சீனாவின் நிங்போ துறைமுகத்திற்கு வந்தேன். அமெரிக்காவிலிருந்து கடந்த மாதம் இரண்டாம் தேதி புறப்பட்டு பனாமா கால்வாயை கடந்து முப்பத்தி மூன்று தினங்கள் நீண்ட பயணதிற்குபின் இங்கு வந்து சேர்ந்தோம்.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்டப்பின் பயணபாதையில் எங்கும் கடினமே இல்லை.வானில் முகில்கள் எப்போதும் சூழ்ந்தே இருந்ததால் இரு தினங்களே கதிரணைதலும்,கதிரெழுதலும் காணக்கிடைத்தது முகில்கள் சூழ பறவைகளுடன் ஒரு பயணம் என ரம்யமாக இருந்தது. வெப்பமும்,பணியும் குறைவாக இருந்ததும் கப்பல் காரனுக்கு கொஞ்சம் அதிகம்தான். பயணமுடிவில் இருதினங்கள் பெய்த பேய்மழையால் இருநூற்றி நாற்பது மீட்டர் நீளமுள்ள முழுகப்பலும் சுத்தமானதால் போசன் குழுவினருக்கு கப்பலை கழுவும் பணியும் குறைந்திருந்தது. இயற்கை சாதகமாக இருந்தும் கப்பலின் அடுமனை பணியாளர் தன் பணியை சரியாக செய்யாததால் கப்பலில் பலருக்கும் வயிற்று கோளாறு தொடர்ந்ததை தவிர்க்கஇயலவில்லை.
நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்த கப்பலின் இஞ்சினை அக்டோபர் நான்காம் தேதி நிங்கோ துறைமுகப்புக்கு செல்லும் ஆற்றின் முகப்பில் நங்கூரம் பாய்ச்சியபின் நிறுத்தி ஓய்வு கொடுத்தோம்.
வாய்ப்பு கிடைக்கும் கப்பல் காரர்கள் சீனாவின் பெருஞ்சுவருக்கு சென்றுவிட்டு அனுப்பும் படங்கள் ஒரு உளக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.சமூக வலைதளங்கள் பரப்பும் போலி செய்திகளால் சீனா குறித்த எதிர்மறையான எண்ணங்களே எனக்குள்ளும் பதிந்திருந்தது. 2012 இல் இங்கு வந்தபோது வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்காததால் பெரிதாக எதையும் அறிந்துகொள்ளவில்லை.2018 கப்பலை பழுதுபார்க்கும் பொருட்டு இருபது நாட்கள் இங்கு நின்றிருந்தபோது வெளியே சென்று சீனாவை பார்த்தபோதுதான் தெரிந்துது இது நன்கு முன்னேறிய நாடு.இங்குள்ள கடை வீதி சாலைகள் ஐரோப்பாவிற்கு இணையாக இருந்தது.இந்தியாவை விட முப்பது ஆண்டுகள் முன்னே சென்றுவிட்டது சீனா.
2012 இல் முதல் முறை வந்தபோதும் காப்டன் சொன்னார் இங்கே பொருட்கள் மிக மலிவுதான் தரமும் அப்படித்தான் இருக்கும். ஒரு யுவானுக்கு கிடைக்கும் அதே பொருள் உயர்தரத்தில் வாங்க வேண்டுமென்றால் அதற்கான பணம் கொடுக்க வேண்டும்.
நாங்கள் பேரிங் வாங்க கொட்டசன் கேட்டபோது முப்பத்திஏழு யுவான் மற்றும் அறுபத்தி மூன்று யுவான் இரு கொட்டேசன்களை முகவர் தந்திருந்தார்.
2018 ஆம் ஆண்டில் நண்பர் பெசில் இங்கே நல்ல காலணிகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று சொன்னதால் மகன்களுக்கும்,சுனிதாவிற்கும் வாங்கினேன் தரமான பொருள் நல்ல உழைப்பு என்பதை சுனிதாவின் கால்கள் நடந்தும் சூ கிழியாமல் இருந்ததால் உறுதியானது. சீனபெருஞ்சுவர் மட்டுமல்ல சீனபொருட்களும் உறுதியானவை.
நிங்போ ஆற்று முகப்பில் கப்பலை நிறுத்தி ஒரு முழுநாளும் காத்திருந்தபின்,மறுநாள் (ஐந்தாம் தேதி) பைலட் ஏறும் இடத்திற்கு ஐந்து மணிநேரம் பயணித்து சென்றபின் துறைமுகம் செல்வது ரத்தானதால் மீண்டும் திரும்பி வந்து நங்கூரம் பாய்ச்சினோம். முப்பது மெட்ரிக் டன் எரி எண்ணெய் மற்றும் எட்டுமணி நேர வேலை நேரம் எல்லாம் வீணாகியது.
மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு நங்கூரத்தை உருவி முன்னகர்ந்து சென்று மதியம் இரண்டு மணிக்கு நிங்போ ஆற்றில் பைலட் ஏறிக்கொண்டார்.மாலை ஆறு மணிக்கு கப்பல் கரையணைந்தது. ஆற்றங்கரைகளில் உள்ள சிறிய,பெரிய மலைக்குன்றுகளை வெட்டி சமதளப்படுத்தி துறைமுகம் எழுப்பியுள்ளார்கள். இன்னும் பெருமலைகளை உடைத்து கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
சரியான இடத்தில் மிகச்சரியாக கல் குன்றுகளை வெட்டி ஆபத்தான எல் பி ஜி திரவத்தை பாதுகாக்கும் தொட்டிகளை நிறுவியுள்ளனர்.கப்பலை கட்டியபின் மலையும்,பச்சை பசுமையாக செடி,கொடிகளும் கண்ணுக்கு உற்சாக மூட்டின.சாலையோ,ஊரோ தெரியவேயில்லை. மிகப்பாதுகாப்பான இடம் குடியிருப்பும்,வணிக வளாகங்களும் மிகத்தொலைவில் இருக்கும் வகையில் ஆற்றங்கரையில் அதிக ஆபத்தான சரக்கை கையாளும் பகுதி இருப்பது ஒரு கொடை.
சீன முகவர் முதலில் கப்பலுக்குள் வந்தார்.அவரை தொடர்ந்து வந்த மருத்துவ குழு அனைவருக்கும் கொரோனா சோதனைக்கு வாயை திறந்து உள் நாக்கில் குச்சியால் எச்சிலை தடவிச்சென்றனர்.இம்முறை அதிகம் வாய்க்குள் குச்சியால் குடையவில்லை என்றனர் எங்களில் பலர்.
பின்னர் குடியுரிமை அதிகாரிகள் வந்து அனைவரின் பாஸ்போர்ட்டுடன் புகைப்படம் பொருந்துகிறதா என பார்த்துவிட்டு சென்றபின்.சரக்கு தொட்டியிலிருந்து ப்ரோப்பேன் திரவத்தை சிறிய குப்பிகளில் சோதனைக்கு எடுத்துச்சென்றனர்.
டெர்மினல் எங்கள் குழாயுடன் மைனஸ் நாற்பது டிகிரியில் திரவ வடிவில் இருந்த எல்.பி.ஜி யை வாங்குவதற்கு அவர்களது குழாயை பொருத்தினர்.மாலை ஏழு மணிக்கே காஸ் இஞ்சினியரை ஓய்வுக்கு போகச்சொல்லி அனுப்பினேன்.
சரக்கு தொட்டிகளிலிருந்து அதிக விசையுடன் உந்தி தள்ளும் மின் உந்திகளை இயக்கி ப்ரோப்பேன் திரவம் குழாய்கள் வழியாக செல்லதொடங்கியது. இரவு பத்தரை மணிக்குமேல் சரக்கு அனுப்பும் பணி சீரானதும் என் கால்களுக்கும் சற்று ஓய்வு கிடைத்தது.சரக்கு கட்டுபாட்டு அறைக்குள் வந்தேன்.ஊருக்கு செல்பவர்களுக்கான மாற்று பணியாளர்கள் கப்பலுக்குள் வந்தனர்.இரண்டாம் தேதி இரவுமுதல் நிங்போ விடுதியறையில் இருந்து சோர்ந்துபோயிருந்தவர்களின் முகத்தில் உற்சாகம் கொப்பளித்தது. ஊருக்கு செல்பவர்களின் விடுமுறை இப்போது தான் உறுதியானது. நங்கூரம் பாய்ச்சி நின்றதால் இரு முறை அவர்களின் விமான சீட்டுகளை காப்டன் மாற்ற வேண்டியிருந்தது.
இரவு பன்னிரெண்டு மணிக்கு காஸ் இஞ்சினியர் வந்து என்னை விடுவித்தார். அறைக்கு வந்து நீராடி காலை ஐந்து மணிக்கு எழுந்து மீண்டும் குளியல்,தொழுகைக்குப்பின் சரியாக காலை ஆறுமணிக்கு சென்று காஸ் இஞ்சினியரை விடுவித்தேன். இரவில் லேசாக மழை பெய்து நனைந்திருந்தது டெக். அவ்வபோது இருண்ட வானின் கறுத்த மழை மேகங்கள் மென்மழையை தூவ காலை வேளை குளிர்ச்சியாக இருந்தது.
சரக்கு காட்டுபாட்டு அறையில் கணினி திரையில்,சரக்கு தொட்டிகளின் வெப்பம்,அழுத்தம் எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து. ஆவண புத்தகத்தில் எழுதிவிட்டு.டெக்கில் சென்று சரக்கு தொட்டிகள்,சரக்கு செல்லும் குழாய்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
மைனஸ் முப்பத்தி எட்டு பாகையில் செல்லும் குழாய்களின் வெளிப்பாகம் காற்று பட்டவுடன் பனிக்கட்டியாக மாறி வெண்ணிறத்தில் மிளிர்ந்துகொண்டிருந்தது.ஒரு சிறு குழாய் பனித்தூவலாக மாறி ஓரிடத்திற்கு மேல் வெண்மை இல்லாமல் குழாயின் பூசப்பப்ட்டிருந்த சாம்பல் நிறத்தில் தெரிந்தது. அதன் காரணம் அறிவதற்காக என் முன்னிருந்த பத்து அங்குலமே உயரமுள்ள,எண்பது மில்லிமீட்டர் அகலமுள்ள அரைச்சதுர இரும்பின் மீதேறி பார்த்தேன். அங்கு பொருத்தப்பட்டிருந்த வால்வ் ஒன்று எல் பி ஜி திரவத்தை தடுத்துநிறுத்தியிருந்தது.
காரணம் புரிந்ததும் திரும்பி கீழிறங்குகையில் என் இடது தால் அந்தரத்தில் இருக்கும்போது வலது கால் வழுக்கி நிலை தடுமாறி பொத்தென விழுந்தேன். சிலவினாடிகளுப்பின் தான் சுயம் தெளிந்து எழ முயற்சித்தேன். விழும்போது அனிச்சையாக இடதுகையை ஊன்றியது தெரிந்தது.கால்கள் இரும்பு அரைச்சதுரம்,குழாய்களுக்குள் மாட்டிகொண்டது.கைகளை ஊன்றியதால் இடுப்பில் அடியேதும் இல்லை.தலையில் கடின தொப்பி அணிந்திருந்ததால் காயம் ஏதும் இல்லை.இடது கையை பார்த்தேன் நல்ல வலி முறிவு ஏதும் இல்லை.
வலது காலின் குதிரைச்சதை பலமாக இரும்பு அரைச்சதுரத்தில் பட்டது மிக கடுமையான வலி. ஈரத்தரையின் மேல் நனைந்திருந்த குழாயின் மீது சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.நடக்க முடியும் எனத்தெரிந்தபோது மெதுவாக குடியிருப்புபகுதிக்கு வந்து படிகளில் ஏறி கட்டுப்பாட்டு அறைக்குள் சென்று ஐஸ் கட்டிகளை கொண்டு வலது காலின் குதிரைச்சதையில் ஒத்தடம் கொடுத்தேன்.முதன்மை அதிகாரி “வாட் கபாண்ட்” எனக்கேட்டார்.
“கீழ உளுந்துட்டேன்”
(மேலும் )
08 -10-2023,
நாஞ்சில் ஹமீது,
sunitashahul@gmail.com.
No comments:
Post a Comment