Friday, 13 October 2023

கால் வலி...

    சீனாவுக்கு வந்தேன் 2  (சாஞ்சியாகாங்-zhangjiagang)





  கட்டுபாட்டு அறையில் அமர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் ஒத்தடம் கொடுத்தேன். ஊருக்கு செல்பவர்கள் நல்ல உடையணிந்து புதியவர்களாக மாறி வந்திருந்தனர்.எட்டரை மணிக்கு அவர்களை அழைத்துச்செல்ல முகவர் வண்டியுடன் வருவார் என முன்னரே தகவல் வந்திருந்தது.


 காலை உணவுக்குப்பின் ஊருக்கு செல்பர்களை வழியனுப்பியபின் அம்பது மில்லிமீட்டர் அளவுள்ள மிகப்பெரிய போல்ட்டுகள் நூறுக்கும் மேல் கழற்ற வேண்டியிருந்தது. இன்று பணியில் இணைந்த போசன் ஹரியானாவின் சம்ஷேர் சிங்குடன்  பாதி போல்ட்டுகளை கழற்றியபின்.தேநீருக்கு உணவுக்கூடம் வந்தேன். உணவுபொருட்களும்,உதிரி பாகங்களும் ஜெட்டியில் வந்துவிட்ட தகவல் வந்தது.

 முதன்மை அதிகாரி,மூன்றாம் அதிகாரி புதிதாய் பணியில் இணைந்த விக்னேஷ்,குஷால் இஞ்சின் பிட்டர் கோடாவும் வர நிதின் கிரேனை இயக்கினான். முதன்மை அதிகாரி என்னை ஜெட்டியில்


போகச்சொன்னார்.காலில் அடிபட்டதை காரணம் சொல்லி கீழே இறங்க முடியாது என்றேன். கோடாவுடன்,குஷால் ஜெட்டியில் இறங்கி சீனர்களுடன் பொருட்களை வலைப்பையில் அடுக்கி கிரேன் கொக்கியில் மாட்டினர்.

  முதல் பை கிரேன் மூலம் மிட் ஷிப்பில் வந்ததும் சக்கரங்கள் பொருத்திய தள்ளு வண்டியில் அடுக்கி நூற்றி முப்பது மீட்டர் தாண்டி குடியிருப்பின் பின்புறம் உள்ள உணவு பொருட்கள் அடுக்கும் அறைகளின் முன் சென் குப்தாவும்,ரிச்சடும் செல்ல நானும் உடன் சென்று அங்கேய நின்று கொண்டேன். மழைத்தூறிக்கொண்டேயிருந்தது ரிச்சரிடம் “கால்ல அடிபட்டுருக்கு என்னால மின்னயும்,பின்னையும் நடக்க முடியாது,இங்குன நின்னுகிடேன்”.என்றேன்.

   இன்று பணியில் இணைந்த ஹரியானாவின் இரண்டாம் இஞ்சினியர் கவுதமுடன் அந்த ஊரின் அழகை பேசிக்கொண்டே வண்டியில் வந்த பொருட்களை குளிர் பெட்டிகளுக்குள் கொடுத்துகொண்டிருந்தோம்.ஜப்பானிய  அதிகாரி நாஸி மற்றும் இஞ்சினியர் கொசாக்கோவுடன்  இலங்கையின் ஹிராத்தும் எங்களுடன் இணைய காலியாக இருந்த குளிர் பெட்டிகள் நிரம்ப தொடங்கின அடுமனை பணியாளர்களின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

  என்னால் நடக்கவே முடியவில்லை லேசான வலியை பொறுத்துக்கொண்டே சமாளித்துக்கொண்டிருந்தேன். உணவுப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் கப்பலுக்குள் வந்தபின் பதினொன்றரை மணிக்கு உணவுக்கூடம் சென்று அமர்ந்துவிட்டேன்.மென் மழைத்தூறிக்கொண்டே இருந்தது.

  காஸ் இஞ்சினியர் வந்தார் பணியை ஒப்படைத்துவிட்டு உணவுக்குப்பின் ஓய்வுக்கு வந்தேன். இரண்டு மணிக்கு முன்பாகவே என்னை அழைத்தார்கள்.கார்கோ முடிந்துவிட்டது காஸ் இஞ்சினியரால் தனியாக சமாளிக்க முடியாது சீக்கிரம் டெக்கில் வா என.

 டெர்மினலின் குழாய்கள் கழற்றபட்டு கப்பல் மூன்று மணிக்கு புறப்பட்டது மறுநாள் காலையே அடுத்த துறைமுகம். அங்கு சரக்கு கொடுக்கும் வேறுபட்ட அளவுள்ள குழாய்களை பொருத்தி தயார்படுத்த வேண்டியிருந்தது.மீண்டும் மழை பெய்ய தொடங்கியது காஸ் இஞ்ச்னியர் “டீய குடிச்சிட்டு ஒரு ரிடியுசர மட்டும் மாட்டிட்டு வந்துருவோம்,எல்போ இப்ப மாட்ட முடியாது,மள பெய்து”என்றார்.

  நாற்காலியில் அமர்ந்திருந்த நான் எழும்போது வலி கணுக்காலுக்கு இறங்கியிருந்தது.இப்போது நடப்பதில் இன்னும் சிரமமாக இருந்தது. ரிடியுசர் குழாயை மிட் ஷிப் அறையிலிருந்து எடுத்து வண்டியில் வைத்து என்னால் உருட்டவே முடியவில்லை.முதன்மை அதிகாரி வந்து நான் சிரமபடுவதை பார்த்து கேட்டார். 

‘வலிக்கிறது”என்றேன். 

 ஓசையுடன் பெரிய துளிகளாக மழைத்துளி  டெக்கில் அறைந்து கொண்டிருந்தது.என்னால் குடியிருப்புக்குள் திரும்பி செல்லவே முடியாது என நினைத்தேன். காப்டன் ரேடியோவில் முதன்மை அதிகாரியை அழைப்பதை கேட்டோம். அவர் மிட் ஷிப்பில் வந்தார். “நீ போய் ரெஸ்ட் எடு,இந்த குழாயை இங்கேயே வைத்து கட்டிவிடுங்கள். நாளைக்கி டெர்மினல் இல்லை ஒரு நாள் டிலே” என்றார்.

  மிக மெதுவாக அசைந்து,அசைந்து குடியிருப்பை வந்தடைந்தேன். மூன்றாம் இஞ்சினியர் “ஷாகுல் என்னாச்சி,சிங்கபூர்ல இருந்து வீட்டுக்கு பெயிரலாம்” என்றார்.

  இரண்டு கையாலும் கைப்பிடியை பிடித்து முடிந்தவரை வலக்காலுக்கு எடை அளிக்காமல் படிகளில் ஏறினேன். ஷூவை கழற்றியபோது கால்கள் வீங்கியிருந்தது.எனக்கு அடிபட்டது வலதுகாலின் குதிரைச்சதையில் கணுக்காலும்,இடது கை தோள் பட்டை,முழங்கை,மணிக்கட்டு வலிக்க தொடங்கியது.கீழே விழுந்தபோது கைகளை ஊன்றியது ஞாபகம் வந்தது.

  அறைக்குள் வந்து பக்கெட்டில் அமர்ந்து சுடுநீரில் குளித்து வலித்த இடங்களில் சுடு நீரை ஊற்றிக்கொண்டே இருந்தேன்.வலது காலை கீழே  ஊன்ற இப்போது இன்னும் சிரமமாக இருந்தது. நாற்காலியில் அமர்ந்தே அஸர் தொழுகையை நிறைவேற்றினேன்.ஐந்து மணிக்கு மேல் கால்கள் வீங்கி யானைக்கால் போல் ஆகிவிட்டது.வலது காலை தரையில் வைக்கவே இயலவில்லை.

 மெஸ்மேன் கலீலை அழைத்து இரவுணவை தருமாறு வேண்டினேன்.கப்பலின் மருத்துவ அதிகாரியான இரண்டாம் அதிகாரியை பலமுறை போனில் அழைத்தும் கிடைக்காததால் முதன்மை அதிகாரிக்கு அழைத்துச் சொன்னேன். அவர் இரண்டாம் அதிகாரியை அழைத்துக்கொண்டு அறைக்கு வரும்போது நான் தரையில் அமர்ந்திருந்தேன். கால்களை வீங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்.

 இரண்டாம் அதிகாரி “மூணு மணிக்கி டெக்கில பாக்கத்துல நல்லா இருந்தான் என்ன ஆச்சி,எப்டி ஆச்சி”

முதன்மை அதிகாரி காலில் அமுக்கி பார்த்துவிட்டு “இந்த பெயின் தான்....”

 “இல்ல சீப் மசல் ப்ரோக்கன், நத்திங் டு டூ டேக் ரெஸ்ட் பார் நெக்ஸ்ட் பைவ்,சிக்ஸ் டேய்ஸ்”.

 காலில் தடவ ஒரு களிம்பும்தந்தார்.முதன்மை அதிகாரி “வலிக்கு”என கேட்ட போது “ப்ருபென் தான் இருக்கு”

 நான் “வேண்டாம்” என்றேன். 

காலை உணவுக்கு கீழே சென்றால் காலில் சுற்றிக்கொள்ள ஒரு பேண்டேஜ் தந்தார். “ஐஸ் ஒத்தடம் கொடு, நடக்காதே,டேக் ரெஸ்ட்”என சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்.

  கலீல் இரண்டு சப்பாத்தியும் மீன் கறியும் தந்துவிட்டு போனான். காலிலும் உடலிலும் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் போல இருந்தது. ஹிராத் அறைக்கு வந்தார். என் முகத்தை பார்த்தே வலியை உணர்ந்துகொண்டார் சிரித்துக்கொண்டே “என்னால நம்பவே முடியல, நீ எப்டி விழுந்தா, டோன்ட் வொர்ரி, வலி மாத்திர தாரேன் போட்டுக்கோ நான் சாப்பிட்டிட்டு வாறன்” என சொல்லிசென்றார்.

  கோடா வந்து எனது பிளாஸ்கை வாங்கி சுடு நீர் கொண்டு தந்தான். காஸ் இஞ்சினியர் “ரெஸ்ட் எடுங்க,நான் பாத்துகிடேன்,ஆன் கால் ல இருப்பேன் தேவைன்னா கூப்பிடுவாங்க அப்ப போவேன்,நீங்க எதையும் யோசிக்காதீங்க ஷாகுல் காலைல பாப்போம்”

  பக்கத்துக்கு அறையின் மோட்டார் மேன் நாசிக்கின் சந்தோசம் வந்து பார்த்துவிட்டு என்ன தேவை என்றாலும் சுவரில் தட்டு வருகிறேன் என்றார். பத்திசாப் வந்து “சப்பிட்டிட்டுயன்னா உடனே மாத்திரை போடு உறங்கிரலாம்”என்றார். காலில் ஒரு பேண்டேஜை ஓட்டினார் “இது சூடாகும் சீக்கிரம் குணமாக்க கூடியது” எனக்கூறி அவரே என் காலில் ஓட்டினார். 

  படுத்து விட்டேன் ஏழு மணிக்கே எண்ணங்கள் எங்கெல்லாமோ சென்று முட்டி திரும்பியது.சுனிதாவிடம் சொல்லியிருந்தேன். முதன்மை இஞ்சினியர் அறைக்கு வந்து பார்த்தார். “நாளைக்களிச்சி சாயங்காலம் தான் போர்ட்,அது வர ரெஸ்ட் எடுங்க,பொறவு வாட்ச்க்கு வந்தா போதும்”  

“லைட்டை ஆப் பண்ணவா” 

“அணைச்சிருங்க”

“பாத்ரூம் கதவு”

“திறந்தே இருக்கட்டும்”என்றேன். 

   கட்டிலிலிருந்து கீழே இறங்கி ஆறடி தூரமுள்ள கழிப்பறைக்கு ஒற்றை காலில் கிந்தி,கிந்தி நகர்ந்தேன்,தரையிலிருந்து ஆறு அங்குலம் உயரத்திலிருந்தது அந்த அறையின் கதவு ஒற்றை காலில் என்னால் உள்ளே செல்ல முடியாது எனத்தெரிந்தது முழங்காலில் நின்று குளியலறையின் கம்பியை பிடித்துக்கொண்டு தாவி உள்சென்று கழிப்பறை குவளையில் அமர்ந்துகொண்டேன். இறங்கும்போதும் குழந்தையை போல் தவழ்ந்து,தவழ்ந்து கட்டிலுக்கு நகர்ந்து விட்டேன்.சரிந்து இடது காலுக்கு மேல் வலக்காலை வைத்து உறங்கிபோனேன்.

மீண்டும் ஒன்பதுமணிக்கு விழித்தபோது வலது காலை அசைக்கவே முடியவில்லை முன்பு போலவே தவழ்ந்து சிறுநீர் கழித்து வந்தேன்.மீண்டும் சுனிதாவை அழைத்தேன்.

“இப்ப எப்டி இருக்கு”

 “கால் அசைக்கவே முடியல,வலி பின்னி எடுக்குது”என்றேன்.

“அப்ப என்ன மருந்து தந்தாங்க”

“ஒண்ணுமில்ல ஒரு ஆயின்மென்ட் அவ்ளோதான்,நாளைக்கி போர்ட் பெயிரும்,ரொம்ப முடியலன்னா ஆசுபத்திரி பெயிரலாம் இங்க நல்ல ட்ரீட்மெண்ட் கிடக்குமில்லா”

“அப்போ சைனால வேற ஆளுக்கு தான் மோசமா குடுப்பானுவளா”

சிரித்துவிட்டு “அப்டி இல்ல இங்க நல்ல அட்வான்ஸ் இல்லா, சின்ன கண்ட்ரி போல இல்ல,இப்ப போர்ட் போறதுனால நல்லது பாத்துகிடலாம்” என்றேன்.

அறையின் குளிரூட்டியை குறைத்துவிட்டு போர்வையால் மூடியபோது கால் விரல்களில் துணி பட்டதும் வலிக்க தொடங்கியது.கண்களை மூடி காலின் வலியையே கவனித்து கொண்டிருந்தேன் ஒரு இனிய வலி. ஆசான் ஜெயமோகனின் பெருவலி கதை நினைவுக்கு வந்தது.எப்போது தூங்கினேன் எனத்தெரியாது.

 அதிகாலை கனவின் நான் டெக்கில் நடந்து படிக்கட்டுகளில் மிக உற்சாகமாய் ஏறிக்கொண்டிருந்தேன்.கனவு கலைந்து கண்களை திறக்கமாலே கட்டிலில் படுத்திருக்கிறேன் எனும் நினைவு வந்ததும் கால் பாதங்களை மிக மெதுவாக அசைத்து பார்த்தேன். அசைக்க முடிந்தது.எழுந்து அமர்ந்து வலக்கால் பாதத்தை கீழே ஊன்றி பார்த்தேன்,கால் தரையில் பதிந்தது.கடிகாரம் ஐந்து மணி என காட்டியது.சிற்றடி வைத்து பாத்ரூமுக்குள் சென்றேன்.கண்ணாடியை பார்த்தேன்,காலை பார்த்தேன் வீக்கம் குறைந்திருந்தது மீண்டும் கண்ணாடியை பார்த்தேன் கனவு அல்ல என உறுதியானது நான் எனது அறைக்குள்ளிருந்த குளியலறையில் நின்றுகொண்டிருக்கிறேன்.

  கண்ணாடியில் என்னை பார்த்து நானே சிரித்தேன்,என்னால் நடக்க முடிகிறது எனும் துள்ளல்,உற்சாகத்தில் கைகளை உயர்த்தி சப்தமாக சிரித்தேன்.ஊளு செய்து அதிகாலை தொழுகையை நிறைவேற்றினேன்.ஆறுமணிக்கு ஒஸ் இர்பான் என் அறையை திறந்து நலம்  விசாரித்தான்.கப்பலை  நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியபின் முதன்மை அதிகாரி  அறைக்கு வந்தார். “வீக்கம் நல்லா குறஞ்சி செரியாயிட்டு”என்றேன். “நீ நடக்காத,காலத்த  நாங்கோ பைப்ப எல்லாம் மாட்டிருவோம்,யூ வில் பி ஆல்ரைட் ஆப்டர் த்ரீ,போர் டேய்ஸ்” எனகூறிச்சென்றார்.

 சுனிதாவிற்கு வாட்சப்பில் சொன்னேன்.தினமும் உரையாடும் சகோதரிக்கும் “நான் பிரையர் பண்றேன் ஷாகுல்”எனச்சொன்னார். சுனிதா போனில் அழைத்து வீடியோ அழைப்பில் காலை காட்ட சொன்னாள். “செரி ஆயிட்டுன்னா நல்லது அல்ஹம்துலில்லாஹ்” என்றாள்

 முழுநாளும் உணவுக்கு மட்டும் காலில் அழுத்தம் கொடுக்காமல் படியிறங்கி உணவுக்கூடம் சென்றேன். மதியத்திற்கு மேல் நாற்காலியில் அமர்ந்திருந்ததால் மீண்டும் கால் வீங்கியது.நாற்காலியில் அமருவதை தவிர்த்து,சுடுநீர் ஒத்தடம்,ஐஸ் ஒத்தடம் கொடுத்தேன். அதற்கடுத்த நாள் மாலையில் துறைமுகம் சென்று  கப்பலை கரையில் கட்டும்போது பணிக்கு சென்றேன்.

 

துறை முகத்தில் 

லேசான வலி தொடர்ந்தது. இரு தினங்கள் பன்னிரெண்டு மணிநேர பணி.குறைவான தூக்கம்.சரக்கு இறக்கும் பணி முடிந்ததும் மதியதிற்குப்பின் நல்ல ஓய்வு,நேற்றும் மதியத்திற்கு பின் எனக்கு கடினபணியே இல்லை.

இன்று முழுநாளும் ஓய்வு காலில் இருமுறை தைலம் போட்டு தடவினேன்.கால் அடி பட்ட இடத்தில் இன்னும் வலி இருக்கிறது.முழுமையாக குணமாக இன்னும் சில தினங்கள் ஆகலாம்.வழக்கமான பணிக்கு திரும்பிவிட்டேன்.

 “நல்லாயிட்டுன்னு ரெம்ப போட்டு லாத்தாதங்கோ” என கண்டிப்புடன் சொன்னாள் சுனிதா.

நாஞ்சில் ஹமீது,

13 October 2023.

Sunitashahul@gmail.com

No comments:

Post a Comment