Sunday, 22 October 2023

படம் சொல்லும் கதை


இந்த கப்பலில் வந்த சில தினங்களிலேயே உணவுக்கூடத்தில் ஒட்டியிருந்த இந்த படத்தை பார்திருந்தபோதும் அதில் இருக்கும் விவரணைகளை கூர்ந்து கவனிக்க தவறியிருந்தேன்.

   மிக தாமதமாக அதிலுள்ள படங்களை பார்த்தபோது அதற்குள் ஒரு கட்டுரை(கதை) ஒளிந்திருப்பதை உணர்ந்தேன். இந்த நிறுவனத்தில் 2006 ஆம் ஆண்டு பணியில் இணைந்தபின்  தோல் வியாதியால் தொடர்ந்து பணி செய்யமுடியாமல் இரண்டே மாதத்தில் கப்பலிலிருந்து இறங்கிவிட்டேன்.

  முதலில் தோல் மருத்துவ நிபுணரின் மருந்துகள். ஒரு மாதத்திற்குப்பின் நண்பர் மணவை ஸஜி மெடிக்கல் ஷாஜி அண்ணனின் பரிந்துரையின் பேரில் அலோபதி டாக்டர் சகாயத்தை பார்த்தேன். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த சித்த மருத்துவ நண்பரிடம் விபரங்களை கூறி அவர் பரிந்துரைத்த மருந்துகளை சில மாதங்கள் எடுத்தேன். பின்னர் ஆயுர்வேதம்,நாட்டு மருத்துவம் எதற்கும் பிடி கொடுக்காமல் தோல் வியாதி என்னை வதைத்தது.திருமணமாகி மகன் பிறந்து ஒன்றரை வயதாகியிருந்தது.எப்போது பணிக்கு செல்வேன் என்பதில் எந்த உறுதியும் இல்லாமல் நாட்கள் நீண்டுகொண்டே சென்றது. முதல் முறை தந்த வாய்ப்பிலேயே உடல்நலமின்றி இறங்கிவிட்டதால் கப்பல் நிறுவனமும் திரும்பி என்னை சேர்த்து கொள்ள யோசித்தது.எனக்கு தோல் வியாதி முழுமையாக குணமாகாமல் கப்பல் நிறுவனத்துடன் பேசவும் முடியாத சூழ்நிலை.

  மனைவி,குழந்தை,எனது வைத்தியம் என செலவு மிகுந்த நேரம் வருமானமோ,சேமிப்போ இல்லாமல் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தேன். உம்மா சவுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் கடைசி தம்பியிம் “வீட்டு செலவுக்கு அவன்ட்ட பைசா கேக்க முடியாது,அவனுக்கும் சேத்து வீட்டு செலவ பாத்துக்கோ”என சொல்லியது பெரிய விடுதலையாக இருந்தது.

  குழந்தையின் மருந்துகள்,பால் பவுடர்,எதற்கும் ஆசைபடாத மனைவயின் சில அத்தியாவசிய தேவைகள் சில இருந்தன. எல்லாத்துக்கும் பொருள் வேண்டும்.என்னாலும் நீண்ட நாட்கள் சும்மா இருக்கவும் முடியாது.வாப்பா பணிபுரிந்த எனது மணவாளக்குறிச்சி கிராமத்திலுள்ள இந்திய அபூர்வ மணல் ஆலையில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பேசி தற்காலிக வேலை வாங்கி தந்தார்.

அவித்த முட்டை ரோஸ்டுடன், உம்மா தரும் புளித்தண்ணி விரவிய சோத்துகட்டை சுமந்து ஆறரை மணிக்கே புறப்பட்டு இரு பேருந்துகள் மாறி எட்டுமணிக்கு மணவாளக்குறிச்சி மணலாலை போய்விடுவேன்.வாப்பா அப்போது பணி ஓய்வுபெற்று மணலாலையின் முன் இருந்த நாசர் ஹோட்டலின் முன் கடை விரித்திருந்தார். சென்ட்வகைகள்,ராணி சோப்,சாரம்,டவல்,ஜட்டி,பாரின் பிரா,நைட்டி,செருப்பு,வாட்ச்,கவரிங் நகைகள்,சிகரெட் லைட்டர் போன்றவை வியாபார பொருட்கள்.அதுபோக “பாய் கல்யாண பாய் வேணும்” ஐயப்பன் மலைக்கு போகும் சாமிகளுக்கு இடுப்பில் கட்ட பெல்ட்,பந்தி பாய் வேண்டும் என யார் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார் கடனாக.

வாப்பா பதினோரு மணிக்கு இருநூறு ரூபாய் கலெக்சன் அல்லது பெரியவிளை கடற்க்கரையிலிருந்து  வரும் கும்பாரி கொண்டு வரும் மீனை நல்ல சகாய விலையில் வாங்கிவிட்டால் உடனே கடையை மூடிவிட்டு  வீட்டுக்கு பஸ் ஏறிவிடுவார். மொத்த கடையையும் ஒரு பைக்குள் அடைத்து நாசர் ஹோட்டலுக்குள் வைப்பது வழக்கம்.

  மூன்று தினங்களே அங்கு வேலை செய்தேன். அந்த பணியாளர்களின் உலகில் என்னை பொருத்திக்கொள்ள இயலவில்லை. காலை முதல் சந்திப்பின் அவர்களின் முதல் விளி “லே தள்ளையயோளி” அதற்கு பதிலாக “நேத்து எங்கல போனா புண்டாமொனே” என்பதாக இருந்தது. சிறுநீர் கழிக்க அங்குள்ள கழிப்பறையை அதிகாரிகள் தவிர வேறு யாரும் உபயோகிப்பதே இல்லை.

    தினத்தந்தியில் வேலைக்கு ஆள்கள் தேவை என கண்ட விளம்பரத்தில் இருந்த எண்ணில் போனில் அழைத்தேன் நேரில் வரச்சொன்னார்கள்.அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை அடிக்கடி நான் பார்ப்பதுண்டு. நாகர்கோயில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயத்தின் முன் இருக்கும் ஆர்கே ஏஜென்சியில் சேல்ஸ்மேன் வேலை.

  நேர்முக தேர்வுக்கு சென்றிருந்தேன்.அலுவலக்கத்தில் இருந்த ராகிணி கண்களை பார்த்து புன்னைகையுடன் “கொஞ்சம் இருங்க ஒண்ற்,இப்பம் வருவாரு”என்றாள். மாநிறத்தை விட சற்று நிறம்,ஒல்லியான தேகம் மிக நேர்த்தியாக புடவைகட்டி,சுருட்டையான கூந்தலில் மிக குறைவாக பூ வைத்து,சிரித்த முகத்துடன் அமர்ந்து எதோ எழுதிக்கொண்டிருந்தாள்.வாயிற்கதவில் ஒரு லாரி நுழையும் அகலம் இருந்தது.உள்ளே சென்றால் லாரியையும் நிறுத்தி இரு ஒரு மகேந்திரா வேன்,கூண்டு கட்டிய ஒரு 407 டெம்போவில் அடைபெட்டிகளையும்,தகர டின்களையும் ஆண்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு கூண்டு ஆட்டோவும் நின்றிருந்தது.கணக்கு புத்தகம்,சில்லறை காசுகள் அடங்கிய பையை வாங்கியபின் வண்டியில் ஏற்றிய பொருட்களின் பட்டியலை சரி பார்த்து ராகிணியிடம் கொடுத்தபின் வண்டிகள் ஒவ்வொன்றாகபுறப்பட்டு சென்றது.

    அங்கே காத்திருந்த  சிறிது நேரத்தில் தெரிந்தது ராகிணிதான் முதலாளி இல்லாத நேரத்தில் அனைத்துக்கும் பொறுப்பு என.அலுவலகத்திலும் வெளியிலும் இருந்த பெண்கள் வேலையில் மும்மூரமாகினர். கறுப்புகண்ணாடி அணிந்து ஹீரோ ஹோண்டா ஸ்லீக் பைக்கிலிருந்து இறங்கியவர் அலுவலகத்துக்குள் சென்ற இரண்டாவது நிமிடம் என்னை ராகிணி உள்ளே அழைத்தாள்.

    நேர்முகத்தேர்வில் தேர்வாகிவிட்டேன். பாண்டும் சட்டையும் போட்டு இன் செய்து போயிருந்ததால் அந்த வேலை எனக்கு கிடைக்காதோ என சந்தேகத்துடன் இருந்தேன்.அது பாமாயில் கம்பனி மலேசியாவில் இருந்து கப்பல்களில் வரும் பாமாயில் எண்ணையை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான பதினாறாயிரம் லிட்டர் கொள்ளவுள்ள டாங்கர் லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொண்டு வரும்.

  இங்கே உள்ள எண்ணெய் தொட்டியில் மாற்றப்பட்டு பதினாறு கிலோ தகர எண்ணை டப்பாக்கள் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பன்னிரண்டு பாக்கெட்டுகளை ஒரு அட்டைப்பெட்டி வீதம் அடுக்கி இங்கிருந்த வண்டிகளில் ஏற்றி திங்கள்கிழமை திங்கள்நகர்,செயவ்வாய்கிழமை செங்கவிளை,புதன்கிழமை புத்தன்துறை,கருங்கல்,பள்ளியாடி,வியாழன் தாமரைக்குளம்,சுசீந்திரம்,கன்னியாகுமரி,வெள்ளிக்கிழமை வெள்ளிச்சந்தை,வெள்ளிகோடு,சனிக்கிழமை மயிலாடி என மொத்த விற்பனைக்கு மாவட்டம் முழுவதும் எடுத்து செல்லப்படும்.

  எனக்கு உதவி சேல்ஸ்மேன் வேலை.காலை எட்டு மணிக்கு பாமாயில் கம்பனிக்கு செல்ல வேண்டும் ஏதாவது ஒரு வண்டியில் சேல்ஸ்மேனுடன் பாமாயில் டின்கள்,பாக்கெட்டுட்கள் அடங்கிய அட்டைபெட்டிகளை ஏற்றியபின் வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம் தக்கலை,பத்மனாபபுரம்,அழகியமண்டபம்,மேக்காமண்டபம்,வேர்கிளம்பி,பூவன்கோடு,மணலிக்கரை,சித்திரங்கோடு,முட்டைகாடு,திருவட்டாறு,திற்பரப்பு,களியல்,கடையல்,பொன்மனை,குலசேகரம் என சென்று திரும்பும் ரூட்டில் கடைகளில் ஆர்டர் எடுத்தபின் பாமாயில் டின் மற்றும் அட்டைபெட்டிகளை தோளில் சுமந்து கடையில் வைக்கவேண்டும் பில் கொடுத்து காசை சேல்ஸ்மேன் வாங்கிகொள்வார்.

  மழையில்லாத நாட்களில் ஏதாவது மர நிழலில் வண்டியை நிறுத்தி சோற்றுகட்டை பிரித்து சாப்பிட்டபின் அங்கேயே பேப்பர் விரித்து அரை மணிநேரம் கண் மயங்குவோம்.மாலையில் ஏழு மணிக்கு கம்பனிக்கு திரும்பி வந்தால் தினசரி சம்பளமான நூறு ரூபாயில் ஐம்பதை கையில் வாங்கிகொண்டு வீட்டுக்கு செல்வேன்.

  அங்கே சேல்ஸ்மேன்,ட்ரைவர்கள் தவிர பணி செய்த அனைவரும் நடுவயதை தாண்டிய பெண்கள் தினசரி சம்பளம் ஐம்பது ரூபாய் அவர்களுக்கு.பணிநேரம் காலை ஒன்பதரை முதல் நான்கரை வரை காலை,மாலை டீ கம்பனிக்கே வந்துவிடும்.மாதசம்பளம் வாங்கும்போது ஒரு லிட்டர் பாமாயில் ப்ரீ.அலுவலகத்தில் ராகிணியுடன் சுடிதார் அணிந்த அழகான சிறு வயது பிராமண பெண்ணொருத்தி அக்கவுண்டன்ட் ஆக இருந்தாள்.

   முதல் நாள் நேர்முகதேர்வுக்குப்பின் காலை பதினோரு மணிக்கி எண்ணை தொட்டியிலிருந்து தகர டின்னில் எண்ணையை நிறைக்கும் நடுவயது பெண்ணுக்கு உதவ சொன்னார்கள்.காற்று போன பொம்மையில் துணியை சுற்றியது போலிருந்த அவளின் முகத்தில் கண்ணாடி மட்டும் பெரிதாக இருந்தது  தராசில் காலி டின்னை வைத்தபின் பூஜ்யத்தை செட் செய்தபின் அந்த பெண் எண்ணெய் குழாயை திறப்பாள் பதினாறு கிலோ அளவு காட்டும்போது குழாயை மூடி விடுவாள் அதை தூக்கி பத்தடி தள்ளிவைத்தால் இந்திராகாந்தி படம் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தின் அளவுள்ள சிறு வட்ட தகர துண்டை வைத்து இரு கொல்லர்கள் ஈயத்தை உருக்கி டின்னின் ஓட்டையை அடைப்பார்கள்.பின்னர் டின்னில் என் ஆர் கோல்ட் எனும் பெரிய படம் உள்ள ஸ்டிக்கர் ஒட்டி சேல்ஸக்கு தயாராகிவிடும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு டின் என நாள் முழுவதும் எண்ணெய் டின்னை தூக்கி வைத்து கைஓய்ந்து வீட்டிற்கு சென்றேன்.

மறுநாள் காலை பணிக்கு வந்தபோது என்னை பற்றிய புகார் ஒன்று இருந்தது.இந்து எனும் வேறொரு நடுவயது பெண் “தம்பி நீங்க அவளுக்க கிட்ட நெருங்கி நிக்காதீங்க,அவளுக்கு கூச்சமா இருக்காம்”என அதன் பின் அங்கே பணியிலிருந்த நாட்களில் எண்ணெய் நிறைக்கும் தராசு அருகில் செல்லவேயில்லை.

  

  22-10-2023,

நாஞ்சில் ஹமீது.

பின் குறிப்பு. அலுவலகத்தில் இருந்த அந்த அழகான பிராமண பெண் மீனா கல்லூரியில் Mcom வரை படித்துவிட்டு பணிக்கு வந்தவள்.வீட்டிலிருந்து பணிக்கு வந்த மீனாவை காணாமல் பெற்றோர் பாமாயில் கம்பனிக்கு தேடிவந்த அன்று சேல்ஸ்மேன் சுயம்புவும் பணிக்கு வரவில்லை.பளபளக்கும் கரிகட்டை நிறத்தில் இருந்த சுயம்புவுடன் சுசீந்திரம் கோயிலில் மாலை மாற்றி கொண்டதாக சொன்னார்கள். 

No comments:

Post a Comment