Sunday 15 October 2023

கரைக்கு செல்லும் கப்பல்கரான்

 


ஷோர்-லீவ் (shore leave)

                     

                 முதல் முதாலாக கப்பலுக்கு செல்லும் முன் உறவினர் ஒருவர் கேட்டார் “மச்சான் கொச்சிக்கு கப்பல் வந்தா என்ன செய்வியோ” “வீட்டுக்கு வந்துட்டு,பெயிரலாம் மச்சான்” என்றேன்.

  முதல் பயணமாக குவைத்துக்கு சென்று அப்தலி பாலைவனத்தில் முதல் ஒரு மாதம் கழிந்த பின் தான் மிர்காப் நகருக்கு போகும் வாய்ப்பு கிடைத்து.பின்னர் ஈராக் போர்முனையில் பணிபுரிந்தபோது ஒவ்வொரு வினாடியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்த நாட்கள்.முகாமை விட்டு வெளியே சென்றால் பிடித்திவைத்திருக்கும் உயிரை தானாக விட்டுவிட வேண்டியதுதான்.

 முதல் கப்பல் துபாயில் இணைந்தபோது துபாய்,அஜ்மன்,ஷார்ஜா புஜைரா கடற்கரை என சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. என் திருமணத்தில் கலந்தகொள்ள இயலாமல் போன சுனிதாவின்  அக்கா கணவர் ஜாஹிரை சந்தித்தது தேரா துபையில்.சோனாப்பூரிலுள்ள மாமி மகன் பைசலை நீண்ட இடைவெளிக்குப்பின் கண்டதும் அங்கேதான்.

   கப்பல் காரர்களுக்கு கப்பல் செல்லும் நாடுகளில் வெளியே செல்ல வாய்ப்புகிடைகிறது. கப்பல் கரையணைந்தபின் குடியுரிமை அதிகாரிகள் வந்து ஷோர் பாஸ் தருவார்கள். வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டு அதைக்கொண்டு கப்பல் காரன் வெளியே சென்றுவிடமுடியும்.ஆஸ்திரேலியா,அமெரிக்கா நாடுகளுக்கு விசா வைத்திருக்கவேண்டும்.விசா இருந்தால் மட்டுமே ஷோர் பாஸ் கிடைக்கும்.

Melbourne 



  சில நாடுகளில் ஷோர் பாஸ் முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.சில நாடுகளில் குறிப்பிட்ட தேசத்தை சார்ந்தவர்களை அனுமதிப்பது இல்லை.இஸ்ரேலில் மலேசியர்களுக்கு அனுமதியில்லை,ஆப்ரிக்காவின் டோகோவில் இலங்கையர்களுக்கும்,ஈகுவாடர் நாட்டில் இந்தியர்களும் கால் வைக்க முடியாது.

 சிலர் கேட்பதுண்டு சிங்கபூர்ல ட்ரைன போனியா,அமெரிக்காவுல வெளிய போவ முடியுமா அப்புடி உடுவாங்களா? சும்ம ரீல் உடாதடே என.

   நீண்ட கடல் பயணத்திற்குப்பின் கப்பல் கரையணைந்தபின் கப்பல்காரர்கள் வெளிய சென்றுவர கப்பல் நிறுவனங்களும்,அந்த நாடுகளும் ஊக்குவிக்கின்றன. உலக பொருளாதார வளர்ச்சியில் நீர்வழிபோக்குவரத்தின் உயிர் நாடியாக இருப்பது கப்பல் பணியாளர்கள்.

ஏதாவது துறைமுகங்களில் கப்பல் நிற்கும்போது சுனிதா கேட்பாள் “வெளிய போவல்லையா”என. வெளியில் போய் சுற்றிவிட்டு வந்தபின் “என்னா சாரே கண்ண கழுவியாச்சா” என சிரித்துக்கொண்டே அடுத்த கேள்வி.



                    மெக்ஸிகோவில் கண்ணை கழுவும் கப்பல் காரன்                                                  

மாதக்கணக்கில் உடன் பயணிக்கும் சக ஜீவிகளையன்றி வேறு முகங்களை பார்க்கும் வாய்ப்பே இல்லாத  கப்பல்காரனுக்கு நிலத்தில் வேறு,வேறு முகங்களும்,மலையும்,நிலகாட்சிகளையும் காணும்போது பெரும் மகிழ்ச்சியை தரும். என் யோகா குரு சொல்வார் “இயற்கையில் எல்லாம் அழகு,மனிதன் இன்னும் அழகு அதில் பெண்ணுக்கு ஒரு ஆணும்,ஆணுக்கு ஒரு பெண்ணும் பேரழகு. தென்னமெரிக்காவின் பிரேசில்,மெக்ஸிகோ,வெனிசுலா,உருகுவே,அர்ஜென்டினா,கொலம்பியா  .....போன்ற நாடுகளில்  அழகு பெண்களை கண்டபோது குரு சொன்னது உறுதியானது.

 


   

 கப்பல் துறைமுகப்பில் கட்டப்படுவது சரக்கு ஏற்றவும்,இறக்கவும் மட்டுமே.அதை எவ்வளவு வேகமாக செய்ய முடியுமோ அப்படி செய்து முடித்து கப்பலை சீக்கிரம் வெளியேற்றவே துறைமுகம் மும்மூரமாய் இயங்கும். ஏனெனில் வேறு கப்பல் உள்ளே வர தயாராக நங்கூரமிட்டு காத்திருக்கும். தாமதமாகும் ஒவ்வொரு நொடிக்கும் கோடிகளில் கணக்கு. இடம் காலியானால் அதே இடத்தில் உடனே வேறு கப்பல் கட்டப்பட்டு சரக்கு பரிவர்த்தனை. அவ்வேளையில் தான் கப்பலுக்குக்கான தேவையான உதிரி பாகங்கள்,உணவு பொருட்கள்,எண்ணெய் நிரப்புதல் ஆகியவற்றுடன் அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகளும் நடக்கும்.



 இதெல்லாம் முடிந்து நேரம் இருப்பின் கப்பலின் மூத்த அதிகாரிகள் அனுமதித்தால் பெரும் களைப்பிலிருக்கும் கப்பல்காரன் கரைக்கு போய் சுற்றிவிட்டு வரமுடியும். வாட்ச் கீப்பர்களாக இருந்தால் பணிநேரம் முடிந்தபின் வெளியில் செல்ல வேண்டும். ஓய்வு நேரத்தில் வெளியே போய் வந்தபின் பணி நேரம் துவங்கியிருக்கும் உடனே பணியில் இணையவேண்டியதுதான்.

  ஐரோப்பா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கப்பல் கரையில் கட்டப்பட்டதும் ஸீ மேன் கிளப் தன்னார்வலர்கள் வாகனத்தில் வந்து வெளியே அழைத்துச்சேள்வார்கள்.வெளியே வணிக வளாகங்கள்,சுற்றுலா தளங்கள்,ஆன்மீக மையங்கள்,கேளிக்கை விடுதி,சிவப்புவிளக்கு பகுதி,பார்கள் என ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து சுற்றி விட்டு வரலாம்.

 கப்பல் புறப்படுவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டும்.கப்பல் காரன் வெளியே செல்லும்போதே திரும்பி வரவேண்டிய நேரம் தெளிவாக காப்டனால் சொல்லப்பட்டிருக்கும்.(shore leave expire ).உலகின் முக்கியமான இடங்களை நினைத்தாலும் போய்வரவே முடியாத இடங்கள்,பெரும் செல்வந்தர்கள் மட்டுமே போகும் இடங்களை காணும் வாய்ப்பு இந்த பணியால் தான் எனக்கு கிடைத்தது. 

Honalulu 


 அப்படி என் பாதம்பட்ட முக்கியமான இடம் ஹவாய் தீவு. மிகப்பெரிய பசுபிக் கடலின் மையத்தில் அமைந்துள்ள ஒரு குட்டி தீவு.(இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் ஆறு கப்பல்களை ஜப்பான் குண்டுவைத்து மூழ்கடித்தது இங்குள்ள பேர்ல் ஹார்பரில்)இங்குள்ள ஹோனலுலு நகரில்  செல்ல ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி கிடைத்தது.

  




 பிரேசிலின் ரீயோ-டி-ஜெனிரோவின் மலைமேலுள்ள இயேசு மகான் சிலை,அமெரிகாவின் சுதந்திர தேவி சிலை,பிலே டெல்பியாவிலுள்ள வரலாற்று மீயுசியங்கள்,பார்சிலோனாவில் பிக்காசோ வாழ்ந்த வீடு,மீசியம்,ரோமன் கட்டிடகலையின் உச்சத்தை பறைசாற்றும் தேவாலங்கள்,போர்சுகீசில் இந்தியாவை உலகுக்கே காட்டிகொடுத்த வாஸ்கோடகாமாவின் வீடு,சிலை என நான் சென்ற இடங்களின் பட்டியல் மிக நீண்டது.

  


எனது கிராமத்தை சார்ந்த பால்ய நண்பர்களான ராஜா,வேலுப்பிள்ளையை பத்து ஆண்டுகளுக்குப்பின்,கலிபோர்னியாவில் சென்றபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஈராக் போர்முனையில் என்னுடன் பணிபுரிந்த நண்பன் திருச்சி விஜயகுமாரை பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகும் என்னுடன் பள்ளியில் படித்த கிருஷ்ணமூர்த்தியை  சிங்கப்பூரிலும் பார்த்தேன். 



   கப்பல் கரையணைந்ததும் வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதா எனத்தெரிந்து கொண்டு நான் முந்திக்கொள்வேன்.



கப்பலில் பணியில் இணையும்போது அல்லது பணிமுடிந்து திரும்பும்போது விடுதியறைகளில் தங்கும் வாய்ப்புகிடைத்தால் பையை அறையில் போட்டுவிட்டு ஊர் சுற்ற போய்விடுவேன். “டயர்டா இருக்கு,ராத்திரி ஆயிட்டு என சொல்பவர்களை சேர்ப்பதே இல்லை. அப்படிதான் கொழும்பு,சிங்கப்பூர்,மெக்ஸிகோ,துருக்கியில் தனியாக கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் நள்ளிரவு நடை போய் வந்திருக்கிறேன்.ஒரு ஊரில் பாதம் பதிக்கும் போது அங்கு மீண்டும் வருவேன் என எப்பொதும் உறுதிகிடையாது என்பதால். கிடைத்த வாய்ப்பில் முடிந்தவரை அந்த ஊரை பார்த்துவிட துடிப்பேன்.


Uploading: 5387375 of 11150653 bytes uploaded.


   ஜப்பான்,ஆஸ்திரேலியா,இத்தாலி,பிரேசில் சென்ற குறிப்புகளை மட்டும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதாமல் விட்ட பதிவுகளே அதிகம்.



   2019 இல் கடைசியாக ஐரோப்பாவின் நெதர்லாந்தில் வெளியே போய்வந்தேன்.அதன்பின் நோய் தோற்று எங்களை கப்பலுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தது.



இந்த ஆண்டுதான் நிலைமை கொஞ்சம் சீராகி கப்பல்காரர்கள் நிலம் தொட அனுமதி கிடைக்கிறது.இம்முறை நான் கப்பல் வரும்முன் இருதினம் மும்பை விடுதியறையில் தனிமை பின்னர் பனாமாவில் ஐந்துதினம்  தனிமைபடுத்தபட்டு மும்பையிலும்,பனாமாவிலும் நோய் தோற்று இல்லை என சோதனையில் உறுதியானபின் தான் கப்பலுக்குள் வந்தேன்.

  தற்போது நான் பணியிலிருக்கும் எல்.பி.ஜி டாங்கர்களில் வெளியே செல்வது என்பது மிக,மிக அரிதானது.கப்பல் சரக்கு நிறைக்க பெரும்பாலும் அரபு வளைகுடா நாடுகளுக்கு செல்லும்.அங்கே அனுமதியே இல்லை. பாதுகாப்பு காரணங்களால் எல்.பி.ஜி டெர்மினல்கள் கரையிலிருந்து வெகுதூரத்தில் அமைத்திருகிறார்கள்.

 அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கப்பல்கரார்கள் வெளிய செல்ல அனுமதியுண்டு. இம்முறை நான் பணியில் இணைந்தபின் வியட்னாமில் வெளியே செல்ல முடிந்தது.அங்கிருந்து கன்னியாகுமரி முட்டம்,சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரை கடலுக்குள் புகுந்து ஜிப்ரேல்டர் முனையை தாண்டி அட்லாண்டிக் கடலில் நுழைந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் துறைமுகப்பை அடைந்தபோது பன்னிரெண்டாயிரம் மைல்களை கடக்க முப்பத்தியாறு நாட்கள் கடலில் பயணித்திருந்தோம்.

  

 ஹூஸ்டன் வரும் முன்னே பலரும் வெளியே செல்லும் கனவில் இருந்தனர்.ஜப்பானின் சோஹே கப்பல் பணியில் இணைந்தது நோய் தோற்று காலத்தில் இதுவரை எந்த அந்நிய மண்ணிலும் வெளியே சென்றதில்லை. வியட்நாமில் அனுமதிசீட்டு வேண்டுபவர்களின் பெயரை எழுத சொல்லி அறிவிப்பு பலகையில் எழுதியிருந்தது அதை ஷோஹே பார்ப்பதற்கு முன் அனுமதி சீட்டு விண்ணப்பம் துறைமுக அதிகாரிகளுக்கு சென்று விட்டது.கடந்த மாதம் வியட்நாமில் பணியில் இணைந்த பிலிப்பினோ பயிற்சி இஞ்சினியரும் முதன்முதலில் அந்நிய மண்ணில் பாதம்பதிக்க ஆர்வத்துடன் இருந்தனர்.

ஹூஸ்டனில் கரையணைந்த அன்று மாலையில் குடியுரிமை அதிகாரிகள் கப்பலுக்கு வந்து அமெரிக்க விசா இல்லாத இருவரைத்தவிர அனைவருக்கும் ஷோர் பாஸ் வழங்கினார்.

  துறைமுகம் வரும்முன் ஒருநாள் நங்கூரம் பாய்ச்சி நின்றதால் இயந்திர பணியாளர்கள் சில பராமரிப்பு பணிகளை செய்து முடித்து வெளிய செல்ல தயாராயினர். கப்பலுக்கான எண்ணையும் நிரப்பப்பட்டது.

  கப்பலில் எப்போதும் ஐம்பது சதமானம் பணியாளர்கள் இருந்தாக வேண்டியது கட்டாயம். முதல் குழுவில் பதினோரு பேர் காலை ஒன்பதுமணிக்கு புறப்பட்டு சென்றனர்.அதில் நான்குபேர் நாசா அறிவியல் மையத்துக்கு சென்று வந்தனர்.

  கப்பலில் சரக்கு நிறைக்கும் பணி துவங்கவில்லை.காஸ் பிளாண்டில் எனக்கும் காஸ் இன்ஜினியருக்கும் ஆறு மணிநேரம் வேலை,ஆறு மணிநேரம் ஓய்வு. எனக்கு காலை ஆறு முதல் பன்னிரண்டு மணிவரையும் பின்னர் இரவு ஆறு முதல் பன்னிரண்டு.

 காஸ் இஞ்சினியர் காலையிலேயே போய்விட்டு இரவு ஏழுமணிக்குத்தான் வந்தார். அவரது வேலைநேரத்தை நான் கவனித்துக்கொண்டேன். நன்றாக தூங்கிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து என்னை விடுவிக்க சொன்னேன்.

  இரவு பன்னிரெண்டரை மணிக்குமேல் அறைக்கு வந்து நீராடி,தொழுதுவிட்டு சுனிதாவிடம் பேசிவிட்டு இரண்டு மணிக்கு படுத்து மூன்றரை மணிநேரம் தூங்கி காலை ஆறுமணிக்கு பணிக்கு சென்றுவிட்டு காஸ் இஞ்சினியரை பத்தரை மணிக்கு வந்து என்னை விடுவிக்க சொன்னேன்.


 




 பலமுறை ஹூஸ்டன் துறைமுகப்புக்கு வந்தும் நாசாவின் அறிவியல் மையத்துக்கு (Houstonspace center) செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.இம்முறை மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லாவும்,சமையற்காரர் கோம்சும் வருவதாக சொன்னார்கள். நாசா விண்வெளி அறிவியல் மையத்துக்கு போய்விட்டு,பெஸ்ட் பை மின்சாதன கடையில் எனக்கொரு போன் வாங்கிவிட்டு வால்மார்ட் வணிக வளாகத்தில் காத்திருந்த ரஹீம் உல்லா,கோம்ஸ் உடன் திரும்பி கப்பலுக்கு வருகையில் இரவு ஒன்பது மணியாகிஇருந்தது.




   அப்படியே பணியில் இணைந்து காஸ் இஞ்சினியரை விடுவித்தேன்.அதிகாலை இரண்டு மணிக்கு அவர் என்னை விடுவித்தார். நல்ல களைப்பு அஞ்சால் அலுப்பு மருந்து குடித்தபின் இன்றும் மூன்று மணிநேரம் தூங்கிவிட்டு காலை ஆறு மணிக்கு பணிக்கு சென்றேன்.

 இன்றும் காலையில் ஜப்பானியர் மூவரும் முதன்மை இஞ்சினியரும் வெளியே புறப்பட்டு சென்றனர். காலை பத்தரை மணிக்கு இதுவரை வெளியில் செல்லாத,இரண்டாம் அதிகாரி ஒலாஸ்கி,மோட்டார்மேன் உஸ்மான்,சென் குப்தாவுடன் சமையற்காரர் கோம்ஸ்ம் வெளியே செல்ல தயாராகினர்.முதன்மை அதிகாரி என்னிடம் “ஷாகுல் வெளிய போயிட்டு வா என்னமும் வாங்கணும்னா போ” என்றார்.



“ரெண்டு நாளா உறக்கம் இல்ல  இன்னைக்கும் உறங்க முடியாது,நா போவல்ல” என்றேன்.

“என்னைக்குமா போறா,இனி அடுத்த சான்ஸ் எப்போன்னு தெரியாது,கோ மேன்,கோ”என்றார். காஸ் இஞ்சினியரை அழைத்து என்னை விடுவிக்க சொன்னேன் சரி என்றார்.

 பத்து நிமிடத்திற்குள் தயாராகி நானும் வெளியே செல்பவர்களுடன் இணைந்து கொண்டேன்.சென் குப்தாவும்,ஒலாஸ்கியும் வால்மார்ட் கடையிலிருந்து பிரிந்து சென்றனர்.

 நாஞ்சில் ஹமீது,

  13 october 2023.

sunitashahul@gmail.com


Uploading: 884250 of 2204288 bytes uploaded.



   

  

No comments:

Post a Comment