கப்பல் காரன் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்.
ஜப்பானின் நகோயா அருகிலுள்ள ஐச்சி(aichi) துறைமுகத்திலிருந்து எழுதுகிறேன். இன்னும் ஒருமணி நேரத்தில் கப்பலில் இருந்து இறங்குகிறேன். இரவு நகோயாவின் விடுதியறையில் தூங்கிவிட்டு நாளை காலை (07 august 2025) ஒன்பது மணிக்கு புறப்படும் விமானத்தில் ஊருக்கு பயணிக்கிறேன்.
வியட்நாம் எர்லைன்சில் ஹோ சி மின் சிட்டி தில்லி வழியாக வெள்ளிக்கிழமை காலை திருவனந்தபுரம் வந்து சேருகிறேன். ஜனவரி பன்னிரெண்டாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு இந்தோனேசியாவில் ஜனவரி பதினான்காம் தேதி பணியில் இணைந்தேன் இந்த கப்பலில்.
ஏழு மாத பணிஒப்பந்தம் முடிய ஆறு நாட்களே இருக்கிறது.என் எஸ் ப்ரண்டியர் நாட்குறிப்புகள் முழுமையடையவில்லை. மே மாதம் முதல் இருபது ஆண்டு நிறைவு கட்டுரைகள் எழுத துவங்கி நாற்பது கட்டுரைகள் வந்துவிட்டன. கடந்த இரு வாரமாக அதிக பணி மற்றும் இரண்டாம் இஞ்சினியர்,இஞ்சின் பிட்டர் சவுகான் உடல்நலமில்லாமல் ஆனாதால் அவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டியிருந்ததால் எனது ஓய்வு நேரம் பெரும்பாலும் அதிலேயே போய்விட்டது. அதனால் கட்டுரைகள் எழுத சிறு தாமதம்.இருபது ஆண்டு நிறைவு தொடர் மற்றும் என் எஸ் ப்ரண்டியர் பதிவை விரைவில் எழுதி முடிப்பேன்.
2007 ஆம் ஆண்டு பணிபுரிந்த ஐஜின் கப்பலில் தினமும் ஒரு ஹிந்தி சினிமா பார்த்து ஓய்வு நேரத்தை கடத்தினேன். இம்முறை துறைமுகம் இல்லாத நாட்களில் ஒவ்வொரு நாளும் எழுதியிருக்கிறேன். நாட்கள் வேகமாக சென்றதே தெரியவில்லை.
இருபது ஆண்டு தொடர் எழுத துவங்கியதும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க துவங்கினேன்.கடுமையான மற்றும் சவாலான நாட்களில் மாலை ஆறு மணி இரவுணவுக்குப்பின் எழுத அமர்ந்தால் என்னால் எழுதவே முடியவில்லை மடிகணினியில் தூங்கி விழுவேன் எனவே சன்னி ஜாய் நாட்குறிப்புகள் எழுதிய நாட்களை போலவே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து எழுத துவங்கினேன். கப்பலின் கடிகாரம் பின்னே செல்லும் நாட்களில் அதிகாலை மூன்று மணி அல்லது அதற்கும் முன்பே எழுந்து எழுத துவங்கினேன். ஆறு மணி முதல் ஐம்பது நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி. (வேதாத்ரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகள்) அதன் பின் குளியல்,காலை உணவு எட்டு மணிக்கு வேலை துவங்கும். அதற்கு பதினைந்து நிமிடம் முன் மீட்டிங். மாலை ஐந்து மணிக்கு பணி முடிந்து குளித்து அஸர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்கு இரவுணவுக்குப்பின் ஒன்றுமே செய்ய இயலாது.இரவு எட்டு மணிக்கு கம்பிரசர் அறையில் ரவுண்ட்ஸ்க்கு போக வேண்டும் அரை மணிநேரம். ஒன்பது மணிக்கு தூங்க செல்வது என ஒழுங்கு ஒரு நாளும் தவறவேயில்லை. ஆசிரியர் ஜெயமோகன் திரும்ப,திரும்ப சொல்வது வெட்டி அரட்டையில் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய நினைத்தால் ஒரு ஒழுங்கை கடை பிடியுங்கள் என. அந்த வரிகள் மிக,மிக உதவியானவை.
அப்படி என்ன தான் எழுதிவிட்டேன். எனது அன்றாடத்தை மட்டுமே உள்ளதை உள்ளபடி எழுதுகிறேன். கப்பல் காரன் டைரிக்கு இன்று வாசகர்கள் அமைந்துவிட்டார்கள் எனது அன்றாடத்தை ஒரு நாளும் எழுதாமல் இருக்கவே இயலாது இனிமேல். அதில் எனக்கு என்ன கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரை எழுதி முடிந்ததும் கிடைக்கும் ஒரு நிறைவு,மகிழ்ச்சி,ஒரு துள்ளல் அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு கண்ணாடியில் பார்த்து இன்று எழுதிவிட்டேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு துள்ளி சிரிப்பதில் எனது நாள் உற்சாகமாக துவங்கும்.
![]() |
அறையின் ஒன்பதாவது மாடியில் இருந்து. |
நண்பர்கள் என்ன வாசிக்கிறாய் என கேட்பார்கள். ஜெயமோகன் தளத்தை தவிர வேறெதிலும் செல்ல நேரமே இருக்காது.
ஊருக்கு வந்தபின் விட்ட வரவேண்டிய அனைத்து கட்டுரைகளும் வரும்.
நாஞ்சில் ஹமீது,
06-aug-2025.
Sunitashahul@gmail.com
மாலை 5மணிக்கு
கப்பலில் இருந்து இறங்கி
7 மணியளவில்
நகோயாவின்
சைப்ரஸ் கார்டன்
ஹோட்டலுக்கு வந்து விட்டேன்.