரது கப்பலில் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பச்சைமால் சென்றிருந்தார்.
கடலின் நீர்மட்டம் திடீரென இரண்டு மீட்டர் குறைந்ததும் காப்டன் கப்பல் நிறுவனத்தை தொடர்புகொண்டு எதோ ஆபத்து இருப்பதை சொல்ல என்ன செய்யவேண்டுமென காப்டனே முடிவு செய்துகொள்ளுங்கள் எனச்சொல்ல உடனடியாக நங்கூரம் உருவப்பட்டு கப்பலை கடலுக்குள் கொண்டு சென்று கொச்சியை நோக்கி பயணித்ததாக பாலா சொன்னார். குளச்சல் கரையில் நிறுத்தியிருந்த சட்டமன்ற உறுப்பினர் பச்சைமாலின் சுமோ காரை சுனாமி பேரலை கடலுக்குள் கொண்டு சென்றது.
அதன் பின் சுனாமி குறித்து விரிவான தகவல்கள் பரவலாக எங்கும் பேசப்பட்டு சாமானியர்களும் அதுகுறித்து அறிந்துகொண்டனர். அப்போது கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் கடுமையான இழப்பை சந்தித்தது. கப்பல் பணிக்கு வந்தபின் மிக அதிகமாக ஜப்பானிய துறைமுகங்களுக்கு வருவதால் சுனாமி பற்றி தெளிவாக இருக்கிறோம். ஜப்பானிய துறைமுகத்தில் இருக்கும்போது சுனாமி எச்சரிக்கை வந்தால் பத்து நிமிடங்களுக்குள் கப்பலை அவிழ்த்து கடலுக்குள் செல்லும் பயிற்சிகளை துறைமுகமும், கப்பலும் இணைந்து செய்துள்ளோம்.
கடந்த முப்பதாம் தேதி காலை ரஷ்யாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியால் சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. அப்போது நாங்கள் ஜப்பானை நோக்கிய பயணத்தில் ரஷ்யாவின் கடலுக்கு கீழே இருந்தோம். அன்று எங்களுக்கு புயல் எச்சரிக்கை இருந்தது. அதை தவிர்க்கும் பொருட்டு பயணப்பாதையில் இருந்து சற்று விலகி அலைகுறைவான பாதையில் கப்பலை சென்றுகொண்டிருந்தது.
சுனாமி வந்ததை மறுநாள் காலையில் செய்திகளை பார்த்துதான் தெரிந்துகொண்டோம். என்னுடன் தினமும் உரையாடலில் இருக்கும் நண்பர்கள் நான் ஜப்பானுக்கு அருகில் சென்றுகொண்டிருப்பது தெரியுமாதலால் வாட்சப்பில் தொடர்புகொண்டு கேட்டிருந்தனர். அந்த சுனாமியால் எங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. ஆழ்கடலான வட பசிபிக் கடலில் ஒன்றுமே தெரியவில்லை. மிக பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கிறோம். வரும் ஐந்தாம் தேதி மதியம் ஜப்பானின் ஐஜி எனும் துறைமுகத்தை அடைவோம்.
நண்பர்கள் சிலர் கவலையுடன் கேட்டிருந்தனர். ஆகவே இந்த கட்டுரை.
தொடர்புடைய பதிவுகள்:
நாஞ்சில் ஹமீது.
03-August-2025.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment